Thursday, March 29, 2018

பரதேசியின் ஹைக்கூ கவிதைகள் / முயற்சிகள்


Image result for H1 B lottery
அமெரிக்க கனவு
அழிந்து போனது
ஹெச்1பி லாட்டரி!

கைக்கெட்டியது
வாய்க் கெட்டவில்லை
கான்சுலேட்டில் 221ஜி!

லாட்டரி கிடைத்தும்
அதிர்ஷ்டமில்லை
ஹெச்1பியில் ஆர்.எஃப் இ,!

பச்சை அட்டை
பலிக்குமா
புதிய அரசாங்கம்!

உடைக்கும் லேயர்
பிராஜெக்ட்டுக்கும்  லேயர்
நியூயார்க்!

இன்று வெள்ளைப்பனி ஆஹா
நாளை தொல்லைப்பனி சீச்சீ
பிளாக் ஐஸ் !

பாஸ்போர்ட் மாறலாம்
முகம் மாறுமா?
அமெரிக்க குடியுரிமை

காலையில் ஓட்மீல்
மாலையில் பாஸ்தா
இரவில் இளையராஜா



சுவர் கட்டுவேன்
பவர் காட்டுவேன்
ஒருநாள் மாட்டுவேன்

சப்வேயில் உட்கார இடம் ஆஹா
ஓடிப்போய் இடம்பிடித்தால்
ஓரத்தில் ஹோம்லஸ்

அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் ஈமெயில்
அட்லீஸ்ட்  ஒரு வாட்ஸ் அப் மெசேஜ்

வேற்றுமையில் ஒற்றுமை
ஆளுக்கொரு சங்கம் அமைப்போம்
அமெரிக்கத் தமிழன்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே - திரை
அரங்கம் செல்வோம்
ரஜினி படம்.

சாதம் ஒரு வாரப் பழசு
சாம்பார் ஒரு மாதப்பழசு
அமெரிக்க ஃபிரிட்ஜ்

ஜாக்கிங் செல்வோம்
சைக்கிள் ஓட்டுவோம்
எல்லாமே ரூமுக்குள்.

அழுக்கு மூட்டை மீனாட்சி
மூஞ்சி கழுவி நாளாச்சு
பிராஜக்ட் டெலிவரி !

தமிழனும் தமிழனும்
ஒன்று சேர்ந்தால்
வேறு என்ன ஆங்கிலம்தான் !  


Tuesday, March 27, 2018

பத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் !


வேர்களைத்தேடி பகுதி: 11
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_19.html

Image result for ஜவ்வு மிட்டாய்
            ஏப்  நடராஜன் ஒல்லியாய் எப்போதும் சிடுமூஞ்சியாய் இருப்பார். பல பண்டங்களை விற்பார். குறிப்பாக அவர் கடையில் அதிர்ஷ்ட அட்டைகள் இருக்கும். அட்டையின் மேற்புறத்தில் பிளாஸ்டிக் பொம்மைகள் போன்ற சில பரிசுகள் இருக்கும். ஐந்து பைசாவுக்கு அட்டையில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சிறு சதுர வடிவத்தில் மடித்த காகிதத்தை பிரித்துப் பார்த்தால், அதில் நம்பர் இருக்கும். அந்த எண்ணுக்கு அட்டையின் பின்புறத்தில் பார்த்தால் நமக்கு என்ன பரிசு விழுந்திருக்கும் எனத் தெரியும். சிறிய அளவு லாட்டரி போல. ஆனால் எல்லா எண்களுக்கும் ஏதாவது ஒரு பரிசு இருக்கும். பெரும்பாலும் சிறு சிறு மிட்டாய்கள்தான் விழும்.
          சரி அவருக்கு ஏன் ஏப் நடராஜன் என்ற பெயர் வந்ததென்றால், அவருக்கு  ஏதோ ஒரு கோளாறினால் அடிக்கடி ஏப்பம் வரும். ஏப்பம் என்றால் சாதாரண ஒன்றல்ல. மிகவும் சத்தமாக மிகவும் நீண்ட ஒன்றாக இருக்கும். லேசாக வாயைத்திறந்தாலே நாங்களெல்லாம் தெறித்து ஓடிவிடுவோம். அந்தளவுக்கு கர்ண கடூரமாய் இருக்கும். அதனால் நாங்கள் வைத்த பெயர்தான் "ஏப் நடராஜ்" என்பது. அதோடு அவர் ஏப்பம் விட ஆரம்பித்தால் எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியாது. இப்பொழுது நினைத்தால் பாவமாயிருக்கிறது.
A fruit vendor selling ice-apple in Cuttack

          தினமும் கிடைத்த 5 பைசா 10 பைசாவை செலவழித்த விதம் இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாயிருக்கிறது. தினமும் என் மனதுக்குள் பட்ஜெட் போட்டுவிடுவேன். 5 பைசா கிடைக்கும் போது ரெண்டு தேன்மிட்டாய், ரெண்டு ஜவ்வுமிட்டாய், ஒரு காசுக்கு கடுகு மிட்டாய்கள் 5. பத்து பைசா கிடைக்க ஆரம்பித்தவுடன் ஒரு நாள் 5 பைசாவுக்கு மிட்டாய்கள் 5 பைசாவுக்கு ஐஸ், மறுநாள் மிட்டாயும் மாங்காய் இல்லையென்றால் கரும்பு. ஆகமொத்தம் ஏதாவது மாறி மாறி வாங்கி அந்தப் பத்துப் பைசாவும்  பத்து நிமிடத்தில் செலவழித்தால் தான் திருப்தி. சிலசமயங்களில் சவ்வுமிட்டாயை ஒரு மூங்கில் கழியில் வைத்து எடுத்துவருவார் ஒருவர். கழியின் மேலே ஒரு பொம்மை இருக்கும். நாங்கள் அருகில் போனால் அந்த பொம்மை தன் கைகளை கொட்டிக் கொட்டி ஆடும். கைகளில் சிறு சலங்கைகள் இருக்குமென்பதால் ஜல் ஜல் என்று சத்தமும் கேட்கும், ஆச்சரியமாக இருக்கும்.
Related image

