Friday, September 25, 2015

துப்பறியும் சங்கர்லால் !!!!!!!!!!!!!!

படித்ததில் பிடித்தது


“ஹலோ சங்கர்லால்"


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நான் ஆறாவது படிக்கும்போது என்னுடைய வாசிக்கும் ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்த என் அப்பா தேவதானப்பட்டியில் இருக்கும் ஒரு சிறு நூலகத்திற்கு என்னை அழைத்துச் சென்று, அங்கு பணிபுரிந்த பிச்சையிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு அவருடைய பெயரில் புதிய இரண்டு கார்டுகளைப்  ,பதிவு செய்து, புத்தகங்களை கடன் வாங்கிப் படிக்கவும் ஏற்பாடு செய்தார்.
பிச்சை என்னை அரவணைத்துக் கொண்டு, ஒவ்வொரு புத்தகமாக அறிமுகம் செய்தார். விடுமுறை நாட்களில் நூலகத்தில் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்தேன். கோகுலம், அம்புலிமாமாவில் ஆரம்பித்து வாண்டு மாமா, ஆலந்தூர் கோ.மோகனரங்கம் இப்படி படித்துக் கொண்டிருக்கும்போது, பிச்சை அறிமுகம் செய்தவர்தான் தமிழ்வாணன். பின்னர் கல்கண்டை என் வார பாக்கெட் மணியை முழுதும் செலவழித்து வாங்க ஆரம்பித்தேன். அதில் வரும் தொடர்கதைகளையும் கவனமாகப் பிரித்து ஒன்று சேர்த்து பைன்டிங் பண்ணினேன்.

