Thursday, June 27, 2013

கண்டுபிடிச்சேன் ! கண்டுபிடிச்சேன் !


எனக்கும் தொலைந்து போகும் 'வாலட்' களுக்கும்  ஏதோ தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். பலருடைய வாலட்டுகள் அடிக்கடி  என் கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கின்றன. டேய் மகேந்திரா நிறுத்து உன் கற்பனையை, இங்கெல்லாம் பிக்பாக்கட் அடிக்க முடியாது.
அப்படித்தான் இன்றைக்கும் நடந்தது. Q-40-லிருந்து 'F'டிரைன் பிடிக்க இறங்கும்போது, ஒரு பருத்த, கருத்த  வாலட் கண்ணில் பட்டது. ஐயோ பாவம், யாரோ மறந்து, விட்டு விட்டுப் போய் விட்டார்கள்.
இங்கே பஸ் மற்றும் டிரைனிலிருந்து இறங்கும் பலரைக் கவனித்திருக்கிறேன். இறங்கும்போது, தான் உட்கார்ந்திருந்த இடத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுத் தான் இறங்குவார்கள். கொஞ்ச நாளைக்குப்பின்தான் எனக்கு விளங்கியது. அது எதையாவது விட்டுவிட்டார்களோ என்று இறங்கும் முன் செக் பண்ணிக் கொள்வதற்காக. அந்தப் பழக்கம் எனக்குப் பின்னர் ஒட்டிக் கொண்டது.
பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணிடம் கேட்டேன், "டிரைவரிடம் கொடுத்துவிடலாமா?" என்று. அவள் சொன்னாள், "தபாலில் அனுப்பிவிடுங்கள், அப்பொழுதுதான் விரைவில் கிடைக்கும்" என்று. சரியென்று சொல்லி, F டிரைனில் ஏறி ஆபிஸ் வந்து சேர்ந்தேன். ஆபிஸில் ஈமெயில் எல்லாம் செக் பண்ணிவிட்டு, வாலட்டை எடுத்து ஆராயத்துவங்கினேன். பருத்த வாலட் முழுவதும் கத்தை கத்தையாக டாலர் நோட்டுகள், டாலர் நோட்டுகள் $$$$$$$$$$$$$$$$$$
 இல்லை நிறைய கார்டுகள்தான் இருந்தது. பலவித கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டு, பலருடைய பிஸினெஸ் கார்டுகள், இன்சூரன்ஸ் கார்டு, சிறு குறிப்புகள் அடங்கிய ஒரு சில சிட்டைகள் ஆகியவை இருந்தன.
அதோடு முக்கியமாக பாஸ்போர்ட் கார்டும், டிரைவிங் லைசென்சும் இருந்தன. அப்பாடா, காணாமல் போக்கியவரின்  மூஞ்சியும் பெயர் மற்றும் அட்ரசும் அதில் இருந்தன. 1970ல் பிறந்தவர். போன் நம்பர் இல்லை, பெயர் ஃபிரான்க்  கார்டர் III. யாரைக் கூப்பிடலாம் என்று நினைத்துக்கொண்டே, இன்சுயூரன்ஸ் கார்டில் இருந்த டாக்டரைக் கூப்பிட்டேன். நான் என்ன சொல்லியும், அவர் போன் நம்பர் கொடுக்க மறுத்தார். அது பிரைவேசி ஆக்டின்படி தப்பாம். அடப்போங்கடா என்று மறுபடியும் ஆராய்ந்தபோது மற்றொரு டாக்டர் அப்பாயின்ட்மென்ட் கார்டு இருந்தது. அங்கு டிரை செய்தபோது வாய்ஸ் மெயில் போனது. சொந்த பிஸினெஸ் கார்டு தவிர மற்ற எல்லாக்கார்டும் இருந்தது. இன்னும்  இரண்டு கார்டுகளில், ஒரு மியூசிக் ஸ்டுடியோ நம்பரும், இன்னொரு 'பெர்கஷனிஸ்ட்' நம்பரும் கிடைத்தது. அவர்களுக்கு ஃபோன் செய்தால் மியூசிக் ஸ்டுடியோ ஆளுக்கு இவரை தெரியவில்லை. ஆனால் என் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு, அவரும் விசாரிப்பதாகச் சொல்லி, என் முயற்சிக்கு நன்றியும் வாழத்தும் தெரிவித்தார். அந்த டிரம்ஸ் இசைக்கலைஞரின் வாய்ஸ் மெயிலில் "நோபடி லீவ் இனி பேட் மெஸெஜ் , ஒன்லி குட் மெஸெஜ்" என்றது. சரி அன்று மாலை வீட்டைக் கண்டுபிடித்து கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.
அப்புறம்தான் ஞாபகம் வந்தது, உடனே "கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன் உலகத்திலே". இருந்தது. அதெப்படி இல்லாமல் போகும். (அட மட சேகரு, முதல்ல நீ அதை தானே பண்ணியிருக்கணும்). ஃபேஸ் புக்கில் கண்டுபிடித்தேன். ஈமெயில் அனுப்பினேன். அவர் ஒரு பாடகர். அவர் பாடல்களை நீங்களும் தேடி யூடுயுபில்  கண்டு பிடிக்கலாம், கேட்கலாம் ( Frank H Cater III). 2 மணி நேரத்தில் கனெக்ட் ஆகி, என் அலுவலகம் வந்து பெற்றுக் கொண்டார். நன்றி செலுத்தி, தன் CD ஒன்றை அன்பளித்தார்.

இதே மாதிரி சில  மாதங்களுக்கு முன்னால் என் வீட்டின் முன்னால், ஒரு பெண்கள் பர்ஸ் கிடைத்து. இன்சுயூரன்ஸ் ஆபிஸ் மூலம், போன் கண்டுபிடித்து, சப்வே ஸ்டேஷனில் வந்து பெற்றுக்கொண்டு நன்றி சொல்லிச் சென்றாள். வெறும் நன்றி மட்டும்தான்.
வாலட் மூலம் வேறு  ஒரு பெரிய நன்மை நடந்தது ஞாபகம் வருகிறது. சுருக்கமாகச் சொல்கிறேன்.
தேனாம்பேட்டையில்  "குட்வில்  HRD கன்சல்டிங்" ஆரம்பித்த புதிதில், சிறிது சிறிதாக சில கம்பெனிகளுக்கு HR  கன்சல்டிங் மற்றும் மேனேஜ்மென்ட் டிரைனிங் கொடுக்க சில வாய்ப்புகள் கிடைத்தது. அதில் ஒன்று ஆம்பூரில் உள்ள "அல்தாஃப் ஷுஸ்" என்ற கம்பெனி. கிளார்க் மற்றும் பாஸ்டானியன்  காலணிகள் அங்கு ஏற்றுமதிக்கு தயாராயின. அதன் MD அல்தாஃப் எப்போதும் எனக்கு  AC  சேர்காரில் புக் செய்துவிடுவார். அப்படி ஒருநாள் "லேட் கமிங்" பிராப்ளத்திற்கு சில சர்வேக்கள் செய்து முடித்து, திரும்பும்போது, ஏசி குளிரில் கொஞ்சம் அசந்துவிட்டேன்.
ரயில் வண்டி ஒரு குலுக்கலிட்டு  சென்ட்ரலில் நின்றபோது, படக்கென்று எழுந்தேன்.  பக்கத்தில் ஒரு புடைத்த வாலட் கிடந்தது. சில நிமிடங்களில் ஒரு ரெண்டு பேர் புயலாய் உள்ளே நுழைந்தனர். மக்களே ஒரு ஸ்டண்ட் சீனை எதிர்பார்க்காதீங்க, நானென்ன இளைய தளபதியா?
பயணிகள் விட்டுப்போகும் செய்தித்தாள்கள், பத்திரிகைகளை எடுத்து பிழைப்பு நடத்தும் மக்கள் அவர்கள். ஏசிகோச்சில் மட்டும்தான் இவை கிடைக்கும். கொஞ்சம் தவறியிருந்தால் வாலட் அவர்கள் கைக்குப் போயிருக்கும்.
வாலட்டை எடுத்து வீட்டுக்குச் சென்று பார்த்தால் பணம் உண்மையிலேயே கத்தை கத்தையாக முள்ளங்கி பத்தை பத்தையாக நிறையவே இருந்தது. எண்ணவில்லை. மேலும் நிறைய கிரடிட் கார்டுகளுடன், நல்லவேளை பிஸினெஸ் கார்டும் இருந்தது.டெலிபோன்ஸில் அவர் சீனியர் டிவிஷனல் மேனேஜர். அடுத்த நாள் போன் பண்ணி தெரிவித்தேன்.  அவரால் நம்பவே முடியவில்லை. மதியம் போல், அவருடைய பியூன் வந்து ஒரு பெரிய சாக்லட் டப்பாவைக் கொடுத்துவிட்டு வாலட்டை வாங்கிச்சென்றார்.
அவர் பெற்றுக் கொண்டபின் மறுபடியும் போன் செய்து நன்றி சொல்லிவிட்டு வந்து சந்திக்கச் சொன்னார். எங்கள் ஆபிசுக்கு போன் அப்ளை செய்து பலமாதங்கள் காத்திருந்த நேரம் அது. ஆனாலும் அவரிடம் செல்ல மிகுந்த தயக்கமாய் இருந்ததால் விட்டுவிட்டேன்.
ஒரு மாதம் கழித்து மீண்டும் ஒரு பிஸ்கட் டின் அனுப்பி தன்னை சந்திக்கும்படிசொல்லி அனுப்பியிருந்தார். சரியென்று மரியாதை நிமித்தம் நான் சென்றபோது ஒரு பெரிய வரவேற்பு கொடுத்து, தன்  ஸ்டாஃப் எல்லோரையும் வரவழைத்து அறிமுகம் செய்து வைத்தார். வாலட்டைத் திருப்பிக் கொடுத்தது அத்தனை பெரிய விஷயமில்லை என்று திரும்ப திரும்ப சொன்னேன்.
"ஆமாம் ஏன் உங்களுக்குப்போன் இல்லை?, பக்கத்து ஆபிஸ் மூலமாகவல்லவா, ஒவ்வொரு தடவையும் கூப்பிடுகிறார்கள்" என்று கேட்டார். அப்போதுதான், தட்கல்லில் புக் செய்துவிட்டு வெயிட் பண்ணும் விஷயத்தைச் சொன்னேன். "ஏன்  என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை" என்று கோபித்து உடனடியாக தன்  சொந்த கோட்டாவி ல் போட்டுக்கொடுத்து, ஒரு வாரத்தில் 2 போனும் வந்தது. 90 களில் போன் கிடைப்பது அவ்வளவு கஷ்டம். எனவே அது ஒரு பெரிய விஷயம்தான்.
Back to Newyork now, என் மனைவியிடம் சொன்னபோது உனக்கு எப்பவுமே திருப்பிக்கொடுக்கும்படிதான் பொருட்கள் கிடைக்கிறது என்றாள். அவள் சொல்வது உண்மைதான். அவளுக்குக் கிடைப்பதெல்லாம் டாலர் நோட்டுகள் மற்றும் தங்க நகைகள் பலதடவைகள் கிடைத்திருக்கின்றன. குனிந்த தலை நிமிராதவள் அல்லவா .

