Thursday, July 31, 2014

பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது !!!!!!!!!!!


முன்குறிப்பு:
எங்கப்பா என்னைத் தண்டிக்கும் போதும் சரி, கண்டிக்கும்போதும் சரி அடிக்கடி ஒன்னு சொல்வாரு, "நீ பொண்ணாப் பிறந்திருந்தா, படிக்கிறயோ இல்லையோ, எவன் கையிலாவது பிடிச்சுக் கொடுத்துட்டு நிம்மதியா இருந்துருவேன். ஆனா பையனாப் பொறந்துட்ட, உன்னைப் படிக்க வைச்சி ஆளாக்கி  குடும்பத்தை நடத்துற அளவுக்கு கொண்டுவரனும்னு தான் பாடுபடுறேன்". - இதற்காகத்தானே ஆசைப்பட்டீர்கள் அப்பா.
ஜூன்  மாதம் கடைசி வாரத்தில் ஒரு நாள்.
"அத்தான்" என்று கூப்பிட்டாள் என் மனைவி. ஐயோ நம்புங்கப்பு. அவள்  அப்படித்தான் கூப்பிடுவாள், ஆனால் நீங்க நெனைக்கிற மாறி,"அத்தான், என் அத்தான் அவர் என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி", என்ற அர்த்தத்தில் இல்ல. கல்யாணம் ஆன புதுசுல, உங்களை எப்படிக் கூப்பிடருதுன்னு அவ கேட்டா. நான் சொன்னேன் "ஏன் ஆல்ஃபின்னே கூப்பிடுன்னு". அதான் எல்லாரும் கூப்பிடுறாங்களே, "வேற எதுனா புதுசா வச்சுக்கலாம்னு" சொன்னா. அப்ப நான் சொன்னேன். "எங்கம்மா, எங்கப்பாவை அத்தான்னு கூப்பிடுவாங்கன்னேன்."
 "ஓ அத்தான், நல்லாருக்கே அப்படியே கூப்பிடுறேன்னு" சொன்னா. அதுக்கு என்ன அர்த்தம், அப்படின்னா என்ன உறவு அதெல்லாம் அவளுக்கு இன்னக்கி வரைக்கும் தெரியாது. ஏதோ கூப்பிட ஒரு பேர் அம்புட்டுதேன். ஆனா அவ கூட்டத்தில் என்னைக் கூப்பிடும்போது பல பேர் கேலி பன்றாங்க, அது வேற விஷயம்.  
சரி மேட்டருக்கு வர்றேன். அத்தான்னு கூப்பிட்டதும் என்னான்னேன்.
" 9ஆம் தேதி  வருது ஞாபகமிருக்கா ?"
“மாசா மாசம் தான் 9 வருது அதுக்கென்ன இப்போ?”
"வழக்கம்போல மறந்துட்டீங்களா, நம்ம கல்யாண நாள்”.
"மகிழ்ச்சியை மட்டும்தான் நெனவுல வைச்சிக்கனும், துக்கத்தை எல்லாம் மறந்துரனும்னு எங்கப்பாரு சொல்லியிருக்காரு". (மறுபடியும் அப்பாவா?)
"ஆமா எங்களுக்கு மட்டும் ரொம்ம்ம்ம்ப சந்தோஷம்"
“சரி சரி சண்டையை ஆரம்பிக்காத என்ன செய்யனும்?”, 
“கண்டிப்பாய் டின்னர் போகனும், (ஐயையோ இவ குடும்பம் முழுசையும் பெருங்கூட்டமாய் கூட்டுவாளே எவ்வளவு ஆவுமோன்னு நெனச்சு நெஞ்சுக்கூடு  உள்ளே குறுகுறுத்தது )
“அப்புறம் எல்லாம் வழக்கம்போல”.
வழக்கம் போல்னு, அவ சொல்றது அவளுக்கு தரவேண்டிய கிப்ட். தங்கத்தைத் தவிர அதுவும் 22 கேரட் தவிர எதையும் ஏத்துக்கமாட்டா
என்னா வாத்யாரே கல்யாண நாளுக்கு இதெல்லாம் செய்யணும்தானே இதுக்குப்போய் இவ்ளோ அலுத்துக்கிறன்னு நீங்க கேக்கறது எனக்கு காதுல விழுது.
உங்களுக்கு எல்லா விஷயத்தையும் சொல்றேன். அப்புறம் தெரியும் என் துக்கத்துக்கு என்ன காரணம்னு.
ஜனவரி 1, 2014 பிறந்து புதுவருடத்திற்கு ஏகப்பட்ட காசு செலவாகி போண்டியா இருக்கும்போது, கொஞ்சம் மூச்சுவிட்டு ஆசுவாசம் செய்யறதுக்குள்ள வேலன்டைன்ஸ் தினம், அதான் பாஸ் காதலர் தினம். ஃபெப்ருவரியில் வந்துரும். பட்ஜெட் கம்மியாயிருக்கு இந்த வருஷம் ஒண்ணும் முடியாதுன்னு சொன்னேன். அதுக்கு அவ கேட்டா, அப்ப வேற யாருக்காவது இந்த வருஷம் தரப்போறியான்னு. நான் அலறி அடிச்சுட்டு, இல்லம்மா ராசாத்தி எப்பவும் எல்லா வருஷமும் நீதான் எனக்கு வேலன்டைன்னு சொல்லி வாங்கிக்கொடுக்க வேண்டியதாயிருச்சு.
அப்புறம் ஏப்ரல் 1 என் பொறந்த நாள் வந்துருச்சு, நீங்களே சொல்லுங்க, என் பொறந்த நாளுக்கு மத்தவங்கதானே ஏதாவது செய்யணும், ம்ஹீம் அந்த கொடுப்பிணையெல்லாம் எனக்கு இல்ல. நாந்தேன் அம்புட்டு பேரையும் கூப்பிட்டுப்போய் வாங்கிக் கொடுக்கனும். ஏன்னா நாந்தேன் குடும்பத்தலைவராம். எப்படி இருக்கு கதை.  தலைவரு கிரடிட் கார்டு கடனில் மூழ்கிப்போய் தலைவேறு கால்வேறாய் இருக்கிறது இவர்களுக்கு எப்படி தெரியும்?
அப்புறம் மே மாதம் மதர்ஸ் டே வந்துருது.
“ஏங்க ஒங்க  பிள்ளைகளை பெத்து வளத்தவளுக்கு நீங்கதான் செய்யனும்னு (இதே டயலாக்கை எத்தனை தபா சொல்வாளோ ?) சொல்லி தாலி அந்து போச்சு.
அதுக்குள்ள ஃபாதர்ஸ் டே வந்துறுச்சு. மதர்ஸ் டே நான் செய்யனும் ஆனா, ஃபாதர்ஸ் டேயும் நானேதானா. எவன் இந்த நாளையெல்லாம் கண்டுபிடிக்கிறாய்ங்கன்னு கோபம் ஒருபக்கம் அழுகை ஒருபக்கம் . பில்லை பார்த்ததும் ஈரக்குலை அந்து விழுந்துரிச்சு.
அதன்பின் என் மனைவி ஒரு நாள் சொன்னா.
"ஏங்க எங்கப்பா அம்மா வந்துருக்காங்கல்ல"
"ஆமா அதுக்கென்ன ?"
அவங்களோட 50-ஆவது திருமண நாள் வருது"
"அது செப்டம்பர்லதான வருதுன்னு சொன்ன "  
ஆமா, ஆனா அவுங்க ஜூலைல ஊருக்குத்திரும்பி  போயிராங்கள்ள அதனாலதான் இப்பவே கொண்டாடிரனும்னு சொல்றேன். சரியென்று போனவாரம் சர்ச்சுல பெரிய விழாவெடுத்தோம்.
எல்லாத்தையும் முடிச்சுட்டு கம்முனு உதட்டுக்கு பசைபோட்ட மாதிரி சோபாவின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தேன்.எந்தம்பி போன் பண்ணான். போன வாரம்தான்  அவங்க குடும்பம் வந்துருக்கு. என் அம்மாவும் வந்திருக்காங்க.   
"அண்ணே ஜூலை 26ல் அம்மாவுக்கு 75 வயசு ஆகுது ஏதாவது பண்ணுங்கண்ணே. 
அதுக்கு ஒரு விழா எடுத்தேன் .அப்புறம் பிள்ளைகளுக்கு செமஸ்டர் ஃபீஸ் கட்டிட்டு நாக்குத்தள்ளி உட்கார்ந்திருக்கும்போது நெனவு வந்துச்சு. ஐயையோ வரிசையாய் பிறந்த நாளா வருமேன்னு. அக்டோபர் 9 சின்னவ, நவம்பர் 6 மாகாப் பெரியவ (அதான் என் பாரியாள்) நவம்பர் 11 பெரியவ, அப்புறம் ஏசுகிறிஸ்து டிசம்பர் 25. நெனச்சா இப்பவே கண்ணைக்கட்டுதேன்னு யோசிச்சு யோசிச்சு உட்கார்ந்திருந்த போது அத்தான் என்றாள் என் மனைவி. அய்யய்யோ புதுசா எதுக்கோ   அடி போடுறாளேன்னு அடி வயிறு கலங்குச்சு.
ரொம்ப நாளாச் சொல்லிட்டிருக்கேன், இந்த ரூபி, எமரால்ட் முத்து செட்டெல்லாம் வச்சிருக்கேன். இந்த வைர செட்தான் இல்லை.... அத்தான்

