Monday, July 31, 2017

பாடல்கள் நூறு கோடி எதுவும் புதிதில்லை ! பகுதி 1


FETNA  2017 இதழில் வெளிவந்த எனது கட்டுரை 


பாட்டாலே புத்தி சொன்னார் !
பாட்டாலே பக்தி சொன்னார் !
பாட்டுக்கு நான் பாடுபட்டேன் அந்தப்
பாட்டுகள் பலவிதம்தான் ! - இளையராஜா.
Image result for ilayaraja singing

         

                 தமிழரோட வாழ்வில சங்க கால முதலிலிருந்து இதைப்படிக்கும் உங்க காலம் வரை இசைங்கிறது நிரவிபரவியிருக்கு. மத்த சமூகங்களோடு ஒப்பிடுறபோது தமிழ்ச் சமூகம் இதுல ரொம்பவே மூழ்கியிருக்குதுன்னு சொல்லலாம்.
          புலவர்களை சேகரிச்சு ஆதரிச்சு பக்கத்தில் வைத்துக் கொள்ளறது நம்ம ராஜாக்களுக்கு ரொம்பப் பெருமை. அந்த சங்க கால காப்பியங்கள், இதிகாசங்கள், பத்துப்பாட்டு போல பாட்டுகள் மட்டும் கிடைக்கலன்னா, நம்ம வரலாறு அப்படியே மண்ணோடு புதைஞ்சு போயிருக்கும். பாணர்கள் விரலியர்ன்னு ஒரு தனி சமூகமே இதனால பிழைச்சுதுன்னா அதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. அந்தக் காலத்துல பேச்சு நடையில மத்தவங்க பேசினாலும் புலவர்கள் தங்களுக்குள்ள கவிதை நடையிலதான் பேசிக் கொள்வாங்களாம். அந்த மாதிரி, அரசன், தன் மேல நிறைய பாட்டிருக்கா?, பாட்டுடைத்தலைவனா நாம இருக்கமான்னு பரிதவிச்ச காலம் அது. அத விடுங்க கோயில்கள் கூட "பாடல் பெற்ற தலம்"னு சொன்னாதான  பக்தர் கூட்டம் கூட அங்கு போகுது.
               ஆனா இப்ப எல்லாத்துக்கும் திரையிசைதாங்க . பிறப்புக்கும் பாட்டு இறப்புக்கும் பாட்டு, காதலுக்கும் பாட்டு சாதலுக்கும் பாட்டு, தொட்டிலுக்கும் பாட்டு கட்டிலுக்கும் பாட்டு, நாத்துக்கும் பாட்டு கூத்துக்கும் பாட்டு, பக்திக்கும் பாட்டு முக்திக்கும்  பாட்டு, வெற்றிக்கும் பாட்டு, தோல்விக்கும் பாட்டுன்னு வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் புதுமுகந்தான் திரையிசை. அரசியல் கட்சிகள் மீட்டிங் போட்டாலும் சரி, திருமண காதுகுத்து நிகழ்வானாலும், திருவிழாக்கள், உற்சவங்கள் என்று எல்லா விழாவுக்கும் திரையிசை இல்லாமல் நடக்கிறதில்லையே. பாட்டு போட்டாத்தான எந்த விழாவும்  களை கட்டுது. 
Image result for a.r.rahman images

          கூத்தோட மறு உருவம் நாடகம், நாடகத்தோடு புது உருவம்தான் சினிமான்னா அதுக்கு நீங்க யாரும் மறுப்பு சொல்ல மாட்டிங்கன்னு நினைக்கிறேன். கூத்துல உச்சஸ்தாயில பாடின பாட்டு நாடகத்துக்கு வந்து அப்புறம் அதுவே சினிமால மெல்லிசையா மாறிப்போச்சு. நீங்களே சொல்லுங்க, பாரதியார் பாட்டு சினிமால வரலேன்னா நிறையப்பேருக்கு அதுபற்றி தெரியுமா ?. தேசபக்திக்கும் பாச சக்திக்கும் கூட நமக்கு திரைப்படப் பாடல்களை விட்டா வேறு வழியில்லதான. ஏன் A.R.ரகுமான் “வந்தே மாதரம்” பாடலை பாடின உடனேதான  நம்மில பல பேரு அதப் பாட ஆரம்பிச்சோம். இளையராஜா போட்டவுடனே தான  "மரிமரி நின்னே முரலிட" போல பல கர்நாடக சங்கீதப் பாட்டுகள்  நமக்கு தெரிய வந்துச்சு. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். அதனால என்ன சொல்ல வரேன்னா திரைப்பாடல்கள் நம்ம வாழ்க்கையில பின்னிப் பிணைஞ்சு , ரத்தத்திலும் சத்தத்திலும் ஊறிப்போச்சு .
Image result for K.V.Mahadevan singing
K.V.Mahadevan
          ஒவ்வொரு இசையமைப்பாளர்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு வித இசைகளை உருவாக்கி "டிரென்ட் செட்டர்களாக" இருந்திருக்கிறாங்க . கே.வி. மகாதேவன் கர்நாடக இசைகளிலும், புராணப் படங்களிலும், பக்தி இசையிலும் கோலோச்சி முடிக்க, அடுத்து எம்.எஸ் விஸ்வநாதன் மெல்லிசையில் முத்திரை பதித்தார். அவர் ஒரு முப்பது வருஷம் பேரரசராக  ஆண்டு வந்தபோது அவர் கீழே சங்கர்  கணேஷ், வேதா, வி.குமார் போன்ற சிற்றரசர்களும் இருந்தாங்க. அவருடைய மகாப்பெரிய சாதனையை முறியடிச்சது போல் எங்கோ ஒரு குக் கிராமத்திலிருந்து இளையராஜா என்னும் நாட்டுப்புற இசை “மச்சானைப்பார்த்தீங்களா”ன்னு புறப்பட்டு அடுத்த முப்பது வருஷத்தை  ஆக்கிரமித்தது. 70களின் முடிவிலும் 80கள் மற்றும் 90களில் இளையராஜா இசைக்காகவே  ஓடிய படங்கள் ஏராளம். ஆயிரம் படங்களுக்கு இசை அமைச்சது ஒரு அசுர சாதனைதான். அதுக்குப்பிறகு  முற்றிலும் புதிய வடிவத்தில திரைப்பட இசையை வேறு தளத்திற்கு புயலாக எடுத்துச் சென்றது ஏ.ஆர். ரகுமான் என்ற இசைப்புயல். தமிழ் தாண்டி, இந்தியிலும் கொடிநாட்டி ஏன் உலகமெங்கும் பரவி ‘ஆஸ்கார்’ பரிசு வாங்கிய சாதனை என்பது மிகவும் அரிய சாதனைதான்.
Image result for m.s.viswanathan

          இதுல என்னை மாதிரி ஆட்களுக்கு இளையராஜாவின் இசை ஏன் அதிகமாக பிடிக்குதுன்னா நாங்க யூத்தா இருக்கும் போது(  அடடே  அவசரப்பட்டுட்டேனே, நான் இப்பவும் யூத்துதான் )  எங்களுடைய எல்லா உணர்ச்சிகளுக்கும் தூண்டுகோலாக ஆதரவாக இருந்தது அவரோட இசைதான்.
Image result for sg kittappa


