Monday, March 31, 2014

சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அடியேன் பேசிய உரை !!!!!!!!! .


தற்சமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும், பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நியூஜெர்சி  தமிழ்ச்சங்கம் நடத்திய கல்யாணமாலை பட்டிமன்றத்தில் அடியேன் கலந்து கொண்டு “குடும்ப வாழ்வு  சுவைப்பது அமெரிக்காவில்தான்”, என்ற தலைப்பில் பேசிய முழு உரையை இங்கு தருகிறேன் .

குடும்ப வாழ்வு  சுவைப்பது அமெரிக்காவில்தான் !!!!!!!!!!!

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
           பட்டிமன்றத்தமிழும் பாப்பையா பழக்கம்
           வாங்க பழகலாம் - தமிழ் பேசி.

கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்
கவிபாடும் - இது பழமொழி.
           புதுமொழி
பாப்பையா வீட்டுப் பசுமாடும்
பட்டிமன்றம் பேசும்.

1981-ல் நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது தமிழ்த்துறைத்தலைவராக இருந்த ஐயா அவர்கள் அன்று எப்படி இருந்தார்களோ, 30 வருடங்களுக்குப்பின்னும் அப்படியே இருக்கிறார்.  கன்னித்தமிழ் பேசும் கதாநாயகன் அல்லவா. அதனால்தான் அப்படியே இளமை குன்றாமல் இருக்கிறார்.ஐயா வணக்கம்.
சின்னத்திரையில் சிலிர்த்தவர் இப்போது வெள்ளித்திரையிலும் ஜொலிக்கிறார். எங்கள் ராஜா.
-எங்கள் குழுவுக்கு இன்று ராஜாவாக வந்திருக்கிறார், நன்றி.
-நான் உங்கள் மந்திரியாக வந்திருக்கிறேன்.
-குடும்ப வாழ்வு சுவைப்பது அமெரிக்காவில்தான் என்று கலக்க வந்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு நன்றியோடு Green Card Application வாங்கி வந்திருக்கிறேன்.  வணக்கம்.

அன்றொரு நாள் முண்டாசு கட்டிவந்தான் பாரதி. இன்று சேலைகட்டி வந்திருக்கிறது  பாரதி கண்ட புதுமைப்பெண். எங்கள் கண்கண்ட பட்டாசுப் பேச்சாளர் பாரதி பாஸ்கர். அவர்களுக்கும் அவர்கள் குழுவுக்கும் வணக்கம்.ஐயா எதிர்க்கட்சியை மதிக்கும் கட்சி எங்கள் கட்சி.

பூலோக சொர்க்கமான 2 லட்சம் திருமணங்களை எட்டும் கல்யாண மாலையின் பிதாமகர் புன்னகை மன்னன் மோகன் அவர்களே, மீரா நாகராஜன் அவர்களே, நியுஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் கவிதா, உஷா, அமுதா, அவர்களே அவையோரே பெரியோரே அனைவருக்கும் என் தாழ்மையான வணக்கம்.

பேசி அமர்ந்திருக்கும் திரு.வரதராஜன் என்னுடைய நண்பர்.அம்மா கட்சிக்கு போனால் டாடா sumo கிடைக்கும் என்று நம்பி   போய் விட்டார் போல இருக்கிறது. நான் அம்மா என்று சொன்னது  பாரதி பாஸ்கர் அவர்களை. நண்பர் வரதராஜன் இந்தியாவிற்கு வராத ராஜன்.பதிநான்கு வருடங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார். 14 வருடங்கள் இங்கு வாழ்வதை ஏதோ வனவாசம் வந்ததுபோல் செல்கிறார். அது வனவாசமல்ல முற்றிலும் டாலர் பணவாசம் என்பது எனக்குத்தெரியும், அவருக்கும் தெரியும். ஆனால் மறைத்துப் பேசுகிறார்.

அவருடைய மனைவி இங்கு இருக்கிறார்கள், வந்திருக்கிறார்கள். மகன், மருமகன் என்று முழுக்குடும்பமும் இங்கே இருக்கிறது. மொத்தக்குடும்பமும் இங்கே இருக்கும்போது, குடும்ப வாழ்வு சுவைப்பது இந்தியாவில் என்கிறார். இவர் எந்தக்குடும்பத்தைப் பற்றி சொல்கிறார் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது  ஐயா.

