Thursday, March 14, 2019

பிலிப்பைன்சை ஆக்கிரமிக்க போட்டிபோட்ட ஸ்பெயினும் அமெரிக்காவும் !!!!!!


பார்த்ததில் பிடித்தது

1898 அவர் லாஸ்ட் மென் இன் தி பிலிப்பைன்ஸ் (1898 Our Last Men in the Philippines)         

                     
          பிலிப்பைன்ஸ் தேசம் நூறாண்டுகள் ஸ்பெயினிடம் அடிமைப்பட்டு இருந்தது. இங்கிலாந்துக்கு அடுத்த படியாக அதிக காலனிகளைக் கொண்டது ஸ்பெயின். அமெரிக்கா, கனடா தவிர பல வட அமெரிக்க தென் அமெரிக்க நாடுகளை ஸ்பெயின் பிடித்து வைத்து ஆண்டு கொண்டிருந்தது. அந்த ஸ்பானிய கலோனிய ஆட்சியை எதிர்த்து பிலிப்பைன்சின் புரட்சிப்படை 1896ல் தன் கலகத்தை ஆரம்பித்தது.  
          போர்ட்டரிக்கோவை ஆக்கிரமித்திருந்த ஸ்பானிய ஆட்சியை முறியடித்து அமெரிக்கா அதனைப் பிடித்துக் கொண்டது. எனவே ஸ்பானிய அமெரிக்க சண்டை ஆரம்பித்தது. பிலிப்பைன்சிலும் அமெரிக்கப்படை, ஸ்பானிய ஆதிக்கத்தை எதிர்க்க, பிலிப்பைன்சின் புரட்சிப் படை அமெரிக்கப் படையோடு கைகோர்த்தது. இந்தக் கூட்டு எதிர்ப்பை சமாளிக்க முடியாத ஸ்பெயின் 1897ல் சமாதான உடன்படிக்கையைச் செய்து கொண்டது. இதற்கு முன்னர் சண்டை உச்சக்கட்டத்தில் இருக்கும்போது புரட்சிப் படைக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க லூட்டினன்ட் யோசே மோட்டாவின் தலைமையில் 50 காசோடர்களை பேலர் என்ற இடத்திற்கு அனுப்பியது. இது நடந்தது செப்டம்பர் 1897ல்.
Add caption
          பேலர் என்ற இந்த இடம் லஜான் என்ற இடத்தின் கிழக்குக் கடற்கரையில் மணிலாவிலிருந்து சுமார் 225 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை நகரம். இந்த நகரத்தை கடல்வழி அணுகுவதுதான் சுலபம். நிலவழி மிகவும் ஆபத்தான காடுகள் சூழ்ந்த பகுதி. 
          இந்த 50 பேர் கண்காணிப்புத் தளங்கள் அமைத்து அந்த வழியே யாரும் புகுந்துவிடாதபடி பாதுகாத்தார்கள். ஆனால் அக்டோபரில் அவர்களுடைய நிலைகள் புரட்சிப்படையால் தாக்கப்பட்டு அதில் லூட்டினன்ட் மோட்டா உட்பட ஏழுபேர் உயிரிழக்க, பலபேர் காயமுற்றனர்.
          பின் வாங்கிய மீதப்பேர்  பாலரில் இருந்த ஒரு கத்தோலிக்க ஆலயத்தில் நுழைந்து அதையே கோட்டைபோல் அமைத்துக் கொண்டனர். சுற்றிலும் குழி வெட்டி அரணமைத்து இரவும் பகலும் விழிப்புடன் காவல் காத்தனர். புரட்சிப் படை அவர்களை முற்றுகையிட்டது. இது ஜூலை 1  1898ல் ஆரம்பித்து ஜூன் 1899 வரை ஒரு வருடகாலம் நீடித்தது.
