Thursday, October 31, 2013

ராயல் அஃபயர் (A Royal Affair)

        2012ல் வெளியாகி பாராட்டுகளைக்குவித்த இந்த டேனிஸ் மொழிப்படம் ஒரு வரலாற்றுச்சித்திரம் (Historical Drama). போடில் ஸ்டீன்சென் (Bodil Steensen) எழுதிய பிரின்சஸ் ஆஃப் பிளடெட் (Princess of blodet ) என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.
King Christian VII
        





















 18-ஆம் நூற்றாண்டில் டென்மார்க்கை ஆண்ட ஏழாவது கிறிஸ்டியன் (King Christian VII) சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவன். நாட்டை ஆள அடுத்த வாரிசு வேண்டுமே என்று நினைத்த டேனிஷ் அரசவை, அப்போது இங்கிலாந்தை ஆண்ட அரசர், ஜார்ஜ் III அவர்களின் தங்கை, இளவரசி கேரலின் மெட்டில்டாவுக்கு மணம் முடித்து வைத்தது. வந்த ஒரு சில நாட்களில், தன் கணவனின் குரங்கு சேட்டைகளைப் பார்த்து நொந்துபோகிறாள் அரசி. இவ்வாறிருக்க நாட்டின் தேவைப்படியும் சட்டப்படியும் ஒரே  ஒரு முறை அவர்கள் படுக்கையில் இணைய, அரசி கர்ப்பமடைகிறாள்.
caroline matilda of wales
        
