Monday, June 30, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி - பகுதி 7 சுல்தானின் கண்கள் !!!!!!!!!!

Topkapi palace 
வேன் ஒரு சுற்று சுற்றி டொப்கப்பி அரண்மனை முன்பு வந்து நின்றது. உயர்ந்த மதில் சுவர்களுடன் இருந்த நுழை வாயிலின் முன் இரண்டு கம்பீரமான துருக்கி ராணுவத்தைச் சேர்ந்த ஜவான்கள் கையில் ஸ்டென் கன்னுடன் நின்றிருந்தனர். எல்லோரும் அவர்களைப் பார்த்து ஒதுங்கிச் செல்ல, நான் கிட்டப்போய், "படம் எடுத்துக் கொள்ளலாமா ?", என்று கேட்டேன். அவன் நோ என்று சொல்லி மேலும் விரைப்பானான். அந்த அரண்மனை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை சிம்பாலிக்காக உணர்த்தத்தான் ராணுவ வீரர்கள் நின்றிருந்தனர்.
வழக்கம்போல் சிறு சோதனைக்குப்பின் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். துருக்கி சுல்தான்களின் அதிகாரபூர்வ இருப்பிடமாக சுமார் 400 வருடங்கள் விளங்கிய (1465-1856) அரண்மனை இது.
Sultan Receiving Dignitaries 
சுல்தான்கள் தங்குவதற்கு மட்டுமின்றி, இங்குதான் பேரரசின் முக்கிய நிகழ்வுகள் அரசு விழாக்கள், பிறநாட்டு தூதுவர்கள் மற்றும் மன்னர்களை கெளரவித்தல் ஆகியவை நடந்தனவாம். 1985ல் யுனெஸ்கோ இதனை “வேர்ல்ட் ஹெரிடேஜ் சைட்டாக அங்கீகரித்தது.  
சுல்தான் மெஹ்மது  II என்பவரால் கி.பி. 1459ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1465ல்  கட்டி முடிக்கப்பட்டது. பல நூறு ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த அரண்மனை 4 பெரிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது (courtyards). அதன் உள்ளே பல சிறிய பகுதிகளில் பேரரசின் பொக்கிஷ அறை, சுல்தானின் நூலகம், காசுகள் அச்சடிக்கும் இடம் (Mint) மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் ஆகியவை இருந்தனவாம்.  
முதல் கோர்ட் யார்டில் ஒரு அழகான தேவாலயம் இருந்தது. சுல்தானின் காலத்தில் மாஸ்க்காக மாற்றப்பட்ட இந்த ரோமரின் ஆலயம், இப்போது மீண்டும் ஆலயமாக மாற்றப்பட்டு பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டிருக்கிறது. முதல் கோர்ட் யார்டில் சில ரோமப்பேரரசின் மிச்சங்களும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டாவது கோர்ட் யார்டின் நுழைவாயிலில்தான் பேரரசர், பொதுமக்களையோ அல்லது விருந்தினரையோ சந்திப்பாராம். அதன் பக்கத்தில் பேரரசின் பிரதம மந்திரியின்  (Grand Vizier) அலுவலகம் இருந்தது. அவர் மற்ற இலாகாவின் அதிகாரிகள், கவர்னர்கள் மற்றும் தூதர்களை சந்தித்து நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொண்டு சுல்தானிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும். அவர் உட்காரும் ஆசனத்தின் மேல் குறுகலான வலை பின்னப்பட்ட ஒரு ஜன்னல் இருந்தது. உர்ஸ் சொன்னான் அது சுல்தானின் கண்கள் என்று அழைக்கப்பட்டதாம். இதற்கு நேர் மேலே சுல்தான் வந்து உட்காரக் கூடிய வகையில் ஒரு ரகசிய அறை இருக்கிறதாம்.
Eyes of  the Sultan 

