சீனாவில்
பரதேசி -26
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.html
![]() |
Marble statue at the Memorial |
எனக்கு முன்னாலும் பின்னாலும்
இருந்தவர்கள் எதுவும் பேசாமல் மிகவும் அமைதியாக ஒரு சோக முகத்தோடு இருந்தனர். போலீஸ்
மீதிருந்த பயத்தாலா இல்லை தங்கள் தலைவரின் மேலிருந்து மரியாதையாலா என்று
தெரியவில்லை.ஏதோ ஒரு இறுதி யாத்திரையில் நடக்கும் மெளன ஊர்வலத்தில் கலந்து கொள்வது
போன்ற பிரம்மை எனக்கு இருந்தது. ஒரு சிறு
வெராண்டாவைக் கடந்து வந்த மிகப்பெரிய ஹாலில் மாவோ சேதுங்கின் ஒரு மாபெரும்
மார்பிள் சிலை இருந்தது. அதனைச் சுற்றிலும் ஏராளமான பூந்தொட்டிகள் இருந்தன. பூக்கள் கொண்டு வந்தவர்களையும்
அங்கேயே வைக்கப் பணித்தனர். பூங்கொத்துகளும் அங்கு குவிந்திருந்தன.
![]() |
Maos Temple |
அந்த மார்பிள் சிலை மிகவும்
அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தது. பளபளக்கும் வெள்ளை மார்பிளில்
செய்யப்பட்டிருந்தது. பார்த்த எனக்கு அது ஒரே கல் போலத் தெரிந்தது. மாவோவின் உடல் இருக்கிறது என்று சொன்னார்களே
இங்கே வெறும் சிலை மட்டும்தானே இருக்கிறது. பூக்கள் கொண்டு வந்தவர்களையும்
அவற்றை இங்கேயே வைக்கச் சொல்கிறார்களே என்று நினைத்தேன். அந்த
சிலையின் முன்னால் அங்கு வந்த அனைவரும் கடவுளை வணங்குவது போல் குனிந்து குனிந்து
வணங்கினர். சிலர் மண்டியிட்டு வணங்கினர். சிலர் தங்களின் நெற்றி தரையில்
படுமளவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்கள். அப்போதுதான் தெரிந்தது, சீன மக்கள்
அவரை எவ்வளவு உயர்வாக மதிக்கிறார்கள் என்பது. அது 'மாவோ ஆலயம்' என்று அழைக்கப்படுவதன்
அர்த்தமும் அப்போதுதான் விளங்கியது.
வரிசை மீண்டும் மெதுவாகி ஒரு கட்டத்தில்
அப்படியே நின்றுவிட்டது.அங்கு நின்றிருந்த போலீஸ்காரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக
மறுபுறம் ஒரு குறுகலான வழியில் வழி நடத்த, அங்கு மஞ்சள் வெளிச்சம்
கண்ணைப் பறித்தது. சுற்றிலும் இருந்த பூந்தொட்டிகளின் நடுவே>>>>>>>
ஆம் அங்கேதான் இருந்தது. என்னால் நம்ப முடியவில்லை. ஒரு
உயரமான பீடத்தில் ஒரு பெரிய கண்ணாடிப் பேழையில் மாவோவின் உடல்
வைக்கப்பட்டிருந்தது.
ஒளி வெள்ளத்தில் கண்ணாடிப்பேழையில்
இருந்த மாவோ சேதுங் மடிப்புக்கலையாத உடையில் படுத்திருந்தார். முகம் அதீத மஞ்சளாய் இருந்தது, வெளிச்சத்தாலா அல்லது
அவருடைய நிறத்தாலா என்று தெரியவில்லை. சில சமயங்களில் எம்பார்மிங் செய்யும்போது
செலுத்தப்படும் வேதியக்கலவைகளால் நிறம் மாறிவிடுவது உண்டு. எனவே தான் பாடம்
செய்வதற்கு முன்பு நபரின் நல்ல நிறமுள்ள புகைப்படத்தை கொடுக்க வேண்டும்.