          எஸ்ஜி கிட்டப்பா, பி.யு. சின்னப்பா, கே.பி. சுந்தரம்மாள், தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம் இவங்களோடு குரல் வளம் எப்பவுமே உச்சஸ்தாயி சாரீரம் தான். இது மாதிரி இசை கூத்து, நாடகத்திலிருந்து வந்துச்சு. ஏன்னா அந்தக் காலத்துல மைக்ரோபோன் இல்லாதனால நல்லா கத்திப் பாடினாத்தான் மக்களுக்கு கேட்கும். அதனாலதான் அந்தக்கால கூத்து மற்றும் நாடக நடிகர்களுக்கு சரீரம் நல்லா இருந்தா மட்டும் பத்தாது, சாரீரமும் நல்லா இருக்கனும்னு எதிர்பார்த்தாங்க. அப்படி நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவங்கதான் மேலே சொன்ன எல்லாரும். ஏன் எம்ஜியார் சிவாஜின்னு ஒரு பெரிய கூட்டமே நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவங்கதான்னு உங்களுக்குத் தான் தெரியுமே.
Related image
K.B.Sundarambal
          ஆனா அந்தக் காலத்துப் படங்கள்ள வசனம் குறைவாயும்  பாட்டுக்கள் அதிகமாயும் இருக்கும். முக்கால்வாசி, புராணப்படங்கள் அப்புறம் ராஜா ராணிக் கதைகள்தான் இருக்கும். சில படங்களில் 30 பாட்டிலிருந்து 60 பாட்டு வரைக்கும் கூட இருக்கும். முதல்ல படங்கள் வந்த காலகட்டங்கள்ல, நடிகர்களே பாடி நடிக்கணும் அப்புறம் கொஞ்ச நாள்ள சரீரம் நல்லாயிருந்தா போதும் சாரீரம் நல்லா இல்லாட்டி பின்னணியிலே பாடிக்கலாம்னு வந்துச்சு. இது திரைப்பட இசை வரலாற்றில் புதிய சகாப்தத்தை கொண்டு வந்துச்சு. யோசிச்சுப் பாருங்க  பாடறவங்கதான்   நடிக்க முடியும்னா இப்ப இருக்கிற பல பேர் கதி எப்படி இருக்கும்னு.
          பாடறத விடுங்க இப்ப கதாநாயகிகள்  எல்லாம் பேசறது கூட இல்லீங்களே, அதுக்கே பின்னனிக்குரல் வந்திருச்சே. இப்ப சொந்தத் திறமைகள் இல்லாம மத்தவங்க திறமையிலதான அவங்க வளர்றாங்க.
Image result for tm soundararajan
TMS

          அதனால பின்னனிப் பாடகர்கன்னு புதுசா ஒரு சமுதாயம் வளர ஆரம்பிச்சுச்சு. அந்தக் காலத்துல அதிகப்பேர் இல்லாதனால டி.எம். செளந்திரராஜன், பி.பி.ஸ்ரீனிவாசன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்ற வெகு சிலரும், பி.சுசிலா, ஜானகி, எல்ஆர். ஈஸ்வரி, சித்ரா ஆகியோரும் பல ஆயிரக்கணக்கான பாடல்களை லெஜன்ட் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பாடினாங்க. இப்ப பாடகர்கள் நூத்துக்கணக்கில இருக்கிறதால இனிமேல் தலைக்கு 10-20 பாடல்கள் பாடுவதே பெரிய விஷயம். அதனால இனிமேல் லெஜெண்டுகள்லாம் வரவே மாட்டாங்க.  


>>> அடுத்த பகுதியில் முடியும்

Thursday, July 27, 2017

மனது பலவீனமானவர்கள் இதனைப் படிக்க வேண்டாம் !!!!!

Image result for crowded E train car

எச்சரிக்கை 1: மனது பலவீனமானவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் (கொஞ்சம் பார்டரில் இருந்தால் கூட) , எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் மற்றும் 22 வயதுக்கு கீழே உள்ளவர்கள் இதனைப் படிக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன். (என்னடா பீடிகை பலமா இருக்கு?).
எச்சரிக்கை 2: எட்டாயிரம் மைல் தள்ளி வாழும் எட்டப்பன் மகேந்திரன் நடுநடுவே பிராக்கெட்டுகளில் என்னை கலாய்க்க வருவான். அவனைப் பொருட்படுத்த வேண்டாமென வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

அவனை ஒரே அடியில என்னோட ஒன்றரை டன் வெயிட்டை,  ஒரு ஃபுலோவில் வந்துருச்சு ப்ரோ - இறக்கி நசுக்கிறனும்னு தோணுச்சு. மதுரைக்காரைங்களுக்கு ரத்தத்திலேயே கொஞ்சம் வீரம் ஒட்டிட்டு இருக்கும் . நியுயார்க்குக்கு வந்து 17 வருஷம் ஆகியும் அந்த மதுரை மண்ணோட  குணமும், வீரமும், ஆர்வக்கோளாறும் இன்னும் என்ட்ட  அப்படியே இருக்குன்னு நினைக்கிறேன்.( (எலேய் சேகரு இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல ?).  
வீரத்தோடு கூட கொஞ்சம் விவேகமும் இருந்தா ரொம்ப நல்லதுன்னு சொல்வாய்ங்க. மதுரைக்காரைங்களுக்கு  விவேகத்தில் அந்த 'வி' யை மட்டும் தூக்கிட்டா வர்ற வேகம் மட்டும் கொஞ்சம் அதிகமாய் இருக்கும். என்னோட தினவெடுத்த தோள்களுக்கு இங்க வேலை இல்லாததால, புல்தடுக்கி கீழே விழுந்து தோள் உடைஞ்சு போனது பத்தி உங்கள்ட்ட ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.  இன்னும் படிக்கலைன்னா  இந்த லிங்க்கை தட்டுங்க. http://paradesiatnewyork.blogspot.com/2015/05/blog-post_11.html (ஏண்டா புல்தடுக்கி விழுந்து சர்ஜரி ஆனப்புறம்தான தினவெடுத்தது உனக்கு ?)
எந்த ஒரு உடற்பகுதியையும் அடிக்கடி பயன்படுத்தினா அது கொஞ்சம்  பலமிழந்து போகும்ன்னு  சொல்வாய்ங்க. அப்படித்தான் என் கையும் காலும் கொஞ்சம் சின்னதாப் போச்சுன்னு நினைக்கிறேன். அதே மாதிரி ரொம்பப் பயன்படுத்தினாலும் ஓஞ்சு போயிரும்னு சொல்வாய்ங்க அப்படியும் வச்சிக்கலாம். (உன்னோட பிறவியே சித்துப் பிறவின்னு எனக்குத் தெரியும்டா).
அது தவிர எலி பிடிச்சு எலி பிடிச்சு என் வலது கை கட்டை விரல் பக்கத்துல கொஞ்சம் தேஞ்சு போச்சு. நந்தக்குமார்ட்ட சொல்லி ஒரு கார்ட்டிசான் கூட போனமாசம் போட்டுவிட்டார்.
Image result for girls in E train


