Tuesday, October 20, 2015

ராஜபரம்பரையில் உதித்த கருத்துச்சிருத்த கருவாடு !!!!!!!!!!!!!!

ஏன்டா ‘இந்த வாயில்லாப் பூச்சியை அடிச்ச' என்றார் என் அம்மா இஸ்மாயிலைப்பார்த்து.
சோழப்பேரரசின் குறு நில மன்னர்களாகவும், தளபதிகளாகவும் விளங்கிய கைக்கோளர் (முதலியார் வம்சத்தின் ஷத்திரிய பிரிவு) பரம்பரையில் உதித்த பஞ்சம்பட்டி ஜமீந்தார், "ராய சவரிமுத்து பாண்டியன் - ராஜரத்தினம்மாள் தம்பதிகளின் பேரன் நான். பிற்காலச் சோழர் காலத்தில் சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டை முழுவதுமாகப் பிடித்துக் கொண்டு தன்னுடைய தளபதிகளுக்கு சோழ பாண்டிய பட்டம் சூட்டி மதுரைப் பகுதிகளை பிரித்துக் கொடுத்தனர். அப்படி திண்டுக்கல் பகுதிக்கு வந்தவர் என் தாத்தா.
செங்குந்தர் கொடி  
என்னுடைய திண்டுக்கல் பூர்வீக வீட்டில், குறைதீர்க்க, பஞ்சாயத்துப் பேச வந்த பெருங் கூட்டங்களை என் தாத்தா தன்னுடைய ஈசி சேரில் உட்கார்ந்து ஈசியாக தீர்த்து வைத்த காரியங்களை ஓசியாகப் பார்த்திருக்கிறேன், சிறுவயதில்.
என் தாத்தா "ராய சவரிமுத்து" தன் ஆண் வாரிசுகளுக்கு, தேவராஜ் பாண்டியன், செளந்தரபாண்டியன், ஜேம்ஸ் பாண்டியன், துரைப்பாண்டியன் என்று பெயர் சூட்டி, சொந்தப் பள்ளிக்கூடம், இரண்டு ஏக்கர் காம்ப்பவுண்டின் நடுவிலிருந்த மாளிகை, விவசாய நிலங்கள் என்று ஏராளமான சொத்துக்களை விட்டுச் சென்றார்.  எல்லோரும் உயர்பதவி வகித்த என் தாய் மாமன்கள். என் அம்மாவின் கல்யாணம் ஒரு வாரம் சிறப்பாக நடந்ததோடு, தேவதானப்பட்டியில் தியாகராஜன் (மாமா மகன்) என்ற ஆசிரியருக்கு வாக்கப்பட்டு, சுசீலா டீச்சராகி சொத்துகளை விட்டுவிட்டு வெத்தாக வந்து சேர்ந்தார். பெண்களுக்கு அப்போதெல்லாம் சொத்தில் பங்கில்லை. தியாகராஜன் சுசிலா நேசமணி தம்பதிகளுக்குப் பிறந்த மூன்று ஆண் வாரிசுகளும் வெத்தாகவே பிறந்தோம். ஆனாலும் என்னுடைய பாட்டியார் ராஜரத்தினம்மாள் எங்களுக்கு ஆசையாக ராஜசேகரன், ராஜமனோகரன், ராஜபாஸ்கரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். பாண்டியன் பட்டமும் அத்தோடு பறந்து போனது.