ஐயையோ செத்தேன்டா சேகரு.

இப்போது மறுபடியும் முன்குறிப்பை படிக்கவும் .

Monday, July 28, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி -11 - தேசியை மிஞ்சிய பரதேசி !!!!!!!!!!

Roasting walnuts
Street vendor selling Chestnut
ரோமப்பேரரசின் பாதாள நீர்நிலையிலிருந்து வெளியே வந்தவுடன் கொஞ்சம் பசித்தது. அருகிலிருந்த இடங்களிலெல்லாம் வாதாம் கொட்டைகளை ( Chestnut) வறுத்து, தள்ளு வண்டிகளில் விற்றுக் கொண்டிருந்தனர். ஒரு பொட்டணம் 25 லிரா. ஒன்றை வாங்கிச் சாப்பிட்டேன். வறுத்தவை ஆனாலும் வேக வைத்தவை போல் மெதுவாக இருந்தது. போனால் போகிறது என்று இன்னொரு 25 லிராக்கள் செலவழித்து இன்னொரு பொட்டணம் வாங்கிச்சாப்பிட்டு தண்ணீர் குடித்தேன். அப்பாடா லஞ்ச் முடிஞ்சது. மெல்லிய ஏப்பத்துடன் வயிறு திருப்தியைத் தெரிவித்தது. அதனை அங்கீகரித்து தடவிக் கொடுத்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
பக்கத்தில் நிறைய டிராவல் சர்வீஸ்கள் இருந்தன. மீதமுள்ள அரை நாளில் என்ன செய்யலாம் என்று விசாரித்தேன். பாஸ்ஃபரஸ் குரூஸ், அரண்மனை, பிரின்சஸ் தீவு இவற்றுள் ஏதாவது ஒன்றுக்குச் செல்லலாம், $75 அமெரிக்க டாலர்கள் ஆகும் என்றான் ஒரு தேசி (இங்குமா வந்துவிட்டார்கள் பாகிஸ்தான்காரர்கள்?).ஓ அரண்மனை ஏற்கனவே பார்த்தாயிற்று”, என்றேன். எந்த அரண்மனை என்று கேட்டதற்கு 'டொப்கப்பி' என்றேன். அது பழையது. டால்மபாஷே (Dolmabahce) புதிய அரண்மனை என்றான். அப்ப கண்டிப்பாய் பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன்.
 75 டாலர் பரவாயில்லை தான். ஆனாலும் வெளியே விசாரித்துவிட்டு திரும்ப வரலாம் என்று நினைத்துவிட்டு வந்தேன்.
 ஆங்கிலம் தெரிந்த ஒருவரைக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. இதற்கு பாகிஸ்தான்காரனிடம் $75 டாலர்கள் கொடுத்திருக்கலாமோ என்று யோசித்துக் கொண்டு இருக்கும்போது தான் ஒருவரைக் கண்டு பிடித்தேன். டால்மபாஷே அரண்மனை எப்படிப் போக வேண்டும் ?”, என்று அவரிடம் கேட்டேன்.
அவர் சொன்னார், கொஞ்சதூரம் நடந்து போனால் வரும் டிராம் வண்டியில் 5 லிரா கொடுத்தால், பேசிக்டஸ் (Basiktas) என்ற கடைசி ஸ்டாப்பில் இறங்கி சிறிது நடந்தால் அரண்மனை வரும் என்றான்.
Dram 

