Monday, December 29, 2014

இளையராஜாவின் சாகச முயற்சி

எழுபதுகளில் இளையராஜா – பாடல் எண் 15 “என் கண்மணி என் காதலி”

1978ல் வெளிவந்த சிட்டுக்குருவி என்ற திரைப்படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல் இது. பாடலைக் கேளுங்கள்.

பாடலின் சூழல்:
பேருந்தில் பயணம் செய்யும் காதலர்கள் மனதுக்குள் பாடும் பாடலாக இசையமைக்கப்பட்டிருக்கிறது.
இசைக்கோர்வை:

இளையராஜா எப்பொழுதும் பயன்படுத்தும் கிடார் டிரம்ஸ் தவிர இசைக்கருவிகளில் பலவித  ஒலிகளை எழுப்பி இசையமைத்திருக்கிறார்.
குறிப்பாக சோதனை முயற்சியாக Counterpoint என்று சொல்லக்கூடிய இரு மெட்டுகள் ஒன்றையொன்று தழுவி ஒரே மெட்டாக ஒலிக்கும் மேற்கத்திய டெக்னிக்கை இந்தப்பாடலில் பயன்படுத்தி அசத்தியிருக்கிறார். ஆண்குரலிலும் சரி பெண்குரலிலும் சரி பல்லவியில் நான்கு பேர் பாடியதைப்போல ஒலிக்கும். ஆண்குரலுக்கும் பெண்குரலுக்கும்   அதே வரியில்  பதில் சொல்வது போல் வருகிறது. இது ரெக்கார்டிங் டெக்னிக் மட்டுமல்ல இசையமைப்பதிலும் அவ்வாறே இசையமைத்து அதற்கு வார்த்தைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த டெக்னிக்கில் இது  நல்ல ஹிட் பாடலாக அமைந்தது. அது தவிர பஸ் பயணத்தின் நடுவில் பாடல் ஒலிப்பதால் இயற்கையாக வரும் சத்தங்களை அதே சுதியில் ஒலிப்பது போல இணைத்துள்ளதும் அபாரம். நடுநடுவில் வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள்
நல்லா சொன்னீர் போங்க,
இந்தாம்மா கருவாட்டுக்கூடை முன்னாடிபோ
 தேனாம் பேட்டை சூப்பர் மார்கெட் இறங்கு
-அதுதவிர கண்டக்டரின் விசில் சத்தமும் சுதியில் ஒலிக்கிறது.
என் கண்மணி’ பாடல் பற்றி இளையராஜா கூறியதாவது:-
“சிட்டுக்குருவி படத்தின் டைரக்டர்கள் தேவ்ராஜ்-மோகன் இரட்டையர்களில், தேவ்ராஜ் எப்போதும் ஏதாவது பரிசோதனையாக செய்ய முயற்சிப்பார். “சிட்டுக்குருவி” படத்தில் காதலனும் காதலியும், தங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். இப்போது காதலனின் உள்ளமும், காதலியின் உள்ளமும் கலந்து பாடுவது போல, ஒரு பாடலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
இது ஒரு புது விஷயமல்லவா? இதற்கு மேல் நாட்டு இசையின் ‘Counterpoint’-ஐ உபயோகிக்க முடிவு செய்தேன்.  இதுபற்றி தேவராஜிடமும் விளக்கி சம்மதமும் வாங்கி விட்டேன்.
கவிஞர் வாலி, இரவு நேரம் என்றும் பாராமல் ஒத்துழைத்து தினமும் வந்தார்.  அவரிடம் இதை விளக்கியபோது, டியூனை வாசிக்கச் சொல்லிக் கேட்டார்.  ‘ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு டியூன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா?’ என்று கேட்டார்.
நான் அவரிடம், “அண்ணே! இரண்டு டியூனும் தனியாக பாடப்பட்டால் அதனதன் தனித்தன்மை மாறாமலும், ஒரு டியூனுக்கு இன்னொரு டியூன் பதில் போலவும், அமைய வேண்டும்.  அந்த பதில் டியூனும் தனியாகப் பாடப்பட்டால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும்.  இரண்டையும் சேர்த்து பாடினால், ஒட்ட வைத்தது போல இல்லாமல், ஒரே பாடலாக ஒலிக்க வேண்டும்” என்றேன்.
பதிலுக்கு வாலி, “என்னையா நீ? இந்த நட்ட நடு ராத்திரியில ‘சிட்டுக்குருவிக்கு சிட்டப் பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்குறே? முதல்ல ஒரு ‘மாதிரி’ (Sample) பாடலைச் சொல்லு!” என்றார்.
உடனே வேறு ஒரு பாடலைப் பாடி விளக்கினேன். நான் ஒரு டியூனையும், அமர் ஒரு டியூனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினோம்.
‘சரி’ என்று புரிந்ததாகத் தெரிவித்த வாலி, கொஞ்சம் யோசித்தார்.  பின்னர் கையில் Pad-ஐ எடுத்தவர் யாருக்கும் காட்டாமல் அவர் எழுதும் பாணியில் மளமளவென்று எழுதினார்.
பாடல் என் கைக்கு வந்தது.  இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும், மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வருவது மாதிரியே வாலி எழுதியிருந்தது எல்லோருக்குமே பிடித்துப் போயிற்று.


