Friday, March 29, 2013

லிட்டில் இந்தியா -2 : யூதப்பெண்ணும் சாதப்போட்டியும்


       US ல் 12 மணி லஞ்ச் டைம் என்பதால், இந்த உணவகங்கள் அனைத்தும் பெரும்பாலும் நிரம்பி வழியும்.     பக்கத்தில் உள்ள கிரடிட் சுயிஸ் நிதி நிறுவனத்தில் நூற்றுக்கணக்கில் நம்மவர் இருக்கிறார்கள். நிறைய சுந்தர (?) தெலுங்கும் அடுத்தபடியாக ஆங்கிலத்தமிழும் அதிகமாக கேட்கும்.

இந்தியர், தங்களது வெள்ளைக்கார நண்பர்களையும் சில சமயம் அழைத்து வருவது உண்டு.     கார உணவு வகைகளைப்பார்த்து, முதலில் பயந்த அவர்கள் இப்போதெல்லாம் பழகிவிட்டனர் என்பது வரும் கூட்டத்தைப் பார்த்தே தெரிகிறது. ஆனாலும் லெக்கிங்டனில் எந்த உணவகத்திலும் ,அவ்வளவாக  காரம் இருக்காது.

     ஒரு வெள்ளைக்காரன் சொன்னான், “ உங்கள் தென்னிந்திய உணவு முதலில் சாப்பிடும்போது பிடிக்கவில்லை, ஆனால் சாப்பிட, சாப்பிட மிகவும் பிடித்துவிட்டதென்று. ஆனால் அடுத்த நாள் பாத்ரூம் போகும்போது தான்,?????????????? (சும்மா ஜிவ்வினு இருக்கும்ல)

     இங்கிலாந்தில், ஒரு வெள்ளைக்காரன் சொன்னதாக படித்தேன். "Indian  food  is like sex  on the  plate " என்று.
  
     சென்னை கார்டனில் நாங்கள் என்ன சாப்பிட்டோம் என்பதைச் சொல்லுமுன் மற்ற உணவகங்களில் எனக்குப் பிடித்தவற்றை சுருக்கமாக பட்டியலிடுகிறேன்.
சரவணபவன்
1) மீல்ஸ் தாலி
மதியம் சென்றால் பிஸினெஸ் லஞ்ச்  13 டாலர்கள்
இரவில் சென்றால் தாலி மீல்ஸ் 17 டாலர்கள் (தாலி அந்துவிடும்)
2) தோசை பல வகைகள் (9 முதல் 12 டாலர்கள்)
3) சப்பாத்தி (குருமாவுடன் இணைந்து வாயில் கரையும், நான் கியாரண்டி) 10 டாலர்கள்
அஞ்சப்பர்
1) பிஸினெஸ் மீல்ஸ் - சிக்கன் (மதியம் மட்டும்) - 13 டாலர்கள்
சாப்பாடு, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், சிக்கன் குழம்பு மற்றும் சிலதுண்டு சிக்கன் வருவல்
2) கொத்துப்பரோட்டா - மட்டன் -16 டாலர்கள்.
3) மட்டன் சுக்கா  வறுவல் - 15 டாலர்கள்.
4) சிக்கன் - 65 - 10 டாலர்கள்.
5) கத்தரிக்காய் குழம்பு - 8 டாலர்கள்.
சிக்கன் - 65 சிறு குறிப்பு
     நம் சென்னையில் உள்ள புகாரி ஓட்டல் மெனுவில் 65ஆம்  நம்பரில் இருந்த சிக்கன் வருவல் தான் இப்போது சிக்கன் 65 என்று உலகப்புகழ் அடைந்துள்ளது.(ஆமாம் இந்த புகாரி இப்போது இருக்கிறதா?) இப்போது வட இந்திய, பாகிஸ்தானி, பங்களாதேஷ் கடைகளிலும் சிக்கன்-65 மிகவும் பிரபலம்.
     இப்போது சென்னை கார்டன் பஃபேயில் என்ன இருந்தது என்பதை கீழே கொடுக்கிறேன், வரிசைப்படி 


1) அப்பளம் (நான்காக வெட்டப்பட்டு பொறித்தது)
2) சிறிய வெங்காய ஊத்தப்பம் (அப்படைசர்) கேரட்டும் போட்டிருந்தனர்
3) வெஜிடபிள் புலாவ்
4) பாஸ்மதி வெள்ளை அரிசி
5) கதம்ப சாம்பார்
6) மட்டர் பன்னீர் கறி  (பட்டாணியும் , பன்னீரும்)
7) ஆலு கோபி (உருளைக்கிழங்கும் காலிபிளவரும்)
8) தால் கறி (பருப்புக்கறி)
9) சட்னி, கெச்சப், ஸ்வீட் / சோர்  சாஸ், ஊறுகாய்
10) ரைஸ் கீர்
11) காரட், வெள்ளரி, ஸ்பின்னாச், லாட்டுஸ் சாலட்.
ரசம் ஒன்றுதான் மிஸ்ஸிங்  4 டாலர், தனியாக வாங்கவேண்டும், சோடாவும் தனியாக வாங்கவேண்டும் - 2 டாலர்.
     இதுல ஒவ்வொரு ஸ்பூன் எடுத்துச் சாப்பிட்டவுடனே வயிறு நிறைந்துவிட்டது. அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் அளவைப்பார்த்து பெருமைப்படுவதா? பொறாமைப்படுவதா? என்று தெரியாமல் விழித்தேன்.