எலி பிடிச்சுன்னு நான் சொன்னது என்னோட  ஆஃபிஸ் கம்யூட்டர் மவுசை. நந்தக்குமார் என்பது என்னோட நியுரோ சர்ஜன், ஈழத்தமிழர்.
அப்புறம் என்ன நடந்துச்சுன்னு சொல்றேன். கொஞ்சம்  பொறுமையாப்படிங்க.
சம்பவம் நடந்த(?) அன்று ஒரு திங்கள்கிழமை காலை. எப்பொழுதும் போல் கிளம்பி வேலைக்குச் செல்ல ஆயத்தமானேன். என்னோட தனிமூனான ஹனிமூன் மாதிரி அன்னைக்கும்  தனியாத்தான்  போனேன். (பின்ன ஆபிசுக்கு குடும்பத்தோடயா  போவே எலேய் வேணாம் எனக்கு வெயில் கொடுமையை விட உன்னோட கொடுமைதாண்டா பெரிசா இருக்கு)
பேயறைஞ்ச கதையைச் சொல்றேன் சொல்றேன்னு ஏமாத்திட்டு வர்ற தம்பி விசு மாதிரி நான் ஏமாத்த மாட்டேன். இந்த தனி மூனான என் ஹனிமூனைப்பத்தி அவசியம் சீக்கிரமாகவே சொல்லிறேன். இப்ப போன திங்கள் கிழமை என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விலாவாரியாச்  சொல்றேன்.
          இந்த திங்கள் கிழமை வேலைக்குபோவதும் வெள்ளிக்கிழமை வேலைக்குப் போவதும் ரொம்ப கொடுமைங்க. இரண்டு நாளும் எந்த வேலையும் நடக்கவும் நடக்காது. எந்த வேலையும் ஓடவும் ஓடாது, எந்த வேலையும் நகரவும் நகராது (அடேய் எல்லாமே ஒன்னுதான்ரா) .
கொஞ்சம் தூக்கக் கலக்கத்தில எப்படியோ கிளம்பி ரெடியாகி டாலர் கேபைப் பிடிச்சு சப்வேயில் உள்ளே நுழைஞ்சேன். ஒரு நீள இருக்கையிலே மொத்தம் ஆறுபேர் உட்காரலாம். நடுவில பிடிக்கறதுக்கு கம்பி ஒண்ணு டிவைடர் மாறி இருக்கிறதால, ஒவ்வொரு பக்கமும் மூணுபேர் உட்காரலாம் என்பது நியதி. ஆனா எப்பவும் ஆறுபேர் உட்கார முடியாது. ஒரு சமயம் ஒரு பகுதியில் ரெண்டு தொடை பெருத்தவர் அல்லது இடை பெருத்தவர்  உட்கார்ந்தா நடுவில யாரும் உட்கார மாட்டார்கள். உட்கார்ந்தா சட்னி என்பதால் நானும் அந்த ரிஸ்க் எடுக்க மாட்டேன். ஆனால் ஒரு பெரிய உருவம் இன்னொரு சிறிய நபர் இருந்தால் நடுவில் என்னை ஈஸியாக நுழைத்துக் கொள்வேன். இரண்டு சைடுகளிலும் உட்கார போட்டியிருக்கும். அது கிடைக்கவில்லையென்றால் அட்லீஸ்ட் நடுவில் உள்ள கம்பிக்குப்பக்கத்திலாவது  உட்கார நினைப்பார்கள். நினைப்பேன். இரண்டு பேருக்கு நடுவில் உட்காருவது ஒரு கிடுக்கிப்பிடி போல சிலசமயம் அமைஞ்சிரும்.
ஆனால் அன்றைய தினம் அப்படியில்லை. ஒரு விடலைப்பெண் ஒரு விடலைப் பையன். இரண்டு பேருமே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். பொண்ணு அழகா இருந்தாங்கறத சொல்றது  இந்த இடத்தில தேவையில்லைன்னு நினைக்கிறன் . நடுவில் உட்கார அதுவும் நான் உட்கார தாராளமான இடம் இருந்தது. என்பதால் 'எக்ஸ்க்யூஸ்மி' என்று சொல்லிவிட்டு இரண்டு பேர் மேலும் படாமல் உட்கார முயன்றேன். அந்தப்பெண் உடனே நகர்ந்து கால்களை நகர்த்தி, தொடைகளை சற்றே ஒடுக்கி உடலை அடக்கி இடம் கொடுத்தாள்.  அனால் அந்தப் பையன் நான் சொன்ன எக்ஸ்க்யூஸ் மியை கண்டு கொள்ளவே இல்லை. சிலபேர் எப்போதும் காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்பதால் நாம் சொல்வதை கொஞ்சம் சத்தமாக சிறிது சைகை மொழியையும் சேர்த்து சொல்ல வேண்டும். ஆனால் இவன் காதில் ஒன்றுமில்லை. அவனுடைய இடது பாதி தொடை நான் உட்கார வேண்டிய பகுதியில் 25 சதவீதம் அளவுக்கு இருந்தது. ஆனாலும் நான் உட்கார்ந்து விட்டேன். ஆக மொத்தம் இப்போது 3 விடலையர் அங்கு உட்கார்ந்திருந்தோம். (ஏலேய் சீக்கிரமா சுடலை போற அதுவும்  கடலை மட்டுமே போட முடிஞ்ச உடலை வச்சுருக்கிற நீயெல்லாம்  விடலையா ?. ரொம்ப அட்ராசிட்டிடா  இது)
அவனுக்கு என்ன கோவமோ என்ன பொறாமையோ தெரியல ( பொறாமையா ? வேணாண்டா பரதேசி நான் அழுதுருவேன்). ஒரு வேளை அந்தப்பெண் பக்கத்தில்  உட்கார நினைச்சானோன்னு தெரியல. நான் வந்தத இடைஞ்சல்னு நினைச்சானோ?. இருவருமே ஷார்ட்ஸ்தான்  அணிந்திருந்தார்கள் . ஆனால் அந்தப்பெண்ணின் ஷார்ட்ஸ்  ரொம்ம்ம்ப ஷார்ட். அதனால அந்தப்புறம்பட்டால் என் அந்தப்புரம் கோபித்துக்கொள்ளும் என்பதால்  அந்தப்புறம் படாமல் இந்தப்புறம் பட்டால் பரவாயில்லைன்னு உட்கார்ந்தேன். (டேய் அவனா நீ ? இத்தனை நாள் தெரியவேயில்லையே) திரும்பவும் அவனைப் பார்த்து எக்யூஸ்மி என்று சொல்லி அவன் கண்ணைப் பார்த்தேன். அவன் மேலும் தன் முட்டியால் என் முட்டியை நெருக்க எனக்கு வந்ததே கோபம். தாங்க முடியாது  படாரென்று எழுந்தேன்
மதுரைக் காரன்னா சும்மாவா? தலையானங்கானத்து செரு  வென்ற பாண்டியன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், வீர பாண்டிய கட்டபொம்மன், வீர மருதுபாண்டியர், பூலித்தேவன் ஆகிய பாண்டிய பரம்பரை யாவும் நினைவுக்கு வர, தோள் தினவெடுக்க, மீசை துடிக்க, உடம்பு படபடக்க, கண்கள் கோபத்தை கொப்பளிக்க, உதடுகள் அதிர, இதயம் துடித்துடிக்க, அப்படியே அவன் பக்கம் திரும்பாமல் எழுந்தேன். என்னுடைய பையை எடுத்து கொண்டு அவனைத் திரும்பிப் பார்க்காமல் அந்த ரயில் பெட்டியின் கடை கோடிக்குச் சென்றேன் .இப்ப என்னா செய்வே இப்ப என்ன செய்வ .

உட்கார இடம் கிடைக்காதலால் நின்று கொண்டே ஆஃபிஸ் போய்ச் சேர்ந்தேன். (ஏண்டா ஓரம் போறதுதான் உன் வீரமா? அடச்சீ நீயெல்லாம் மதுரைக்காரன் போடாங்க இவனே...) 

Monday, July 24, 2017

பல்போனா பதவி போச்சு !!!!!!!!!!

இலங்கையில் பரதேசி -19
Image result for dalada maligawa photos
Pathiripuwa : Dalada Maligawa
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/07/blog-post_17.html
பல்லுப்போனா சொல்லு போகும்னு ஒரு சொலவடை இருக்கு. இங்க இலங்கையில பல்லு போனா பதவி போச்சுங்கிற நிலைமைதான் அப்ப இருந்திருக்கு.
அனுநாதபுர மன்னர்கள் செய்தது போலவே, பொலனருவா ராஜ்யமும், டாம்படேனிய ராஜ்யமும் பல்லைக் கைப்பற்றி தங்கள் அருகில் கோவில் கட்டி வைத்துக் கொண்டனர். கம்போலா ராஜ்ஜியம் வலுவடைந்தபோது அவர்கள் புனிதப்பல்லைக் கைப்பற்றி "நியம் கம்பயா விஹாரா" என்ற கோவிலில் வைத்தனர். அதன்பின் அது கோட்டே ராஜ்ஜியத்தின் ஸ்ரீ ஜெயவர்தனபுற கோட்டை என்ற ஊரில் அமைக்கப்பட்ட கோவிலில் சில காலம் இருந்ததை அக்காலத்திய செய்யுள்களான ஹம்சா, கிரா மற்றும் செலாலிகினி ஆகியவற்றுள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
கோட்டே ராஜ்யத்தை ஆண்ட தர்மபாலா காலத்தில் பாதுகாப்புக்கருதி ரத்தினபுரியில் உள்ள 'டெல்கமுவா விஹாரையில் ஒரு அரவைக்கல்லின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாம். அது பின் ஹிரிபிட்டியே தியாவடனா ராலா மற்றும் தேவநாகலா ரத்னாலங்காரா தேரா ஆகிய புத்த துறவிகளால் பத்திரமாய் கண்டிக்கு கொண்டு வரப்பட்டது. கண்டியின் அப்போதைய அரசன் முதலாவது  விமலதர்மசூரியா ஒரு இரண்டு அடுக்குக் கோவில் கட்டி அதில் புனிதப்பல்லை பிரதிஷ்டை செய்தான்.  ஆனால் 1603ல் படையெடுத்து வந்த போர்த்துக்கீசியர் தேவையில்லாமல் அதனைக் கைப்பற்றி தும்பராவில் உள்ள மேட மகானுவாராவுக்கு எடுத்துச் சென்றனர். அது பின்னர் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ராஜசின்ஹாவின் காலத்தில் மறுபடியும் கைப்பற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கோவிலில் வைக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து ஆண்ட மன்னர்கள் கோவிலை விரிவுபடுத்திக் கட்டினர்.