          ரொம்ப நாள் கழித்துத்தான் அதை எப்படி என்று கண்டுபிடித்தேன். மூங்கில் கிழியின் கீழே ஒரு கயிறு இருக்கும். அது அந்த விற்பவரின் கால் பெருவிரலில் மாட்டியிருக்கும். அவர் அதனை லாவகமாக மேலும் கீழும் ஆட்டும்போது  பொம்மை கைகளைத் தட்டும். அந்த சவ்வுமிட்டாய்க்காரர் மிகவும் கலை விற்பண்ணர். நமக்குத் தேவையான உருவத்தை செய்து கொடுப்பார். வண்ணத்துப்பூச்சி, விமானம், சைக்கிள் போன்ற பல உருவங்களைச் செய்து கொடுப்பார். இதில் சிறப்பானது கைக்கெடிகாரம். பல வண்ணங்களில் கைக்கெடிகாரம் செய்து கையில் மாட்டிவிட்டுவிடுவார்.  பார்க்க அற்புதமாக இருக்கும். கழட்டவே மனசு வராது. ஆனால் பிசுபிசுவென்று ஒட்டுமென்பதால் கொஞ்சம் நேரம் கட்டிவிட்டு அப்படியே வாயில் வைத்து கடித்து சாப்பிட்டு விடுவோம்.
Image result for விரால் மீன்
விரால்
             அது போலவே  காற்றாடி   விற்பவர், சோன் பப்டி விற்பவர் , கப் ஐஸ் பால் ஐஸ்  விற்பவர்,இவர்களெல்லாம் எப்போதாவதுதான் வருவார்கள்.ராட்டினமும் அப்படித்தான். குடை ராட்டினம் மற்றும் ரங்க ராட்டினம் ஆகியவை வரும் .ஆனால் எனக்கு அதில் ஏற பயம் .தூர இருந்து மட்டும்தான் பார்ப்பேன், அதுவரை அந்த ராட்டினங்கள் எதிலும் எங்கேயும் நான் ஏறினதே இல்லை . அதற்கப்புறம்   புத்த ஆசை வந்ததிலிருந்து எனக்குக்கிடைக்கும் பெரும்பாலான காசை புத்தகம் வாங்கவே செலவழித்தேன்.அவ்வப்போது கைச்செலவுக்கு அப்பாவுக்குத்தெரியாமல் அம்மாவிடம் வாங்கிக்கொள்வேன் . வார இறுதி நாட்களில் வீட்டின் திண்ணையில் பாஸ்கர் நூல்நிலையத்தோடு உட்கார்ந்தால்   நேரம் போவதே தெரியாது .அதோடு தெருவில்  பல விற்பனைகள் நடக்கும் .காலையில் பதநீர், காய்கறி,நுங்கு, மீன் , பழம்,கப்பக்கிழங்கு, வெள்ளரிக்காய், மாலையில் பூ விற்கும் பெண்கள் என்று வந்து கொண்டே இருப்பார்கள்.
மீன் வகைகளில் ஆத்து மீன் மட்டும்தான் கிடைக்கும் .விரால் , கெண்டை, கெளுத்தி, அயிரை, குரவை, போன்ற மீன்கள் வரும். இதில் விரால் எப்போதாவது மட்டும்தான் கிடைக்கும் .

Related image
கெண்டை
                 பெரும்பாலும் ஜிலேபிக்கெண்டை என்ற மீனைத்தான் எங்கம்மா வாங்குவார்கள். அதைச் சுத்தப்படுத்தி செய்து முடித்தாலும் ஒரு வாரம் அந்த மீன் வாடை வீட்டில் இருக்கும். அதனால் எனக்கு மீன் பிடிக்காமல் போய்விட்டது . இப்போதும் மீன் சாப்பிடுவதில்லை. எப்போதாவது நெய்மீன் (கிங் ஃபிஷ்) செய்தால் மட்டுமே சாப்பிடுவேன். ஆனால் கருவாடு சாப்பிடுவேன். அதிலும் நெய்மீன் மற்றும் நெத்திலி மட்டும்தான்.
          கோடைக்காலத்தில் மிகவும் சுவையான வெள்ளரிக்காய்கள் கிடைக்கும். பிஞ்சுக்காய்களை  வாங்கி வந்து கழுவி சிறுசிறு கீத்துகளாக வெட்டி மிளகாய் உப்பில் தொட்டுக் கொண்டே கையில் முத்துகாமிக்ஸ் வைத்துக் கொண்டு வயிறு புடைக்க சாப்பிட்டு விடுவேன். இங்கு நியூயார்க்கில் அந்த மாதிரி வெள்ளரிக்காய்கள் கிடைப்பதில்லை. ஆனால் கிர்பி என்று ஒரு வகையுண்டு, இரண்டுபுறம் வெட்டி, அதின் பாலை சுத்தி சுத்தி எடுத்துவிட்டு, தோலை நீக்கி வெட்டிச் சாப்பிட்டுப்பாருங்கள். ஓரளவுக்கு நம்மூர் சுவை கிடைக்கும். அதோடு வெள்ளரிப்பழங்கள் ஆகா என்ன சுவை , லேசாக சீனி போட்டு சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும் அவைகளைச் சாப்பிட்டு 30 வருடமிருக்கும்.
Related image
வெள்ளரிப்பழம்
          இது தவிர சனிக்கிழமைகளில் நண்பர்களின் தோட்டத்துக்கு போவதுண்டு. அங்கே நான் என்னென்ன சாப்பிட்டேன் என்று அடுத்த வாரம் சொல்கிறேன்.
-தொடரும்.  

Thursday, March 22, 2018

அடிமைத்தனத்தை ஒழித்த ஆப்ரகாம் லின்கன் !