          ஸ்பானிய படை அமெரிக்கப்படையுடன் சமாதானம் செய்து கொண்டு தன் படைகளை பிலிப்பைன் நாட்டிலிருந்து விலக்கிக் கொண்டனர். புரட்சிப் படைகளுக்கு உதவி செய்ய வந்த அமெரிக்கப்படை பிலிப்பைன் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டது. அதனால் பிலிப்பைன் நாட்டுப் புரட்சிப் படைக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கும் சண்டை ஆரம்பித்தது.
          இது எதுவுமே தெரியாமல் வெளியுலகிலிருந்து முற்றிலுமாக வெட்டப்பட்ட நிலையில் பாலரில் உள்ளே ஸ்பானியர் இருந்தனர்.
          பலமுறை பல பேர் எடுத்துச் சொல்லியும், பத்திரிகைகளை அனுப்பியும், உள்ளே நோயால் உணவின்மையால் வாடி பலபேர் மடிந்தும் சரணடையாமல், எஞ்சிய ஸ்பானியப் படை உள்ளே தாக்குப் பிடித்தது. ஏனென்றால் உள்ளே பொறுப்பில் இருந்த மார்ட்டின் செரெசோ (Martin Cerezo) எதையும் நம்பத்தயாரில்லை.  ஒரு கட்டத்தில் உணவு சேமிப்பும் தீர்ந்துவிட ஆலய வளாகத்தில் பயிரிட்டுக்கிடைக்கும், பூசணிக்காய், இலை, ஆரஞ்சுகள், வாழைத்தண்டு, பெப்பர், தக்காளி ஆகியவற்றை உண்டு சமாளித்தனர். அதன்பின் அதுவும் முடிந்து போய் நீர் எருமைகளைக் கொன்று சாப்பிட்டனர். தோலை காலணி யாக்கிப் பயன்படுத்தினர். பின்னர், தெருநாய்கள், பூனைகள், ஊர்வன காக்கைகள் ஆகியவற்றையும் உண்ண ஆரம்பித்தனர்.
Martin Cerezo)
          கடைசியில் மார்ட்டினின் நெருங்கிய நண்பன் பத்திரிக்கையில் கொடுத்த  விளம்பரத்தைப் பார்த்துத்தான் சரணடைய ஒப்புக் கொண்டான். ஆலயத்தில் நுழைந்த போது 50 பேர் இருந்தனர். 11 மாத முற்றுகையில் 14 பேர் வியாதியால் இறந்தனர். 2 பேர் காயங்களால் இறந்தனர். நான்கு பேர் தப்பித்து ஓடிவிட்டனர். அதில் 2 பேர் பிடிக்கப்பட்டு எதிர் அணிக்கு உதவியதால் உள்ளேயே தூக்கிலிடப்பட்டார்கள். வெளியே வரும்போது 30 பேர் தன் இருந்தனர்.
          அப்போதிருந்த பிலிப்பைன் நாட்டின் முதல் ஜெனரல் எமிலியோ அகினல்டோ அவர்களை குற்றவாளிகளாகக் கருதாமல் நண்பர்களாக கருதவேண்டும் என்று சொன்னதால் அவர்கள் வெளியே வரும்போது மரியாதை செலுத்தப்பட்டது.
          மூன்று மாதம் கழித்து அவர்கள் பார்செலோனா வந்து சேர்ந்தபோது வெற்றி வீரர்களாக அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மார்ட்டின் இதனை புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம்தான் இது. 2016 டிசம்பரில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் அலெயாண்ரோ ஹெர்னன்டலே, இயக்கியவர் சால்வடோர் கேல்வோ. மார்டினாக லுயிஸ் டோசர் அற்புதமாக நடித்திருக்கிறார்.
பீரியட் சினிமாக்கள் மற்றும் வரலாற்றை ரசிப்பவர்களுக்கு இந்த ஸ்பானிய மொழித் திரைப்படம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-முற்றும்.