ஆக 75 டாலர் மிச்சம் என்று நினைத்து, நீளமான டிராம் வண்டியில் ஏறினேன்.  அரை மணிநேரத்தில் கடைசி ஸ்டாப் வந்தது. ஆஹா 'தேசியை மிஞ்சிய பரதேசி' என்று தலைப்புப் போடலாம் என்று அப்பொழுதே முடிவு செய்தேன்.
பாஸ்பரஸ் ஆற்றங்கரையில் கம்பீரமாக இருந்தது, டால்மபாஷே அரண்மனை. டொப்கப்பி போல பெரிய இடம் இல்லை. ஆனால் முற்றிலுமாக ஐரோப்பிய ஸ்டைலில் இருந்தது.
உள்ளே போவதற்கு முன்னால் அரண்மனை பற்றி ஒரு சிறு குறிப்பு.
பாஸ்ஃபரஸ் ஓரத்தில் இயற்கையாகவே அமைந்த துறைமுகத்தில் அக்காலத்தில் சுல்தானின் கப்பற்படை நிறுத்தப்பட்டிருந்தது. எனவே கப்பற்படை அணிவகுப்புகளும் முக்கிய நிகழ்வுகளும் இங்கே 17ஆம் நூற்றாண்டு முதல் நடைபெற்று வந்தன. அதற்குப்பெயர் 'டால்பாஷே' என்பதாகும். அதுவே சுல்தானும் அவர் குடும்பத்தினரும் வந்து மகிழும் "இம்பீரியல் தோட்டம்" ஆகவும் விளங்கியது.  அந்த காம்ப்பிளக்சில் இருந்த 'பேசிக்டஸ் ஷோர் பேலஸ்' என்ற அரண்மனையை இடித்துவிட்டு வேறு ஒரு அரண்மனை கட்டப்பட்டது. 
சுல்தான் அப்துல் மெசிது
சுல்தான் அப்துல் மெசிது (1839 - 1861)காலத்தில் கட்டப்பட்ட இந்த அரண்மனைக்கு "டால்மபாசே' என்று பெயரிடப்பட்டது. 1843-ல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த அரண்மனை 1856-ல் கட்டி முடிக்கப்பட்டது. 1856 முதல் கீழ்க்கண்ட ஆறு சுல்தான்கள் இங்கிருந்துதான் ஆட்சி செலுத்தினர்.  
1) சுல்தான் அப்துல் மெசிது (1839 - 1856)
2) சுல்தான் அப்துல் அஜிஸ் (1861 - 1876)
3) சுல்தான் முராட் V  (1876)
4) சுல்தான் அப்துல் ஹமித் II (1876 - 1909)
5) சுல்தான் மெஹ்மது ரெசாத் (1909 1918)
6) சுல்தான் மெஹ்மது VI வாஹித்தீன் (1918 - 1922)
இவர்கள் தவிர ஆட்டமன் பேரரசின் கடைசி காலிஃப் அப்துல் மசிது எஃபன்டி (1922 - 1924) இங்குதான் தங்கியிருந்தார்.
துருக்கி நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் முஸ்தஃபா கெமால் அட்டடுர்க் 1927 முதல் 1938 வரை இங்கேயே தங்கி இங்கேயே மறைந்தார். இவரைப்பற்றி பின்னர் சொல்கிறேன். அதன் பின்னர் 1949 வரை குடியரசுத்தலைவர் மாளிகையாக இருந்த இந்த அரண்மனை 1984ல் மியூசியமாக மாற்றப்பட்டு அதிலிருந்த ஒரிஜினல் பொருட்களுடன் பொதுமக்களுக்காக  திறந்துவிடப்பட்டது.
Clock Tower

அரண்மனையின் முகப்பில் ஒரு பெரிய கிளாக் டவர் இருந்தது. அது சுல்தானின் அம்மா பெயரில் கட்டப்பட்டதாம். அதன் உள்ளே அனுமதிக்கவில்லை. 
Main Entrance


அதன்பின் ஒரு உயர்ந்த வாயில் வந்தது. அது பொதுமக்களும், தலைவர்களும் வந்து செல்வதற்காக. உள்ளே இடது புறத்தில் சுல்தானும் அவருடைய மெய்க்காவலர்களும் மட்டும் வந்து போவதற்கு தனியான அலங்கார நுழைவு வாயில் இருந்தது. அதற்கு "இம்பிரியல் கேட்" என்று பெயர்.  
Imperial gate
போகும் வழியெங்கும் அழகான புல்வெளிகளும், நீருற்றுகளும், புத்தம்புதிதாக மலர்ந்த பூக்கள் உடைய விதவிதமான செடிகளுடன் சூப்பராக இருந்தது.

நடுவில் நீரூற்றுகள் வைத்து சுற்றிச் செல்லும் பாதைகள் மாபெரும் பூங்காக்களை நினைவுபடுத்தின. அரண்மனைக்கு உள்ளே செல்வதற்கு நீண்ட வரிசை காத்திருந்தது. உள்ளே 'கைடட் டூர்' (Guided tour) மட்டுமே. நாம் தனியாக போக முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு மக்களை ஒன்றிணைத்து அதற்கு ஒரு வழிகாட்டி வருகிறார். அவரைப் பின்பற்றித்தான் உள்ளே செல்ல முடியும். அரைமணிநேரத்திற்கு ஒரு குழுவை உள்ளே விட்டார்கள்.
Front Appearance of the Palace


புளு மாஸ்க்கில், உள்ளே காலணிகளுடன் போக முடியாதென்பதால் ஒரு சிறு பாலித்தீன் பையை கொடுத்தார்கள் என்றும், எங்கள் ஷூக்களைக்கழற்றி அதில் போட்டு, கையில் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றோம் என்று சொன்னேன் அல்லவா. ஆனால் இங்கு என்ன செய்தார்கள் என்றால், காலிலே உள்ள ஷூக்கள் மேலே மாட்டிக் கொள்வதற்கு ஏற்ற வகையில் பாலித்தின் கவர்களை கொடுத்தார்கள். செருப்பு போன்று சுருக்கம் வைத்து உருவாக்கப்பட்ட இந்த உறைகள் ஷூவின் மேல் கச்சிதமாக மாட்டிக்கொள்ள, அதோடு நடக்கும் போது எந்த சிரமமும் இல்லை. அதே நேரத்தில் உள்ளேயும் அழுக்கு ஏறாது. ஆஹா சூப்பர் ஐடியா என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றேன்.  ஏதோ கனவு மாளிகைக்குள் நுழைந்தாற்போல் இருந்தது.