ஆனால் கீழே இருக்கிற யாருக்கும் அவர் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று தெரியாதலால் உண்மை விளம்பிகளாகத்தான் இருக்க முடியும். அதோடு பிரதம மந்திரியும், பின்னர் சுல்தானை சந்தித்து அறிக்கை அளிக்கும்போது எதையும் மாற்றிச் சொல்லிவிடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.ஆனால் சுல்தானுக்கு இருமலோ தும்மலோ வந்துவிட்டால் என்ன செய்வாராம் என்று தோன்றியது. இப்படி வந்து உளவு பார்ப்பதற்கு பதிலாக அவரே கூட்டத்திற்கு வந்துவிட வேண்டியதுதானே எனக்கேட்டதற்கு உர்ஸ் சொன்னான், இல்லை இல்லை அது புரோட்டோ கால் கிடையாது என்றான்.
Throne Room
அதன் இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், சுல்தான் பிரதம மந்திரியைச் சந்திக்கும் அறை வந்தது. அதில் மேலே விதானம் வைத்த ஒரு சிம்மாசனம் இருந்தது. அதனைத் தாண்டி இடது புறம் அந்தப்புரம் இருந்தது. 
Audience Chamber
அந்த அறையின் மறுபுறம் சென்று ஒரு போட்டோ எடுக்கும்போது, தற்செயலாக அங்கு நின்றிருந்த துருக்கியப் பெண்களும் போட்டோவில் வந்து விட்டனர். அவர்களைப் பார்க்கும்போது தெரிந்தது, சுல்தானின் அந்தப்புரத்தில் எத்தகைய பேரழகிகள் இருந்திருப்பார்கள் என்று.

Turkish Girls 

மூன்றாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அங்குள்ள பல அறைகளில் சுல்தான் மற்றும் அவர் குடும்பத்தினர் பயன்படுத்திய நகைகள், அணிகலன்கள், அலங்கரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை பெருமளவில் இருந்தது. அங்கு இருந்த இரண்டு குத்து விளக்குகள் சொக்கத் தங்கத்தில் ஒவ்வொன்னும் 35 கிலோ என்று சொன்னார்கள். பெருமூச்சு விடுவதைவிட வேறென்ன செய்ய முடியும்.
Sofa Pavilion 
அதனைக் கடந்து உள்ளே சென்றால், சுல்தானின் பிரதான மனைவி ஆட்சி செலுத்திய இடமும், நடன அரங்கமும், நீச்சல் குளமும் வந்தன. அங்கிருந்து பாஸ்பரஸ் ஆற்றுப்பகுதியும் இஸ்தான்புல் நகரமும் அழகாகத் தெரிந்தன.
அதன் ஒரு பகுதியில் முகமது நபி அவர்கள் பயன்படுத்திய மேலாடையும் வாளும் வைக்கப்பட்டிருந்தன.
வரும் வழியில் வலதுபுறத்தில் இருந்த பிரமாண்ட அறையில் ஆட்டமன் பேரரசை ஆண்ட பல சுல்தான்களின் ஓவியங்களும், குடும்ப மரமும் (Family  Tree) ஓவியங்களாக வரையப்பட்டு இருந்தன.
நான்காவது வாயிலின் மறுபுறம் இம்பீரியல் சமையலறை இருந்ததாம். தினமும் குறைந்தது 4000 பேருக்கு சமையல் நடக்குமாம்.
Harem Entrance 

அந்தப்புறத்தில் இன்னும் அழகிகள் இருப்பது போல, அதற்கு தனிக்கட்டணம் வசூலித்தார்கள்.குறுகிய நடைபாதை வழியே உள்ளே சென்றால் சுல்தான் தங்குமிடம், சுல்தானின் மனைவிகள், சுல்தானின் அம்மா, சுல்தானின் வைப்பாட்டிகள், பாதுகாவலரான அலிகள் ஆகியோர் வசிக்கும் இடங்கள் தனித்தனியே இருந்தன. ஹமாம் என்று அழைக்கப்படும் துருக்கிய பாத்ரூம்களும் அங்கு இருந்ததைப் பார்த்தேன். அவரவர் தகுதிக்கேற்ப அறைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பட்டத்து இளவரசனுக்கு தனியிடம் இருந்தது. சகல வசதிகளும் உள்ளே   இருந்தாலும் , இளவரசன் வெளியே  செல்லவோ  யாரையும் சந்திக்கவோ முடியாது. ஏன் என்பதையும் இன்னும் பல அந்தப்புர ரகசியங்களையும் அடுத்த வாரம் பார்ப்போம்.

-தொடரும்.


