Thursday, May 31, 2018

விடுதலைப்புலிகள் செய்த தவறுகள்!


Image result for கொரில்லா by Shoba sakthi
படித்ததில் பிடித்தது
கொரில்லா by ஷோபா சக்தி
கருப்புப் பிரதிகள் சென்னை வெளியீடு
          இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் புத்தகக் கடைக்கு செல்வது எனது வழக்கமென்பது உங்களுக்குத் தெரியும். கடந்த முறை மதுரை சென்ற போது நண்பர் பேராசிரியர் பிரபாகர் அவர்கள் கூடலழகர் பெருமாள் கோவிலின் சொர்க்க வாசலுக்கு எதிரில் இருக்கும் நற்றிணை புக் சென்டருக்கு அழைத்துச் சென்றார். அங்கு வாங்கிய பல புத்தகங்களுள் ஷோபா சக்தி எழுதிய கொரில்லா என்ற புத்தகம் என்னைக் கவர்ந்தது. அதன் பெயர், கொரில்லா, அதன் ஆசிரியர், அந்தப் புத்தகத்தின் பாக்கெட் சைஸ் அமைப்பு இவை மட்டுமல்லாமல் என்னைப் படிக்கத் தூண்டிய இன்னொரு முக்கிய காரணம் உண்டு. புத்தகத்தின் பின் அட்டையில் சாரு நிவேதிதா எழுதியிருந்த கமெண்ட்.
          பொதுவாக புத்தகத்தைப் பற்றிய நல்ல பதிப்புரைகள் விமர்ச்சனங்களிலிருந்து ஓரிரு வரிகளை எடுத்து பின் பக்கம் போடுவார்கள். ஆனால் சாரு நிவேதிதா எழுதியிருந்தது ஒரு எதிர்மறை கமெண்ட். அவர் எழுதியிருந்தது, "ஈழத்தமிழ் இயக்கத்தை கொச்சைப் படுத்தும் எழுத்து" என்று . இதனை வெளிப்படையாக ஷோபா சக்தி போட்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது. அதே சமயத்தில் வாசிக்கவும் தூண்டியது
Image result for கொரில்லா by Shoba sakthi
ஷோபா சக்தி
             பிரான்சு நாட்டில் வாழும் “ஷோபா சக்தி” இலங்கைத் தமிழர். புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். ஷோபா சக்தியின் இயற்பெயர், “அந்தோணிதாசன் யேசுதாசன்”. வேலனைத்தீவு அருகில் உள்ள அல்லைப்பிடி இவரது சொந்த ஊர். தன்னுடைய பதினாறு வயதிலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உதவியாளராகச் சேர்ந்தவர். 1984ல்  முழுநேரப் போராளியானார். அவர்களின் கலை இலக்கியக் குழுவில் அநேக வீதி நாடகங்களை நடத்தியிருக்கிறார். 1986ல் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் பிடிக்காமல் வெளியே வந்தாலும் பல கஷ்டங்களை தண்டனைகளை அனுபவித்தார். 1988ல் தனது 19ஆவது வயதில் ஹாங்காங் வந்து அதன்பின் தாய்லாந்து சென்று பின் அங்கிருந்து ஃபிரான்ஸ் சென்று அங்கு அவருக்குப் புகலிடம் கிடைத்தது.
          கொரில்லா, சனதரும போதினி, கறுப்பு, தேசத்துரோகி போன்ற பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவற்றுள் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்ற.
          அது தவிர செங்கடல், தீபன், ரூபா, போன்ற பல திரைப்படங்களிலும்  நடித்திருக்கிறார். “தீபன்” திரைப்படம் நெட்ஃபிலிக்சில் உள்ளது.  இவரைச் சுற்றிச் சர்ச்சைகள் எழுந்தாலும் தனக்கென்று இவர் ஒரு  தனியிடத்தைப் பிடித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
            “கொரில்லா” சோபா சக்தி எழுதிய முதல் நாவல். இது கிட்டத்தட்ட இவரின் சொந்தக்கதை.'கொரில்லா' என்ற புதினம் ஒரு கற்பனை அதாவது Fiction இரு குறிப்பிடப்பட்டியிருக்கிறது. ஆனாலும் இதனை ஆட்டோ ஃபிக்சன்  என்று சொல்லலாம். தன் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளைத் தொகுத்து அப்படியே வகுத்துக் கொடுத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆனாலும் இதனை ஒரு வரலாற்றுப் பதிவாக எடுத்துக் கொள்ள முடியாதென்றே நினைக்கிறேன்.
