Thursday, July 28, 2016

தமிழ் இனி மெல்லச்சாகும் / வளரும் !!!!!!!!!!!!!!தமிழ் இனி மெல்லச்சாகும்  வளரும் !!!!!!!!!!!!!!


With my wife at Fetna Event

FETNA -3 ஃபெட்னா தமிழர் திருவிழாவில்  இலக்கிய வினாடி வினா !!!!!.

 ஃபெட்னாவின் நிகழ்வுகளில் பங்கெடுக்க நிறைய ஆர்வமுள்ளவர்களும், திறமை உள்ளவர்களும் அமெரிக்கா  முழுவதும் இருந்ததால், கலந்து கொள்வதற்கு ஒரு வித போட்டி இருந்தது எனலாம். கவியரங்கத்தில் கலந்து கொள்ள ஆவலிருந்தும் இடமில்லை என்று சொன்னதால் மற்ற நிகழ்ச்சிகள் என்ன என்று பார்த்தேன். கவியரங்கம் தவிர Dr. சிவராமன் தலைமையில் ஒரு கருத்துக்களம் மற்றும் இலக்கிய வினாடி வினா ஆகிய இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நான் கலந்து கொள்ளக் கூடிய பொது நிகழ்ச்சிகள் என எனக்குப்பட்டது.

“இலக்கிய வினாடி வினா” என் ஆர்வத்தைத் தூண்ட அதில் கலந்து கொள்ள என் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஃபெட்னா  அமைப்பின் தலைவர் நாஞ்சில் பீட்டர் அவர்களின் முயற்சியில் இது ஆரம்பிக்கப்பட்டு கடந்த 10 வருடங்களாக நடந்து வருகிறதாம்.  “அதுவும் முடிந்துவிட்டது, நீங்கள் ஏற்கனவே சொல்லியிருக்க வேண்டும்”, என்றார்கள்.

“சரிவிடு, தமிழர் விழாவில் ஒரு பார்வையாளனாகக் கலந்து கொள்வதே பரவசம்தான்” என்று விட்டுவிட்ட  நேரத்தில், பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் என் குழுவில் பங்குபெறும் தோழி சுபா அவர்கள் என்னை அறிமுகப்படுத்தி ஒரு குழுவில் நுழைத்துவிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தப்பேரும் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டனர்.ஒரு குழுவின் பெயர் தமிழண்ணல்.  இன்னொன்று வ.சுப மாணிக்கனார் குழு. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர். என் குழுவான வ.சுப மாணிக்கனார் குழுவுக்கு தலைவர் திருமதி.சுசித்ரா அவர்கள். நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் உற்சாக உறுப்பினர் இவர்.  

Suchithra Srinivas ( Extreme right) with  Subha ( Middle) and  Fetna Volunteers 
சும்மா பொதுவான கேள்வி பதில் இருக்கும். சமாளித்து விடலாம் என்று நினைத்த எனக்கு ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் காத்து இருந்தன.

ஈமெயில் மற்றும் தொடர்பு எண் கேட்டு சுசித்ராவிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதன்பின் சுசித்ரா அலைபேசியில் அழைத்து,என்னை வரவேற்று சுருக்கமாக இது எப்படி நடைபெறும் என்று சொன்னார்கள்.

முதலில் ஜிமெயில் மூலம் ஒரு கூகுள்  குழு ஆரம்பிக்கப்பட்டது.  அதில் ஒரு அழைப்பு ஈமெயில் வந்தபின், அதில் சேர்ந்து என் படத்தையும் அங்கே போடச் சொன்னார்கள். அதில் எனக்கு நன்கு அறிமுகமான ரங்காவின் புகைப் படத்தைப் பார்த்ததும் மனம் துள்ளியது.  ஆஹா எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவராவது இருக்கிறார் என்று நினைத்து உள்ளம் மகிழ்ந்தது. ரங்கநாதன் புருஷோத்தமன் என்பது அவர் முழுப் பெயர். இவர்தான் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் என்று பலமுறை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். “கொஞ்சம் விலாவாரியாகச் சொல்லுங்கள்” என்று அவரிடம் கேட்டேன்.