Image result for Lincoln movie
பார்த்ததில் பிடித்தது
லின்கன்
ஆப்ரகாம் லின்கன் அவர்களின் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளை வேறு ஒரு கோணத்தில் காட்டுகிற படமே லின்கன் என்ற இந்தப் படம். 2012ல் வெளிவந்த இந்தப்படம் இப்போது நெட் பிலிக்சில் உள்ளது.
அமெரிக்க நாடு பழமையான நாடு அல்ல.  இந்தியாவைத் தேடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும் போது இதுதான் இந்தியா என்று தான் நம்பினார். இங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை இந்தியர் என்றே நினைத்தார். அதனால்தான் இவர்களுக்கு சிவப்பிந்தியர் என்ற பெயர் இன்றுவரை நிலைத்திருக்கிறது. சிறுசிறு பகுதிகளாகப் பிரிந்து பல மொழிகள் பேசின பழங்குடி மக்கள் இங்கு வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு  குழுவுக்கும் ஒரு தலைவன்  இருந்தான்.நாகரிகத்தில் பின் தங்கியிருந்த இந்த மக்களை தோற்கடிப்பது பெரிதான காரியமாக இருக்கவில்லை. பெரும்பாலான தென் அமெரிக்க வட அமெரிக்கப் பகுதிகளிலும் பழங்குடி மக்கள்தான் சிறுசிறு குழுக்களாக வாழ்ந்து வந்தனர். எனவே ஐரோப்பியர் இந்தப் பகுதிகளுக்கு வந்து நிரம்பினர். தென் அமெரிக்கா முழுவதுமாக ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள் நிறைந்தது இப்படித்தான். வட அமெரிக்காவில் இருக்கும் கனடா, மெக்சிக்கோ, அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் பெருவாரியாக இவர்கள் குடியேறினர். இவற்றுள் பல பகுதிகள் ஸ்பெயின் அரசனின் கட்டுப் பாட்டில் இருந்தது. புதிய  வல்லரசாக உலகத்தின் பல பகுதிகளை ஆக்ரமித்த இங்கிலாந்தின் கண்ணில் பட, கனடா மற்றும் அமெரிக்க பகுதிகளை அவர்கள் ஆக்ரமித்துக் கொண்டனர். இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாக தொடர்ந்த பின் அமெரிக்காவில் வாழ்ந்த பல இன மக்களை ஒன்று சேர்ந்து  பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து  ஆங்கிலேயரை விரட்டி அடித்து தங்கள் சொந்த அரசை நிறுவினர்.
Image result for Lincoln movie

அவ்வாறு நிறுவிய காலத்திலிருந்து மிகுந்த தொலைநோக்கு கொண்ட பல தலைவர்கள் அமெரிக்காவை தொடர்ந்து முன்னேற்றி வந்ததால் இப்போது உலகின் தலைசிறந்த நாடாக அமெரிக்க ஐக்கிய நாடு விளங்கி வருகிறது. வெறும் 13 காலனிகளைக் கொண்டு சுதந்திரப் பிரகடனம் செய்த அமெரிக்க நாடு இப்போது மொத்தம் 50 மாநிலங்களைக் கொண்டு இருக்கிறது. இதில் போரினால் வென்று இணைக்கப்பட்டவை என்று பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம்.
முழு நாடும் இரண்டாகப் பிரிந்து ஒன்றோடு ஒன்று யுத்தம் செய்து உள்நாட்டுப் போரில் வாடிக் கொண்டிருந்த சமயத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைவராக இருந்த ஆப்ரகாம் லின்கன் அவர்கள் எடுத்த சீரிய முயற்சியால் போர் முடிந்து அமைதி திரும்பியதோடு, அமெரிக்காவில் வாழும் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு என்பதைக் கொண்டு வந்த மாபெரும் தலைவர் ஆப்ரகாம் லின்கன்  அவர்கள்.
அந்தச் சமயத்தில் கறுப்பின மக்கள் பெரும்பாலும் அடிமைகளாக இருந்தார்கள். ஓட்டுரிமை கிடையாது. அரசாங்கத்தில் பங்கு கிடையாது. அது மட்டுமல்ல பெண்களுக்கும் கூட ஓட்டுரிமையோ சம உரிமையோ இல்லாத காலமது.
ஆப்ரஹாம் லின்கன் எந்த எதிரிப்புகளையும் பொருட் படுத்தாது, அடிமைத்தனம் என்பதை  முற்றிலும் ஒழித்து எல்லோருக்கும் சம உரிமை கொடுக்க  வகை செய்தார். நல்ல காரியங்களை செய்வதற்கு சில குறுக்கு வழிகளில் சென்றால் பரவாயில்லை,  இறுதிப் பயன் மட்டும் நன்மையாக இருந்தால் போதும் என நினைத்து செயலாற்றிய உறுதியான மனம் படைத்தவர் ஆப்ரகாம் லின்கன். நல்ல தலைவர்களை இந்த உலகம் உயிரோடு விட்டுவைக்குமா ? ஆப்ரகாமின் நிலமையும் அப்படித்தான் ஆயிற்று .
Image result
Stephen Spielberg
உலகத்தின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஸ்டீபென் ஸ்பீல்பர்க் அவர்கள் தயாரித்து இயக்கிய படமிது. எனவே தரத்திற்கு எந்தக் குறைவுமில்லை. நடிகர்கள் எல்லாம் உண்மைக் கதாபாத்திரங்கள் போலவே இருக்கிறார்கள், நடிக்கிறார்கள். குறிப்பாக லின்கனாக நடித்த டே லூவிஸ் (Day Lewis) தூள் கிளப்பியிருக்கிறார். இந்தப்படம் டோரிஸ் கேர்ன்ஸ் (Doris Kearns Goodwiin) குட்வின் எழுதிய “டீம் ஆப் ரைவல்ஸ் தி பொலிட்டிகல் ஜீனியஸ் ஆப் ஏப்ரகாம் லின்கன்” என்ற புத்தகத்தின் அடிப்படையில்  திரைக்கதை அமைத்தவர் “டோனி குஷ்னர்” .ஜான் வில்லியம்-ன் இசை சிவில் வார் யுகத்தை அப்படியே கொண்டு வந்திருக்கிறது.
Image result for day lewis
Day Lewis
ஒரு வித்தியாசமான ஆப்ரகான் லின்கனின் மறுபுறமான  கணவன், தந்தை, நாட்டின் பொறுப்பான தலைவர் என்ற பல முகங்களை இந்தப் படத்தின் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார் ஸ்டீபன் ஸ்பீல்பர்க்.
அமெரிக்க வரலாற்றின் முக்கிய பகுதியான லின்கனின் வாழ்க்கை பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
முற்றும்
முக்கிய அறிவிப்பு 

டொரோண்டோவில்  நடக்கும் ஒரு ஆலய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் கனடா வருகிறேன் .சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் ( 1212-363-0524 , alfred_rajsek@yahoo.com)


Monday, March 19, 2018

குச்சி ஐஸ் சாப்பிட்டால் அழகாகும் பெண்கள் ?



