Monday, April 18, 2016

நியூயார்க்கில் சிக்கில் குருசரன் !!!!!!!!!!!!


மதுரையில் படித்து வளர்ந்த எனக்கு சித்திரைத் திருவிழா நாட்கள் அந்த ஆண்டின் மிகவும் முக்கியமான காலகட்டம். கல்லூரியில் விடுமுறை விட்டாலும், மெஸ்ஸை மூடிவிட்டாலும், சிறப்பு அனுமதி பெற்று தங்கியிருந்து சித்திரைத்திருவிழாவை கண்டுகளித்துப் பின் ஊர் திரும்புவது என் வழக்கம். மீனாட்சி திருக்கல்யாணம், என் அமெரிக்கன் கல்லூரி வாசலைக் கடந்து செல்லும் கள்ளழகர் அழகர் எதிர்சேவை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா என்று மதுரையே தாங்காத அளவுக்கு கூட்டம் கூடும் பெருவிழா அது.
அதனால் அந்தச்சித்திரைத்திருவிழா சமயத்தில் தொலைதுரத்தில் இருப்பதால் நொந்து கொண்டு இருக்கையில் ஒரே ஆறுதல் நம் நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் சித்திரை விழா.
Add caption
இந்த வருடம் சிக்கில் குருசரனின் இன்னிசைக் கச்சேரி, ஏப்ரல் 9 சனிக்கிழமை 2016-ல்  நடைபெற்றது. போனதடவை இவர் வந்த சமயம் அதே தேதியில் எனக்கு ஏதோ சிக்கல் என்பதால் சிக்கிலை தவறவிட்டுவிட்டேன். அதனால் இந்த வருடம் மிஸ் பண்ணக்கூடாது என்றெண்ணிச்  சென்றேன்.
பரதேசி ஆஜர் கொடுக்க, ஆற்காடு தியாகராஜன், குமார், ஆல்பர்ட் செல்லத்துரை, தலைவர் விஜயகுமார், துணைத்தலைவர் குமரப்பன் மற்றும் பொருளாளர் நண்பர் ரங்கநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
4 மணியளவில் நான் உள்ளே போய் உட்கார உடனே விழா ஆரம்பித்தது. தலைவர் விஜயகுமார் கட்டியம் கூறி முடிக்க பிள்ளைகள் வந்து தமிழ்த்தாய் மற்றும் அமெரிக்கத்தாய் வாழ்த்துக்களை சுதிபிசகாமல் பாடி முடிக்க. நண்பர் ரங்கநாதன் வரவேற்புரை  ஆற்றினார் .
சற்றும் தாமதமில்லாமல் விஜய்குமார், சிக்கிலைக் கூப்பிட, அவர் பக்கவாத்தியக் காரர்கள் புடைசூழ உள்ளே நுழைந்தார். முன்னாள் தலைவர் காஞ்சனா பூலா அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
சிக்கில் குருசரண் உயரம் ஆறடி இருக்கும், சிரித்த முகம், பொலிவான இளமை, சிக்கில் சிஸ்டர்ஸ் பரம்பரை. ஆனால் இந்தப் பரம்பரையில் பாடும் வரம் பெற்றவர் இவர் ஒருவர்தான். இந்தியா டுடே வெளியிட்ட 35 வயதுக்குள் உள்ள 35 Game Changers என்ற லிஸ்ட்டில் இடம் பெற்றவர். பாடும் போதும் சிரிக்கும் போதும் கன்னத்தில் குழிவிழுவது அழகுக்கு அழகு சேர்க்கிறது.
வயலின் வாசித்தவர் ‘சஞ்சீவ் வெங்கட்ராமன்’, கன்னியாகுமரி மேடமின் சீடர். அநாயசமாக வாசித்தார். ஆமாம், கர்நாடக இசையில் மேற்கத்திய இசைக்கருவியான வயலின் இடம்பெற ஆரம்பித்தது எப்போது?