உள்ளே கோவில் வளாகம் மரங்கள் சூழ்ந்து ஒரு மாபெரும் சோலைபோல் காட்சியளித்தது. அதில் நிறைய சன்னிதிகள் இருந்தன. அதில் ஒரு இடத்தில் 'பத்தினி சன்னிதி' ஒன்றிருந்தது உள்ளே நுழைந்தேன். கண்ணகிக் கோவில்தான் அது என்று நினைத்தேன். அநேகமாக மதுரை நாயக்க மன்னர்களால் ஏற்படுத்தப் பட்டிருக்குமென நினைக்கிறேன்.

Image result for Pattini sannidhi in Dalada maligawa
Thank you Trip Adviser 
அதன் பின் முக்கிய தலமான புனிதப் பற்கோவிலுக்குள் நுழைந்தேன். அங்கேயே கோவில் சார்பில் வழிகாட்டிகள் இருந்தனர். உள்ளே போய் கட்டணம் கட்ட, ஒரு தமிழ் பேசும் கைடு ஒருவர் என் கூட வந்து ஒவ்வொன்றையும் விளக்கிச் சொன்னார். முக்கியமாக எண் கோண வடிவ (Octagonal)  பில்டிங் ஒன்றைப்பார்த்தோம். மிக அழகிய அந்தக் கட்டிடத்தை வடிவமைத்தவர் கண்டியின் மிகப் பிரபலமான ஆர்க்கிடெக்டான தேவேந்திர முலாசரின் என்பவர். அதன் பெயர் பத்திரிப்புவா. இது கட்டப்பட்டது ஸ்ரீ விக்ரம ராஜசின்ஹாவின் ஆட்சியின் போது . முதலில் ராஜாக்களின் பொழுதுபோக்கு மண்டபமாக இருந்ததை புனிதப்பல் வைக்க விட்டுக் கொடுத்தனர். ஆனால் தற்போது இது நூலகமாக செயல்படுகிறது. கோவில் கிட்டத்தட்ட நம்நாட்டு இந்துக் கோவில்களின் வடிவமைப்பில் கற்தூண்கள் அமைக்கப்பட்ட மண்டபங்களுடன்  காணப்பட்டது.


ஒருபுறம் இருந்த ஏரியின் அலைகள் சுவர்களை மோதிக் கொண்டு இருந்தன. அந்த ஏரியின் பெயர் போகம்பரா ஏரி. அந்த சுவரில் சிறுசிறு ஓட்டைகள் இருந்தன. அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றப்பட்ட விளக்குகளை இரவில் ஏற்றுவார்களாம். பெரிய முக்கிய நுழைவு வாயிலின் பெயர் "மஹா வஹல்கடா" என்பது. மேலே இறங்கும் வழியில் பெரிய ரத்தினக் கற்களில் ஒன்றான மூன்ஸ்டோன் இருந்தது. அதன் இரண்டு புறமும் இரண்டு கல்யானைகளின் சிற்பங்கள் இருந்தன. அதற்கு மேலே இருந்த மகரதோரண வாயிலை இரண்டு கிங்கரர்கள் சிலைகள் பாதுகாப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்தன.
முக்கிய கற்பக்கிரகம்  போன்ற அமைப்பு இரண்டு மாடிகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. மேலே இருந்த 2ஆவது மாடியின் கதவுகள் தந்தத்தால் கடையப்பட்டிருந்தன. அதற்கு உள்ளே புனிதப்பல் பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு அனுமதியில்லை. கதவுக்குத்தான் பூஜை போலும் ஏதாவது திருவிழா சமயங்களில்தான் வெளியே எடுப்பார்கள்.

அதற்கு மேலே ஒரு விதானம் போன்ற அமைப்பு பளபளத்தது. "தங்கம் போலத் தெரிகிறதே"  என்று கேட்டபோது தங்கமேதான். தங்கத் தகடுகளால் அமைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல். அந்த அறை முழுவதும் தங்கத்தகடுகளால் மூடப்பட்டு இருந்தன. உள்ளே புத்தரின் புனிதப் பல் ஏழு அடுக்குகளைக் கொண்ட  தங்கப் பெட்டிகளின் உள்ளே வைக்கப்பட்டிருக்கிறதாம். ஒன்றின் ஒன்றாக அமைக்கப்பட்ட அந்தப் பெட்டிகள் ஸ்தூப வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. அது தவிர வெளியே உற்சவத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு தனி தங்கப் பெட்டியும் உள்ளே இருக்கிறதாம். குறிப்பிட்ட சமயங்களில் மட்டும் கதவைத் திறந்து பூஜைகள் நடக்கும். அப்படியே திறந்தாலும் உள்ளேயுள்ள பெட்டிகளை மட்டும்தான் பார்க்க முடியும்.
ஒரு இடத்தின் மேலே ஏறி தங்க விதானத்தை  அருகில் பார்த்தேன். நம் ஊரில் கல்யாணத்திற்கு பந்தல்போட்டு மேலே வெள்ளைத்துணி கட்டி பூவேலைப்பாடு செய்திருப்பார்கள் அல்லவா அது போலவே இருந்தது. கட்டம் கட்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டத்தின் உள்ளும் தங்கத்தில் பூ வேலைப்பாடுகள் செய்திருந்தார்கள். அந்த விதானம் மேற்புறக் கூரையிலிருந்து தொங்கிக் கொண்டு இருந்தது.


ஒரு நாளைக்கு மூன்று முறை பூஜைகள் நடக்குமாம். மல்வெத்தே மற்றும் அசுகிரியா என்ற இரண்டு பகுதிகளைச் சேர்ந்த புத்த பிக்குகள் இதனைச் செய்கிறார்கள். விடியும் வேளையிலும் மதிய நேரத்திலும் மாலை நேரத்திலும் ஆக மூன்று முறை இந்த சம்பிரதாய வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு புதன் கிழமையும் வாசனை மிகுந்த மலர்களான  நன்னுமுரா மங்கல்லயா என்ற பூக்களை பண்ணிரீல் போட்டு பல மூலிகைகளுடன் தயாரிக்கப்பட்ட நீரில் புனிதப்பலுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நீர் புனிதப்பல்லில்  பட்டதால் புனித நிராக மாறுவதோடு பலவித நோய்களையும் சரிப்படுத்தும் ஹீலிங் நீர் என நம்பப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அந்த நீரை அப்போது அங்குள்ளவர்களுக்கு பகிர்ந்து தீர்த்தமாகக் கொடுப்பார்களாம்.
சிறிய பாதைகளில் ஏராளமான ஜனங்கள் முண்டியடித்துக் கொண்டு அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்கள். அப்போதுதான் தமிழ் வழிகாட்டி சொன்னார், “அந்தக் கோவில் இரண்டு முறை தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக”. யார் அப்படிச் செய்தது என்றால் விடுதலைப்புலிகள் என்று  சொன்னதும் எனக்கு பகீரென்றது.
- தொடரும்.


Thursday, July 20, 2017

போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு !!!!!!!!!!!