Wednesday, June 25, 2014

அமெரிக்காவில் குழந்தை வளர்ப்பில் அதிகபங்கு வகிப்பது தாயா தந்தையா?-ஒளிப்பதிவு


கடந்த மே  மாதம் 10 ஆம் நாள் ,2014 அன்று   தமிழ்நாடு அறக்கட்டளை நடத்திய திருமதி உமையாள்   முத்து ஆச்சி  அவர்கள் தலைமையில் நடந்த அன்னையர் தின சிறப்பு பட்டிமன்றத்தில்அமெரிக்காவில் குழந்தை வளர்ப்பில் அதிகபங்கு வகிப்பது தந்தையே”   என்று அடியேன் பேசிய  பேச்சின்  ஒளிப்பதிவை இங்கு தருகிறேன். சிரமம் பாராமல் பதிவு செய்து தந்த நண்பர் திரு ரங்கநாதன் புருஷோத்தமன் அவர்களுக்கு  என் நெஞ்சார்ந்த நன்றி.


Monday, June 23, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி-பகுதி 6: தப்பான நப்பாசையும் , வேஸ்ட் ஆன டேஸ்ட்டும்!!!!

Sisko Osman
மதிய உணவுக்குப்பின் டொப்கப்பி அரண்மனை போவதாக உர்ஸ் சொன்னான். அங்கிருந்து சிறிது தொலைவில்தான் இருந்தது. போகும் வழியில் ஒரு கார்ப்பெட் கடையில் நிறுத்தினான். அது பாரம்பரியமாக சுல்தான் காலத்திலிருந்து அங்கு குடியேறிய ஆர்மேனியன் மக்களால் வடிவமைக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. அதே குடும்ப வழியில் வந்த ஒருவரின் பலமாடிக்கடை அது.

சூட் அணிந்த குடும்ப மூத்த உறுப்பினர் எங்களை வரவேற்று,  மூன்றாவது மாடிக்கு அழைத்துச் சென்றார். முகமன் கூறி ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக் கொண்டு நல்ல ஆங்கிலத்தில் கையால் செய்யப்படும் கார்ப்பெட்டுகளைக் குறித்து விளக்கினார். அந்த நீள் சதுர அறையில் ஓரம் முழுவதும் மெத்தையணிந்த பெஞ்சுகளில் நாங்கள் உட்கார்ந்திருக்க, சிறிது நேரத்தில் தேன் கலந்த ஆப்பிள் தேநீர் வழங்கப்பட்டது. லேசானப் புளிப்புடன் சேர்ந்த இனிப்புடன் மிக அருமையாக இருந்தது.  அதன்பிறகுதான் எனக்குத் தெரிந்தது ஆப்பிள் டீ ,அங்கு அனைவரும் விரும்பி அருந்தும் பானம் என்று. பதப்படுத்தி காய வைக்கப்பட்ட ஆப்பிள் துகள்களை சுடுநீரில் இட்டு சுவையூட்ட தேனூற்றி தருகிறார்கள்.

சூட் அணிந்தவர் விளக்க விளக்க, அந்த அறையில் இருந்த மற்ற நால்வர் பலவித கார்ப்பெட்டுகளை விரித்து விரித்துக் காண்பித்தனர். இயந்திரம் மூலம் செய்வதற்கும் கைமூலம் செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர் விளக்கியதோடு அதனை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதையும் சொல்லிக் கொடுத்தார். கையால் நெய்யப்பட்ட கார்ப்பெட் ஒரு குறுக்குவெட்டுப் பார்வையால் பார்க்கும்போது வேறு வண்ணமாய் தெரிகிறது. அவற்றுள் ஒரு கார்ப்பெட், தொடுவதற்கு மிக மென்மையாகவும், அதன் மேல் நடப்பது ஆகாயத்தில் மிதப்பது போலவும் இருந்தது. கார்ப்பெட்டுகளை வாங்கினால் இலவசமாகவே பார்சலில் அனுப்பி வைப்போம் என்றும் சொன்னதால் ஒரு நப்பாசையில், "எவ்வளவு?” என்று கேட்டேன். "40 ஆயிரம்", என்றார். “40 ஆயிரம் லிராவா?”, என்று வினவியபோது, இல்லை "40 ஆயிரம் டாலர்", என்றார். அப்போதுதான் புரிந்தது என்னுடைய நப்பாசை ஒரு தப்பாசை என்று. நம்மூர் பணத்தில் 24 லட்சம். அம்மாடியோ!!
$40 K Carpet