Monday, March 11, 2019

திருவிழாவில் மூண்ட இனக்கலவரம் !!!!!



வேர்களைத்தேடி பகுதி 37
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
http://paradesiatnewyork.blogspot.com/2019/03/blog-post.html#comment-form

Courtesy Google
          அன்றைய நாள் காற்றில் ஏதோ ஒரு பதட்டம் தென்பட்டது. சிலர் மூலைக்கு மூலை நின்று ஏதோ குசுகுசுவென்று பேசத் தொடங்கினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னுடைய அம்மா "பேசமா வீட்டில இருடா" என்று சொன்னதையும் மீறி வெளியே போனேன். ஆண்டிற்கு ஒருமுறை வரும் முத்தாளம்மன் ஊர்வலத்தைப் பார்க்காமல் இருக்க முடியுமா?

Courtesy Google_Dinakaran
             ஒவ்வொரு தடவை முத்தாளம்மன் திருவிழா வரும் போதும்  மதுரையிலிருந்து ரிசர்வ் போலிஸ் படை தேவதானப்பட்டிக்கு வரும். அவர்கள் வந்தால் எங்களுக்குக் கொண்டாட்டம்தான். ஏனென்றால் அவர்கள் வந்து தங்குவது எங்கள் பள்ளியான இந்து நடுநிலைப்பள்ளியில் தான். அவர்கள் வந்து தங்கினால் பள்ளி நடக்காதென்பதால் தான் எங்களுக்குக் கொண்டாட்டம். அவர்களை ஏன் சட்டிப் போலீஸ் என்று சொல்வோமென்றால் அவர்கள் தலையில் இரும்புத் தொப்பி யொன்றை அணிந்திருப்பார்கள். அதனை கழற்றி தலைகீழாகப் பிடித்தால் சட்டி போலவே தெரியுமென்பதால்தான் இவர்களை சட்டிப் போலிஸ் என்று சொல்வோம். இவர்கள் இளைஞர்களாக மிடுக்குடன் இருப்பார்கள். யூனிபார்மில் கம்பீரமாய் இருக்கும் இவர்களைப் பார்த்தால் எங்களுக்கு பயம். எங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பயம்தான். தெருவில் இறங்கி ஒரு கையில் பிரம்பால் செய்யப்பட்ட தடுப்பையும் மறுகையில் லத்தியையும்  பிடித்து இறங்கினால் எந்தப் பெரிய கூட்டத்தையும் விரைவில் கலைத்துவிடுவார்கள் அல்லது பயத்தால் தானாகக் கலைந்துவிடும்.
          திருவிழாவில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுப்பது அவர்களுடைய பொறுப்பு. இவர்கள் ஆண்டுதோறும் வர ஆரம்பித்தது, குறிப்பாக முத்தாளம்மன் திருவிழாவிற்கு மட்டும் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு அதனைப்பற்றிச் சொல்கிறேன்.

