Monday, February 2, 2015

கண்ணதாசனின் பெருந்தன்மை!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் 18 “மாஞ்சோலைக் கிளிதானோ"

இளையராஜா இசையமைத்த  'கிழக்கே போகும் ரயில்' என்ற படத்தில் வெளிவந்த பாடல் இது. 1978-ல் தமிழக அரசின் தங்கப்பதக்கம் பெற்ற பாடல் இது.பாடலை கேட்போம்  


பாடலின் சூழல்:
தமிழ்ப்படத்தின் தவறாத அங்கமான காதலன் காதலியை வர்ணித்துப் பாடும் பாடல் இது. நமது இயக்குநர்களும் சரி, இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் ஏன் ரசிகர்களுக்கும் இதுமட்டும் காலங்காலமாக அலுப்பதேயில்லை. என்னுடைய காலத்திலேயே திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறாது என்று நினைத்தது, இது வரை நடக்கவில்லை. ஆனால் வெறும் தசையை ரசிக்காமல் இசையை மட்டும் ரசித்தால் நல்லது தான்.
பாடலின் இசையமைப்பு:
  1. Ilayaraja with Bhrathiraja 
இளையராஜா பலவித இசை முயற்சிகளில் ஆர்வமாக ஈடுபட்டதின்  இன்னொரு விளைவு இந்தப்பாடல் என்று சொல்லலாம். ஒரு பரதநாட்டியப் பாடலுக்குரிய எல்லா அம்சங்களும் பொருந்திய பாடல் இது. குறிப்பாக சலங்கைஒலி ஆரம்பம் முதல் முடிவு வரை வருகிறது. இளையராஜாவின் டிரேட் மார்க்கான புல்லாங்குழலும் வயலின்களும் வழக்கம்போல் வருகின்றன. தபேலாவில் ஆரம்பித்து இடையில் மிருதங்கமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாடலின் 2-ஆவது வரியில் 'வேப்பந்தோப்புக் குயிலின்' குரல் ஒலிப்பது மிக அழகு. முதல் BGM-ல்  இசைக்கருவிகள் சுறுசுறுப்பாய் விறுவிறுவென்று இசைத்து முடிய இளையராஜாவின் மெலடி "நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்" என்று சலசலத்து ஓடுகிறது. அதற்கடுத்த  சரணம்,"மின்னல் ஒளியிலே பளிச்சிட்டு சுழன்றடிக்க, மூன்றாவது பல்லவி மீண்டும் உருகி ஓடுகிறது. அத்தனை வித கான்ராஸ்ட்டும் கேட்கக் கிடைக்கும் பாடல் இது.

பாடலின் வரிகள்:
மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம்பூதானோ
நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ : (மாஞ்சோலை கிளிதானோ)

நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
வளையோசையே காதிலே சிந்து பாடுதே
பளிங்குச்சிலையே பவழக்கொடியே
குலுங்கிவரும் இடையில் புரளும்
சடையில் மயக்கும் மலர்க்கொடி(மாஞ்சோலை கிளிதானோ)

மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்
அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இதழ் தேன்தான்
அள்ளும் கரம் நான்தான்
மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள்
சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பண் பாடிடும்
பெண்ணோவியம் செந்தாமரையே

மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்
பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே
கரும்பு வயலே குறும்பு மொழியே
இளமையெனும் தனிமை நெருப்பை
அணைக்கும் பருவ மழைமுகில் (மாஞ்சோலை கிளிதானோ)

  1. Muthulingam 
பாடலை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். எம்ஜியாருக்கு பல பாடல்களை எழுதி புகழ் பெற்றவர். தமிழகத்தின் சந்தக் கவிஞர்களில் ஒருவர். எம்ஜியார் பாடல்களில் அவரை வர்ணித்து பாடல்கள் படைத்த அவர், பெண்ணை வர்ணிக்கச் சொன்னால் சும்மா விடுவாறா? "மாஞ்சோலைக் கிளி, மான், வேப்பந்தோப்புக்குயில், ஆவாரம் பூ என்று அடுக்கிக் கொண்டே போகிறார். முதல் சரணத்தில் காதல் ரசம் ஒழுக, 2-ஆவது சரணத்தில் ரசம் சரசமாக, மூன்றாவதில் அதுவே விரசமாகிறது. அளவுக்கு மிஞ்சிய விரசம் விஷமாகிவிடும் என்பதும் கவிஞருக்குத் தெரியும்.
2 ஆவது சரணத்தில் கவிஞரின் முழுத்திறமையும் வெளிப்படுகிறது. முறிப்பாக,
அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இதழ் தேன்தான்
அள்ளும் கரம் நான்தான்
மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள்
சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பண் பாடிடும்
பெண்ணோவியம் செந்தாமரையே

