Wednesday, November 26, 2014

குருதிப்புனல் !!!!!!!!!!

 இந்திரா பார்த்தசாரதியின் “குருதிப்புனல்”

மறுவாசிப்புக்கென சில புத்தகங்கள் உள்ளன. காலத்தால் அழியாத கிளாசிக் வகை புத்தகங்களை  லிஸ்ட் போட்டால் அதில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய "குருதிப்புனல்" என்ற நாவலும் வரும். இதற்கும்  கமல் எடுத்த "குருதிப்புனல் என்ற படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .
பெண்களின் பெயரை முதற்பெயராகக் கொண்டு புனை பெயரில்  எழுதிப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர். சுஜாதா, கலாப்ரியா, சாரு நிவேதிதா, புஷ்பா தங்கதுரை, ஹேமா ஆனந்ததீர்த்தன், சுபா,சவீதா, ஸிந்துஜா என்று பல எழுத்தாளர்களைச் சொல்லலாம்.  
இதில் இந்திரா பார்த்தசாரதி தலையாய, சிறந்த இலக்கிய வகை எழுத்தாளர். இவர் எழுதியதில், "குருதிப்புனல்" மிகவும் முக்கியமான ஒன்று. 70களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நாவல் "சாகித்ய அக்காடெமி" பரிசு பெற்றது. பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ஒன்று. 2010-ல் இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்து கௌரவித்தது.
இதை ஜெமினியின் மகள் ஜீஜீயைக் கல்யாணம் செய்த ஸ்ரீதர்ராஜன் “கண்சிவந்தால் மண்சிவக்கும்” என்று ராஜேஷ், பூர்ணிமா (பாக்கியராஜ்) ஆகியோரை வைத்து 80 களில் எடுத்தார்.
மறு வாசிப்பில் மிகவும் புதிதாக இருந்தது. அதோடு இதில் விவாதிக்கப்படும் சமூக அவலங்களும் அப்படியே புதிதாகவே இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கின்றன. சொல்லப்போனால் அந்த அவலங்கள் இன்னும் அதிகமாகத்தான் பரவியுள்ளது.
குறிப்பாக தஞ்சைப் பகுதியில் நடந்து, பெரும் பரபரப்பூட்டிய "கீழவெண்மணி" சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்டது இந்த நாவல். இன்றைக்கும் அன்று நடந்த, நம் சமூகத்தின் சாதிவெறியும், ஆதிக்க மனப்பான்மையும் சுட்டெரித்த அப்பாவி மக்களின் பரிதாப மரணங்கள் ,நடுக்கத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன.  
கலப்பு மம் புரிந்து கொண்டு தங்கள் ஊரையும் மாநிலத்தையும் விட்டு ஓடி தலைநகர் டெல்லியில் வாழ்க்கையை ஆரம்பித்த ஒரு தம்பதியின் மகன், மீண்டும் தன் தந்தையாரின் ஊருக்கு வருகிறான். அவன் பெயர் கோபால். சமூகவியலில் உயர் படிப்பு படித்திருந்தாலும், கிராமத்தில் இருக்கும் தன் சொந்த சமூகத்தை நன்றாக தெரிந்து கொள்ளாவிட்டால் இழிவு என்று எண்ணியதால்தான் தஞ்சையில் இருக்கும் தன் குக்கிராமத்துக்குத் திரும்புகிறான். அங்குள்ள சமூக அவலங்களை தன் சொந்தக் கண்ணால் பார்க்கும் அவன், அதனை மாற்ற தன்னால் ஏதும் இயலுமா என்று முயன்று பார்க்கையில், அவனுடைய நண்பன் வாசு வந்து சேர்கிறான்.
கிராமத்தில் சிறிதாக முளைவிடும் கம்யூனிச சிந்தனைக்கு தலைமை தாங்கும் பள்ளிக்கூட ஆசிரியர் ராமய்யா தலைமையில், அமைப்பு சாரா கிஸான் குழு ஒன்று இயங்க முயல்கிறது.
அரசியல் செல்வாக்கு மற்றும் ஆதிக்க மனப்பான்மை கொண்ட மேல்தட்டு பண்ணைக்காரர் இவர்களை ஒழித்துக்கட்ட முயல்கிறார். இடையில் மாட்டிக் கொண்ட கோபாலும் வாசுவும் என்னாகிறார்கள்? அவர்களை நம்பி பண்ணைக்காரரை எதிர்க்கும் கீழ்த்தட்டு தொழிலாளர்களின்  நிலைமை என்னவாகிறது? என்பதுதான் கதை.
புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள அன்றும் இன்றும் அப்படியே மாறாமல் இருக்கும் நிறைய அவலங்களைக் கீழே கொடுக்கிறேன்.
1) பணம் பாதளம் மட்டும் பாயும்.
2) பணம் ஒரு இடத்திலேயே குவிந்து கிடக்கும்.
3) ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே தொடரும் அவதி.
4) பணக்காரர்களுக்கு சட்டமும் போலிசும் வளையும்.
5) அரசியல்வாதிகள் பணத்திற்கு அடிமைகள்.
6) அரசியல்வாதிகளின் உண்மை முகம் மறைந்தே இருக்கும்.
7) அரசியல்வாதிகளுக்கு பொதுநலன் என்பதில் கிஞ்சித்தும் கவலை இல்லை.
8) “கரை" வேட்டிகள் "கறை"வேட்டிகளாகவே அலைகிறார்கள்.
9) தடியெடுத்தவன் தண்டல்காரனாகின். ஆனால் அவர்களும்  பணக்காரனுக்கு அடிமை.
10) சாதி வெறியும், வகுப்புவாதமும் தீராத சமூக வியாதிகள்.
11) படிப்பும் பட்டணமும் போலிகளை உருவாக்குகின்றன.
12) திரைப்பட நபர்களின் பின்னால் போதல் மற்றும் அவர்களின் காதலிகளை அண்ணி என்று அழைத்து உருகும் வேலையற்ற ரசிகர் கூட்டம்.
13) பெரியோர்களே தாய்மார்களே என்று விளித்து மேடைகளைக் களங்கப்படுத்தும் அரசியல் போலிகள்.
14) கூலி உயர்வு கேட்டால் தாலி அறுக்கும் முதலாளிகள்.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ  நம் சமூகம் மாற.