 ஒரு நல்ல காரியம் செய்த திருப்தியோடு, அன்று மாலை மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தேன். என் மகள் வெளியே போவதற்கு என்னுடைய சப்வே அன்லிமிட்டட் மெட்ரோ  கார்டைகேட்க , பாக்கெட்டில் கையைவிட்டால் என் வாலட்டைக் காணோம்.  அய்யய்யோ , யாராவது பார்த்தீர்களா? ஐயா எடுத்திருந்தால் உடனே தகவல் கொடுக்கவும் .

Monday, June 24, 2013

மெக்சிகோ பயணம் 17: நீதானா அந்தக்குயில் ?

David Mora
            திட்டிவாசல் திறக்க, ஆவேசமாக நாலுகால் பாய்ச்சலில் வந்தது காளை. அரை மணியில் சாவதற்கு இவ்வளவு அவசரமா? என்று நினைத்தாலும் வழியில் எதிர்த்து, டேவிட் இருக்கிறாரே, அவ்வளவுதான் இவர் என்று நினைத்தேன்.
         பாய்ந்து வந்த காளையை நோக்கி துணியை உயர்த்திப்பிடிக்க, வந்த காளை துணியை முட்ட தவ்வியதில், டேவிட் குனிய, காளை அவரை தாண்டிக் குதித்தது. ஆத்திரத்துடன் திரும்பி வர, டேவிட் எழுந்து நின்று போக்குக்காட்ட, உதவியாளர்கள் ஓலமிட்டு கையில் ஸ்டம்புடன் ஓடி வர, டேவிட் பாக்சுக்குத்திரும்பினார். இது இவர் ஸ்டைல் போல.
            மீண்டும் நான் எழுந்து நிற்க, பக்கத்தில் இருந்த பெண், “என்னாச்சு” ?என்றாள், உணர்ச்சி வசப்பட்டு உள்ளே குதிச்சிருவேன்னு தப்பா நினைச்சிட்டா போல  இருக்கு. நாமெல்லாம் எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டாலும் தெளிவோ இருப்போம்னு, பாவம் அவளுக்கு  தெரியாது. இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஏறி ஏறி ஏ………..றி, உஸ் உஸ் பின்னர் இறங்கி இ>>>>றங்கி  கிறங்கி வந்தேன். வெளியிலிருந்த அதே கேட்டுக்குத்திரும்ப வழி தெரியவில்லை. ஒரு பலோமாஸ் வாங்கிவிட்டு திரும்பி மேலே ஏறி வாயிலில் இருந்து பார்த்தேன், செத்துப்போன காளையை இழுத்துச் செல்வது தெரிந்தது.
Manola Mejia
         மூன்றாவது ஆள், நம்ம ஹீரோ மனோலா வர சபை எழுந்து நின்று ஆரவாரிக்க, அதேதான் நடந்தது. உசுப்பேற்றுவது, ஏமாற்றுவது, போக்குக்காட்டுவது, குத்துவது கொல்வது என இதெல்லாம் ஒரு பொழப்பு என்று வெறுத்துப்போய் வெளியே வந்து விட்டேன்.
           இந்த ஒவ்வொருவரும் மீண்டும் ஒருமுறை வேறொரு காளையை கொல்வார்களாம், ஆளுக்கு  ரெண்டு காளை. எங்க ஊர் மயிலக்காளையிடம் வந்து பாருங்கடா என்று சவால்விட்டேன். நம்மூர் காளை ஒரு ரெண்டு தடவை துணியைக் குத்திவிட்டு மூன்றாவது முறை ஆளைக்குத்தி, குடலை உருவும். கண்டிப்பாக இப்படி ஏமாந்து உயிரைவிடாதென்று நினைத்துக் கொண்டே வெளியே வந்தேன். மணி ஆறுதான் ஆனது. ஒரு ஆர்வக்கோளாறுல டிரைவரை எட்டு மணிக்கு வரச்சொல்லிவிட்டேன். நான் வந்த கேட்டை கண்டுபிடிக்க படாதபாடு பட்டு வழி என்றால் “சலுடா”  என்று கண்டுபிடித்து ஒரு வழியாக வெளியே வந்தேன். கேட்வாசிகள், என்ன சீக்கிரமாய் கிளம்பிட்டான்னு ஆச்சர்யமாய்ப் பார்த்தார்கள்.
    அங்குமிங்கும் பராக்குப் பார்க்க, அங்கு பெரிய மாலோ கடையோ ஒன்றுமில்லை. நேரம் ஆக ஆக குளிர் கூடியது, ஜாக்கெட்டும் இல்லை. அப்போது “ஆல்ப்பிரடோ”, என்று குரல் கேட்க, திரும்பினால், அட நம்ம டிரைவர். எட்டு மணிக்கு வர வேண்டியவன், ஏழு மணிக்கே வந்துவிட்டது எனக்கு பெரிய ஆச்சரியம். கேட்டால், “எனக்கு அப்பவே தெரியும், நீ முழுசாய் இருக்க மாட்டாய் என்று” என்றான். என் முகத்தில் ஒரு அப்பாவிக்களை இருப்பது தெரியும். அது ஸ்பானிஷ் மொழியிலும் எழுதியிருக்கிறது என்று அன்றுதான் தெரிந்துகொண்டேன்.
       எனவே, காளைச்சண்டை பாக்கனும்கிற ஆசை இப்படி முடிந்தது. இனிமேல் நம்ம வெஜிடேரியன் ஆகணும்னு நினைத்துக்கொண்டேன். ஐயையோ இனிமேல் நமக்கு ரத்தம் ஆகாதப்பா.
             ஹோட்டலுக்குத்திரும்பி, ஜாக்கெட்டை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குப் போய், ஊருக்கு எடுத்துச் செல்ல, கொய்யாப் பழங்களையும், சிறு ரஸ்தாளி பழங்களையும் வாங்கிக்கொண்டு ரூமுக்குத் திரும்பினேன்.
            ரிஷப்சனில் மீண்டும் ஒரு பெண் குரல் கூப்பிட்டதாகச் சொன்னார்கள். மறுபடியும் கூப்பிட்டால் ரூமுக்கு கனெக்ட் பண்ணச் சொல்லிவிட்டு போனேன். யாரந்தப்பெண், தெரியாமலேயே அல்லது பார்க்காமலேயே திரும்பி விடுவேனோ என்று நினைத்த வண்ணம் உட்கார்ந்திருந்தபோது, போன் ஒலிக்க, பட்டென்று எடுத்து ஹலோ என்றதும், என் மனைவியின் 20 வருடப்பழைய குரல் ஒலித்தது. வழக்கம் போல் “என்ன பார்த்தாய், எப்போது ஃபிளைட், நேரத்திற்கு ஏர்போர்ட் போய்விடு, எத்தனை மணிக்கு நியூயார்க் வருவாய்? எத்தனை மணிக்கு பெஞ்சியை அனுப்ப வேண்டும்?” என்று கேள்விக்கணைகளால் துளைத்தாள். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி முடித்துப்பின், “சற்று நேரத்திற்கு முன் போன் செய்தேன், எப்போது ரூமுக்கு திரும்பினாய்?” ,என்று கேட்டாள். ரெண்டு மூணு தடவை போன் பண்ணியது “நீதானா அந்தக்குயில்” என்று கேட்க, ஆம் என்றாள். ஏன் மெசேஜ் விடவில்லை என்றால், “அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை”, என்றாள். அதானே பார்த்தேன், நமக்கு பெஞ்சாதி தவிர வேறொரு பெண் ஜாதியும் போன் பண்ணாதே என்று நொந்து கொண்டு படுக்கைக்குச் சென்றேன். தூக்கம் வராமல் கிருஷ்ண தேவராயரைப்புரட்ட, அந்த நடனப்பெண்மணியையும் மணம் முடித்து, இரு பெண்களுடனும் இனிதே இல்லறம் நடத்த சுபமாக முடித்துவிட்டார் ராகிரா. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுங்க.
          காலையில் சீக்கிரமே எழுந்து ரெடியாக, டேனியல் ஃபிரெஷாக வந்தான். ஏர்போர்ட்டுக்கு கிளம்பினோம். தயங்கி தயங்கி “அந்த சலவைக்காரி மேட்டர்”, என்றேன். “ நீ சீரியஸாகவா சொன்னாய், இப்போது அதற்கு டைம் இல்லையே “  என்றான். கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியாத வருத்தத்தோடு கிளம்பினேன் .போகிற  வழியில்  நடந்து கொண்டிருந்த பழங்குடி மக்களின் குத்தாட்டத்தை சில நிமிடங்கள்  பார்த்துவிட்டு ஏர்போர்ட் சென்று சேர்ந்தோம் .