இதற்கிடையில், அரசனை குணப்படுத்தவும், அரசிக்கு உதவவும் ஸ்ட்ருவன்சீ  (Johann Friedrich Struensee) என்ற மருத்துவர் அரசு மருத்துவராக (Royal Physician) நியமிக்கப்படுகிறார். சிவப்புச் சிந்தனையில் வளர்ந்திருந்த அந்த மருத்துவருக்கு  நாட்டின் நிலைமையையும், அரச குடும்பத்து அவலங்களையும் தெரிந்துகொள்ள வெகு நாட்கள் தேவையிருக்கவில்லை. அரசரின் பெயரில் ஆட்சி நடத்துவது அரசவைப் பிரபுக்கள்தான் (Royal Court) என்றும் தெரிந்துவிடுகிறது.
        அரசரின் உற்ற தோழனாக ஆகிற மருத்துவர் சில சீர்திருத்தங்களை செய்ய அரசனை பயன்படுத்துகிறார். தனிமையில் வாடி நொந்துகொண்டிருந்த அரசிக்கு மருத்துவரிடம் காதல் பிறந்து, கள்ளத் தொடர்பு ஆரம்பிக்கிறது.
        அரசனின் உதவியால் முழு அரசவையைக் கலைத்துவிட்டு, அரசனின் பெயரில் ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றிய மருத்துவர், பல சீர்திருத்தங்களை அரசியின் ஆலோசனையோடு நடைமுறைப்படுத்துகிறார். இதற்கிடையில், அவர்களின் கள்ளத் தொடர்பு அரசல் புரசலாக வெளியே தெரிய, விழித்துக் கொண்ட பிரபுக்கள் ஒன்று சேர்ந்து, அதைச்சாக்காக வைத்து மருத்துவருக்கு மரண தண்டனை கொடுத்து அரசியை நாடு கடத்துகின்றனர். சீர்திருத்தங்கள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு, மீண்டும் சுரண்டலில் ஈடுபடுகின்றனர்.
        மருத்துவருக்கும் அரசிக்கும் பிறந்த 2ஆவது பெண் குழந்தையும் முதலில் பிறந்த ஆண் குழந்தையும் அவரிடமிருந்து பிரிக்கப்படுகிறது.
        அரசி தன்னுடைய சூழ்நிலையையும், எதனால் இந்தத் தொடர்பு ஏற்பட்டது என்பதனையும் விளக்கி எழுதி, சிறிது வயதுக்கு வந்த பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு இறந்து போகிறாள்.
Frederick V1 of Denmark
        அரசியின் மூத்தமகன் அதனை முற்றிலும் புரிந்து கொண்டு, அப்பாவான அரசரை தன் வசப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக நாட்டைத்திருத்த முயல்கிறான். அத்தோடு திரைப்படம் முடிகிறது. தன் பதினாறாவது வயதில் முடிசூட்டிக் கொண்ட அவன் ஃபிரடெரிக் VI   என்ற பெயரில் நீண்ட அரசாட்சி செய்து, ஸ்ட்ருவன்சி கொண்டுவந்த அனைத்து சீர்திருத்தங்களையும் மீண்டும் கொண்டுவந்ததோடு, மேலும் பலவற்றைச் செய்து அழியாப்புகழ்பெற்றான் என்பது வரலாறு.
        நிக்கோலஜ் ஆர்செல் (Nikolaj Arsel) இயக்கிய இந்தப்படத்தில் மேட்ஸ் மிக்கேல்சென் (Mads Mikkelsen) ஸ்ட்ருவன்சியாகவும், அலிசியா விக்கன்டர் (Alicia Vikander) கேரலினாவாகவும், மிக்கல் ஃபோல்ஸ்கார்ட் (Mikkel Folsgaerd) கிறிஸ்டிய னாகவும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தனர்.  இம்மூவரும், அப்படியே அந்தக் காலக்கட்ட சூழ்நிலையை தம்முடைய இயல்பான நடிப்பினால் கண்முன் கொண்டு வருகின்றனர். திரைக்கதை அமைக்க பத்து வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தப்படம் ஜென்ட்ரோப்பா (Zentropa) என்ற புகழ்வாய்ந்த தயாரிப்பாளரின் முயற்சியில் டென்மார்க், ஸ்வீடன் மற்றும் செக் குடியரசின் கூட்டுத் தயாரிப்பில் 46 மில்லியன் டேனிஷ் குரோனர் செலவில் எடுக்கப்பட்டது.
        இங்கிலாந்து விமர்சகர் மார்க் கெர்மோட் (Mark Kermode) அவர்களால் 2012-ன் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட இப்படம் பல விருதுகளை குவித்தது.
1.  பெர்லின் திரைப்படவிழாவில் மிக்கேல் ஃபோல்ஸ்கார்ட் (கிறிஸ்டியன் VII ஆக நடித்தவர்) சிறப்பு நடிப்புக்கான சில்வர் பேர் (Silver Bear) பெற்றார்.
2.  நிக்கோலஜ் அதே விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றார்.
3.  2012 டால்லஸ் ஃபோர்ட் வெர்த் -திரைப்பட விமர்சகங்களின் கூட்டமைப்பின் "சிறந்த வெளிநாட்டு மொழிப்பட" விருது.
4.  2012 ஃபீனிக்ஷ் திரைப்பட விமர்சகர்களின் கூட்டமைப்பில் "சிறந்த காஸ்ட்டியூம் டிசைன்" விருது.
5.  சிறந்த ஆடையமைப்புக்காக மானன் ரஸ்மியூசன் விருது (Manon Rasmussen) பெற்றார்.
6.  2012 -வாஷிங்டன் டி.சி - சிறந்த வெளிநாட்டு மொழிப்படம்
7.  2013 -ஆஸ்கார் அவார்டு - நாமினேட்டட்
8.  2013 -கோல்டன் குளோப் அவார்ட் - நாமினேட்டட்.

        -- திரைப்பட ரசிகர்கள் கண்டிப்பாய் பார்த்து மகிழ வேண்டிய படம்.

இனிய தீபத்திருவிழா நல்வாழ்த்துக்கள்...

 இந்த நன்னாளில் இருளை நீக்கும் ஒளியாக இறைவன், உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் பிறக்கட்டும்.

Monday, October 28, 2013

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்...


ஆப்பிள் பிக்கிங்



        தொழிலாளர் தினம் (Labor Day) செப்டம்பர் 2, 2013 திங்களன்று வந்தது. மூன்று நாளில் லீவில், அங்கே இங்கே போகலாம் என்று யோசித்து எங்கும் போகாமல் 2 நாட்கள் ஓடிவிட்டது. திடீரென்று ஞாயிறு இரவுதான்  ஆப்பிள் பிக்கிங் ஞாபகம் வந்து, காலையில் எழுந்து கிளம்பினோம்.
        முழுக்குடும்பமும் 2 வண்டிகளில். இந்த சமயம் நான் என் பெரிய ரதத்தை எடுத்துக்கொண்டேன். (மதுரைத்தமிழனுக்கு மட்டும்தான் ரதம் எடுக்க முடியுமா? நாங்களும் எடுப்போம்ல).