ஐயா, ஆண்களில் 2 வகை - மனைவிக்கு அடிமை ஒரு வகை, மனைவியை அடிமைமைப்படுத்துவர் இன்னொரு வகை.  நான் இதில் இரண்டாவது வகை. ஐயா, எனக்குத்திருமணமாகி முதல் பத்து வருடங்கள் இந்தியாவில்தான் இருந்தோம். அங்கே இருந்தபோது என்னைப்பற்றி முழுதும் அவளுக்குத்தெரியும். எனக்கு என்ன பிடிக்கும், எதை விரும்பிச்சாப்பிடுவேன்,எது பிடிக்காது, எதற்கு கோபம் வரும் என்று அனைத்தும் தெரியும். ஆனால் எனக்கு அவளைப்பற்றி எதுவுமே தெரியாது. தெரிந்து கொள்வதிலும் ஆர்வமில்லை. அப்போது ஆணாதிக்க சமுதாயத்தின்  மொத்த பிரதிநிதியாய் இருந்தேன்   ஐயா.

ஒரு நாள் என் மூத்த மகளை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் போது, கால்கள் வீங்கி கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். பாசமாக நான் வளர்த்ததால், மோசமாக வளர்ந்துவிட்டாள் போலிருக்கிறது. தான் குடித்துக்கொண்டிருந்த காஃபியில் சர்க்கரை பற்றவில்லை என்று என்னிடம் கெஞ்சினாள்.நானும் போனால்போகிறது, என்று வேண்டாவெறுப்புடன், அம்மாவுக்குத் தெரியாமல் சமையலறைக்கு சென்றேன். தலையே சுற்றிவிட்டது. எது எந்த இடத்தில் இருக்கிறது என்று மட்டுமல்ல, எது எந்தப் பொருளென்றும் தெரியவில்லை.


  ஒரு வழியாக தேடிக்கண்டுபிடித்து போட்டு எடுத்து கொண்டு வந்து கொடுத்தேன். வாயில் வைத்ததும் வாந்தி எடுத்துவிட்டாள். நான் மசக்கை வாந்தி என்று நினைத்தேன். 

அடுத்த கடைசி பகுதி வரும் திங்கள்கிழமை வெளி வரும்

Thursday, March 27, 2014

நாக் அவுட் கேமும் கறுப்பசாமிகளும் !!!!!!!!!




போன சம்மர்லதான் இந்த விளையாட்டு பிரபலமாச்சு. இப்போ நேத்து, திரும்ப ஒரு சம்பவம் நடந்துபோச்சு. இப்ப விண்ட்டர் கிட்டத்தட்ட முடிஞ்சதால, இந்த விளையாட்டு திரும்ப ஆரம்பிக்கும்போல இருக்கு. ஆட்டைக்கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில மனுஷனைக் கடிச்ச கதை தெரியுமா, அதே கதைதான் இந்த நாக் அவுட் கேம்.
Victim of Knock out Game
நியூயார்க் நகரம் அஞ்சு பகுதியாக பிரிக்கப்பட்டிருக்கு. அதை போரோ (Borough) என்று சொல்வாங்க. மேன்ஹாட்டன், புரூக்ளின், பிராங்க்ஸ், குயின்ஸ் & ஸ்டேட்டன் ஐலண்டு ஆகிய அஞ்சுதான் அது. இதுல புரூக்ளின் & பிராங்க்ஸில நம்ம முன்னோடிங்க அதாங்க ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பசாமி சகோதரர்கள் அதிகம். இதுல ஒரு கஷ்டம் என்னன்னா நாம அவுகளை சகோதரரா நெனைச்சாலும், அவுங்க நம்மளை அப்படி நினைக்கிறதில்ல.

புரூக்ளினில் தான் (Brooklyn) இந்த விளையாட்டு பிரபலமாச்சு. கேம்பாய், X Box,வீடியோ கேம்ஸ், செல்போன் கேம்ஸ்னு ஆடி போர் அடிச்சுப்போன நம்ம  கறுப்பின பதின் பருவத்தினர் கண்டுபிடிச்ச கேம்தான் "நாக் அவுட்".


