Thursday, July 28, 2016

தமிழ் இனி மெல்லச்சாகும் / வளரும் !!!!!!!!!!!!!!



தமிழ் இனி மெல்லச்சாகும்  வளரும் !!!!!!!!!!!!!!


With my wife at Fetna Event

FETNA -3 ஃபெட்னா தமிழர் திருவிழாவில்  இலக்கிய வினாடி வினா !!!!!.

 ஃபெட்னாவின் நிகழ்வுகளில் பங்கெடுக்க நிறைய ஆர்வமுள்ளவர்களும், திறமை உள்ளவர்களும் அமெரிக்கா  முழுவதும் இருந்ததால், கலந்து கொள்வதற்கு ஒரு வித போட்டி இருந்தது எனலாம். கவியரங்கத்தில் கலந்து கொள்ள ஆவலிருந்தும் இடமில்லை என்று சொன்னதால் மற்ற நிகழ்ச்சிகள் என்ன என்று பார்த்தேன். கவியரங்கம் தவிர Dr. சிவராமன் தலைமையில் ஒரு கருத்துக்களம் மற்றும் இலக்கிய வினாடி வினா ஆகிய இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நான் கலந்து கொள்ளக் கூடிய பொது நிகழ்ச்சிகள் என எனக்குப்பட்டது.

“இலக்கிய வினாடி வினா” என் ஆர்வத்தைத் தூண்ட அதில் கலந்து கொள்ள என் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஃபெட்னா  அமைப்பின் தலைவர் நாஞ்சில் பீட்டர் அவர்களின் முயற்சியில் இது ஆரம்பிக்கப்பட்டு கடந்த 10 வருடங்களாக நடந்து வருகிறதாம்.  “அதுவும் முடிந்துவிட்டது, நீங்கள் ஏற்கனவே சொல்லியிருக்க வேண்டும்”, என்றார்கள்.

“சரிவிடு, தமிழர் விழாவில் ஒரு பார்வையாளனாகக் கலந்து கொள்வதே பரவசம்தான்” என்று விட்டுவிட்ட  நேரத்தில், பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் என் குழுவில் பங்குபெறும் தோழி சுபா அவர்கள் என்னை அறிமுகப்படுத்தி ஒரு குழுவில் நுழைத்துவிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தப்பேரும் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டனர்.ஒரு குழுவின் பெயர் தமிழண்ணல்.  இன்னொன்று வ.சுப மாணிக்கனார் குழு. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர். என் குழுவான வ.சுப மாணிக்கனார் குழுவுக்கு தலைவர் திருமதி.சுசித்ரா அவர்கள். நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் உற்சாக உறுப்பினர் இவர்.  

Suchithra Srinivas ( Extreme right) with  Subha ( Middle) and  Fetna Volunteers 
சும்மா பொதுவான கேள்வி பதில் இருக்கும். சமாளித்து விடலாம் என்று நினைத்த எனக்கு ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் காத்து இருந்தன.

ஈமெயில் மற்றும் தொடர்பு எண் கேட்டு சுசித்ராவிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதன்பின் சுசித்ரா அலைபேசியில் அழைத்து,என்னை வரவேற்று சுருக்கமாக இது எப்படி நடைபெறும் என்று சொன்னார்கள்.

முதலில் ஜிமெயில் மூலம் ஒரு கூகுள்  குழு ஆரம்பிக்கப்பட்டது.  அதில் ஒரு அழைப்பு ஈமெயில் வந்தபின், அதில் சேர்ந்து என் படத்தையும் அங்கே போடச் சொன்னார்கள். அதில் எனக்கு நன்கு அறிமுகமான ரங்காவின் புகைப் படத்தைப் பார்த்ததும் மனம் துள்ளியது.  ஆஹா எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவராவது இருக்கிறார் என்று நினைத்து உள்ளம் மகிழ்ந்தது. ரங்கநாதன் புருஷோத்தமன் என்பது அவர் முழுப் பெயர். இவர்தான் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் என்று பலமுறை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். “கொஞ்சம் விலாவாரியாகச் சொல்லுங்கள்” என்று அவரிடம் கேட்டேன்.


FETNA President: Nanjil Peter.
அவர்தான் புரியும்படி சொன்னார். அதாவது, “பல தலைப்புகள் கொடுக்கப்படும். அதில் ஒரு தலைப்பை எடுத்து உங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ளலாம்”, என்று ஆஹா எல்லாவற்றையும் படிப்பது, தெரிந்து கொள்வதைவிட  இது எளிதுதான் என்று நினைத்தேன்.

அதற்குள் கூகுள் குரூப்பில் பாடங்கள் வந்தன. பாடங்களைப் பார்த்ததும் மிகுந்த ஆச்சரியமாயிருந்தது. அவற்றைக் கீழே கொடுக்கிறேன்.



அதில் தமிழிசையை தேர்வு செய்து சுசித்ராவுக்குச் சொன்னேன். ரங்காவும் அதில்தான் இருந்தார் என்பது கூடுதல் மகிழ்ச்சியளித்தது. தயார்பண்ண ஆரம்பித்த போது சுசித்ரா ஒரு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து என்னைக் குழுவில் இணைத்தார்கள்.

அதுவரை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை வந்த வாட்ஸ் அப் செய்தியில் சனிக்கிழமை மாலை ஒரு கூட்டு அழைப்பு இருப்பதாகவும், ஒவ்வொரு வாரமும் இதுபோல அழைப்பு இருக்கும் என்றும் சொன்னார்கள். இது ஒரு 2 மாதத்திற்கு முன்னமே ஆரம்பித்துவிட்டது. சனிக்கிழமை நிறையப்பேர் முடியாது என்பதால் அது ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்னால் முடியாதே என்று யோசித்தேன். முயன்று பார்க்கலாம் என்று நினைத்தேன்.