இந்தப் பாடலை Record செய்யும்போது இன்னொரு பிரச்சினை வந்தது.  ஒரு குரலில் காதலன் பாட, இன்னொரு குரலில் காதலனின் உள்ளமும் பாட வேண்டும் அல்லவா?  இதை எப்படி Record செய்வது?
ஏ.வி.எம். சம்பத் சாரிடம் “ஒரு குரலில் பாடுவதை மட்டும் முதலில் Record செய்வோம். மற்றொரு குரல் பாடும் இடத்தை வெறுமனே விட்டு விடாமல் இசைக்கருவிகளை இசைப்போம்.  இப்படி முழுப்பாடலையும் பதிவு செய்து விட்டு, அதை மறுபடி Play செய்து இன்னொரு குரலை அதனுடன் பாட வைப்போம்.  பிறகு இன்னொரு Recorder-ல் மொத்தமாக இரண்டையும் பதிவு செய்வோம் என்று முடிவு செய்து தொடங்கினோம்.
டைரக்டர்கள் தேவ்ராஜ்-மோகன் இருவரில், மோகன் சாருக்கு Composing சமயத்தில் இருந்தே இதற்கு உடன்பாடில்லை.  இந்தப் பாடலும் பிடிக்கவில்லை.  பாடல் பதிவு நேரத்திலும் எதுவும் பேசாமல் ‘உம்’மென்றே காணப்பட்டார்.  ‘எப்படி வருமோ?’ என்று அடிக்கடி சந்தேகம் எழுப்பிக் கொண்டிருந்தார்.
தேவ்ராஜோ உற்சாகமாக இருந்தார்.  ‘இந்த மாதிரி Idea வருவதே கஷ்டம்.  புதிதாக ஏதாவது செய்வதற்கு எப்போது சந்தர்ப்பம் கிட்டும்?  இப்படிச் செய்கின்ற நேரத்தில் அதைப் பாராட்டாவிட்டாலும், புதிய முயற்சி என்று ஊக்குவிக்கவில்லை என்றால் கலைஞனாக இருப்பதற்கு அர்த்தம் என்ன?’ என்று கூறினார்.

  1. Baskar, Ilayaraja  and Gangai Amaran


இந்தப் பாடலின் இடையிடையே ‘தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு!’ ‘இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னாடி போ!’ என்று பேசுகிற மாதிரி வரும்.  இதற்கு அண்ணன் பாஸ்கரைப் பேச வைத்தேன்.  பாடல் ரசிகர்களிடையே அதற்குரிய வரவேற்பைப் பெற்றது”. என்றார். (நன்றி தினமலர்)

பாடல் வரிகள்:
என் கண்மணி என் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நானமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
நல்லா சொன்னீர் போங்கோ..

என் மன்னவன் என் காதலன்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி..
இரு மான்கள் பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்..
இளமாலையில்..
அருகாமையில்..
வந்தாடும் வேளை இன்பம் கோடியின்று
அனுபவம் சொல்லவில்லையோ..
இந்தாம்மா கருவாட்டு கூடை.. முன்னாடி போ..