இந்த விளையாட்டோட ரூல்ஸ் ரொம்ப சிம்ப்பிள். ரெண்டு யூத் பந்தயம் கட்டுவாய்ங்க. பார்க்குற முத ஆள அக்கம்பக்கம் யாரும் இல்லன்னா ஒரு கும்மாங்குத்து.. குத்திது யூத்னாலும், குறைஞ்சது இரண்டு டூத்  போயிரும். ஒரே குத்துதான். ஒரே பஞ்ச்சில் எதிர் ஆள் விழுந்துரனும். அப்படி விழுந்தா குத்துனவன் ஜெயிச்சிட்டான்.  என்னத்த சொல்ல, ஒரே குத்துல வீழ்த்துறதால இதுக்குப்பேர் "நாக் அவுட்" (Knock out).
இப்ப விளங்கிருச்சா புரூக்ளின்லயும், பிராங்க்ஸ்லயும் நிறைய சம்பவம் நடந்து போச்சு. அப்படியே இது நாடு பூரா பரவி நிறையப்பேர் செத்தும் போயிட்டாங்க.

அதனால நான் இந்த கறுப்புசாமி விளையாட்டு வீரர்களுக்கான ஒரு பொதுவான வேண்டுகோள் விடுக்கிறேன்.

நான் உங்க பக்கமே வரமாட்டேன். தலை வச்சு கூட படுக்க மாட்டேன். அப்படி தப்பித் தவறி வந்துட்டா, இந்தப் போட்டில என்ன பந்தயம் கட்டினீங்களோ, அத ரெண்டு மடங்கா கொடுத்துர்றேன். என்னை விட்டுறுங்க சாமி. பொக்கை வாயில நான் பட்டிமன்றம் பேசமுடியாது. அதோட எனக்கெல்லாம் பெரிய பஞ்ச் தேவையில்ல. ஒத்த விரல் ஆமா ஒத்த விரல் போதும், ஒனக்கு நாக் அவுட், எனக்கு நாக்கு அவுட் ஆயிரும். கொலைப்பழி ஆயிரும் சாமி, என்னைவிட்டுறு.


ஐயா கறுப்பசாமிகளா, உங்க அளவு கறுப்பில்லாட்டியும், நானும் கருப்புதான். (எங்கம்மா மட்டும்தான் அத ஒத்துக்கிரதில்ல)உங்கூர் டிஎன்ஏ உசிலம்பட்டியிலே இருக்கிற டிஎன் வோட ஒத்துப் போகுதுன்னு கண்டுபிடிச்சிருக்காய்ங்க. எங்கூர் தேவதானப்பட்டி அதுக்குப் பக்கத்து ஊர்தான். நீ என் இனமடா தயவு செய்து என்னை விட்டுவிடுடா.  உனக்கு கிடா வெட்டி பொங்கல் போடுறேன் .

Monday, March 24, 2014

சிவகங்கை பயணம் பகுதி 3: சிவாலயமும் தேவாலயமும்!!!!!!


சிவகங்கைக்கு கிழக்கே சுமார் 16 கி,மீ தொலைவில் உள்ளது காளையார்
 கோவில். பாடல் பெற்ற தலமாகிய இந்தக் கோவிலின் மூலவர் பெயர் காளீஸ்வரர். 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், இவரை "காளை" என்று குறிப்பிட்டதால், இவர் காளையார் என்று அழைக்கப்பட, இந்தக் கோவில் "காளையார் கோவில்" என்று வழங்கப்படுகிறது.

முன்னால், கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் கொண்டது. கலை அழகுடன் மிக அழகாக இருந்தது. நடுவில் மண்டபம் கொண்ட ஒரு அழகான தெப்பக்குளம் இருக்கிறது. இதன் பெயர் "ஆனைமடு" என்பது. இந்திரனின் வெள்ளை யானையாகிய "ஐராவதம்" வந்து இந்தத் தெப்பக்குளத்தை உருவாக்கியது என்ற ஐதீகத்தால் இந்தப்பெயர். 

இங்குள்ள மூன்று சந்நிதிகள்  இறைவனின் காத்தல், பாதுகாத்தல் மற்றும் முடித்தல் என்ற மூன்று செயல்களைக்குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. எனவே மூலவருக்கு காளீஸ்வரர், சோமேஸ்வரர் மற்றும் சுந்தரேஸ்வரர் என்ற மூன்று பெயர்களும் சக்திக்கு ஸ்வர்ணாம்பிகை, செளந்தர நாயகி மற்றும் மீனாட்சி என்ற மூன்று பெயர்களும் வழங்கப்படுகின்றன.