தொடரும் >>>>>>>>>>>>>>

Thursday, July 24, 2014

நியூயார்க்கில் (மறுபடியும்)சூப்பர் சிங்கர்ஸ் !!!!!!!!!!

  1. Photo: ஜுலை 12-ல், நியூ யார்க் தமிழ்ச் சங்கம் நடத்தும் மாபெரும் இசை விழா!!! கண்டு களிக்க வாருங்கள்!!!



                கோடைவிழாவை குதூகல இசையுடன் கொண்டாட விரும்பி, நியூயார்க் தமிழ்ச்சங்கம் “சூப்பர் சிங்கர்ஸ்” இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள். இது ஃப்ளஷிங்கில் உள்ள ஹிண்டு டெம்ப்பிள் ஆடிட்டோரியத்தில், ஜீலை 12,2014 மாலையில்  நடைபெற்றது .
  இந்தத்தடவை வந்தது கடந்த சீசனில் முதலிடம் பெற்ற திவாகர் மற்றும் டாப் 5ல் வந்த சோனியா. இவர்களோடு போன சீசனில் கனடாவிலிருந்து வந்து கலந்து கொண்ட மகிஷாவும் வந்திருந்தார். பிரபு என்ற ஒருவரும் வந்திருந்தார்.
மூன்றரை மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் என்று போட்டிருந்ததால் பரதேசி 3 மணிக்கே ஆஜர். முன்னறையில் நண்பர் ரங்கா, அண்ணன் ஆல்பர்ட் செல்லதுரை ஆடிட்டர் கீதா ஆகியோர் வரவேற்றனர் . உள்ளே சென்றவுடன், சில தாவணிக்கனவுகள் வழிகாட்டி உட்கார வைத்தனர். அரங்கு பாதியளவே நிரம்பியிருந்தது. நியூஜெர்சியில் கார்த்திக் நிகழ்ச்சிக்கு அலைமோதிய கூட்டத்தைப் போல் இங்கில்லையே என்று ஆதங்கம் இருந்தாலும், நியூஜெர்சியில் நம் தமிழர் ஜனத்தொகை அதிகமல்லவா என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.  மணி மூன்றரை போய்  நாலும் கடந்தது.
போன சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் சில எலக்ரானிக் தொழில் நுட்ப பிரச்சனைகள் இருந்தன. இப்போது அது இல்லை,ஆனாலும் ஏன் தாமதம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
4.30  மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமானது. திரும்பிப் பார்த்தால் அரங்கு நிரம்பி, பால்கனியிலும் நிரம்பியிருந்தது. அப்போதுதான் எனக்கு காரணம் விளங்கியது.
3.30 மணியென்று போட்டால் தான் ஒரு நாலரைக்காவது ஆரம்பித்துவிடலாம், நம் மக்கள் தாமதமாகத்தானே வருகிறார்கள் என்று தமிழ்ச் சங்கத்தலைவர்கள் நினைத்திருக்கலாம்.
ஆனால், நியூயார்க் தமிழ்ச்சங்கம் ஒரு மணி நேரமாவது தாமதமாகத்தானே ஆரம்பிப்பார்கள். எனவே 3.30 என்று போட்டால் 4.30 மணிக்கு போனால் போதும் என்று மக்கள் நினைத்து வந்தது தலைவர்களுக்கு தெரியவில்லை.
இதிலே என்னைப்போன்ற நேரத்துக்குப் போனவர்கள் எங்களை நாங்களே நொந்து கொண்டதுதான் மிச்சம்.
தமிழ்த்தாய் வாழ்த்தை இரு லோக்கல் தமிழ்க் குயில்கள் மிக அழகாக பாடினர். அதற்குப்பின் அமெரிக்க தேசிய கீதத்தை அதைவிட தெளிவாகப் பாடினாள் அந்த இருவரில் ஒருவரான நித்யா லாரன்ஸ்.
திவாகர் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளே வர, கைதட்டல் காதைப்பிளந்தது. திரைப்படத்தில் தான் இப்படி ஏழை வீட்டில்  பிறந்த ஒருவன் முன்னேறி புகழடைய முடியும் .  அந்த அதிசயத்தை நேரில் நடத்திக் காண்பித்த திவாகர் பாராட்டுக்கு உரியவர் என்பதில் சந்தேகமில்லை. அதுவும் எந்த ஒரு இசைப் பயிற்சியும் இல்லாது. இது உறுதியாக கடவுளின் கொடைதான்.
கணேஷ் கிருபாவின் இசைக்குழுதான் மீண்டும் வந்திருந்தது. நான்கே பேர்தான். ஜோஸ்வா ஆர்ம்ஸ்ட்ராங், நவீன் ஜுட் ஆகிய இருவரும் கீபோர்ட், விஜயகுமார் தபேலா மற்றும் பர்கஷன். கணேஷ் கிருபா ச்ச்சும்மா கூட.
கணேஷ் கிருபா  நெகிழ்ந்த குரலோ அல்லது மகிழ்ந்த குரலோ இல்லாமல் வெற்றுக்குரலில் நன்றி சொல்லி அறிமுகம் செய்ய கச்சேரி ஆரம்பமானது.
முதலில் நிறைகளைப் பார்ப்போம்.
பெரும்பாலான பாடல்கள் திவாகரும் சோனியாவும் ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடியவை என்றாலும் நேரில் பார்ப்பதற்கு நிச்சயமாய் நன்றாகவே இருந்தன. 
திவாகரின் குரல் வளம் இன்னும் சிறப்பாக ஆகி இருந்தது. பேஸ் வாய்ஸ், ஹைரேஞ்ச் என்று சரளமாக சிரமமின்றி பாடி அசத்தினார். பாடியதில் சிறப்பாக அமைந்த பாடல்கள். 'வராக நதிக்கரை ஓரம்', 'சம்திங் சம்திங்', 'அந்த அரபிக்கடலோரம்' மற்றும் திவாகருக்கு முதலிடம் பெற்றுக் கொடுத்த 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' என்ற பாடல்கள்.