        லாரன்ஸ் ஃபார்ம் என்ற அந்த பழத்தோட்டம் நகருக்கு வெளியில் அப்ஸ்டேட்டில் ஒருமணி நேரத்தொலைவில் இருக்கிறது. ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தை தாண்டி, நியூஜெர்சி மாநிலத்தின் ஒரு பகுதியை கிராஸ் செய்து பயணம் செய்தால், ஒரு குன்றுகள் சூழ்ந்த பகுதியில் வந்தது.
        ஏற்கனவே பலசமயம் அங்கு வந்திருந்தாலும், எங்களில் சிலருக்கு அதுதான் முதல் தடவை. பார்க்கிங் செய்துவிட்டு பழவேட்டைக்குக் கிளம்பினோம்.நாங்கள் வருவது முன்னரே தெரிந்ததோ என்னவோ, "பழங்களில் ஒன்றிரண்டு சாம்பிள் மட்டும் சாப்பிடவும். வாங்கப்போவதில்லை என்றால் பறிக்க வேண்டாம்" என புதிதாக போர்டு ஒன்று முளைத்திருந்தது.
        மேப்பை எடுத்துக்கொண்டு சென்றபோது முதலில் வந்தது, “மெக்கின்டோஷ்” ஆப்பிள் தோட்டம். செவ்வரி ஓடிய பச்சை நிறத்தில் காய்த்துத்தொங்கியது. எல்லாமே குட்டை மரங்கள்.

 பறிக்காமலே மரத்திலேயே ருசிபார்க்கும் அளவுக்கு பக்கத்தில் தொங்கின. கடித்தால் புளிப்பு உச்சிக்கு ஏறியது. என்னடாது நமக்கு வயசாயிப் போச்சா, பல் இவ்வளவு கூசுகிறதே என்று கவலையில் "ஙே" (நன்றி ராஜேந்திரகுமார்) என்று முழித்துக் கொண்டு நின்றேன். அப்போது தற்செயலாய் சிறிய சக்கர வாகனத்தில் ரோந்து வந்த இளைஞன், அவை இன்னும் பழுக்கவில்லை என்று சொன்னான். அப்பாடா இது பல் பிரச்னையில்லை என்று தெரிந்து மகிழ்ச்சியுடன் கடந்து சென்றேன்.

        அடுத்து வந்தது திராட்சைத் தோட்டம். நான்கைந்து வகைகள் இருப்பதாக மேப் சொன்னது. அபிஷா  உள்ளே சென்று மறைந்திருந்த திராட்சைக் கொத்துகளை கிள்ளி வந்தாள்.

 பச்சை மற்றும் கறுப்பு நிறத்திராட்சைகள், லேசாக சாம்பல் பூத்து இருந்ததை, துடைத்துவிட்டு உண்டேன். விதை இல்லேன்னா இன்னும் நல்லாருக்கும் என நினைத்துக் கொண்டேன். இந்த விவசாய விஞ்ஞானிகள்  எப்படியெல்லாம் நம்மை சுகவாசிகளாக ஆக்கிவிட்டார்கள் பாருங்கள்.

        அதற்கடுத்த பகுதியில் வரிசை வரிசையாக காய்கறித்தோட்டம் இருந்தது. லாரன்சில் மட்டுமே காய்கறித்தோட்டம் உண்டு. வெள்ளை, பச்சை மற்றும் ஊதா நிற முட்டைக்கோஸ்கள், ராட்சத கத்தரிக்காய்கள், காலிஃபிளவர்கள், லேட்டூஸ்  மற்றும் பிராக்கோலி இருந்தன. இதில் கத்தரிக்காய் தவிர எல்லாவற்றையும் பச்சையாக சாப்பிடலாம் என்றாலும், பிராக்கோலி மட்டும் கிள்ளிச்சாப்பிட்டேன்.

        அதன் பக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த பீச் மரங்கள். விரைந்து சென்றால் மரத்தில் மருந்துக்குக் கூட ஒரு பழம் இல்லை. எல்லாமே உதிர்ந்து போயிருந்தது. ஒவ்வொரு குட்டை மரத்தின் அடியிலும் ஐம்பதுக்கும் மேல் கொட்டிக்கிடந்தன.

