Thursday, June 25, 2015

லாரன்ஸ் & டேவிட் !!!!!!!!!

படித்ததில் பிடித்தது
லாரன்ஸ் & டேவிட் துப்பறியும் “வான் வெளிக்கொள்ளையர்”

         அப்போதெல்லாம் என் வீட்டில் டிவி கிடையாது. ரேடியோவில், காலையில் ஒலிக்கும் திரைப்படப் பாடல்கள் (உபயம் : இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம்), திருச்சி வானொலி நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஒலிக்கும் முத்துச்சரம், புதன் இரவு தொடர் நாடகம், ஞாயிற்றுக்கிழமை வரும் ஒலிச்சித்திரம், இது தவிர தினத்தந்தியில் சிந்து பாத் (இப்போதும் வருகிறதாமே? முதுகில் இருந்து இறங்கி விட்டானா ?), கோகுலத்தில் “பலே பாலு”, அம்புலிமாமாவில் விக்ரமாதித்யன் (தன் முயற்சியில் சற்றும் தளராத) இவைகள்தான் உச்சபச்ச பொழுதுபோக்கு வீட்டுக்குள். வெளியே தேவதானப்பட்டி சிவராம் டாக்கீசில், அழுது வடியும் சிவாஜி படங்கள், ஆர்ப்பாட்டமான எம்ஜியார் படங்கள் (என் அப்பாவால் தணிக்கை செய்யப்பட்டவை மட்டும்) இல்லையென்றால் புராணப்படங்கள்.  
இதையெல்லாம் மீறி உன்னதமான பொழுதுபோக்காக இருந்தவை 'முத்து காமிக்ஸ்' கதைகள். இதில் வந்த சூப்பர் ஹீரோக்களின் சாகசங்கள் மனதைக்கவர்ந்தவை மட்டுமல்ல, நம்மையும் சாதிக்கத் தூண்டுபவை. இவர்களுள் எனக்கு மிகவும் பிடித்த ஜோடிகளில் ஒன்று லாரன்ஸ் & டேவிட். இவர்களின் சாகசங்கள் அடங்கிய "வான் வெளிக்கொள்ளையர்"--ன் மறுபதிப்பை சமீபத்தில் வாசித்தேன்.
இந்தக் கதைகள் எல்லாம் எத்தனை கனவுகளை எனக்குள் புதைத்தன, எவ்வளவு அறிவாற்றலை விதைத்தன என்பதை நினைத்துப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது.
1960-களில் அறிவியலில் முன்னேற்றமடைந்த நாட்டிலிருந்து வெளிவந்த இந்த காமிக்ஸ்கள் 1970-களில்தான்  நமக்கு தமிழில் கிடைத்தாலும், எவ்வளவு புதுமைகளை எனக்குள் சொல்லியிருக்கிறது என்பதைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
வெளி நாட்டின் முக்கிய இடங்கள்:
'வான்வெளிக் கொள்ளையர்' காமிக்ஸில், லாஸ் ஏஞ்சலஸில் ஆரம்பித்து, ஹீயூஸ்டன், டெக்சஸ், அரிஜோனா மாநிலம், நியூயார்க் மற்றும் லண்டன் ஆகிய இடங்கள் வருகின்றன.  
யோசித்துப்பாருங்கள், எட்டு வயதிலிருந்து 10 வயதுக்குள் இந்த இடங்களெல்லாம் எனக்கு அறிமுகமாகிவிட்டன. இப்போது மேலே குறிப்பிட்ட அனைத்து இடங்களையும் நேரில் பார்த்துவிட்டதோடு, நியூயார்க்கில்தான் வாழ்கிறேன் என்று நினைத்தால் அது ஆச்சரியம் இல்லையா.
படிப்பதோடு இந்த இடங்களையெல்லாம் நேரில்பார்க்கத்தூண்டியது இந்த காமிக்ஸ்கள்தான் என்றால் நம்புவீர்களா?.
'மஞ்சள் பூ மர்மம்' தான் லண்டனின் தேம்ஸ் நதியைப் பார்க்கத்தூண்டியது.
தலைகேட்ட தங்கப்புதையல்தான் - மெக்சிகோவை பார்க்கத்தூண்டியது.