என் மன்னவன்..

என் கண்மணி..

தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கேட் இறங்கு..
மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாளச் சின்னம் அன்று தரவேண்டுமே
இரு தோளிலும் மணமாலைகள்
கொண்டாடும் நேரமென்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
என் கண்மணி..
என் மன்னவன்..

பல்லவியில் இரு மெட்டுகள்  இருக்கும் இந்த அமைப்பில் இன்னொரு சேலஞ்ஜ் என்னவென்றால், இதற்கு வார்த்தைகள் அமைப்பதும் கடினம். எப்படியென்றால் அந்த இரு மெட்டுகளின் வரிகளை சேர்த்துக் கேட்டாலும் அர்த்தம் வரவேண்டும், தனித்தனியாகப் பாடினாலும் தனியாக அர்த்தம் தொனிக்க வேண்டும்.. இந்தச் சவாலை எடுத்துக் கொண்டு கவிஞர் வாலி மிகச் சிறப்பாக வரிகளை அமைத்திருக்கிறார். கூர்ந்து கேட்டுப்பாடிப்பாருங்கள்  அந்த வித்தை புரியும்.
பல்லவி -1(ஆண்குரல்)
என் கண்மணி இளமாங்கனி சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக்கேட்டு நாணமோ.
பல்லவி-2
உன் காதலி உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதே
நீ நகைச்சுவை மன்னனில்லையோ.
பல்லவி-1(பெண்குரல்)
என் மன்னவன் எனைப்பார்த்தும் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத்தூண்டுமோ
பல்லவி-2
என் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான்
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ

வாலி அவர்களின் முதல் சரணத்தைப் பாருங்கள்,”இருமான்கள் பேசுவதற்கு மொழி தேவையில்லை அவை பிறருக்கும் கேட்காது ஏனென்றால் அது மெளன மொழி”, என்று சொல்லுகிறார். அதோடு. “ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவின்றி வேறு எந்தக்கவனமும் இருக்காது”, என்று சொல்லும்போது பாடலின் சூழலை படம் பிடித்துக்காட்டுகிறது.
குரல்:
இந்தப்பாடலைப் பாடியவர்கள் SPB, P.சுசிலா, குறிப்பாக சுசிலாவின் குரல் தேனாக இனிக்கிறது. உச்சரிப்புச் சுத்தம் காதல் கனியும் குரல் என்று இருவரும் அசத்துகிறார்கள். எனக்கொரு சந்தேகம். P.சுசிலா இளையராஜாவுக்குப் பாடிய பல பாடல்கள் பெரிய ஹிட் ஆனாலும் சுசிலா என்றால் MSV இசையமைத்த பழைய பாடல்களை மட்டும் சொல்வது ஏன் என்று தெரியவில்லை.
மொத்தத்தில் இளையராஜாவின் இந்த சோதனை முயற்சியில் இணைந்த வாலி SPB, சுசிலா ஆகிய யாவருக்கும் இது ஒரு வெற்றிப்பாடல் ஆகும்.

தொடரும் >>>>>>>>>>>>>>>>>>>>>>>



Wednesday, December 24, 2014

ஒரு நாள் ஒரு நாள் அதிகாலை !!!!!!!!!!!!!!!!


     அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என்  மனமார்ந்த கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் .
இறைமைந்தன் இயேசு, நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பிறந்து அன்பும் சமாதானமும் உலகில் பரவ அருள் புரிவாராக .

அடியேன் எழுதி மெட்டமைத்த கிறிஸ்மஸ் பாடல்களில் ஒன்றை கீழே தருகிறேன்.கேட்டு மகிழுங்கள்.