 என்னடா இது, இலையுதிர்க்காலம் என்றுதான் நினைத்தேன் இது பழமுதிர்க்காலம் என்று அப்போதுதான் தெரிந்தது. கீழே இருந்த பழங்களும், ஃபிரெஸ்ஸாக இருப்பது போல் தெரிந்து எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு விரைந்து வந்த ரூத், "பேசாம வாங்க அது வேணாம்" என்றாள். இந்த இருபது வருட மணவாழ்க்கையில், என் இல்லத்தில் நடப்பது மட்டுமின்றி, உள்ளத்தில் இருப்பதையும் கண்டு பிடித்து விடுகிறாள் என் மனைவி. விடுதலை வேட்கையில் என் தோள்கள் தினவெடுத்தாலும், “கனவோடு நிறுத்திக்கொள் கணவா”, என்பதைப்போல் என் மனைவி பார்க்க, ஒரு சிங்கம் ஆடாக மாறி பிராக்கோலி மேயச் சென்றது.

        பிராக்கோலி தோட்டத்தின் முடிவில் மக்காச்சோளத் தோட்டம் (Sweet Corn) இருந்தது. நன்கு விளைந்த ஒன்றிரண்டினை என் மனைவி சோகை நீக்கித்திர, கடித்தால் பால் இறங்கியது. வயிற்றில் திராட்சைச்சாறில் பிராக்கோலி மிதக்க, சோளச்சாறு இனிப்பாய் இறங்கிக் கலந்து வயிற்றை நிரப்பியது. மறுபுறம் புடுங்கினால்   என்ன செய்வது என்ற பயமும் அவ்வப்போது  வந்து சென்றது.

        மறுபகுதியில் ஏசியன் பேர் (Asian Pear) என்று சொல்லக்கூடிய நம்மூர் பேரிக்காய்கள் இருந்தன. தவ்விப்பார்த்தேன். ம்ஹூம் எட்டவில்லை. மறுபடியும் முயற்சி செய்ய குதிங்காலில் மளுக்கென்றது. "சீச்சி இந்தப்பழம் புளிக்கும்" என்று வந்துவிட்டேன்.

        அதன் பக்கத்தில் வகை வகையான தக்காளி, பீன்ஸ், நம்ம ஊர் கத்தரிக்காய், குடைமிளகாய், ஸ்குவாஷ், பச்சை மிளகாய், பஜ்ஜி மிளகாய் (பேர் தெரியலை) ஆகியவை இருந்தன.
        ஸ்ட்ராபெர்ரி சீசன் முடிந்துவிட, ராஸ்பெர்ரி இருந்தது. ஆனால் என்னைப்போன்ற நரிகள் வருமென்பதால், வேலி போட்டு வைத்திருந்தார்கள். விலை அதிகமல்லவா, செர்ரிப்பழங்களும் அப்படியே.
        கடந்துபோனால், இன்னும் பலவித ஆப்பிள்கள் இருந்தன. மனமிருந்தாலும் வயிற்றில் இடமில்லை. அந்த வகைகள் ரெட் டெலிசியஸ், ரெட் ஜானத்தன், கோல்டன் டெலிசியஸ் கேலா (Gala), எம்ப்பயர், ஃபியுஜி (Fuji), கிரானிஸ்மித் etc.

     ஒரு சுற்று முடித்து அழகிய தடாகத்திற்கு வந்து சேர்ந்தோம். அழகிய வெள்ளை அன்னங்களும் வாத்துகளும் மிதக்க, கரையில் சிறு சிறு கூண்டுகளில், கோழிகள், வான்கோழிகள், ஒரு மயில், ஆடுகள் ஆகியவை இருந்தன.

கரையிலே பெட்ஷீட்டை விரித்து, “வாங்க சாப்பிடலாம்” என்று சொன்னார்கள். கட்டுச்சோறின் மணம் நாசியைத் துளைத்தாலும், வயிறு கும்மென்று இருந்ததால் கம்மென்று இருந்துவிட்டேன்.

        குதிரை வண்டியில் ஒரு ரைட் போய்விட்டு, வாங்கிய காய்கறி பழங்களுக்கு பணம் செலுத்திவிட்டு மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விட்டோம். சில நிமிடங்களில் மிளகாய் பஜ்ஜி சூடாக வந்து சேர்ந்தது. ஆஹா ஆஹாஹாஹாஹா.

Thursday, October 24, 2013

தமிழா தமிழா நாடும் உன் நாடே !!!!!!!!!!!!

பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்




        "பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்" என்ற தேவநேயப்பாவாணர் இயற்றிய அரிய புத்ததத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய ஆலயத்தின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் முனைவர் சுந்தரமணி லூயிஸ் சைமன் அவர்கள் கொடுத்தார்.
        "மொழி ஞாயிறு" என்ற பட்டம்பெற்ற தேவநேயப் பாவாணர் கி.பி.1902ல் சங்கரன் கோவிலில் பிறந்து 1981ல் மறைந்தவர். 35 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கும் இவரை "தனித்தமிழ் இயக்க"த்தின் தந்தை எனலாம். பல தமிழ் வார்த்தைகளின் மூலத்தையும் வேரையும் ஆராய்ந்து சொல்லகராதி அமைத்தவர். தமிழ், உலகின் மிகப்பழைய "இயல் மொழி" என்பதோடு "தொல்மொழி" என்று தன் ஆராய்ச்சியால் நிரூபித்தவர். அவர் எழுதிய "இசைக்கலம்பகம் " மற்றும் வெண்பாக்கள் அவருக்கு "செந்தமிழ்ச்செல்வர்" என்ற பட்டத்தை வாங்கித்தந்தது (1979 - தமிழ்நாடு அரசு)
        சென்னையிலுள்ள மாவட்ட தலைமை நூலகத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனி அந்தப்புத்தகத்தில்  நான் தெரிந்து கொண்ட வியக்க வைக்கும் உண்மைகள்.
இந்திய நாகரிகம் தமிழர் நாகரிகமே !
        வேத ஆரியர், மேலை ஆசியாவினின்று இந்தியாவுக்கு வந்த காலம் கி.மு.2000-1500. அவர்கள் ஆடுமாடு மேய்க்கும் நாடோடிகளாய் இருந்தனர். அவருக்கு இலக்கியமோ, எழுத்தோ இல்லை. பேசிய மொழி கிரேக்க மொழிக்கு இணையாகவும், பழம் பாரசீகத்திற்கு நெருங்கியதாகவும் சொல்வளமற்று இருந்தது. இந்தியாவுக்கு வந்தபின்தான் அவர்கள் “இருக்கு” வேதத்தை படைத்தனர். அவ்வேத மொழி வட இந்திய பிராகிருதத்தையும் திராவிடத்தையும் தழுவியது.
        இந்திய ஆரியர் பிற்காலத்தில் தமிழரோடு தொடர்பு கொண்டு பண்டைத்தமிழ் நூல்களையெல்லாம் மொழி பெயர்த்துக் கொண்டனர் அதோடு பண்டைத்தமிழ் நூல்களையும் வரலாற்றையும் அழித்ததும் அவர்களே.

தமிழர் தோற்றம்
        முழுகிப்போன குமரிக்கண்டத்தில் 50,000 ஆண்டுகட்கு முன்னரே தமிழ் தோன்றியது.    தமிழ் நாகரிகம் தோன்றியது 20,000 ஆண்டுகட்கு முன். தமிழ் இலக்கணம் தோன்றியது கி.மு.10000 ஆண்டுகட்கு முன்.
தமிழர் நாகரிகம்
        கி.மு.3000 லேயே ஆடை நெய்து உலகத்தவர்க்கு ஏற்றுமதி செய்தவர் தமிழர். (Mohenjo - Daro and the Indus civilization by Sir John Marshal)
பொருள் இலக்கணம்
       தமிழன் பொருள் இலக்கணம் ஆரிய வருகைக்கு 8000 வருடங்கள் முற்பட்டது.
உதட்டுச்சாயம்
        உதட்டுக்குச் செஞ்சாயம் ஊட்டியது முதன்முதலில் தமிழ்ப்பெண்களே.
        இலவிதழ்ச் செவ்வாய் (சிலப்பதிகாரம் 14:136)
        கொவ்வைச் செவ்வாய் (திருவாசகம் 6:2)
        துப்புறழ் தொண்டைச் செவ்வாய் (சீவகசிந்தாமணி-550)

பரிசம் (Dowry)
        மணமகன் அல்லது அவன் வீட்டார் மணமகளுக்கு பரிசம் கொடுப்பது பண்டைய தமிழர் வழக்கம்.மணமகள் மணமகனுக்கு பரிசும் கொடுப்பது பிற்காலத்தில் வந்த அநாகரிக மானங்கெட்ட ஆரியர் வழக்கம்.