Prabu,Magisha, Diwakar and Soniya
அதிலும் 'சம்திங் சம்திங்' பாடலுக்கு திவாகர் பின்னாலிருந்து பாடிக்கொண்டுவந்து ஆடியன்ஸை உசுப்பேத்த பலர் எழுந்து ஆடினர். அரபிக்கடலோரத்தில் வரும் “ஹம்மா ஹம்மா”, என்ற வரியை எல்லோரையும் பாடவைத்து ஹிட்டாக்க, திவாகர் நல்ல ஒரு ஷோமேனாக வளர்ந்து வருவது மகிழ்ச்சியைக் கொடுத்தது.
சூப்பர் சிங்கரில் முதலிடம் பெற்று, பின்னர் லண்டன், ஆஸ்திரேலியா, டென்மார்க் போன்ற நாடுகளில் கச்சேரிகள் முடித்து ஃபெட்னா (FETNA - Federation of Tamil Sangams of North America) விழா ஒன்றில் கலந்து கொள்ள செயிண்ட் லூயிஸ், மிசெளரி வந்து இப்போது USல் பல கச்சேரிகள். ஆனாலும் எந்தப்புகழையும் பணத்தையும் தலைக்கேத்தாமல் உண்மையான தன்னடக்கம் காட்டுவது தெளிவாகத் தெரிந்தது. சென்ஸ் ஆஃப் ஹியூமரும் வளர்ந்திருக்கிறது, ஷோமென்ஷிப்பும் உயர்ந்திருக்கிறது. இப்படியே எப்போதும் இருந்து மேலும் வளர வாழ்த்துக்கள்.
சோனியா பாடிய பாடல்களில் ஹைலைட் என்று சொன்னால் 'கவிதை கேளுங்கள்' என்ற புன்னகை மன்னன் பாடல். 'சந்தத்தில் காணாத  கவிதை' என்ற பாடலை தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் மாற்றி மாற்றிப் பாடினார். திவாகரோடு இணைந்து டூயட் பாடிய முதல்வன் படத்தின் "குறுக்குச் சிறுத்தவளே" என்ற பாடல் நன்றாக அமைந்தது. சூ.சி.யில் பாடி ஜானகியிடம் பாராட்டுப் பெற்ற "அழகு மலராட" அந்த அளவுக்கு அமையவில்லை. ஆனால் திவாகரின் ஜதி நன்றாக இருந்தது.
Magisha
மகிஷா இன்னும் வளர்ந்து அழகாக இருக்கிறார். பாட்டில் இன்னும் வளரவேண்டும். வெறும் மேடைக்கச்சேரி அளவு பத்தாது. மக்கள் இன்னும் எதிர்பார்க்கிறார்கள். திவாகரோடு பாடிய “தென்றல் வந்து என்னைத்தொடும்”, “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, ஆகிய பாடல்கள் பரவாயில்லை ரகம்.
சங்கர நேத்ராலாயாவின் டிரஸ்டி என்று அறிமுகப்படுத்தப்பட்ட பிரபு சில பாடல்களை இணைந்தும் தனித்தும் பாடினார். பெரிதும் சோபிக்கவில்லை.
நம்ம சிலோன் K.S.ராஜா குரல், ரமேஷ் கிருஷ்ணா வழக்கம்போல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்தத் தடவை பரவாயில்லை. த்த்தமிழ்ச்ச்சங்கம் என்று சொல்வது எங்களுக்கு பழகிவிட்டது. ஆனால் திடீரென்று பாடகர் அவதாரம் எடுத்து "நந்தா என்ற நிலாவை, “நொந்தா என் நிலாவாக்கியதை"  "வருத்தப்படும் வாலிபர் சங்கம்" சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். வருங்காலத்தில் இந்த மாதிரி விபரீத ஆசைகள் வராமல் அவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.  
PA சிஸ்டம் சரியாக பயன்படுத்தப்படவில்லை. எவ்வளவோ டெக்னாலஜி முன்னேறியிருக்கும் வேளையில் அந்தக்கால செளண்ட் சிஸ்டம் போல இருந்தது. தபேலாவுக்கு ஒரு மைக் வைத்தது மிகத்தவறு . கர்ணம் மட்டுமே கேட்டது. பேஸ் கேட்கவேயில்லை. இருக்கிறதே ரெண்டு இன்ஸ்ட்ருமெண்ட்  அதனை சரியாக செட் பண்ண வேண்டாமா?. இசை தெரியாதவர் செளண்ட் சிஸ்டத்தில் உட்கார்ந்தால் இதுதான் பிரச்சனை.
பெரிய இசைக்குழுவின்  தலைவர் என்று சொல்லும் கணேஷ் கிருபா பிடிச்ச பிள்ளையார் போல் உட்காராமல் கீழிறங்கி பின்னால் போய் பாடல்களை கேட்டுவிட்டு செளண்ட் செக் செய்ய வேண்டும்.
திவாகர் இப்போது ஒரு செலிபிரட்டி பாடகர். அவர் பெயருக்காக    மட்டும்தான் இவ்வளவு மக்கள் கூடுகிறார்கள் என நினைக்கும்போது அவரின் பொறுப்பு கூடுகிறது. தனக்கென்று நன்கு டெஸ்ட் செய்த மைக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பாட்டுக்கும் வெவ்வேறு மைக்கை பயன்படுத்தியதால், சில சமயம் மைக்கில்  ஜாரிங் செளண்ட் வந்தது. மேடையில் பாடகர்கள் நிழலாகவே தெரிந்தனர். சரியான ஃபோகஸ் லைட் இல்லை.

ஆமாம் எனக்கு ஒரு உண்மை தெரியனும். தமிழ்ச்சங்க தலைவர் விஜயகுமார், செயலாளர் ராம்மோகன் மற்றும் பொருளாளர் நண்பர் ரங்கா ஆகிய மூவரும் ஒரே அளவாக உயரத்திலும் சாடையிலும் அண்ணன் தம்பிபோல் இருந்தனர். இவர்கள் ஒரே மாதிரி இருந்ததால் ஒரே சமயத்தில் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்களா என்று தெரியவில்லை .ஆனால் இவர்கள் ஒரேமாதிரிதானே   அன்றி ஒரு மாதிரி ஆட்கள் அல்ல என்று எனக்குத்தெரியும். ஒரே மாதிரி இருப்பதுடன் ஒரே மாதிரி சிந்தனையுடன் தமிழ்ச்சங்கத்தை முன்னேற்றுங்கள்.  
இதுவரை சாதித்தது அல்ல இனிமேல்தான் சாதிக்க நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தை எப்போதும் மனதில் வைத்து முயன்றால் திவாகருக்கு வானமும் வசப்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு வருடத்திற்கு மேல் சின்னத்திரையில் தொடர்ந்து பார்த்து மகிழ்ந்த சூப்பர் சிங்கர் திவாகர் ,சோனியாவை நேரில் காண்பித்ததற்கு நியூயார்க் தமிழ்சங்கத்துக்கு நன்றி.

Monday, July 21, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி -10 : மெடுசாவின் காதல்!!!!!