     நம்ம என்ன பசிக்கா சாப்பிடுறோம், ருசிக்குத்தானே என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

     எங்கேயும் இல்லாத அதிசயமாக, பஃபே ஐ "ஈட் இன்" தவிர "டேக் அவுட்"டும் தருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் குழிகுழியாய் இருக்கும் தெர்மாகூல் தட்டில் எவ்வளவு முடியுமோ நிரப்பிக்கொள்ளலாம். (ஆழம் கொஞ்சம் கம்மிதான்). அதே விலைதான். அடுத்த தடவை 2 வாங்கினால் 3 பேர் சாப்பிடலாம்  என்று  மனசை தேற்றிக்கொண்டேன்.

சென்னை கார்டனில் அன்று பாதிக்கு மேல் வெள்ளைக்காரர்கள்.
     எங்களுக்குப் பக்கத்து டேபிளில் ஒரு வெள்ளைப்பெண், கறுப்பு முடியுடன் (யூதப்பெண் என நினைக்கிறேன்) நமது உணவை வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்தது. வயிற்றில் உள்ள பிள்ளையாலோ அல்லது நம் மசாலா வகைகள் கொடுத்த தொல்லையாலோ முகம் அதீதமாக சிவந்திருந்தது. காதில் உள்ள புளூ டூத்தில் ஓயாமல் பேசிக்கொண்டும், இடது கையில் தன் ஐபாடை நோண்டிக் கொண்டும், வலது கையால் உணவை வாய்க்குள் தள்ளிக்கொண்டும் ஒரே நேரத்தில் எத்தனை காரியங்கள் செய்கிறார்கள்.
     வீட்டில்கூட, என் மகள் அப்படித்தான்  ஐபாட்டில் பாட்டுக்கேட்டுக் கொண்டும், டிஸ்னி சேனலில் டிவி பார்த்துக் கொண்டும், ஐபோனில் சேட் செய்து கொண்டும், தன்னுடைய ஹோம்வொர்க்கை செய்து கொண்டிருப்பாள். நான் வீராப்புடன் ,ஒருமுறை முயன்று பார்த்ததில் தீராத ஒற்றைத்தலைவலி வந்ததுதான் மிச்சம்.
     உற்றுக்கேட்டதில் அந்த யூதப்பெண் தான் சாப்பிடும் உணவைப்பற்றிய  கமென்ரியை யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

 
     ஊத்தாப்பத்தில் ஆரம்பித்து ஒன்றையும் விடவில்லை. நிதானமாக உள்ளே தள்ளி அசைத்து, சுவைத்து, மென்று தின்று கொண்டிருந்தாள். அளவைப்பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
     திடீரென ஒரு சந்தேகம் வந்தது, அவருடைய உப்பிய வயிறு கர்ப்பத்தாலா அல்லது சர்ப்பம் போல் உண்ட சாப்பாட்டாலா?  என்று. ஒருவேளை கர்ப்பிணி இருவருக்கு சாப்பிடவேண்டும் என்பது இதுதானோ? ஒருவேளை இரட்டைப் பிள்ளையோ?
     சலீமும் நன்றாக சாப்பிடக் கூடியவர்தான். சமீப காலமாக மனைவியின் கட்டளைக்கிணங்க குடலிறுக்கம் செய்து, உடலிறக்கம் செய்ய  முயன்று கொண்டிருக்கிறார். அவரே அசந்து போனார் அன்று.
     நாங்கள் ஏறக்குறைய சாப்பிட்டு முடித்துவிட்டோம். யூதப்பெண் ருசித்த (Kheer) 'கீர்'ஐ பார்த்து நானும் சிறிதளவு எடுத்துக்கொண்டு வந்தேன் (கேட்கத்தான் மனைவியில்லையே).
     பில்லைக் கல்லாவில் கட்டச் சொன்னார்கள். ஆகா டிப்ஸ் மிச்சம் (சரியான அல்பம்டா நீ) என்று நினைத்தவாறு காசைக்கட்டிவிட்டு, மேலும் ஒரு புகைப்படம் எடுக்கத் திரும்பியபோது, யூதப்பெண் ஒரு புதிய பிளேட்டை எடுத்துக்கொண்டு ஊத்தப்பம் எடுப்பது தெரிந்தது. ஐயையோ மறுபடியும் முதல்லயிருந்தா?

No comments:

Post a Comment