அது மட்டுமல்ல இந்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்ற போது புதிதாகப் பார்ப்பது போலவே எனக்குத் தெரியவில்லை. இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் லிஸ்ட்டில் இருக்கின்றது.
விமானங்கள்:
விமானங்களை பக்கத்தில் பார்ப்பதற்கு எனக்கு வெகுகாலம் பிடித்தது. எங்கள் ஊரின் மேலே தொலைதூரத்தில் ஜெட் விமானம், வானத்தில் வெள்ளைக்கோடைப் போட்டுக் கொண்டு போகும் போது, நாங்கள் வெளியே வந்து விமானம் மறையும் வரை பார்ப்போம். ஆனால் காமிக்ஸ் மூலம் நான் விமானத்தில் பயணித்தேன், விமானங்களைப் பற்றி அறிந்துகொண்டேன். குறிப்பாக 'வான்வெளிக்கொள்ளையர்' காமிக்ஸ் மூலம் நான் அறிந்து கொண்ட பலவற்றுள் சில கீழே.
·         விமானத்தில் தானே செலுத்தும் கருவி.
·         சுவாசக்கவசம்
·         ஹெலிகாப்டர்
·         பாராச்சூட்
·         பெரிய விமானம் சின்ன விமானத்தை விழுங்குதல்.
·         ரடார்
·         சூப்பர்சானிக் போர் விமானங்கள்.
யோசித்துப்பாருங்கள் அந்த வயதில் எத்தனை புதிய விஷயங்கள்.
அதிநவீன விஞ்ஞானம்:
அதுமட்டுமல்ல, அலாரம் பொருத்தப்பட்ட அடையாள வில்லை, பென்சில் ரேடியோ, டிரான்ஸ்மிட்டர்கள், அணு ஆராய்ச்சி நிலையம், மேலும் கம்ப்யூட்டர் பிரிவு. நான் ஐந்தாவது படிக்கும் போதே கம்ப்யூட்டர்களைப்பற்றி தெரிந்து கொண்டது காமிக்ஸ் மூலம் தான். ஆனால் உபயோகப்படுத்த ஆரம்பித்தது முதுகலை முடித்து மூன்றாவது வேலையில் தான்.  
ஜூடோ டேவிட்:
சிலம்பம், மல்யுத்தம், குத்துச்சண்டை, என்பவை பற்றித்தான் தெரியும். கராத்தே பற்றி அரசல் புரசலாக கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் ஜூடோ பற்றி அறிந்து கொண்டது காமிக்ஸ் மூலம் தான். காமிக்ஸ்களை படித்துவிட்டு என் அப்பாவிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டு அவரைத் திணறடித்தது ஞாபகம் வருகிறது.
அகொதீக:
லாரன்ஸ் & டேவிட் கதைகள் மட்டுமல்லாமல் இரும்புக்கை மாயாவியின் கதைகளிலும் இந்த கிரைம் குரூப் வரும். அழிவு, கொள்ளை, தீமை கழகம் என்பது அதன் விரிவாக்கம். சில்லறைத் திருட்டுகளைப்பற்றி மட்டும் அறிந்த என் போன்றோர் 'ஆர்கனைஸ்டு கிரைம்' பற்றித் தெரிந்து கொண்டது காமிக்ஸ் மூலம்தான். அவ்வளவு உயர்ரக ஆயுதங்களைப் பயன்படுத்தும் ராணுவம் போன்ற கட்டுப்பாடுள்ள அகொதீக வைப் பற்றி படித்துவிட்டு ஜெய்சங்கர் படங்களில் வரும் கொள்ளைக் கூட்டத்தையும், கூட்ட பாஸையும் பார்க்கும் போது சிரிப்புதான் வரும்.
தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, அகொதீக என்று ரைமிங்காக வரும் கழகம் என்ற கடைச் சொல்லைப் பயன்படுத்திய அப்போதைய ஆசிரியர் தைரியம் உடையவர்  மட்டுமல்ல கிண்டலும் பிடித்தவர்தான்.  
விச்சு & கிச்சு:

காமிக்சின் முழுக்கதையின் பின் இணைப்பாக தலைகாட்டும் விச்சு & கிச்சு வைப்படித்துவிட்டு வாய்விட்டுச் சிரித்திருக்கிறேன். லாரல் & ஹார்டியை நினைவுபடுத்தும் விச்சு & கிச்சு, மன்னிக்க லாரல் & ஹார்டியைப் பின்னர் பார்க்கும் போது விச்சு & கிச்சு தான் ஞாபகம் வருகிறது.ஒவ்வொரு தடவையும் மேதாவி போல் முடிவு எடுத்து மூக்குடையும் விச்சு கேரக்டரையும், விச்சுவின் முயற்சி எதிர்மறையாக ஆகும் போது, சிரிக்காமல் கமெண்ட் அடிக்கும் கிச்சுவையும் எப்போதும் ரசிக்கலாம்.
என் வாழ்க்கையிலும் விச்சு போன்ற எத்தனை கேரக்டர்களைப் பார்த்திருக்கிறேன்.
மொத்தத்தில் எப்போது படித்தாலும், காமிக்ஸ்கள் சுவையாகவே இருக்கின்றன. புதியவற்றை  கற்றுக் கொள்ள துணையாகவே இருக்கின்றன. அதோடு காமிக்ஸ் கிளாசிக்ஸ் படிக்கும் போது பழைய நினைவுகளைத் தூண்டி 'நாஸ்டால்ஜிக்' உணர்ச்சிகள் துள்ளி வருகிறது. புதுவடிவில் வருவதை நன்றி சொல்லி வரவேற்கிறேன், கலரில் கொடுத்தால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்.  
லாரன்ஸ் & டேவிட்  வரும் எனக்குப்பிடித்த காமிக்ஸ்கள்:
1.    திசைமாறிய கப்பல்கள்
2.    மஞ்சள் பூ மர்மம்
3.    பிளைட் 731
4.    காற்றில் கரைந்த கப்பல்கள்
5.    ஃபார்முலா X13
6.    சிறைப்பறவைகள்
7.    பனிக்கடலில் பயங்கர எரிமலை
8.    ஃபார்முலா திருடர்கள்
முற்றும்


24 comments:

 1. நண்பரே,

  படித்ததும் உடனே பின்னூட்டம் எழுதத் தூண்டியது உங்கள் பதிவு. அபாரம். நீங்கள் குறிப்பிட்டது போலவே நானும் சிறிய வயதில் முத்துக் காமிக்ஸ் படித்துதான் உலகின் பல நாடுகளையும் அதன் தலைநகரங்களையும் அறிந்தேன். தேம்ஸ் நதி, ஐபில் கோபுரம், நாக்ஸ் கோட்டை, பெர்லின் சுவர், விமானங்கள், ஹெலிக்காப்டர்கள், ராக்கெட், ஐ நா சபை, இத்யாதிகளுடன் மேற்கத்திய பெயர்களை சரியாக உச்சரிக்கவும் கற்றுக்கொண்டேன். பள்ளியில் விஞ்ஞானிகள் என்று பெஞ்சமின் பிராங்க்ளின், ஐன்ஸ்டைன், ரூதர்போர்ட், போன்ற பெயர்களை மற்றவர்கள் தப்பும் தவறுமாக படிக்கும் சமயத்தில் எனக்கோ அந்தப் பெயர்கள் மீது அலாதி பிரியம். எல்லாம் காமிக்ஸ் கற்பித்த கல்வி.

  லாரன்ஸ் டேவிட் சாகசங்கள் துடிப்பாக இருக்கும். ஜானி நீரோ போன்று மெல்லிய ரொமான்ஸ் இல்லாத முழுதும் ஆண்மைத்தனம் எகிறும் அடி தடி அபாரம். தலை கேட்ட தங்கப் புதையல் படிக்கும் போது ரத்தம் நம் மீது தெறிக்கும். மஞ்சள் பூ மர்மம் திகிலூட்டும். பனிக்கடலில் பயங்கர எரிமலையில் லாரன்ஸ் low profile இல் அடக்கி வாசிக்க, டேவிட் துரோகிகளாக மாறிவிட்ட தன் நண்பர்களை தேடிச் சென்று அவர்களை துவம்சம் செய்வார். சிறைப் பறவைகள் கேங்ஸ்டர் பாணியில் விறுவிறுப்பாக நகரும். அந்தப் படங்களைப் பார்த்துகொண்டிருப்பதே இன்பமயமாக இருக்கும்.