பிறகுதான் சொன்னார், சுல்தான்கள் ஆட்சியில், இது அவர்களின் பிரத்யேக பயன்பாட்டுக்கு மட்டுமே நெய்யப்பட்டது என்றும், இந்த டைப் கார்ப்பெட்டுகளை வெளியில் யாருக்கும் விற்பதற்கு தடையிருந்தது என்றும் சொன்னார். அதுதான் அவர்களிடம் இருப்பதிலேயே விலை உயர்ந்த கார்ப்பெட் என்றும் சொன்னார்.
See the difference in color in the same carper from different direction

சுல்தான்களின் டேஸ்ட்டும் என்னுடைய டேஸ்ட்டும் ஒரே மாதிரி இருந்தது மகிழ்ச்சியளித்தாலும், நிறைவேறமுடியாத அந்த டேஸ்ட் வேஸ்ட்தான் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன்.
கார்ப்பெட்டுகள் தயாரிக்கப்பட்ட விதம், அந்தக்காலத்தில் எப்படி வண்ண மூட்டப்பட்டது போன்ற சில ஆச்சரிய செய்திகளை சொன்னார். பின்னர் கடையை சுற்றிப்பார்த்த போது ஒரு அழகிய இயற்கை சீனரி இருந்த சிறிய டேப்பஸ்ட்ரி இருந்தது. இதையாவது வாங்கலாம் என்று விலைகேட்டேன். 1600 USD என்றார்கள். ம்ஹீம் இது நம் கடையில்லை என்று நினைத்து மெதுவாக நழுவி வெளியே வந்தேன். வெளியே உர்ஸ் தம்மடித்துக் கொண்டு நிற்க, நான் ஒரு கம்மெடுத்து வாயில் போட்டுக்கொண்டு கம்மென்று போய் வோனில் உட்கார்ந்து கொண்டேன்.
டொப்கப்பி அரண்மனை முன் வண்டி நின்றது. அரண்மனைக்குள் உள்ளே செல்லுமுன் ஆட்டமன் சுல்தான்களைப்  பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமே.
ஆட்டமன்  பேரரசு :
Osman Bey
எப்படி நாடோடிகளாய் பாபர் தலைமையில் வந்த படை டெல்லியை வெற்றி கொண்டு இந்தியாவில் மொகலாயப் பேரரசை நிறுவியதோ, அதே போல கி.பி.1299ல் ஆகுஸ் துருக்கியர் (Oghuz Turks), ஒஸ்மான் பே (Osman Bey)யின் தலைமையில் அனடோலியாவின் வடமேற்குப் பகுதியை பிடித்து அங்கேயே ஒரு அரசை நிறுவினர். 
Mehmed , The Conquerer
அதன் பின்னர் கி.பி.1453ல் அதே வம்சத்தில் வந்த மெஹ்மது II வந்து கான்ஸ்டான்டி நோபிளைக் கைப்பற்றினார்.  அதன் மூலம் சிறிய அரசாக இருந்த ஆட்டமன் பகுதி பேரரசாக உருவெடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக அண்டை நாடுகளைப் பிடித்து தன்னுடைய எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே போனது.