FETNA President: Nanjil Peter.
அவர்தான் புரியும்படி சொன்னார். அதாவது, “பல தலைப்புகள் கொடுக்கப்படும். அதில் ஒரு தலைப்பை எடுத்து உங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ளலாம்”, என்று ஆஹா எல்லாவற்றையும் படிப்பது, தெரிந்து கொள்வதைவிட  இது எளிதுதான் என்று நினைத்தேன்.

அதற்குள் கூகுள் குரூப்பில் பாடங்கள் வந்தன. பாடங்களைப் பார்த்ததும் மிகுந்த ஆச்சரியமாயிருந்தது. அவற்றைக் கீழே கொடுக்கிறேன்.அதில் தமிழிசையை தேர்வு செய்து சுசித்ராவுக்குச் சொன்னேன். ரங்காவும் அதில்தான் இருந்தார் என்பது கூடுதல் மகிழ்ச்சியளித்தது. தயார்பண்ண ஆரம்பித்த போது சுசித்ரா ஒரு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து என்னைக் குழுவில் இணைத்தார்கள்.

அதுவரை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை வந்த வாட்ஸ் அப் செய்தியில் சனிக்கிழமை மாலை ஒரு கூட்டு அழைப்பு இருப்பதாகவும், ஒவ்வொரு வாரமும் இதுபோல அழைப்பு இருக்கும் என்றும் சொன்னார்கள். இது ஒரு 2 மாதத்திற்கு முன்னமே ஆரம்பித்துவிட்டது. சனிக்கிழமை நிறையப்பேர் முடியாது என்பதால் அது ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்னால் முடியாதே என்று யோசித்தேன். முயன்று பார்க்கலாம் என்று நினைத்தேன்.

இந்தக் கூட்டு அழைப்பில் கலந்து கொள்ளும் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவைப் படித்து ஒரு சிறு கருத்துரை வழங்க வேண்டும். அதுதவிர அந்தந்த பாடப்பிரிவுகளில் சிறந்து விளங்கும் தமிழர்கள் சிறப்புரையும் ஆற்றுவார்கள். கேள்வி பதிலும் இருக்கும். கூட்டு அழைப்பு சுமார் 1 மணி நேரம் போகும்.

இது என்ன ஓவர் பில்டப்பா இருக்கே என்று நினைத்தேன். ஆனால்  ஒரு அழைப்பில் (Conference Call) கலந்து கொண்டபின்தான் அதிர்ந்து போனேன்.

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களும், குடிமகன்கள் ஆனவர்களும் பெரும்பாலானோர் குடும்பமாக தமிழையும், தமிழ்நாட்டையும், ஏன் இந்தியாவையும் கூட மொத்தமாகத் தலைமுழுகிவிட்டு, முற்றிலும் மாறிப்போன பல பேரை எனக்குத் தெரியும். இந்தியாவில், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது. யார் பிரதமர் முதல்வர் என்று கூடத் தெரியாது. என்ன சிவாஜி செத்துட்டாரான்னு கேட்கும் மக்கள் தான் அதிகம். இதுல தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு என்று சொன்னால் who cares? என்றுதான் பதில் வரும்.

அப்படிப்பட்டவர்கள் மத்தியில் அமெரிக்கா முழுவதும் பல நேர அமைப்பில் (Time Zones) உள்ளவர்கள், அதீத ஆர்வத்துடன் கலந்து கொண்டதைப் பார்த்தபோது  இன்ப அதிரிச்சியாக இருந்தது. ஆஹா தமிழ் மெல்லச் சாகாது, தமிழ் நன்றாக வேர் பிடித்து வளரும் என்று நினைத்து புல்லரித்துப் போனேன்.

கலந்து கொண்ட  ஒவ்வொருவரும் இன்னும் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள். நாஞ்சில் பீட்டரும் கலந்து கொண்டு சொன்னார், “இது வெறும் வினாடிவினாவுக்காக அல்ல. இதனை சாக்காக  வைத்துக் கொண்டு தமிழ் இலக்கியங்களைக் கற்றுக் கொள்ளவும், அதன் அழகியலை அறிந்து கொள்ளவும் இது ஒரு அரிய வாய்ப்பு”, என்று சொன்னதோடு தனித்தமிழ் பேசுவதையும் ஊக்கப்படுத்தினார்.