நாளை இங்கு விடுமுறை தினம் என்பதால் பதிவு இன்றைக்கே வருகிறது .மீண்டும் வரும் திங்கள்கிழமை சந்திப்போம் ,சிந்திப்போம் .

Wish you all a happy Thanksgiving 

Monday, November 24, 2014

இளையராஜாவின் சுயநலம்????????

எழுபதுகளில் இளையராஜா பாடல் எண் 10 - "காதல் ஓவியம் கண்டேன்".

1977ல் வெளிவந்த கவிக்குயில் என்ற படத்துக்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.  பாடலைக்கேட்போம்.


இசைக்கோர்வை:
இளையராஜாவின் இசையின் வீச்சுக்கும் ஞானத்துக்கும் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு இந்தப்பாடல். அநாயசமாக இசையமைக்கப்பட்ட இந்தப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒன்று.
ம்ம் என்ற ஹம்மிங்குடன் பாடல் துவங்க, எந்த இசையும், இல்லாமல் மிகவும் சாதாரணமாக 'காதல் ஓவியம்' என்று பெண்குரலில் ஆரம்பிக்கிறது. ஓவியத்தில்  “யம்” என்ற இடத்தில் தபேலா இணைந்து கொள்ள மற்ற எஃபக்ட்ஸ், டிரம்ஸ் சிம்பலும் சேர்ந்து கொள்ள, பாடல் காதுகளிலும் மனங்களிலும் நிறைந்து தேனை ஊற்றுகிறது.
இளையராஜா 80 களில் இசையமைத்த பாடல்களில் பேஸ் கிடாரை லீட் கிடார் போல பல இடங்களில் பயன்படுத்தியிருப்பார். மற்ற சமகால மற்றும் பின்னர் வந்த இசையமைப்பாளர்கள் போலன்றி, இசைக்கருவிகளை முடிவு செய்வது இசைநடையை முடிவு செய்வது, கருவிகளுக்கு நோட்ஸ் எழுதுவது என்று எல்லாவற்றையும் அவரே செய்வதால் அந்தப்பாடலின் முழு ஓனர்ஷிப் அவருக்குத்தான் என்று சொல்லலாம். அந்த லீட் போல் வரும் பேஸ் கிட்டார் இந்தப்பாடலில் அதிகமாக வருகிறது. எனக்குத் தெரிந்த அளவில் இதில்தான் முதன்முறையாக பேஸ் கிட்டார் லீட் மாதிரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தபேலாவின் முத்தாய்ப்போடு பல்லவி முடிய முதல் BGM ஆரம்பிக்கிறது. வீணை இசை போல் வயலின்களின் ஒரு குழு இசைக்க, வயலின்களின் இன்னொரு குழுமம் அதோடு உரையாட இல்லை இல்லை இசையாட ஆரம்பிக்க, பின்னனி கோரஸ் குரல்கள் இணைந்து கொண்டு உச்சம்போய் முடிய, முதல் சரணம் 'மாமரத்தோட்டத்து நிழலில்' என்று ஆரம்பிக்கிறது. எனக்குத் தெரிந்து இளையராஜா கோரஸ் குரல்கள் பயன்படுத்தியதும் இந்தப்பாடலில்தான் முதன் முறையாக என்று நினைக்கிறேன். பின்னர் அது அவரின் முக்கிய அடையாளமாக மாறிப்போனது.
2-ஆவது BGM-ல் வீணையும் வயலின்களும் விளையாட BGM-க்கு இளையராஜா எவ்வளவு ரசித்து உழைத்திருக்கிறார் எனப்புரியும். "கூந்தலில் வாசனை மலர்கள்" என்று 2-ஆவது சரணம் ஆரம்பிக்கிறது.
3-ஆவது BGM-ல் வீணையின் நாதமும் வயலின்களும் கோரஸும் இணைந்து ஒலித்து முடிய, மூன்றாவது சரணம் ,”மார்கழி மாதத்து பனியில்”, என்று ஆரம்பித்து பின்னர் பல்லவி வந்து பாடல் முடிகிறது
குரல்:
  1. Sujatha with Jesudas
இந்த அருமையான பாடலைப்பாட கொடுத்து வைத்தவர் சுஜாதா அவர்கள். ஜேசுதாசின் கச்சேரி மேடைகளில் பாடிய இந்தச்சிறுமியை இளையராஜா அறிமுகப்படுத்தியிருக்கிறார். சுஜாதாவுக்கு சுமார் 14 வயதிருக்கும் அப்போது அவர் பாடிய முதல் பாடல் இதுதான் என்றாலும் முதலில் வெளிவந்தது நாம் முன்னரே பார்த்த "காலைப்பனியில் ஆடும் மலர்கள்”, என்ற பாடல்தான். முதல் தடவை பாடியது போல் தெரியவில்லை. அழுத்தமான தெளிவான உச்சரிப்பு கீழ்ஸ்தாயி மற்றும் உச்சஸ்தாயிலும் இனிமையான குரல். ஒவ்வொரு வார்த்தையிலும் வரும் அணுக்கமும் நுணுக்கமும் கமஹங்களும் ஒரு தேர்ந்த பாடகியின் குரலாக ஒலிக்கிறது.ஜானகி போல் “ஃபீல்” இல்லையென்றாலும் பாடல் நல்ல திறமையான கர்னாடக இசைப்பாடகி பாடியது போல் ஒலிக்கிறது. காதல் என்ற வார்த்தையில் மட்டும் கொஞ்சமாக மலையாள வாடை அடித்தாலும் 2-ஆவது முறை கேட்கும்போது அதுவும் ஒரு அழகாகத்தான் ஒலிக்கிறது.   
இந்த இரண்டு பாடல்களும்  ஒரே ராகத்தில் அமைந்த நல்ல ஹிட் பாடல்கள் என்றாலும் ஏனோ தெரியவில்லை சுஜாதாவுக்கு பின்னர் பாடல்கள் கொடுக்கப்படவில்லை. AR.ரகுமான்தான் அவருக்கு மறுவாழ்வு கொடுத்து பல பாடல்களைக் கொடுத்தார். சூப்பர் சிங்கர் சீனியரிலும் நடுவராகப் பரிணமிக்கிறார் .
பாடல் வரிகள்:

காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
மணச்சோலையின் காவியமே
உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
(காதல் ஓவியம்..)

மாமரத் தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
மாமரத் தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
அந்த மாறன் அருகினிலே
பூந்தென்றல் கமழ்ந்து வர
நான் என்னை மறந்தேனே
(காதல் ஓவியம்..)

கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
என்ன சுகமோ தெரியவில்லை
என் தோளை தொடுவதென்ன
பொன் மேனி சிலிர்ப்பதென்ன
(காதல் ஓவியம்..)

மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
அவன் பார்வை குளிர்வதென்ன
ஒரு பாசம் பிறப்பதென்ன
அங்கு நாணம் தடுப்பதென்ன
(காதல் ஓவியம்..)
பாடல் வரிகளை எழுதியவர் பஞ்சு அருணாசலம். இவரை பெரும் கவிஞர் என்று சொல்லமுடியாது. ஆனால் இசைக்கேற்ற வரிகளை அமைப்பதில் வல்லவர்.  கவிஞர் கண்ணதாசனின் காற்று அடித்திருக்குமல்லவா.இளையராஜாவுக்கு முதல் வாய்ப்பு அளித்தவர் என்பதாலோ என்னவோ அவரின் ஆரம்ப கட்டத்தில் அதிக பாடல்கள் எழுதும் வாய்ப்பு பஞ்சுவுக்கு அமைந்தது.

ஆனால் இந்தப்பாடலில் காதலை ஓவியமாக முதலில் உருவகித்தவர் இவர்தான். மூன்றாவது சரணத்தில் மோகவிரக்தியால் நாயகியின் தேகம் மார்கழிப்பனியிலும் கொதித்துக்கிடக்க, நாயகனின் பார்வை பட்டவுடன் குளிர்கிறதாம். ஆனால் அங்கு காமத்திற்குப் பதில் பாசம் பிறக்கிறது என்ற கற்பனை ஒரு வித்தியாசம்தான். பாசம் என்பது நீண்ட கால வாழ்க்கைக்கு  ஆதாரமல்லவா. பஞ்சு ஒரு மன்மதக்குஞ்சுதான்.
இளையராஜாவின் பல சிறப்பு வாய்ந்த பாடல்களில் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது. அதற்குரிய ஞானம் அவருக்கு இல்லையா? என்று கேட்டால் அதையும் ஒத்துக்கொள்ளமுடியாது. பல பாடல்களுக்கு முதல் வரிகள் சந்தங்களை அவரே எழுதியுள்ளதோடு, "இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்" போன்ற சில பாடல்களை அவரே எழுதியுள்ளார். வரிகளும் கவிதையும் சிறப்பாக அமைந்ததால் தான் இளையராஜா-வைரமுத்து காம்பினேஷன் அவ்வளவு சிறப்பாக அமைந்தது. இளையராஜாவின் என்றென்றும் வாழும் “இளைய நிலா பொழிகிறது" போன்ற சில பாடல்கள் இசைக்கு மட்டுமல்லாமல் அதன் வரிகளுக்கும் சேர்த்துத்தான் அழியாப்புகழ் பெற்றன. ஆனால் இந்தப்பாடல்களில் வரிகள் சிறப்பா இசை சிறப்பா என்று பிரித்துப் பார்க்க முடியாது. ஏனென்றால் இரண்டும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்தே இருக்கின்றன.
இளையராஜா தன் பாடல்களில் இசை மட்டுமே பேசப்பட வேண்டும் என்று நினைத்திருந்தால் அது சுயநலம் மட்டுமல்ல பெரிய முட்டாள்தனம். பாடலின் காட்சியமைப்பு தான் அவர் கையில் இல்லை. அதனால் அவரின் பல பாடல்கள் திரையில்  அபத்தமாக காட்சியளித்தன. ஆனால் வரிகள் அவரால் கட்டுப்படுத்த அல்லது மாற்றியமைக்க முடிந்தவை தானே.
திரைக்காட்சி அமைப்பை மீறி பல பாடல்கள் பெரிய வெற்றிபெற்று நிலைத்து இருக்கின்றன. குறிப்பாக இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்று சொன்னார்கள். நான் ரசித்து இந்தத் தொடரில் இதுவரை எழுதிய பாடல்களின் திரைப்படங்களில் ஒன்றைக்கூட நான் பார்த்ததில்லை.
பாடலின் ராகம்:
நெஞ்சை உருக்குகின்ற இந்தப்பாடலின் ராகம் "ஹமிர் கல்யாணி" என்பதாகும். ஹமிர் கல்யாணியில் இளையராஜா இசையமைத்த சில பாடல்களை கீழே தருகிறேன்.
காலைப்பனியில் ஆடும் மலர்கள் - காயத்ரி
பாட்டாலே புத்திசொன்னார் - கரகாட்டக்காரன்.