சமீபத்தில் நியூயார்க்கில் எனக்கு பலகாலம் தெரிந்த ஒரு சகோதரி இறந்து போனார்கள்.
அதன் வியூவிங்கிற்கு நான் சென்றபோது பெட்டியில் இருந்த உருவத்தைப் பார்த்து
அதிர்ந்து போனேன். எனக்குத் தெரிந்த சகோதரியின் முகம் மிகவும் கறுத்துப் போய்
உருமாறி,
அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தது. இது எம்பார்மிங் கோளாறு
என்று உடனே தெரிந்து கொண்டேன்.
![]() |
ஆனால் மாவோ வின் உடல் கிட்டத்தட்ட 40
வருடங்கள் ஆகியும் நேற்றுதான் இறந்ததுபோல இருந்தது. முகம், முடி,
கைகள், உடை என எல்லாமே புத்தம் புதிதாக தெரிந்தன.
அதுவரையில் அதனைப் பார்க்க
ஆவலாயிருந்த எனக்கு திடீரென்று பிணவறைக்குள் நுழைந்ததுபோல ஒரு அருவெறுப்பு
எழுந்தது. அங்கிருந்த ஒரு வித மணம், பூக்களின் மணம் இவையெல்லாம் இனணந்து அப்படி ஒரு எண்ணத்தை
உருவாக்கியிருக்கலாம் என்று நினைக்கிறேன். அதோடு அந்த மணம் ஒரு கிறுகிறுப்பை
உருவாக்கி குமட்டிக் கொண்டு வந்தது. அதன்பின் நான் வந்தேனா அல்லது பிறரால்
தள்ளப்பட்டு வந்தேனா என்று தெரியவில்லை. ஆனால் வெளியே வந்துவிட்டேன்.
நீண்ட படிகளில் இறங்கி வந்தேன்.
பின்புற வழியாக நுழைந்து முன்புறமாக வெளியேறி வந்து கீழிறங்கி திரும்பி அன்னாந்து பார்த்தேன். பிரம்மாண்டமான
மிகவும் உயரமான அந்தக் கட்டடம் தெரிந்தது. ஒரே ஒரு உடலுக்காக இவ்வளவோ பெரிய கட்டிடமா
என்று ஆச்சரியமாக இருந்தது.
உலகத்தில் எத்தனையோ பேர் பிறந்து
ஊர் பேர் தெரியாமல் மறைந்து விடுகிறார்கள். ஆனால் ஒருசிலர் பலதலைமுறைகளுக்கு
அழியாப்புகழ் பெற்று மக்கள் கொண்டாடும் நிலையில் இறந்தும் வாழ்கிறார்கள் என்பதை
நினைக்கும் போது ஏன் எப்படி எதனால் என்று ஒன்றும் புரியவில்லை.
![]() |
Paradesi at the Memorial |
முன்புறம் அழகிய சிறிய பூங்கா
இருந்தது. அதில் சில தியாகிகள், சீன
வீரர்கள் சிலை இருந்தது. அதில் நின்று சில படங்களை எடுத்துக் கொண்டு அங்குமிங்கும்
பார்த்தேன்.
![]() |
In front of the Memorial |
கொஞ்சம் தள்ளி முன்னால் பழமையான
ஒரு அலங்கார வாயில் இருந்தது,
பழையது என்றாலும் புதுப்பிக்கப்பட்டு பளிச் சென்ற வண்ணங்கள்
பூசப்பட்டு மிகமிக உயரமாக நின்றது. பல அடுக்குகளைக் கொண்ட இதுதான் நான் நான்
பார்க்கப்போகும் அடுத்த இடமான ஜென்சியாங்மென் என்று புரிந்து கொண்டேன்.
இந்த லீ எங்கே போனான் என்று
யோசித்துக் கொண்டு ஒரு ஓரமாக நின்று கொண்டு காத்திருந்தேன்.
-தொடரும்.
இவ்வாறான மனிதர்கள்தான் மாமனிதர்களாகப் போற்றப்படுகிறார்கள். நினைவிடத்தைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete