Tuesday, October 10, 2017

போர்த்துக்கீசியரை மிஞ்சிய டச்சுக்கார்களும் , அவர்களை முறியடித்த பிரிட்டிஷ்காரர்களும் !!!!


இலங்கையில் பரதேசி -25
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/10/blog-post.html


Clock Tower


காலே துறைமுகத்திற்கு போர்த்துக்கீசியர் வந்தது 1505ல் லோரென்க்கோ டி அல்மெய்டா (Lourenco de Almeida) இந்தக்குழுவை வழிநடத்தி வந்தான். அப்போது அரசனாக இருந்த தர்மபராக்கிரம பாகு (1484-1514) அவர்களை வரவேற்று மகிழ்ந்து நெருக்கமானான். ஆனால் போர்த்துக்கீசியர் வருவதற்கு முன்பே 'இபின் ' பட்டுட்டா (Ibn Batuta) என்ற பயணி இங்கு வந்து சென்றிருக்கிறார் . உள்ளே இருக்கும் பழைய கத்தோலிக்க சிற்றாலயம் (Franciscan chapel) 1541ல் கட்டப்பட்டது.


பரிசுப் பொருட்களையும் நட்பையும் பெரிதாக மதித்து நம் அரசர்கள் செய்த தவறு, அவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக கோட்டை கட்டிக்கொள்ள வேண்டும் என்று கேட்டபோது வணிகர்களுக்கு கோட்டை எதுக்கு? என்று கேள்வி கேட்காமல் அனுமதித்தது. இது முதல் தவறு. இதுவே அவர்களை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றி அந்நியரின் ஆக்கிரமிப்பை உருவாக்கியது. இதுதான் கல்கத்தா, கோவா, சென்னை, கொழும்பு, தரங்கம்பாடி, காலே ஆகிய இடங்களில் ஏற்பட்டது.  
Image result for lourenço de almeida
Lourenco De Almeida
இங்கு கால் பதித்து இருந்து,  பலமடைந்து, அதன்பின் நாடுபிடிக்கும் ஆசை வந்து கொழும்புவிற்கு தங்கள் தலைமையகத்தை மாற்றிக் கொண்டனர். இது சில காலம் சிறைவளாகமாக இருந்தது. போர்த்துக்கீசியரை எதிரிப்பவர்களை அழைத்து வந்து விதை நீக்கம் செய்யுமளவிற்கு அவர்கள் அக்கிரம ஆட்சி நடத்தினர்.

ஆனால் சித்தவாக ராஜ்ஜியத்தின் மன்னன் ராஜசிங்கா (1581-93) போர்த்துக்கீசியரை கொழும்பிலிருந்து விரட்டியடிக்க, திரும்பவும் காலே கோட்டைக்குள் வந்து புகுந்து கொண்டனர்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் முதலில் அவர்கள் கட்டிய கோட்டை பனைமரப்பலகைகளையும் களிமண்ணையும் பயன்படுத்தி கட்டப்பட்டது. அதன்பின் வருமானமும் கொள்ளையும் கூடக்கூட மூன்றடுக்கில் இப்போதுள்ள கோட்டையைக் கட்டி முடித்துள்ளனர். முக்கியமாக துறைமுகப் பாதுகாப்பாகவும் இது விளங்கியது. இந்தக் கோட்டைக்கு அவர்கள் வைத்த பெயர் சான்ட்டா குருஸ் (santa cruz) ).இந்தப்பெயரைக் கேட்டதும் ஏதாவது பொறி தட்டுகிறதா? ஒரு க்ளூ தருகிறேன். ஒரு விமான நிலையத்தின் பழைய பெயர். கண்டுபிடிப்பவர் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.
        வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் வருவான் என்ற கூற்றுப்படி டச்சுக் காரர்களின் வருகை அமைந்தது. அவர்கள் வந்தவுடன் முதலில் பெரிய எதிரியாகத் தோன்றிய போர்த்துக்கீசியரை முறியடிக்க நினைத்தனர். எனவே பெரிய எதிரியைத் தோற்கடிக்க சிறிய எதிரியான உள்ளூர் அரசன் இரண்டாம் ராஜசின்ஹாவுடன் கைகோர்த்து காலே கோட்டையை முற்றுகையிட்டனர். கிபி.1640ல் கோஸ்டர் என்பவனின் தலைமையில் 2500பேர் கொண்ட  படையுடன் சென்று போர்த்துக் கீசியரை முறியடித்து கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் உள்ளூர் வாழ் மக்களின் உதவியோடு கோட்டையை முற்றிலும் மாற்றியமைத்து பலப்படுத்தினர். போர்த்துக்கீசியர் கட்டிய மண் கோட்டை மாறி இப்போது கற்கோட்டையாக பலம் மிகுந்த கோட்டையாக உருமாறியது. அதன்பின் போர்த்துக் கீசியர் தலையெடுக்க முடியவில்லை. 18ஆவது நூற்ராண்டில் இது மறுபடியும் மாற்றியமைக்கப்படும்போது 14 கொத்தளங்கள் அமைக்கப்பட்டு 130 ஏக்கராக பவளப்பாறைகள் கொண்டு அமைக்கப்பட்டது.
Image result for Rajasimha 2
Rajasinha II
போர்த்துக்கீசியர் கத்தோலிக்கர் என்பதால் கத்தோலிக்க ஆலயத்தைக் கட்டினர்.  ஆனால் டச்சுக் காரர்கள் பிராட்டஸ்டண்ட் என்பதால் உள்ளே அவர்களுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினர். ஒவ்வொன்றும் சிறிதாக இருந்தாலும் மிக அழகாக இருந்தன. அது தவிர சிறு வீதிகள் அமைக்கப்பட்டு படை வீரர்கள் தங்கினர். நிர்வாக அலுவலகங்கள் கட்டப்பட்டன. இருப்பதிலேயே உயர்ந்த கட்டடம் கோட்டையின் கமாண்டரின் மாளிகை.
மாற்றம் என்பது மட்டும்தான்  மாறாதது என்பதால் அடுத்த வந்த பிரித்தானியர், காலே ஒரு பலம் வாய்ந்த கோட்டை என்பதால் கொழும்புவைப் பிடித்த மறுவாரம் காலே கோட்டையையும் பிடித்துக் கொண்டனர். இது நடந்தது 1796ல். அதன்பின் இலங்கைத்தீவு 1948ல் சுதந்திரம் அடையும் வரை இக்கோட்டை பிரித்தானியர் கைவசம்தான் இருந்தது. ஆனால் அவர்கள் கொழும்புவை தலைநகராக ஆக்கிக் கொண்டதால் காலேவின் முக்கியத்துவம் அதன்பின் குறைந்து போனது.