கைவீணையை ஏந்தும் கலைவாணியே - வியட்நாம்  காலனி.

இசை  தொடரும்.
அடுத்த வாரம்  " ஒரு காதல் தேவதை "

Thursday, November 20, 2014

நியூயார்க்கில் A.R. ரகுமான் மசூதி !!!!!!!!!!!!!!!!


அடியேன் வேலை செய்யும் நியூயார்க், மிட்டவுன் மேன்ஹாட்டனில், பிராட்வேயில் உள்ள 29-ஆவது தெருவில் ஒரு மசூதி இருக்கிறது. என் ஆபிசுக்கு ஒரு தெரு தள்ளி.
அந்தப்பக்கம் அடிக்கடி போவதுண்டு. தம்பி விசு ஷாக் ஆக வேண்டாம். நான்  மசூதிக்குப் போவதில்லை. அதன் அருகில் இருக்கும் 'சாந்தினி' ரெஸ்டாரண்டுக்கு செல்வதுண்டு. எல்லா நாட்களிலும் அங்கு தொழுகை நடக்கும் என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் அந்தப்பக்கம் ஜேஜே என்று இருக்கும். முதன்முறை அங்கு போகும்போது முஸ்லீம் மக்களில் இத்தனை நிறங்களா என்று ஆச்சரியப்பட்டுப்போனேன். கருப்பு, பிரெளன், வெள்ளை என அத்தனை நிறங்களும், தலையில் தொப்பியைப் போட்டுக் கொண்டு தொழுகைக்கு காத்திருப்பர். இங்கு ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் தொழுகை இடங்கள் இருக்கிறது 

இங்கு அமெரிக்காவில் எந்த மதத்தினரும் தங்கள் மதத்தைப் பின்பற்றவும், மசூதி, சர்ச், கோவில், தர்ஹா, குருத்வார், புத்தவிஹார் போன்ற வழிபாட்டுத்தலங்களை கட்டிக்கொண்டு அவரவர் கடவுள்களை வணங்கவும் முழு சுதந்திரம் உண்டு (Freedom of Worship). பாகுபாடின்றி அனைவரும் வந்து வாழும் சொர்க்க(?) பூமி என்று கூட சொல்லலாம்.
அப்படி போகும்போது ஒரு நாள்  கவனித்தேன் மேலே ARRAHMAN Masjid என்று போட்டிருந்தது. ஆஹா ஒருவேளை அடிக்கடி நியூயார்க் வரும் நம் AR. ரகுமான் கொடுத்த நன்கொடையில் கட்டப்பட்ட மசூதியாக இருக்குமென நினைத்தேன்.
அந்தப்பக்கம் போகும்போதெல்லாம், "ஐயாமாரே AR. ரகுமான் என் இனமடா, அவர் பேசுவது என் மொழியடா, அவர் வசிப்பது என் நாடடா,அவர் வாங்கிய ஆஸ்கார் மற்றும் கிராம்மி அவார்டுகள் எனக்கும் சொந்தமடா" என்று உரக்க யாரிடமாவது சொல்லவேண்டும் என்று தோன்றும். ஒரு தடவை சாந்தினி ரெஸ்டாரண்டில் அதனைப் பற்றிக் கேட்கும்போது 'ஙே' என்று முழித்தார்கள்.  

நானும் ஊர் சுற்றிப்பார்க்க வரும் நண்பர்கள் உறவினர்கள், புதிதாக என் ஆபிசுக்கு வேலைக்கு வரும் “மென்பொருள் பொறியாளர்கள்” என அனைவரிடம் இதனைப்பற்றி சொல்லியிருக்கிறேன். அவர்களும் நான் சொல்வதை அப்பாவிகளாய் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் சமீபத்தில் விவரம் தெரிந்தவர்களிடம் (நம்மை விட விவரம் தெரிந்தவர்கள் உலகத்தில் அதிகம் என்பதை நம்பவேண்டும்) கேட்டபோது  தான் தெரிந்தது. அது AR. ரகுமான் இல்லையாம், (ARRAHMAN) அர்ரஹ்மான் என்றால் “அளவற்ற அரு அருளாளனான அல்லா” (The Most Gracious God)  என்று அர்த்தமாம்.
இதிலிருந்து கிடைக்கும் நீதி என்னவென்றால் கண்ணால் பார்ப்பதும் பொய், (நான் பார்த்தது), காதால் கேட்பதும் பொய் (பிறர் என்னிடம் கேட்டது), நாமே  நினைப்பதும் பொய் (நாம் என்ன நாம், நான் என்று சொல்), தீர விசாரிப்பதே மெய். (முதல்ல அதச்செய்டா பரதேசி)

பிஸ்மில்லா அர்ரகுமான் அர்ரஹீம், ஆமென். 

Monday, November 17, 2014

இளையராஜாவின் முதலிரவுப்பாடல் !!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 9: காலைப் பனியில் ஆடும் மலர்கள்.

1977-ல் வெளிவந்த ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த “காயத்ரி” என்ற  படத்தில் வரும் பாடல் இது.முதலில் பாடலை கேட்போம் .