தமிழ் நாட்டுக் கோவில் அமைப்பும் கோபுர அமைப்பும் உலகில் எங்கும் காண முடியாது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த இடம் ஒரு முக்கிய கோட்டையாகும். ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு இங்குதான் ராஜா முத்து வடுக நாதத் தேவர் உயிரிழந்தார். அதன்பின் மருதுபாண்டியர், ராணி வேலு நாச்சியாருடன்  தப்பி ஓட, ஆங்கிலேயப் படைகள் இந்தக் கோவிலைக் கொள்ளையிட்டு 5000 பகோடாக்கள் (தங்கக்காசுகள் )மதிப்புள்ள கோவில் நகைகளைக் கவர்ந்து கொண்டனர். எனவே இந்தக் கோவில் சிலகாலம் மூடப்பட்டுக் கிடந்தது.

இது, பின்னர் தேவகோட்டை ஜமீன்தார் அவர்களால் பெரும் செலவில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அப்போதிருந்த தேவகோட்டை ஜமீந்தார் AL.AR.RM அருணாச்சலம் செட்டியார் சந்நியாசம் வாங்கி காளையார்கோவில் வேதாந்த மடத்திலேயே தங்கிவிட்டார். பின்னர் அவர் "ஸ்ரீலஸ்ரீ ஜமின்தார் அருணாச்சல ஞான தேசிக ஸ்வாமிகள்" என்றழைக்கப்பட்டார். அவருடைய சமாதி அந்த மண்டபத்தின் முன்  இருக்கிறது. ஸ்ரீ என்றால் திருமிகு என்று அர்த்தம் ஸ்ரீலஸ்ரீ என்றால் ஆயிரம் திருவுக்குச்சமானம்.

இது சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்தாயினும் அவர்களுடைய அனுமதியின்படி, “தேவகோட்டை ஜமீந்தார் கட்டளை" என்று ஆரம்பிக்கப்பட்டு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதனை பரம்பரை பரம்பரையாக தேவகோட்டை ஜமீந்தார்கள் நடத்தி வருகின்றனர். தற்போதைய ஜமீந்தார் AL.AR.RM சின்னவீரப்பன் செட்டியார் இந்தக் கட்டளையை கவனித்துவருகிறார்.

இந்தக் கோவிலில் தைப்பூச விழாவில் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் விசேஷமானதென்று சொன்னார்கள். ரதத்தையும் பார்த்தபோதுதான், பள்ளியில் "காளையார் கோவில் ரதம்" என்ற கோவிமணி சேகரன் எழுதிய சிறுகதையைப் படித்தது எனக்கு ஞாபகம்  வந்தது. வைகாசியில் நடக்கும் தெப்பத் திருவிழாவும் புகழ் பெற்றது. காரைக்குடியில் கோவில் பார்க்காத குறையும் நீங்கியது.

வனராஜூக்கு நன்றி சொல்லி, கோவிலின் முன் விற்ற இளநீரை சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம். "என்ன வனா, மதுரைக்குத் திரும்புகிறோமா", என்று கேட்டேன். "போகும் வழியில் இன்னுமொரு இடம் இருக்கிறது. அதனைப் பார்த்துவிடலாம் என்றார். அது எந்த இடம் என்று கேட்டபோது, 19ஆவது நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட பேராலயம் இருக்கும் "இடைக்காட்டூர்" என்றார். வேண்டாம் என்றா சொல்லப்போகிறேன்.

காரை நிறுத்திவிட்டு, சிறிது தூரம் நடந்தால், வருகிறது இடைக்காட்டூர் "புனித இருதய நாதர் ஆலயம்". உலகமெங்கிலும் பல கத்தோலிக்க ஆலயங்களைப் பார்த்திருந்தாலும், இந்த கத்தீட்ரல் மிக வித்தியாசமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருந்தது. இது பிரெஞ்சு தேசத்திலிருந்து வந்த பாதிரியார் ஃபெர்டினாண்ட் செலி S.J.(Father Ferdinand Celle.S.J) அவர்களால் 1894-ல் கட்டப்பட்டது. இது காதிக் (Gothic) கட்டடக்கலையில் கட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டிலுள்ள ரெய்ம்ஸ் பேராலயத்தின் (Reims Cathedral) அதே வடிவத்தில் கட்டப்பட்டதாகும். இது தேவதைகளால் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பாதிரியார் 153 ஏஞ்சல் வடிவங்களை இங்கு அமைத்திருக்கிறாராம்.