கோட்டையின் மேலே ஏறி கம்பீரமாக  ராஜநடை (ராஜ சேகர் நடை என்பதன் சுருக்கம்தான் தப்பா எடுத்துக்காதீங்க மக்களே) போட்டு வலம் வந்தேன். ஒரு புறம் காலே நகர் புதிதும் பழையதுமான கட்டடங்களாய்த் தெரிந்தது, இன்னொருபுறம் ஆர்ப்பரிக்கும் கடலலை கோட்டைச் சுவர்களை முட்டி மோதிக் கொண்டிருந்தது. வெளியில் தான் கதிர்களை உக்கிரமாக பாய்ச்ச முயல கடற்கரைக் காற்று அக்கதிர்களை அமைத்து அணைத்து  அணைத்துத் தழுவி சாந்தப்படுத்த முயன்று ஓரளவு வெற்றியும் அடைந்திருந்தது.

 கடல் இருவண்ணங்களாய் ஜொலித்தது. கடற்கரைப் பகுதியில் இளநீலமும் உள்ளே கொஞ்சம் தள்ளி மேக நீலமாக கண்ணைப் பறித்தது. இப்படி ஒரு தெளிந்த வண்ணத்தை நான் ஹவாயில்தான் பார்த்திருக்கிறேன். கோட்டையின் மறுபுறம் நடந்த போது நடுவில் என் எதிரே கலங்கரை விளக்கம் என்று தமிழில் சொல்லப்படும் ஒரு பழைய லைட்ஹவுஸ்  இருந்தது. சுமார் 60 அடி உயரமுள்ள இது மிகவும் பழையது அல்ல. 1938ல் தான்  கட்டப்பட்டதாம். அங்கு மராமத்துப் பணி  நடந்து கொண்டிருந்ததால் உள்ளே சென்று பார்க்க அனுமதியில்லை. அதன் மறுபுறம் அரசு அலுவலகங்கள் இன்னும் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.  ஞாயிற்றுக்கிழமை ஆதலால் எல்லாம் பூட்டப்பட்டு இருந்தன.

மறுபுறம் 1883ல் விக்டோரியா மகாராணிக்கு மரியாதை  செலுத்தும் ஒரு உயரமான க்ளாக் டவர் இருந்தது. மூர் இன மக்கள் நிறைய இருப்பதால் கோட்டையின் உள்ளே பழைய பள்ளிவாசல், கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்தன. காலே நகரில் பெரும்பாலும் டச்சுக் காலத்தில் வைத்த தெருப்பெயர்களே இன்றும் இருக்கிறது. தமிழகத்திலிருந்து இடம்பெயர்ந்த ஏராளமான மீனவர்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்கள் இருக்கும் தெருவுக்கு பரவர் தெரு என்று பெயரிடப் பட்டிருக்கிறது.
இன்னொரு புறம் பார்த்தபோது கிரிக்கெட் ஸ்டேடியம் தெரிந்து உற்சாகமானேன். இதுதான் சமீபத்தில் இந்திய இலங்கை ஆட்டம் நடந்த ஸ்டேடியம், உங்கள் அனைவருக்கும் அறிமுகமான அந்த காலே ஸ்டேடியத்தைப்பற்றி சில தகவல்களை அடுத்த வாரம் சொல்கிறேன்.

-தொடரும்

No comments:

Post a Comment