பாடலின் சூழல்:
புதிதாக திருமணம் முடிந்து, புகுந்த வீடு வரும் பெண், காலை எழுந்ததும் முந்தைய இரவில் நடந்தவற்றை நினைவு கூர்ந்து பாடும் பாடல் இது.
இசைக்கோர்வை:
கிடார் கார்டும் கீபோர்டு-கார்டும் ஒரே சமயத்தில் ஒலிக்க, வெளியில் கேட்க முடியாத மனதின் ஹம்மிங் வெளியே கேட்டால் எப்படியிருக்குமோ அப்படியாக 'ம்ம்ம்' என்ற ஹம்மிங் வருகிறது. எனவே சிறிது தூரத்தில் அல்லது கிணற்றுக்குள் இருந்து வருவது போல் ஒலிக்கிறது. அந்த ஹம்மிங்கை 'எக்கோ' சூழ்ந்திருக்கிறது. அது முடிந்தவுடன் “னனனன”, என்று பளிச்சென பெண் குரல் பாட ஆரம்பிக்க எல்லா இசைக்கருவிகளும் சேர்ந்து விறுவிறுப்பாய் துவங்குகிறது. ஸ்டிரிங்ஸ் இசையோடு அது முடிய "காலைப்பனியில்" என்று பெண்குரலில் பாடலின் பல்லவி ஆரம்பிக்க தபேலா இணைந்து கொள்கிறது. மூன்றாவது நான்காவது வரிகள் மறுபடியும் வரும்போது 'மாயம்' 'யோகம்' ஆகிய இரு வார்த்தைகள் மிகுந்த  அலங்காரத்துடன் வருகிறது.
பல்லவி, தபேலா தீர்மானத்துடன் முடிந்தவுடன், முதலாவது BGM மிகச் சுருக்கமாக வருகிறது. சில ஸ்டிரிங்ஸ் இசையோடு வயலின் இசை சுருக்கமாக வர, "பார்வையோடு பார்வை சேரும்", என்று சரணம் ஆரம்பிக்கிறது. தபேலா இணைந்து வித்தியாச நடையில் ஒலிக்கிறது. ஒவ்வொரு வரியின் முடிவிலும் வீணை / சிதார் வந்து அடுத்த வரிக்கு கட்டியம் கூறுகிறது. சரணத்தின் முடிவில் ஹம்மிங் “ம்ஹீம் ம்ஹீம் ஓஹோ ஓஹோ” என்று ஆஃப் பீட்டில் அருமையாக வந்து முடிய பல்லவி மீண்டும் வருகிறது. அதில் 'மாயம்' என்ற வரி வரும்போது, அற்புதமான பிர்ஹாவில் ஒலிக்கிறது. 
         முதல் BGM சுருக்கமாக வந்ததாலோ என்னவோ இரண்டாவது BGM விஸ்தாரமாக வருகிறது . வீணை, தபேலா வயலின், கிடார் என எக்கச்சக்க மெலடியில் ஒலித்து முடிய "காதலாகி கனியும் போது", என்று 2-ஆவது சரணம் ஆரம்பிக்கிறது. 2ஆவது வரியில் வயலின்களும் சேர்ந்து கொள்ள, பாடல் அப்படியே நிறைந்து பரவி ஹம்மிங் வந்து பின்னர் பல்லவி வருகிறது. 'மாயம்' அதே அலங்காரத்துடன் வந்து பின் பாடல் தபேலாவின் முத்தாய்ப்புத் தீர்மானத்தோடு முடிகிறது.
பாடலின் குரல்:
  1. Jesudaas with Little Sujatha at Melbourne Australia
இந்தப்பாடலை பாடியவர் மலையாளத்திலிருந்து வந்த “சுஜாதா” அவர்கள்.  தமிழ்த்திரையிசையில் இவருக்கு இதுதான் முதல் பாடல். அவரும் சித்ரா போலவே சிறுவயதிலிருந்து ஜேசுதாஸ் அவர்களின் மேடைக்கச்சேரிகளில் இணைந்து பாடிப்புகழ் பெற்று, ஜேசுதாஸ் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு முன்னுக்கு வந்தவர். இந்தப்பாடலைப் பாடும்போது அவரின் வயது 14தான். 1963ல் பிறந்தவர், இந்தப்படம் வெளிவந்த ஆண்டு 1977 என்றால் கணக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். அவரின் வயதுக்கு மிஞ்சிய திறமையுடன் அநாயசமாக பாடியிருக்கிறார். குரலும் மிகவும் இனிமை. குறிப்பாக பல்லவியில் வரும் அலங்கார 'மாயம்'',யோகம்' மற்றும் சரணத்தின் முடிவில் வரும் ஹம்மிங். இவை இரண்டும் எந்தப் பாடகருக்கும் கடினம்தான். முதல் சரணத்தில் 2-ஆவது வரியில் 'தாளம்' என்பதை 'தாலம்' என்று தவறாக உச்சரிப்பதைத்தவிர மற்ற இடங்களில் உச்சரிப்புப் பிழையும் இல்லை.
  1. Sujatha
எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல் திரைப்படமான முதற்படமான 'காயத்ரி'யில் பாடகி சுஜாதா அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு சர்ப்ரைஸ் கோ இன்சிடன்ஸ்.
பாடலின் வரிகள்:

காலைப்பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்

பார்வையோடு பார்வை சேரும் பாவம் முதலில் திருனாளும் மனதில்
பாவை மேனி தோளில் ஆட ராகம் பிறக்கும் அதில் தாளம் இருக்கும்
கலைகள் ஆயிரம் அதில் வளரும் காவியம்
சுவை புரியும் நாடகம்
ம்..ஒகொ..ம்ம்

(காலை)