வெற்றுலாவான சிக்காகோ சிற்றுலா !!!!!!
Not flying so high? Spirit Airlines ranked dead last in a customer satisfaction survey.

ஜூலை ஒன்பதில் வந்த 25 ஆவது மணநாள் விழாவினை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என என்னுடைய மகள்கள் கூறிய யோசனையெல்லாவற்றையும் புறக்கணித்து, அது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் ஆலயத்தில் ஜெபத்துடன் கழித்துவிடலாம் என திட்டமிட்டிருந்தேன்.  ஜூலை 4 அமெரிக்க சுதந்திர நாள் வருகிறது. இது இந்த வருடம் செவ்வாய்க்கிழமை வருவதால், திங்கள் கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்தால் நான்கு நாட்கள் சுளையாக வரும் என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.
போன ஆண்டு ஜூலை 4 வீக்கெண்டில் நியூஜெர்சியில் சிறப்பாக நடந்த ஃபெட்னா ( Federation of Tamil Sangams of North America)தமிழர் திருவிழாவில் நானும் என் மனைவியும் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி அதனைப்பற்றி ஒரு தொடர் பதிவுகளை எழுதியதும் என்னுடைய பிளாக்கை தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். இம்முறை மினியாபோலிசில்  நடக்கும் ஃபெட்னா விழாவிற்கு போவதற்கு மனதில் நினைத்திருந்தாலும், இந்த 25 ஆவது மணநாளை ஒட்டி குடும்பத்துடன் எதாவது ஒரு ஊரில் சில நாட்கள் கழிக்க நினைத்தேன்.
என் மனைவிக்கு ஊர் சுற்றப்பிடிக்காதலால் பெரும்பாலும் என்னுடைய டிரிப்புகள் தனியாகத்தான் இருந்திருக்கிறது என்பதும் உங்களுக்கெல்லாம் தெரியும். இது என்னுடைய ஹனிமூனில் இருந்தே ஆரம்பித்தது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாயிருக்கும். அந்த தனிமூனான ஹனிமூன் கதையை இன்னொரு நாள் அவசியம் சொல்கிறேன்.
Image result for சிகாகோவில் தமிழ்வாணன்
Add caption
அதனால் கனடாவில் கியூபெக், கியூபாவில் உள்ள ஹவானா, லாஸ் வேகாஸ், அரிஸோனாவில் உள்ள கிராண்ட் கானியன்  உள்ள பல இடங்களுக்கெல்லாம் யோசித்து ஒத்துவராமல் நாங்கள் போக முடிவெடுத்த நகரம் சிக்காகோ. அந்தக் காலத்தில் தமிழ்வாணன் எழுதிய துப்பறியும் சங்கர்லால் ஒவ்வொரு ஊருக்கும் பயணம் செய்ய அவரோடு நானும் பயணித்திருக்கிறேன். அப்புறம் தமிழ்வாணனே துப்பறிவாளராய் ஆகி பல ஊருக்கும் சென்றார். அப்படிச் சென்ற ஊர்களில் சிக்காகோவும் ஒன்று. Chicago -வில் 'ch' என்பதை பொதுவாக 'ச்சி' என்று நாம் உச்சரிப்போம். அப்படிப் பார்த்தால் இதனை 'ச்சிக்காகோ' என்று சொல்ல வேண்டும். ஆனால் இதனை 'ஷிக்காகோ' என்றுதான் சொல்கிறார்கள். நானும் அப்படியே சொல்லுகிறேன். இந்த மாநகரம் இருக்கும் ஊர் Illinois, இதன் உச்சரிப்பும் வித்தியாசம். இதனை இல்லிநாய்ஸ் என்று சொல்லாமல் 'இல்லினாய்' என்றுதான் சொல்லவேண்டும்.
"டேய் பரதேசி, இல்லிநாய்க்குப்போன ஒல்லி நாய் என்று இதற்கு தலைப்பு வைக்கலாமே",
யார்ராது மகேந்திரனா, என்னடா முருங்கக்காய் மகேந்திரா என்ன திமிரா? தூரத்தில இருக்கேன்னு என்னவேணா சொல்லுவியா, ஊருக்கு வந்து சந்தைக்கு கூட்டிப்போய் நங்கு நங்குன்னு தலையில் நாலுவச்சேன், அப்புறம் பாத்துக்க”.
சரி அவனை விடுங்க, அப்படி முடிவெடுத்து நாலுபேருக்கு டிக்கெட் புக் செய்தேன். எக்ஸ்பீடியா மூலமே ஷிக்காகோவின் ஏர்போட்டான ஓ'ஹாரே  ஏர்போர்ட் அருகில் இருக்கும் 'டேய்ஸ் இன்' ஹோட்டலில் இரண்டு டபுள் பெட் கொண்ட ஒரு ரூமையும் புக் செய்தேன். அதற்குப்பின் என் சின்னப் பெண்ணுடன் உட்கார்ந்து சைட் சீயிங் இடங்களை திட்டமிட்டு லிஸ்ட்டை போட்டு அதற்கு ஷிக்காக்கோ சிட்டி பாஸ் 3 நாளைக்கு வாங்கினோம். இந்த பாஸை வைத்து ஷிக்காக்கோவின் முக்கிய சுற்றுலா தலங்களுக்குப் போகலாம். வரிசையில் போய் நின்று டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை, அதுமட்டுமல்லாமல் எங்கெங்கு சாப்பிடவேண்டும் என்பதையும் திட்டமிட்டேன். டேய்ஸ் இன்னில் காலை கான்ட்டினென்டல் பிரேக்ஃபாஸ்ட் இலவசம் தான். மதியம் இந்திய உணவும், இரவில் அமெரிக்க உணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்து ஒரு பெரிய லிஸ்ட்டை எடுத்து வைத்தேன். உடுப்பி, பெங்களூர் உட்லண்ட்ஸ், அன்னபூர்ணா, கோதாவரி ஆகிய உணவகங்களும் அதில் அடக்கம்.
ஜூன் 30 வெள்ளியன்று மலை கிளம்பி அன்று இரவு, ஜூலை 1 சனி, ஜூலை 2 ஞாயிறு, ஜூலை 3 திங்கள் முடித்து ஜூலை 4 செவ்வாய் மாலை கிளம்பி வருவதாகப் பிளான்.
நம்முடைய பிளாக்கில் இந்தத் திட்டத்தை தெரிவித்து அதனால் பதிவுகள் வராது என்பதையும் அறிவித்துவிட்டேன்.
இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்து முடித்து, பேக் செய்து செக்லிஸ்ட்டை சரிபார்த்து உபெரைக்  (uber) கூப்பிட்டு லக்குவார்டியா ஏர்போர்ட்டிற்கு போனோம். என் மனைவி , வீட்டில் பூத்த மல்லிகை மலர்களைச்   சூடியிருந்தாள். காரே கமகமத்தது, மனது குதூகலமாய் ஆனது.
பாதிவழியில் வந்த இ மெயிலில் ஃபிளைட் டிலே என்று வந்தது. இரண்டு மணிநேரம் தாமதம் என்பதால் வீட்டிற்குப்போய் திரும்ப வரலாமா என்று கேட்டேன். இல்லை ஏர்போட்டிலேயே இருந்து கொள்ளலாம் என்று எல்லோரும் சொன்னதால் ஏர்போர்ட் போய் இறங்கினோம்.  ஏர்வேஸின் பெயர் ஸ்பிரிட் ஏர்வேய்ஸ். உற்சாகம் தொற்றிக்கொள்ள லைனில் நின்றோம். அங்கு வந்த செக்யூரிட்டி எங்கள் டிக்கட்டைப் பார்த்துவிட்டு நக்கலாய் சிரித்தான். என்னவென்று கேட்டால் ஃபிளைட் கேன்சல்ட்  என்றான். கோபத்துடனும் கலவரத்துடன் கெளண்ட்டருக்குப் போய்க் கேட்டபோது அதையே சொன்னார்கள். அதோடு ஷிக்காகோ  போகும் எல்லா விமானங்களும் ரத்து என்றும் வானிலை சரியில்லை என்றும் சொன்னார்கள். ஸ்பிரிட் ஏர்வேஸ் கேன்சல் ஆனதால் எங்கள் எல்லோரின் ஸ்பிரிட்டும் இறங்கிப்போய் காத்து இறங்கின பந்தைப்போல் ஆனோம் .ஆனால் அந்தக்கவலை என் மனைவி முகத்தில் தெரியவில்லை. அவளுக்குத்தான் ஊர் சுற்றுவதில் விருப்பமில்லையே அதுதான் காரணமாய் இருக்கும் என்று நினைத்தேன் .சொன்னதோடு மறுபிளைட் திங்கள் தான் என்று சொன்னதால் எல்லாவற்றையும் கேன்சல் செய்து ரீஃபண்டை வாங்கிட்டு  ஒரு மஞ்சள் கேப் பிடித்தோம். எல்லோர் முகமும் சோகமாய் இருக்க, என் மனைவி முகம் மட்டும் மகிழ்ச்சியாய் இருந்தது போல் தெரிந்தது. அவள் தலையில் இருந்த மல்லிகை மலர்கள் என்னைப் பார்த்து சிரித்தன, மணத்தன. 'போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு' என்ற பழமொழி வேறு நேரந்தெரியாமல் ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.
வீடு வந்து சேர்ந்து ஹீரோ டாக்கீசில் படம் பார்க்கலாம் என்று நோண்டியபோது  "போங்கு" என்ற படம் புதிதாக இணைக்கப்பட்டிருந்தது. அந்தப்படம் சூழ்நிலைக்கு பொருத்தமாக இருந்தது வருத்தமாக இருந்தது.