வேர்களைத்தேடி பகுதி: 10
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/03/9-httpparadesiatnewyork.html
            அப்போது உதயமானதுதான் "பாஸ்கர் நூல் நிலையம்". என்னுடைய தம்பி பெயரில் நான் ஆரம்பித்தேன். எங்கள் வீட்டில் நல்ல ரோஸ் வுட்டில் கல்லாப் பெட்டி மாதிரி ஒன்று இருந்தது. அதில் இருந்த என்னுடைய பாடப்புத்தகங்களை எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு அதனையே என் நூலகமாக ஆக்கினேன்.  அந்த நூலகத்தில் மெம்பர் ஆக விரும்புபவர்கள் பழைய அல்லது புதிய முத்து காமிக்ஸ் புத்தகத்தை கொடுக்க வேண்டும்.  ஏதாவது புத்தகத்தைப் படிக்க விரும்பினால் 10 பைசா கொடுக்க வேண்டும். கூடப்படிப்பவர்கள், சீனியர், ஜூனியர் என்று நிறைய நண்பர்கள்  மெம்பர்கள் ஆனார்கள். வெறும் 10 புத்தகங்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பாஸ்கர் நூல் நிலையம் விரைவில் நூறு புத்தகங்களாக வளர்ந்தது. அதில் கிடைத்த பணம் புதிய புத்தகங்களை வாங்குவதற்கு உதவியது. இதெல்லாமே நான் ஆறாவது படிக்கும் போது நிகழ்ந்தது.
          என் வீட்டுத் திண்ணைதான் நூலக அறை. யாராவது புத்தகம் வாங்க வந்தால், அந்தக் கல்லாப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அங்கு வருவேன். ஒரு கட்டத்தில் கல்லாப்பெட்டி நிரம்பிவிட என்னால் தூக்கவும் முடியவில்லை. அப்போதுதான் என் அப்பாவிடம் தயங்கித் தயங்கிக் கேட்க, ஒரு நாள் வெள்ளிக்கிழமை மரக்கடையிலிருந்து  சில கள்ளிப்பெட்டிகளை எடுத்து வந்தார். அடுத்த நாள் நான் எதிர்பார்த்த வண்ணமே ஊமை ஆசாரி வந்தார். எங்கள் வீட்டில் சிறு சிறு மரவேலை ஏதாவது ரிப்பேர் வேலையென்றால் இந்த ஊமை ஆசாரிதான்  வருவார். ஒரே பிரச்சனை அவர் சுத்தியலையும் ஆணியையும் எடுத்தால் சத்தம் வீட்டைப் பிளந்து விடும். ஆனால் அவருக்கு எந்தப் பிரச்சனையுமில்லை காது சுத்தமாகக் கேட்காது.
          “என்ன செய்ய வேண்டும்?”, என்று ஊமை  ஆசாரி சைகையில் கேட்க, எங்கப்பா என்னைக் கை காண்பித்துவிட்டு வெளியே சென்றார். நான் அவருக்கு சிறிய படம் ஒன்று வரைந்து காண்பித்தேன். நான்கு தடுப்புகள் வைத்த ஒரு சிறிய அலமாரி. 4 ½ அடி இருக்கும். அப்போதுள்ள என் உயரம். காதுகள் அடைத்துவிடுமளவிற்கு சத்தம் கேட்டதால் ஒரு கட்டத்தில் நான் தெறித்து வெளியே ஓடிவிட்டேன். பிறகு ஒரு 2 மணிநேரம் கழித்து வந்த போது பார்த்தால் நல்ல ஒரு அலமாரி உருவாகியிருந்தது. இருந்த கள்ளிப்பெட்டிகளை வைத்து செய்த அந்த அலமாரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் கையைப் பிடித்து என் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துவிட்டு என் புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்தேன். ஒரே பிரச்சனை என்ன வென்றால் என் நூலக மெம்பர்கள் உள்ளே வந்து தான் புத்தகங்களை எடுக்க முடியும். எங்கள் வீட்டில் பெண்கள் யாருமில்லை என்பதால் அவர்கள் உள்ளே வர என் பெற்றோர் எந்தத் தடையும் விதிக்கவில்லை.
Related image