ஏர்போர்ட்டில் விட்டுவிட்டு கையசைத்து, தன்னுடைய பிஸினெஸ் கார்டைக் கொடுத்து விடைபெற்றுக் கிளம்பினான்.
              ஏர்போர்ட்டில், டூட்டி ஃப்ரி கடைகளில் வின்டோ ஷாப்பிங் செய்யும்போது, கையால் செய்யப்பட்ட ஒரு அழகிய, வண்ணமய மணியைப் பார்த்தேன். விலை 100 பீசோ என்றதும் உடனே எடுத்துச் சென்று கவுண்டரில் கொடுத்து கையில் மீதமிருந்த 100 பீசோவை எடுத்து நீட்டினேன். அந்தப் பெண் சிரித்தபடி 100 டாலர் என்றாள். டாலருக்கும் பீசோவுக்கும் ஏன்தான் $ என்ற ஒரே அடையாளத்தை பயன்படுத்துகிறார்களோ என்று நொந்து கொண்டே வேண்டாம் என்றேன். தன் சிரிப்பு மறைய, முதல் போனியே ஃபோனி ஆனதால், முறைத்தாள். சாரி சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

        ஃபிளைட் நேரத்திற்கு கிளம்பி மயாமி சென்றது. இமிக்கிரேசன் படிவத்தில் உண்மையை எழுத, என்னை தனியாகக் கூப்பிட்டு, கொய்யாப்பழங்களை அனுமதிக்க முடியாது என்று எடுத்துக்கொள்ள, “நீயே சாப்பிடு”, என்றேன். வாட் என்று முறைத்து, என் கண் முன்னாலேயே குப்பைத் தொட்டியில் போட்டான். சரி அட்லீஸ்ட் ஒன்றிரண்டு பழங்களை கேட்டு வாங்கி இங்கேயே சாப்பிட்டிருக்கலாம் என்று நினைத்த வண்ணம், நியூயார்க் பிளைட்டில் ஏறி உட்கார்ந்தவுடன், உயிர்த்தெழுந்த என் செல்போன், பார்க்காமல் விட்ட பல ஈமெயில்களை காண்பித்தது. அதில் ஒன்றில் என் மெக்சிகோ பயணத்தைப்பற்றி அறிந்த என் தோழிகளில் ஒருவள், சுஜாதாவின் சலவைக்காரி ஜோக்கை எங்கிருந்தோ கண்டுபிடித்து அனுப்பியிருந்தாள்.
(என்ன முத்து? நலமா? சொல்லு என்ன செய்தி? “சினேகாவின் காதலர்கள்" படப்பிடிப்பு ஆரம்பிச்சாச்சா ? என்ன சலவைக்காரி ஜோக்கா, அது வந்து, சலவைக்காரி தன் கழுதையோடு துணி துவைக்க ஆற்றுக்குப்போனாள். அங்கே ஆற்றில் குனிந்து……… என்ன முத்து சரியா கேட்கலியா, சரிவிடு நேரில் சந்திக்கும்போது சொல்றேன், ஆல்  தி பெஸ்ட் ஃபார் யுவர் ஃபிலிம் ப்ராஜெக்ட், பை முத்து.)
நியூயார்க்கில் இரவு 10.30 மணிக்கு வந்து இறங்கினேன்.
உறைபனிக்குளிர் உடலைத்தொட்டது
வாழ்க்கையின் நிதர்சனம் நெஞ்சைத் தொட்டது.
Welcome Back என்று பெஞ்சி சொன்னது
Welcome back to reality என்று ஒலித்தது.

மெக்சிகோ பயணம் முற்றியது.

விரைவில் எதிர்பாருங்கள்
1)  ராக்கஃபெல்லெர்  எஸ்டேட்
2)  அகஸ்டா , மெய்ன்
3)  போர்ட்டரிக்கோ

4)  கியூபெக் - கனடா

Thursday, June 20, 2013

என் இடுப்பு சைஸ் கடுப்பு ஏத்துகிறது மை லார்ட்


ஜீரோ சைஸீக்காக மாடல்கள் பல அக்ரோபேட்டிக் பண்ணும் பொழுது, என் இடுப்பு சைஸ் குறைந்து கொண்டே போவது எனக்கு தலைவலி, இல்லை இல்லை இடுப்பு வலியைக்கொடுக்கிறது. கல்யாணமான புதிதில் பூரிப்பாலோ அல்லது வேறு எதனாலோ, 34 சைஸிக்கு பெருகிய என் இடுப்பை மிகவும் கஷ்டப்பட்டு 32க்கு கொண்டு வந்தேன். இதற்கு பல பேண்ட்டுகளை தியாகம் செய்ய வேண்டியிருந்தது.
அப்புறம் நான் இனிப்பான மனிதனாக ஆனதால் (அதான் பாஸ் சர்க்கரை நோய்) நடந்த ஒரே நல்ல விஷயம் இடுப்பு சைஸ் 30 ஆனதுதான். துக்கமும் சந்தோஷமும் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை பாஸ். உற்சாகத்துடன் என் வார்ட்ரோபை 30 சைஸுக்கு மாற்றி, 32 சைஸ் பேண்ட்டுகளை "சால்வேசன் ஆர்மிக்கு" நன்கொடையாக அளித்தேன்.
இப்போது இன்று காலை தோன்றியது, லுக்ஸ் லைக் அந்த 30 சைஸும் குறைவது போல் தெரிகிறது. என் இடுப்பு சைஸ் கடுப்பேத்துகிறது மை லார்ட். கொடி  இடை ஒரு பெண்ணுக்கு இருந்தால் ரசிக்கலாம், அதே ஆணுக்கு இருந்தால்? (நன்றாக புசிக்கலாம் சேகர், சாப்பிட்டு ஒடம்பைத்தேத்து). இதிலே பிரச்சனை என்னன்னா நன்றாக சாப்பிட்டால் எனக்கு ஒடம்பு குறைகிறது. ஏனென்றால் சுகர் ஏறுகிறது. குறைவாகச் சாப்பிட்டால் சுகர் குறைகிறது, தொப்பை ஏறுகிறது. டயட்டீசியனிடம் கேட்டால் 250 கிராம் அரிசி சாதம் 150 கிராம் பருப்பு என்று சொல்கிறார்கள்.( ஓ அளவோடு சாப்பிடனும்கறது இதான் போல) இதெல்லாம் வேலைக்கு ஆவுமா? தராசும் கையுமாவா அலைய முடியும்.
ஒரே வருஷத்தில் ஸ்வீட் பர்சனாயும் ரொம்ப பவர்ஃபுல் பெர்சனாயும் (கண்ணாடியைச்சொல்றேன் பாஸ் )ஆயிட்டேன். போன நூற்றாண்டில் எனக்கு  சுகர் கண்டுபிடிக்கப்பட்டது ஞாபகம் வருகிறது. என் ஃபார்மஸிஸ்ட் தம்பி பாஸ்கரிடம் சென்று “எனக்கு அடிக்கடி பசிக்கிறது, நன்றாகச் சாப்பிட்டாலும் ரெண்டு மணிநேரத்தில் பசிக்குது” என்றேன். "பசிச்சா நல்லா சாப்பிடு, நல்லதுதானே" என்றான். அப்புறம் என்ன யோசிச்சானோ, "எதுக்கும் இன்னைக்கு ராத்திரிக்கு மலர் ஹாஸ்பிடலுக்கு வா செக் பண்ணலாம்னு" சொன்னான். அங்கு தான் அவன் Pharmacist, அன்னைக்கு அவனுக்கு நைட்டூட்டி.
அப்போதெல்லாம் இரவில் சோறு சாப்பிடுவதை விட்டு விட்டு, நல்லதுன்னு வெறும் பழங்களை சாப்பிடுவேன். அன்றைய தினம் ஒரு முழு பங்கனப்பள்ளி மாம்பழம், ஒரு சாத்துக்குடி, ரெண்டு புள்ளி வாழைப்பழங்கள் ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு என்னோட கவாசாக்கியில் மலருக்கு போனேன். ரெண்டு மூனு டெஸ்ட் பண்ண டாக்டர், "ஐயா நீர் எப்படி நடமாடுகிறீர்? உம் சுகர் 500க்கும் அருகில் அல்லவா இருக்கிறது." என்றார், "இப்படியே விட்டால் ஸ்ட்ரோக் வந்துவிடும், கெட் யுவர் செல்ஃப் அட்மிட்டட்" என்றார். எனக்கு நம்பிக்கையில்லை. "நாளை வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, அடுத்தநாள் காலை ராயப்பேட்டை எம்வி டயாப்படிக் சென்டருக்குப்போனேன். அங்கு ஒரு நாள் முழுவதும் பல டெஸ்ட்டுகள் செய்து (Glucose tolerant Test) confirmed Diabetes என்று உறுதியுடன் கூறினார்கள். ஆஹா, வேணாம்னு நெனைச்ச சொத்தை எங்கப்பா என்ட தள்ளிட்டாரேன்னு ஒரே  துக்கமா இருந்துச்சு. அங்கிருந்த பலபேரில் நான்தான் இளையவன்னு நெனைச்சா, வெக்கமாகவும் இருந்துச்சு. இவ்வளவு சீக்கிரம் வரனுமா ? இப்பதானே முப்பது முடிஞ்சுச்சு என நினைத்தேன்.
அங்கே ஒரு ரூமுக்கு கூட்டிட்டுப்போய் கிளாஸ் எடுத்தார்கள்.ரொம்ப ஆறுதலாப்பேசினாங்க. சுகர் வந்தா ஒன்னும் பிரச்சனையில்லை. நல்லா சாப்பிடலாம்னு சொன்னாங்க. என்னது நல்லா சாப்பிடலாமா, என்று எழுந்து உட்கார்ந்தவனிடம். "ஆமாம் இனிமேல் நீங்க 3 தடவை இல்ல, நாலுமுறை சாப்பிடலாம்" (சொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான் அண்ணாச்சி வாய்சில் படிக்கவும்) என்று சொன்ன அந்த டயட்டீசியன் ஒல்லியோ ஒல்லி (கடுமையான சுகர் இருக்குமோ?). "ஏய் இது நல்லா  இருக்கே" என்று பார்த்தபோது சொன்னார்கள், “இதுவரை ஆறுவேளை சாப்பாட்டை மூனுவேளையில் சாப்பிட்டீர்கள், இப்போது 2 வேளை சாப்பாட்டை நாலு தடவையாக சாப்பிட வேண்டும்". “ஓ கதை அப்படி போகுதா?” என்று தொய்ந்து உட்கார்ந்தேன். மறுபடியும் "ஒன்னும் கவலைப்படாதீங்க, சுகர் கஷ்டமேயில்லை, உங்களுக்கு எதெல்லாம் ரொம்ப ஆசையோ, எதெல்லாம் ரொம்ப பிடிக்குமோ " என்று ஆரம்பித்தபோது இத இத இத இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று உற்சாகமாய் நிமிர்ந்தபோது, "அதெல்லாம் சாப்பிடக் கூடாது" (மறுபடியும் இமான் அண்ணாச்சி) என்று சொன்னபோது, என் உற்சாகம் முற்றிலும் வடிந்து, தக்கையாக உணர்ந்தேன்.
அந்த நேரத்தில் எப்போதோ படித்த ஜோக்கும் ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது. சுகர்பேஷன்ட்டிடம்  டாக்டர் "இனிமேல் ஒரு சப்பாத்தி ஒரு கப் காய்கறி ஒரு கப் வெஜிடபிள் சூப் இவை மட்டும்தான் மதிய நேரத்தில் சாப்பிடவேண்டும்" என்று சொன்னபோது  அந்த அப்பாவி பேஷண்ட் கேட்டானாம், "அதுசரி டாக்டர், இது பிஃபோர் மீல்சா, ஆஃப்டர் மீல்சா என்றானாம். அந்த நெலமை எனக்கும் வந்துவிட்டதே என்று மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆயிருச்சு அதற்கு பிறகு ஒரு பத்து வருஷம் .( சாரி பாஸ் இந்த பிளாஷ் பேக் வியாதி விடமாட்டேங்கு.)
சரி கதைக்கு வருவோம். என் முப்பது சைஸ் குறைந்தால், என் 30 சைஸ் பேண்ட்டை என்ன செய்வது என்பதைவிட, புதுபேண்ட் வாங்கப்போகும் செலவை நினைத்தால் தலையே சுத்துது. இனிமேல் நம் சைஸ் அடல்ட் சைஸ் அல்ல, பாய்ஸ் செக்சனில்தான் ஒளிந்து ஒளிந்து பேண்ட் தேட வேண்டும். சரி விடு, கேட்டா என் மகனுக்குன்னு சொல்லிறவேண்டியதுதான். இப்ப இங்க உள்ள டீனேஜ் பசங்க,பேன்ட்டை புட்டத்துக்கு கீழேதான் போடுகிறார்கள்.எப்படித்தான் நடக்கிறார்களோ? .என் நிலையும் இப்ப கிட்டத்தட்ட அந்த நிலைதான் .