Related image

அடுத்த நாள் காலையில் எழுந்து நியுஜெர்சிக்குப் போய் மிர்ச்சியில் சாப்பிடலாம் என்று மனைவி சொன்னதால் சரி இப்படியாவது விடுமுறையைக் கழிக்கலாம் என்று அங்கு சென்றோம். எடிசனில் இருக்கும் இந்த ஆந்திர உணவகத்தில் 35 வகைகள் புஃபேயில் இருந்தன. விலையும் 16 டாலர்கள், சாப்பிட்டு வெளியே வந்து பார்த்தால் அதே காம்ப்பவுண்ட்ண்டில்  "ஜாய் அலுக்காஸ்" நகைக்கடை இருந்தது.
Related image

 "ஏங்க அதான் ரீபண்ட் வந்திருச்சே, ஏதாவது நகை பார்க்கலாமா?" என்று சொன்னாள். இது மிகப்பெரிய சதித்திட்டமாய் இருக்குதே என்று எண்ணினாலும் மறுப்புச் சொல்லாமல் உள்ளே போனோம். மிக மிகத்  தவறான முடிவென்று பின்னர்தான் தெரிந்தது. தலைக்கு மேல் வெள்ளம்போய் ஷிக்காக்கோ போல மூணுமடங்கு செலவானது. போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடுன்னா சொன்னேன். அந்த பூமணம் போய் இப்ப கோமணமாவது மிஞ்சுமான்னு   தெரியலை  போங்க.



Monday, July 17, 2017

கொண்டையில் மறைத்து வந்த புத்தரின் புனிதப்பல் !!!!!!


இலங்கையில் பரதேசி -18
Image result for buddha statue at the entrance of Kandy
At the Kandy Entrance
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/07/blog-post_11.html

எங்களுடைய கார் மெதுவாக மலைப்பகுதிகளில் ஏறி முன்னேறியது.  முனை சந்திப்பில் ஒரு மாபெரும் புத்தர் சிலை இருந்தது.
"என்ன இது எதுவும் முக்கிய இடமா அம்ரி ?"
“இல்லை சார் இங்கெல்லாம் நிறைய இடங்களில் புத்தர் சிலை இருக்கும்”.

ஊருக்கு வெளியே இருப்பதால் எல்லைக்காவல் புத்தராக இருக்குமா என்று நினைத்தேன் ( ?). உருவ வழிபாடு இல்லாமல் முக்திக்கு வேறு ஒரு வழியைச் சொன்ன புத்தரையே சிலையாக வடித்துக் கும்பிடுகிறார்களே என்று நினைத்தபடியே கடந்தேன். புத்தர் தங்க நிற வண்ணத்தில் பளபளவென்று இருந்தார். இந்து மதத்தில் கூட ஆதி வேதங்களில் இல்லாத உருவ வழிபாடு இடையில் செருகப்பட்டது. இஸ்லாம் சமயத்தில் தர்காக்கள் அமைத்து இறந்தவர்களை வழிபட ஆரம்பித்தார்கள். ஏன் உருவ வழிபாட்டை முற்றிலும் எதிர்க்கும் பத்துக் கட்டளைகளைக் (Ten Commandments) கொண்ட கிறித்துவ மதத்திலும் தும்பைவிட்டு வாலைப்பிடித்த கதையாக அன்னை மேரியை கடவுளாக்கியதோடு இயேசுவின் சீடர்களையும் சிலையமைத்து வணங்க ஆரம்பித்ததை என்னவென்று சொல்வது?

மனிதமனம் பல சமயங்களில் தனக்கேற்ப மதம் உட்பட பல காரியங்களைத் தானே உருவாக்கி வந்ததோடு அதில் மற்றவர்களை இழிவாகப் பார்ப்பது  எவ்வளவு வேடிக்கை. அதுதவிர மதங்களுக்குள் துவேஷத்தை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் சண்டை ஏற்படுத்துவதோடு ஒரே மதத்திற்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி அதனால் எவ்வளவு பேர் செத்து மடிகிறார்கள் என நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.

உதாரணமாக வரலாற்றில் ஏற்பட்ட சைவம் வைஷ்ணவம் பிரிவினை. இது அநேகமாக முடிந்துவிட்டது எனலாம். ஒரே கோவிலில் இப்போதெல்லாம்  இரண்டும் காணப்படுகிறது. கிறிஸ்தவத்தில் கத்தோலிக்கருக்கும் பிராட்டஸ்டண்டுகளுக்கும் ஏற்பட்ட பிரிவினையில் எவ்வளவுபேர் கொல்லப்பட்டார்கள் என்று தோண்டிப்பார்த்தால் தலையே சுற்றுகிறது. இப்போது இது நின்றுவிட்டது என்று சொல்லாம். ஆனால் இஸ்லாம் சமயத்தில் சுன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு இடையில் குரோதமும் ஒருவரையொருவர் கொல்லுவதும் இன்று வரை தொடர்கிறது.. இதற்கிடையில் இனம் மொழி, நிறம், என்று வேறு பிரிவினைகள். மதங்கள் , பிரிவினையை ஒழிப்பதைவிட்டு மேலும் பிளவுபடுத்தினால் அதனால் மனுக்குலத்திற்கு தீமையே தவிர நன்மையில்லை. கடவுள் நிச்சயம் அதனை விரும்பமாட்டார். இப்படிச் செய்வதால் சொர்க்கம் கிடைக்கும் என்று எண்ணினால் அவர்கள் நிச்சயமாய் ஏமாந்து போவார்கள். இவர்களை மூளைச் சலவை செய்து கொடுமைகளை அரங்கேற்றுபவர்களுக்கு இன்னும் கொடிய நரகம் காத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கார் நகர்ந்து குறுகலான ஆனால் நெருக்கமாக கடைகளைக் கொண்ட தெருக்களில் நுழைந்து சுற்றிச் சுற்றி வந்தது. "அம்ரி பக்கத்தில் இறக்கிவிட்டுவிட்டு நீ போய் எங்கேயாவது பார்க்கிங் செய்து கொள். நான் உள்ளே போய் விட்டு வருகிறேன்," என்றேன். தலையாட்டி அம்ரி என்னை இறக்கிவிட்டுச் சென்றான்.
Image result for Dalatha malika entrance
Temple Entrance
'தலதா மாளிகவா ' அல்லது “தலதா மாளிகை” என்ற அந்தக்கோவில் என் முன்னால் கம்பீரமாகத் தெரிந்தது. காவலர்கள் வாயிலில் நின்றிருந்தாலும் அவ்வளவாய் செக் செய்யாமல் என்னை உள்ளே விட்டார்கள். "அப்பாவிப் பரதேசி” என்று நெற்றியில் எழுதியிருப்பதை அவர்களும் படித்து விட்டார்கள் போலத்தெரிகிறது. நானும் என் முகத்தை முடிந்த அளவுக்கு பாவமாய் வைத்துக் கொண்டேன். இந்த பாவம் எனக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது என நினைக்கிறேன்.