என் கையிலிருந்து காசு செலவழிக்காமல் பல புதிய புத்தகங்களைப் படிக்கத்தான் இந்த ஐடியா. அது நன்றாகவே வொர்க் அவுட் ஆனது. ஒரு நோட்டு வாங்கி, ஒவ்வொரு புத்தகத்திற்கும் நம்பர் கொடுத்து தலைப்புகளை எழுதி வைத்தேன். புத்தகங்களை படிக்க வாங்குபவர்கள் கையெழுத்திட்டு வாங்கிச் செல்வார்கள்.
புதிய காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்தவுடன் படிப்பதற்கு டிமான்ட் இருக்கும். சில சமயங்களில் ஒரு நாள் டைமும், இரும்புக்கை மாயாவி புத்தகத்திற்கு அரை நாள் டைம் மட்டும்தான் கொடுப்பேன்.புத்தகங்களை பாதுகாப்பதற்கு பைண்டிங் கற்றுக்கொண்டு என்னுடைய புத்தகங்களுக்கு  பண்ணியதோடு நண்பர்களுக்கும் பண்ணிக்கொடுத்தேன்.கொஞ்சம் சில்லரையும் புரண்டது. அதற்கும் புத்தகங்களே வாங்கினேன் .
அப்போது தான் எங்கப்பா எழுதி வெளியிட்டிருந்த சிறுவர் பாடல்கள் புத்தகத்தைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் கவிதை எழுதும் ஆர்வம் வந்தது. எழுதிப் பார்த்தேன் எனக்குப் பிடித்திருந்தது. சில நண்பர்களும் படித்துவிட்டுப் பாராட்டினார்கள். அப்படியே “நித்திலம்” என்ற பெயரில் ஒரு சிறு கையெழுத்துப் பிரதியும் ஆரம்பித்து அதில் என் மற்றும் என்னுடைய நண்பர்களின் படைப்புகள் வெளிவந்தன.
 இவையெல்லாம் தவிர்த்து நான் நன்றாகவும் படிக்க வேண்டும் என்ற அழுத்தமும் இருந்தது. வாத்தியார் பிள்ளை மக்கு என்று சொல்லிவிடக் கூடாதல்லவா.
பள்ளிக்கு வெளியே பல  தின்பண்டங்கள் விக்கும், மீனாட்சி பாட்டி இரண்டு சாக்குப் பைகளை விரித்து அந்தந்த சீசனுக்கு தகுந்தாற்போல் பண்டங்கள் விற்பார். மாங்காய் சீசனில் கல்லாமை என்று சொல்லக் கூடிய  மாங்காய்கள் விற்கும். அதற்குப் பதமாக தயாரிக்கப்பட்ட உப்புமிளகாய்த் தூளும் இருக்கும். “வா சேகர் இன்னிக்கு மாங்காய் தேங்காச்சில்லு போல் இருக்குது”, என்று அழைக்கும் போது தட்ட முடியாது. புளிக்கவே புளிக்காது. இலேசான துவர்ப்பாக மட்டும் இருக்கும். இப்படி ஒரு காய்க்கு மற்றொன்றை பொருத்தமாகச் சொல்வது எப்போது வந்ததோ தெரியவில்லை. இவை எல்லாவற்றுக்கும் பொருந்துவதில்லை.
‘தேன் போன்ற பலா’ என்பது அடிக்கடி சொல்லப்படும். தேக்கு போன்ற உடல், யானை போல பலம், நரி போலத் தந்திரம் என்று சொல்வதோடு பெண்களுக்கு, மயில், மான், கிளி என்றும் ஆண்களுக்கு புலி, சிங்கம், என்றும் சொல்வதுதான் நமக்கு தெரியுமே.
மீனாட்சி பாட்டி பலாச்சுளைகள், கரும்பு சீசனில் கரும்பு,   கொய்யாப் பழங்கள், கொடைக்கானலிருந்து வரும் பிளம்ஸ் மற்றும் பீச் போன்றவற்றையும் விற்பாள். அவளுக்கு கணவர் உயரமாக ஒரு தாத்தா. பொருட்களை கொள்முதல் செய்து தலைச்சுமையாக கொண்டு வருவது அவர்தான். அதனை அற்புதமாக  மார்க்கெட்டிங்  செய்து விற்பது அந்தப்பாட்டியம்மாள்.
Image result for கல்லாமை மாங்காய்
கல்லாமை மாங்காய்
இதுதவிர சரியாக இன்டர்வெல் சமயத்தில் வாசல்களில் வந்து சேரும் ஐஸ்பெட்டிக்காரர், பெரும்பாலும், சாதா ஐஸ், சேமியா ஐஸ் மற்றும் ஜவ்வரிசி ஐஸ் மட்டும் இவரிடம் இருக்கும். தேவையான கலரைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். ஜவ்வு மிட்டாய் மற்றும் ஐஸ் சாப்பிட்டு விட்டு எங்கள் நாக்கு அந்தந்த கலரில் ஆகிவிடும். பச்சைக் கலர்தான் கொஞ்சம் கொடுமையாக இருக்கும். அதிலும் பெண்கள் சிவப்பு ரோஸ் நிற ஐஸ் ப்ரூட்களை சாப்பிட்டு விட்டு வரும்போது லிப்ஸ்டிக் போட்டது போல மிகவும் அழகாகி விடுவார்கள்.
          சிறிது நேரத்திற்கு நாக்கு தடித்து வார்த்தைகள் குழறுவது வேடிக்கையாக இருக்கும்.
மூன்று மாதம் அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை வரும் பம்பாய் மிட்டாய்க்காரருக்கு நல்ல டிமாண்ட் இருக்கும். அவர்  லாவகமாக பேப்பரை மடித்து அதில் மிட்டாயை போட்டு அப்படியே தருவார். மிகவும் சுவையாக இருக்கும். அதன் பெயர் சோன் பப்டி என்று பின்னால் தான் தெரிய வந்தது.
பள்ளியின் அருகில் ஒரு தகரக் கொட்டகையில் பல பண்டங்களை விற்பவர் பெயர் ‘ஏப்.நடராஜன்’, அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?
-தொடரும்.   




Monday, March 12, 2018


சேமியா ஐஸுக்குப்  பதிலாக கல்கண்டு  வாங்கின பரதேசி !!!!
வேர்களைத்தேடி பகுதி: 9
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_5.html

சுசிலா டீச்சர் சிறு வயதில் 

எல்லோரும் கண்களை மூடியிருக்க, நான் பக்கத்தில் உள்ள பையனின் சிலேட்டில் என் இரு கால்களையும் வைத்து ஒரு குதி குதிக்க, சிலேட் உள்ளே  சுக்கலானது. இப்படி தினமும் ஓரிறு சிலேட்கள் உடைய,ஒரு நாள் கண்களை மூடாமல் என் அம்மா என்னைக் கண்டுபிடித்து என் காதைப் பிடித்து தலையில் கொட்டு வைக்க எனக்கு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தீப்பறந்தது. கண்டிக்கவேண்டிய இடங்களில் கண்டித்தும் தண்டிக்க வேண்டிய இடங்களில் தண்டித்தும் என் அம்மா  எனக்கும் சிறந்த ஆசிரியராகவும் இருந்தார்கள் .எந்த இடத்திலும் தன் மகன் என்ற சலுகையை கொடுக்கவும் இல்லை .என் எதிர்பார்ப்புகளை சட்டை செய்யவும் இல்லை .பள்ளியென்றால் தான் ஆசிரியர் மட்டுமே என்பதை நானும் புரிந்துகொள்ளும்படி செய்தார்கள் .செல்லத்திற்கும் அனுமதியில்லை கள்ளத்திற்கும் ஆதரவில்லை .இப்படித்தான் என் பள்ளிப்படிப்பு   ஆரம்பித்தது.