Suleiman the Magnificent
16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டில் பேரரசர் சுலைமான் தி மேக்னிஃபிசன்ட் (Suleiman the Magnificent) அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல நாடுகளை தன்னடக்கி பலமொழிகள் பேசும் மிகப்பெரிய சக்திவாய்ந்த பேரரசாக உருவெடுத்தது. அதில் தென் கிழக்கு ஐரோப்பா, ஆசியாவின் மேற்குப்பகுதி, வட ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் இணைத்து 32 பெரிய நாடுகளையும், பல கப்பம் கட்டும் நாடுகளையும் உடையதாய் இருந்தது. கான்ஸ்டான்டி நோபிலை தலைநகராகக் கொண்டு செயல்பட்ட இந்தப் பேரரசு கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகளுக்கு மேல் சக்தி வாய்ந்த பேரரசாகத் திகழ்ந்தது.
அதிலிருந்த சில குறிப்பிட்ட நாடுகளைச் சொல்லுகிறேன். நீங்களே பாருங்கள் ஹங்கேரி, செர்பியா, போஸ்நியா, ரோமானியா, கிரீஸ், உக்ரைன், இராக், சிரியா, இஸ்ரேல், எகிப்து, வடக்கு ஆப்பிரிக்கா, அல்ஜீரியா, ஜோர்டன், செளதி அரேபியா, குவைத், இன்னும் பல அரேபிய நாடுகள்.
இந்தப்பேரரசை நிறுவிய ஒஸ்மான் அல்லது ஆஸ்மான், அரபிய மொழியில் உத்மான் என்று அழைக்கப்படுகிறார். இந்த உத்மான்தான் மருவி ஆட்டமன் என்ற பெயரில் பிற்காலத்தில் அழைக்கப்பட்டது.
உர்ஸ் இன்னொரு தகவல் சொன்னான். இந்த துருக்கியர் படையெடுப்புக்குப் பயந்துதான் சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டதாம்.
இந்த துருக்கர்கள்தான் மொகலாயப் பேரரசுக்கு முன்பே வந்து தென்னிந்தியாவைப் பிடித்து ஆண்டவர்கள். கோல்கொண்டா சுல்தான், பீஜப்பர் சுல்தான் இவர்களெல்லாம் துருக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
நம்மூரில் முஸ்லீம்களை துலுக்கர் என்று சொல்வார்கள் ஞாபகம் இருக்கிறதா? துருக்கர் என்பதுதான் துலுக்கர் என்று மறுவியது.முதலாவது உலகப்போருக்குப் பின்னர்தான் சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதனை பின்னர் சொல்கிறேன்.
அதற்குமுன்னால் நீண்ட நேரம் காத்திருக்கும் உங்களை அரண்மனைக்குள் அழைத்துச் செல்லப்போகிறேன். நீங்க ரெடிதானே –
 தொடரும்.


Thursday, June 19, 2014

ஒபாமா என் இனமடா !!!!!!!!!!!!!!!

நியூயார்க்குக்கு பரதேசம் வந்து சுமார் 15 வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் நியூயார்க் எனக்கு ஓல்ட் யார்க்காக மாறவில்லை. நியூயார்க்கில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் மற்றும் அதிசயங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. எஞ்சியிருக்கிற என் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் என்னுடைய தேடல் தொடரும். நடுநடுவில் வெளிநாடுகளுக்கும் போய் வர வேண்டும். உஷ் அப்பாடா, இப்பவே கண்ணைக் கட்டுதே.

நியூயார்க்கின் நாளைய வரவு  ஒபாமா என்று படித்தேன். ஆம் ஜனவரி 2017ல் அவரது பிரசிடன்ட் பதவியின் இரண்டாவது டெர்ம் முடியும்போது, நியூயார்க்கில் வந்து வாழ்வதாக முடிவெடுத்திருக்கிறாராம். நியூயார்க் மக்களுக்கு அதிக நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்திதான்.

பாமாவுக்கும் எனக்கும் பத்துப்பொருத்தங்கள் உண்டு.