ஒரு நாள் ஒரு நாள் அதிகாலை
குளிரும் பனியும் சூழ்ந்த வேளை
ஒளிர் வெள்ளிகள் முளைத்த வேளை
விடி வெள்ளியாய் உதித்த பாலன்

அவர் நாமம் நாமம் அதிசயம்
அவர் வல்லமை தேவ ரகசியம்
அவர் ஆலோசனையின்   கர்த்தரே
அவர் சமாதான அரசரே

ஆதாம் மூலம் பாவம் வந்தது
அதனால் ஆண்டவர் தொடர்பும் அறுந்தது
அந்த இருளை நீக்க ஒளியும்  பிறந்தது 
வந்து அருளும் மீட்பும்   அன்புடன் தந்தது -அவர் நாமம் நாமம்

ஆதி வார்த்தை வடிவம் கொண்டது
அன்பின் உருவாய் அகிலம் வந்தது
கடும் அலகை நீக்க அருளும் பிறந்தது
நம் ஆண்டவர் இயேசுவின் உருவில் உதித்தது -அவர் நாமம் நாமம்.



                                                     

Monday, December 22, 2014

இளையதளபதியின் அம்மாவின் இசை !!!!!!!!


எழுபதுகளில் இளையராஜா: பாடல் 14 “மாலை இளம் மனதில்"
1977ல் வெளிவந்த 'அவள் ஒரு பச்சைக்குழந்தை' என்ற படத்தில் வெளிவந்த பாடல் இது. பாடலை முதலில் கேட்போம்.
https://www.youtube.com/watch?v=3s0IEi0y4NE

இசைக்கோர்வை:
கிடார் பீசோடு ஆரம்பித்து அக்கார்டியன் இசை சேர்ந்து டிரம்சுடன் சீப்பு இன்ஸ்ட்ருமென்ட் (பெயர் தெரியவில்லை) மற்றும் புல்லாங்குழல் இசை கூவி முடிக்க பெண் குரலில் "மாலை இளம் மனதில்" என்ற பல்லவி ஆரம்பிக்கிறது. முதலாவது BGM-ல் கிடார் வந்து, பின்னர் புல்லாங்குழல் மறுபடியும் கிடார் வந்து முடிய ஆண்குரலில் "மலர் போல பெண்ணொன்று ", என்று சரணம் ஆரம்பிக்கிறது. 2-ஆவது BGM-ல் இசையின் சுதி சிறிது வேறுபட்டு செகண்ட்ஸில் ஒலித்து, அதே இசைக்கருவிகளின் காம்பினேஷனில் ஒலித்து முடிய, மறுபடியும் பெண்குரலில், "விழி மீது துங்கும் போதும்" என்று 2-ஆவது சரணம் ஆரம்பித்து முடிவில் ஆண்குரலும் பெண்குரலும் இணைந்து பாடி பாடல் முடிகிறது. 2-ஆவது சரணத்தின் முதல்வரி முதலாம் சரணம் போலன்றி சற்றே மாறுபட்டு ஒலிக்கிறது.
வெஸ்டர்ன் ஸ்டைலில் ஒலிக்கும் இந்தப்பாட்டு இளையராஜாவின் பல பாட்டுகளுக்கு முன்னோடியாகும். குறிப்பாக "இளமை எனும் பூங்காற்று" என்ற பாடலின் முன்னோடி இந்தப்பாடல் என்றும் சொல்லலாம்.  