  பிறகு காரிகன்,கிஸ்கோ, ரிப் கெர்பி, மாயாவி, சார்லி, ஜார்ஜ் ஹசார்ட், ஜான் என்று காமிக்ஸ் கதாநாயகர்களின் படையெடுப்பு பற்றி ஒரு நீண்ட பதிவே எழுதலாம்.

  நான் எழுதியிருந்தாலும் நீங்கள் எழுதியதையேதான் எழுதியிருப்பேன். ஒரே ஒரு வித்தியாசம். உங்களைப் போலில்லாமல் நான் காமிக்ஸ் காண்பித்த இடங்களை இன்னும் கற்பனையிலேயே ரசிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. காரிகன், வாங்களேன் நியூயார்க்கை சுற்றலாம் .டிக்கெட் மட்டும்
   உங்கள் செலவு மற்றவை எனது.

   Delete
  2. நண்பர் ஆல்ஃபி,

   உங்களைப் போன்றே நண்பர் விசுஆசமும் என்னை அழைக்கிறார். உங்களின் கனிவான நெஞ்சம் நிறைந்த அழைப்புக்கு மிக்க நன்றி.

   Delete
 2. அடடா, பதிவு அட்டகாசம் என்று கமெண்ட் போட வந்தால்,

  நம்ம காரிகன் சார் இந்தப் பதிவை, அழகாக, அலசி ஆராய்ந்து ஒரு அட்டகாசமான கமெண்ட் போட்டு மேலும் அழகூட்டி இருக்கிறார். நன்றி காரிகன் சார்.

  பள்ளியில் படிக்கும்போது, காமிக்ஸ் படிக்கும் நம்மைப்போன்ற மாணவர்களுக்கு காமிக்ஸ் படிக்காத மாணவர்களை விட ஒரு (வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஒரு) அட்வாண்டேஜ் இருந்ததை ஒப்புக்கொள்ள வேண்டி இருக்கும்.

  பிறகு ஒரு அரசியல் கலந்த செய்தி: ஜானி நீரோவின் முதல் கதையான கொலைகாரக் கலைஞன் வெளியான போது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார் தெரியுமா? கலைஞர் கருணாநிதி அவர்களே. சரி, போனால் போகிறது? என்று விட்டு விட்டால், இதே கதை காமிக்ஸ் கிளாசிக்சில் முதல்முறையாக மறுபதிப்பு செய்யப்பட்டபோது, தமிழக முதல்வர் யார் தெரியுமா? சாட்சாத் நமது கலைஞரே.

  பின் குறிப்பு: இந்த உதாரணம் ஒரு தற்செயலான சம்பவத்தை சுட்டிக்காட்டவே இங்கே கூறப்பட்டது. இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் கிடையாது.

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ அதுவே இப்போது மறுபதிப்பு செய்யும்போது , வேண்டாம் போதும் .

   Delete
  2. ஆமாம், ஆமாம். நோ அரசியல். நோ அரசியல்.

   Delete
 3. ஒரு விளம்பரம்: விச்சு கிச்சுவைப் பற்றி மேலதிக தகவலுக்கு: தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 4. வாங்க விஸ்வா,

  நன்றி.

  காமிக்ஸ் என்று வந்தாலே நாமெல்லாம் ஒரே குதிரையில் சவாரி செய்பவர்கள்தானே?

  கொலைகாரக் கலைஞன் போன்ற கவிதை தலைப்புக்கள் காமிக்ஸ் கதைகளுக்கு ஓர் ஆச்சர்யம்தான். அதில்தான் மெழுகுச் சிலைகள் பற்றிய விபரம் அறிந்தேன். அதே போல காணாமல் போன கைதி எனக்கு ஒற்றர்கள் பற்றிய எண்ணத்தை விதைத்தது.(அதன் அட்டைப் படமே அத்தனை அழகாக இருக்கும்.)