                    என்னைப்போல வீதியின் இருபுறமும் மக்கள் பக்திப்பரவசத்துடன் அல்லது பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் தேவதானப்பட்டி காவல் நிலையத்திலிருந்து பாவமாய் இரண்டு போலீஸ்காரர்கள் நடந்து வந்தனர். அவர்கள் பின்னால்  பல முக்குலத்து இளைஞர்கள் சிலம்பமாடிய படி வந்தனர். அவர்கள் பின்னால் இரண்டுபேர் உருமி மேளம் வாசிக்க, கையில் துண்டைப் பிடித்தபடி உருமால் கட்டிய தேவர்குல நடுத்தர வயதுள்ளவர் தேவராட்டம் ஆடியபடி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பின்னால் நையாண்டி மேளம் நாதஸ்வரத்துடன் வாத்தியக்குழுவினர் பட்டையைக் கிளப்ப, கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆடி வர, அதன்பின்னால் புலிவேஷக்காரர் நடனம் ஆடி வந்தனர். அவருக்குப்பின்னால் நான் ஏற்கனவே சொன்ன காளி அரக்கன் வேடமிட்டவர் ஆடியபடி வந்தனர். அவர்களின் பின்னால் தவில் நாதஸ்வரக்கலைஞர்கள் மங்கல இசை முழங்க, அவர்கள் பின்னால் ஊர் பெரிய தலைவர்கள் நடந்து வர முத்தாளம்மன் அலங்கார பூஷிதையாக, கம்பீரமுடன் எடுத்து வரப்பட்டார். அவர்களுக்கு பின்னால் முளைப்பாரி எடுப்பவர்கள், தீச்சட்டி சுமப்பவர்கள் என்று ஒரு பெருங்கூட்டம்  வந்தது. அதன் பின்னாலும் சிலம்பமாடுபவர்கள் இருந்தார்கள். நானும் கூட்டத்தோடு கூட்டமாக பின் தொடர்ந்தேன். வழக்கத்திற்கு மாறாக இன்று அதிகமானபேர் சிலம்பமாடியதோடு ஆடாது இருந்த பலரும் கையில் கம்புகளைப் பிடித்து வந்தனர். அதன் பின்னால் கடைசியில் ஒரு மாட்டு வண்டியும் வந்து கொண்டிருந்தது.
          நாயக்கர், பிள்ளைமார், செட்டியார், நாடார் ஆகியோர் மண்டகப்படி முடிந்து தேவர் குல மக்கள் அதிகமாக வசிக்கும் வடக்குத் தெருவிலும் முடிந்து, மஞ்சளாறு காமாட்சியம்மன் கோவில் சாலை வழியாக மெயின் ரோடு திரும்ப அங்கே தெற்குத் தெருவிலுள்ள தாழ்த்தப்பட்ட பறையர் இன மக்கள் கும்பிடுவதற்காக அங்கேயே சாலையில் சில நிமிடங்கள் தாமதிப்பார்கள். அவர்கள் கும்பிட்டு முடித்து திரும்பவும் மெயின் ரோடு வழியாக வந்து மூலைச் செட்டியார் கடையோரம் காந்தி மைதான ரோட்டில் திரும்பி நாட்டாண்மை வீட்டுக்கு அம்மன் வந்து சேரும். அதன்பின் பிறிதொரு நாளில் அம்மன் சிலையை எடுத்துக் கொண்டு போய் ஆற்றில் கரைத்துவிடுவார்கள். இதுதான் வழக்கமாக நடக்கும் திருவிழா. எத்தனை ஆண்டுகள் இப்படி நடக்கிறதென்றும் தெரியவில்லை. ஆனால் நான் பல வருடங்களாகப் பார்த்திருக்கிறேன். மண்சிலையென்றாலும் ஒரே மாதிரி அச்சில் வார்த்தமாதிரி இருக்கும். வரைந்த கண்களில் தோன்றும் ஒளி இன்னும் மனதில் தெரிகிறது. அந்தக் குயவர்கள் அவ்வளவு திறமைமிக்கவர்கள்.