இப்படியே கவலைபட்டபடியே, பெல்ட்டை இறுக்கி கட்டிக்கொண்டே, ஆபிசுக்கு கிளம்பினேன். பஸ்ஸில் போய் சப்வே பிடிக்க நேரமாகிவிடும்  என்பதால் கேப் எடுக்கலாம் என்று நினைத்து, சட்பின் புலவாடுக்கு  போனேன். இங்கே டாலர் கேப் என்ற சிஸ்டம் இருக்கிறது, நொடிக்கொருமுறை வரும். 2 டாலர் கொடுத்தால், E-train ஸ்டாப்பில் இறக்கி விடுவார்கள். நம்மூர் ஷேர் ஆட்டோபோல்.
இங்க வந்த புதிதில் அமெரிக்க சைஸ்களை பார்த்து அதிர்ந்துவிட்டேன் மெகா சைஸ் மட்டுமல்ல, பிரமாண்டமான சைஸ்களும் உண்டு. ஒபேசிட்டியை ஒரு நோயாக அறிவிக்கும் அளவுக்கு இங்கு சைஸ்கள் பெரிசு .பிளஸ் சைஸ் என்று சொல்வார்கள், அதாவது XL, மற்றும் XXL ஐவிடப் பெரியவை. இவர்களுக்கென்றே தனிக்கடைகள் உண்டு.

டாலர் கேபில் இருந்த நைஜீரிய முஸ்லீம் டிரைவருக்கு "அஸ்ஸலாமு அலைக்கும்" சொல்லி, பின் பகுதியில் முதல் ஆளாக ஏறி உட்கார்ந்தேன். அடுத்த ஸ்டாப்பில் நிக்குதை யா ஒரு மாபெரும் உருவம். அந்தப்பெண் (?) ஆள்காட்டி விரலைத்தூக்க, (அது கையா இல்லை உலக்கையா )நைஜீரியனும் நிறுத்த, எனக்கு படபடப்பு அதிகமானது அந்த ஆப்பிரிக்க அமெரிக்க பிரமாண்டமான கூட்டுத்தயாரிப்பு , மிகவும் சிரமப்பட்டு, குனிந்து, தன்னை பின்புறம் திணிக்க, அந்த படை நடுங்கும் சைஸுக்கு, என் இடை நடுங்க, கூடவே சேர்ந்து என் தொடை நடுங்க, படக்கென்று என் இடதுபுறக் கதவைத்திறந்து வெளியேறினேன். 2 டாலர் போனாப்போகுது, என் தொடை தப்பியது தொம்பிரான் புண்ணியம் என்று வீட்டுக்கு நடையைக்கட்டினேன். (சேகரு, இதுக்கு இன்னொரு தலைப்பு தோணுது , "ஒடுங்கிய இடையும் , நடுங்கிய  தொடையும் ",எப்படி இருக்கு? சும்மாரு மகேந்திரா கோவத்தை கிளப்பாத )

மத்தேயு 6:25 ஆகையால் என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்தாகவும் கவலைப்படாதிருங்கள். ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும், சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?.

Monday, June 17, 2013

மெக்சிகோ பயணம் 16: முரட்டுக்காளையுடன் நடந்த மூர்க்கச்சண்டை


                 அது காளையா இல்லை குட்டி யானையா என்று யோசிப்பதற்குள் ஒருமுறைப்போடு, மூக்கை விரைத்துக்கொண்டு, புஸ்புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டு, வாலை பின்னால் உயர்த்திக் கொண்டு பாயுதய்யா காளை. இதோடு ஒப்பிட்டால் நம்மூர் காளையெல்லாம் ரொம்ப ஏழை பாஸ் .
                 வந்த ஜோரில் நின்றிருந்த உதவியாளர்களை நோக்கிப்பாய அவர்கள் வெடுக்கென்று ஓடி வட்டத்தின் நாலாபுறத்தில் இருந்த பாக்ஸ்களின் மர மறைப்பு களுக்குப்பின் மறைந்தனர். மடேர் மடேர் என்று காளை அந்த மர மறைப்புகளை முட்டியது, என் அடிவயிற்றைப் பிசைந்தது. நல்ல வேளை நல்ல உயரத்தில் உட்கார்ந்திருந்தேன் .மீண்டும் அங்குமிங்கும் ஓடியும், கம்பீரமாய் நிமிர்ந்து சவால் விடுவதைப்போல் பார்த்தது. மெதுவாக நோட்டம் பார்த்த ஆறு உதவியாளர்களும் இரண்டிரண்டு பேராக பிரிந்து, கையில் ஒரு கலர் துணியுடன், அங்குமிங்கும் போக்குக் காட்டுவதும், துரத்தினால் மறைப்புக்குப்பின் மறைவதுமாக சிறிது நேரம் சென்றது.
மீண்டும் மீண்டும் சீண்டி, ஒரு ஏமாந்த சந்தர்ப்பத்தில் தங்கள் கையில் இருந்த சிறிய கிரிக்கெட் ஸ்டம்ப் போல் இருந்த கூர்மையான ஆயுதத்தை கழுத்தில் இருந்த திமிலில் லாவகமாக குத்தினர். பல திசைகளிலுமிருந்தும் வந்து ஆளுக்கொன்றாக ஆறு ஸ்டம்புகளை குத்திவிட்டனர். அவையனைத்தும் கழுத்தில் இருந்து தொங்கியதோடு ரத்தம் வழியத் தொடங்கியது.
          அதற்குள் ஒரு குதிரை வீரன், கையில் நீண்ட ஈட்டியுடன் வந்தான். குதிரைக்கு இருபுறமும் மிகக்கெட்டியாக மெத்தைபோல் மறைப்பு இருந்தது, நம்மூர் பொய்க்கால் குதிரைபோல் தெரிந்தது. அதனைப் பார்த்த காளை, ரத்தம் சொட்டினாலும் கொஞ்சமும் வேகம் குறையாமல் பாய்ந்து வந்து குதிரையை முட்டியது. மறைப்புகள் இருந்ததால் குதிரை தப்பித்தது. இல்லைன்னா அதன் கதி அதோகதிதான். பல குதிரைகள் மாடு முட்டி குடல் தள்ளி உயிரை விட்டதும்   உண்டாம். அது முட்டிய வேகத்தில் குதிரை வீரன் தன் கையில் இருந்த ஈட்டியால் குத்த முயன்றான். ஆனால் காளை முட்டிய வேகம் தாங்காமல் குதிரை அப்படியே மடங்கி கீழே விழ, கூட்டத்தின் ஆரவாரம் அடங்கி நிசப்தமாயிற்று. அடுத்து என்ன நடக்கப்போகிறதென்ற திகில் சூழ்ந்தது. காளையும் மீண்டும் பாய்வதற்கு சீறியது. குதிரை பயந்து போய் சிறுநீர் கழித்து ஏராளமான சாணியைப் போட்டது.