Blue Mosque

ஏப்ரல் 27 - ஞாயிற்றுக்கிழமை
காலையில் எழுந்து ரெடியாகி, சுல்தானா மெட்டுக்கு எப்படிப்போக வேண்டும் என்று விசாரித்துவிட்டு வெளியே வந்தேன். ஒரு ரெண்டு பிளாக் நடந்தால் மெயின் சாலை வந்தது. அதில் ஒருவகையான மினிபஸ்கள் ஓடுகின்றன. அதற்கென்று பஸ் ஸ்டாப்புகள் இருந்தாலும், வழியில் எங்கு  வேண்டுமென்றாலும் கைகாட்டி நிறுத்தி ஏறிக்கொள்ளலாம். கட்டணம் 1.50 லிராக்கள் தான். அங்கு போய் மினிபஸ் ஏறி பக்கத்தில் உள்ள டிராம் ஸ்டேஷனில் இறங்கினேன். இந்த மெட்ரோ டிராம் வண்டி இஸ்தான்புல்லின் முக்கிய பகுதிகளை இணைக்கிறது.
சுமார் 1 மணி நேரத்தில் சுல்தானாமெட் வந்து சேர்ந்தேன். மாரத்தான் ஓட்டத்தைக் காணோம். ஆனால் வழக்கம் போல் கூட்டம் கூட்டமாக டூரிஸ்ட்கள் இருந்தனர்.
நேற்று இரவு கூகுளில் தேடி திட்டமிட்டபடி ரோமப்பேரரசின் மிச்சங்களை பார்க்கப்போனேன்.

அங்கே ஒரு இடத்தில் டூரிஸ்ட் கைடைச் சுற்றி  ஒரு சிறிய கூட்டம் சூழ்ந்திருந்தது. ஒரு தூண் அங்கே இருந்தது. அதில் கைகாட்டிப் பலகைகள் போல ரோம், இத்தாலி என்று பல ஊர்களின் பெயர்ப்பலகைகள் பல திசைகளைச் சுட்டிக் கொண்டிருந்தன. அந்த டூரிஸ்ட் கைடு என்ன சொல்கிறார் என்று ஒட்டுக்கேட்டால் ஒன்றும் புரியவில்லை. வேறு ஏதோ மொழி.  

அதற்கு மறுபுறம் வேறொரு சிறிய கும்பல் இருந்தது. தெரிந்து கொள்ளும் ஆவலில் வெட்கத்தை விட்டு பக்கத்தில் சென்றேன். நல்லவேளை ஆங்கிலத்தில் விளக்கம் நடந்து கொண்டிருந்தது.
Cistern
பைஜான்டியம் பேரரசு என அழைக்கப்படும் கிழக்கத்திய ரோமப்பேரரசு பல நாடுகளை உள்ளடக்கியது, அந்த நாடுகளுக்கெல்லாம் இதுதான் மையப்புள்ளியாம். இங்கிருந்து பேரரசைச் சேர்ந்த எல்லா நாடுகளுக்கும், எவ்வளவு தூரம் என்பதை துல்லியமாய்க் கணித்து, அந்த தூணில் குறித்து வைத்திருந்தார்களாம். அது இன்றும் பார்வைக்குக் கிடைத்தது.
சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்னால், எப்படித்தான் தூரத்தைக் கணித்தார்களோ என்று ஆச்சரியமாக இருந்தது. அதோடு அவ்வளவு நாடுகளும் அவர்களுக்கு கீழே இருந்தவை. இவ்வளவு தூரத்திலிருந்து அத்தனையையும் பிடித்து ஒரு மாபெரும் பேரரசாக விளங்கிய ரோமப்பேரரசையும் அதனை ஆண்ட மாமன்னர்களையும் நினைத்தால் மெய் சிலிர்த்தது.
ரோமப்பேரரசில் இன்னும் என்னவெல்லாம் அதிசயம் இருக்குமோ என்று நினைத்த வண்ணம், "ரோமன் சிஸ்டர்ன்" எங்கிருக்கிறது என்று கேட்டேன். இதோ என்று அதன் பின்  பக்கத்தைக் காண்பித்தார்கள். அங்கு ஒரு சிறிய கட்டடம் இருந்தது. 
Outside
இதுவா அதிசய சிஸ்டர்ன், கொஞ்சம் ஓவரா பில்டப் கொடுத்துட்டாய்ங்களா என்று நினைத்துக் கொண்டே அதனருகில் சென்று அங்கிருந்த லைனில் நின்றேன். நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தால், கீழே படிக்கட்டுகள் சென்றன.  

கீழே இறங்கினால் அங்கே அதல பாதாளத்தில் ஒரு அதிசயம் கண்முன் விரிந்தது.
அண்டர் கிரவுண்டில் ஒரு பெரும் மண்டபம் இருந்தது. சீரான மிக உயரமான தூண்கள் தாங்கிய அந்த மாபெரும் இடம் குடி நீர் சேமிக்கும் இடமாக இருந்ததாம்.

இந்த இடத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள். இதன் எதிரே 'ஹாகியா சோஃபியா' என்னும் ரோம ஆலயம், அதன் கொஞ்சம் தள்ளியிருக்கும் "புளுமாஸ்க்" அந்த புளுமாஸ்க் இருந்த இடம்தான் ரோமப் பேரரசர்களின் அரண்மனை இருந்த இடம். இவை எல்லாவற்றிகும் குடிநீர் தேவையை இந்த பாதாள அரங்கம் தான் தீர்த்து வைத்ததாம்.

பேசிலிக்கா சிஸ்டர்ன் (Basilica Cistern) அல்லது "மூழ்கிய அரண்மனை" (Sunken Palace) என்று அழைக்கப்படும் இந்த அரங்கம் ரோமப்பேரரசர் ஜஸ்டினியன் (R 527-565)  அவர்களால் கட்டப்பட்டது. இவர்தான் ஹாகியா சோஃபியாவையும் கட்டியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த இடத்தில் ஒரு பெரிய கத்தீட்றல் இருந்ததாம். அதனால்தான் அந்தக் காலத்திலிருந்தே இது பேசிலிக்கா சிஸ்டர்ன் என்று அழைக்கப்படுகிறது.