வருடக்கணக்கில் இங்கே வாழும் நம் மக்களின் தமிழ்ப் புலமையையும், இலக்கியங்களின் ஆழமான புரிந்து கொள்ளுதலையும் பார்த்து அசந்தே போனேன்.

துரதிர்ஷ்டவகையில் எவ்வளவு முடிந்தும் என்னால் தொடர்ந்து மூன்று முறை கூட்டழைப்பில் கலந்து கொள்ள முடியாது போனது. கூட்டழைப்பில் பங்கு கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை, வினாடிவினாவில் பங்கு கொள்ளுங்கள் என்று சுசித்ராவும் ரங்காவும் சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவ்வளவு உழைப்பைக் கொட்டி, தியாகம் செய்துதான் கூட்டழைப்பில் பங்குகொள்கிறார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும் . எனவே நான் கூட்டழைப்பில் பங்கு கொள்ளாமல், பின்வாயிலின் மூலம் நுழைவது எனக்குப் பிடிக்காததால் தான் விலகிக் கொண்டேன்.

அதனால் ஏற்பட்ட முழு நஷ்டமும் எனக்குத்தான் என்பதும் தெரியும். ஆனால் பங்கு கொள்ளமுடியவில்லை என்ற ஒரு ஆதங்கம் இருந்தாலும், பார்வையாளர்களில் ஒருவராக உட்கார்ந்து ரசிக்க முடிந்தது.

இலக்கிய வினாடிவினா மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்கால டெக்னாலஜியைப் பயன்படுத்தி, அக்காலத்துடன் இணைத்து  டிஸ்பிளே ஸ்கிரீன்,   சினிமாப் பாடல்கள், ஒலித்துணுக்குகள், வீடியோக்கள் போன்ற பல உத்திகளைப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு கேள்வியின் குரலுக்காக நாடு முழுவதும் உள்ள வெவ்வேறு குரல்களைப் பயன்படுத்தியதும் சிறப்பு.

இதற்குப்பின்னால் எவ்வளவு உழைப்பு எவ்வளவு நபர்கள், என்று நினைக்கும்போது மிகவும் பிரமிப்பாய் இருந்தது. பெரும்பாலான கேள்விகளுக்குப் பதில் சொல்லி, இரு குழுக்களும் சமமான மதிப்பெண்ணைப் பெற்றனர். நாஞ்சில் பீட்டர் நிச்சயமாய் பிரமிக்க வைக்கிறார். மிக அருமையாக குழுவை வழிநடத்திய சுசித்ரா அவர்கள் பாராட்டுக்குரியவர்கள் . வாழ்த்துக்கள்.

தமிழர் திருவிழா பதிவுகள் தொடரும்.

8 comments:

 1. நிச்சயமாக தமிழ் இனி வளரும் ஒளிரும்
  எனத்தான் தங்கள் பதிவின் மூலம்
  நடைபெற்ற நிகழ்வுகளைக் கேள்விப்பட
  உணர்கிறோம்

  கேள்விகள் ஆழமானவை
  என்பது தலைப்புகளைப் பார்க்கப் புரிகிறது

  பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. படிக்க சந்தோஷமாக இருக்கிறது. ஒன்றின் அருகிலேயே இருப்பவர்களை விட, தூரத்தில் இருப்பவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.

  ReplyDelete
  Replies
  1. சரியாகச்சொன்னீர்கள் ஸ்ரீராம் .

   Delete
 3. ஆல்ஃபி, அருமையான அனுபவத்தைத் திரும்ப அசைபோடவைத்தது உங்கள் தொகுப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் ரங்கா .

   Delete
 4. வளரட்டும்..! தமிழ் மேலும் வளரட்டும்..!!

  ReplyDelete
 5. படிக்கவே ஆனந்தமாக இருக்கிறது. தமிழ் வளரட்டும்.... மேலும் மேலும்!

  ReplyDelete