மிருதங்கம் வாசித்தது பத்ரி சதீஷ்குமார், effort less என்று சொல்வார்களே அந்த மாதிரி, தாளம் இம்மியளவும் பிசகாத வாசிப்பு.
மூவரும் கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை முடித்து தாயகம் செல்லும் வழியில் நியூயார்க் வந்திருந்தார்கள்.
சில நிமிடங்கள் எடுத்து, செளண்ட் மற்றும் சுருதியை சரி பண்ணிக் கொண்டு கச்சேரி ஆரம்பமானது. முதலில் மிருதங்கம் பேஸ் அதிகமாக இருந்து பின்னர் அதுவும் சரியாக சச்சேரி களை கட்டியது.
ஆரம்பப் பாடலாக ஒரு தெரியாத தெலுங்குக் கீர்த்தனையைப் பாட சிறிதே கலவரமானேன். ஏனென்றால் நடப்பதோ தமிழ்ப்புத்தாண்டு விழா, நடத்துபர்களோ நியூயார்க் தமிழ்ச் சங்கம், பாடுவது தெலுங்கா? என்று. ஆனால் அடுத்து  ஒவ்வொன்றாக தமிழ்ப் பாடல்கள் வரிசை கட்டி வந்தன.  
1.   அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடலில் 3ஆம் திருப்புகழில் வரும் விநாயகர் துதிப்பாடல் ("ஐந்து கர ஆனைமுக பெருமானே" , ராகம் ஹம்சத்துவனி.
2.   பாபநாசம் சிவன் எழுதிய சரஸ்வதி தயநிதி, சரஸ்வதி ராகம்.
3.   முத்துச்சாமி தீட்சிதர் எழுதிய ராமர் பட்டாபிஷேகப் பாடல்.
4.   தண்டபாணி தேசிகர் எழுதிய, கோகில ராகத்தில் அமைந்த, "நல்வாழ்க்கையே நாளும் வேண்டும்", என்ற பாடல்.
5.   அருணசலக் கவிராயர் எழுதிய "யாரோ இவர் யாரோ" என்ற பைரவி ராகத்தில் அமைந்த பாடல். இது கவிராயரின் ராம நாடகத்தில் வரும் பாடல். மூலராகம் சவேரி. MS.சுப்புலட்சுமி DK.பட்டம்மாள் பாடிப் பிரபலமடைந்த பாடல் இது. இதனை சிலர் "ஆரோ இவர் ஆரோ" என்றும் பாடுகிறார்கள்.  
6.   அடுத்துவந்தது சித்தர் பாடிய கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த "வெட்டவெளிதனில்" .
7.   அடுத்து ரசிகர்களின் விருப்பத்துக் கிணங்க வந்தது "என்ன தவம் செய்தனை".
8.   என்ன பாரதியார் பாடலைக் காணோம் என நினைத்துக் கொண்டிருந்தபோது வந்தது "ஆடுவோமே, பள்ளு பாடுவோமே".
9.   அடுத்து காஞ்சிப் பெரியவர் மேல் ஒரு தில்லானா பாடி, சீதா கல்யாணம் வைபோகமே பாடிப்பின்னர் மங்களம் பாட கச்சேரி இனிதான நிறைவு பெற்றது.
 