இந்தி மொழியின் மூலம் தமிழ்
        வடநாட்டுப் பழந்திரவிடமாகிய திரிமொழியே பிராகிருதமென்றும் சூரசேனிப்பிராகிருத வழிவந்த சிதை மொழியே இந்தி என்பதை ஆதாரங்களுடனும் விளக்குகிறார் ஆசிரியர். பல சமஸ்கிருத சொற்களின் மூலமும் தமிழே என் விளக்குகிறார்.

சிவன் வந்த கதை
ஐந்திணைத் தெய்வங்கள்
        குறிஞ்சி - சேயோன்
        முல்லை - மாயோன்
        பாலை - காளி
        மருதம் - வேந்தன்
        நெய்தல் – வாரணன்

        சேயோன் என்றால்  சிவந்தவன் என்று பொருள். முருகன், வேலன் குமரன் என்ற பெயர்களும் இவனுக்குண்டு. சிவன் என்பது சேயோன் என்பதன் திரிபு. பிற்காலத்தில் ஆரியர் ஒரே தெய்வத்தை இரண்டாக்கி தந்தையும் மகனுமாக ஆக்கிவிட்டனர். சிவன் என்று ஆரியத்தெய்வம் எதுவுமில்லை.

தமிழில் இருந்த வந்த ஆங்கிலப் பெயர்கள்.
நாவாய் - Navy
சீலை - Sail
கட்டுமரம் - Catamaran
அரிசி - Rice
நங்கூரம்  - Anchor
இஞ்சி - Ginger
திப்பிலி - Pepper
பருத்திக்கொட்டை - Cotton
நாரத்தம் - Narange - Orange
தேக்கு - Teak
கோழிக்கோடு துணி - Calico
காசு - Cash
அம்மே - Mummy
அப்பா - Pappa
அரசன்/ராயன்/ராயலு/அரையன் - Royal

தமிழரின் வான நூல் திறமை (Astrology)
        ஏழு கோள்களின் பெயரால் ஏழு நாட்கிழமைகளை முதன் முதலில் பயன்படுத்தியவர் தமிழரே.
      
        பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்
        பாவாணர் தமிழ்க்களஞ்சியம்-26
        வெளியீடு -      தமிழ்மண் அறக்கட்டளை
                        பெரியார் குடில்
                        பி-11 குல்மோகர் குடியிருப்பு
                        35 செவாலிய சிவாஜி கணேசன் சாலை
                        தியாகராயர் நகர் சென்னை -600017.

                        www.tamilmann.in.

Monday, October 21, 2013

நியூயார்க் நகரம்: நம்பர் ஒன்


       
   பிக் ஆப்பிள் (Big Apple) என்று அழைக்கப்படும் நியூயார்க் நகரம், மறுபடியும் உலகத்தில் நம்பர் ஒன்  என்று சாதித்துக்காட்டியிருக்கிறது.
        இப்சோஸ் மோரி (IPSOS MORI) என்ற நிறுவனம் 24 நாடுகளில் 18 ஆயிரம் மக்களிடம் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் இது வெளிப்பட்டிருக்கிறது.
        பல நாட்டினர் வசிப்பதால் "உலகத்தின் வீடு" என்றும் அழைக்கப்படும் நியூயார்க் நகரம், இந்த சர்வேயின் படி, உலகத்தின் மிக விரும்பப்படும் நகரம் (Worlds Favorite city) என அறிவிக்கப்பட்டுள்ளது.
World”s Favorite city
1) நியூயார்க்
2) லண்டன்
3) பாரிஸ்
4) அபுதாபி
5) சிட்னி
அதுமட்டுமல்லாமல் வியாபாரம் செய்வதற்கும் பெஸ்ட் சிட்டி என தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
Best City to do Business
1) நியூயார்க்
2) அபுதாபி
3) ஹாங்காங்
4) டோக்கியோ
5) லண்டன்

பார்ப்பதற்கு சிறந்த நகரம் என்ற கேள்விக்கு இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

Best city to Visit
1) பாரிஸ்
2) நியூயார்க்
3) ரோம்
4) லண்டன்
5) சிட்னி
தங்குவதற்கு சிறந்த நகரம் என்ற வகையில் சிறந்த ஐந்து இடங்களில் நியூயார்க் வருகிறது.