1) அவரும் நியூயார்க்கில் படித்தவர்.
2) அவரும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
3) அவரும் என் நிறம்தான்.
4) அவரும் கிறிஸ்தவர்.
5) அவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள்.
6) அவருக்கும் சால்ட் பெப்பர் முடிதான்.
7) அவரும் ஒருமுறை மட்டும் மணமுடித்தவர்.( ஹி ஹி இதுவரை)
8) அவரும் சிறந்த பேச்சாளர்தான். (சரிசரி விடு ஒரு ஃ ப்ளோவில் வந்துருச்சு. நான் சுமாரான பேச்சாளன்தான்.)
9) அவர் மனைவியும் என் மனைவியும் முதல் பெண்மணிதான் (First Lady) அவர் நாட்டுக்கு, என் மனைவி வீட்டுக்கு (சின்ன வித்தியாசம் தான்).
10) அவர் பிரசிடன்ட், நான் வைஸ் பிரசிடன்ட் அவர் நாட்டுக்கு, நான் என் கம்பெனிக்கு, அவ்வளவுதான்.
அமெரிக்க அதிபர்கள் நியூயார்க் வந்து தங்குவதும், இங்கேயே தங்கள் எஞ்சிய வாழ்க்கையைக் கழிப்பதும் புதிதல்ல.
1) ஐந்தாவது அதிபர், ஜேம்ஸ் மன்ரோ 1830ல் நியூயார்க் வந்து கடைசிவரை இங்குதான் வாழ்ந்தார்.
2) பதினெட்டாவது அதிபர், யுலிசஸ் கிராண்ட் இங்குதான் இருந்தார். அவரது நினைவகம் ரிவர்சைட் டிரைவில் இருக்கிறது.
3) 21-ஆவது அதிபர், செஸ்டர் ஆர்தர் 1885ல் நியூயார்க் வந்து இங்கு வாழ்ந்து மறைந்தார்.
4) 31-ஆவது பிரசிடன்ட், ஹெர்பர்ட் ஹீவர் 1944ல் நியூயார்க்குக்கு இடம் பெயர்ந்து இங்கு சுமார் 20 வருடங்கள் வாழ்ந்தார்.
5) 37-ஆவது பிரசிடன்ட், ரிச்சர்ட் நிக் ன் 1979ல் வந்து 18 மாதங்கள் இருந்தார்.
Bill Clinton.jpg
Bill Clinton
6) 42ஆவது பிரசிடன்ட், பில் கிளின்ட்டன் 2001ல் வந்து, இன்று வரை இங்குதான் வாழ்கிறார்.(என்னது மோனிகா எங்க இருக்கிறாரா ?  இந்த குசும்புதான   வேணாம்கறது)  

Monica Lewinsky Picture
Monica
அடுத்த பிரெசிடெண்டாக வரப்போகும் ஹிலாரி கிளிண்டனும்  இங்குதான் வாழ்கிறார்.
Hilary Clinton

இப்போது 44-ஆவது பிரசிடன்ட் ஒபாமாவும் வரப்போகிறார். அதோடு குறைந்த வயதிலேயே ரிட்டயர்டு ஆவதால், அவர் நீண்ட நாட்கள் நியூயார்க்கில் வாழப்போவது உறுதி.
அமெரிக்க அதிபர்கள் தங்களுடைய பதவிக்காலத்தை விட அதை முடித்தபின் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள். உலகமெங்கும் சென்று நடத்தும் சொற்பொழிவுகளுக்கு மில்லியன் கணக்கில் கொடுக்க நாடுகள் தயாராகவே இருக்கின்றன.
பழைய பிரசிடன்ட்களைப்பற்றி கேள்விப்பட்ட போது, சிலர் வீடு வாங்குவதற்கும் சிலர் வாடகைக்கு வீடு கிடைப்பதற்கும் கஷ்டப்பட்டார்களாம். ஏனென்றால் "கோஆப் " அல்லது "காண்டோமினியம்" என்று அழைக்கப்படுகிற அபார்ட்மென்ட்களில் அந்த ஓனர்களின் போர்ட் நினைத்தால் யாருக்கும் இல்லையென்று சொல்கிற உரிமை இருக்கிறது.  காரணத்தையும் சொல்லத் தேவையில்லை.  

பழைய பிரசிடன்ட்கள் வந்தால் செக்யூரிட்டி பிரச்சனைகள் வரும், அது பெருந்தொல்லை என்று நினைத்து அவர்கள் கொடுக்க மறுத்திருக்கலாம்.

பாமாவுக்கு அதுமாதிரி ஏதும் பிரச்சனை வந்தால், அவருக்கு என்னுடைய ஓபன் ஸ்டேட்மென்ட், எதற்கும் கவலைப்பட வேண்டாம். என் வீட்டில் குடியிருக்கும் ஆந்திரா பார்ட்டியை அனுப்பிவிட்டு, உங்களுக்கு என் வீட்டைக் கொடுக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். அட்வான்ஸ், ஆணியடித்தல், முறை வாசல் (ஸ்னோ தள்ளுவது)  என்பதனைப் பற்றி அப்புறம் பேசிக் கொள்ளலாம்.


 ஏன் என்றால் ,உசிலம்பட்டியில் நிரூபிக்கப்பட்ட DNA படி பாமா என் இனமடா. 

Monday, June 16, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி : பகுதி-5 சுல்தானின் மருமகன் !!!!!!!!!!!!!