காதலாகி கனியும்போது மோகம் வளரும் என் தேகம் குளிரும்
காலை தூக்கம் கலையும்போது தேகம் கனியும் அதில் நாலும் புரியும்
உறவில் ஆடினேன் புது உலகை நாடினேன்
இன்பக் கடலில் ஆடினேன்
ம்..ஒகொ..ம்ம்


பாடலை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம், கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த இவர் பின்னர் கதையாசிரியராக தயாரிப்பாளராக, இயக்குநராக உயர்ந்தார். இளையராஜாவை முதன்முதலில் தம் படமான “அன்னக்கிளி”யில் அறிமுகப்படுத்தியதால், இளையராஜாவுக்கு இவர்மேல் மிகுந்த மரியாதை. எனவே அவரின் ஆரம்ப காலகட்டத்தில் பஞ்சு நிறைய பாடல்களை எழுதினார்.
எளிமையான வரிகள். ஆனால் உள்ளே கூர்ந்து கவனித்தால் தாம்பத்திய உறவைக் குறித்துச் சொல்லியிருப்பார். பெரும்பாலும் ஆண் வழியாகச் சொல்லப்பட்ட விஷயங்களை ஒரு பெண்ணின் அனுபவமாகச் சொல்லியிருப்பார். ஆனால் அதை விரசமாக சொல்லாமல் சரசமாக சொல்லுகிறார். காலையில் கண்ணாடி பார்க்கும் புதுமணப்பெண் தன் கன்னத்தில்/ இதழில் இருக்கும் காயத்தைப் பார்த்து "இது என்ன மாயம், ஆனால் அது என் யோகம்" என்று பல்லவியில் சொல்கிறாள். முதற் பல்லவியில், உறவை விவரிக்கிறார். பார்வையோடு பார்வை சேரும், அதிலும் ஒரு பாவம் இருக்கும். நாணம் மனதில் மட்டுமே இருக்கும். தலைவனோடு தலைவி சேர அதில் ராகமும் இருக்கும், தாளமும் இருக்கும். அந்த ஆயிரம் கலைகளில் வளரும் காவியம் ஒரு சுவை குவியும் நாடகம் என்று சொல்லுகிறார்.  
2-ஆவது சரணத்தில், எல்லாக் காதலும் காமத்தில் தான் முடியும் என்ற கசப்பான உண்மையை, அது இயற்கையான அடுத்த நிகழ்வுதான் என்பதை, "காதல் கனியும் போது மோகம் வளரும், காலைத்தூக்கம் கலையும் போது தேகமும் கனியும்", என்று சொல்லியிருப்பார்.
ராகம்:

இளையராஜா ஹமிர் கல்யாணி என்ற ராகத்தில் இதனை இசையமைத்திருப்பார். இளையராஜாவின் பலம் அவருடைய மெட்டில் மட்டுமல்ல ஆர்க்கெஸ்ட்ரேஷன் என்று சொல்லும் இசைக்கோர்வு அமைப்பதிலும் அவர் ராஜாதான்.


இப்போது மீண்டும் கேட்டுப்பாருங்கள்.

Thursday, November 13, 2014

நியூயார்க்கில் “சம்போ சிவசம்போ” !!!!!!!!!!!



         “நியூயார்க் தமிழ்ச் சங்கம்”, தீபாவளித்திருநாளை முன்னிட்டு போன சனிக்கிழமை (நவம்பர்  8, 2014) அன்று ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். ஃபிளஷிங்  ஏரியாவில் உள்ள 'ஹிண்டு டெம்ப்பிள்' பக்கத்தில் உள்ள ஒரு பள்ளி ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி நடந்தது.வழக்கம்போல் பரதேசி அங்கு ஆஜர். ஆல்பர்ட் செல்லதுரை , வனஜா பார்த்தசாரதி , ரங்காவின் மனைவி புனிதா, சிவபாலன் ஆகியோர்  வரவேற்றனர்  .