சுசிலா டீச்சர் வகுப்பில் சேர்வதற்கு எப்போதும் கூட்டம் அள்ளும்.அந்தக்காலத்திலேயே என் அம்மா வகுப்பில் அறுபது பேருக்கும் மேலாக ஒரே கூட்டமாய்  இருந்தாலும் , ஒவ்வொரு பிள்ளையையும் தன் சொந்தப்  பிள்ளை போலவே கவனித்து சொல்லிக்கொடுப்பார்கள்.தினமும் என் அம்மா வகுப்பு பிள்ளைகள் பள்ளி   ஆரம்பிக்கும் முன் வீட்டுக்கு வந்துவிடுவார்கள் .அதன்பின் என் அம்மா கிளம்பும்போது , "டீச்சர் வர்றாங்களாம்" என்று சத்தம் போட்டுக்கொண்டு முன்னாலும் பின்னாலும் நடக்க தினமும் எங்கம்மா பள்ளி செல்வது ஒரு ஊர்வலம் போலவே நடக்கும் .ஏதோ காரணங்களுக்காக விடுப்பு எடுத்தால் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் எங்கள் வீட்டிலேயே   குவிந்து விடுவார்கள் .அதன்பின் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்குள்  போதும் போதுமென  ஆகிவிடும் .அது தவிர ஒன்றாம் வகுப்பு முடித்து இரண்டாம் வகுப்பு போக விரும்பாமல் அங்கேயே இருக்க அடம்பிடித்து அழுத பிள்ளைகளையும் நான் பார்த்திருக்கிறேன் . என் அம்மா தன் உயிரைக்கொடுத்து சத்தமாக பாடம் நடத்துவது இன்னும் என் காதில் ஒலிக்கிறது .இங்கே நியூயார்க்கில் சில காலம் என் தம்பி வீட்டில் இருந்து இப்போது சென்னையில் இருக்கிறார்கள் .மீண்டும் அவர்களை இங்கே வரவழைக்க முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்  
    இரண்டாவது வகுப்பு முத்து டீச்சர் மூன்றாவது வகுப்பு குட்டை ஜேம்ஸ் வாத்தியார், ஐந்தாவது ரஹீம் வாத்தியார், ஆறாவது ஜொஹரா டீச்சர், ஏழாவது புலவர் தேவகுரு வாத்தியார், எட்டாவது என் அப்பா தியாகு வாத்தியார் இப்படி என் எட்டாவது வகுப்பு வரை இந்தப்பள்ளிதான்.
குண்டு, கிட்டிப்புல், டயர் வண்டி, பனம்பழம் வண்டி, தீப்பட்டிப் படம் சேகரித்தல், புளிய விதை சேகரித்தல், பல்லாங்குழி, சொட்டாங்கல், பம்பரம், கரையுமா  கரையாதா, கி கிளித்தாண்டு, நொண்டி, ஒழிந்து விளையாடுதல், பொன்வண்டு, பட்டுப்பூச்சி, கரும்புப் பந்தயம், என நான் விளையாடாத விளையாட்டுக்களே இல்லை. இதுல எல்லா விளையாட்டிலேயும் அடியேன் கில்லாடிதான். நான் ஒண்ணாம் வகுப்புப் படிக்கும்போது என் தம்பி மனோகரும், ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது என் தம்பி பாஸ்கரும் பிறந்த பின் என்மேல் உள்ள அழுத்தம் இன்னும் கூடியது. உன்  தம்பிகள் உன்னைப் பார்த்து கெட்டுப் போகக்கூடாதுன்னு சொல்லி  சொல்லி நான் வாங்கிய அடிகள் கணக்கிலில்லாதது.
எட்டாவது படிக்கும்போது என் அப்பாவே ஆசிரியராய் இருந்ததால் இன்னும் அழுத்தம் அதிகம்.
Image result for அம்புலிமாமா

நான் ஆறாவது படிக்கும்போது என் வாசிக்கும் ஆர்வத்தைப் பார்த்து, என் அப்பா என்னை நூலகத்திற்கு அழைத்துச் சென்று என் வயதுக்கு மெம்பர் ஆக முடியாதலால் அவர் ஆகி இரண்டு கார்டுகளைப் பெற்று எனக்குக் கொடுத்தார் அப்போது நூலகராக இருந்த மணி புன்னகையுடன் என்னை வரவேற்று புத்தகங்களை அறிமுகம் செய்தார். வாண்டு மாமாவில் துவங்கி, அம்புலி மாமாவில் வளர்ந்து பின்னர் தமிழ்வாணன், சுஜாதா என்று பரிணாம வளர்ச்சியடைந்தது என் வாசிப்புப்பழக்கம். அதன்பின் கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், லா.சாராமாமிர்தம், சா.கந்தசாமி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று என் வாசிப்புத்தளம் விரிவடைந்ததற்கும் இங்குதான் விதை விழுந்தது. அங்கு கோகுலம் மற்றும் அம்புலிமாமா படிப்பதற்காக மணிக்கணக்காக காத்துக்கிடந்ததும் ஞாபகம் இருக்கிறது. என்னைப்போல் பலரும் அதற்கு காத்திருந்ததால் நூலகரிடம் சொல்லிவிட்டுத்தான் உட்காருவோம். அதன்பின்பு எங்கப்பாவிடம் அப்போது படித்த முத்து ரெங்கன் அறிமுகமானார். அவர் முத்து ரெங்கன் பேங்கர்ஸ் அடகுக்கடை ஓனரின் மகன். “கோகுலம் நாங்கள் வாங்குகிறோம். நான் படித்தவுடன் நீவாங்கிப் படிக்கலாம்”, என்று சொன்னதால், கோகுலம் வெளியாகும் அன்றே முத்துரெங்கன் வீட்டுக்குப்போய் விடுவேன். பல சமயங்களில் தான் படிக்காவிட்டாலும் “பரவாயில்லை சேகர் நீ படித்துவிட்டுக்கொடு” என்று கொடுத்ததை மறக்கவே முடியாது. தன் முயற்சியில் சற்றும் மனதளராத விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள், நீதிக்கதைகள், அரச கதைகள் என்று அம்புலிமாமாவின் அழகிய கலர்ப் படங்களுடன் இருக்கும் கதைகள், கோகுலத்தில் பலே பாலுவின் சேட்டைகள் நிரம்பிய படக்கதைகள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக பங்களாதேஷ் உருவான சமயத்தில் வந்த கதைகள் திரில்லர் ரகம். அதன் பின் எங்கெங்கு தேடியும் பலேபாலு கதைகள் கிடைக்கவேயில்லை. ஆங்கிலத்தில் டின்டினுக்கு இணையானவை வாண்டுமாமா எழுதிய பலே பாலு கதைகள் என்று சொல்லுவேன்.
Related image

பின்னர் கல்கண்டு அறிமுகமாகியது. அதில் வரும் ஏராளமான துணுக்குகள் மற்றும் சங்கர்லால் கதைகளுக்காக அதனை வாங்கினேன்.
அந்தக் காலக்கட்டத்தில்தான் முத்து காமிக்ஸ் எனக்கு அறிமுகமாகியது. இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ ஸ்டெல்லா, லாரன்ஸ் & டேவிட், ரிப் கிர்பி, வேதாளர். மாடஸ்டி பிளைசி என்று பல ஆதர்ஷ  நாயக நாயகியர் அழுத்தமாக தடம் பதித்தனர். 
Related image
தேன்மிட்டாய்
இந்து நடுநிலைப்பள்ளியில் படிக்கும் வரை நடுவில் இடைவேளை வரும்போது என் அப்பா வகுப்புக்கு வெளியே வந்து நின்றால், ஒரு இரும்பு ஐந்து பைசாவை வைப்பார். அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்து ஒரு சேமியா ஐஸ் அல்லது ஜவ்வு மிட்டாய் (ஒன்று ஒரு காசுதான்) ஒன்று, தேன்மிட்டாய் 2 என்று வாங்கிச் சாப்பிட்டு முழுவதையும் செலவழித்துவிட்டுத்தான் உள்ளே வருவேன். கோட்டையன் கோவிலில் போய் தண்ணீர் குடிப்போம். அது இப்போது தூர்ந்து கிடக்கிறது.
Related image