இதில் 200 வகையான செங்கல்கள், ஓடுகள், டைல்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ஸ்டெயின் கிளாஸ் என்று சொல்லப்படுகிற வண்ணக்கண்ணாடிகளால் அமைந்த பெரும் ஜன்னல்களும், அவற்றில் வரையப்பட்டிருந்த வெவ்வேறு பைபிள் நிகழ்வுகளும் பிரமிப்பை ஊட்டின. முக்கியமாக அதன் கண்கவர் வண்ணங்கள், சூரிய  ஒளியில் தகதகத்தன. உள்ளே ஸ்டக்கோ (stucco) வால் செய்யப்பட்ட புனிதர்கள் மற்றும் ஏஞ்சல்கள் வண்ணமயமாக இருந்தன. குறிப்பாக இயேசு நாதரின் புனித இருதயத்தை சூழ்ந்திருக்கும் அவரின் தந்தை ஜோசப், தாய் மரியாள் சூழ்ந்த இந்தப் புனித குடும்பத்தின் உருவங்கள் தங்க நிற கில்ட்டால் வண்னம் தீட்டப்பட்டு, ஃபிரென்ச் நாட்டின் கலை நுணுக்கத்திற்கு சாட்சி பகர்ந்தன.

ராமநாதபுர வரலாற்றில் இந்த ஆலயம் முக்கிய பங்கு வகிக்கிறது. கிழவன் சேதுபதியின் மருமகனான, நமக்கு ஏற்கனவே அறிமுகமான கட்டையத்தேவனை, பாதிரியார் ஜான் டி பிரிட்டோ (St. John de Britto) கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற, கிழவன் சேதுபதி பாதிரியாருக்கு மரணதண்டனை விதிக்கிறான். இந்த நிகழ்ச்சி ஸ்டெயின் கண்ணாடியில் சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது.


பின்னர் போப் ஆண்டவர் அவர்களால் உயிர்த்தியாகம் செய்த பாதிரியார் ஜான் பிரிட்டோவுக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

இந்த ஆலயத்தில் பலிபீடம் (Altar) மிக அழகாக வடிவமைக்கப்பட்டு,கிறிஸ்துவத்தின் மையக் கருப்பொருளான தந்தையாகிய இறைவன், மைந்தனாகிய இறைவன், தூய ஆவியானவரான இறைவன் ஆகிய மூவரும் ஒருவரே என்பதை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பளிச்சிடும் தங்க வண்ணத்தில் சுற்றிலும் ஏஞ்சல்கள் தகதகத்தன.

இப்படி ஒரு மூலையில் இப்படி ஒரு பேராலயம் கட்டப்பட்டிருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். தமிழ்நாடு தன்னுடைய உயர்வான செறிவான நீண்ட வரலாற்றில் எத்தனை எத்தனை நுணுக்கங்களையும், ரகசியங்களையும், அதிசயங்களையும் புதைத்து வைத்திருக்கிறது என்பதை நினைத்து அசந்து போனேன்.

புன்சிரிப்பு மாறாத வனராஜிக்கு நன்றி சொல்லி, மதுரை வந்து சேர்ந்தோம். இந்ததடவை என் மதுரைப் பயணம் மறக்க முடியாத நிகழ்வுகளையும், நினைவுகளையும் கொடுத்தது.

சிவகங்கை பயணம் முற்றியது .

விரைவில் எதிர்பாருங்கள் "துருக்கி பயணம்".

பின்குறிப்பு: குறுகிய காலத்தில்  பெருகிய மனதோடு 50,000 ஹிட்கள் பெற உதவி செய்த நண்பர்கள்  அனைவருக்கும் என் உள்ளங்கனிந்த நன்றிகள்.


Thursday, March 20, 2014

முத்து காமிக்ஸ்:ஆதலினால் அதகளம் செய்வீர் !!!!!!!!!!