          அந்த ஆண்டும் அம்மன் சிலை மெயின் ரோட்டில் திரும்பி வழக்கம்போல் தெற்குத்தெருவில் நுழையாமல் அங்கு போடப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையில் இறக்கி வைக்கப்பட்டது. அங்குதான் தெற்குத் தெரு பள்ளத்தில் இருக்கும் பறையர் குல மக்கள் வந்து வழிபடுவார்கள்.
          ஆனால் தெற்குத் தெருவில் இருந்து ஒரு இளைஞர் படை முன்னுக்கு வந்து நாட்டாண்மையிடம் அம்மன் தங்கள் தெருவுக்குள் வர வேண்டும் அங்கு ஒரு நாள் இருக்க வேண்டும் என்று கேட்டார்கள். வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் அவர்கள் கோரிக்கையில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்ட நாட்டாண்மைக்காரர், முத்தாளம்மன் அனைவருக்கும் பொதுதான். ஆனால் அங்கு இரவு தாமதிக்க முடியாது. வேண்டுமென்றால் உள்ளே நுழைந்து உள்ளே இருக்கும் மண்டபத்தில் சில நிமிடங்கள் இருந்து செல்லலாம் எனத்தன் முடிவைச் சொன்னார். அதனைப் பலரும் ஒத்துக்கொள்ள சிலர் இரவு இருக்க வேண்டும் எனப்பிடிவாதம் பிடிக்க, அங்கிருந்த வடக்குத்தெரு தேவரின இளைஞருக்கும் பறையரின இளைஞர்களுக்கும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் திட்ட, சமாதானம் செய்ய முயன்ற நாட்டாண்மை மற்றும் பெரியவர்களின் பேச்சு எடுபடாமல் போக, தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது.
          ஏற்கனவே இதனை எதிர்ப்பார்த்தது போல கையில் சிலம்பமுடன் வந்திருந்த இளைஞர்கள், பறையரின இளைஞர்களை செமத்தியாக அடிக்கத் தொடங்கினர். அதற்குள் தெற்குத் தெரு உள்ளேயிருந்து ஏராளமானவர் கையில் கம்புடன் வர பெரிய போர் மூண்டது. திடீரென்று மாட்டுவண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீச்சரிவாள்கள் கைகளுக்குத்தாவ அங்கே ஒரே ரத்தக்களரி. அங்கிருந்த மொத்தம் ஐந்து போலீசாரும் ஒன்னும் செய்யமுடியாமல் ஒதுங்கினர்.
          அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாத என் இதயம் தகிடுதத்த நடையில் துடிக்க ஆரம்பிக்க, இரத்தம் முகம் முழுவதும், ஏன் தலைமுழுவதும் பாய, கண்கள் எரிய, பின்னங்கால்கள் பிடரியில் பட ஒரே ஓட்டமாய் வீடு நோக்கி ஓடினேன்.
          தொடரும்