இதற்கிடையே நான் ஆறாவது வந்தபோது என் தினசரி பாக்கெட் மணி இரும்பு 5 பைசாவிலிருந்து  இரும்பு 10 பைசாவாக உயர்ந்தது. எனவே சேமியா ஐஸ் அல்லது ஜவ்வுமிட்டாய்கள் என்பது போய், இரண்டும் வாங்கிச் சாப்பிட முடிந்தது. இப்போது கல்கண்டு வேற வாங்க விரும்பியதால் சேமிக்க ஆரம்பித்தேன். அது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியாது. சேமியா ஐஸ்சை தியாகம் செய்து கல்கண்டு வாங்குவேன். 35 காசுகள் தான் கல்கண்டின் விலை அப்போது. அப்புறம் நான் எட்டாவது படிக்கும்போது விலை  65 காசுகள் ஆகியதால் எங்கப்பாவிடம் தயங்கி தயங்கி ஒரு நாள் கேட்டேன் தினமும் சேமிப்பது சிரமம் என்பதால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தினமும் கொடுக்கும் காசுகளை மொத்தமாக ஒரே நாளில் கொடுத்துவிடுங்கள் என்றேன். எங்கப்பாவும் சம்மதம் தெரிவித்ததோடு 50 பைசாவுக்குப் பதிலாக 1 ரூபாயாக கொடுத்தார். அப்போதிருந்த என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
Image result for கோகுலம்

தொடர்ந்து கல்கண்டு வாங்கி, அதில் வரும் தொடர் கதைகளை பிரித்தெடுத்து ஒன்று சேர்த்து தைத்து வைப்பேன். இந்தக் கதைகளை பத்திரப்படுத்து வதற்காக பைண்டிங் செய்து பழகினேன்.
Image result for muthu comics

மாதமொரு முறை வரும் முத்து காமிக்ஸ் வாங்குவதற்கும் அதிலிருந்தே சேமிப்பேன். மெயின் ரோட்டில் இருக்கும் மாணிக்கம்பிள்ளை புக் ஸ்டாலில் முதலிலேயே சொல்லி வைத்தாலும் சிலசமயம் யாராவது என்னை முந்தி விடுவார்கள். பிறகு அவரிடம் சண்டைபோடுவேன். பலசமயங்களில் கடைவாசலில் முன்னமே உட்கார்ந்து, பார்சல் வந்தவுடன் சுடச்சுட முதல் காப்பியை வாங்கிக் கொண்டு ஓடுவேன். அப்போதுதான் புத்தகங்களை சேர்ப்பதற்கும் புதிய முத்து காமிக்ஸ் புத்தகங்களை வாங்குவதற்கும் ஒரு ஐடியா தோன்றியது.
- தொடரும்.

Thursday, March 8, 2018

பரதேசியின் சொந்த ஊர் எது?

Image result for confused man  free cartoon


"ஹல்லோ எலேய் பரதேசி என்னலே என்ன செய்ற?"
(வந்துட்டான்யா வந்துட்டான்யா நாரத மகேந்திரன்)
"நல்லாருக்கியா மகேந்திரா ஊரும் உறவுகளும் சுகமா?"
"அட அதவிடுறா ஏதோ வேரைத் தேடின்னு ஒரு பதிவு எழுதிட்டு இருக்கியாமே?"
"ஆமாடா ஏன்டா நீ படிக்கிறதில்லையா?"
"நான் வயக்காட்டு வெள்ளாமையல பிஸியா இருந்தேன்.  பயக சொன்னாய்ங்க. அது சரிடா உன் சொந்த ஊர் எது?"
"என்னடா இப்படிக் கேட்டுட்ட, தேவதானப்பட்டிதான் என் சொந்த ஊரு, உனக்கும் அதான்"
"இல்லடா பிறந்த ஊரைத்தான சொந்த ஊர்னு சொல்வாய்ங்க”.
“அப்படிப்பார்த்தா என் பிறந்த ஊரு திண்டுக்கல்லு, வளர்ந்த ஊருதான் தேவதானப்பட்டி".
"அப்ப உனக்கு சொந்த ஊர்னா திண்டுக்கல்லுன்னுதான சொல்லனும்"
"இருந்தாலும் வளர்ந்த ஊரை விட்டுற முடியுமா? இப்படி வேணா வெச்சுக்கலாம் பிறந்த சொந்த ஊரு திண்டுக்கல், வளர்ந்த சொந்த ஊரு தேவதானப்பட்டி".
"அப்ப திண்டுக்கல்லுல இருந்ததை விட தேவதானப்பட்டில இருந்ததுதான அதிகம் இல்லையா? எவ்வளவு வருஷம் இருந்த?"
"ஆமாடா பத்தாப்பு படிக்கறவரை அங்க தான் இருந்தேன். பதினஞ்சு  வருஷம் இருந்தேன்னு வச்சுக்கலாம்".
"அது சரி திண்டுக்கல்லு அப்ப யாரு ஊரு?"
"அடேய் அது எங்கம்மா ஊருடா"
"அப்ப உங்கப்பா பிறந்த ஊர்?"
"அது மதுரை”
 “அப்ப நீ சொந்த ஊரு மதுரைன்னுதான சொல்லணும்? "
"அப்படியும் வச்சுக்கலாம்டா, அதோட மதுரையில அமெரிக்கன் கல்லூரி 3 வருஷம் சமூகப்பணிக்கல்லூரி 2 வருஷம் இப்படி கிட்டத்தட்ட அஞ்சாறு வருஷம் மதுரையில்தான் இருந்தேன். களிமண்ணா வந்த என்னை கடைந்தெடுத்து உருவாக்கியது அமெரிக்கன் கல்லூரிதான்.அதனால் தான் இந்தியா வந்தா மதுரைக்கு வராம திரும்பினதில்லை . அதனாலதான் இப்பவும் மதுரைக்காரன்னு பெருமையா சொல்றேன். அதோட அப்ப திண்டுக்கல்லும் சரி, தேவதானப் பட்டியும் சரி எல்லாமே மதுரை மாவட்டமாத்தேன் இருந்துச்சு"