        அப்போது இன்னொரு குதிரை வீரன் வேறு புறத்திலிருந்து வந்து “ஹோஹோ” வென்று சத்தம்போட, காளை அவனை நோக்கி திரும்பியது. முட்டுவதற்கு நாலுகால் பாய்ச்சலில் ஓடி அருகில் வரும்போது, சட்டென்று குதிரையை வேறுபுறம் திருப்பி, தன் பலமனைத்தையும் கையில் கொண்டு வந்து ஈட்டியை ஓங்கி குத்தி ஆழமாக சொருகினான். திடுக்கிட்டுப்போன காளை சற்றே மிரண்டு தள்ளாடியது. அதற்குள் சுதாரித்து எழுந்த முதலாவது குதிரை வீரன், மிக விரைவாக வர, காளை அந்தக் குதிரையை முட்ட சற்றும் தளராமல் திரும்பியது. இந்த முறை ஏமாறாமல், அவன் தன்  பங்குக்கு ஈட்டியை கழுத்தில் குத்தி இறக்க, கூட்டத்தில் ஆகாகாரம்  (ரொம்ப நாள் ஆசை இந்த வார்த்தையை பயன்படுத்துவது) எழுந்தது. குதிரை வீரர்கள் வெற்றிக்கையசைப்புடன் உள்ளே திரும்பினர்.
Fabian Barba

பலமுறைத் தாக்குதலில், சற்றே சோர்வடைந்த காளை நடுவிலே நின்று கொண்டிருக்கையில், உள்ளே நுழைந்தார் ஃபேபியன் பார்பா  (Fabian Barba). அரங்கு நிறைந்த கரகோஷம். (நன்றி, அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது). கையில் படபடத்த ஒரு பெரிய சதுர துணியுடன், காளையை நெருங்க, காளை சற்று நேரம் முறைத்துவிட்டு பாய்ந்தது. மிக லாவகமாக துணியைச்சுற்ற, காளையும் துணியை முட்டித்தோற்றது. ஒருமுறை இருமுறை அல்ல, பலமுறையும் இதேதான் நடந்தது. முட்டாள் காளை பக்கத்தில் இருக்கும் ஆளை விட்டுவிட்டு துணியையே முட்டி முட்டி தவித்துப்போனது. ஒவ்வொரு முறையும் காளையின் முட்டுதலிலிருந்து தப்பிக்கும் போதும்  சபை ஆரவாரித்தது. சில சமயம், உடம்புக்கு மிக அருகில் முட்டவந்து, துணியை சுழற்றி தப்பித்தது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

    சற்று நேரத்தில் காளை தவித்துப்போக இசை உச்சஸ்தாயியை அடைய, ஃபேபியன் பாக்சைத் திரும்பிப் பார்க்க, ஒரு உதவியாளன் வாளுடன் ஓடிவந்தான். ஒரு கையில் வாளுடனும், மற்றொரு கையில் சதுர துணியுடனும் மீண்டும் காளையை நெருங்கி, உசுப்பேற்றி உசுப்பேற்றி, ஏமாந்த ஒரு சமயத்தில் தன் கூரான வாளை கழுத்தில் குத்தி, இறுக்கி இறக்கினார். முழுவாளும் உள்ளே போய்விட மாடு தள்ளாடியது.

அது நேராக இதயத்தை கிழிக்குமாம். தன்னுடைய வாளை மீண்டும் உருவி எடுத்து, காளையை உற்றுப்பார்த்து விட்டு, கையை அசைத்து பாராட்டுகளை ஏற்றுக்கொண்டு பாக்சுக்கு திரும்பினார். மற்ற இரு வீரர்களும் அவரை கட்டித் தழுவி வாழ்த்தினர்.
காளை தலை சுற்றி தள்ளாடி, முன்னங்கால் மடங்கி கீழே விழுந்து உயிரை விட்டது. ஓடிவந்த உதவியாளர்கள், காளை செத்துவிட்டதை உறுதி செய்துவிட்டு ஒரு விசிலடித்தவுடன், ஒரு குதிரைவண்டிபோல் ஒன்று வர அதன் பின்பகுதியில் காளையின் கால்களை பிணைத்து அப்படியே தரதரவென்று இழுத்துக்கொண்டு போனார்கள். அடப்பாவி மக்கா.

              எனக்கு அதுவரை தெரியாது, காளை அந்த இடத்திலேயே கொல்லப்படுமென்று . கம்பீரமாக வந்த காளை, தன் மொத்த எனர்ஜியையும் இழந்து, கால் மடங்கி விழுந்து உயிர்விட்டது மற்றவர்களுக்கு உற்சாகத்தையும் எனக்கு கண்ணீரையும் வரவழைத்தது.
இதேதான் நடக்குமா என்று பக்கத்தில் கேட்டபோது ஆம்  என்றார்கள். என்ன ஜென்மங்கள், “சான்ட்விட்சுகளை மென்றுகொண்டே சாவைக் கொண்டாடுகிறார்களே, குளிர் பியர்களை உறிஞ்சிக் கொண்டே, கொல்வதை ரசிக்கிறார்களே”, என்று நினைத்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
             நான் நம்மூர் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போல் இதுவும் ஒன்று என்று வந்துவிட்டேனே என்று என்னை நானே நொந்து கொண்டேன். பணியாளர்கள் சிறு தள்ளு வண்டியில் வந்து ரத்தம் தோய்ந்த மணலை அப்புறப்படுத்தி வேறு மணல் கொட்டி, மீண்டும் கோடுகளை திருத்தினர்.
                அதற்குள் இசை முழங்க, இரண்டாவது வீரர் டேவிட் மோரா நுழைந்தார். என்னது முதலிலேயே நுழைகிறாரே என்று பார்த்தால் காளை ஓடிவரும் திட்டி வாசலுக்கு நேர் எதிரே துணியை கையில் ஏந்தி, முட்டிபோட்டு காத்திருந்தார்.
போய்விடலாம் என்று எழுந்த நான், இதனைப்பார்த்ததும் சரி என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்று திரும்பவும் உட்கார்ந்தேன்.