Monday, March 4, 2019

இந்த அம்மனுக்கு கோவிலும் இல்லை நிரந்தர சிலையும் இல்லை!!!!



வேர்களைத்தேடி பகுதி 36
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
https://paradesiatnewyork.blogspot.com/2019/02/35-httpparadesiatnewyork.html
Courtesy : Google
            
      தேவதானப்பட்டியில் காமாட்சியம்மன் திருவிழாவிற்கு அடுத்தபடியாக வெகு விமரிசையாக நடப்பது முத்தாளம்மன் திருவிழா. காமாட்சியம்மன் கோவிலில் அம்மன் சிலை கிடையாது, வெறும் கதவுக்குத்தான் பூஜை என்று சொல்லியிருந்தேன். அதாவது காமாட்சியம்மனுக்கு கோவில் இருக்கிறது சிலையில்லை. ஆனால் முத்தளாம்மனுக்கு கோவிலும் இல்லை, நிரந்தர சிலையும் இல்லை.
          ஒவ்வொரு திருவிழாச் சமயமும் புல்லக்கா பட்டியில் உள்ள மண்பானை செய்யும் குலத்தவர் அம்மனின் சிலையை களிமண்ணில் செய்து வண்ணம் பூசி வனப்பாக்கி தேவதானப்பட்டியில் எங்கள் தெருவிலிருந்த நாட்டாமை வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். அதற்கு ஒரு மண்டலம் முன்னாலேயே பந்தக்கால் நட்டு, காப்புக்கட்டி விரதமிருப்பார்கள். ஏனென்றால் அம்மனுக்கு தோஷமோ கோபமோ ஏற்பட்டால் ஊருக்கு நல்லதல்ல என்பது அவர்களின் நம்பிக்கை.
Courtesy : Google
          நாட்டாமை வீட்டுக்கு வரும் சிலைக்கு கண்கள் மட்டும் இருக்காது. வீட்டுக்கு முன்னால் மக்கள் திரள் கூடியிருக்க பம்பை, உடுக்கை, தவில் நாதஸ்வரம் போன்றவை இடி முழக்கத்தை எழுப்ப, நாட்டாமை வீட்டிலுள்ள சாமி ரூமில் முத்தாளம்மனின் கண்கள் திறக்கப்படும். அதாவது வரையப்படும். அதுவரை மெல்லிய துணியால் மூடியிருந்த சிலையைத் திறந்து கண்கள் வரைவதை நான் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்திருக்கிறேன். கண்களை குயவர்கள் லாவகமாக வரைய அப்படியே சிலை உயிர் பெறும் போது அங்குள்ள பலபேருக்கு அருள் வந்துவிடும். வெளியிலிருக்கும் பலருக்கும் அருள் வரும். பார்ப்பதற்கு பயமாகவும் அதே சமயத்தில் வேடிக்கையாகவும் இருக்கும்.
          அதன்பின் முத்தத்தாளம்மனுக்கு பட்டுடுத்தி பொன் நகைகள் சூடி நாயக்கர் பரம்பரையில் வந்த நாட்டாமை குலத்தவர் வந்து கும்பிடும் வகையில் ஒரு நாள் அங்கு இருக்கும். கிராம அலுவலர் (VAO) வந்தவுடன் இந்தப்பதவிக்கு அதிகாரம் இல்லாமல் போனது. ஆனால் பெரிய நாட்டாமை இருக்கும் வரை அவருக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. எங்கள் தெருவிலேயே அவர்கள் வீடுதான் பெரிது.
          எங்கள் தெரு நாட்டாண்மைக்காரர் தெரு என்று முதலிலும் சின்னப்ப நாடார் தெரு என்று பின்னரும் அழைக்கப்பட்டது. ஊரிலேயே எங்கள் தெரு மிகவும் வித்தியாசமானது. ஏனென்றால் செட்டியார்கள், நாடார்கள், தேவர்கள், நாயுடுக்கள் முஸ்லீம்கள், பட்டானியர், பறையர், பிள்ளைமார்கள், அகமுடையர் என்று ஊரில் ஒவ்வொரு வருக்கும் ஒரு பகுதி இருந்தது. இவர்கள் பெரும்பாலும் குழுவாக வாழ்ந்தாலும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்ந்து வந்தனர்,  இரு குழுவினர் தவிர.  அதனைப்பற்றி அப்புறம் சொல்கிறேன். ஆனால் எங்கள் தெருவில், கிறித்தவர் (நாங்கள்தான் பாஸ்) முஸ்லீம், நாயக்கர், நாடார், முக்குலத்தவர், செட்டியார் என அனைத்து சமுதாயத்தவரும் ஒன்றிணைந்து வாழ்ந்தனர்.
தேவராட்டம்-Google
          நாட்டாமை என்றால் சினிமாவில் வருவது போல் கொண்டை முடிந்து, முறுக்கு மீசை வைத்த ஒருவர் உங்களுக்கு ஞாபகம் வந்தால் அது என் தவறல்ல உங்கள் தவறுமல்ல. அப்படியே நாம் பார்த்துப் பழக்கப்பட்டு விட்டோம். எங்கள் நாட்டாமை அப்படியல்ல, படித்தவர், நல்லகிராப் வெட்டி, மீசை மழித்து இருப்பார். வெள்ளை வேஷ்டி வெள்ளைக்கதரணிந்து  எப்போதும் சிரித்த முகத்துடன் சாந்தமாக இருப்பார். அவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் ராஜா அண்ணன். அடுத்து சாந்தி அக்கா மூன்றாவது வெங்கிடு எனப்படும் வெங்கடேசன் தம்பி. அவர்களெல்லாம் எங்கு எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சாந்தி அக்கா மிகவும் அழகாக ஒரு இளவரசி போல இருப்பார்கள். எங்கள் ஊரில் அப்போது வயதுக்கு வந்த பெண்கள், பள்ளி தவிர வேறெங்கும் போகும் வழக்கமில்லை என்பதால் நூலகத்தில் புத்தகங்கள் எடுத்துவர என்னைத்தான் அனுப்புவார்கள். நான் நூலகமும் நடத்தியதால் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். எல்லோரும் என்னுடன் அன்புடன் பழகுவார்கள். இதில் வெங்கிடு மிகவும் உற்சாகமுள்ள தம்பி. என்னைப் பார்த்துவிட்டால் மகிழ்ச்சியடைவான். மகிழ்ச்சியடைந்தால்  கிட்டவந்து இரு விரல்களால் கிள்ளி வைத்துவிடுவான். அது  செல்லக்கிள்ளு என்றாலும் சிலசமயம் வலிக்கும். மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவனுக்கு இப்படி ஒரு பழக்கம். சில சமயங்களில் நானும் அவனும் ஒன்றாக நூலகம் சென்று சாந்தியக்காவிற்காக புத்தகங்கள் எடுத்து வருவோம். 