பாடலின் குரல்கள்:
Shoba
இந்தப்பாடலை இணைந்து பாடியவர்கள் "ஷோபா சந்திரசேகர்" மற்றும் S.N.சுரேந்தர். ஷோபா, இயக்குநர் S.A.சந்திரசேகர் அவர்களின் மனைவி என்பதும் இளையதளபதி விஜய் அவர்களின் தாய் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஐந்து வயதிலிருந்து கர்நாடக சங்கீதம் கற்றவர். சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கலூரியில் பட்டம் பெற்றவர். இவருடைய முதல் பாட்டு M.S.விஸ்வநாதன் இசையமைப்பில் 1967-ல் வெளி வந்த "இரு மலர்கள்" என்ற படத்தில் " மகராஜா ஒரு மகாராணி" என்ற பாடலில் சதனுடனும் TMS உடனும் இணைந்து பாடியது .இளையராஜாவுக்கு இதுதான் முதலில் பாடிய பாடல் . நன்றாகத்தான் பாடியிருக்கிறார்.  என்ன காரணத்தாலோ பிரபலமாகவில்லை. ஷோபா பல படங்களுக்கு கதை எழுதி சிலவற்றை டைரக்டும் செய்திருக்கிறார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி  ஒன்றும் இல்லை. அதன் பின்னர் சில பாடல்கள் பாடியுள்ளார்.சில பாடல்களை ஏன் பாடினார் என்றும் தெரியவில்லை . அவை யாவன  “பொட்டிக்கடையிலே புட்டு இருக்குது (நீதியின் மறுபக்கம்),”தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா”,”கோடம்பாக்கம் ஏரியா” ,”பீர் வேணுமா பிராந்தி வேணுமா”. இப்போது சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் கர்னாடிக் பாடல்கள் பாடுகிறார்.
SN Surendar
  சரி இப்ப நம்ம பாட்டுக்கு வருவோம்.இதில் எனக்குப்பிடித்தது ஷோபாவின் குரல் S.N.சுரேந்தர் அதிகமாக மூக்கில் பாடுபவர் என்பதால் அவருடைய குரல் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அதோடு பொன்வண்டு என்பதை பொன் வள்ன்டு என்று பாடுவதும் அறவே பிடிக்காது.ஆனால் இவர் பின்னணிப் பாடகர் என்பதைவிட நடிகர் கார்த்திக் (அலைகள் ஓய்வதில்லை) மற்றும் நடிகர் மோகன் அவர்களுக்கு பின்னனி குரல் கொடுத்து பிரபலமடைந்தார். அதோடு கங்கை அமரன் இசைக்குழுவில் பெரும்பாலும் இடம் பெற்றிருப்பார். அதற்கு மேலாக அண்ணன் தங்கை காதல் டூயட் பாடுவது என்பதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அநாச்சாரம். இதில் அவர்கள் என்ன பீலிங் கொடுக்க முடியும்.

பாடல் வரிகள்:
மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது..மாலை..

மலர் போல பெண்ணொன்று மடி மீது பொன் வண்டு..
மலர் போல பெண்ணொன்று மடி மீது பொன் வண்டு..
மனம் கேட்பது உன்னிடம் மது தாவென்று..
ரதி மன்மதன்.. ரதி மன்மதன் காவியம் இதுதான் இன்று

மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது..மாலை..

விழி மூடித் தூங்கும் போதும் உடல் மீது கோலம் போடும்
விழி மூடித் தூங்கும் போதும் உடல் மீது கோலம் போடும்
விளையாட்டிலே இன்பமே அதுதான் வேண்டும்..
இனி என்னவோ ஓ ஓ ஓ..
இனி என்னவோ வாழ்வெல்லாம் சுகம் ஆரம்பமாகும்

மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது..மாலை..



பாடல் வரிகளை எழுதியவர் கங்கை அமரன். சந்தத்தில் திறமையாக எழுதக் கூடியவர் கங்கை அமரன். ஆனால் இவர் எழுதிய பாடல்களில் பல்லவி முதல் சரணத்தில் இருக்கும் கவித்துவம் 2-ஆவது சரணத்தில் இருப்பதில்லை. இந்தப்பாடலும் அதற்கு உதாரணம்.

குரலின் வரிகள்:

வேறு சில குறைகள் இருந்தாலும், இசையில் ராஜா எந்தக் குறையையும் வைக்கவில்லை என்பதால் இது எனக்குப்பிடித்த பாடல். 