அடுத்த பகுதியில் நிறைவு பெறும்>

Thursday, June 13, 2013

காஸ்டில்லோ தியேட்டரில் நடந்த கள்ளக்காதல்- பகுதி 2


ஒருமுறை நான் காந்திகிராமம், தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்துக்கொண்டிருக்கும்போது (சேகரு சும்மா கிண்டல் பண்ணாத, நீ என்ன அங்க படிச்சியா? வீட்டிலேர்ந்து சுதந்திரம் கிடைச்சதுன்னு , சும்மா ரெண்டு வருஷம் அப்படியே ஓட்டினையே) நானும் ஆறுமுகமும் ஒரு சனிக்கிழமை யாருக்கும் தெரியாமல் நழுவி, மாட்னி ஷோவுக்கு போனோம். கமல்ஹாசன் நடித்த "மன்மதலீலை" என்று நினைக்கிறேன், சின்னாளபட்டி ராயல் டாக்கீஸில் ஓடிக்கொண்டிருந்தது. இடைவேளை முடிந்து உள்ளே செல்லும்போது போட்ட படம், வேறு ஒன்றாக இருந்தது.  கலரும் ஒருமாதிரி வெளிர் சிவப்பாக இருந்தது. உற்றுப்பார்த்ததும் தெரிந்துவிட்டது, அது சிவப்பாக இருந்த நீலப்படம்.
தியேட்டர் ஒரே நிசப்தமாயிருக்க, நான் ஆறுமுகம் கையைப்பிடித்து "டேய் வாடா போயிரலாம்" என்றேன். "சும்மாயிர்ரா" என்று என்னை அதட்டிய ஆறுமுகம் திறந்த வாயை மூடவில்லை. பார்க்கவும் முடியாமல், பார்க்காமலிருக்கவும் முடியாமல், ஆறுமுகத்தை விட்டுவிட்டு கிளம்பலாம் என்று நினைத்தபோது அந்த பிட் முடிந்து படம் ஆரம்பித்தது.( அதாவது சேகரு ,இராசலீலை முடிந்து , மன்மத லீலை ஆரம்பித்ததுன்னு சொல்றே: மகேந்திரா உனக்கு குசும்புடா ) ஒரு பத்து நிமிடம்தான் ஓடியிருக்கும். வேர்த்து விறுவிறுத்துப்போன நாங்கள் இருவரும், மீதிப்படத்தைப் பார்க்காமல் கிளம்பி ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம். "டேய் ஆறுமுகம் யார்ட்டயும் சொல்லிராத, மானம் போயிரும்" என்று சொன்னதை மீறி, யார்ட்டயும் சொல்லிராதன்னு சொல்லி சொல்லியே பலபேர்ட்ட சொல்லிட்டான். அன்று மாலை உணவின்போது பலபேரைக்காணாத வார்டன், அட்டன்டென்ஸ் எடுக்க, அனைவரும் மாட்டிக்கொண்டனர். மாட்டினதுக்கு கவலைப்பட்டத விட, அன்று மாலை பிட் படம் ஓடலையேன்னு கவலைப்பட்டவனுகதான் அதிகம். இந்தப்பாவத்தை நினைத்து, அன்று இரவு காய்ச்சலில் விழுந்த நான், மூன்று நாள் ஸ்கூலுக்கு மட்டம்.அதன் பின்னர் யாரோ கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்து “ராயல் டாக்கீஸ்” சில மாதங்களாக பூட்டப்பட்டது.
இப்ப, காந்திகிராமம், சின்னாளபட்டியிலிருந்து மீண்டும் நீயூயார்க் வருவோம். திகைப்போடும் தவிப்போடும் நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அந்த இருவரும் படுக்கையிலிருந்து எழுந்தனர். ஆரம்பமானது நாடகம் (Play என்பதை தமிழில் எப்படிச்சொல்ல?). அந்தக் கதையை சுருக்கமாக சொல்கிறேன்.

கல்லூரி பட்டமளிப்புக்கு முன் நடைபெறும் பிராம் (Prom) என்ற நிகழ்ச்சியில் தற்செயலாக சந்தித்துக் கொண்ட 17 வயது பெண்ணும் , 25 வயது ஆணும் ஆகிய இந்த இருவரும், அன்றைய இரவில் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றனர். (அமெரிக்காவில் இதெல்லாம் சகஜமப்பு). ஒருவரைப்பற்றி மற்றொருவர் ஒன்றும் தெரியாத நிலையில் அடுத்த நாள் எழுகின்ற வேளையில், நாடகம் துவங்குகிறது. பின்னர் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் முயற்சியில், அவர்களின் பல்வேறு முரண்கள் வெளிப்பட்டு, சிறுசிறு சண்டைகள் பின்னர் சமாதானங்கள் நிகழ அப்படியே அவரவர் ஊருக்குத் திரும்புகிறார்கள். இது நடப்பது 1968-ல்.
திரும்பவும் முன்னேற்பாடோ, திட்டமிடுதலோ இல்லாமல் அடுத்த வருடம் அதே நாளில் அதே ஊரில் அதே ஹோட்டலில் அதே ரூமில், மறுபடியும் சந்தித்துக்கொள்ள 'அதே' நடக்கிறது. காலையில் அவர்களுடைய கனவுகள் எதிர்காலத் திட்டங்கள், வெற்றிதோல்விகள் மாறிய எதிர்பார்ப்புகள் எல்லாம் சிறு சிறு சண்டைகளோடு விவாதிக்கப்படுகின்றன. இப்படி 2011 ஆம் ஆண்டு அவர்களின் அறுபது வயது வரை  இந்த NSA (No Strings Attached) சந்திப்பு விடாமல் தொடர்கிறது. (டேய் சேகரு இதெல்லாம் நடக்குமா? அடேய் மகேந்திரா வந்து பார் இதுவும் நடக்கும், இதுக்கு மேலயும் நடக்கும்) இதற்கிடையில் இந்த இருவருக்கும் திருமணமாகி (தனித்தனியே) பிள்ளைகள் பிறந்து வளர, அந்தப்பையன் மாவட்ட அரசு வழக்கறிஞனா உயர, அந்தப்பெண் பலவேலைகள் செய்து, இறுதியில் தனது கனவான "எழுத்தாளர்" ஆகிறாள். இதே அனுபவத்தை புத்தகமாக வெளியிட, அது சூப்பர் டூப்பர் பெஸ்ட் செல்லர் ஆகி, ஓவர்நைட்டில் அவளை பிரபலப்படுத்துகிறது. அந்தப் புத்தகத்தின் பெயர்தான்,  " Plenty of time". இதற்கிடையில் பிள்ளைகள் பெரிதாகி செட்டிலாகிவிட, ஆணுக்கு டைவர்ஸ் ஆகி தனியே இருக்க, அவர்களுடைய கடைசி சந்திப்பில்  உண்மையாகவே இருவரும் இணைந்து, கறுப்பின மக்களுக்கு உதவுவதற்காக தென்னாப்பிரிக்கா செல்கிறார்கள். 
Jackie Alexander

இந்தக்கதையினை விட, என்னைக் கவர்ந்தது காட்சி அமைப்புகள்தான். நாடகம் முழுவதும் இரண்டே கதாபத்திரங்கள்தான். அந்த நடிகரின் பெயர் ஜாக்கி அலெக்சாண்டர் . அவரேதான் இந்த நாடகத்தை டைரக்ட்டும் செய்திருந்தார் .நடிகையின் பெயர் டிரேசி டோல்மையர் .
Traci Tolmeir

இருவரும் தத்ரூபமான மிகைப்படுத்தலில்லாத நடிப்பில் அசத்துகிறார்கள். ஓரிருமுறை அசைவ முத்தமிட்டுக் கொண்டதை விட விரசக்காட்சிகள் எதுவுமில்லை. அதுதவிர காட்சிகள் நடப்பது ஒரே ரூமில் இருந்தாலும், Props என்று சொல்லக்கூடிய பொருள்கள் மாறிக்கொண்டே வேறுவேறு காலகட்டங்களை உணர்த்துகிறது. உதாரணமாக பழைய காலத்து டயல் போன், பின்னர் பேஜர், கார்டுலஸ் போன், அதன்பின் செல்போன், என்பது ஒரு உதாரணம். அதே மாதிரி, கடைசி சந்திப்பில் லேப்டாப். அவர்களுடைய உடைகளும்  மேக்கப்பும் கச்சிதமாக இருந்தது. இருவரும் தேர்ந்த நடிகர்கள். இவற்றுள் நம்மூர் படைப்பாளர்கள் கற்றுக்கொள்ள ஏராளமாயிருக்கிறது. ஒரு இனிய மாலை அனுபவமாக  இந்த நாடகம் நினைவில் நிற்கும். என்ன அடுத்த பிளேக்கு டிக்கெட் புக்  பண்ணவா ?

முற்றியது >>>>>



Monday, June 10, 2013

மெக்சிகோ பயணம் 15: பப்பாவும் பாப்பாவும் !!!!!!!!!!!!!!!

Souvenir Shop

                 நான்கு மணிக்கு மேல்தான் உள்ளே விடுவோம் என்றார்கள். வெளியே நிறைய சூவினர் (Souvenir) கடைகளும், உணவுக்கடைகளும் இருந்தன. வேடிக்கை பார்த்துக் கொண்டே அங்குமிங்கும் அலைந்ததில் அரைமணிநேரம் விரைவாகக்கடந்தது.              நம்மூர் ஹீரோக்களுக்கு வைப்பதுபோல், அன்றைய நாளில் விளையாடப்போகும் மூன்று வீரர்களுக்கு, பெரிய கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. கொஞ்ச நேரத்தில் அழகான சீருடை அணிந்த போலிஸ் படை வந்து இறங்கியது. அதன்பின்னர் ஒரு பெரிய கார் (பென்ட்லே என்று நினைக்கிறேன்) கடந்த போது, கூடியிருந்த கூட்டம் “மன்யோலா மன்யோலா” என்று ஆரவாரித்தது. பக்கத்தில் கேட்டதில் அன்று மோதப்போகும் வீரர் என்றார்கள். கார் கடந்து சென்று, வேற ஒரு வழியில் உள்ளே நுழைந்தது.
Entrance

              வரவர கூட்டம் நிறையச்சேர்ந்து வரிசையில் நிற்க ஆரம்பித்தனர். சரி உள்ளே போய்விடலாம் என நினைத்து, நுழைந்தபோது, டிக்கட்டை சரி பார்த்து கிழித்து பாதியை கையில் கொடுத்துவிட்டு என் கையை உற்றுப்பார்த்து, “பப்பாஸ் நோ” என்றான். என்னங்கடா இது நான் தனியாகத்தானே இருக்கிறேன், என்கூட பாப்பா ஒன்றுமில்லையே என்று கலவரமடைந்து 'ஙே' என்று முளித்தேன். அவன் என் கையில் இருந்த சிப்ஸ் பாக்கெட்டை தொட்டுக்காட்டி, “பப்பாஸ் நோ” என்றான். அப்போதுதான் புரிந்தது, சிப்ஸ் பாக்கெட்டை உள்ளே கொண்டுபோக முடியாது என்று. அதோடு அப்போதுதான் தெரிந்தது சிப்ஸ்க்கு இங்கே பெயர்  பப்பாஸ் (Papas) என்பது. ஆனால் இவ்வளவு பெரிய பாக்கெட்டை என்ன செய்வது என்று மீண்டும் வெளியே வந்து பிரித்து கொஞ்சம் சாப்பிட்டேன், முடியவில்லை. என்னையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் அதைக்கொடுக்க, அவன் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பானது.அமெரிக்காவில் இப்படி கொடுப்பது சாத்தியமில்லை, பிச்சைக்காரர்கள் கூட இப்படி ஏற்கனவே பிரித்ததை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
                     “கிராசியஸ்” என்ற சிறுவனிடம் புன்சிரிப்போடு தலையாட்டிவிட்டு மறுபடியும் வரிசைக்குச் சென்றேன். பேட்ஜ் அணிந்த பையன் ஒருவன் வழிகாட்ட முன் வந்தான். நடையோ நடந்து மேலே ஏறி, குகைகளை கடந்து உள்ளே நுழைந்தால், ஏயப்பா எவ்வளவு பெரிசு, சர்க்கஸ் மைதானம் போல் வட்டமாக நடுவிலே ஆடுகளம் இருக்க அதனைச்சுற்றிய வட்டங்களில் சிமென்ட் இருக்கைகள் மேலே மேலே இருந்தன.