தலதா என்றால் 'பல்' அல்லது தந்தம் என்று அர்த்தம். ரெலிக் என்று சொல்லுகிறார்கள் .யாரோடுடைய  பல் என்றால் நம்ம கெளதம புத்தரின் பல்தானாம் அது. அதற்கு என்ன ஆதாரம் என்றால் நம்பிக்கைக்கு ஆதாரம் தேவையில்லை என்கிறார்கள். நான் யோசித்துப் பார்த்தேன். புத்தரை முழுதாகப் புதைக்கவில்லை போலிருக்கிறது. அல்லது எரித்திருந்தால் அவற்றில் மிஞ்சிய எலும்புகளையும் மண்டை ஓட்டில் உள்ள பற்களையும் தட்டி எடுத்து அவனவன் வெவ்வேறு நாடுகளுக்கு சூவனிர்  போல எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது. இந்த நம்பிக்கை என்னவெல்லாம் விநோத காரியங்களைச் செய்கிறது பாருங்கள். கத்தோலிக்க மதத்தில் கூட இந்த மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. இயேசுவின் சீடர்களின் எலும்பை பத்திரப்படுத்தி சில ஆலயங்களில் வைத்து வணங்குவதும் அதற்கு சக்தி இருக்கிறது என்று நம்புவதும் சுத்தப்பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றன.

ஆனால் உள்ளே அந்த வளாகத்தில் பலகோவில்கள் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு முன்னாள் இந்த தலதா மாளிகை உருவான வரலாற்றைச் சுற்றிப்பார்ப்போம்.

இந்தக்கோவில் 'வேர்ல்ட் ஹெரிட்டேஜ் சைட்' என்ற அங்கீகாரம் பெற்றிருக்கிறது.  புத்தரின் பல் இலங்கைக்கு வந்த காலத்திலிருந்து அதனைச் சுற்றியிருந்த அரசியலும், அதிகாரமும் சூழ்ச்சிகளும் சொல்லி மாள முடியாதவை. ஏனென்றால் இந்தப் பல் யார் கையில் இருந்ததோ அவர்கள் கையில்தான் ஆட்சி அதிகாரம் இருந்தது.
Related image
இளவரசி ஹேமமாலி( கொண்டையை கவனியுங்கள் )
கெளதம புத்தர் 'பரிநிர்வாண' நிலை அடைந்தபின் கலிங்க நாட்டில் அவருடைய பல் பத்திரப் படுத்தப்பட்டது. அப்போதிருந்த கலிங்க மன்னன் குகசிவா என்பவனின் ஆணைப்படி அவனுடைய மகள் இளவரசி ஹேமமாலி தன் கணவன் இளவரசன் தந்தாவுடன்(பெயர் பொருத்தத்தை  கவனித்தீர்களா?)புத்தரின் பல்லுடன் இலங்கைப் பட்டினத்திற்கு வந்தார்கள். அதன் காலம் கி.பி.301 முதல் 328 வரை. அனுராதபுரத்தை ஆண்ட மன்னன் ஸ்ரீமேக வண்ணனின் அரசாட்சி இருந்த காலம். இளவரசி ஹேமமாலி பாதுகாப்புக் காரணங்கள் கருதி தன் கொண்டையில் இந்தப் பல்லை மறைத்துக் (?) கொண்டு வந்தாளாம். ஆனால் கொண்டையில் மறைத்து வைத்தாலும் இந்தப் பல்லின் ஒளி வெளியே தெரிந்ததாம். ஸ்ரீமேக வண்ணன் மிகுந்த மரியாதையுடன் அதனைப் பெற்றுக் கொண்டு 'மேககிரி விஹாரம்' என்ற ஆலயத்தில் அதற்கு தனிக்கோவில் அமைத்தானாம். இப்பொழுது அந்த இடம் இசுறுமுனியா என்றழைக்கப்படுகிறது. அந்தப்பல்லின் பாதுகாப்பு அந்த அரசனிடம் இருந்தது. காலப்போக்கில் யாருடைய பாதுகாப்பில், அரவணைப்பில் அந்தப்பல் இருக்கிறதோ அவர்களே ஆளுவதற்கு உரிமை பெற்றவர்கள் என்ற நிலைமையும் உருவானது. எனவே அப்போதிருந்த அனுராதபுர மன்னர்கள் அந்தப் பற்கோவிலை தங்களுடைய அரண்மனைக்கு அருகிலேயே அமைத்தனர். அதனால் ராஜ்யங்களும் அதிகாரங்களும் மாற மாற அந்தந்த ராஜாக்களின்  பொக்கிஷமாக இது மாறி மாறி இருந்தது. இதைக் கைப்பற்ற பெரும் போர்களும் நடந்தன.

-தொடரும்  

Tuesday, July 11, 2017

கண்டியை ஆண்ட மதுரை நாயக்க வம்சம் !!!!!!!!!!!!!!!!!


இலங்கையில் பரதேசி -17

Dutch General Gerrard Hulft presents the captured Portuguese flags and gifts to the King.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/06/blog-post_27.html

விமலதர்ம சூரியாவின் ஆட்சி தொடங்கி அடுத்து வந்த இருநூறு வருடங்கள் போர்த்துக்கீசியருக்கும் கண்டிக்கும் தொடர்ந்து சண்டை நடந்து கொண்டே இருந்தது. இதில் சிலசமயம் டச்சுக்காரர்கள் சில சமயம் டேனிஷ்காரர்கள், கண்டிக்கு உதவி  செய்தார்கள். நடுவில் போர்த்துக்கீசியர் சில காலம் கண்டியை பிடித்தும் வைத்திருந்தார்கள். விமலதர்மாவிற்குப் பின் அவருடைய உறவினர் சேனரத்தனா, அவர் மகன் இரண்டாம் ராஜசின்ஹா, அவன் மகன் இரண்டாம் விமலதர்ம சூரியா, அவன் மகன் வீரநரேந்திர சின்ஹா ஆகியோர் தொடர்ந்து ஆண்டனர்.  அதுவரைக்கும் எந்த வாரிசு பிரச்சனையும் எழவில்லை. ஆனால் வீரநரேந்திர சின்ஹா 1739ல் இறந்த போது வாரிசுப்பிரச்சனை ஆரம்பித்தது. இவனுக்கு 'யுனம்புவே பண்டாரா' என்ற மகன் இருந்தான். ஆனால் இவனை வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஏனென்றால் இவன் சிங்களத்துணைவிக்குப் பிறந்தவன். அதோடு அந்தச் சிங்களப்பெண் அரச வம்சத்தைச் சேராத ஒரு குறைந்த சாதி பெண் கண்டி ராஜ்ஜியத்தில் தந்தை மற்றும் தாய் இருவரும் ஷத்திரிய குலமாக இருக்க வேண்டும் என்ற ஒரு பாரம்பரியத்தை காலங்காலமாக பின்பற்றி வந்தனர். இந்தப் பிரச்சனையை சமாளிக்க அங்கிருந்த புத்தபிக்கு வெளிவிட்டா சரங்கரா, நரேந்திரனின் மூத்த மனைவியருள் ஒருவரின் சகோதரனை மன்னனாக்கினார். அந்த மனைவி தமிழும் தெலுங்கும் பேசும் மதுரை நாயக்க மன்னரின் குடும்பம் என்பதால் அப்போதிருந்து ஒரு புதிய வம்சம் கண்டியை ஆரம்பித்தது. அதன் முதல் மன்னன் ஸ்ரீ விஜயராஜ சின்ஹா என்பவன்.