ஏழை ஆசிரியராக இருந்தாலும் என் அப்பா மிகவும் கம்பீரமானவர், கடைசி வரை தன் காலிலே நின்றதோடு பிள்ளைகளுக்கும் அதையே சொல்லிக் கொடுத்து வளர்த்தார்.
அப்படிப்பட்ட என்னை என் அம்மா எப்படியெல்லாம் சொல்லிவிட்டார்கள். என்ன நடந்ததென்று சொல்கிறேன்.
குதிரையேற்றம், யானையேற்றம் வில் வித்தை, வாள் பயிற்சி. இருங்கள் கொஞ்சம் பொறுங்கள், இவையெல்லாம் விட்டுப்போன தலைமுறையில் பிறந்தாலும் ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் நான் தேர்ந்து விளங்கினேன். அவை கோலிகுண்டு, பம்பரம், கிட்டிப்புள், நொண்டி, கபடி, கிளித்தாண்டு போன்ற பல விளையாட்டுகள் அடங்கிய கலைகள்.
அப்படி பம்பரம் விளையாடும்போது என் கூடப்படிக்கும் மும்தாஜின் முறைப்பையன் இஸ்மாயிலின் பம்பரம் வட்டத்தில் தனியே மாட்டியது. மும்தாஜைப் பார்க்கும் எல்லோருக்கும் இஸ்மாயில் மேல் பொறாமை வருவது சகஜம். எனக்கும் லைட்டாய் இருந்தது. வசமாய் மாட்டினான் என்று நினைத்துக்கொண்டு ,என் பம்பரத்தின் ஆணியை நாக்கில் தடவிப்பதம் பார்த்து, ஒரு கண்ணை மூடி, குறி பார்த்து ஓங்கிக்குத்தியதில் இஸ்மாயிலின் பம்பரம் ரெண்டாகப் பிளந்தது. அதே நேரத்தில் என் நண்பர்களின் கைதட்டல் என் காதைப் பிளந்தது.    என் பம்பரம் எந்த சேதாரமுமில்லாமல் பக்கத்தில் அருமையாக ரொங்கியது எனக்குப் பெருமையாக இருந்தது. விரலினிடையில் லாவகமாக எடுத்து போது உள்ளங்கையிலும் நின்று விளையாடியது.
ரொங்கிய அதன் அழகை கி- றங்கிய படி நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் சிறிய விர்ரிட்ட ரீங்காரம் லேசாக என் காதில் சிறகடிக்க, 'ச் ' என்று என் தலையில் ஒரு இடி இறங்கியது. பெருங்கோபத்தில் இஸ்மாயில்தான் என் தலையில்  குட்டியிருந்தான். பம்பரத்தின் ரீங்காரம் சட்டென மறைய வலியின் ஆங்காரம் தலைமுழுதும் பரவி அப்படியே கிறுகிறுத்துப்போனேன். டீச்சர் மகன் என்ற 'சிறப்பு அந்தஸ்தையும்' மீறி அவன் என்னை அடித்து விட்டதில், என் கர்வம் அடங்கி வீட்டுக்கு ஓடி அப்படியே என் அப்பாவின் ஈஸி சேரில் உட்கார்ந்து வலியை விழுங்க முயன்றேன்.
தலையில் தடவியபோது, இஸ்மாயிலின் பிளந்து போன பம்பரம் முழுதாக என் தலையில் முளைத்திருந்தது. முன்னொரு காலத்தில் முடி (கிரீடம் ?) சூடிய பரம்பரையில் வந்த என் தலை இப்போது அடி சூடி தடியாக இருந்தது.
மட்ட மதியானத்தில் சேகரு இப்படி வந்து படுக்க மாட்டானே என்று முன்னறைக்கு வந்த என் அம்மா, தலையில் இருந்த என் கோரை முடியை மீறி முளைத்திருக்கும் வீக்கத்தின் தாக்கத்தை உடனே பார்த்துவிட அவருக்கு வேகாளம் வந்தது. " எந்த நீசப்பயடா உன்னை அடிச்சதுன்னு", என்னைக் கேட்டார். என்னதான் இருந்தாலும் என் நண்பன் அல்லவா, காட்டிக் கொடுக்க மனதில்லாமல் "கீழே விழுந்து விட்டேன்",  என்றேன். அதை நம்பாமல், “ஏண்டா தலைகீழாவா குதிச்ச, சும்மா கதை விடாதே",ன்னு சொல்லி அவருக்கு டென்ஷன் ஏற எனக்கும் டென்ஷன் ஏறியது.
அதற்குள் "சேகரு ரொம்ப வலிக்குதான்னு", சொல்லிக்கொண்டே  உள்ளே நுழைஞ்ச மகேந்திரன் நடந்ததை உள்ளபடியே சொல்லி போட்டுக் கொடுத்துவிட்டான்.
உடனே யாரும் எதிர்பாராமல் என்னை தரத்தவென்று இழுத்துக் கொண்டு  மும்தாஜின் அப்பா செளகத்தலி வீட்டுக்கு சென்றார் என் அம்மா. கூட மகேந்திரனும் வந்தான். போகிற வழியில் பார்த்த என் மற்ற கூட்டாளிகளும் சேர்ந்தனர்.   