 முதல் சில வட்டங்களில் பிளாஸ்டிக் நாற்காலிகள் இருந்தன. "பிளாசா மெக்சிகோ" என்ற உலகத்திலேயே மிகப்பெரிய காளைச்சண்டை அரங்கமான இதில் ஒரே சமயத்தில் 40,000 பேர் உட்காரலாம், 1946ல் இருந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
               அந்தப்பையன் என்னை அழைத்துக்கொண்டு நடுவில் இருந்த பாதை வழியே சென்று, இலக்கத்தை சரிபார்த்து அமர வைத்தான். போகாமல் நின்ற அவனைப்பார்த்து, ஓ என்று ஞாபகம் வந்துவிட 10 பீசோ கொடுத்தேன். ஒரு வெட்கச்சிரிப்பு சிரித்து விட்டு அகன்றான் . என்னுடைய சீட் மேலேயும் இல்லாமல்,  கீழே மிக அருகிலும் இல்லாமல் நடுவாந்தரத்தில் இருந்தது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்ப ஆரம்பிக்க, அந்த வெட்டவெளியில் நல்ல தென்றல் சிலுசிலுவென்று வீச ஆரம்பித்து, உடம்பில் சிலிர்ப்பைத் தந்தது. அங்கே நம்மூர் கீத்துக் கொட்டகைகளில் விற்பதுபோல், கைகளில் ஏந்தி பலவித பண்டங்களை விற்றனர். காபி, டீ தவிர ஆங்காங்கே இருந்த வழிகளில் ஐஸ் பியரும் விற்றார்கள். செம்பட்டைத்தலை பாப்பா ஒருத்தி, கறுப்புக் கண்ணாடி அணிந்து, ஏதோ கூவி விற்றுக் கொண்டிருந்தாள். கறுப்புக்கண்ணாடி ஸ்டைலுக்கா இல்லை கண்ணில் கோளாறா?  என்று தெரியவில்லை. எனக்கு முந்தின வரிசையில் வந்த அவள் கூவியதைக் கவனித்தேன்.”பப்பாஸ் பலோமாஸ்” என்றாள். பப்பாஸ் என்றால் சிப்ஸ் என்று சற்றுமுன்னர்தான் கண்டுபிடித்திருந்தேன். பலோமாஸ் என்றால் என்ன என்று தட்டைப்பார்த்த போது, அது பாப்கார்ன் என்பது தெரிந்தது. தட்டில் இரண்டே பொருள் இருந்ததால் பலோமஸ் என்றால் பாப்கார்ன் என்று கண்டுபிடித்த என் அறிவை, வேறுயாரும் மெச்சவில்லை என்பதால் நானே மெச்சிக்கொண்டேன். அதி சிவப்பான பெண்கள் கறுப்புக்கண்ணாடி அணிவது மேலும் அழகை நிச்சயமாய்க் கூட்டுகிறது. ஆனாலும்  சிப்ஸ் விற்பதற்கு கறுப்புக்கண்ணாடி ரொம்பவே ஓவர்.
Music bnd

                 தூரத்தில், எதிர்வரிசையில் மேலே இருந்து ஒரு இசைக்குழு விட்டுவிட்டு வாசித்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னொரு பெண் ஒரு சிறிய புத்தகத்தை எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தாள். அநேகமாக எல்லோரும் வாங்கியதால் நானும் 2பீசோ கொடுத்து வாங்கினேன்.


 புரட்டினால் அதில் அன்று விளையாடவிருக்கும் வீரர்களின் படம், பெயர், சிறு வரலாறு மட்டுமின்றி அன்று வரப்போகும் காளைகளின் படங்கள், பெயர், வயது, எடை மற்றும் உரிமையாளரின் விவரங்கள் ஆகியவை அனைத்தும் கொடுக்கப்பட்டிருந்தன. ஏராளமான விளம்பரங்களும் இருந்தன. கொடுமை என்னன்னா, எல்லாமே ஸ்பானிஷில் இருந்தது. ஆங்கில எழுத்துகள் என்பதால் பல இடங்களில் யூகம் செய்ய முடிந்தது.
           கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பினாலும், அரங்கம் முழுவதுமாக நிரம்பவில்லை.இதற்கிடையில் என்னைத்தாண்டி வந்த 2 இளம் ஜோடிகள் என் அருகில் உட்கார்ந்தனர். என் பக்கத்தில் உட்கார்ந்த பெண் என்னை உரசுவதை தவிர்க்காமல் “ஓலா” என்று சொல்லி பிங்க் ஈறுகளை காண்பித்தாள் (வேனாம் இதெல்லாம் எனக்கு கொஞ்சமும் பிடிக்காது). பார்க்க அல்ட்ரா  மாடர்னாக இருந்தாள் என்பதால், ஒருவேளை இவள் உதவக்கூடும் என்ற நப்பாசையுடன் "ஹிஹி இதுதான் முதல்தடவை, இந்த விளையாட்டைப்பற்றி கொஞ்சம் சொல்கிறாயா?" என்றேன். "நோ இன்க்லிஸ்" என்றாள் மறுபடியும் பிங்க் ஈறுகள். போடி இவளே பார்க்கத்தான் படாடோபமாய் இருக்கிறார்கள், ஆங்கிலம் தெரியவில்லை என்று நொந்து கொண்ட சமயத்தில், அவள் பக்கத்திலுள்ள இன்னொருவளிடம் கிண்கிணி கிண்கிணி என்று பேசிவிட்டு என்னைக் காண்பித்தாள்.
இருவரும் மாறி உட்கார்ந்து கொண்டு, இன்னொருவள் "வேர் ஃப்ரம்" என்றாள், நியூயார்க் என்றதும், நம்பாது கோணச்சிரிப்பு சிரித்தாள். "இன்டியன், லிவ்விங் இன் நியூயார்க்" என்றேன். ஓ என்று சொல்லிவிட்டு, காளைச் சண்டையைப்பற்றி தன்  ஓட்டை இங்கிலீஸில் விளக்க முயன்றாள். அவள் சொன்னதில், எனக்கு புரிந்தவை.
       மூன்று வீரர்கள் (டொரெரோ) ஆளுக்கு 2 காளைகளோடு மோதுவார்கள். ஒரு காளைச்சண்டை சுமார் 1/2 மணி நேரம் நடக்கும். ஒவ்வொரு வீரருக்கும் ஆறு உதவியாளர்களும், 2 குதிரை வீரர்களும் உதவுவர். மைதானத்தில் இருவட்டங்கள் வரையப்படும். இன்னர் ரிங் மற்றும் அவுட்டர் ரிங், விளையாட்டு வீரர், காளையுடன் நேரடியாக மோதும்போது இன்னர் ரிங்கில் மோதுவர் என்றாள்.இது போதுமம்மா தாயி, என்று நினைத்து கும்பிட்டு நன்றி சொன்னேன். நடுநடுவில் தன்னையறியாமல் ஸ்பானிஷிக்கு சென்று மன்னிப்புகோரி, ஆங்கிலத்திற்கு வந்து அவள் விளக்கியது வேடிக்கையாக இருந்தது. இதற்கிடையில் மைதானத்தில் சிலர் வந்து, கோடுகளை திருத்தி, நம்மூர்போல் வெள்ளைப்பொடி தூவி பிரித்தனர்.
Procession

                மைதானம் மக்களால் களைகட்ட, பக்கத்தில் இருந்தவர் ஆண்பெண் வித்தியாசம் இல்லாமல், குளிர் பியர்களைக் குடித்து சூடாகிக் கொண்டிருந்தனர். திடீரென்று உச்சஸ்தாயியில் பேண்ட் வாத்தியக்குழு டிரம்பெட்டுகளை இசைக்க, ஒரு ஊர்வலம் கிளம்பி வந்தது. முதலில் ஊழியர்கள் தங்கள் சிறுவண்டிகள் மற்றும் சிறு கருவிகளோடு வந்தனர். அவர்கள் பின்னால் யூனிபார்ம் அணிந்த ஒரு குழு நடந்து வந்தது. அவர்கள் பின்னர் குதிரை வீரர்கள் தங்கள் நீண்ட ஈட்டிகளோடு வர, அவர்கள் பின்னால் காளை வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். பளபளப்பான உடையில் ராஜகுமாரர்கள் போல், இடையில் வாள் அணிந்து வந்தவர்களில் முதலில் ஃபேபியன் பார்பாவும் இரண்டாவதாக டேவிட் மோராவும் மூன்றாவது மனோலா  மேஜியாவும் கம்பீரமாய் நடந்து வந்தனர். கடைசியாக வந்தவரைத்தான் நான் வெளியே இருந்துவந்த காரில் பார்த்தேன்.
மனோலா உள்ளே வந்த மாத்திரத்தில், முழுக்கூட்டமும் எழுந்துநின்று  மன்யோலா மன்யோலா என்று ஆரவாரம் செய்ததில், அரங்கம் மட்டுமல்ல என் காதுகளும் அதிர்ந்து போயின. நடுத்தர வயதில் மற்ற இருவரைக் காட்டிலும் குட்டையாக இருந்த அவருக்கு வரவேற்பு பலமாக இருந்தது. மூவரும் சென்று மறுபுறத்தில் உட்கார்ந்திருந்த யாரோ ஒரு விஐபிக்கு வணக்கம் சொல்லிவிட்டு எனக்கு நேர் கீழே இருந்த ஒரு பாக்சுக்குள் நுழைந்தனர்.
சிறிதுநேரத்திலேயே, எனக்கு நேரே எதிர்ப்புறத்தில் ஒரு திட்டிவாசல் திறக்கப்பட, வருதய்யா ஒரு காளை சீறிக்கொண்டு.