இந்தக் கூட்டு அழைப்பில் கலந்து கொள்ளும் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவைப் படித்து ஒரு சிறு கருத்துரை வழங்க வேண்டும். அதுதவிர அந்தந்த பாடப்பிரிவுகளில் சிறந்து விளங்கும் தமிழர்கள் சிறப்புரையும் ஆற்றுவார்கள். கேள்வி பதிலும் இருக்கும். கூட்டு அழைப்பு சுமார் 1 மணி நேரம் போகும்.

இது என்ன ஓவர் பில்டப்பா இருக்கே என்று நினைத்தேன். ஆனால்  ஒரு அழைப்பில் (Conference Call) கலந்து கொண்டபின்தான் அதிர்ந்து போனேன்.

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களும், குடிமகன்கள் ஆனவர்களும் பெரும்பாலானோர் குடும்பமாக தமிழையும், தமிழ்நாட்டையும், ஏன் இந்தியாவையும் கூட மொத்தமாகத் தலைமுழுகிவிட்டு, முற்றிலும் மாறிப்போன பல பேரை எனக்குத் தெரியும். இந்தியாவில், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது. யார் பிரதமர் முதல்வர் என்று கூடத் தெரியாது. என்ன சிவாஜி செத்துட்டாரான்னு கேட்கும் மக்கள் தான் அதிகம். இதுல தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு என்று சொன்னால் who cares? என்றுதான் பதில் வரும்.

அப்படிப்பட்டவர்கள் மத்தியில் அமெரிக்கா முழுவதும் பல நேர அமைப்பில் (Time Zones) உள்ளவர்கள், அதீத ஆர்வத்துடன் கலந்து கொண்டதைப் பார்த்தபோது  இன்ப அதிரிச்சியாக இருந்தது. ஆஹா தமிழ் மெல்லச் சாகாது, தமிழ் நன்றாக வேர் பிடித்து வளரும் என்று நினைத்து புல்லரித்துப் போனேன்.

கலந்து கொண்ட  ஒவ்வொருவரும் இன்னும் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள். நாஞ்சில் பீட்டரும் கலந்து கொண்டு சொன்னார், “இது வெறும் வினாடிவினாவுக்காக அல்ல. இதனை சாக்காக  வைத்துக் கொண்டு தமிழ் இலக்கியங்களைக் கற்றுக் கொள்ளவும், அதன் அழகியலை அறிந்து கொள்ளவும் இது ஒரு அரிய வாய்ப்பு”, என்று சொன்னதோடு தனித்தமிழ் பேசுவதையும் ஊக்கப்படுத்தினார்.

வருடக்கணக்கில் இங்கே வாழும் நம் மக்களின் தமிழ்ப் புலமையையும், இலக்கியங்களின் ஆழமான புரிந்து கொள்ளுதலையும் பார்த்து அசந்தே போனேன்.

துரதிர்ஷ்டவகையில் எவ்வளவு முடிந்தும் என்னால் தொடர்ந்து மூன்று முறை கூட்டழைப்பில் கலந்து கொள்ள முடியாது போனது. கூட்டழைப்பில் பங்கு கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை, வினாடிவினாவில் பங்கு கொள்ளுங்கள் என்று சுசித்ராவும் ரங்காவும் சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவ்வளவு உழைப்பைக் கொட்டி, தியாகம் செய்துதான் கூட்டழைப்பில் பங்குகொள்கிறார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும் . எனவே நான் கூட்டழைப்பில் பங்கு கொள்ளாமல், பின்வாயிலின் மூலம் நுழைவது எனக்குப் பிடிக்காததால் தான் விலகிக் கொண்டேன்.

அதனால் ஏற்பட்ட முழு நஷ்டமும் எனக்குத்தான் என்பதும் தெரியும். ஆனால் பங்கு கொள்ளமுடியவில்லை என்ற ஒரு ஆதங்கம் இருந்தாலும், பார்வையாளர்களில் ஒருவராக உட்கார்ந்து ரசிக்க முடிந்தது.

இலக்கிய வினாடிவினா மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்கால டெக்னாலஜியைப் பயன்படுத்தி, அக்காலத்துடன் இணைத்து  டிஸ்பிளே ஸ்கிரீன்,   சினிமாப் பாடல்கள், ஒலித்துணுக்குகள், வீடியோக்கள் போன்ற பல உத்திகளைப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு கேள்வியின் குரலுக்காக நாடு முழுவதும் உள்ள வெவ்வேறு குரல்களைப் பயன்படுத்தியதும் சிறப்பு.

இதற்குப்பின்னால் எவ்வளவு உழைப்பு எவ்வளவு நபர்கள், என்று நினைக்கும்போது மிகவும் பிரமிப்பாய் இருந்தது. பெரும்பாலான கேள்விகளுக்குப் பதில் சொல்லி, இரு குழுக்களும் சமமான மதிப்பெண்ணைப் பெற்றனர். நாஞ்சில் பீட்டர் நிச்சயமாய் பிரமிக்க வைக்கிறார். மிக அருமையாக குழுவை வழிநடத்திய சுசித்ரா அவர்கள் பாராட்டுக்குரியவர்கள் . வாழ்த்துக்கள்.