  அ. கொ. தீ.க போன்ற சிண்டிகேட் குற்ற அமைப்புதான் பிற்காலத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் தலை காட்டியது. வான் வெளிக் கொள்ளையர் கதையில் வரும் அந்த விமானத்தை விழுங்கும் பெரிய விமானம் தண்டெர்பால், அல்லது டையமண்ட்ஸ் ஆர் பாரெவர் என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் (ஷான் கானரி நடித்தது) காப்பியடிக்கப்பட்டிருக்கும்.

  அ. கொ. தீ.க வுக்கு என் கசின் ஒருவன் மிக அருமையான விளக்கம் கொடுப்பான். "அழகான கொள்ளையர் தீயிட்டுக் கடத்துவர்" என்பான். ரகளைதான்.

  இந்த உரையாடலை சாத்தியமாக்கிய நண்பர் ஆல்பிக்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கஸின் சிறப்பான விளக்கம் தான் கொடுத்துள்ளார்.

   சமீபத்தில் நண்பர் ஈரோடு விஜய் அவர்களும் இதைப்போலவே ஒரு விளக்கம் கொடுத்தார்.

   அ.கொ.தி.க ஆள் = அதிகமா கொழுக்கட்டை தின்னுட்டு கஷ்டப்படும் ஆளு.

   என்னக் கொடுமை சார், இது?

   Delete
  2. காரிகன் சார்,

   //வான் வெளிக் கொள்ளையர் கதையில் வரும் அந்த விமானத்தை விழுங்கும் பெரிய விமானம் தண்டெர்பால், அல்லது டையமண்ட்ஸ் ஆர் பாரெவர் என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் (ஷான் கானரி நடித்தது) காப்பியடிக்கப்பட்டிருக்கும்//

   தண்டர் பால் படத்தில் தான்.

   Delete
  3. விஸ்வா,

   அ.கொ.தீ க. அதாவது அழிவு கொள்ளை தீமை கழகம். எனவே அதிகமா கொழுக்கட்டை தீயவிட்டுத் தின்னு கஷ்டப்படுற ஆள் என்பது சரியாக இருக்குமோ ?

   அடேய் என்று நீங்கள் பல்லைக் கடிப்பது கேட்கிறது.

   தண்டர்பால் படத்தில்தான் அந்த விமானம் விழுங்கும் காட்சி உண்டு. என் குழப்பத்தை தீர்த்துவைத்ததற்கு நன்றி.

   நாங்களெல்லாம் அப்போது ஆங்கிலப் படங்கள் பார்க்கும் போது முத்துக் காமிக்ஸ் மாதிரியே இருக்கே என்று வியப்படைவோம். மற்றவர்களுக்கு காமிக்ஸ் ஆங்கிலப் படங்கள் போல தோன்றும்.

   Delete
  4. காரிகன் சார்,

   //விஸ்வா,

   அ.கொ.தீ க. அதாவது அழிவு கொள்ளை தீமை கழகம். எனவே அதிகமா கொழுக்கட்டை தீயவிட்டுத் தின்னு கஷ்டப்படுற ஆள் என்பது சரியாக இருக்குமோ ?//

   இந்தக் கமெண்ட்டை போடது ஈரோடு விஜய் என்ற நன்பர். அவர் கிண்டலாக செய்த வேலை இது. சும்மா நகைச்சுவைக்காக என்று எடுத்துக் கொள்ளலாம்.

   எனக்கும் ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் போது, இப்படித்தான் தோன்றியது. குறிப்பாக கௌ பாய் படங்களைப் பார்க்கும் போது, அட, இதே மாதிரி காமிக்ஸ் கதையில் வருமே? என்று தோன்றும். அதைப்போல, ரேஞ்சர், ஷெரிஃப், மார்ஷல், சலூன் போன்ற வார்த்தைகள் எல்லாம் சுலபமாக புரிந்த காலம் அது.