460 அடி நீளமும் 230 அடி அகலமும் உள்ள இந்த செவ்வக வடிவ கட்டிடம் 30 அடி உயரமுள்ள 336 தூண்களால் தாங்கப்படுகிறது. மொத்தம் 12 வரிசையில் வரிசைக்கு 28 தூண்கள். ஒவ்வொரு தூணுக்கும் இடைவெளி 16 அடி.  மேற்கூரையின் எடை முழுவதையும் அழகான வடிவமைக்கப்பட்ட வளைவுகள் கொண்டு வந்து தூணில் நிறுத்துகின்றன. எல்லாத்தூண்களும் மார்பிளால் அமைந்து பல்வேறு ஸ்டைல்களில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் 98 தூண்கள் கொரிந்திய ஸ்டைல் மற்றவை தாரிக் ஸ்டைல் என்று சொன்னார்கள்.
1.6 லட்சம் அடி சதுர பரப்பளவுள்ள இந்த அரங்கில் சுமார் ஒரு லட்சம் டன் நீரை சேமித்து வைக்க முடியும். தரையும், சுவர்களும் தூண்களும் வாட்டர் புரூப் செய்யப்பட்டனவாம். இவ்வளவும் 1500 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது என்பதுதான் அதிசயம்.
இந்த முழுக் கட்டடத்திற்கும் மூலைக்கல்லாக அதாவது ஹெட் ஸ்டோனாக தென்மேற்குப் பகுதியில் இரண்டு மெடுசா தலைகள் இருக்கின்றன. ஆனால் தலைகீழாக இருந்தன.
Medusa
பழைய கால புராணக்கதையின் படி அழகிய உருவமும் கவர்ச்சியான கருப்புக்கண்களும், நீண்ட முடியும் உடைய மெடுசா என்னும் பெண், ஜீயஸின் மகன் பெர்சியஸ் மேல் காதல் கொண்டாள். 
Medusa
ஆனால் பெர்சியஸ் மேல் ஏற்கனவே காதல் கொண்டிருந்த ஏத்தெனா சக்களத்திச் சண்டையில் மெடுசா மேல் பொறாமை கொண்டு அவளுடைய நீண்ட முடியை பாம்புகளாக மாற்றி விட்டாள். அப்போதிலிருந்து மெடுசா யாரைப்பார்த்தாலும் அவர்கள் கல்லாக மாறிவிட்டனர். எனவே பெர்சியஸ் மெடுசாவின் தலையை வெட்டி அதன் சக்தி மூலம் பல எதிரிகளை வென்றானாம். எனவே பைஜான்டியன் காலத்தில் கட்டடத்திற்கு பாதுகாப்பாக மெடுசா தலைகளைச் செய்து அதைப்பார்க்கும் யாரும் கல்லாக மாறிவிடக் கூடாது என்று தலைகீழாக வைத்துவிடுவார்களாம்.    
ஆட்டமன் காலத்திலும் பலமுறை இந்த சிஸ்டர்ன் பராமரிக்கப்பட்டாலும் பின்னர் இதன் தேவை சுருங்கிப்போய் முற்றிலுமாக கைவிடப்பட்டது.

 பைஜான்டிய காலத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வந்த பி.ஜிலியஸ்  (P.Gylius) இதனைக் கண்டுபிடித்து மறுபடியும் வெளி உலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அதன்பின் துருக்கி அரசாங்கம் 1985-87ல் சுமார் 50000 டன் சேற்றை எடுத்துவிட்டு இதனை மியூசியம் ஆக்கி உள்ளே நடந்துபோக நடைமேடைகள் உருவாக்கி பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது. இஸ்தான்புல்லில் இன்னும் வெறென்ன அதிசயங்கள் நமக்கு காத்திருக்கிறதோ?
 - தொடரும்.


Thursday, July 17, 2014

சிவந்த மண்ணும் சிவந்த புண்ணும் !!!!!!!!!!