"வாங்க டீச்சரு",ன்னு, செளகத்தலி மனைவி எங்கம்மாவைக் கூப்பிட, எட்டிப்பார்த்த மும்தாஜ், "வா சேகரு",ன்னு சொல்லுச்சு. இவர்களை எல்லாம் உதாசீனம் செய்த என் அம்மா, கோபத்துடன் "எங்க அவன் இஸ்மாயில்", என்று கேட்க, இஸ்மாயில் தயக்கத்துடன் வெளியே வந்தான்.
எங்கம்மா அவனைப் பார்த்து, "ஏண்டா இஸ்மாயில் ஏண்டா சேகரை இப்படி அடிச்ச?"ன்னு கேட்டுட்டு மூச்சுவிடாமப் பேசினாங்க.
"ஏண்டா இந்த வாயில்லாப்பூச்சியை அடிச்ச, அவனே சத்தில்லாத தொத்தப்பய, பிறவியிலேயே சித்துப்பய, இந்த ஒல்லிக்குச்சிப்பயல அடிக்க எப்படிடா மனசு வந்துச்சு, இந்த புல்தடுக்கியை வெளியே போகாதேன்னு சொன்னா கேக்கிறானா, குச்சிக்கையை வெச்சுக்கிட்டு எப்படித்தான் விளையாடுரானோ. பாரு அவனை, வெயில சுத்தி கறுத்துச்சிறுத்து கருவாடா இருக்கான். உசிரைக் கண்ணுல வச்சிக்கிட்டு இருக்கிறவனைப் போய் நீ அடிக்கலாமா? ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனா அவங்கப்பா என்னை கொன்னுடுவாரு. படாத இடத்தில் பட்டுட்டா என்ன ஆவுறது, ஏற்கனவே எறும்பு கடிச்சதுக்கே வீங்கிப் போய்>>>>>>>>. சொல்லி முடிவதற்குள், மும்தாஜ் அங்கே வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தாள். திரும்பிப்பார்த்தால் அதற்குள் அங்கு கூடியிருந்த என் நண்பர் குழாம் முழுவதும் அதே போல் வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தார்கள். மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க என் மானம் காற்றில் பறந்தது.
வெக்கமும் கோபமும் பொங்கி வர,"அம்மா கொஞ்சம் நிறுத்திரியா",ன்னு கத்திட்டு, அவங்களையும் இழுத்துட்டு வெளியே வந்தேன்.
எல்லாத்துக்கும் மேலே மும்தாஜ் சிரிச்சதை நினைக்கும்போது என் தலையில் முளைச்ச பம்பரத்தின் வலியைக் காட்டிலும் அதிகமாவே இருந்துச்சு. அவனை திட்டுவாங்கன்னு பாத்தா அவங்க என்னை என்னை என்னை??????? எனக்குப்பொங்கி பொங்கி அழுகையாய் வந்துச்சு .நான் எப்படி மும்தாஜ் முகத்தில முழிப்பேன்.
முற்றும்
ஒரு முக்கிய அறிவிப்பு:

வருகின்ற அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் இலங்கைத்தமிழர் நடத்தும் ஆனந்தம் நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்குபெறும் பட்டிமன்றம் நடக்க விருக்கிறது என்னுடன் தோழர்கள் மோகன் , பிரபு சின்னத்தம்பி, தோழிகள் வான்மதி மற்றும் சுபா பங்கு கொள்கிறார்கள். நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிக்கட் பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பங்கு கொள்ளலாம்.
தலைப்பு :வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா ?நட்பா ?
இடம் : PS 131 அபிகைல் ஆடம்  பள்ளி
170-45 84th அவன்யூ
ஜமைக்கா, குயின்ஸ் , நியூயார்க் -11432

நேரம் : மாலை ஆறு மணி

3 comments:

  1. வீர செங்குந்தர் அவர்களே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வீர செங்குந்தர் அவர்களே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இந்த பஞ்சம்பட்டி ஜமீன்தார் பற்றிய முன்பு தகவல்கள் சொல்லுங்கள் அதை செங்குந்தர் சமூக வெப்சைட் போடுகிறோம்

    ReplyDelete