Best City to  Live
1)ஜுரிச்
2) சிட்னி
3) லண்டன்
4) பாரிஸ்
5) நியூயார்க்

ஐந்தாவது இடத்திற்கு காரணம் இங்கு வாழ்வதற்கு ஆகும் செலவு அதிகம் (Cost  of  Living ) என்று நினைக்கிறேன்.
        மேயர் புளும்பர்க் அலுவலக செய்தியின்படி, கடந்த வருடம்
 2012-ல் 52 மில்லியன் சுற்றுலா பயணிகள் நியூயார்க் நகரத்திற்கு வந்தனர். அவர்கள் நகரில் மட்டும் செலவழித்தது 55.3 பில்லியன் டாலர்கள். அதோடு 2012-ல் நியூயார்க் நகரில் நடைபெறும் குற்றங்கள் வெகுவாக குறைந்ததால், இது ஒரு பாதுகாப்பான நகரமென்றும் மேயர் அலுவலகக்குறிப்பு சொல்கிறது.

 
நியூயார்க் நகரின் மற்ற  சில சிறப்புகள்
1.  ஒன்  வேர்ல்ட் சென்டர் கட்டடம் - மேற்கத்திய நாடுகளில் உயரமானது.
2.  8.25 மில்லியன் வாழும் உலகத்தின் மிகப்பெரிய நகரம்.
3.  சுமார் 800 மொழிகள் பேசும் மக்கள் இங்கு வாழ்கின்றனர்.
4.  உலகத்தின் அனைத்து வகை உணவுகளும் இங்கு கிடைக்கும்.
5.  மிகச்சிறிய அப்பார்ட்மெண்ட் 78 சதுர அடி.
6.  மிகப்பெரிய சாண்ட்விச் (லான்ஸ்கி டெலி) 126.95 விலையுள்ள இது 4 பவுண்ட் எடையுள்ளது.
7.  நீண்ட நாள் ஓடக்கூடிய பிராட்வே ஷோ,  “ஃபேண்டம் ஆஃப் தி ஆப்ரா” (1988 முதல்)
8.  உலகின் மிகப்பெரிய ஸ்டோர் - (2 மில்லியன் சதுர அடி- (10 மாடிகள்) 34 ஆவது தெரு “மேசிஸ்”.

9.  உலகின் மிகப்பெரிய பாதாள ரயில் அமைப்பு (468 ஸ்டேஷன்கள்).
10.              உலகின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை (பிராங்ஸ் ஜூ)
11.              உலகின் பொருளாதாரத் தலைநகரம் - வால் ஸ்டிரீட் மற்றும் நாஸ்டாக் இங்கேதான் உள்ளது.
12.              பல நாடுகளைச் சேர்ந்த மிகப்பெரிய தங்க ரிசர்வ் இங்கேதான் உள்ளது.
        இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.
        முக்கியமானதை மறந்திட்டேனே, 32 நாடுகளில் படிக்கப்படும், ஆரம்பித்த ஆறு மாதத்திற்குள் 26000 ஹிட்ஸ் பெற்று சாதனை படைத்திருக்கும், உலகின் தலைசிறந்த பதிவர் (Blogger) இங்குதான் வாழ்கிறார். யாருன்னு புரியலை? அட நாந்தேன் பாஸ், பரதேசி.
(சேகரு உனக்கிருக்கு பாரு போங்கு, தாங்க  முடியலடா,
 *சரி சரி விட்றா விட்றா மகேந்திரா, எங்கேடா போயிருந்த இத்தனை நாளும், நீ இருப்பது தெரியாம சொல்லிட்டேன்டா)

பின்குறிப்பு
நேற்றைய தினம் "கல்யாண மாலை" வழங்கிய சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில்நியூஜெர்சியில் நடந்த பட்டிமன்றத்தில் , ராஜா அவர்கள் தலைமையில்,"குடும்ப வாழ்வு சுவைப்பது அமெரிக்காவில்தான்"என்றி அடியேன் பேசினேன்.பட்டிமன்றம் மிக சிறப்பாக அரங்கு   நிறைந்து கலகலப்பாக நடந்தது.நேரில் வந்திருந்தும், தொலைபேசி, ஈமெயில், நம் ப்ளாக் மற்றும் Facebook மூலமாகவும்   வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சன் தொலைக்காட்சியில் வரும் நாளை முன்னரே அறிவிக்கிறேன்.   

Thursday, October 17, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்…பூவெல்லாம் கேட்டுப்பார் !!!!!!!!!!!!