Sultanahmet 

வேனில் ஏறி சுல்தானமெட்டில் ஒரு ரெஸ்டாரன்டுக்குச் சென்றோம். சிறுசிறு கற்கள் பாவப்பட்ட மிகவும் குறுகிய பழைய சாலைகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தன. நாங்கள் போன ரெஸ்டாரன்ட் ஒரு கிரேக்க குசின்.  அந்த நாளின் டூர் பேக்கேஜில் மதிய உணவும் உண்டு. வெள்ளை ப்ரன் அணிந்த  பெண்கள் கிட்டவர, நான் வழக்கம்போல் "மெனு ப்ளீஸ்", என்றேன். "நீங்கள் டூர் கம்பெனியில் வந்தவர் என்றால் நாங்கள் ஸ்டான்டர்ட் மெனு வைத்திருக்கிறோம். அது தவிர நீங்கள் எது ஆர்டர் பன்ணினாலும் அது எக்ஸ்ட்ரா", என்று சுமாரான ஆங்கிலத்தில் சொன்னாள். நான் மெனு கார்டை  கைவிட்டு, "என்ன தரப் போகிறீர்கள் ? ", என்று கேட்டேன். "உங்களுக்கு வெஜ்ஜா, நான் வெஜ்ஜா", என்று கேட்டதற்கு "நான்வெஜ்" என்று சொன்னேன்.

சிறிது நேரத்தில் ஒரு பெரிய பெளலில் சூப்பும் சைடாக சிறுசிறு பிரட் உருண்டைகளும் வந்தன. அந்த லென்டில் சூப் சுவையாக இருக்க, நல்ல பசியில் உருண்டை பிரட்களை சிறிது சூப்பில் நனைத்து மடமடவென்று சாப்பிட ஆரம்பித்தேன்.  சூப் பாதி மீதி இருக்க, பிரட் உருண்டைகள் 3 காலியாக, வயிறு நிரம்பி விட்டது. அப்பொழுதுதான் மெயின் கோர்ஸ் வந்தது. "இது என்ன", என்று கேட்டதற்கு "சிக்கன் சம்திங்", என்று சொன்னாள். பார்க்க சிக்கன் என்பதற்குரிய எந்த அறிகுறியும் இல்லை. சிக்கனை அறைத்து ஏதோ பண்டங்கள் சேர்த்து செய்திருந்தார்கள். ஒரு விள்ளலை போர்க்கில் எடுத்து வாயில் போட்டேன். ம்ஹீம் பிடிக்கவில்லை. பேசாமல் வெஜ் என்று சொல்லியிருக்கலாம். என்ன செய்வது இனி மாற்றமுடியாது.
"டேய் ஆஃல்பி இப்படியெல்லாம் பிகு செய்தால் உயிர் வாழ முடியாது, மறுபடியும் டிரை பண்ணுடா பரதேசி" என்று என் மனசாட்சி திட்ட, மறுபடியும்  ஒரு சிறு விள்ளலை வாயில்  வைத்தேன். சாப்பிட்ட சூப்பும் பிரட்டும் வெளியே வந்துவிடும்போல் இருந்தது.   ம்ஹீம் இது வேலைக்காவாது என்று விட்டுவிட்டு பேசாமல் அமர்ந்திருந்தேன். "முட்டாப்பய எங்க போனாலும் அஞ்சப்பர் மாதிரி நன்கு பொறித்த கோழி கிடைக்குமா?" என்று என் மனசாட்சி பொறும, நான் பேசாமலிரு என்று அதட்டினேன். அதன் பின்னர் ஒரு நல்ல க்ரீம் கேக் டெசர்ட்டாக கொடுத்தார்கள். ஆஹா அருமை அருமை.
உண்டு முடிக்க உர்ஸ் சொன்னான் அடுத்த ஸ்டாப் கிராண்ட் பஜார் என்று.
Grand Bazaar 
"கிராண்ட் பஜார், மெஹ்மது II சுல்தானின் காலத்தில் 1460 ஆம் வருடத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஷாப்பிங் சென்ட்டர்", என்றான் உர்ஸ். ஆஹா உலகத்தில் கட்டப்பட்ட முதல் மால் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே உள்ளே போனேன். மதுரை புதுமண்டபம் போல நெருக்கமாக சின்னசின்னதாக வரிசையாக கடைகள் இருந்தன. முழுவதும் ஒரு பெரிய மண்டபம் போலத்தான்  இருந்தது. கிட்டத்தட்ட 4000 கடைகள் இங்கு இருக்கின்றனவாம். உலகமெங்கும் உள்ள டூரிஸ்ட் மக்களின் கும்பல் உள்ளே நெருக்கியடித்தன. 