தமிழ்வாணன் அவருடைய புத்தகங்களை, தன் சொந்த பிரசுரமான மணிமேகலை பிரசுரத்தின் மூலம் வெளியிடுவார். பிச்சை எனக்குக் கொடுத்த தமிழ்வாணன் எழுதிய முதல் புத்தகம்தான் "ஹலோ சங்கர்லால்". அந்தச் சமயத்தில் ஒரு சிறந்த மர்ம நாவலை படிக்கும் திருப்தி ஏற்பட்டது. தமிழ்வாணன் அவர்களின் "துணிவே துணை" என்ற சொல்லும் அவருடைய அடையாளமான் கறுப்புக்கண்ணாடியும் தொப்பியும் மிகவும் பிரபலம். தமிழ்வாணன் என்ற பெயரும் அதில் தமிழ் இருப்பதால் எனக்குப்பிடிக்கும்.
அந்த ஹலோ சங்கர்லாலை மீண்டும் படிக்க சந்தர்ப்பம் அமைந்தது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் கழித்துப்படித்தாலும் நன்றாகவே இருந்தது. மணிமேகலைப் பிரசுரம் ஒரு மறுபதிப்பாக சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்களின் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. அவற்றுள் பாகம் 1-ல் முதற்கதையாக உள்ளதுதான் "ஹலோ சங்கர்லால்".
தமிழ்வாணன் எழுதிய மர்மநாவல்களில் வரும் கதாபத்திரங்கள், அப்போது படித்த என்னைப்போன்ற எண்ணற்ற வாசகர்கள் மனதில் திந்து போயின. அவருடைய கதை சொல்லும் யுக்தி தமிழ் எழுத்துக்கு மிகவும் புதியது, மர்மங்களை ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே போய், இறுதியில் பல திடுக்கிடும் உண்மைகளை சங்கர்லால் வெளிப்படுத்தும்போது ஆச்சரியத்தை அளிக்கும். தமிழ்வாணனின் சிறப்பு என்னவென்றால் எந்த ஒரு இடத்திலும் யாராலும் அந்த மர்மத்தை யூகிக்கவே முடியாது.  அடுக்கடுக்காக சம்பவங்கள் நடக்கும்போது சங்கர்லால் அவர்களின் எண்ண ஓட்டத்தையும், எதற்காக சில காரியங்களைச்  செய்கிறார்  என்றும் ஒன்றுமே  புரியாது. குறிப்பாக சங்கர்லால் வெளிநாடுகளில் துப்பறியும் மர்மக்கதைகள் அந்தந்த நாடுகளுக்கே நம்மை அழைத்துச்செல்லும். தமிழ்வாணன் அவர்களை 'மர்மக்கதை மன்னன்' என்று  சொல்வது சாலப்பொருந்தும்.  
 சங்கர்லாலை விட்டுவிட்டு, தமிழ்வாணன் அவர்களே துப்பறிவாளர் அவதாரம் எடுத்து எழுதிய நாவல்கள் சங்கர்லால் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக சோபிக்கவில்லை. ஆனால் அதற்குப்பின் அவர் அதிக நாள் உயிரோடு இருக்கவில்லை.
        சங்கர்லாலின் பாத்திர அமைப்பில் அவருடைய உருவ அமைப்பும் அப்படியே என் மனதில் பதிந்து போனது. அந்தச் சமயத்தில் சங்கர்லால் என்று ஒருவர் இருக்கிறார் என்றே புத்தகம் படித்த என்னைப்போன்ற பல சிறுவர்கள் நம்பினார்கள். சீரிய உடை, கலைந்த சுருள்முடித் தலை, தளர்த்தப்பட்ட கழுத்துப்பட்டை, கிரேப் நடையன்கள் ஆகியவற்றை ஓவியர் ராமு கிட்டத்தட்ட தன் ஓவியம் மூலம் கொண்டுவந்துவிடுவார். அவருடைய அழகிய மனைவி இந்திரா அவள் சங்கர்லாலை 'அத்தான்' என்று கூப்பிடும் இனிமை (என் மனைவிகூட என்னை அத்தான் என்றுதான் அழைப்பாள்) அவர் வேலை செய்யும், மது, மாணிக்கம், மைனா கத்தரிக்காய், அப்புறம் உதவி போலிஸ் கமிஷனர் வகாப் ஆகிய பாத்திரங்களை  முடியுமா?  
“சங்கர்லால் தன் மேஜையின் மேல் கால் மேல் கால்  வைத்து ஒரு கனத்த  புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்” என்று பலதடவை படித்த போது, அது என்ன புத்தகம் என்று அறிய தமிழ்வாணனுக்கு கடிதம் கூட எழுதினேன் நான்.
தமிழ்வாணன் புத்தகங்களில் எனக்கு மேலும் பிடித்தவை அழகான தமிழ்ச்சொற்கள். குறிப்பாக 'ஹலோ சங்கர்லால்' புத்தகத்தில், பேரிடர் சங்கு, நடையன்கள், கழுத்துப்பட்டை, நிலைப்பேழை, அச்சம், வையகப்போர் போன்ற சொற்கள் சிறப்பானவை. அதோடு அவர் புத்தகத்தில் வரும்  பெயர்கள் சிறப்பானவை. குறிப்பாக இந்தப்புத்தகத்தில், நம்பி, பொன்னரசு, இளவரசு, கயல்விழி, பொன்னுத்துரை, அன்னம்மாள், தூயமணி, நாகமாணிக்கம் போன்ற பெயர்களைச் சொல்லாம்.
சுஜாதாவுக்கு முன்னோடியாக அச்சில் சில வித்தைகள் செய்தவர் இவர். அது மர்மக் கதைக்கு விறுவிறுப்பு ஏற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக உடனே தொலைபேசி அலறியது என்று ஒரு வரி.அதற்கு அடுத்த வரியில் 'அதில்' என்று ஒரே வரி, அதற்கு  அடுத்த வரியில் 'யாரோ' என்றும் அதற்கு அடுத்த வரியில் "முகவரி கிடையாது" என்றும் வரும்.
தமிழ்வாணன் வாழ்க்கைக்குறிப்பு:
தமிழ்வாணன்
தமிழ்வாணன் அவர்களின் இயற்பெயர் லட்சுமணன், ராமநாதன் செட்டியார். இவர் செட்டிநாட்டுப் பகுதியில் 1921ல் பிறந்தவர். தேவகோட்டை என்பது அவர் சொந்த ஊர். கல்கண்டு என்ற அவரது பத்திரிகை அந்தக் காலத்தில் மிக வித்தியாசமான முயற்சி. பல துணுக்குகளின் தோரணம் அது என்று சொல்லலாம். அவர் ஆரம்பித்த மணிமேகலைப்பிரசுரம் இன்னும் சிறப்பாக செயல்படுகிறது. அவருடைய இரு மகன்களான லேனா தமிழ்வாணன் மற்றும் ரவி தமிழ்வாணன் அதனை திறம்பட நடத்தி வருகிறார்கள்.
லேனா தமிழ்வாணன்
தமிழ்வாணன் பல வெளிநாடுகளுக்குச் சென்று அதன் பின்னணியில் அவருடைய கதைகளை அமைத்தது அப்போது மிகவும் புதியது.
தமிழ்வாணன் தமது 1977ல் 56ஆவது வயதில் உயிர் நீத்தார்.
மணிமேகலைப் பிரசுரம் மூலமாகவும் அவருடைய புத்தகங்கள் மூலமாகவும் தமிழ் உலகில் அவர் நீண்ட நாள் வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை.

முற்றும்

6 comments:

 1. அருமை காணமல் போன வைரம் எனக்கு பிடித்த நாவல்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி செந்தில் .

   Delete
 2. கல்கண்டு எனக்கும் மிக பிடித்த ஒன்று.
  என் அப்பாவிடம் நிறைய தமிழ்வாணன் புத்தகம் உண்டு. அதை அப்போது படித்து இருக்கிறேன். மிக நன்றி.

  ReplyDelete
 3. சுவாரஸ்யம் ஆல்ஃபி சார். அந்நாட்களில் அவருடைய அடையாளமான கறுப்புக்கண்ணாடியும் தொப்பியும் வரைந்து அஞ்சலட்டையை பதிவு செய்யலாம் என கேட்டதுண்டு.

  ReplyDelete
 4. நல்ல கட்டுரை. அவரது புத்தகங்களில் சிலவற்றை நானும் படித்திருக்கிறேன். சிறு வயதில் கல்கண்டு தொடர்ந்து படித்திருக்கிறேன். அதில் தான் எத்தனை விஷயங்கள்....

  ReplyDelete