இப்படித்தான் மதுரை நாயக்க வம்சம் கண்டியை ஆள ஆரம்பித்தது. இப்பொழுதும் இந்த நாயக்க வம்சப் பெயர்கள் சில சிங்களப் பெயர்களில் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். பண்டார நாயகே என்பது அதில் ஒன்று. விஜயராஜ சின்ஹாவும் அவனுக்குப்பின் வந்தவர்களும் முக்கிய பதவிகளில் நாயக்கர்களை நியமித்ததால் ஆங்காங்கே எதிர்ப்புகளும் பிரச்சனைகளும் எழுந்தன. ஆனால் இவர்கள் புத்த மதத்தையும் கண்டி கலாச்சாரத்தையும் தொடர்ந்து பின்பற்றியதால் அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை.

டச்சுக் காரர்களுடன் ஒரு பக்கம் சண்டை நடந்து கொண்டே இருந்தது. அதன்பின் டச்சுக்காரர்களின் ஆக்கிரமிப்பு முடிந்து பிரிட்டிஸாரின் ஆதிக்கம் ஆரம்பமானது. திரிகோண மலையில் ஆரம்பித்து பாட்டிகலோவா, யாழ்ப்பாணம் என்று பிடித்துக் கொண்டே போனார்கள். கண்டியோடு முதலில் ஒரு ஒப்பந்தம் இருந்தது. “மிகஸ்டென்னே திசாவோ” என்ற கண்டியின் தூதர் சென்னை வரை வந்து இந்த ஒப்பந்தம் போட்டதால் கண்டிக்கு ஆபத்து இல்லாமல் இருந்தது. இது கீர்த்தி ஸ்ரீ ராஜசின்ஹாவின் ஆட்சியில் நடந்தது. ஆனால் அவனுக்குப்பின் வந்த அவன் தம்பி ஸ்ரீ ராஜாதி ராஜசின்ஹா இந்த ஒப்பந்தத்தை நிராகரித்து தன்னிச்சையாக ஆள முயன்றான். அதனால் பிரிட்டிஷார் கொஞ்சம் கொஞ்சமாக கண்டியின் பகுதிகளை பிடிக்க முயன்றார்கள். 1798ல் பிரடெரிக் நார்த் என்பவர் பிரிட்டிஸின் கவர்னராக இலங்கையில் நியமிக்கப்பட போது  இது வேகமெடுத்தது. இதற்கிடையில் ராஜாதி ராஜசின்ஹா 1798ல் வாரிசு இல்லாமல் நோய்வாய்ப்பட்டு இறந்து போனான். வாரிசு இல்லாட்டிதான் நாந்தேன் வாரிசுன்னு வந்துருவானே வெள்ளைக்காரன்.  

Royal Court of King Sri Wickrama Rajasinghe, 19th Century Royal court scene. 5'x 7ft. Currently on display at the Departure lounge- Bandaranayake International Airport, Katunayake.
The court of King Vikramasingha 
முதல் மந்திரியா இருந்த பிலிமா தளவாய் பிரிட்டிஷ் உதவியோடு அதிகாரத்தை கைப்பற்றி இறந்து போன மன்னனின் உறவினனான 18 வயதான கொன்னசாமி என்பவனை ஸ்ரீ விக்ரம ராஜசின்ஹா என்ற பெயரில் அரியணை ஏற்றினான். அதற்கு எதிர்ப்புச் செய்த முத்துச்சாமியை குடும்பத்தோடு சிறையில் அடைத்தான். ஆனால் எதிபார்த்ததிற்கு மாறாக விக்ரம ராஜசின்ஹா தளவாய் பேச்சையோ பிரிட்டிஷ் பேச்சையோ கேட்காமல் சுதந்திரமாய் ஆள ஆரம்பித்தான். அந்த தளவாய்,”அடடா தப்புப் பண்ணிட்டோமே”, நாமே அரியணையைக் கைப்பற்றியிருக்கலாமே என்று நினைத்து திரும்பவும் பிரிட்டிஷாரின் உதவியை அணுகினான். இந்த மாதிரி காட்டிக் கொடுக்கும் கயவாளிகள் இருக்கும் வரை சுதந்திரமா இருக்க முடியுமா? சண்டை ஆரம்பித்தது. விக்கிரம ராஜசின்ஹா சுமார் 2 ஆண்டுகள் வரை பிரிட்டிஸிக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தான். இதனைத்தான் முதலாவது கண்டிப் போர் என்று சொல்லுகிறார்கள். 

ஒரு சமயம் மலேயா தளபதி சங்குன்குலோவின் தலைமையில் கண்டியைப் பிடித்து நான் முன்ன சொன்னேனே அந்த முத்துச்சாமி என்ற வெத்துச் சாமி கையில் ஆட்சியை ஒப்படைத்தனர். அவர்கள் கண்டியில் நுழையும்போது ஒரு ஈ எறும்பு கூட அங்கே இருக்கவில்லை. ஆனால் கொரில்லா புத்தம் ஆரம்பித்தது. கொஞ்ச நாளில் மீண்டும் விக்கிரம ராஜசின்ஹனா கண்டியை மீட்டுக் கொண்டான். அதன்பின் வெகுண்டெழுந்த பிரிட்டிஷ் கவர்னர், கண்டியின் சிறுசிறு பகுதிகளின் தலைவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு பெரும் படையுடன் நுழைந்து கண்டியைப் பிடித்து 1815ல் விக்ரம ராஜசின்ஹாவை இந்தியாவுக்கு நாடு கடத்தினான். அவன் அங்கேயே சிறைப்படுத்தப் பட்டு 1832ல் இறந்து போனான். அவனுடைய ஒரே மகனும் 1843ல் இறந்துபோக மதுரை நாயக்கர்களின் கண்டி ஆட்சி முடிந்து போனது. இதுல ராஜாவைச் சிறைப்பிடித்தது. அவனுடைய சொந்த நாட்டின் ஒரு பகுதியைச் சேர்ந்த படையாகும்னு சொன்னா அது பெரிய வெட்கக் கேடான விஷயம். அதிலிருந்து கிழக்கிந்திய கம்பெனி எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளைத் துவங்கியது. இலங்கை முற்றிலுமாக பிரிட்டிஷ் காலனியாக மாறிப்போனது.
Image result for sri vikrama rajasinha
Vikrama Rajasinga Naidu, the Last Nayak King of Kandy with his wife

இலங்கேஸ்வரன் என்னும் பூபதி என்றும் அழைக்கப்பட்ட கண்டி அரசர்களின் கதை இப்படி முடிந்து போனது. நாயக்க மன்னர்களின் ஆட்சியில் மன்னரின் பாதுகாப்புப்படை முழுவதும் தமிழ் வீரர்களாய் இருந்தார்கள். நாயக்க மன்னனும் தமிழ் பேசுபவனாக இருந்தான். தனிப்பட்ட அதிகாரம் இருந்தாலும் மன்னன் புத்த பிக்குகளுக்கு கட்டுப்பட்டவன் ஆவான்.  அவர்களின் ஆலோசனைப்படியே நடக்க வேண்டும் அதுதவிர நாட்டின் பல பகுதிகளில் இருந்த குழுக்களின் தலைவர்களும் ஆட்சியின் முக்கிய அங்கமாக இருந்தனர்.

புத்த பிக்குகளை உதாசீனம் செய்ததால்தான் விக்ரம ராஜசின்ஹாவை அவர்கள் பிரிட்டிஷ் துணையுடன் ஒழித்துவிட்டதாகச் சொல்லுகிறார்கள்.  உள்ளூர்க்காரனைப் பகைத்து வெள்ளைக் காரனுக்கு வழிவிட்டதால் அவன் முழு இலங்கையையும் பிடித்து ஆண்டது வரலாறு. அதன்பின் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபின்தான் இலங்கைகும் கிடைத்தது.
வாருங்கள் மக்களே கண்டிக்குள் நுழைவோம்.


-தொடரும்.