Image result for confused man  free cartoon
Add caption
"அப்ப சென்னை?"
"சென்னையை மறக்க முடியுமா? வேலைக்காக 1988ல் இங்கு வந்து வந்ததிலிருந்து  சிறந்த அனுபவம் கொடுத்தது சென்னைதான், சொந்தக் கம்பெனி வக்கிற அளவுக்கு வளந்தது, வளர்த்தது சென்னைதான. அதோட புகுந்த ஊரும்  சரி புகுந்த வீடும் அமைஞ்சது சென்னைதான்"
"புகுந்த வீடா என்னடா சொல்றா"
"இல்லடா கல்யாணம் செஞ்சதும் சென்னைதான, அதைச் சொன்னேன்”.
“ஓ நீ அங்க வர்றியா/ ஆமா நீ சென்னையில எத்தனை நாள்றா இருந்த"
"டேய் 1988-லிருந்து  2000 வரைக்கும் சென்னைதான, கணக்கு பண்ணா ஒரு 11-12 வருஷம் சென்னையிலதான இருந்தேன்".
"அப்ப சென்னையைக் கூட உன்னோட சொந்த ஊர்னு சொல்லலாம்னு  சொல்லு"
"சொல்லலாமே தப்பேயில்ல, டேய் டேய் மகேந்திரா என்னடா குழப்புற?"
"அப்ப திண்டுக்கல்லுல ஆரம்பிச்சு அப்புறம் தேவதானப்பட்டி, பின்ன மதுரை அதன்பின் சென்னை அப்புறம்?"
"அப்புறம் நியூயார்க் வந்தேன்".
"ஏண்டா சென்னையை விட்டுப்போன? சென்னை பிடிக்கலயா?
"சேச்சே அப்படிச் சொல்ல முடியாது. எந்த ஊரையும் பிடிக்காம விட்டுட்டு வரல உயர் படிப்புக்கும் வேலை வாய்ப்பையும் தேடித்தேன் ஒவ்வொரு இடமா போனேன்".
"ஆமா நியூயார்க் எப்படா போன?"
"2000-த்தில இங்க வந்தேன்"
"2000-யிரமா அப்ப நீ போய் 18 வருஷம் ஆயிருச்சா?"
"ஆமாடா நாள்தான் ஓடு ஓடுன்னு ஓடுதே"
"அப்ப நீ திண்டுக்கல், தேவதானப்பட்டி,மதுரையில இருந்ததைவிட நியூயார்க்கில இருந்ததுதான் அதிகம்னு தெரியுது".
"அட ஆமா மகேந்திரா, இந்தக்கணக்கை இதுவரை நான் போட்டுப்பாக்கல"
“அதுசரி அப்ப நியூயார்க்தான் உனக்கு சொந்த ஊர் ஆயிப் போச்சுன்னு சொல்லு"
"மகேந்திரா எத்தனை வருஷம் இங்க இருந்தாலும் நான் இந்தியன்கிறதும் தமிழன்கிறதும் மாறாது. நான் தமிழன்தான், நான் மதுரைக்காரன்தான் என் சொந்த ஊர் தேவதானப்பட்டிதான். இதை எப்பவும் மாத்தமுடியாதுடா, மறக்கவும் முடியாது, மறக்கவும் கூடாது”.
“நல்லாச் சொன்னடா, ஆமா உனக்கு நியூயார்க் பிடிச்சிருக்கா?”
"பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியாது, பிடிக்கலன்னும் சொல்லமுடியாது"
"என்னடா புதிர் போடுற"
"என்ன இருந்தாலும் எத்தனை வருஷம் இருந்தாலும், நியூயார்க்கும் அமெரிக்காவும் எனக்கு வெளிநாடு தானடா. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா?"
சரிதான் போ, அப்ப திரும்ப வந்துற வேண்டியது தானே".
"அது முடியாதுன்னு தான் நெனைக்கிறேன்"
"ஏண்டா?"
"இது ஒரு புலிவாலைப்பிடிச்ச கதைரா. பிடிச்சுட்டு இருக்கிறதும் கஷ்டம், புடியை  விடுறதும் கஷ்டம். பிள்ளைகள் இங்க வளர்ந்ததனால அவளுக வரமாட்டேங்கறாங்க. அவங்க பக்கத்தில நாங்க இருக்கறதுதானே நல்லது",
“சரிதாண்டா ஆனா சும்மா சொல்லக்கூடாது. உன் கதை அபாரம்டா, திண்டுக்கல், தேவதானப்பட்டி, மதுரை, சிவகாசி, கிருஷ்ணகிரி, சென்னை இப்ப நியூயார்க். அதுலயும் ஊர் ஊராச் சுத்துற. உனக்கு பரதேசிங்கிற பேரு ரொம்ப பொருத்தம்டா. ஆமா யார்றா இந்தப் பேரை உனக்கு வெச்சது?”
“வேற யாரு நாந்தேன்?”
“அடுத்து எங்கடா போற?”
“சொல்றேன்”.
மார்ச் 24, 25 - டொரன்டோ, கனடா - கிறிஸ்தவ இசை  மாலை
ஏப்ரல் 15 : சித்திரை விழா, நியூயார்க் தமிழ்ச்சங்கம்
ஏப்ரல் 21: தமிழ் ஜெப்பர்டி - நியூயார்க் தமிழ் அக்காதெமி
ஏப்ரல் 24-27 - தாய்லாந்து
ஏப்ரல் 28-29 : சென்னை
ஏப்ரல் 30 மே 1,2 : திருவனந்தபுரம்  
மே 3-4 : சென்னை
மே 4 : மதுரை
மே 5 : ராமநாதபுரம்
மே 6: மதுரை
மே 7-8 : சென்னை
மே 9 : நியூயார்க்
மே 26-27 : நியூஜெர்சி தமிழ்நாடு பெளன்டேஷன்
ஜூன்  30 - ஜூலை 4 Fetna  டல்லாஸ், டெக்சஸ் 

“டேய் சேகரு நீ பரதேசியே தாண்டா”
 முற்றும்
முக்கிய அறிவிப்பு 

டொரோண்டோவில்  நடக்கும் ஒரு ஆலய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் கனடா வருகிறேன் .சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் ( 1212-363-0524 , alfred_rajsek@yahoo.com)