தமிழர் திருவிழா பதிவுகள் தொடரும்.

Monday, July 25, 2016

சீனப்பேரரசனின் கோடைகால அரண்மனை!!!!!!!

சீனாவில் பரதேசி -17

Paradesi at Summer palace 

உழப்பி  உழப்பி பார்த்துவிட்டு குச்சியை கடுப்பில் மேஜையில் போட்டுவிட்டு, “ஃபோர்க்  இருக்கா”? என்று கேட்டேன். “அப்படியென்றால் என்ன?”, என்று கேட்டாள் அந்த இளம் பெண். ஃபோர்க் என்றால் அந்தப் பெண்ணுக்குப் புரியவில்லை. என்னடாது ஃபோர்க் கூட இல்லாத ரெஸ்ட்டாரண்டா?. படம் வரைந்து பாகங்களைக்குறித்தேன் .லீ பார்த்துக்கொண்டு சும்மா இருந்தான் . “ஏனப்பா சொல்லக்கூடாதா?”, என்று கேட்டவுடன் சிரித்துக்கொண்டே ,” நல்லாத்தான் வரைகிறாய்”, என்றான். அவன் கேட்டவுடன் , அந்தப் பெண் வெளியே போய் ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் வாங்கிக் கொண்டு வந்தாள். அதை டிரை செய்யும் முன்பு லீயைப் பார்த்தால், முழுவதுமாக சாப்பிட்டு முடித்து, அவ்வளவு பெரிய கிண்ணத்தை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சிக் குடித்து முடித்து, ஒரு ஏப்பத்தை வேறவிட்டு வயித்தெரிச்சலைக் கிளப்பினான்.

அந்த ஸ்பூனில் சாப்பிட்டுப் பார்த்தேன். ம்ஹும் வருகிறது, ஆனால் வாய்க்குக் கொண்டு போகும் முன்னால் வழுக்கி விழுந்துடுது. எனக்கோ பசியில் காது அடைத்துப் போய் பேசாமல் நம்மூர் ஸ்டையில் கையைவைத்து சாப்பிட்டு விடலாமா என்று நினைத்து பரிதாபமாகப் பார்த்தேன். ஃபோர்க் இருந்தால் ஒரு மாதிரி உருட்டி உருட்டி சாப்பிட்டுவிடலாம்.
Two of the three sections of the richly decorated “Archway of Gorgeous Clouds and Jade Eaves”. I...
Ceremonial entrance ( Courtesy Digital Journal)
நேரம் வேறு ஓடிக் கொண்டிருந்தது. லீ ஒரு யோசனை செய்து ஒரு சிறிய கப்பில்  லோமெயின் யும் சூப்பையும் ஊற்றிக் கொடுத்தான். முதலில் சூப்பைக் குடித்துமுடிக்க, டம்ளரில் நூடுல்ஸ் மட்டும் தங்கியிருந்தது. பின்னர் லீ “ரெண்டையும் சேர்த்து நல்லாத்தம் கட்டி உரிஞ்சு”, என்றான்.

நான் அதனை உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்டேன். .எவ்வளோவோ ஜாக்கிரதையாய் சாப்பிட்டாலும் , சூப் மீசையில் பட்டு முகத்தில் வழிந்தது . நான் அப்படிச் சாப்பிடுவதை அந்தப்பெண் வேறு வாயைத் திறந்து வைத்துக் கொண்டு ஆச்சரியமாய்ப்பார்த்தாள். பசியில் அதையெல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை.

அந்தக் கிண்ணத்தில் பாதி சாப்பிடுவதற்கு முன்னால், நெஞ்சு வரை சாப்பிட்ட உணர்வு வந்தது. ஆனால் சும்மா சொல்லக் கூடாது, ருசி அபாரமாய் இருந்தது. அதுமாதிரி லோமெய்ன் வேறு எங்கும் சாப்பிட்ட ஞாபகம் இல்லை. அதோடு இந்த வகையிலும் லொமெய்னை நான் சாப்பிட்டதில்லை.  

ஒரு வேளை அதீத பசியாயிருந்ததால் அவ்வளவு ருசியாக இருந்ததோ என்று நினைத்தேன்.

விலையும் ரொம்பக் குறைச்சல்.ரெண்டு பேருக்கும் தண்ணீர் பாட்டிலையும் சேர்த்து 8 யுவான் தான் ஆனது. டிப்ஸ் எவ்வளவு என்று லீயைக் கேட்க, “டிப்ஸ் வாங்க மாட்டார்கள்”, என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

“சீசியே”, ( நன்றி) என்று நான் அந்தப் பெண்ணிடமும் அவள் அம்மாவிடமும் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். “பாத்தியா  என்கூட வந்தால் நீ நிறைய பணம் மிச்சம் பண்ணலாம்”,  என்று சொன்னான்.

நானும் சிரித்துக் கொண்டே அவன் பின்னால் ஓடினேன். அவன்தான் நடக்கமாட்டேன்கிறானே என்ன செய்வது.

நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தோம். பெயருக்கேற்ற படி 'சம்மர் பேலஸ்' மரங்களும் தோட்டங்களும்  தண்ணீரும் சூழ்ந்து மிகவும் ரம்மியமாக இருந்தது. இந்த மன்னர்களுக்கு (அரண்)மனைகளும் அதிகம் மனைவிகளும் அதிகம். கோடை காலங்களில் ஓய்வெடுக்க தன் படை பரிவாரங்களோடு பேரரசர் இங்கு வந்துவிடுவாராம்.

