Tuesday, September 29, 2015

பரதேசியின் ரிட்டையர்மென்ட் !!!!!!!!!!!!!


சர்ஜரி ஆனதிலிருந்து மனசில ஒரு கலக்கம், நாம எப்ப ரிட்டயர் ஆகப்போறோம், ரிட்டயர் ஆக முடியுமா? இல்ல கடைசி வரைக்கும் வேலை பார்த்துத்தான் ஆகனுமா? போன்ற கேள்விகள் தோன்றி மறைந்தன. நான் வேலை செய்வதை நிறுத்தினாலும் பில்கள் வருவது நிற்காது, மார்ட்கேஜ் கட்டுவதும் நிற்காது. மார்ட்கேஜ் ஓட மொத்த வருஷத்தை கணக்குப்போட்டா, இந்த ஜென்மம் மட்டுமில்லாம அடுத்த ஜென்மத்துலயம் கட்டணும் போல இருக்கு. நமக்கு பென்ஷன் போல எதுவும் கிடையாது.
எங்க அம்மா டீச்சர் வேலை பார்த்து ஓய்வு பெற்றதால் இன்னக்கி வரைக்கும் பென்ஷன் வருது. இங்கதான் நியூயார்க்கில் என் தம்பி கூட இருக்காங்க. ஸ்டேட் பாங்க், சென்னையில் டெப்பாசிட் ஆகும் பணத்தை ATM கார்டு வெச்சு இங்க டாலரில எடுத்துர்றாங்க .நேத்து சர்ச்சுக்குப் போகும்போது என் முகம் வாட்டத்தை கவனிச்சு, ஏதாவது செலவுக்கு வேணும்னா நான் ஒரு 100 டாலர் மாசாமாசம் தர்ரேன்னு சொன்னாங்க. சே பாவம் அவங்கட்டயிருந்து வாங்கறதா, சேச்சே அசிங்கம். அதைக்கேட்டு என் மனைவிக்கும் கோபம் வந்துருச்சு. அவங்களுக்கு என் பட்ஜெட் தெரியாது. எனக்கு குறைந்தபட்சம் ஒரு மாத செலவுக்கு 10,000 டாலர் தேவைப்படுது.
அமெரிக்காவில நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் மாதவன்கள் யாரும் ரிட்டயர் ஆகுற மாதிரி தெரியல. நம்ம சர்ச்சுல ஒருத்தரு 84 வயசு. ஆஸ்பத்திரியிலதான் வேலை. வேலைக்குப் போகும்போது, ஏதோ வலி வந்து இருந்தாலும் அப்படியே போய், அங்கேயே இறந்து போனார். நல்ல சாவு.
retirement