   பின் குறிப்பு: என்னுடைய நினைவு தெரிந்த சிறு வயதில், முடிவெட்டும் கடைக்குச் சென்று அதன் பெயர் சலூன் என்று இருப்பதைக் கண்டு, அண்ணனிடம் சொல்லி, அவர் அதை விளக்கியது எல்லாம் உண்டு. இதைப்போல பல நினைவுகள்.

   நன்றி.

   Delete
 5. அன்றைய பொழுதுபோக்கு உண்மை... அதுவே இனிமை... கிண்டலும் உண்மை...!

  ReplyDelete
  Replies
  1. பதிவை மேலும் சிறப்பாக்கிய நண்பர் காரிகன் , நண்பர் கிங் விஸ்வா, திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் .

   Delete
  2. உங்கள் நன்றிக்கு நன்றி சார்.

   Delete
 6. ஆல்ஃபிரட் சார் அருமையான பதிவு அதை படித்ததும் தேவதான பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவிலும் அந்த ஆற்றங்கரையும் தோட்டத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலும் என் மனதில் நிழலாடியது

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அம் மூருக்காரர் போலத் தெரியுதே , அந்த ஆற்றின் பெயர் மஞ்சளாறு .நன்றி செந்தில்குமார்.

   Delete
 7. அழகான ...அருமையான பதிவு சார் ....நீங்கள் சொன்ன அனைத்தும் வரிக்கு வரி உண்மை சார் ..அது போலவே காரிகன் சார் சொன்னது போலவும் இன்னமும் நாங்கள் கற்பனையில் மிதந்து கொண்டு இருக்கிறோம் ..:)

  ReplyDelete
  Replies
  1. முயன்றால் முடியாதது என்றும் ஒன்று இருக்கிறதா ?
   எனக்கே முடியும்போது , யாருக்கும் முடியும் பரணிதரன்

   Delete
 8. ஆல்பி சார்

  அடடா! பழைய முத்துக் காமிக்ஸ் உலகத்திற்குள் மீண்டும் என்னைக் கூட்டிக் கொண்டு போய் விட்டீர்களே ! நான் முதன் முறையாக என் பெரியம்மா வீட்டிற்குப் போன பின்புதான் முத்து காமிக்ஸ் எனக்கு அறிமுகமானது. அதை படிப்பது ஆங்கிலப் படங்கள் பார்த்த திருப்தி தரும்.

  10 வருடங்கள் கழித்து ஒரு ஆங்கிலத் திரைப்படம் பார்த்தபோது அடுத்தடுத்த காட்சிகள் இப்படிதான் இருக்கும் என எனக்கு உள் மனதில் ஏதோ ஒரு பட்சி சொல்லிக் கொண்டே இருந்தது . படத்தின் காட்சிகளும் அதைப் போலவே இருக்கவும் என்னைப் பார்த்து எனக்கே பயம் . அமானுஷ்ய சக்தி எதுவும் எனக்குள் புகுந்து விட்டதோ என்று கற்பனை செய்து கொண்டே வீடு வந்து சேர்ந்தால் திடீரென நான் வாசித்த முத்து காமிக்ஸ் கதை ஞாபகம் வந்தது. படத்தின் கதை அதே காமிக்ஸ் கதை. ஆழ மனதில் பதிந்து போன காமிக்ஸ் கதைகள் எல்லாம் கிளம்பியது அப்போதுதான் உறைத்தது . முத்து காமிக்ஸ் எப்படியொரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு பாருங்கள்!?

  இரும்புக் கை மாயாவி , மந்திரவாதி மான்ட்ரெக் எல்லாம் மறந்து விட்டீர்களே!?


  ReplyDelete
  Replies
  1. இரும்புக்கை மாயாவியை மறக்க முடியுமா ? அதனை இங்கே குறிப்பிட்டு இருக்கிறேனே. மான்ரேக்கும் எனக்கு பிடித்தவர்தான் .நன்றி சார்லஸ்

   Delete
 9. உங்களின் இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று வாசிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ‘தளிர்’ சுரேஷ் .

   Delete