தொடரும் >>>>>>>>>>>>>>>>

Thursday, December 18, 2014

கஷ்டம்டா சாமி !!!!!!!!!!!!! பகுதி 2

  1. Indian consulate in New York


இதன் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும் 

http://paradesiatnewyork.blogspot.com/2014/12/blog-post_10.html

அவலம் 3:
சிறிது நேரத்தில், ஒரு குடும்பம் வந்தது. ஒரு வயதானவர் தடியை ஊன்றிக் கொண்டு மூச்சு வாங்க வந்தார். இரண்டாவது மாடியில் இருக்கும் இந்த ஆபிசுக்கு எலிவேட்டர் கிடையாது. அவரோடு ஒரு இளவயதுப்பெண், பேபி ஸ்டோலரில் ஒரு வயதுக் குழந்தை, கையில் மூன்று வயது ஆண் குழந்தை.  அந்தப்பெண் பரபரவென்று இருந்தாள். அவர்கள் பேச்சிலிருந்து நான் தெரிந்து கொண்டது, அந்தப் பெண்ணின் கணவன் H1B விசாவில் இருக்கிறான். அந்த வயதானவர் கணவனின் அப்பா, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக( ?) வந்திருக்கிறார்.  
"உங்களுக்கு என்ன வேணும்"?
"பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டும்".
"யாருக்கு?"
"என் மாமனாருக்கு, இதோ வந்திருக்கிறார்?".
"எங்கே கொடுங்கள்".
"என்னம்மா பாஸ்போர்ட் காலாவதி ஆகி எட்டு மாதம் ஆகிவிட்டதே".
"சாரி சார் கவனிக்கவில்லை"
வாட் எபவுட் விசா?
விசிட்டர் விசா, அதுவும் எக்ஸ்பயர் ஆகி 6 மாசமாச்சு, ஆனா எக்ஸ்டென்ஷனுக்கு அப்ளை செய்திருக்கிறோம்.
"இது சிக்கல், உங்கள் கணவரை வரச்சொல்லுங்கள்"
இந்த மேற்கண்ட 10 நிமிட உரையாடல் நடப்பதற்கு கிட்டத்தட்ட 30 நிமிடம் ஆகியது.
ஏனென்றால் மூச்சு வாங்கிய பெரியவர், அப்படியே கண்களை மூடி சேரில் உட்கார்ந்துவிட, பெண்ணின் கையைப் பிடித்திருந்த பையன் கையை உதறிக்கொண்டு, அங்கு மிங்கும் ஓடிக் கொண்டே இருந்தான். அவனை தெலுங்கில் அழைத்துக் கொண்டே ஓடிப் பிடித்து கையில் பிடித்துக் கொண்டு ஒரு கேள்விக்குப் பதில் சொல்வதற்குள் மீண்டும் ஓடினான். நான்கூட ஒரு தடவை பிடித்துக்கொடுத்தேன். இதற்கிடையில் ஸ்டோலரில் இருந்த குழந்தை முழித்துக் கொண்டு வீல்வீல் என்று அலறியது. பசித்து விட்டது போல இருக்கிறது. பின்னர் தாயின் இடுப்பில் ஏறிக்கொண்டு கண்ணீருடன் சிரித்தது. பெரியவருக்கு ஒரு வார்த்தைகூட ஆங்கிலம் தெரியாதலால் பதில் சொல்ல முடியவில்லை.
இதற்கிடையில் இடுப்பில் இருந்த குழந்தை தாயின் கையில் இருந்த ஃபைலைப் பிடுங்கி கீழே எறிய தாள்கள் அந்த ஆஃபிஸ் முழுதும் பறந்தன.
நீதி:  கஷ்டம்டா சாமி.
BLS Passport Service office in New York
சில வாரங்கள் கழித்து எனக்கு ஈமெயில் வந்தது, என் புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் ரெடியாக இருப்பதாக .பக்கத்தில்தானே, உடனடியாக சென்றேன் .பாஸ்போர்ட் எடுத்து கொடுத்தார்கள் .உறையின் மேல் என் பெயர்தான் எழுதப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே   இருந்த பாஸ்போர்ட்டில் வேறு முகம் இருந்தது .  உத்து உத்துப் பார்த்தாலும் அது என் முகம் இல்லை .பேர் கூட வேறாக இருந்தது . “இது என்னது இல்லை”, என்றேன் அந்தப்பெண்ணிடம்..அவள் பலரிடம் கலந்து பேசி , திரும்பவும் என்னிடம் அதே பாஸ்போர்ட்டை  கொடுத்து,   “இதை வைத்துக்கொள்ளுங்கள் நான் இதோ வருகிறேன்”, என்று  சொல்லி விட்டு உள்ளே சென்றாள். எனக்கு கோபமும் ஆத்திரமும் வந்து பசி வேறு எடுத்தது .
   உள்ளிருந்து குறைந்த பட்சம் மூன்று பேர் வந்து , என்னிடம் உள்ள பாஸ்போர்டில் உள்ள முகத்தையும் என் முகத்தையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு உள்ளே  சென்று குசு குசுவென்று பேசினர்.இது கான்சுலேட் செய்த தவறு தாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்றும் பேசினார்கள் அதில் ஒருவர் சொன்னார் ,"மாறுவதற்கு சான்சே  இல்லை .ஏனென்றால் நீங்கள் உள்ளூர் என்பதால் நேரில் வருகிறீர்கள் .அவர் பாஸ்டனில் இருப்பதால்   அவருக்கு குரியரில் செல்கிறது என்றார்.
திடீரென்று மனதில் தோன்றி , “அந்த குரியரை அனுப்பிவிட்டீர்களா ?”,  என்று கேட்டேன் .இல்லை என்றார்கள். “அதை  எடுத்து வாருங்கள்”,   என்று சொன்னேன் .நான் சந்தேகப்பட்ட படியே அவருக்கு செல்லும் குரியரில் என் பாஸ்போர்ட் இருந்தது .நல்ல வேளை சரியான சமயத்தில் நான் சென்றேன் என்று நினைக்கும் அதே நிமிடத்தில் குரியர் ஆள் உள்ளே நுழைந்தான் . கொஞ்சம் பிந்தி வந்திருந்தால் என் பாஸ்போர்ட் பாஸ்டன் போயிருக்கும்.
நீதி : என்னத்தை சொல்ல போங்க.