என் மனைவியும் இன்னும் ரெண்டு வருஷம்தான் வேலை பார்ப்பேண்ணு சொல்லி பயமுறுத்துறா. இதுக்குத்தான் சொல்றாங்க பிறந்தா பணக்காரனா பிறக்கனும் இல்லை அட்லீஸ்ட் பணக்காரியை கல்யாணம் பண்ணனும்னு. ம்ஹீம் நமக்கு ரெண்டும் வாய்க்கல. சாகும் வரைக்கும் இந்த பில்லைக்கட்டியே பல்லு போயிரும்போல இருக்கு.
என்னோட ரிட்டயர்மென்டைப் பத்திப் பேசினா, என் மனைவி கலைஞரைப் பாக்கச் சொல்றா. என்னன்னா 92 வயசுலயும் மகனுக்கு வழிவிடாம இருக்காராம். இதுல சேரவிட்டு எழுந்தா, யாராவது உட்கார்ந்திரப் போறாங்கன்னு, எப்பவும் சேரிலயே உட்காந்திருக்கிறாரோனு தோணுது.
என்னோட மகள்கள் ஏதாவது உதவி பண்ணமாட்டாங்களானு நெனைச்சா, ம்ஹீம் ஒண்ணும் பேறாது போல இருக்கு. என்னோட பெற்றோர் என்ட்ட  கேட்காதப்ப, நான் போய் அவங்ககிட்ட வாங்கறதா, தப்பு தப்பு மகாத்தப்பு.
இதுக்கிடையிலதான் நம்ம சர்ச்சுல தம்பையான்னு ஒருத்தரு. NYPD  டிரான்ஸ்போர்ட் பிரிவில வேலை பார்த்து சின்ன வயசுலயே ரிட்டயர் ஆயிட்டார். இலங்கைத் தமிழர் அவர். அவரும் அவர் குடும்பமும் ரொம்ப நாளா எங்க சர்ச்சுல மெம்பர்.
சரி சீக்கிரம் ரிட்டயர்மென்ட் ஆகிற சீக்ரெட் என்னான்னு கேட்கலாம்னு அவர்ட்ட கேட்கிறதவிட அவர் மனைவி வசந்திகிட்ட கேட்கலாம்னு கிட்டப்போய் உட்கார்ந்தேன்.
"என்னக்கா செளக்கியமா? அண்ணன் ரிடையர் ஆயிட்டாரு போலருக்குன்னு," கேட்டேன்.
ஒரே பிலுபிலுன்னு பிடிச்சுக்கிட்டாங்க.
 "ஆமா உங்க அண்ணனை நீதான் மெச்சிக்கனும். இப்பதான் அறுபது ஆகுது ரிட்டயர்மென்ட் வாங்கற வயசா இது. ஆளு கட்டையும் குட்டையுமா நல்லாத்தான இருக்காரு. வீட்டில ஒருவேலையும் செய்யறதில்ல. சும்மாவே பொழுது போக்கிறாரு. பிள்ளைக இன்னும் படிச்சிக்கிட்டுதான் இருக்குது. இந்த மனுஷனை வச்சிக்கிட்டு எப்படி நான் குடித்தனம் பண்ணுறதுன்னு தெரியல".
"சரிக்கா ஆபிஸ்ல அவங்களே ரிடையர்மென்ட் கொடுத்தா என்ன செய்யறது"
"ஆஃல்பி என்னா பேசுற? அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல இவர் இன்னும் குறைஞ்ச பட்சம் ஒரு பதினஞ்சு வருஷம் வேலை பார்க்கலாம். சும்மா அவரே வாலன்டரி ரிடையர்மென்ட் அதுவும் என்ட்ட சொல்லாம வாங்கிட்டாருன்னு" அப்படியே பேசிட்ட இருந்தாங்க. நான் நைஸா நழுவி, இன்னொரு ஓரமா உட்கார்ந்திருந்த தம்பையாட்ட போனேன்.
"என்னன்னே ரிட்டையர் ஆயிட்டிங்கன்னு கேள்விப்பட்டேன். இப்ப ரிலாக்சா வாழ்க்கையை என்ஜாய் பண்றீங்களா ?"
"வாழ்க்கைய என்ஜாய் பண்றேனா, என்னப்பா சொல்ற ?".
"இல்ல நான் ரிட்டயர் ஆகிறப்பத்தி யோசிச்சிட்டிருக்கேன். உங்கள்ட்ட ஏதாவது டிப்ஸ் கிடைக்குமான்னு வந்தேன்".
"ஆமா ஏதோ ரிலாக்ஸ்டா இருக்கேன்னு சொன்னிலே".
"ஆமான்னே, ரிட்டயர் ஆயிட்டா ஹாயா இருக்கலாம்ல"
"இப்ப என்ன வேலையெல்லாம் செய்யறேன் தெரியுமா?"
"சொல்லுங்க அண்ணே".
"இப்ப காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்திருக்கிறேன்."
"நாலு மணிக்கா, முதல்ல எப்ப எழுவீங்க".
“முதல்ல ஏழு மணிக்குத்தான் எழும்பி ஒரு மணி நேரத்தில ரெடியாகி எட்டு மணிக்கெல்லாம் ஆபிஸ் போயிட்டு சாயந்திரம் நாலு மணிக்கு வந்து ரிலாக்ஸ் பண்ணுவேன், நண்பர்களைப் போய் பார்ப்பேன். ஆஹா அந்தக்காலம் எவ்வளவு ஜாலியா இருக்கும் தெரியுமா?.”
"என்னன்னே சொல்றீங்க, அது சரி நாலுமணிக்கு எந்திரிச்சு என்ன செய்வீங்க."
"அதையேன் கேக்குற காலையில நாலு மணிக்கு எந்திரிச்சு, முதல்ல பத்துப்பாத்திரம் தேய்க்கனும். இட்லி ஊத்தி வச்சுட்டு காஃபிபோட்டு எடுத்துட்டுப் போய் மனைவியை எழுப்பனும். அப்புறம் பிள்ளைகளை எழுப்பி ரெடிபண்ணி தனித்தனியா வேற வேற ஸ்கூல்ல கொண்டுபோய் விடனும். காலேஜ் போற மகள் மட்டுமல்ல வேலைக்குப் போற மகளும் ஊட்டினாத்தான் சாப்பிடுது. இதுல அம்மா நல்லா ஊட்டுவாங்கனு கம்ப்ளைண்ட் வேற. வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்தா என் இவ்வளவு நேரம், சீக்கிரம் சீக்கிரம்னு என் மனைவி வாசல்ல நிப்பா. அவளை கொண்டுபோய் விட்டுட்டு வர்றதுக்குள்ள மணி 11-ஆயிரும். அப்புறம் நான் சாப்பிட்டுட்டு இருக்கும்போது, மனைவி ஃபோன் பண்ணி, பல வேலைகளை கொடுக்கிறா”.
“அப்படியா அப்படி என்ன பல வேலைகள்?”
“வீடுமுழுக்க வேக்குயூம் பண்றது, டைல் தரைகளை துடைப்பது, செடிகளுக்கு தண்ணி ஊத்தறது, புல்வெட்டறது, ஒட்டடை அடிக்கறது, பெயிண்ட் அடிக்கறது, கடைக்குப் போறதுன்னு பல வேலைகள்.  மதியச்சாப்பாடு சாப்பிடுறதுக்குள்ள மணி 3 ஆயி, பிள்ளைகளை பிக்கப் பண்ணிட்டு வந்து, சப்பாத்தி உருட்டி சப்ஜி செஞ்சு வச்சுட்டு மனைவியை கூப்பிட்டு வரணும்.”
"ஆமா மனைவி கார் என்னாச்சு".
“நான் ரிட்டயர் ஆனதும் அத வித்துட்டா. கேட்டா ஃபுல் சர்விசே ஃப்ரீ சர்வீசா கிடைக்கும்போது எதுக்கு செல்ஃப் சர்வீஸ்னு சொல்லிட்டா.”
“இந்த தோட்ட வேலையெல்லாம் வின்டர்ல இருக்காதுல.”
“ அடப்போப்பா விண்டர்லதான் ஸ்நோ தள்ற வேலை வந்துருதே”
 "அதுசரி இந்த வேலையெல்லாம் இத்தனை நாள் யார் செஞ்சா ?”. “புல்வெட்டறதுக்கு ஸ்நோ தள்றதுக்கெல்லாம் ஆளு இருந்துச்சு, இப்ப எல்லாத்தையும் நிறுத்திட்டா”. அதுல இப்ப ஃபால் சீசன் வேற ஆரம்பிச்சுருச்சா. இலை கொட்டோ கொட்டுனு கொட்டி, பெருக்கி அள்றதுக்குள்ள இடுப்பு ஒடிஞ்சு போயிருது”.
“அப்ப டிவி கீவி பாக்கறதில்லையா?”
“இப்பெல்லாம் டிவி கேக்கறது மட்டும்தான்”
“டிவி கேக்கறதா ஒண்ணும் புரியலயே ?”
“அட என்னப்பா, நான்தான் கிச்சன்ல இருப்பேன்ல, அவங்கள்ளாம்  உட்கார்ந்து டிவி பாக்கும்போது, எனக்கும் நல்லா கேக்கும்”.
அடப்பாவமே,சரிசரி அப்ப காலைல நாலுமணிக்கு எழும்புறது ராத்திரி சீக்கிரம் படுத்துருவீங்களா? “.
“நைட் டிபன்  முடிச்சு, பிள்ளைகளை படுக்க வச்சிட்டு எங்க பெட்ரூமுக்கு போய், காலைப் பிடிக்கணும், அதுவும் அவ காலு அந்தநாளில நல்லா வாழைத்தண்டு மாதிரி இருக்கும். இப்ப  கர்லாக்கட்டை மாதிரி ஆயிப்போச்சு.  ரெண்டு கைல புடிக்க முடியல. அவ புத்தகம் படிக்க, நான் கால அமுக்க தூங்கறதுக்கு மணி குறைஞ்சசது 12 மணி ஆயிரும். அவளுக்கென்ன காலைல 8 மணிக்கு எழுந்தா போதும், எனக்கு நாலு மணிக்கு ஏந்திரிக்கணும்னு கவலை கூட இல்லை”.
“ஐயையோ இவ்வளவு வேலை செய்ற உங்களையா ஒரு வேலையும் செய்யறதில்லைன்னு சொல்றாங்க.
இயேசுவே வேலையில இருக்கும்போதே எனக்கு உயிர் போயிரனும் ஆண்டவரே, ஆமென்.
“என்னப்பா அமைதி ஆயிட்டே, இன்னும் இருக்கு கேளு”.
போதும்னே இதுவே போதும். ரொம்ப தேங்க்ஸ்னே. எனக்கு ரிட்டயர்மென்ட்டும்  வேணாம், ஒண்ணும் வேணாம்.”

http://blogs.sltrib.com

-முற்றும்.


Friday, September 25, 2015

துப்பறியும் சங்கர்லால் !!!!!!!!!!!!!!

படித்ததில் பிடித்தது


“ஹலோ சங்கர்லால்"


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நான் ஆறாவது படிக்கும்போது என்னுடைய வாசிக்கும் ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்த என் அப்பா தேவதானப்பட்டியில் இருக்கும் ஒரு சிறு நூலகத்திற்கு என்னை அழைத்துச் சென்று, அங்கு பணிபுரிந்த பிச்சையிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு அவருடைய பெயரில் புதிய இரண்டு கார்டுகளைப்  ,பதிவு செய்து, புத்தகங்களை கடன் வாங்கிப் படிக்கவும் ஏற்பாடு செய்தார்.
பிச்சை என்னை அரவணைத்துக் கொண்டு, ஒவ்வொரு புத்தகமாக அறிமுகம் செய்தார். விடுமுறை நாட்களில் நூலகத்தில் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்தேன். கோகுலம், அம்புலிமாமாவில் ஆரம்பித்து வாண்டு மாமா, ஆலந்தூர் கோ.மோகனரங்கம் இப்படி படித்துக் கொண்டிருக்கும்போது, பிச்சை அறிமுகம் செய்தவர்தான் தமிழ்வாணன். பின்னர் கல்கண்டை என் வார பாக்கெட் மணியை முழுதும் செலவழித்து வாங்க ஆரம்பித்தேன். அதில் வரும் தொடர்கதைகளையும் கவனமாகப் பிரித்து ஒன்று சேர்த்து பைன்டிங் பண்ணினேன்.