கச்சேரியின் ஹைலைட்ஸ்
1.   இம்மிளவு கூட பிசிறில்லாத, அணுவளவும் சுதி பிசகாத அற்புத குரல் வளம்.
2.   ராக ஆலாபனை மற்றும் ராக சஞ்சாரங்கள் சூப்பர் ரகம்.
3.   உச்சஸ்தாயி, கீழ்ஸ்தாயி என்று எல்லா நிலைகளிலும் உருண்டு விளையாடும் குரல்.
4.   ஆச்சரியமான மூச்சுக்கட்டுப்பாடு (Breath control)
5.   இந்தக் கச்சேரி கேட்டபின் தொண்டைதான் அதியற்புத இசைக்கருவி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியதிருக்கிறது.
6.   மூன்று மணிநேரம் இந்த நெடிய உருவம் எப்படித்தான் ஒரே இடத்தில் சம்மணம் போட்டு உட்கார்கிறார்களோ. இதற்கு தனிப்பயிற்சி எடுக்க வேண்டும்  போலிருக்கிறது.
7.   மிருதங்க சுதி இலேசாகக் கலைந்ததால் அவர் பக்கத்தில் இருந்த ஃபோகஸ் லைட்டைக் கூட அணைக்கச் சொன்னார் பத்ரி. சஞ்சீவும் பத்ரியும் தனி ஆவர்த்தனம் செய்து அசத்தினார்கள். பத்ரியின் ஆவர்த்தனத்தில் இடிமின்னல் ஒலித்தது.
8.   இறுதியில் நடந்த ராஃபில் லாட்டரியில் பரிசாக ஒரு பெண்ணுக்கு ஒரு டவர் ஃபேன்  விழ, அதற்குப் பரிசு வாங்க அந்தப் பெண் மேடைக்குவந்த போது. "she is a great fan", என்று குருசரண் சொன்னது அவரின் பிரசன்ஸ் ஆஃப் மைன்ட் வெளிப்பட்டது.
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்று சொன்னாலும் கண்டிப்பாய் குறை சொல்ல வேண்டுமென்றால் பத்ரிக்கு ஆரம்ப முதல் இறுதி வரை முகத்தில் ஈயாடவில்லை. உடம்பு சரியில்லையோ இல்லை ஜெட்லாக்கா என்று தெரியவில்லை. ஆனால் வாசிப்பில் எந்தக் குறையுமில்லை.
குமரப்பன் நன்றி சொல்லி முடிக்க, சென்னை தோசா வழங்கிய  அறுசுவை உணவோடு விழா இனிதாக முடிவடைந்தது. நல்ல ஒரு இன்னிசை மாலைப்பொழுதை வழங்கிய நியூயார்க் தமிழ்ச்சங்கத்திற்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.
- முற்றும்.

12 comments:

  1. எனக்கும் இவரைப் பிடிக்கும். சஞ்சய் சுப்பிரமணியம், அபிஷேக் ரகுராம் எல்லாம் வருவதில்லையா அங்கு?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இல்லை ஸ்ரீராம் , கடந்த முறை மகாநதி ஷோபனா வந்திருந்தார்கள் .

      Delete
  2. எஞ்சாய் பண்ணுங்கோ ........ஆமாம் அதை எல்லாம் வீடியோவாக எடுத்து போடலாமே உங்கள் தளத்திலோ அல்லது நீயூயார்க் தமிழ் சங்க தளத்திலோ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுரைத்தமிழன்.நீங்களும் வந்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

      Delete
    2. கூட்டத்தை கண்டால் அலர்ஜி

      Delete
  3. அருமையான பதிவு ஆல்ஃபி! மீண்டும் ஒருமுறை அந்த நிகழ்ச்சிக்கே சென்றதுபோல் இருந்தது!
    நண்பர் 'அவர்கள் உண்மைகள்' - நியூயார்க் தமிழ்ச்சங்க வலைத்தளத்தில் முதல் பக்கத்தில் வீடியோ பதிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன! கண்டு மகிழ வேண்டுகிறேன்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரங்கா தொடர்ந்து நல்ல நிகழ்சிகளைக் கொடுங்கள்.

      Delete
    2. தகவலுக்கு நன்றி கண்டிப்பாக பார்த்து மகிழ்கிறேன்......ஆல்பி எழுதுவதை படிக்கும் போது நிகழ்ச்சிகள் அருமையாக இருப்பதை போல தோன்றுகிறது

      Delete
  4. பார்த்து ரசித்து நமக்கும் பகிர்ந்ததுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. நேரலை பார்த்த உணர்வு ..அருமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மீரா செல்வக்குமார்.

      Delete