உள்ளே துருக்கி நினைவுப் பொருட்கள், துருக்கியின் இனிப்புக் கடைகள், தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பழைய ஆண்ட்டிக் கடைகள் என்று இருந்தன. உர்ஸ் கொடுத்த நேரத்தில் ஒன்றும் சரியாகப் பார்க்க முடியவில்லை. 

சும்மா கொஞ்ச தூரம் போய்விட்டு சில நினைவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பிவிட்டேன். உள்ளே உள்ளே கடைகள் போய்க் கொண்டே இருந்தன. நேரம் கிடைத்தால் மறுபடியும் திரும்ப வரலாம் என்று எண்ணிக் கொண்டே வேனுக்கு வந்து சேர்ந்தேன்.
Rustem Pasha 
அங்கிருந்து இன்னொரு மாஸ்குக்கு வந்து சேர்ந்தோம். அதன் பெயர் ருஸ்டம் பாஷா மாஸ்க் (Rustem Pasha). இஸ்தான்புல்லில் இருக்கும் மாஸ்க்குகளை எல்லாம் ஒரு வருடம் தங்கினால் கூட பார்க்க முடியாது. ஏனென்றால் மொத்தம் 3400 பள்ளி வாசல்கள் இங்கு இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரே மாதிரி கட்டடக்கலை என்றாலும் ஒவ்வொன்றும் உள்ளே உள்ள அலங்காரங்களில் வெவ்வேறு சிறப்புகள் உடையனவாம்.
Mihrimah Sultan.jpg
Mihrimah Sultan wife of Rustem Pasha 
ருஷ்தம்  பாஷா என்பவர் சுலைமான் சுல்தானுக்கு ​​​​ பிரதம மந்திரியாக ( Grand Vizier) இருந்தவர். சுல்தானுக்கு மிகவும் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவர் என்பதால் தன் மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தாராம். அவர் பெயரில் இந்த மாஸ்க் கட்டப்பட்ட வருடம் 1561. 
Add caption

அவர் இறந்தபின் அவரின் நினைவாகக் கட்டப்பட்டது.
Rustem Pasha Mosque 
இன்றும் இது பயன்பாட்டில் இருக்கிறது. புளு மாஸ்க்  போலவே  இங்கும் நீல நிற டைல்கள் சுவர்களிலும் தூண்களிலும் பதிக்கப்பட்டு இருந்தன. கீழே அழகிய கார்ப்பெட்டுகள் பதிக்கப்பட்டு இருந்தன. அதனைப் பார்த்துவிட்டு, வெளியே வந்தோம். முன்னால் பாஸ்பரஸ் ஆற்றில் பெரிய பெரிய படகுகள் மிதந்து கொண்டு இருந்தன.  

அதனருகில் கொஞ்ச நேரம் நின்று இயற்கையும் செயற்கையும் எப்படி ஒன்றையொன்று ஒட்டியும் வெட்டியும், இணைந்தும் இணையாமலும் இருக்கின்றன என்ற ஆச்சரிய அதிசயத்தை எண்ணி வியந்த வண்ணம் இருக்க, உர்ஸ் தன் குடையினால் என் தோளைத் தொட்டு கூப்பிட்டான். நல்லவேளை குடையின் பிடியால் கழுத்தில் போட்டு இழுக்கவில்லை என்று நினைத்துக் கொண்டே அவனைப்பார்த்து கொஞ்சம் புன்னகைத்து விட்டு வேனுக்குத் திரும்பினேன்.
வந்திருந்த ஆஸ்திரேலிய மக்களோடு, பிரிட்டிஷ் மொனார்க்கி பற்றி கதைக்க ஆரம்பித்தேன். பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் ஆஸ்திரேலியாவும் ஒரு அங்கமல்லவா?
"அடுத்து எங்கே", என்று கேட்டேன்.  "டொப்கப்பி அரண்மனை” என்றான்.

-தொடரும்.