பின்குறிப்பு: பலபேர் கம்ப்ளைன்ட் செய்ததால் அந்த ஏஜன்சியையும் மாற்றிவிட்டதாக கேள்வி.


Monday, December 15, 2014

வீணாப்போன கங்கை அமரன் !!!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா பாடல் 13- 'உறவுகள் தொடர்கதை'
Star Brothers Special Moments
Gangai Amaran with Ilayaraja
1978ல் வெளியான 'அவள் அப்படித்தான்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற சுகமான பாடல் இது. முதலில் பாடலைக்கேட்போம்.

பாடலின் சூழல்:
தன்னுடைய முந்தைய உறவில் விரிசலோ முற்றுப்புள்ளியோ விழுந்த சோக சமயத்தில் நாயகி இருக்கும் போது, நான் இருக்கிறேன் உனக்கு, நாம் புதிய உறவில் இணைவோம் என்று ஆறுதல் கூறி நாயகன் பாடும் பாடல் இது.
இசைக்கோர்வை:
எளிய இசையில் சுகமான ராகத்தில் அமைந்த இந்தப்பாடல் இளையராஜாவின் மெலடி பாடல்களில் குறிப்பிடத் தகுந்த ஒன்று என்று சொல்லலாம்.
பியானோவும், கிட்டார் பிளக்கிங்கும் (Plucking) பின்னிப்பிணைந்து, இணைந்தும், இணையாமலும், ஒலிக்க, "உறவுகள் தொடர்கதை", என்று காந்தர்வக்குரல் காதுகளை வருடுகிறது. குரலுக்கு சேதாரம் விளைவிக்கக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்ச்சியில், மெலிதாக பின்னணி இசையும், இசைக்கு சேதாரம் விளைவிக்கக் கூடாது என்று மென்குரலும் இணைந்து மெல்லிசை படைத்துள்ளனர். பியானோ, கிடார், பேஸ் புல்லாங்க்குழல் ஆகிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குரல்:

கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் குரல் மெல்லிய தாலாட்டுப்போல ஒலித்து புண்பட்ட நாயகியின் மனதுக்கு மருந்திடுவது போல ஒரு சூதிங் (Soothing) எஃபக்ட் கொடுக்கிறது. இந்தப்பாடலில் ஜேசுதாஸ் எந்த உச்சரிப்புப் பிழையும் இன்றி பாடுவது இன்னொரு சிறப்பம்சம். 70களின் காலகட்டத்தில்  ஜேசுதாஸின் குரல் இன்னும் இனிமையாகவே ஒலிக்கிறது.
பாடல் வரிகள்:
உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