          இந்தக் கதையின் முக்கிய அம்சமாக, ஷோபா இதனை யாழ்ப்பாணத்தமிழில் எழுதியிருக்கிறார். நாம் பேசும் தமிழிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. முன்பே நான் இதைச் சொல்லியிருக்கிறேன். '' என்ற எழுத்துக்கு '' என்ற எழுத்தைப் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு சில வார்த்தைகளை கீழே கொடுத்திருக்கிறேன். இது ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டும் என நினைக்கிறேன்.
1.   டவுண் - ரவுண்
2.   டிப்ஸ் - ரிப்ஸ்
          அதோடு இன்னொரு வித்தியாசம்  என்னவென்றால் நமக்குத் தெரிந்தவரை ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எண் இருக்கும், ஒவ்வொரு பக்கத்திற்கும் எண் கொடுத்திருப்பது இயல்பு. ஆனால் இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு பத்திக்கும் தொடர் என் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹோபா சக்தி எழுதி நான் படிக்கும் முதல் புத்தகம் இது. அவரின் மற்ற நாவல்களில் இதை எப்படி  அமைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
          இந்தக் கதையின் சாராம்சமாக எனக்குத் தெரிந்தது என்னவென்றால் ஒரு இயக்கத்தில் சேர்ந்து உண்மையான தமிழ் உணர்வுடன் விடுதலை எழுச்சியுடன் சேரும் ஒரு போராளி என்னவெல்லாம் கஷ்டத்தை அனுபவிக்கிறான் என்று. பல தகவல்கள் எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தன . இந்தப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில முரணான விடயங்களை கீழே தருகிறேன்.
1)   ஒரே நோக்கத்துடன் செயல்படும் வெவ்வேறு இயக்கங்கள் ஒருவரை ஒருவர் எதிரிகளாக நினைப்பது.
2)   விலை மதிப்பில்லாத அடிமட்ட தொண்டர்களின் உயிர்களை துச்சமாக மதிப்பது.
3)   மிதவாதத் தலைவர்களை எதிரிகளாகப் பாவித்து கொன்று களைதல்.
4)   இயக்கத்திற்கு பண பொருள் செய்வதால் அவர்கள் செய்யும் அநியாயங்களை கண்டு கொள்ளாமல் விடுதல்.
5)   இயக்கத்திற்கு பொருள் சேர்க்கும் விதத்தில் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவது.
6)   இயக்கத்தில் சேரும் ஈடுபடும் உறுப்பினர்களின் குடும்பம் எந்தப் பாதுகாப்பில்லாமல் இருப்பது.
7)   இயக்கத்திலிருந்து வெளியேற அல்லது தப்பிக்க நினைக்கும் உறுப்பினர்களை கொன்றுவிடுவது.
8)   இயக்கத்தின் தலைவர்கள் பெயரைப் பயன்படுத்தி சமூக விரோத செயல்களுக்குத் துணை போவது.
9)   இயக்கத்தின் அடிமட்டத் தொண்டர்களை சுயமரியாதை கொடுக்காமல் அடிமைகளைப் போல் நடத்துவது.
10)               தப்பித்து வெளிநாடு போனவர்களை அங்கேயே சென்று கொல்வது.
11)               சரியான விசாரணை இல்லாமல் உறுப்பினர்களுக்கு கடும் தண்டனை தருவது அல்லது கொல்வது.
12)               இயக்கத்தில் சேரும்  தொண்டர்களுக்கு வரலாற்று ரீதியான வகுப்புகளை எடுக்காமல் வெறும் உடல் ரீதியான மற்றும் ஆயுதப் பயிற்சி மட்டுமே கொடுப்பது. 
          என்ன எழுதி என்ன செய்வது? யாரைத்தான் குற்றம் சொல்வது? ஒரு பெரிய தலைமுறை அழிந்து போனது. இதில் வாழ்ந்தவர் சிலர் வீழ்ந்தவர் பலர். இது ஒரு முடிவில்லாத் தொடர்கதை.
- முற்றும்

