Thursday, February 5, 2015

பாகிஸ்தான் போகும் ரயில் !!!!!!!!!!!!!!!


பாகிஸ்தான் போகும் ரயில் - வெளியீடு கிழக்கு பதிப்பகம் தமிழில்: ராமன் ராஜா

           80-களில் அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும்போது(உடனே என் வயசை கால்குலேட் பண்றதை கொஞ்சம் நிறுத்திறீங்களா மைதிலி) "இண்டோ ஆங்கிலேயன் லிட்டரேச்சர்"  என்ற சப்ஜெக்டில் ஒரு பாடமாக வந்ததுதான் 'குஷ்வந்த் சிங்' எழுதிய டிரைன் டு பாகிஸ்தான் (Train to pakistan). அதனை ரொம்ம்ம்ப நாள் கழித்து தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.  

      கதையின் காலம் இந்திய பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில் நடக்கிறது. சட்லெஜ் நதிக்கரையில் 'சண்டு' என்ற சிறிய நகரின் அருகில் உள்ளது "மானோ மாஜார'என்ற சிறிய சீக்கிய கிராமம். சீக்கிய விவசாயிகளுக்கு கூலி வேலை செய்பவர்களாக சில முஸ்லிம் குடும்பங்கள் அங்கிருக்கின்றன. இருவரும் மிகவும் ஒற்றுமையாக உறவினர் போல வாழ்ந்து கொண்டிருக்கும் போது பாகிஸ்தானிலிருந்து சண்டு நகர்  ரயில் முழுவதுமாக இந்து/ சீக்கிய பிணங்கள் வந்திறங்குகின்றன. சண்டு நகர் டெபடி கமிஷனர், ஹூக்கும்  சந்த், மற்றும் போலிசார் உதவியுடன் அவைகள் ஒரே இடத்தில் வைத்து எரிக்கப்படுகின்றன. சிறிது இடைவெளிவிட்டு இன்னுமொரு ரயில் பிணங்களோடு வந்து சேருகிறது. பெரிய பள்ளம் தோண்டி அவைகளும்  புதைக்கப்படுகின்றன.  

          இதற்கிடையில் பாகிஸ்தானிலிருந்து வந்த சீக்கிய அகதிகள், மானோ மஜாராவில் உள்ள குருத்வாராவில் தஞ்சம் அடைகின்றனர். அந்த சமயத்தில் வீதியில் வந்த வெள்ளத்திலும் ஏராளமான பிணங்கள் மிதந்து வந்தன. டென்ஷன் ஏறிக்கொண்டே போவதால், "மானோ மஜாராவில் இருக்கும் முஸ்லீம்களை காப்பாற்றுவதற்காக அவர்களை பாகிஸ்தான் முகாமில் சேர்ப்பதற்கு ஹூக்கும்  சந்த் முடிவு செய்து பாகிஸ்தான் ராணுவத்தை அங்கு வரவழைக்கிறார். சீக்கிய மக்கள் அவர்களைப் பிரிய மனமின்றி ஆனால் வேறு வழியின்றி ராணுவத்தின் கட்டாயத்துக்காக வழியனுப்புகின்றனர்.

அதே ஊரில் வசிக்கும் ஜக்கன்சிங் எனும் கொள்ளைக்காரன் ஊரின் இமாமின் மகளை காதலிக்கிறான். கொள்ளைக்காரன் என்றாலும் உள்ளூரில் திருடக்கூடாது  என்பது அவனுடைய சொந்த கட்டுப்பாடு.
          வாரக்கடைசியில் ஒரு ரயில் முஸ்லீம் மக்களை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தான் போகிறது என்று கேள்விப்பட்ட பக்கத்து டவுணைச் சேர்ந்த வெறிபிடித்த ஒரு கும்பல் ரயிலை வழிமறித்து, அந்த முஸ்லீம் மக்களை கொல்ல திட்டம் தீட்டுகிறது. அந்த முஸ்லீம் கூட்டத்துள் மானோ மாஜாராவின் முஸ்லீம்களும் அடக்கம்.
          ஜெயிலிலிருந்து வெளிவரும் ஜக்கன்சிங் இதனைக் கேள்விப்படுகிறான். தன் காதலியும் அந்தக் கூட்டத்தில் இருக்கிறாள் என்று கேள்விப்பட்டு பதைபதைக்கிறான்.
அவனால் அந்த ரயிலை காப்பாற்ற முடிந்ததா? என்பதுதான் கிளைமாக்ஸ்.
இதே கதை ,இதே தலைப்பில் சினிமாவாக 1988-ல் வந்தது.

           அறுபது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட இந்தக் கதை அப்படியே உயிரோட்டத்துடன் இருக்கிறது. ஒரு சீரியஸான கதையை எவ்வளவு சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதற்கு குஷ்வந்த்சிங் எழுத்து ஒரு உதாரணம். 

குஷ்வந்த் எழுத்தில் பரவலாகக் காணப்படும் கிண்டலும் நகைச்சுவையும் எனக்கு சுஜாதாவை ஞாபகப் படுத்தியது. மூல எழுத்தின் விறுவிறுப்பு சற்றும் சிதையாத படிக்கு சிறந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார் ராமன் ராஜா.

முடிந்தால் படித்துப் பாருங்களேன்.

4 comments:

 1. ஆங்கிலத்தில் படித்ததுண்டு. தமிழில் படிக்க முயல்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி வெங்கட்

   Delete