லார்கோவின் சாகசம்
          வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விரிவாக்கியவர் என் தந்தை. ஆறாவது படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினராகி, வாண்டு மாமா, ஆலந்தூர் கோ.மோகனரங்கம் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் மற்றும் அம்புலி மாமா, (வேதாளர்) கல்கண்டு,  கோகுலம் (பலே பாலு) மஞ்சரி ஆகிய பத்திரிக்கைகள் பழக்கமாயின.
          கொஞ்சம் முன்னேறி தமிழ்வாணன் அறிமுகமானார். துப்பறியும் சங்கர்லாலை மறக்கமுடியுமா? அதன்பின் முத்து காமிக்ஸ். தினமும் அப்பா கொடுக்கும் காசுகளை மிச்சம் பிடித்து சேர்த்து வைத்து, தேவதானப்பட்டி மாணிக்கம்பிள்ளை ஏஜென்டிடம் முதலிலேயே சொல்லி  வைத்தால்தான் கிடைக்கும். பின்னர் சுஜாதா வந்தார். அப்புறம் ஜெயகாந்தன், சா.கந்தசாமி, லாசாரா, அசோகமித்திரன், கி.ரா.,சுந்தர ராமசாமி,  வண்ண நிலவன், நாஞ்சில் நாடன், சாரு நிவேதிதா என்று வாசிப்பு பறந்து விரிந்தாலும் இன்று வரை சுவை குறையாமலிருப்பது சுஜாதாவும் முத்து காமிக்சும்தான். இரண்டுமே மறுவாசிப்பிலும் திகட்டாதவை.
Sujatha 
          அந்தச் சமயத்தில் ஆங்கிலப்படங்களே எனக்கு அறிமுகமாகாத போது, படித்த ஒவ்வொரு முத்து காமிக்சும் ஒரு முழு நீள ஆங்கிலப்படம் பார்த்த உணர்வைக் கொடுக்கும். லைட் ரீடிங்கில்  (Light Reading) காமிக்ஸுக்கு இணை எதுவுமில்லை. ஆங்கில காமிக்ஸில் என்னைக் கவர்ந்தவை எவர்கிரீன் "டின்டின்" காமிக்ஸ். அதன் பின்னர்தான் சூப்பர்மேன், பேட்மேன், ஆஸ்டிரிக்ஸ் எல்லாம். ஆனால் முத்து காமிக்ஸ்தான் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை  தூண்டியது.
          முத்து காமிக்ஸ், ன் காமிக்ஸ் ஆகிய இரண்டுக்கும் ஒரே வெளியீட்டாளர். அதற்கு போட்டியாக வந்த பொன்னி மற்றும் ராணி காமிக்ஸ், தரத்தில் இதற்குப் பக்கத்தில் வரமுடியாது. இவைகளின் அச்சுத்தரம், சிறந்த மொழிபெயர்ப்பு, அட்டைப் படங்கள், மேலும் அச்சுப்பிழை ஒன்று கூட இல்லாத கவனமான  தயாரிப்பு என்பதால் முத்துகாமிக்சின் தரம் இணையற்றது. முல்லை தங்கராசன் பதிப்பாசிரியராக அப்போது பொறுப்பேற்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் பல வெளிநாடுகளில் சுற்றித்திரிந்து சுவையான கதைகளை தேர்ந்தெடுப்பதில் தன் தந்தையையும் மிஞ்சிவிட்டார் தற்போதைய உரிமையாளர் விஜயன்.
Muthu Comics Office in Sivakasi
          2 வருடங்களுக்கு முன்னால், மதுரைக்குப் போயிருக்கும்போது, நண்பர் பிரபாவின் காரை எடுத்துக் கொண்டு, சிவகாசிக்குச் சென்று "பிரகாஷ் பப்ளிஷர்" நிறுவனத்தை நேரில் பார்த்து வந்தேன். இன்றும் வெளிநாடு வாழ் ரசிகர்கள் அங்கு வந்து செல்கின்றனர். புத்தக விலைக்கு பல மடங்கு அதிகமாக தபால் செலவு செய்து வரவழைத்துப் படிக்கிறோம். அதோடு முத்து காமிக்ஸின்  பழையனவற்றை பொக்கிமாகவே சேர்த்து வைப்பதோடு, அவைகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்க வாசகர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள்.  
          ஆறாவது படிக்கும்போது, காமிக்ஸ் வாங்கக் காசில்லாத சூழ்நிலையில், வீட்டிலேயே என் தம்பி பெயரில் "பாஸ்கர் நூல் நிலையம்" என்று ஆரம்பித்தேன். என் அப்பாவை நச்சரித்து ஜாதிக்காய் பலகைகளை இணைத்து ஊமை ஆசாரியை வீட்டுக்கே வரவழைத்து ஒரு சிறு பீரோவைச் செய்து வாங்கினேன். (அவர் மரவேலை செய்யும் சத்தம் அவரை ஒன்றுமே செய்யாது . ஆனால் எங்கள் காதுகள் ஒரு வாரத்திற்கு  சரியாக கேட்காது.)   இதில் உறுப்பினர் ஆக விரும்புவர்கள், ஒரு முத்து காமிக்ஸ் புத்தகத்தை நன் கொடையாக கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு ரூபாய் தர வேண்டும். அதன்பின் ஒரு காமிக்ஸை படிக்க 10 பைசா தரவேண்டும். இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகி பல காமிக்ஸ் புத்தகங்கள் சேர்ந்தன. அவற்றை நானே பைன்டிங்கும் செய்துவிடுவேன். நிறைய நண்பர்கள் உறுப்பினராகி தந்த காமிக்ஸ் புத்தகங்களாலும், கொடுத்த காசில் வாங்கிய புத்தகங்களாலும் நூல்நிலையம் நன்றாகவே வளர்ந்தது.
Johny Neero
          முத்து காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களை என்றைக்கும் மறக்க முடியாது.
 இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ மற்றும் அவரின் அழகிய உதவியாளர் ஸ்டெல்லா, லாரன்ஸ் & டேவிட், வேதாளர், ரிப் கிர்பி, மாடஸ்டி பிளைசீ, ஏஜன்ட் காரிகன் இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். 