Last Emperor Puyi  at the Summer Palace 

சிறு குறிப்புகளை கீழே தருகிறேன்.

1.   சீனப் பேரரசர்களின் இந்தக் கோடை வாசஸ்தலம், கிபி 1150 முதல் 1161 வரை அரசாண்ட ஜின்  டைனாஸ்டி (Jin Dynasty) யைச் சேர்ந்த வான்யன் லியங் (Wanyan Liang) அவர்களால் கிபி 1153ல் கட்டப்பட்டது.
2.   இது பீஜிங் நகரத்தின் வடமேற்குப்பகுதியில் உள்ள 'அச்செங்'  (Acheng) மாவட்டத்தில் அமைந்துள்ளது.
3.   1271ல் யான் டைனாஸ்ட்டியில் (Yean Dynasty) இங்கிருந்த ஒரு ஏரியிலிருந்து விலக்கப்பட்ட நகருக்குள் செல்லும் வகையில் ஒரு வாய்க்கால் அமைக்கப்பட்டது.
4.   1860ல் நடந்த ஓப்பியம் யுத்தத்தில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுப்படைகள் இதனை ஆக்கிரமித்தன. பிரிட்டனின் தூதுவர்களாக வந்த டைம்ஸ் பத்திரிகை நிருபரையும் அவனோடு வந்தவர்களையும் சீனர்கள் கொன்றுவிட்டதால் ஆத்திரமடைந்த, அச்சமயம் சீனாவில் பிரிட்டிஷ் ஹைகமிஷனராக இருந்த எல்ஜின் பிரபு, உள்ளே இருந்த அரண்மனைகளை இடித்துத்தள்ள உத்தரவிட்டார். அதே மாதிரி 1900ல் நடந்த பாக்ஸர் புரட்சியின் போதும் பல தோட்டங்கள் அழிக்கப்பட்டன.
5.   1912ல் சீனாவின் கடைசிப் பேரரசர் புயி பதவிநீக்கம் செய்யப்பட்டவுடன் 'சம்மர் பேலஸ்' சிங் டைனாஸ்டியின் பேரரசர் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்தாக மாறியது.
6.   1914ல் இது பொது மக்களுக்காக திறந்துவிடப்பட்டது.
7.   1924ல் பேரரசர் புயி விலக்கப்பட்ட நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டபின், பீஜிங்கின் முனிசிபல் அமைப்பு சம்மர் பேலஸின் பொறுப்பேற்று, இதை ஒரு பொதுமக்களுக்கான  பூங்காவாக மாற்றி அமைத்தனர்.
8.   1949ல் இங்குதான் சிறிது காலம் "சென்ட்ரல் பார்ட்டி ஸ்கூல் ஆஃ ப் தி கம்யூனிஸ்ட்  பார்ட்டி" என்று அழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட்  பார்ட்டியின் கொள்கை விளக்கப்பள்ளி இருந்தது. அந்தச் சமயத்தில் 'மா சேதுங்'  அவர்களின் நண்பர்களான, லியு யாஜி (Liu Yazi) மற்றும் ஜியங் சிங்  (Jiang Qing) ஆகியோர்  இங்கு குடியிருந்தனர் .
9.   1953ல்  இந்த அரண்மனை  வளாகம் சீரமைக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக்கப்பட்டது.
10.               1998ல் சம்மர் பேலஸ் யுனெஸ்கோவில்  'வேர்ல்ட் ஹெரிடேஜ்' இடம் என்று அங்கீகரிக்கப்பட்டது.  
11.               மொத்தம் 2.9 சதுர கிலோமீட்டர்  பரப்பளவுள்ள  இந்தப் பூங்காவில் முக்கால்வாசிப் பகுதி ஏரியாகும்.

உள்ளே 'லாஞ்சிலிட்டி மலை (Longivitti Hill) 'கன்மிங் ஏரி' (Kunming Lake) மற்றும் மூன்று சிறிய தீவுகள் உள்ளன. அது தவிர குட்டிகுட்டி  மலைகளும், தங்குமிடங்களும் அரண்மனைகளும் உள்ளே இருக்கின்றன.

இந்த ஏரியில் பாதி இயற்கையானது, மறுபாதி செயற்கையானது என்று லீ சொன்னான். சீனர்களின் நாகரிகத்தின் கலைப்பண்பாட்டின் உச்ச பச்ச கட்டடக்கலையின் (Masterpiece) அமைப்பென கருதப்படும் இடத்தின் உள்ளே உள்ள அதிசயங்களை வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.


தொடரும். 

Thursday, July 21, 2016

வெள்ளைக்காரனின் தமிழும்! மதுரைக்காரனின் தாராளமும்!