இன்னும் வரும் >>>>>>>>>>>>

Thursday, June 6, 2013

காஸ்டில்லோ தியேட்டரில் நடந்த கள்ளக்காதல்- பகுதி 1.


          நியூயார்க் நகரில் "பிராட்வே தியேட்டர்கள் " என்பது உலகப்புகழ் வாய்ந்த ஒன்று. இங்கு நடக்கும் இசை நாடகங்கள் (Musical Plays) ஒரு முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தை தரவல்லவை. ஐந்தாறு வருடங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பவையும் உண்டு. குறிப்பாக, 'Lion  King' 'Mary  Popins', 'Mama mia' போன்றவை வெகுகாலமாக ஓடிகொண்டிருப்பவை. இவற்றுள் பல திரைப்படங்களாகவும் வந்துள்ளன. பாடி நடிக்கும் நடிகர்கள், நகரும் மேடை, வேகமாக சீன் மாறுதல், ஒப்பனை, அலங்கரிப்பு, லைவ் ஆர்க்கெஸ்ட்ரா என கொஞ்சம் கூட நம்பமுடியாத அளவில் பிரமிப்பை ஏற்படுத்தும், பெர்ஃபெக்சனை இங்கு  பார்க்கலாம். இதற்கு பெரிய அளவில் மேல்தட்டு மக்களின் ஆதரவும், இதனைப்பார்க்கவே வரும் வெளிநாட்டு கூட்டமும் ஆண்டு முழுவதும் இருக்கும். என்ன, டிக்கெட்டுகள்தான் குறைந்தது $100 முதல் $200 வரை இருக்கும்.

            கிறிஸ்மஸ் காலங்களில் நடைபெறும் "ராக்கெட்டிஸ் ஸ்பெக்டாக்குலர் மியூசிக்கல்" பார்த்திருக்கிறேன். காண்பதற்கு இரு கண்கள் பத்தாது. 75 வருடங்களாக நடக்கிறது.. இது நடைபெறும் “ரேடியோ சிட்டி ஹால்” தியேட்டர் உலகின் பெரியவைகளில் ஒன்று. எதுவும் மிகையில்லை.



            பிராட்வே தியேட்டர்கள் தவிர, ஆஃப் பிராட்வே தியேட்டர்களும் (Off  Broadway) உண்டு. இதற்கும் தனியான ரசிகர் கூட்டம் உண்டு. டிக்கெட்டுகள் சல்லிசாக கிடைக்கும் அது வேறு ஒரு உலகம். அப்படி ஒரு தியேட்டரான "கேஸ்டில்லோ தியேட்டரில்" (Castillo Theater :www.castillo.org) ஒரு நாடகம் பார்க்க கடந்த வாரம் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
            டைம்ஸ்கொயர் பகுதியில் இருந்து சிறிது நடந்தால்  இந்த தியேட்டர் இருக்கிறது. 7 மணி ஷோவுக்கு 6.30 மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன்.கெளன்ட்டரில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம், "Looks like, there is Plenty of time for the show" என்றேன். வாய் விட்டுச்சிரித்த பெண், டிக்கட்டை கையில் கொடுத்து வரவேற்றாள். வாய்விட்டுச்சிரிப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்களா? அந்த நாடகத்தின் பெயர் " Plenty of time".
 அங்கு பல இளம் அழகிய பெண்கள் காணப்பட்டனர். டிக்கெட் கொடுக்க, வழிகாட்ட, தியேட்டர் வாசலில் என்று. விசாரித்ததில், நடிப்புப்பயிற்சி பெறுபவர்களும், தன்னார்வ தொண்டர்களுமாம் (Volunteers).
         காஸ்டில்லோ தியேட்டர் உள்ளேயே நாலைந்து தியேட்டர்கள் இருந்தன. உள்ளே வேறு வேறு நாடகங்கள் நடைபெறுகின்றன. பல டிரஸ்ட்டுகளின் உதவியாலும், தனியார் நன்கொடைகளாலும்தான் இங்கே தொடர்ந்து நாடகங்கள் நடத்தப்படுகின்றன. ஏனென்றால் பிராட்வே போன்று அதிக வருமானம் இவைகளுக்குக் கிடையாது.
         நேரமிருந்ததாலும், கூட்டம் அதிகமில்லையென்பதாலும் வெளியே வந்து சப்வே சான்ட்விச் கடையில் ஒரு “வெஜ்ஜி டிலைட்” சான்ட்விச்சோடு, சில இலைதளைகளை மேய்ந்துவிட்டு, தியேட்டருக்குத் திரும்பினேன். பத்து  நிமிடங்கள் முன்னதாக உள்ளே விட்டனர். பிரமாண்டத்தை எதிர்பார்த்த எனக்கு தியேட்டரைப் பார்த்ததும் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. மிகச்சிறிய அரங்கம், அதனினும் சிறிய மேடை. ஒரு நூறு பேர் மட்டுமே உட்காரமுடியும். $25 டிக்கட் கொஞ்சம் அதிகமோ, பேசாமல் திரும்பிவிடலாம் என்று நினைத்தபோது, பணம் ரீஃபன்ட் தரமாட்டார்கள் என்று ஞாபகம் வந்தது. என்னதான் நடக்குது பார்த்துவிடலாம் என்று நினைத்து, முன்வரிசையில் முதல் ஆளாக அமர்ந்து விஐபி போல உணர்ந்தேன். (ஏலேய் சேகரு எந்த விஐபி முதலில் வந்து உட்காருவார்கள்? - அட கூறுகெட்ட மகேந்திரா, முதல் வரிசையில் உட்கார்ந்ததை சொன்னேன்டா).
           அதன்பின் கூட்டம் கூட்டமாக வந்து, சிறிய அரங்கு சீக்கிரத்தில் நிறையும் என நினைத்து ஏமாந்தேன். ஒருவேளை, ஆரம்பித்தவுடன் வருவார்களோ? வேலை நாளாக இருப்பதால் ஆட்கள் இல்லாமல் இருக்கலாம். நாடகம் ஆரம்பிக்க ஐந்து நிமிடம் இருக்கும்போது ஒரு ஐந்தாறு நபர் வந்தார்கள். சரியாக 7 மணிக்கு பெல் அடித்தது.      
              தேவதானப்பட்டி சிவராம் டாக்கீஸில் பெல் அடிப்பது ஞாபகம் வந்தது. அப்போதெல்லாம் தியேட்டரில் வெளியே கேட்கும்  வண்ணம் , மக்களை அழைப்பதற்காக   பாடல்கள் போடுவார்கள். படம் ஆரம்பிக்கும் முன் எப்போதும், பெங்களூர் ரமணியம்மாளின் பாட்டு போடுவார்கள். ஞாபகம் வந்துவிட்டது, "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்"என்ற பாடல். அரோகரா அரோகரா என்று சொல்லும்போது படம் போட்டுவிடுவார்கள் என்பதால் ஓடுவோம். (அடேய் சேகரு, உனக்கு வயசாகிப்போச்சு சும்மா பழசை எடுத்திட்டே இருக்கே, சும்மாரு மகேந்திரா ஒனக்கு மட்டும் இளமை ஊஞ்சலாடுதா?).
             திரைகள் எழும்ப, அரங்கு இருளாயிற்று. மேடை ஒளிர, ஒரு சிறிய ஹோட்டல் ரூம் கண்முன் உருவானது. கனகச்சிதமாக இருந்தது. பழைய காலத்து ரூம் போல் தெரிந்தது. ஒரு ஓரத்தில் சிறிய டிரஸ்ஸிங் டேபில், சேர், மற்ற பகுதியில் ஒரு சிறிய பார், மேஜை, அதன்மேல் அந்தக்காலத்து மதுபானங்கள். ரூமின் நடுவில் உள்ள 'கிங்' படுக்கையில் நல்ல விரிப்புகள், தலையனைகள். அட அப்பதான் பார்த்தேன், அந்தப்படுக்கையின் மேல் ஒரு ஆணும் பெண்ணும் நெருக்கமாக படுத்திருந்தனர். சொல்லவேயில்லை. ஐயையோ இதென்ன தெரியாமல் பலான ஷோவுக்கு வந்துவிட்டோமோ என்று திகைப்பாக இருந்தது.


விரைவில் பார்ட் 2