தமிழ்வாணன் அவருடைய புத்தகங்களை, தன் சொந்த பிரசுரமான மணிமேகலை பிரசுரத்தின் மூலம் வெளியிடுவார். பிச்சை எனக்குக் கொடுத்த தமிழ்வாணன் எழுதிய முதல் புத்தகம்தான் "ஹலோ சங்கர்லால்". அந்தச் சமயத்தில் ஒரு சிறந்த மர்ம நாவலை படிக்கும் திருப்தி ஏற்பட்டது. தமிழ்வாணன் அவர்களின் "துணிவே துணை" என்ற சொல்லும் அவருடைய அடையாளமான் கறுப்புக்கண்ணாடியும் தொப்பியும் மிகவும் பிரபலம். தமிழ்வாணன் என்ற பெயரும் அதில் தமிழ் இருப்பதால் எனக்குப்பிடிக்கும்.
அந்த ஹலோ சங்கர்லாலை மீண்டும் படிக்க சந்தர்ப்பம் அமைந்தது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் கழித்துப்படித்தாலும் நன்றாகவே இருந்தது. மணிமேகலைப் பிரசுரம் ஒரு மறுபதிப்பாக சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்களின் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. அவற்றுள் பாகம் 1-ல் முதற்கதையாக உள்ளதுதான் "ஹலோ சங்கர்லால்".
தமிழ்வாணன் எழுதிய மர்மநாவல்களில் வரும் கதாபத்திரங்கள், அப்போது படித்த என்னைப்போன்ற எண்ணற்ற வாசகர்கள் மனதில் திந்து போயின. அவருடைய கதை சொல்லும் யுக்தி தமிழ் எழுத்துக்கு மிகவும் புதியது, மர்மங்களை ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே போய், இறுதியில் பல திடுக்கிடும் உண்மைகளை சங்கர்லால் வெளிப்படுத்தும்போது ஆச்சரியத்தை அளிக்கும். தமிழ்வாணனின் சிறப்பு என்னவென்றால் எந்த ஒரு இடத்திலும் யாராலும் அந்த மர்மத்தை யூகிக்கவே முடியாது.  அடுக்கடுக்காக சம்பவங்கள் நடக்கும்போது சங்கர்லால் அவர்களின் எண்ண ஓட்டத்தையும், எதற்காக சில காரியங்களைச்  செய்கிறார்  என்றும் ஒன்றுமே  புரியாது. குறிப்பாக சங்கர்லால் வெளிநாடுகளில் துப்பறியும் மர்மக்கதைகள் அந்தந்த நாடுகளுக்கே நம்மை அழைத்துச்செல்லும். தமிழ்வாணன் அவர்களை 'மர்மக்கதை மன்னன்' என்று  சொல்வது சாலப்பொருந்தும்.  
 சங்கர்லாலை விட்டுவிட்டு, தமிழ்வாணன் அவர்களே துப்பறிவாளர் அவதாரம் எடுத்து எழுதிய நாவல்கள் சங்கர்லால் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக சோபிக்கவில்லை. ஆனால் அதற்குப்பின் அவர் அதிக நாள் உயிரோடு இருக்கவில்லை.
        சங்கர்லாலின் பாத்திர அமைப்பில் அவருடைய உருவ அமைப்பும் அப்படியே என் மனதில் பதிந்து போனது. அந்தச் சமயத்தில் சங்கர்லால் என்று ஒருவர் இருக்கிறார் என்றே புத்தகம் படித்த என்னைப்போன்ற பல சிறுவர்கள் நம்பினார்கள். சீரிய உடை, கலைந்த சுருள்முடித் தலை, தளர்த்தப்பட்ட கழுத்துப்பட்டை, கிரேப் நடையன்கள் ஆகியவற்றை ஓவியர் ராமு கிட்டத்தட்ட தன் ஓவியம் மூலம் கொண்டுவந்துவிடுவார். அவருடைய அழகிய மனைவி இந்திரா அவள் சங்கர்லாலை 'அத்தான்' என்று கூப்பிடும் இனிமை (என் மனைவிகூட என்னை அத்தான் என்றுதான் அழைப்பாள்) அவர் வேலை செய்யும், மது, மாணிக்கம், மைனா கத்தரிக்காய், அப்புறம் உதவி போலிஸ் கமிஷனர் வகாப் ஆகிய பாத்திரங்களை  முடியுமா?  
“சங்கர்லால் தன் மேஜையின் மேல் கால் மேல் கால்  வைத்து ஒரு கனத்த  புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்” என்று பலதடவை படித்த போது, அது என்ன புத்தகம் என்று அறிய தமிழ்வாணனுக்கு கடிதம் கூட எழுதினேன் நான்.
தமிழ்வாணன் புத்தகங்களில் எனக்கு மேலும் பிடித்தவை அழகான தமிழ்ச்சொற்கள். குறிப்பாக 'ஹலோ சங்கர்லால்' புத்தகத்தில், பேரிடர் சங்கு, நடையன்கள், கழுத்துப்பட்டை, நிலைப்பேழை, அச்சம், வையகப்போர் போன்ற சொற்கள் சிறப்பானவை. அதோடு அவர் புத்தகத்தில் வரும்  பெயர்கள் சிறப்பானவை. குறிப்பாக இந்தப்புத்தகத்தில், நம்பி, பொன்னரசு, இளவரசு, கயல்விழி, பொன்னுத்துரை, அன்னம்மாள், தூயமணி, நாகமாணிக்கம் போன்ற பெயர்களைச் சொல்லாம்.
சுஜாதாவுக்கு முன்னோடியாக அச்சில் சில வித்தைகள் செய்தவர் இவர். அது மர்மக் கதைக்கு விறுவிறுப்பு ஏற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக உடனே தொலைபேசி அலறியது என்று ஒரு வரி.அதற்கு அடுத்த வரியில் 'அதில்' என்று ஒரே வரி, அதற்கு  அடுத்த வரியில் 'யாரோ' என்றும் அதற்கு அடுத்த வரியில் "முகவரி கிடையாது" என்றும் வரும்.
தமிழ்வாணன் வாழ்க்கைக்குறிப்பு:
தமிழ்வாணன்
தமிழ்வாணன் அவர்களின் இயற்பெயர் லட்சுமணன், ராமநாதன் செட்டியார். இவர் செட்டிநாட்டுப் பகுதியில் 1921ல் பிறந்தவர். தேவகோட்டை என்பது அவர் சொந்த ஊர். கல்கண்டு என்ற அவரது பத்திரிகை அந்தக் காலத்தில் மிக வித்தியாசமான முயற்சி. பல துணுக்குகளின் தோரணம் அது என்று சொல்லலாம். அவர் ஆரம்பித்த மணிமேகலைப்பிரசுரம் இன்னும் சிறப்பாக செயல்படுகிறது. அவருடைய இரு மகன்களான லேனா தமிழ்வாணன் மற்றும் ரவி தமிழ்வாணன் அதனை திறம்பட நடத்தி வருகிறார்கள்.
லேனா தமிழ்வாணன்
தமிழ்வாணன் பல வெளிநாடுகளுக்குச் சென்று அதன் பின்னணியில் அவருடைய கதைகளை அமைத்தது அப்போது மிகவும் புதியது.
தமிழ்வாணன் தமது 1977ல் 56ஆவது வயதில் உயிர் நீத்தார்.
மணிமேகலைப் பிரசுரம் மூலமாகவும் அவருடைய புத்தகங்கள் மூலமாகவும் தமிழ் உலகில் அவர் நீண்ட நாள் வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை.