என்ற வரிகளில்  எதுகையும் மோனையும் உவமேயமும் உவமானமும் ஒன்றையொன்று கட்டித்தழுவி அளவளாவுகின்றன. 
  1. kannathasan 
முத்துலிங்கம் ஒரு பேட்டியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்,”முதன்முதலாக நான், கண்ணதாசன், கங்கை அமரன் இணைந்து 'கிழக்கே போகும் ரயில்' படத்திற்கு பாடல் எழுதினோம். 'மாஞ்சோலை கிளிதானோ, மான்தானோ...,' பாடலை நானும், 'கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ...,' பாடலை கண்ணதாசன், 'பூவரசம் பூ பூத்தாச்சு...'பாடலை கங்கை அமரனும் எழுதினோம்.கண்ணதாசனிடம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் அதிபர் டி.ஆர்.ராமண்ணா, 'நீங்கள் இயற்றிய மாஞ்சோலை கிளிதானோ' பாடல் நன்றாக உள்ளது. இதுபோல், எனது படத்திற்கு ஒரு பாடல் எழுத வேண்டும்,' என்றாராம். கண்ணதாசன்,'அதை நான் இயற்றவில்லை. முத்துலிங்கம் எழுதியது. அவருக்கு, சந்த நடையில் நன்றாக எழுதவரும். அவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்,' என்றாராம். எத்தனை கவிஞர்களுக்கு இப்படி பெருந்தன்மை இருக்கும்.
பாடலின் குரல்:
ஜெயச்சந்திரன் இந்தப்பாடலுக்கு அழகு சேர்த்திருக்கிறார். குழைய வேண்டிய இடத்தில் குழைந்தும், இழைய வேண்டிய இடத்தில் இழைந்தும், ராகத்துடனும், தாளத்துடனும் இணைந்து அருமையாகப்பாடி அசத்தியிருக்கிறார்.

பாடலின் ராகம்:
கர்நாடக அமைப்பில் உருவான இந்தப்பாடலின் ராகம் “சுத்த தன்யாசி”. இளையராஜா பல பாடல்களுக்கு இந்த ராகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அவற்றுள் சிலவற்றைக் கீழே தருகிறேன்.
1.    ராகவனே ரமணா ரகுநாத - இளமைக்காலங்கள்.
2.    சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம்.
3.    மனசு மயங்கும் - சிப்பிக்குள் முத்து.
4.    விழியில் விழுந்து - அலைகள் ஓய்வதில்லை.
5.    புதிய பூவிது  - தென்றலே என்னைத் தொடு.


இந்த  மாஞ்சோலைக் கிளியின் பாடல் நீண்ட நாள் கேட்கும் என்பதில் சந்தேகமில்லை

16 comments:

  1. செவி நிறைத்த பாடல்..
    விழி நிறைத்த எழுத்து..
    மனம் நிறைத்த தகவல்கள்..
    நன்றிகள் பல..

    ReplyDelete
    Replies
    1. கவி நிறைத்த பின்னூட்டம் , நன்றி நண்பா .

      Delete
  2. எப்போதும் பிடிக்கும் பாடல்.மீண்டும் லியித்துப்போகும் வண்ணம் பகிர்வு.

    ReplyDelete
  3. அந்தக் காலத்தில் மட்டுமல்ல... இன்றும் என்றும் ரசிக்க வைக்கும் பாடல்...

    திண்டுக்கல்காரர்கள் என்றால் பாட்டு தான்... ஹா.... ஹா....

    ReplyDelete
  4. நன்றி திண்டுக்கல் தனபாலன்.உங்கள் வழிதான் என் வழி .

    ReplyDelete
  5. ஏன் ஜெயச்சந்திரன் தமிழ்ப்படங்களில் அதிகமாகப் பாடாமல் போனார்? பிடித்த குரல் ....

    ReplyDelete
    Replies
    1. அவ்வப்போது வந்து ஆதரவு கொடுக்கும் தருமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி .

      Delete
    2. அடிக்கடி வந்து தொல்லை கொடுக்க வேண்டாமே என்ற “நல்ல” எண்ணம் தான் ...!

      Delete
    3. அடிக்கடி வரவேண்டாம் என நீங்கள் நினைத்தால் அது நல்ல எண்ணம் இல்லை .
      அடிக்கடி நீங்கள் வந்தால் அது தொல்லை என நான் நினைத்தாலும் அது என் நல்ல எண்ணம் இல்லை .

      Delete
    4. முடிவா என்ன சொல்றீங்க ....?

      Delete
    5. வேறென்ன அடிக்கடி வாங்கன்னுதான் சொல்றேன் .

      Delete
  6. வந்திருவோம்ல ...........

    ReplyDelete
  7. ஆல்பி சார்

    நான் பதிவிடும் நேரமெல்லாம் நீங்களும் அதைவிட அழகாக பதிவிட்டு விடுகிறீர்களே! மாஞ்சோலை கிளி பாடலை கேட்டு முடித்த பிறகும் கொஞ்ச நேரம் கிளியும் குயிலும் சலங்கையும் மனசுக்குள் சப்தமிட்டுக் கொண்டே இருப்பதை தவிர்க்க முடியவில்லை. இளையராஜாவின் இசைக்கு உள்ள வலிமையை பார்த்தீர்களா!?

    ReplyDelete
    Replies
    1. அதற்குக்காரணம் உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே ரசனைதான் சார்லஸ்.

      Delete
  8. நன்றி இது போன்று பாடல் பிறந்த கதை கவிதை வரிகளை படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும் தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்று பதிவிட்டதற்கு எங்களால் நன்றி மட்டுமே கூற முடியும்
    வாழ்க பல்லாண்டு...

    ReplyDelete