          நிகழ்ச்சிக்கு முன்னால் நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் பழைய ஃபோட்டோக்களை போடுவதாக பொருளாளர் ரங்கா அவர்கள் கூப்பிட்டுச் சொன்னதினிமித்தம் சீக்கிரமாக போய் உட்கார்ந்து கொண்டேன். (பொருள் உள்ளவர்களைத்தான் பொருளாளராக போடுவாங்க போலிருக்கு !!!!!!!!!!). மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்க, மேலிருந்து இறங்கிய ஸ்கிரீனில், சில பழைய போட்டோக்களைக் காண்பிக்கத்துவங்கினர். பாண்டிய மன்னர்கள் ஆரம்பித்து வளர்த்த முதல், இடை, கடைச் சங்கங்களுக்குப் பின்னர் உடனே ஆரம்பிக்கப்பட்டது, “நியூயார்க் தமிழ்ச் சங்கம்” தான் போலிருக்கு, 1970-களில் எடுத்த படங்கள் அவை.  
            கோட் சூட் அணிந்து மறக்காமல் தொப்பியையும் அணிந்த எம்ஜியார் படம் வந்தது. தமிழ்ச்சங்க மக்கள் அவரை ஜான் F.கென்னடி ஏர்போர்ட்டில் வரவேற்று அப்போதிருந்த தலைவர் வீட்டில் விருந்து கொடுத்த படங்கள் வந்தன. எல்லாப்படங்களிலும் எம்ஜியார் அவருடைய டிரேட் மார்க் புன்னகையில் இருந்தார். ஏர்போர்ட்டில் கையில் ஒரு சிறிய பெட்டியுடன் இருந்தார். அந்தப்பெட்டிக்குள் என்ன இருந்தது என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தது.
      அதன்பின் இளமையான “கலைஞர் கருணாநிதி” (அப்போதைய முதலமைச்சர்) வந்த படங்கள், ஜெமினி கணேசனுக்கு கொடுத்த வரவேற்பு, சங்கக்கூட்டத்தில் உரையாற்றும் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகிய படங்கள் காட்டப்பட்டன. பின்னர் அவையே மறுபடியும் மறுபடியும் மறுபடியும் காட்டப்பட்டன. “ஐயையோ போதும் நிறுத்துங்க”, என்று கத்துவதற்குள் நிறுத்திவிட்டனர். (இன்னும் நிறைய போட்டோக்களை போட்டிருக்கலாம் ரங்கா. )
           தலைவர் விஜயகுமார், செயலாளர் ராம்மோகன், ​​​​​​​​​​பொருளாளர் ரங்கா எல்லாரும் பரபரவென அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேடையில் மூன்று சிறுமிகள் தோன்றினர். யாரும் எதிர்பார்க்காத போது, எந்த அறிவிப்பும் இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்தான "நீராரும் கடலுடுத்த" பாடலை அவர்கள் பாட, சடாரென்று எழுந்து நின்றேன். சபையும் எழுந்து நின்றது. ஆங்கிலத்தில் எழுதி வைத்துப்பாடினாலும் உச்சரிப்புப் பிழையின்றி நன்றாகவே பாடினர். அதன்பின்னர் எல்லோருமே உட்கார்ந்து விட ஒரு மஞ்சள் மலர் வந்து (ஸ்ருதி) வந்து அமெரிக்க தேசீய கீதம் பாட அனைவரும் திரும்பவும் எழுந்து நின்றோம்.
           அதன்பின்னர் தலைவர் விஜயகுமார் வந்து "இருளை நீக்கி ஒளி கொண்டுவரும் பண்டிகையே  தீபாவளி" என்று சொல்லிய அதே நிமிடத்தில் எல்லா ஃபோகஸ் லைட்களும் எரிந்து இருளைப் போக்கியது ஒரு ஆச்சரிய கோ இன்சிடென்ஸ்.
           நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஒரு நீலதேவதை (லாரன் ஜோசப்) "நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்" என்ற பாடலை கரோயோக்கி ஸ்டைலில் பாடி அப்ளாஸ் அள்ளினார்.

Bhairavi

அதன்பின்னர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்த அந்தப் பெண்ணை பார்த்து “அட “நாதஸ்வரம்” தொடரில் மலராக நடிக்கும் பெண்”, என என் மனைவி சொன்னாள். “பைரவி” என்று அறிமுகப்படுத்தினார்கள். மலரின் சாயலில் இருந்ததால், அப்படியே நினைத்து  விட்டாள் போல. நல்ல கருநாடக ஸ்டைலில் ஆக்சென்டில் இன்னொரு தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார், அதன்பின்னர் அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் 'அலெக்ரா' பாடலைப்பாடி அசத்தியபோது, கர்நாடக ஆக்சென்ட் கொஞ்சம் கூட இல்லை.
                   தமிழ்த்தாயின் பாட்டை விட இந்தப்பாட்டுக்கு நிறைய பிராக்டிஸ் செய்திருப்பார் போல. இன்னும் சில பாடல்கள் பாடப்பட்டன. கடைசியாக பைரவி தவிர மற்ற மூன்று பேரும் மெட்லி என்று பல பாடல்களை பாடி ஹைபிச்சில் திணறி தொண்டை கட்டி போதுமடாசாமி  என்று இறங்கி வந்தனர். மெட்லி  மேட்லி ஆகி கொஞ்சம் பேட்லி ஆகிவிட்டது.

    
அதன்பின்னர் பரதநாட்டிய உடையில் ஒரு பத்துபேர் மேடையேறினர். விக்னேஸ்வரி அவர்களின் மாணவிகளாம். விக்னேஸ்வரி அவர்கள் வந்து ஒரு புதிய முயற்சியாக மகாபாரதக் கதையை ஒரு 20 நிமிடத்தில் நாட்டியத்தில் நடத்த விருப்பதாக அறிவித்தார். தவறு இருந்தால் மன்னிக்கும்படியும் கூறினார். அவருடைய உச்சரிப்பிலிருந்து அவர் ஒரு இலங்கைத்தமிழர் என்று தெரிந்தது. 


அவருடைய மாணவிகள், அபிநயத்திலும், கண் அசைவிலும்,  நளினத்திலும் மிகச் சிறப்பாக டி கைதட்டல்களை அள்ளினர். குறிப்பாக சகுனியின் சூது விளையாட்டு மிகச் சிறப்பாக இருந்தது. மேலும் ஒரு மாணவியின் தாயும் கலந்துகொண்டு வெகுசிறப்பாக ஆடினார்.
  1. YG Mathuvanthi

                       கடைசியாக Y.G. மதுவந்தியின் "சம்போ  சிவசம்போ” நாடகம் அரங்கேறியது. கதையின்   களம் நியூயார்க்.


                    நியூயார்க்குக்கு மேற்படிப்பு படிக்க வரும் மதுவந்தி தன் நண்பர்களோடு தங்குகிறார். ஒரு ரூமில் அவரும் அவள் கிளாஸ்மெட்டும் (மாயா) இருக்க இன்னொரு பெட் ரூமில் ஒரு ஆர்டிஸ்ட் பெண்ணும், செஃப் ஆக வேலை செய்யும் ஒருவரும் இருக்கிறார்கள். இதற்கிடையில் சாஃப்ட் வேர் வேலைக்கு வரும் ஒருவனுக்கு தங்கள் ஹாலில் உள்ள கவுச்சை வாடகைக்கு விடுகிறார்கள். இது ஒரு டிபிக்கல் நியூயார்க் சீன். ஆனால் மதுவந்தியின் அப்பா, சுரேஸ்வர் ஊரிலிருந்து இங்கு வர, ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருப்பதை தப்பாக எடுத்துக்கொள்வார் என்பதால் ஆகாஷூம் மாயாவும் திருமணமானவர்கள் என்ற பொய்யைச் சொல்ல, அதன்பின் பொய் மேல் பொய் சொல்லி நன்றாக மாட்டிக் கொண்டு முழிக்க, இது எப்படி சால்வ் ஆகிறது என்பது தான் நாடகத்தின் கதை.