"சேகர் நம்மூர் சிவராம் டாக்கீசில் சிவந்த மண் போட்டிருக்காய்ங்க, போலாம?" என்றான் மகேந்திரன்.
"சிவாஜி நடிச்ச படமா? வெளிநாட்டில எடுத்ததாச்சே" என்றேன்.
"ஆமாடா ஸ்விட்சர்லாந்தில எடுத்தது, உலகம் சுற்றும் வாலிபனுக்கு போட்டியா எடுத்ததுரா"
"சர்ரா எங்கப்பாட்ட கேக்கிறேன்".
“என்ன படம்பாக்க உங்கப்பாட்ட கேட்டா போவ ?”.
-ஆம் உண்மைதான், ஏதாவது படம் பார்க்கணும்னா எங்கப்பாவை கேக்கனும். ரெண்டு நாள் கழிச்சுதான் சரி இல்ல வேணாம்னு சொல்வாரு. அப்புறம் ரொம்ப நாளுக்கப்புறம்தான் கண்டு பிடிச்சேன், முதல்ல அவர் போய்ப்பார்த்துவிட்டு ஆபாசமில்லாத நல்ல படம்னா மட்டும் தான் எங்களைக் கூப்பிட்டு போவாரு. அதிலேயும்  இந்த எம்ஜியார் படம்னா நல்லா பார்த்துட்டுதான் எங்களை விடுவாரு. ஆனா சிவகவி, சரஸ்வதி சபதம், கணவனே கண்கண்ட தெய்வம், திருமால் பெருமை, சம்பூர்ண   ராமாயணம்  போன்ற படங்களுக்கு கேட்காமலேயே கூப்பிட்டுப்போவார்.
நான் பிளஸ் ஒன் வந்தப்புறம்தான், என்னைத்தனியாக விட ஆரம்பித்தார். ஆனாலும் என் தம்பிகளை அழைத்துக் கொண்டுதான் போக முடியும், அதுவும் மாலைக்காட்சி மட்டும்தான். வெள்ளிக்கிழமை மட்டும்தான். இரவுக்காட்சி ம்ஹீம் போனதே இல்லை.
எங்களை தனியாக விட ஆரம்பித்தபிறகு, அவர் படம் பார்க்குறதயே விட்டுட்டார். எங்களுக்காகத்தான் வேண்டா வெறுப்பா பாத்தார் போலருக்கு.  
"சிவந்த மண்ணுக்கு" ஓகே வாங்கி, உற்சாகமாய் கிளம்பினோம்.
போற வழியில் கீழத்தெரு பக்கத்துல ஒரு நாய் என்னை முறைச்சு ஓரத்தில் உள்ள ஊசிப்பல்லைக் காண்பித்தது. எனக்கும் நாய்களுக்கும் ஆவுறதே இல்லை. அதப்பத்தி ஏற்கனவே சொல்லியிருக்கேன். என்னவோ அது வச்சிருக்கிற எலும்புக்கு நான் போட்டிபோட்ட மாதிரி, ர்ருங்குது, குர்ருங்குது அதைபார்த்த எனக்கு டர்ருங்குது.
தம்பிக கையை உதறிட்டு ஒரே ஓட்டம். இதான் சாக்குன்னு அது துரத்த ஆரம்பிச்சிருச்சு. இந்த நாய்க மனசுல என்னதான் நெனைக்குதுன்னு புரியமாட்டேங்குது. விழுந்தடிச்சு ஓடினதில, ஒரு கல் தடுக்கி குப்புற விழுந்தேன். புல் தடுக்கினாலேயே விழுந்துடுவேன். கல்தடுக்கினா விழாம இருப்பேனா. முழங்கையில்  "சிவந்த மண் மேல நல்லா விழுந்து சிராய்ஞ்ச்சு, சிவந்த புண்" ஆயிப்போச்சு. என்னை ஒரு இளக்காரப்பார்வை பார்த்த நாய் திரும்பிப்போயிருச்சு. வாண்டு மாமாவின் பலே பாலு போல விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டலன்னு, எந்திரிச்சு நடந்தேன். அப்புறம்தான் ரொம்பதூரம் ஓடிவந்தது தெரிஞ்சதோடு, தம்பிகளையும் விட்டுட்டு வந்தது ஞாபகம் வந்திச்சு.    
நேரா வீட்டுக்குப்போனா, என் தம்பிக ரெண்டுபேரும் எப்படியோ வீட்டுக்குப் போயிட்டாய்ங்க. எங்கப்பா வழக்கம் போல் கோபமா தன்  பிரம்பை எடுத்து விளாசிட்டார். இரண்டு மூணு அடி சிவந்த புண் மேலேயே பட்டுச்சு. தம்பிகள நடுத்தெருவில விட்டுட்டு வந்துட்டேன்னு கோவம். வெந்த புண்ணுல வேலைப் பாச்சுறதுன்னு கேள்விப் பட்டிருக்கேன். இப்படி வெந்த புண்ணுல கோலப் பாச்சுறது, எங்கப்பாவுக்கே ஞாயமா, நாய் துரத்தினா நான் என்ன செய்யறது ?. பட்ட கால்ல  படும்னுதானே சொல்வாய்ங்க.  பட்ட கையிலும் படும்னு சொல்லவேயில்லை.
இதான் என் "சிவந்த மண்" படம்பார்க்க போயி,நாய்துரத்தி சிவந்த மண்ணில் (அதான் பாஸ் செம்மண்) விழுந்து "சிவந்தபுண்" வாங்கிய கதை.
அப்புறம் லீவு முடிஞ்சு காந்திகிராமம் தம்பித்தோட்டம் ஹாஸ்டலுக்கு திரும்பப்போனேன். ஒரு மாசம் கழிஞ்சிருக்கும் ஆறுமுகம் வந்து சொன்னான், டேய் ஆஃல்பி சின்னாபட்டி கோமதி தியேட்டர்ல “சிவந்த மண்” வந்துருக்குன்னு. "டேய் எங்கூர்ல பாக்கறதுக்கு மிஸ் ஆயிருச்சு, எப்படியாவது  போயிரனும்டா" என்றேன்.
நாங்க ரெண்டுபேரும் ரகசிய திட்டம் போட்டோம், சாயந்திரம் ஸ்டடி டைம் ஆரம்பிச்சவுடன் நைசா நழுவி பின்புறமுள்ள ஓடை வழியே நடந்து கோமதி தியேட்டர் போய்ட்டோம்.
இரவு உணவு சமயத்தில் சில நேரங்களில் வார்டன் அட்டென்டஸ் எடுப்பதுண்டு. எங்கள் துரதிருஷ்டம் அன்றைக்கு எடுத்தார். ஆறாவது முதல் +2 வரை எடுத்து முடிப்பதற்கு 1/2 மணி நேரமாகும் என்பதால் அட்டென்டஸ் எடுக்க ஆரம்பித்தவுடன் ஏற்கனவே செட்டப் செய்தபடி, ஆறாவது வகுப்பு பையன் ஒருவன் ஓடிவந்து, கோமதி தியேட்டரில் எப்பொழுதும் ஒரே இடத்தில் அமரும் எங்களை வந்து உலுக்கினான். "அண்ணே ஓடிவாங்க சீக்கிரம், வார்டன் அட்டென்டஸ் எடுக்கிறார்". படம் சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருந்தது, வேண்டா வெறுப்பாக, எழுந்து ஓடி வந்தோம். லொங்கு லொங்கென்று ஓடி மூச்சு வாங்க ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம்.  
அட்டென்டஸ் எடுக்க ஆரம்பித்து இரவு 8 மணிக்கு. ஆறாவது படிக்கும் குமார் எங்களுக்குத் தகவல் சொன்னது 8.30 மணி. நாங்கள் ஹாஸ்டல் வந்து சேர்ந்தது 9.00 மணி. அப்போது தான் சாப்பாடு முடிந்திருந்தது.
வார்டன் ரூமுக்குச் சென்றோம் "அண்ணா கூப்பிட்டீங்களா?.( வார்டன் மற்றும் ஆசிரியர்களை அண்ணா என்றும் ஆசிரியைகளை அக்கா என்றும் அழைப்பது காந்திகிராம வழக்கம்)
"எந்தப் படத்துக்கு போனீங்க?", என்றார் வார்டன்.
"படமா என்ன சொல்றீங்க ? ", என்றேன் நான்.
"அண்ணா மணியைப் பாருங்க, எந்தப்படம் 9 மணிக்குள்ள முடிஞ்சிருது" என்றான் ஆறுமுகம்.
வார்டன் சந்தேகம் தெளிந்த தொனியில், "அப்ப எங்கதான் போனீங்க ?", என்றார்.
வயிற்றைப்  பிடித்த நான், "கடுமையான வயிற்று வலி அதான் ஓடைப் பக்கம் போனேன்".
"ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில வயித்தாலயா ?", என்றார் வார்டன்.
இவன் துணைக்குப் கூப்பிட்டான் அதான் நான் போனேன்" - இது ஆறுமுகம்.
"சரி சரி போங்க" என்றார் வார்டன்.
பாதிப்படம் பார்த்ததோடு, இரவு உணவு கிடைக்காத எரிச்சலில் ரெண்டு பேரும் போய்ப் படுத்தோம்.

அன்றிலிருந்து இன்று வரை சிவந்த மண் பார்த்து முடிக்கவே இல்லை. யார்ட்டயாவது DVD கிடைக்குமா?.