ஃபெட்னா தமிழர் திருவிழா-2016 : பதிவு 2
Me in Fetna
ஃபெட்னா தமிழர் திருவிழா நடந்த அரங்கைச் சுற்றிலும் நிறைய ஸ்டால்கள் இருந்தன. அதில் ஒன்று ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு போட்டிருந்த ஸ்டால்.
கொஞ்சம் காலம் முன்னால், ஆனந்த விகடனில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் இருக்கை அமைப்பது பற்றியும் அதற்கு முயற்சி எடுக்கும் அமெரிக்காவில் வாழும் இரண்டு தமிழ் மருத்துவர்கள் பற்றியும் படித்து ஆச்சரியப்பட்டேன். அதைப் படிக்கும்போது இதெல்லாம் வீண் முயற்சி என்றுதான் எண்ணத்தோன்றியது. இது தேவையா என்று கூட  நினைத்தேன்.
முதல் நாள் விழாவில் பல அறிஞர்கள் தமிழில் உரையாற்ற, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று  இருந்தது. அப்போது ஒரு வெள்ளைக்காரனை மேலே அழைத்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலிருந்து வந்திருக்கிறார் என்று அறிமுகம் செய்து வைத்தனர்.
'எல்லோருக்கும் வணக்கம்' என்று அவர் ஆரம்பித்த போது அரங்கம் கைதட்டலால் நிறைந்தது. எனக்கு அது ஆச்சரியத்தை அளிக்காதலால் வாளாயிருந்தேன். ஆனால் அடுத்து அவர், "என்னடாது ஒரு வெள்ளைக்காரன் தமிழ்ல பேசறான்னு ஆச்சரியமா இருக்கா ?" என்று கேட்ட போது அரங்கம் அதிர்ந்தது. இந்த முறை அது என்னையும் ஆச்சர்யப்படுத்த நானும் சேர்ந்து கைதட்டினேன்.  அதற்கப்புறம் அவர் பேசிய தங்கு தடையற்ற தமிழ் தொடர்ந்து கைதட்டலை அள்ளியது.
அவர் பெயர் ஜோனத்தன் ரிப்ளி ( Jonathon Ripley ). சில வருடங்களுக்கு முன்னால் மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு வந்த இவர், இரண்டு வருடங்கள் அங்கே தங்கியிருந்தாராம்.
நான் படித்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வெள்ளைக்காரர்களைப் பார்ப்பது ஒரு அதிசயம் அல்ல. ஆங்கில இலக்கியம், இயற்பியல், விலங்கியல் ஆகிய துறைகளின் தலைவர்கள் வெள்ளைக்காரர்கள்தாம். அதுதவிர வகுப்பறைகளிலும் வெளிநாட்டுக்காரர்களைப் பார்க்கலாம். அதோடு ஓபர்லின் ரெப் என்று ஓரிருவர் வந்து குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் தங்கிப் படித்துச் செல்வர். அப்படி இயற்பியல் துறைத்தலைவர் ரீஸ் என்பவரின் பரிந்துரையில், மதுரையில் உள்ள ஊனமுற்றவர்களுக்கு ஆங்கிலத்தைக்  கற்றுக் கொடுத்து வந்தவர்தான் ஜோனத்தன் ரிப்ளி. ஆங்கிலம் கற்றுக் கொண்டாரோ இல்லையோ நன்றாக தமிழ் பேசக் கற்றுக் கொண்டார். 

அவருடைய பேச்சைக் கீழே கொடுத்திருக்கிறேன் கேளுங்கள். எப்படி எனக்கு தமிழில் ஆர்வம் வந்தது என்று கேட்டபோது உள்ளூர் நண்பரின் தாயார் சொன்னாராம், "போன பிறவியில் நீ மதுரையில் பிறந்திருப்ப" என்று. இவர் உண்மையிலேயே தமிழில் பேசுகிறாரா இல்லை ஆங்கிலத்தில் தமிழை அப்படியே எழுதி பேசுகிறாரா என்று நண்பர் ஆரூர் பாஸ்கரிடம் கேட்டபோது, அவர் போய் பார்த்துவிட்டு வந்து சொன்னார். இல்லை அவர் கையில் இருக்கும் ஸ்கிரிப்ட் தமிழில் டைப் செய்யப்பட்டுள்ளது என்று.


ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் “Preceptor” ஆக வேலை பார்க்கும்  ஜோனத்தன் தமிழிருக்கையின் அவசியம்பற்றிச் சொன்னார்.


Harvard University
            தமிழ் மொழியின் சிறப்பையும், தொன்மையையும், இலக்கியங்களையும் உலக மாணவர்கள் அறிந்து கொள்ள  இருக்கை அமைக்கலாம் என்பதை ஹார்வர்டு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஹார்வர்டின் தெற்காசிய ஆய்வுத்துறையின் கீழ் சங்கத்தமிழ் இருக்கை அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  இலக்கியம் என்பது மக்களின் கலை மற்றும் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் மொழியின் மூலம் காட்ட வல்லது. தமிழ்க் கல்விக்காக போலந்து, செக், ஸ்வீடன், பின்லாந்து, ஹாலந்து போன்ற நாடுகளில் தமிழ் இருக்கைகள்  இருக்கின்றன. ஆனால் 1636 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட ஹார்வர்ட் பல்­க­லைக்­க­ழ­க­மா­னது உலகத் தர­வ­ரி­சையில் முத­லி­டத்தில் உள்­ளது. எனவே இங்கு தமிழ் இருக்கை ( Tamil Chair) அமைவது தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை தரும்.

தமிழ் இருக்கையின் தேவை:
1.   தமிழ்மொழி என்பது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கிய எழுத்து மொழி.
2.    உலகில், கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரூ, பெர்சியன், சீனம் ஆகிய செம்மொழிகளுடன் (Classical Language) சற்றும் குறையாது  அந்தஸ்து பெற்ற உலகின் ஏழு செம்மொழிகளில் ஒன்று தமிழ் மொழி  .
3.   இவற்றுள் பேச்சு வழக்கில், பலமொழிகள் அழிந்து போனாலும், இன்னும் சீரிளமை திறம் வியக்கும் வகையில், இன்றும் பலர் பேசும் மொழி தமிழ்மொழியாகும்.
4.   தற்சமயம் தமிழ்மொழி உலகமெங்கும் பேசப்படும் மொழிகளில், 80 மில்லியன் மக்களால் பேசப்பட்டு 20-ஆம் இடத்தில் இருக்கிறது.
5.   ஆனால் தமிழ்மொழி இன்னும் உயர்ந்த இடத்தில் உலகத்தோர் ஆராய்ச்சி செய்து புதிய பரிணாமங்களை வெளிப்படுத்தத் தகுந்த மொழியாகும்.
6.   ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைவதின் மூலம் உலக மாணவர்கள் தமிழையும் தமிழ்க்கலாச்சாரத்தையும் அறிந்து கொள்வதன் மூலம் தமிழ்மொழியை ஆராய்ச்சி மூலம் இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.
7.  அதோடு இங்கே இருக்கை அமைவது தமிழுக்கும் தமிழருக்கும் நிரந்தரமான பெருமையளிக்கும் செயலாகும்.