வரிகளை எழுதியவர் கங்கை அமரன். எளிய வரிகளாய் இருந்தாலும் சந்தம் நன்றாகவே அமைந்துள்ளது. எதுகை, மோனையும் சிறப்பாகவே இருந்து நல்ல கவித்துவமும் இருக்கிறது. அதோடு பாடலின் சூழலையும் கதையையும் நன்றாகவே விளக்கும் படியான சிட்டுவேஷன் பாடல் என்றும் சொல்லலாம்.
குறிப்பாக பல்லவியைச் சொல்லலாம் அதன்பின் 2-ஆவது சரணத்தைவிட முதல் சரணம் நன்றாக அமைந்திருக்கிறது.
"உறவுகள் தான் தொடர்கதை போன்றது, ஆனால் உணர்வுகள் சீக்கிரம் முடிந்துவிடும் சிறுகதை போன்றது. ஆனால் ஒரு கதை முடிந்தாலும் அடுத்த கதை தொடரும் எனவே இனிமேல் இன்பம் தான்" என்று சொல்கிறது பல்லவி.
"உன் நெஞ்சில் பாரம் இருந்தாலும், உனக்காக இருக்கும் நான் அதனை சுமைதாங்கியாய் தாங்குவேன், உன் கண்களின் ஓரத்தில் ஈரம் எதற்கு, உன் கண்ணீரை நான் மாற்றுவேன்", என்று தைரியம் கொடுக்கிறது முதல் சரணம்.
சும்மா சொல்லக்கூடாது நன்றாகவே எழுதியிருக்கிறார் கங்க்கை அமரன் நிறைய குத்துப்பாடல்கள் எழுதியிருந்தாலும் இது போன்ற சில நல்ல பாடல்களை எழுதியிருக்கிறார். ஞாபகத்துக்கு வரும் இன்னொரு சிறந்த பாடல் ஜானி என்ற திரைப்படத்தில் வரும் "காற்றில் எந்தன் கீதம்" என்ற பாடல். அதில் ஒரு வரி எழுதியிருப்பார்.
"நில் என்று சொன்னால் மனம் நின்றா போகும்" என்று.


இசைக்கருவி-வாசிப்பவர் (கிடார்), பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர், இசைக்குழுத்தலைவர், டெலிவிஷன் ஆன்க்கர் என்ற பலமுகங்கள் பல திறமைகள் இருந்தாலும் அவர் 'இளையராஜாவின் தம்பி' என்று மட்டுமே அறியப்பட்டார். அதன்பின்னர் இப்போது இயக்குநர் "வெங்கட் பிரபு"வின் தந்தை என்று அறியப்படுகிறார்.
ஏனென்றால் பல திறமைகள் இருந்தாலும் ஒரு ஃபோகஸ் இல்லாமல் போனதால் தன் தனித்துவத்தை அவரால் உருவாக்க முடியவில்லை. இளையராஜா என்ற மிகப்பெரிய ஆளுமையின் நிழலில் அதிகம் தங்கியதால் ஒருவேளை அப்படி ஆகியிருக்கலாம்.
இளையராஜாவுக்கு பல திறமைகள் இருந்தாலும், அவருடைய ஒரே நோக்கம் இசையமைப்பது மட்டுமே என்பதால் அவர் பெரிதாக பேசப்படுகிறார்.
இதுபோல பல்திறமைகள் இருந்த சிலர், தனிமுத்திரை பதிக்க முடியாமல் போனதை நான் பார்த்திருக்கிறேன்.
இதற்கு யாரைக் குற்றம் சொல்லமுடியும்?  Jack of all trade, Master of None என்று இருப்பதைவிட ஸ்பெஷலிஸ்ட் என்று இருப்பதுதான் நலம் என்று இதனால் விளங்கிக் கொள்ளலாம்.
பாடலின் ராகம்:
இதே மெட்டை ஒட்டி இளையராஜா பல பாடல்களை இசையமைத்திருக்கிறார். அவற்றில் நாம் முன்னரே பார்த்த "தேவன் திருச்சபை மலர்களே" ஒன்று. பன்னீர் புஷ்பங்கள் படத்தில் வரும் "கோடைக்காலக் காற்றே" என்பது இன்னுமொன்று.

அடுத்த வாரம் இன்னொரு பாடலில் சந்திக்கிறேன்,.வருகைக்கு நன்றி .