Sureshwar
       சுரேஸ்வர் குழந்தை நட்சத்திரமாக, அன்புக்கு நான் அடிமை, பொல்லாதவன், அலைகள் ஓய்வதில்லை, ராணுவ வீரன் போன்ற பல தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னட, மலையாளம் மற்றும் இந்திப்படங்களில் நடித்தவர். பின்னர் சின்னத்திரையிலும் மர்ம தேசம், விடாது கருப்பு, சித்தி, போன்ற பல சீரியல்களில் நடித்தவர். Y.G.மகேந்திரா நாடகக்குழுவில் பல  ஆண்டுகள் நடித்து இப்போது முதன்முதலாக இந்த நாடகத்தை எழுதி இயக்கியுள்ளார். விளம்பரங்களில் M.S.விஸ்வநாதன் இசை என்று போட்டிருந்ததை பார்த்துவிட்டு,”எங்கே அவரைக்காணோம் என்று என் பக்கத்தில்  உட்கார்ந்திருந்த ஒரு அப்பாவி கேட்டார்.
                       மேலிருந்து மறுபடியும் இறங்கிய ஸ்கிரீனில், நாடகத்தின் பெயர் நடிகர்கள் , தொழில் நுட்ப வல்லுனர்கள் பெயர் எல்லாம் காட்டப்பட்டு, நாடகத்துக்கு இசையமைத்த M.S. விஸ்வநாதன் அவர்கள் 'சம்போ அவர்கள் சிவசம்போ' என்ற அவர் இசையமைத்து  பாடிய “நினைத்தாலே இனிக்கும்” பாடலைப் பாடினார். பாடலின் நடுவில் "ரஜினி ஆடும் காட்சி நடைபெற, அரங்கத்தில் விசில் பறந்தது. (ஆமாம் இந்த விசிலடிக்க எங்கே போய் கற்றுக் கொள்வது?) பின்னனிக்குரலுக்கு 'பாஸ்கி' உதவியிருந்தார்.

நாடகத்தின் சிறப்பு அம்சங்களை கீழே தருகிறேன்.
1.    நாடகம் நடக்கும் களம் நியூயார்க், அதுவும் நியூயார்க்கில் அரங்கேறியதால் எல்லோருக்கும் மிகவும் பிடித்தது.
2.    சீன் செட் அமைப்புகளில், நியூயார்க் வீடு, டைம் ஸ்கொயர் சப்வே 42-ஆம் தெரு ஆகியவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
3.    நாடகம் முழுவதும் கேலியும் கிண்டலும் நிறைந்த நல்ல வசனங்கள். ஹரி ராமகிருஷ்ணன் முதன் முதலாக எழுதியிருக்கிறார்.
4.    சீன் மாற்றங்கள்  மிக விரைவாக செய்யப்பட்டன.
5.    சுரேஸ்வரின் நடிப்பு மேடை நாடகத்துக்கு கச்சிதமாக இருந்தது. கதை எழுதியவரும் டைரக்ஷனும் இவரே.
6.    Y.G. மதுவந்தியின் நடிப்பும் ஓகே.
7.    துணை நடிகர்களில் பெரும்பாலோர் சிறப்பாகவே நடித்தனர்.

குறைகள்:
1.    லோக்கல் ஆட்களின் நடிப்பு சோபிக்கவில்லை. குறிப்பாக மாயா கேரக்டர் மற்றும் ஆகாஷின் அப்பாவாக நடித்தவர்கள்.இந்த விஷயத்தில் டைரக்ஷன் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம்.
2.    'ஏகான்' கேரக்டர், தான் US-ல் பிறந்து வளர்ந்ததாக முதலில் சொல்லிவிட்டு பின்னர் திருச்சியில் பிறந்ததாக சொல்வார். அதோடு இங்குள்ளவர்கள் பயன்படுத்துவது போல் இல்லாமல் பிறந்த தேதியைச் சொல்வார்.
3.    அரவான் அரவாணிகளைக் கேலி செய்தது கொஞ்சம் விரசமாக இருந்ததோடு ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதல்ல. நம் சினிமாவிலும் நாடகத்திலும் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இப்படிப்பிறந்தது அவர்கள் தவறல்ல.
4.    கிளைமேக்ஸ் சீனில் சுரேஸ்வர் பேசுவது கொஞ்சம் நீண்டுவிட்டது. இன்னும் அதை க்ரிஸ்ப் ஆக்கலாம்.
      
ஆனால் மொத்தத்தில் நாடகம் ரசிக்கும்படியாக இருந்தது.சிரித்துக்களித்து வெளியே வந்த எங்களுக்கு சுவையான தீபாவளி விருந்தும் (காரைக்குடி நியூஜெர்சி)  விஜயகுமார் கையால் பரிமாற, உண்டு முடித்து வெளியே வந்தேன்.

ஒரு நல்ல மகிழ்ச்சியான மாலைப் பொழுதைக் கொடுத்த நியூயார்க் தமிழ்ச்சங்க்கத்திற்கு என்னுடைய நன்றிகள்.