இவர்களின் ஆங்கில மூல நூல்களையும் பின்னர் வாங்கி சேகரித்து வைத்திருக்கிறேன். தற்சமயம் என்னிடம் சுமார் 2000 காமிக்ஸ் புத்தகங்கள் இருக்கின்றன. 
          முத்து காமிக்சிலிருந்து தற்சமயம் மேகசின் வடிவத்தில் வண்ணத்தில் வெளியிடப்படும் முழுநீள கிராபிக் நாவல்களில் சமீபத்தில் வெளிவந்ததுதான் "லார்கோவின்ச் தோன்றும் "ஆதலினால் அதகளம் செய்வீர்". உரிமையாளர் விஜயன் வெறும்  பதிப்பாளர் மட்டுமல்ல, அவரே ஒரு காமிக்ஸ் ரசிகர். எனவே கதையை தேர்வு செய்வதிலும், சரியான தலைப்பை உருவாக்குவதிலும், அழகான அட்டைப்படத்தை வடிவமைப்பதிலும் அவருடைய உழைப்பு வெளிப்படும்.
          தீடீரென அடித்த அதிர்ஸ்ட்டத்தில் பெரும் பணக்காரனான லார்கோவின்ச், பர்மாவில் மாட்டிக்கொண்ட தன் நண்பனை எப்படி மீட்டெடுக்கிறார் என்பதுதான் கதை.
          பல எதிர்பாரா திருப்பங்களை உள்ளடக்கிய இந்நாவலின்  மூல ஆசிரியர் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஃபிலிப்பே ஃபிராங்க் (Phillipe Franc) அழகான புகைப்படங்கள் போன்ற ஓவியங்களை உருவாக்கியவர் ஜீன் வேன் ஹேம் (Jean Van Hamme)
          மேல்நாட்டு சாகசகங்களை தமிழில் படிக்கும்போது அதன் சுவை தனிச்சுவைதான், நிச்சயமாக ஒரு சிறந்த "ஆக்ஷ ன் திரில்லர்" பார்த்த உணர்வைத்தந்தது.

          முத்து, லயன் மற்றும் தற்போது வந்திருக்கும் சன்ஷைன் லைப்ரரி வெளியீடுகளை வாங்கிப்படித்து இன்புறுங்கள். உங்களை குழந்தைகளாய் மாற்றி குதூகலம் தரும் என்பது நிச்சயம்.