Thursday, February 19, 2015

மணிரத்னம் பகுதி 1


மணிரத்னம் படைப்புகள் ஒரு உரையாடல்.
கிழக்கு பதிப்பகம் வெளியீடு.
பரத்வாஜ் ரங்கன் என்பவர் தேசிய விருது பெற்ற திரை விமர்சகர். "ஹிண்டு" பத்திரிகையில் மூத்த எடிட்டர். இவர் மணிரத்னத்துடன் செய்த உரையாடல்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட புத்தகம்தான் இது. "அரவிந்த் சச்சிதானந்தம்"  என்பவர் தமிழில் மொழிபெயர்த்து கிழக்கு பதிப்பகம் இதனை  வெளியிட்டிருகிறது.
  1. Bharathwaj rangan
பரத்வாஜ் ஒரு திரை விமர்சகர் மட்டுமல்லாது, மணிரத்னம் அவர்களின் தீவிர ரசிகன். இதுவரை வெளிவந்த அவரின் அனைத்து படைப்புகளையும் விருப்பு வெறுப்பின்றி இருவரும் சேர்ந்து இந்தப்புத்தகத்தில் அலசுகின்றனர்.

மணிரத்னம் அவர்களால் கண்டெடுக்கப்பட்ட இன்னுமொரு ரத்னமான A.R.ரஹ்மான் அவர்கள் முகவுரை எழுதியிருக்கிறார் . A.R.ரஹ்மான், மணிரத்னம் அவர்களை எப்படி தன் மனதில் குருவாக உருவகித்திருக்கிறார் என்பது அதில் வெளிப்படுகிறது. இத்தனைக்கும் A.R.ரஹ்மான் தீவிரமான ஆத்திகர் . மணிரத்னம் ஒரு நாத்திகர். ஆனாலும் இருவரும் இணைந்து பல அரிய பாடல்களைக் கொடுத்திருக்கின்றனர்.
மணிரத்னம் அவர்களைப்பற்றி சில அரிய செய்திகள், அவர் பயன்படுத்திய உத்திகள் இப்புத்தகத்தில் ஆழமாக ஆராயப்பட்டிருக்கிறது.
சினிமாவைப்பற்றி படிப்போ அனுபவமோ இல்லாமல் திரைத்துறையில் நுழைந்து முத்திரை பதித்திருக்கிறார் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. அவரைப்பற்றி நான் அறிந்து கொண்ட சில செய்திகளை கீழே பட்டியலிடுகிறேன். அவை இந்தப்புத்தகத்தை படிக்கத்தூண்டுமென நம்புகிறேன்.
1)    திரையுலகில் இரண்டுவித படைப்பாளிகளைப்பார்க்கலாம். ஒரு பகுதியில் வெறும் பொழுதுபோக்கு நோக்கில் (கமர்சியல்) படம் எடுப்பவர்கள். மற்றொரு பகுதியினர். கலைப்படைப்புகளை மட்டும் தவம் போல் எடுப்பவர்கள். ஆனால் மணிரத்னம் இதன் இரண்டுக்கும் நடுவில் உள்ளவர்.
2)    வெகு ஜனப்படைப்பாளி என்றே அறியப்பட விரும்பினாலும் வியாபார சமரசம் செய்வதில்லை.
3)    சிறுவயதில் சிவாஜி மற்றும் நாகேஷின் ரசிகன்.
4)    பதின் பருவம் வந்தபோது K.பாலச்சந்தர் அவர்களின் படங்களை விரும்பிப்பார்த்தார்.
5)    MBA-Finance படித்து 1 1/2 வருட காலம் Financial Consultant ஆக வேலை பார்த்து, பின்னர் அதனை விட்டு விட்டு முழுநேரமாக திரைத்துறைக்கு வந்தவர்.
6)    ஆனால் அவர் குடும்பத்தினர் பலர் திரைத்துறையில் இருந்தனர். அவருடைய சித்தப்பா, வீனஸ் கிருஷ்ணமூர்த்தி, "உத்தம புத்திரன்", "கல்யாணப்பரிசு", "பட்டணத்தில் பூதம்" மற்றும் சில இந்திப்படங்களை தயாரித்தவர். அவருடைய அண்ணன் G .வெங்கடேஷ் திரைப்பட ஃபைனான்ஸ் மற்றும் பட விநியோகம் செய்தார்.
7)    திரைத்துறைக்கு வரும்போது அப்பா ஆட்சேபனை சொல்லவில்லை. ஆனால் அம்மா மிகவும் கவலைப்பட்டார்.
8)    மணிரத்னம் இயக்கிய முதல் படம், "பல்லவி அனுபல்லவி" என்ற கன்னடப்படம். லட்சுமி, அனில் கபூர், கிரன் ஆகியோர் நடித்த இந்தப்படத்திற்கு ,"பாலுமகேந்திரா" ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்தார். லெனின் அவர்கள் எடிட்டிங்.
9)    இளையராஜா அப்போது வாங்கிய சம்பளத்தில் ஐந்தில் ஒரு பகுதியைப் பெற்றுக் கொண்டு இசையமைத்தார்.
10) திரைக்கதையை ஆங்கிலத்தில்தான் எழுதினார். ஏனென்றால்  இவருக்கு கன்னடம் தெரியாது. குறைந்த பட்ஜெட் என்பதால் கன்னடத்தில் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.
11) முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதைக்கான கர்நாடகா மாநில விருதினைப் பெற்றார். அதிலிருந்து விருதுகள் அவரை துரத்த ஆரம்பித்தன.
12) அந்தச்சமயத்தில் வெளிவந்த பாரதிராஜாவின்,“16வயதினிலே”மற்றும் மகேந்திரனின் ,”உதிரிப்பூக்கள்”, மணிரத்னம் அவர்களை வெகுவாகப் பாதித்தன.
13) நான்கு படங்களுக்குப்பின் தான் அண்ணன் GV தயாரிக்க, "மெளனராகம்" வெளிவந்தது. GV-க்கு அதுதான் முதல் படம்.
14) மெளனராகத்திற்குத்தான் முதன் முதலில் மணிரத்னம் தமிழில் திரைக்கதை எழுதினாராம்.
15) பகல் நிலவு படத்தில் யாருக்கும் மேக்கப் கிடையாது.
16) மணிரத்னம் தன் எந்தப்படத்தையும் வெளியான பின் பார்த்தது கிடையாது.
17) தன் படங்களுக்கு இவர் "ஸ்டோரிபோர்டு" அமைப்பது கிடையாது. கர்ணனின் கதையே 'தளபதிக்கு” . இதில் கர்ணன்தான் ரஜினிகாந்த்.  
18) 'ரோஜா' என்பது காஷ்மீரில் கடத்தப்பட்ட ஒரு இன்ஜினியரின் உண்மைக்கதை.
19) “திருடா, திருடா”, -ஹர்ஷத் மேத்தாவின் ஊழலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
20) 'குரு' கதை அம்பானியின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது.
21) “இருவர்” என்பது கருணாநிதி - எம்ஜியார் நட்பையும் பிரிவையும் தழுவி எடுக்கப்பட்டது.
திரைப்பட ஆர்வலர்கள் மட்டுமின்றி திரைப்பட இயக்குநர்களும், திரைப்படத்துறையில் நுழைய மற்றும் வளர விரும்பும் யாவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல். 

மணிரத்னம் அவர்களின் திரைப்படங்கள் மற்றும் விருதுகளின் பட்டியலை அடுத்த பகுதியில் தருகிறேன்.

அடுத்த பகுதியில் நிறைவு  பெறும் .

6 comments:

  1. ஆல்பி சார், அருமையான தொகுப்பு!!

    ReplyDelete
  2. எழுதுபவர் மணிரத்னம் அவர்களின் தீவிர ரசிகன். அப்புறம் எப்படி அவர் “அனைத்து படைப்புகளையும் விருப்பு வெறுப்பின்றி” அலச முடியும்?

    ஒளிப்பதிவாளர் யார் என்று தெரியாமல் சுகப்பிரியாவில் "பல்லவி அனுபல்லவி" படம் பார்த்தேன். மனசார “கெட்ட வார்த்தையில்’ ஒளிப்பதிவாளரைத் ‘திட்டிக்’ கொண்டிருந்தேன். அத்தனை அழகான ஒளிப்பதிவு.இடைவேளையில் யார் ஒளிப்பதிவாளர் எனத் தேடிப் போய், அடடா .. நம்ம தல ... என்றறிந்து மகிழ்ந்தேன்.


    நல்ல படங்கள் கொடுத்திருக்கிறார். ஆனால் இவரை அளவுக்கு மீறி பட உலகமும். மீடியாவும் கொண்டாடுகிறது என்பது என் எண்ணம். கொண்டாடுங்கள் ........

    ReplyDelete
    Replies
    1. இவருக்கு இறங்கு முகம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது
      ஆனாலும் தமிழ் சினிமா வரலாற்றில் நிச்சயம் இவருக்கு இடம் உண்டு .
      வருகைக்கு நன்றி தருமி அவர்களே.

      Delete