முற்றும்

Friday, September 18, 2015

வாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் !!!!!!!!!!!!!!!

வாட்ஸ் அப்பில்  A ஜோக்ஸ் !!!!!!!!!!!!!!!
வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6
சர்தார் ஜி
சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என் மனைவியை முத்தமிடுவேன், நீ எப்படி?
நண்பன்: தினமும் நீ அலுவலகம் போனபின் நான் உன் மனைவியை முத்தமிடுவேன்.
சர்தார்: ஹைய்யா, நான் தான் ஃபர்ஸ்ட்.

      ஒரு சர்தார்ஜிக்கு ஒரு பார்ட்டிக்கு அழைப்பு வந்தது. அழைப்பில் "Pink Tie Only" என்று இருந்தது. அவனும் பார்ட்டிக்கு போனான். ஆனால் அவனுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அங்கு வந்தவர்கள் சட்டையும் பேண்ட்டும் கூட போட்டிருந்தாங்க.

Medieval Clip Art

அரசனின் நண்பன் :
         போருக்குப் போகுமுன் அரசன் தன் அழகான மனைவியை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டு, தன் நெருங்கிய நண்பனை அழைத்துதான் அவனிடம் அந்தச் சாவியைக் கொடுத்து, "நண்பா ஒருவேளை நான்கு நாட்களுக்குள் நான் வரவில்லையென்றால், அறையை திறந்து என் மனைவியை நீ எடுத்துக்கொள்" என்றான். சொல்லி விட்டு தன் குதிரையில் யுத்தத்திற்கு கிளம்பினான். ஒரு அரை மணி நேரத்தில் பின்னர் பின்னால் வேகமாக குதிரையில் யாரோ வருவது போல் தெரிந்தது. யாரென்று பார்த்தால் அரசனின் நண்பன் தான் அரக்கப்பரக்க வந்தான். என்ன விஷயம் என்று கேட்டால்,
"அரசே இந்தச் சாவி தப்பான சாவி" என்றான்.

எந்த மெஷின்?
     ஒரு நாற்பது வயது மனிதன், ஜிம்மில் உள்ள டிரைனரிடம் கேட்டான். ஒரு அழகான பெண்ணை மயக்க வேண்டுமென்றால் எந்த மெஷினை பயன்படுத்த வேண்டும் என்று. அதற்கு டிரைனர் சொன்னான், வெளியே இருக்கும் ATM மெஷினை.

ATM in Brazil


கணவன்: உனக்கு தசரத ராஜவைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?
மனைவி: ஆமா கேள்விப்பட்டிருக்கிறேன்.
கணவன்: அவருக்கு மூன்று மனைவிகள்?
மனைவி: ஆமா அதுக்கென்ன?
கணவன்: அப்ப நான் இன்னும் இரண்டு மனைவிகளைக் கட்டிக் கொள்ளலாம்.
மனைவி: உங்களுக்கு இந்திராணி தெரியுமா?
கணவன்: சரி சரி விடுவிடு.

Indrani

வாழ்க்கையின் பின்னல் சுழற்சி:

பாஸ் செக்ரடரியைக் கூப்பிட்டு, இந்த வீக்கென்ட் பிஸினெஸ் டிரிப் இருக்கு, ரெடியாயிரு ரொம்ப நாளாச்சு.
செக்ரட்டரி தன் கணவனைக் கூப்பிட்டு, நான் என் பாஸோடு பிஸினெஸ் டிரிப் போகிறேன். நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கணவன் தன் கேர்ள் பிரண்டைக் கூப்பிட்டு, என் மனைவி இந்த வீக்கென்ட் ஊரிலில்லை, நீ வீட்டுக்கு வந்துரு, ரொம்ப நாளாச்சு.
கேர்ள்ஃபிரண்ட் தான் வீக்கென்ட் டியூஷன் எடுக்கும் பையனைக் கூப்பிட்டு, சாரி இந்த வீக்கென்ட் டியூஷன் கிடையாது.
"பையன் பாஸைக் கூப்பிட்டு, அப்பா ரொம்ப நாளைக்கப்புறம் நான் வீக்கென்ட் ஃப்ரீ, உங்களோடு அதனை செலவழிக்க விரும்புகிறேன்.
பாஸ் உடனே செக்ரட்டரியை கூப்பிட்டு, புரோகிராம் கேன்சல்ட்.
செக்ரட்டரி கணவனைக் கூப்பிட்டு, பிஸினெஸ் டிரிப் கேன்சல்ட்.
 கணவன் கேர்ல் ஃபிரண்டைக் கூப்பிட்டு, "மீட்டிங் கேன்சல்ட்.
 கேர்ல்ஃபிரண்ட் பையனைக் கூப்பிட்டு, சாரி வழக்கம்போல் டியூஷன் உண்டு.
பையன் அப்பாவைக் கூப்பிட்டு, சாரி டாட் எனக்கு டியூஷன் இருக்கு" 
பாஸ் செக்ரட்டரியைக் கூப்பிட்டு.......