           

Tuesday, May 29, 2018

பரதேசியின் தற்கொலை முயற்சி !!!


முன்குறிப்பு : தொடர் பயணம் முடிந்து நியூ யார்க் திரும்பியும் அலுவலக மாற்றத்தின் காரணமாக கொஞ்சம் பிசியாக இருந்து விட்டதால் உடனே பதிவுகளைத்தொடரை முடியவில்லை, மன்னிக்கவும் .இந்த இடைவெளியில் பலமுறை என்னை தொடர்பு கொண்டு விசாரித்த அணைத்து நண்பர்களுக்கும் என்  நன்றிகள் .இனிமேல் தொய்வு இல்லாமல் தொடர்ந்து எழுதுவேன் .

வேர்களைத்தேடி பகுதி 
-15
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/04/blog-post_20.html
Related image
Uniform
தேவதானப்பட்டி உயர்நிலைப்பள்ளி, அதனருகில் இருந்த பட்டி தொட்டிகளுக்கெல்லாம் ஒரே உயர்நிலைப்பள்ளி. புல்லக்கா பட்டி, அட்டணம் பட்டி, எழுவனம்பட்டி, காமக்காபட்டி போன்ற அருகிலிருந்த பல ஊர்களுக்கு இதுதான் ஒரே உயர்நிலைப்பள்ளி. பின்னர் அது மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்தது. ஆண்களுக்கு வெள்ளைச் சட்டை, காக்கி கால்சட்டை, பெண்களுக்கு வெள்ளைச் சட்டையும், பச்சைப் பாவாடையும் இங்கு யூனிபார்ம். சீருடை அணிந்து வருவது கட்டாயம். எங்கள் பி.இ.டி மாஸ்டர்கள் அதனைக் கண்டிப்பாக செயல்படுத்துவார்கள்.
பக்கத்து ஊர்களிலிருந்து ஆண்களும் பெண்களுமாய் மாணவர்கள், பித்தளைத் தூக்கில் மதிய உணவைப் பிடித்துக்கொண்டு பெரும்பாலும் கால் நடையாய் வந்து சேர்வார்கள். சிலர் சைக்கிளிலும் வருவார்கள்.
அரசுப்பள்ளியாய் இருந்தும் அருமையான ஆசிரியர்கள். பெரும்பாலானவர்கள் கல்விப் பணிக்கென தம்மை அர்ப்பணித்து மாணவர்களுக்கு கல்வி வழங்கினார்கள். அப்போதிருந்த தலைமையாசிரியர் திரு.கணபதி அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அரைப்பரீட்சை நடந்த சமயம் நடந்த நிகழ்ச்சி இது.
ஆங்கிலமும் தமிழும் எனக்குப் பிடித்த பாடங்கள். கணக்கு கொஞ்சம் பரவாயில்லை. அறிவியல் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. அதற்கும் என்னைப் பிடிக்காது. வரலாறு புவியியல் பாடத்திற்கு எனக்கு ஆரம்பத்திலிருந்தே சரியான ஆசிரியர்கள் அமையவில்லை. இப்போது எனக்கு வரலாறு மிகவும் பிடிக்குமென்பது எனது பதிப்புகளைத் தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்குத் தெரியும்.
Image result for white shirt and green skirt indian school  uniform

ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் இரண்டு பேப்பர்கள் இருக்கும். முதலாவதை விட இரண்டாவது இலக்கணம் சார்ந்தது  என்பதால் சற்றுக்கடினமாக இருக்கும். தேமா, புளிமா இரட்டைக்கிளவி, இடக்கரடக்கல் என்று கொஞ்சம் எடக்கு மடக்காகவே இருக்கும். அதில் மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதும் கேள்வி ஒன்று  இருக்கும். எனக்கு விளாவரியா விவரித்து எழுதச் சொன்னால் எளிது. ஆனால் சுருக்கி எழுதுவது என்பது கடினம். எனவே இதைச் சமாளிக்க நானே கண்டுபிடித்த டெக்னிக், ஒருமுறை வினாத்தாளில் சுருக்கி எழுதிவிட்டு அதன்பின் அதனையே விடைத்தாளில் இன்னொருமுறை சுருக்கி எழுதுவேன். கிட்டத்தட்ட சரியாக வந்துவிடும்.  
தேர்வு நாளும் வந்தது நடுவில் இருந்த பலகைத் தடுப்புகளை எடுத்துப் போட்டுவிட்டு உருவான நீளமான ஹாலில் டெஸ்க்குகளை இருபுறமும் போட்டிருந்தனர். ஒரு டெஸ்க்குக்கு இருவர் மூலம் இரண்டு மூலைப்பகுதிகளிலும் உட்கார வைக்கப்பட்டோம். ஹாலுக்குள் அப்போது நுழைந்தவரைப் பார்த்து என்னைத் தவிர எல்லோரும் ‘டேய் எஸ் பால் வாத்தியார்டா’ என்று குசுகுசுத்தனர். ஆங்கில ஆசிரியரான எஸ். பால் ஆசிரியர் மிகவும் ஸ்டிரிக்ட்டானவர், மிகுந்த கோபக்காரர் தேவைப்பட்டால் அடியும் போடுவார். தமிழில் நான் கொஞ்சம் நன்றாகவே படிப்பேன் என்பதால் யார் கண்காணிப்பாளராக வந்தாலும் எனக்கு அச்சமில்லை.
வந்ததும் முதல் வேலையாக, “விடைத்தாளில் மட்டுமல்ல வினாத்தாளிலும் உங்கள் பெயரை எழுதுங்கள்”, என்றார். வினாத்தாளில் ஏன் பெயரை எழுத வேண்டும் என்று யோசனையாக இருந்தது. என் வகுப்பு பிரகாஷ் எதிரில் உட்கார்ந்து அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தான். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அவனுக்கு தமிழ் கொஞ்சம், கொஞ்சமல்ல நிறையவே தகறாரு.
Image result for Tamilnadu high school exam hall
Exam Hall
பரீட்சை ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தது. விடைத்தாளில் மளமளவென்று எழுதிக் கொண்டிருக்க, பிரகாஷ் உஷ் உஷ் என்று பலரையும் விளித்துக் கொண்டும் முழித்துக் கொண்டும் இருந்தான். பாவம் அவன் பேப்பர் முழுவதும் காலியாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் நான் அடிஷனல் பேப்பர் வாங்க, இப்போது பிரகாஷ் “டேய் அந்த முதல் பேப்பரைக் கொடு” என்று கேட்டுக் கொண்டிருந்தான். கெஞ்சிப் பார்த்துவிட்டுப் பின்னர் மிரட்ட ஆரம்பித்தான். நல்ல வளர்த்தியான முரட்டுப் பையன்.  அவன் முன்னால் நான் ஒரு சிறுபூச்சி. உதவத்தான் ஆசை ஆனால் எஸ்.பால் வேறு இருக்கிறார். அவ்வளவுதான் தொலைத்துவிடுவார் என்பதால் நான் பரிதாபமாக பலதரப்பட்ட பயத்தால் முகம் வெளிறி எழுதிக் கொண்டிருந்தேன்.
அவன் உஷ் உஷ் என்று கூப்பிட, பாம்புக்காது கொண்ட எஸ். பால் அவன் கிட்ட வந்து கழுத்தில் கையை வைத்து “என்னடா என்ன சத்தம், உன் பேப்பரைப் பார்த்து எழுது” என்று சொன்னவர், அவன் பேப்பரைப் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே ‘சுத்தம்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
இந்த முறையும் வழக்கம்போல் மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதும் முறை வந்து நான் வினாத்தாளில் ஒருமுறை சுருக்கி எழுதிவிட்டு மீண்டும் விடைத்தாளில் சுருக்கி எழுதும் போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அவனுக்கு உதவுவதற்காகத்தான் நான் வினாத்தாளில் எழுதுகிறேன் என்று தப்பாக நினைத்த பிரகாஷ் அதனைக் கேட்க, நான் அது விடையல்ல என்று அவனுக்குச் சொல்ல முயல, நடந்த கசமுசாவில் பிரகாஷ் பின்னால் திரும்பி எழுந்து எக்கி என் வினாத்தாளை எடுத்துவிட்டான். அதே சமயத்தில்  அதனைப் பார்த்துவிட்ட எஸ்.பால் விரைந்து வந்து, வினாத்தாளையும் விடைத்தாளையும் சரி பார்க்க என் வினாத்தாள் அவன் கையில் இருந்ததைக் கண்டுபிடித்துவிட்டார். என் அருகில் வந்து, “தியாகு வாத்தியார் மகன்தானே ,ஏங்கடா வாத்தியார்  பிள்ளைக இப்படிப் பிறந்து எங்க பேரைக் கெடுக்கிறீங்க”,   என்று சொல்லும்போது எனக்கு தலை இரண்டாக பிளந்தது போல இருந்தது. ஏதோ நான் பிறந்து ஆசிரியர் குலத்திற்கே அவமானத்தைக் கொடுத்துவிட்டேன் என்று அவர் சொன்னது எனக்கு பெரிய அதிர்ச்சி. ஏனென்றால் நான் எதுவும் தப்பே செய்யவில்லையே.
  அவருக்கு கோபம் தலைக்கேற, என் காதைப் பிடித்து திருகியதோடு என் விடைத்தாளையும் வினாத்தாளையும் உடனே எடுத்துக்கொண்டார். நான் சொல்ல முயன்ற எதுவும் அவர் காதில் விழவில்லை. பிரகாஷ் முதுகில் படாரென்று ஒரு அடி அடித்து அவனை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். என்னை அம்போவென்று அங்கேயே விட்டுவிட்டார். அதோடு அங்கிருந்த அலுவலகப் போன் மூலம் இந்து நடுநிலைப் பள்ளிக்கு தகவல் சொல்லிவிட்டார் போல இருக்கிறது.
அதற்குள் அங்கே ஹாலின் ஆரம்பத்தில் என் அப்பாவின் தலை தெரிந்தது. அவரும் என்னை ஏதும் விசாரிக்கவில்லை. அவருக்கு மிகுந்த அவமானமாய் இருந்திருக்க வேண்டும். அங்கிருந்து அடித்துத் துவைத்து என்னை இழுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனார். சமையல் அறையில் இருந்த இயேசு  நாதரின் படத்துக்கு முன்னால் வழக்கம்போல் முழங்கால் போட வைத்தார். வலி அவமானம், கோபம் ஆகியவை ஒருங்கே வர தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன்.
- தொடரும்.