முளைப்பாரி-Google
          முத்தாளம்மன் அதன்பிறகு நாட்டாமை வீட்டிலிருந்து மேளதாளத்துடன் கிளம்பி பிள்ளைமார் மண்டகப்படிக்காக காந்தி மைதானத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் எழுந்தருளியிருக்கும். பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த மக்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து, முளைப்பாரி சுமந்து ஒரு நாள் விழாவாகக் கொண்டாடுவார்கள். பிற சமூகத்தினரில் சிலரும் அங்கு வந்து வழிபடுவார்கள். பிறகு முத்தாளம்மன் அங்கிருந்து கிளம்பி நாடார் பேட்டைக்குச் சென்று அங்குள்ள காளியம்மன் கோவிலில் இருந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து வடக்குத்தெருவில் உள்ள தேவர் சமூகத்திற்கு நகர்ந்து அருள் பாலிக்கச் செல்லும். அங்கு ஒரு நாள் பகல் மற்றும் இரவு முழுவதும் இருந்து, அடுத்தநாள் அங்கிருந்து கிளம்பும். அங்கிருந்து காமாட்சியம்மன், மஞ்சளாறு அணை பிரிவு வழியாக மெயின்ரோட்டுக்கு வரும். அப்போது தேவர் குல இளஞ்சிங்கங்கள் அம்மனுக்கு முன் தேவராட்டம் ஆடி வருவார்கள். உருமி இசைக் கேற்ப அசைந்தாடுவது மிக அருமையாக இருக்கும். அதோடு காளி அரக்கன் வேடம் போட்டு ஆடுவார்கள். காளிவேடம் போடுபவர் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பார். ஏனென்று தெரியவில்லை. அதோடு ரத்தச்சிவப்பான ஒரு தோல் நாக்கை வாயில் கடித்திருப்பார். காளியின் ரத்தம் தோய்ந்த நாக்குப்போல் அது தொங்கும். அட்டையில் செய்த பல கைகள் முதுகில் இணைக்கப்பட்டிருக்கும். கையில் ஒரு சூலாயுதம் இருக்கும். தலையில் சவுரி முடி இணைக்கப்பட்டு தோளில் புரளும். சரிகையால் ஆன சட்டை பாவாடை அணிந்து, காலில் சலங்கையணிந்திருப்பார். அவரின் இடுப்புப் பகுதியில் கயிறு இணைக்கப்பட்டு அதனை பின்னால் ஒருவர் பிடித்துக் கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார். இல்லையென்றால் சூலாயுதத்தால் அரக்கனைக் குத்திவிடுவார் போலத் தெரியும். அவர் முன்னால் அரக்கன் வேடமிட்ட ஒருவர் மீசை முறுக்கி, கூந்தல் பரப்பி சரிகைச் சட்டையும், சரிகை டிரவுசரும் அணிந்து காலில் சலங்கையும், கையில் ஒரு பட்டாக் கத்தியும் வைத்துக் கொண்டு காளிக்குப் போக்குக்காட்டிக் கொண்டிருப்பார். ஆனால் அவருக்கு எந்தக்கட்டுப்பாடும் இருக்காது. என்னடா இது கடவுளுக்கு வந்த சோதனை? காளியைக் கட்டுப்படுத்த பின்னால் ஒருவர், அரக்கனைக் கட்டுப்படுத்த ஒருவருமில்லையே என்று நினைத்திருக்கிறேன். காளியின் ஆவேசம் பெரிதாக இருக்கும். அரக்கனை இதோ சூலம் குத்தப்போகிறது போல மிக அருகில் நெருங்கியவுடன் பின்னால் இருப்பவர் ஒரு இழு இழுத்து காளியைக் கட்டுப்படுத்துவார்.
          மதுரையிலுருந்து சட்டிப்போலிஸ் என்று நாங்கள் அழைக்கும் ரிசர்வ் படையினர் ஏராளமாக வனத்திருப்பார்கள். பெருங்கலவரம் ஒன்றை எதிர்பார்த்தார்கள். அதனைப்பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
தொடரும்