 மாப்பிள்ளை வீட்டார்:பொண்ணு புடிச்சிருந்தாதான் சாப்பிடுவோம்.
பெண்வீட்டார் : பொண்ணு புடிச்சி ருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்.

தொடரும் >>>>>>>>>>>>>>>>>>>>


Tuesday, September 15, 2015

தலையை சீவி ,குடலுருவி ரத்தப்பொட்டு வைக்கும் மதுரைக்காரன் !!!!!!!!!!!!!!

சிநேகாவின் காதலர்கள் – விமர்சனம் Snehavin Kathalargal Movie Review

நண்பர் முத்துராமலிங்கன் இயக்கிய "சிநேகாவின் காதலர்கள்" என்ற  திரைப்படத்திற்காக நண்பர் பிரபாகர் எழுதி இசையமைத்த பாடல் இது. இந்தப்படத்தைப்பற்றியும் நண்பர் முத்துராமலிங்கனைப் பற்றியும், படத்தைப் பார்த்துவிட்டு தனியாக எழுதுகிறேன். இப்போது பாடலைக் கேளுங்கள்.


பாடலின் பின்னணி:

படத்தை பார்ப்பதற்கு எனக்கு இன்னும் சந்தர்ப்பம் வரவில்லை. படத்திற்கு இது ஒரு டைட்டில் பாடலாக வருகிறது என்று நினைக்கிறேன். மதுரையின் அருமை பெருமைகளை மட்டுமல்ல அட்டூழியங்களையும் அழகாகப் படம் பிடிக்கிறது பாடல். ஒரு பாடலுக்குள் ஒரு மாநகரை அடக்க முடியுமாஎன்று கேட்டால், முடிந்திருக்கிறது என்று இந்தப்பாடலைக் கேட்டால் சொல்லமுடியும்.

பாடலின் இசையமைப்பு:

மதுரையைப் பற்றிய துடிப்பான பாட்டு என்றாலும் இதற்கு கிராமிய இசைக்கருவிகளைப் பயன்படுத்தாது, மாடர்ன் கருவிகளையே பயன்படுத்தியிருக்கிறார் பிரபாகர். துள்ளல் இசைக்கு பேட் டிரம்ஸை அதிகமாக பயன்படுத்திவிட்டு பிரீலூட், இண்டர்லூட் BGM ஆகியவற்றுக்கு Keyboard -ன் விதவித ஓசைகள் பயன்பட்டிருக்கின்றன. பேஸ் கிட்டாரும் ரிதம் கிட்டாரும் பாடல் முழுதும் இசைக்கின்றன. அதோடு பாடலுக்கு முன்னாலும் இசையிலும் பிரபாகரின் குரலில் தொகையறு வருகிறதும் மிக அழகாக இருக்கிறது.
பாடலின் குரல்: 


இதனைப் பாடியவர் ஆலாப் ராஜீ. தொழில் முறை பாடகர்கள் தவிர, MSV, இளையராஜா, AR.ரகுமான் போன்ற நிறைய இசையமைப்பாளர்கள் நிறையப் பாடல்களை பாடியுள்ளார்கள் என்று நமக்குத் தெரியும்.
கமல்ஹாசன் தொடங்கி ஒரு சில நடிகர்களும் கூட அவ்வப்போது படுகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து ஒரு இசைக்கருவி வாசிப்பவர் ஒரு பாடகராக பரிணமிப்பது ரொம்பப்புதுசு. திரையிசை ரெக்கார்டிங்களுக்கு பேஸ் கிட்டார் வாசிக்கும் ஆலாப் ராஜீ பாடகரானது ஒரு அதிசய நிகழ்வுதான். ஆனால் அவர் குரல் மிகவும் புதிதாகவும் இனிமையாகவும் ஒலிகிறது. அது மட்டுமல்ல தற்காலப் பாடகர்கள் வரிசையில் இவருடைய தமிழ் உச்சரிப்பு சுத்தமாக இருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. இவர் பாடிய என்னோமோ ஏதோ ( கோ)  ,அகிலா அகிலா ( OKOK) எங்கேயும்   காதல் போன்ற பல பாடல்கள் சூப்பர்ஹிட். வேல்முருகன், மாணிக்க விநாயகம் போன்ற கிராமியப் பாடல்கள் பாடுபவர்களை விட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்று நினைத்து பிரபாகரிடம் கேட்டபோது, வேண்டுமென்றேதான் குரலும் இசையும் அப்படி அமைத்ததாகக் கூறினார். எனவேதான் இது மிகவும் Fresh ஆக ஒலிக்கிறது. மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.