எவ்வளவு தேவை?
Dr. Vijay Janakiraman
ஹார்வர்டில் தற்சமயம் பெங்காலி, இந்தி, சமஸ்கிருதம்மற்றும் தமிழ் ஆகிய இந்திய மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இருக்கை அமைத்து தமிழ்மொழி ஆராய்ச்சியைத் தூண்டுவது நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். இதை முன்னெடுத்துச் செய்பவர்கள் Dr. சுந்தரேசன் சம்பந்தம் (திருவாரூர்) மற்றும் Dr.விஜய் ஜானகிராமன் (தஞ்சாவூர்). இவர்கள் ஏற்கனவே ஹார்வர்டு சென்று தமிழ் இருக்கை அமைப்பதற்கு அனுமதியும் பெற்றுவிட்டார்கள். 
sundaresan
Dr.Sundaresan Sampantham 
தன்னார்வ நிறுவனத்தைத் துவங்கி நன்கொடைகளைப் பெற்று வருகிறார்கள்.  இந்த நிரந்தர தமிழ் இருக்கையை அமைக்க 6 மில்லியன் டாலர்கள் செலுத்தப்பட வேண்டும். ஆறு மில்லியன் என்பது அறுபது லட்சம் டாலர்கள்.  ஒரு லட்சம் டாலர்கள் என்பது நம் இந்திய மதிப்பில் 70 லட்சம் ரூபாய் என்றால் நீங்கள் கணக்குப் பண்ணிக்கொள்ளுங்கள். இந்த இரு டாக்டர்களும் தங்கள் சார்பாக தலைக்கு ஐந்து லட்சம் டாலர்கள் நன்கொடையின் மூலம் 1 மில்லியன் டாலரை கொடுத்துள்ளார்கள். இது வரை இவர்கள் அளித்த நன்கொடையையும் சேர்த்து சுமார் 2 மில்லியன் சேர்ந்துள்ளது. தேர்தலுக்கு முன்னால் அம்மாவிடம் இந்த டாக்டர்கள் சென்றதில் அம்மா உதவி செய்வதாக உறுதி கூறி , தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளிலும் இதனை ஒன்றாக இணைத்தார்கள். இப்போது வெற்றி பெற்று விட்டதால் ஏதேனும் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது .பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
Ranga, me and Dr.Bala 

இதனைக் கேள்விப்பட்ட நண்பர் பாலா, உடனே தன்னுடைய சொந்த பணத்தில் 50,000 டாலர்களை நன்கொடையாக அளித்தார். அதுமட்டுமல்ல அதைப் பற்றி அறிவிக்கவும் வேண்டாம் என்று சொல்லியுள்ளார். ஆனாலும் மற்றவர்களை ஊக்குவிக்கும்பொருட்டு, அது மேடையில் அறிவிக்கப்பட்டது. அவரை மேடையில் பலமுறை அழைத்தும் அவர் மேடைக்கு வரவில்லை. அதீத தமிழ் ஆர்வம் கொண்ட பாலா சுவாமிநாதன் நியூயார்க் லாங் ஐலன்டில், தன்னார்வ நண்பர்களைக் கொண்டு தமிழ்ப்பள்ளி ஒன்றை நடத்திவருவது குறித்து ஏற்கனவே சொல்லியுள்ளேன். அதனைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2016/04/blog-post_21.html 
இது எவ்வளவு பெரிய தொகை என்பது அமெரிக்காவில் வாழும் எங்களுக்குத்தான் தெரியும் .மாதச் சம்பளம் வாங்கும் ஒருவர் இவ்வளவு பெரிய தொகையை ஒரே செக்கில் நன்கொடையாக கொடுப்பது மிகப்பெரிய விஷயம். இதைச் சேர்ப்பதற்கு எவ்வளவு காலம் ஆகியிருக்கும் என்பதை நினைத்தால், பாலா அவர்கள் தன்னுடைய எதிர்காலத்தை விட , தன் குடும்பத்தின் எதிர்காலத்தை விட ,தன் தாய் மொழியாம் தமிழ் மொழியின் எதிர்காலத்தைத்தான் பெரிதாக நினைக்கிறார்  என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.பாலா நீர் கடையெழு வள்ளல்களை மிஞ்சிவிட்டாய் .உன்னால் தமிழ் வாழும் ,தமிழால் நீயும் வாழ்வாய் , வாழ்த்துக்கள் .
Dr Bala in  Fetna

  தமிழ் இருக்கைக்கு நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் www.harvardtamilchair.com என்ற தளத்தின் மூலம் அளிக்கலாம். இதற்கு வரிவிலக்கு உண்டு.

 ஃபெட்னா பதிவுகள் தொடரும்



Monday, July 18, 2016

கைக்கெட்டியது வாய்க்கு எட்டலை !!!!!!!!

சீனாவில் பரதேசி -16

Beijing Metro Type SFM04.JPG
Beijing Subway 
நான் ஏதோ ரெண்டு கைடுகளும் சண்டை போடுறாங்கன்னுல்ல நெனச்சேன். இந்த சீனர்கள் அன்பாகப் பேசுவது கூட சண்டை போடற மாதிரிதான் இருக்கு.
“உன்னோட மகளா, அடடே அவளையும் நம்முடன் வரச்சொல்லிஇருக்கலாமே".
“நம்மோடு வந்தால் அவளுக்கு பணம் யார் தருவது”
“அடப்போய்யா பணம்தானா பெரிசு, ஏன் நான் தரமாட்டேனா? (ஆஹா என்னே உன் தாராள மனசு ?)ஆமா அவளும் உன்னை மாதிரியே ஃபுல்டைமா ?”
  “இல்லை இல்லை, அவ யுனிவர்சிட்டில படிக்கிறா. பார்ட்டைமா வர்றா. இன்னிக்கு சனிக்கிழமை இல்லையா அதான் வந்தா. இது குளிர் காலம்கிறதால டூரிஸ்ட் அவ்வளவா கிடையாது”.  
“சரி விடு சப்வேயைப் பத்திச் சொல்லு இவ்வளவு புதுசா இருக்கே ?. சமீபத்துலதான் திறந்தாங்களா?”
Passengers waiting
“பீஜிங் நகரை முழுதாக இணைக்கும் இந்த மெட்ரோவை ஐம்பதுகளிலேயே கட்டி முடிச்சிட்டாங்க. ஆனா 60களிலே தான் பொதுமக்களுக்குத் திறந்து விட்டாங்க”.
“அது ஏன் அப்படி?”
“கட்டி முடிச்சிட்டு இதனை முழுவதும் ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கும், வீரர்களை ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு ரகசியமாக இடம்பெயரவும் மட்டுந்தான் பயன்படுத்தினாங்க. 1969 இதனை மக்களுக்காக திறந்துவிடும்போது எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம், ஏன்னா இதை எப்படிக் கட்டினாங்க எப்ப கட்டினாங்கன்னு யாருக்குமே தெரியாது”.
 “ராணுவ ரகசியமல்லவா? கம்யூனிஸ்ட் நாட்டில இதெல்லாம் சகஜமப்பா. எவ்வளவு பெரிசு இது ?”
"மொத்தம் 18 லைன் , 334 ஸ்டேஷன் , 554 கிலோ மீட்டரை கவர் செய்கிறது . பீக் சமயத்தில் ஒரே தடவையில் 12 மில்லியன் மக்கள் பயணம் செய்கிறார்கள்"
Add caption
“ஐயோ  அப்ப இது நியூயார்க்கைவிட பெரிசு .அப்ப இதுதான் உலகத்திலேயே பெரியதா “?
“இல்லை, உலகத்தின் முதல் பெரிய சப்வே ஷாங்காயில் உள்ளது”
“அதுவும் சீனாதானே , சீனா ரொம்பதான் முன்னேறி விட்டது .எங்க  சென்னையில் இப்பதான் குழி தோண்டிக்கிட்டு   இருக்காங்க”
மெட்ரோ மிக அழகாகவும் புதிதாகவும் இருந்தது. ஒவ்வொரு இடத்திற்கும் சீனமொழி மட்டுமல்லாது ஆங்கில மொழியிலும் அறிவிப்புச் செய்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. டிவி போன்ற ஒன்றில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. வெளியே இருப்பதைவிட உள்ளே பொல்யூசன் இல்லாம இருந்துச்சு. கூட்டம்தான்  மூச்சு முட்டியது ஒரு நாலஞ்சு ஸ்டாப் தாண்டியதும் ஒரு சீட் காலியாக, லீ அதனை லபக்கென்று அபகரித்து உட்கார்ந்தான். அதே இடத்திற்கு முயற்சி செய்த மற்ற நால்வர் ஏமாந்து போயினர். இருந்தாலும் எனக்குத்தராமல் எப்படி லீ உட்காரலாம் என்று கடுப்புடன் நின்றுகொண்டிருக்கும் போது, லீ என்னை கையை ஆட்டி அழைத்து, “நான் எழுந்ததும் டக்கென்று உட்கார்ந்து கொள்”, என்று சொல்லிவிட்டு இடிபோல் எழுந்து மேலுள்ள கம்பியில் இடித்துக் கொண்டு எழ, நான் மின்னல்போல் கீழுள்ள கம்பியில் இடித்துக்கொண்டு உட்கார்ந்தேன். அவுச் .