        கோடைக்காலம் கண் சிமிட்டும் நேரத்தில் முடிந்து, ஆடைக்காலம் ஆரம்பிக்கத்துவங்கி விட்டது.பல லேயரில் ஆடை உடுத்த வேண்டுமென்பதால் அப்படிச் சொன்னேன்.
        இலைகள் கொட்டத்துவங்கிவிட்டது. அது முழுவதும் மொட்டையாகு முன்னால், என் வீட்டுத்தோட்டத்தைப் பற்றி. 

        கோடைக்கால ஆரம்பித்தில் , பின்புறமுள்ள கிச்சன் கார்டனில் வழக்கம்போல் புதினாதான் புதர்போல வந்தது. எத்தனை தடவை சட்னிக்கு பறித்தாலும், புதிது புதிதாக துளிர்த்து வந்தது. இன்னும் கூட ஏராளமாக இருக்கிறது. எங்க வீட்டுக்கு வந்தா, எது கிடைக்குமோ கிடைக்காதோ, புதினா கண்டிப்பாய்க்கிடைக்கும்.
        கடந்த இரண்டு வருடங்களாக தானாக வந்த ஸ்ட்ராபெர்ரியை இந்த வருடம் காணோம். குளிர் காலத்தில் குச்சியாக நின்ற அத்திமரமும் பெர்சிமன் மரமும் துளிர்காலத்தில் மளமளவென்று இலைபிடித்து நின்றது.

 பெர்சிமன் மரத்தில் ஒரு காய்கூட காய்க்கவில்லை. ஆனால் அத்திமரம் பழங்களை அள்ளித்தந்தது. அதன் இனிப்புச்சுவைக்கு எறும்புகளும், அணில்களும், பெயர் தெரியாத பறவைகளும்  ஏராளமாக வந்தன. அவை சாப்பிட்ட மிச்சமீதியிலும் ஏராளமான பழங்கள் எங்களுக்கும் கிடைத்தன.
        மற்றவை எல்லாம் நாத்து வாங்கி நட்டவை. தக்காளி ஒரு பத்துச்செடியில் மொத்தமாக விளைந்தது.

 கோடைகாலம் முழுவதும் வெளியே வாங்கவில்லை. குறிப்பாய் மனைவி செய்யும் பச்சைத்தக்காளி கூட்டின் சுவை தனிச்சுவை. அதுவும் அன்றே பறித்து அன்றே செய்ய வேண்டும்.
        ஊதா நிற நம்மூர்க்கத்தரிக்காய்கள் நன்றாக வந்திருந்தன. பெரிதாக இருந்தாலும், விதையேயில்லாமல் எண்ணெய் பிரட்டலில் நெய் மணத்தது.

        வெண்டைக்காய்ச் செடிகளை என் மனைவி நம்பிக்கையில்லாமல் வாங்கினாலும், பெரிது பெரிதாய் ஆனால் நுனி ஒடிந்து போகும் பிஞ்சாக காய்த்தன. காரக்குழம்பில் அவை கமகமத்தன.

        பூச்சிகள் அதிகமாய் வந்ததால், என் அப்ஜக்சனையும் மீறி, பீச் மற்றும் ஆப்பிள் மரங்களை என் மனைவி வெட்டிவிட்டாள்.

        பாகற்காய்கள் இந்தத்தடவை அதிகம் வராவிட்டாலும், சுரைக்காய்கள் அதிகம் விளைந்து சாம்பாருக்கு சுவையூட்டின. எம் மாமனார் இங்கிருப்பதால் தோட்டத்தை காயும் பழமுமாக பாதுகாத்தார்.

        வீட்டின் முன்பகுதியில் தோட்டக்காரர் ஜானால் பராமரிக்கப்பட்ட சிறிய புல்வெளியும், பூந்தோட்டமும் அழகாக இருந்தது. மல்லிகைச் செடிகள் மணம் பரப்ப, ரோஜாக்கள் பல நிறங்களில் பூத்துக்குலுங்கின. காவலர் போல் நிமிர்ந்து நிற்கும் இரண்டு எவர்கீரின் மரங்களும் மேலும் வளர்ந்து கம்பீரமாய் நின்றன.


        முன்னால் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து லேசாக அசைந்து கொண்டே இவைகளை ரசிப்பதில் தான் எத்தனை இன்பம். இந்த அழகு நிறங்களையும், சுவைமிகு காய்கறி பழங்களை மீண்டும் பார்க்க, அடுத்த வசந்தகாலம் வரைக்கும் காத்திருக்கத்தான் வேண்டுமென நினைத்தபோது ஒரு பெருமூச்சு எழுந்தது.