பாடலை எழுதியவர்:

Prabahar 
இப்பாடலை எழுதியவர், இசையமைத்த பிரபாகர்தான். பன்முகத்திறமை கொண்ட இவரின் பல திறமைகள் வெளிப்பட இன்னும் சரியான களம் அமையவில்லை என்பது என் கருத்து. பிரபாகர் அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு ஒரு வருட சீனியர். நான் இளங்கலை ஆங்கில இலக்கியம் படிக்கும்போது அவர் பொருளாதாரம் படித்தார். பொருளாதாரத்தில் எந்த ஆதாரத்தையும் உணராத அவர், தன கனவைத் துரத்தும் முயற்சியில், முதுகலை தமிழ் இலக்கியத்தில் சேர்ந்ததில் எனக்கு எந்தவித ஆச்சரியமில்லை. அதன்பின் M.Phil -ஐயும் முடித்து அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறையின் பேராசிரியராய் சேர்ந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தற்போது விசுவல் கம்யூனிகேஷன் துறையையும் சேர்த்துப் பார்ப்பதோடு சமீபத்தில் இசையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றுவிட்டார்.
அவர் கல்லூரியில் படிக்கும்போது, தன் ஓவியத்திறமை, ரங்கோலி, கவிதை, பாடுவது என்ற பல நுண்கலைகளில் திறமை பெற்றிருந்ததோடு மட்டுமல்லாமல் பல கல்லூரி பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடக்கும் போட்டிகளிலும் முதல் பரிசை தட்டியிருக்கிறார். அவர் +2 படிக்கும்போதே ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசை வென்றவர்.
Myself with , Praba and Vanaraj at American College.

எங்கள் கல்லூரியின் இசைக்குழுவில் பாடியதோடு முழு இசை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவது இவர்தான். அதுதவிர இடைவேளையில் பகுரல்களில் மிமிக்கிரை செய்தும் அசத்துவார். இத்தனை திறமைகளையும் உள்ளடக்கியது ஒருவர்தான் என்றால் நம்ப முடியாது. சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட இவர் இருக்கும் இடத்தில் சிரிப்பும் களிப்புமாக இருக்கும்.

எனக்குத் தெரிந்து ஒருவேளை அமெரிக்கன் கல்லூரி வேலை கிடைக்காமலிருந்தால், சென்னைக்கு வந்து பெரிய இசையமைப்பாளராய் வந்திருக்க முடியும். கல்லூரி வேலை அவரை மதுரையிலேயே கட்டிப்போட்டுவிட்டது. இப்போ பிரபல பேச்சாளர் நண்பர் பாரதிகிருஷ்ண குமார் இயக்கிய திரைப்படமான “என்று தணியும்” படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

பாடல் வரிகள்

கண்ணகியின் கால் நகையை 
கழட்டிவிட்ட ஊர் இதுங்க 
புன்னகையில் பூமியை (புன்னகையில் பொங்கல் வெச்சு பூவைச் சுத்தும் ஊரிதுங்க )
புரட்டிவிட்ட மண்ணு இதுங்க
வீரம் விளைஞ்ச மண்ணு 
ஈரம் நிறைஞ்ச மண்ணு 
காலம் நிறைஞ்ச மண்ணு கதையை நீ கேளு நின்னு 
பாண்டியர் ஆண்டதிந்த மண்ணுங்க 
பண்பாடு நிறைஞ்சதிந்த மண்ணுங்க  

ஒத்துமையாய் இருந்துக்கிட்டா ஊரு கூடி தேரிழுத்து 
பொங்கலுமே நாங்க வைப்போமே
ரெண்டுபட்டா தலையை சீவி குடலெடுத்து மாலை போட்டு 
ரத்தத்தில பொட்டு வைப்போமே 
மானம்தான் எங்களுக்கு உசுரு, அட  
மத்ததெல்லாம் எங்களுக்கு கொசுறு 
வேலைவெட்டி ஏதுமில்லை நிக்கக்கூட நேரமில்லை  
ஜம்பத்துல நம்பர் ஒன்னு மருத

கோயில்கடை, விளக்குத்தூணு மீனாட்சி திருக்கோவிலு 
நாயக்கர் மஹாலைச் சுத்தலாம் 
அழகர்கோவில் தீர்த்தமாடி ஆனைமலை ஏறி வந்து 
தெப்பக்குளம் நீந்திப்போகலாம் 
பாண்டிமுனி காவல்காக்கும் ஊரு, அட 
பக்கத்துல ஐயனாரு பாரு 
குலசாமி பல இருக்கு ஆனாலும் பல வழக்கு 
சண்டியர்கள் சலம்புகிற மருத 

கோனார்மெஸ் கொத்துக்கறி அம்மாமெஸ் அயிரை மீனு 
அத்தனையும் தின்னு பார்க்கலாம் 
ரோட்டோரம் கம்மங்கஞ்சி ஜில்லு தான் ஜிகர்தண்டா 
பருத்திப்பாலை ருசியும் பார்க்கலாம் 
தூங்காம முழிச்சிருக்கும் மருத, அது 
யாருக்குமே அடங்காத குருத 
புழுதிக்காத்து வீசினாலும் கோடைவெயில் கொளுத்தினாலும் 
மல்லிகையின் மணம் கமழும் மருத  