Peak time
    
அடடா இந்த கம்யூனிஸ்ட் நாட்டில் உட்கார இடம்பிடிப்பதற்கு இவ்வளவு சிரமமா. பாவம் லீ எனக்காகத்தான் இடம் பிடிக்கிறான்னு தெரியாம நான் தப்பா நினைச்சுட்டேன். லீ பரிதாபமாக தலையைத் தடவிக் கொண்டு நின்று கொண்டிருந்தான். நான் பின்னால் தடவிக்கொண்டு உட்கார்ந்தும் உட்காராமலும்   இருந்தேன். அடுத்த ஸ்டாப்பில்  கிட்டத்தட்ட எல்லோரும் இறங்கிவிட, நானும் அதுதான் கடைசி ஸ்டாப் என நினைத்து எழுந்தேன். லீ கையை அமர்த்தி உட்காரச் சொல்லிவிட்டு பக்கத்தில் உட்கார்ந்தான்.
"அடுத்த ஸ்டாப்பில் இடம் கிடைக்கும்னு தெரியாம இப்படி அடிதடி ஆயிப்போச்சே".
“எனக்கும் தெரியாமப் போச்சு, இங்க ஒரு ஷோ நடக்குது. அதுக்குத்தான் எல்லாரும் போறாங்க போல”.
“என்ன ஷோ ?”
“பீஜிங்கில் காணத் தவறக்கூடாத, சீன அக்ரோபேட்டிக் ஷோ”.
“அப்படியா அது இங்கதானோ, என்னுடைய ஹோட்டலில் ஜோகானா சொன்னாள். நான் அதுக்குப் போகனுமே”.
“சம்மர் பேலஸ் பாத்துட்டு நேரம் இருந்தா நானே கூட்டிட்டுப்போறேன். அதோடு லைசென்ஸ் உள்ள கைடுக்கு கட்டணம் குறைவுதான்”.
“சரி லீ எப்படியாவது அதையும் பார்த்துவிடலாம்”.
மொத்தம் சுமார் 40 நிமிடங்கள் கழிந்து வந்த ஸ்டாப்பில் இறங்கினோம். மணி 2 ஆகிவிட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது ,உடலைத்தள்ளியது.
“லீ உடனே சாப்பிட வேண்டும் இல்லேன்னா ஒரு அடி கூட நடக்க முடியாது”.
“கவலைப்படாதே பக்கத்தில் எனக்குத் தெரிந்த ஒரு இடம் இருக்கிறது”, என்று வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
அவன் பின்னால் ஓடி ஓடிக்களைத்து எனக்கு வேர்த்து விறுவிறுத்து மயக்கமே வந்துவிடும்போல இருந்தது.
20 நிமிடங்கள் துரித நடை, இல்லை இல்லை ஓட்டத்திற்குப் பிறகு ஒரு சிறிய வீட்டில் நுழைந்தான்.
“லீ சீக்கிரம் ரெஸ்டாரண்டுக்குப் போகலாம், சொந்தக்காரர்களைப் பார்க்க இது சமயமில்லை”.
அவன் அந்த வீட்டுக்குள் நுழைய, அது வீடு இல்லை, சாப்பிடுமிடம் என்று அப்போது தான் தெரிந்தது. வீடே கடையாகவும் அல்லது கடையே வீடாகவும் இரண்டும் கலந்த கலவை அது .
அதில் ரெண்டே ரெண்டு டேபிளும், நாலு சிறிய ஸ்டூல்களும் மட்டுமே இருந்தன. அதில் ஒரு டேபிளில் ஒரு அம்மா ஏதோ ஒரு மாவைப் பிசைந்து கொண்டு இருக்க, மேசையிலும் ,தரை முழுதும் மாவு சிந்தியிருந்தது.
லீ மேசையிலோ ஸ்டூலிலோ இருந்த மாவுத்தூசியை பொருட்படுத்தாமல் சபக்கென்று உட்கார்ந்தான்.நான் நின்று கொண்டேயிருக்க ,லீ  அவன் மூஞ்சியில் பாதியும் என் மேல் பாதியும் படியும்விதத்தில் தூசியை   ஊதினான் .ஜாக்கி சானின் ஏதோ ஒரு படத்தில் பார்த்த ஒரு சீன் நியாபகம் வந்தது.ன் விதியை நொந்து கொண்டே உட்கார்ந்தேன் .

“என்ன லீ வேறு இடமே கிடைக்கலியா?”
“இது எனக்கு ரொம்ப தெரிஞ்ச இடம்”
“அதுக்காக? நான் இன்னும் பல நாடுகள் போக வேண்டியிருக்குது. இங்கே ஒண்ணும் சுகாதாரமாத் தெரியலயே”.
“இல்லை இல்லை சாப்பிட்டுப் பார் தெரியும்”
“சரி எனக்கு ஏதாவது வெஜிடேரியன் சொல்லு, நீ உனக்கு எதுவேனாலும் வாங்கிக்கொள்”.
அவன் ஒரு விசிலடிக்க, உள்ளிருந்து ஒரு இளம் பெண் வந்தாள். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது . இருவரும் சிறிதுநேரம் ஹைய் பிட்ச்சில் சண்டை போட்டார்கள்.   அதாங்க பேசினாங்க.

Lo mein 
சிறிது நேரத்தில் 2 பெரிய சைனாக் களிமண் பாத்திரத்தில் சூப் போன்ற ஒன்றில் போட்டிருந்த லோமெய்ன் அதாவது பெரியவகை நூடுல்ஸ் ஆவி பறக்க வந்தது. உள்ளே  ஒரு தொட்டி சைஸில் இருந்த பெரிய கிண்ணத்தில் தவறிவிழுந்திருவோமா என்று பயந்தேன்.
கூட ரெண்டு குச்சி, அதான் பாஸ் ,சாப்ஸ்டிக்ஸ் கொடுத்தார்கள். நான் அந்தக் குச்சிகளை வைத்து கிண்டிக் கொண்டிருக்க, லீ நாலுவாயில் பாதிக் கிண்ணத்தை காலி பண்ணிவிட்டான்.
'கைக் கெட்டியும் வாய்க்கு எட்டலைன்னு' ஒரு பழ மொழிக்கு அன்னைக்குத்தான் சரியான அர்த்தம் விளங்குச்சு.

- தொடரும்.