பாடல் வரிகளில் தான் வளர்ந்து,  இருந்து,  வாழ்ந்து கொண்டு அனுபவிக்கும்மதுரையின் ஒவ்வொரு சிறப்பையும் அருமையாக கொண்டு வந்து திருக்கிறார். பல கிராமத்து மக்கள் மதுரையை இன்னும் "மருத" என்றே உச்சரிக்கிறார்கள். அதனால்தான் இந்தப் பாடலிலும் மதுர என்பதை மருத என்றே வருகிறது. அது பகடியாகவும் ஒலிக்கவில்லை என்பது என் கருத்து.
பாடலை அறிமுகப்படுத்தும் முதல் வரிகளிலேயே "கண்ணகியின் கால் நகையை கழட்டிவிட்ட ஊர் இது" என்று ஆரம்பிக்கும்போதே கேட்கும் நமக்கு ஒரு புன்சிரிப்பை வரவழைப்பதோடு மேலும் உன்னிப்பாக கேட்கத்தூண்டும் உற்சாகம் பற்றிக் கொள்கிறது. அடுத்த வரிகளில் “புன்னகையில் பூமியையே புரட்டிவிட்ட மண்ணு இது" என்ற முதலிலும் மறுபடியும் சரணம் முடிந்து வரும்போது, "புன்னகையில் பொங்கல் வெச்சு, பூவைச்சுத்தும் ரிதுங்க" என்று சொல்லும்போது, “ஏய் நாங்க மதுரைக்காரங்கப்பூ, ஜாக்கிரதை”, என்று எச்சரிக்கைவிடுவது போல் வருகிறது.   
ஆனால் அதற்கடுத்த வரிகளில், மதுரையில் வீரம் மட்டுமல்ல ஈரமும் உண்டு, பாண்டியன் ஆண்ட பண்பாடு நிறைஞ்ச மண்ணுங்க  என்று சொல்லும்போது கேட்கும் மதுரைக்காரர்களுக்கு நிச்சயம் பெருமையாக இருக்கும். எனக்கும் அப்படியே. அதோடு சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியில் மதுரைக்கு அருகில்  தொன்மையான நாகரிகம் கண்டுபிடிக்கப் பட்டதிலிருந்து எங்களுக்கொல்லம் அளவிட முடியாத பெருமைதான்.
முதல் சரணத்தில், “ஒற்றுமையாயும் இருப்போம், கோவம் வந்தால் தலையை சீவி, குடலை உருவி மாலை போட்டு ரத்தப் பொட்டு வைப்போம்”, என்று மதுரையின் கேரக்டரை உணர்த்தியிருக்கிறார். அதான் உங்களுக்கும் தெரியுமே. "மானம் தான் எங்களுக்கு உசுரு அட மத்ததெல்லாம் எங்களுக்கு" என்று சொல்லிவிட்டு ஒரு சிறு இடைவெளி வரும்போது ஐயையோ '' வில் ஆரம்பிக்கும் ஒரு சரளமாக பயன்படுத்தும் மதுரைச் சொல் வரப்போகிறது என்றென்னும் போது 'கொசுறு' என்று அதை மாற்றி விட்டிருக்கிறார் பிரபா, அதைக் கேட்கும்போது வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். “வேலை  வெட்டி ஏதுமில்லாவிட்டாலும் மிகவும் பிஸியாக இருப்பார்கள், ஜம்பத்தில் இவர்களை யாரும் அடிக்க முடியாது”, என்று அடுத்த வரிகளில் சொல்லுகிறார்.
2-ஆவது சரணத்தில் மதுரையின் அடையாளங்களான, மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், விளக்குத்தூண், அழகர் கோவில், ஆனைமலை, தெப்பக்குளம்”, ஆகியவற்றை சொல்லுவதோடு, மதுரையின் உக்கிரமான காவல் தெய்வமான பாண்டி முனியையும் சொல்கிறார். ஆஹா, ஒவ்வொரு இடத்திலும் எனக்கு நடந்த பழைய சம்பவங்கள் வெள்ளமாகப்புரப்பட்டு வந்தன.
3-ஆவது சரணத்தில், பல ஆண்டுகளாக மதுரையின் சுவைமிகுந்த உணவுக்கு கட்டியம் கூறும், கோனார் மெஸ், அம்மா மெஸ், அயிரை மீன் குழம்பு, கம்பங்கஞ்சி, ஜிகர்தண்டா, பருத்திப்பால் ஆகியவற்றைச் சொல்லும்போது, நாக்கில் மிகுந்த ஜலம் ஊறி உடனே மதுரைக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றியது, அடடா எத்தனை முறை உண்டாலும் சலிக்காத சுவை மிகுந்த மதுரை உணவுக்கு நிகர் அவை மட்டும்தான்.
“எங்கள் தூங்கா நகரில் புழுதிக்காத்து வீசும், கோடை வெயில் கொளுத்தும் ஆனாலும் ஒருபுறம் மல்லிகையின் மணம் கமழும்”, என்று பெருமையுடன் சொல்லி முடித்திருக்கிறார்.
மதுரையைப்பற்றி இப்படி ஒரு பாடல் இதுவரை வந்ததுமில்லை. நாணமும் வீரமும் சரி விகிதத்தில் கலந்துள்ள மதுரைப் பெண்களைப்பற்றி தவிர கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இந்தப்பாடலில் கொண்டுவந்துவிட்டார். பாடல் வரிகளும் நாள் முழுவதும் முணுமுணுக்க வைக்கும் இலகுவான மெட்டும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு மனதில் இடம் பிடிக்கின்றன. இசையமைப்பாளரே பாடல் வரிகளையும் எழுதுவதால் வரும் அனுகூலம் இது.  
இசையில் மட்டுமல்லாது திரைக்கதை இயக்கத்திலும் திறமை வாய்ந்தவர். மதுரையில் ஒரு திரைப்படக் கல்லூரியை ஆரம்பிக்க வேண்டும் எனும் அவர் கனவு விரைவில் நிறைவேற என் வாழ்த்துக்கள்.
நண்பர் பிரபா இன்னும் இசைவானில் பல பாடல்கள் தந்து நட்சத்திரமாய் ஜொலிக்க பரதேசியின் வாழ்த்துக்கள்.  

-முற்றும்.