Thursday, June 29, 2017

நளினி மேல் நடந்த நிர்வாணத்தாக்குதலும் பேய்ச்சிறையும் !!!!!!!!!!!!!

ராஜீவ் கொலை பகுதி -5
படித்ததில் பிடித்தது.
ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும்,
பிரியா நளினி சந்திப்பும் - நளினி முருகன்.
யாழ் பதிப்பகம் - எழுத்தாக்கம். தொகுப்பு - பா.ஏகலைவன்
Image result for Nalini murugan in CBI custody
Add caption
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/06/blog-post_15.html

சிறையில் உள்ள பிள்ளைகளுடன் நளினிக்கும் முருகனுக்கும் நெருக்கம் அதிகரித்தது. பிள்ளைகளிடம் அதீத பாசம் காட்டியதால் பிள்ளைகளும் இவர்களுடன் ஒட்டிக் கொண்டன. பெரும்பாலான சமயத்தில் பிள்ளைகள் தங்கள் நேரத்தை இவர்களுடன் செலவழித்தனர்.
          இவர்களுடைய வழக்குகளுக்கு முதலில் இறங்கி வாதாட ஒருவரும் முன்வரவில்லை என்பதால், முருகன் நளினியின் உதவியுடன் இரவும் பகலும் நிறைய சட்டப் புத்தகங்களைப் படித்து, தனது வழக்கை தானே நடத்துமளவிற்கு தேர்ச்சி பெற்றார். கடுமையான உழைப்பினால் பல குறிப்புகளை  தயார் செய்து அவர் கேட்ட குறுக்குக் கேள்விகளால், சாட்சிகளும் ஏன் காவல்துறை அதிகாரிகளும் கூட  திணறிப் போயினர். பலவிதமான பொய்சாட்சிகள் முருகனால் உடைக்கப்பட்டது. அதன்பின்தான் மூத்த வழக்கறிஞர்  துரைசாமி, அவர்களுக்காக வாதாட முன் வந்தார். தடா நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் பத்திரிக்கையாளர் யாரும் எப்போதும் அனுமதிக்கப்படுவதில்லை. துரைசாமி ஒரு இதய நோயாளி என்றும் பார்க்காமல் பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி அவருடைய காரை உள்ளே விடாமல் அவரை நீண்டதூரம் நடக்க வைத்தனர். மேல்மூச்சு கீழ்முச்சு  வாங்க அவர் நடந்து வந்து வாதம் செய்த கொடுமையைப்பார்த்து தடா நீதிபதியே கதறி அழுத சம்பவமும் நடந்தது. அதன்பின்பு CBI  தலைமை நீதிபதி இராஜமாணிக்கம் மாரடைப்பில் இறந்து போனார். புதிதாக வந்த நீதிபதி அவசரகதியாக  கேஸை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை அளித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Related image
Murugan
          அப்போது நளினியும் முருகனும் வெளியே நின்றபோது காவலுக்கு வந்திருந்த 300 போலீஸ்காரரும் கண்கலங்க அவர்களுக்கு ஆறுதல் சொன்னதை உருகிஉருகி எழுதியிருக்கிறார் நளினி.
          அதன்பின் வேலூர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் நளினி. அங்கே முதல் நாளில் நளினியை முற்றிலும் நிர்வாணமாக்கி மயக்கமாகும் வரை அடித்து உதைத்திருக்கிறார்கள். உள்ளே முதன்முதலில் வரும் அனைவருக்கும் அது நடக்குமாம். ஏனென்றால் உள்ளே வரும்போதே  அவர்களுடைய கொட்டத்தை அழித்துவிட்டால் அவர்கள் பிரச்சனை கொடுக்காமல் இருப்பார்கள் என்பதற்காக இப்படிச் செய்கிறார்களாம். இதற்குப் பெயர் “அட்மிஷன் அடி".
          தூக்குத் தண்டனை கைதிகளுக்கு சிறையின் உள்ளேயே ஒரு தனிமையான சிறைப்பகுதி இருக்கிறதாம். அங்கே அதற்கு முன் பல வருடகாலமாக யாரும் இருக்கவில்லை என்பதால், புதிதாக சுத்தம் செய்து ஒரு அறையை ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த முழுப்பகுதியிலும் நளினி ஒருவர் மட்டுமே இருந்தார். அதன் ஒரு பகுதியில் தூக்குப் போடும் இடமொன்றும் இருக்கிறது. 
          அங்கு காவலுக்குச் செல்ல பெண் போலீஸ்காரர்களே பயப்படுவார்களாம். ஏனென்றால் இரவில் பேய்கள் அங்கு நடமாடுமாம். பலபேரை தூக்குப் போட்ட இடமென்பதால் இரவு நேரத்தில் அழுகைக்குரல்களும் அமானுஷ்ய சத்தங்களும் கேட்கும்  என்பதால் அங்கு காவலுக்கு வரும் போலீசுக்கும் அது ஒரு தண்டணையாகவே கருதப்பட்டது. அது தவிர தூக்கு அறை ரொம்ப நாட்கள் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால் சுத்தம் செய்யப்போன போது அங்கு ஏழடி நாகம் ஒன்றை பார்த்த  ஊழியர்கள் அலறியடித்து ஓடி வந்திருக்கிறார்கள். ஆனால் நிறைய ஆட்களோடு  திரும்ப அங்கே போனபோது நாகம் காணப்படவில்லை. இதற்கு முன்னும் ஓரிருமுறை இப்படி நடத்திருக்கிறதாம்.        இது உயிர்காக்கும் நாகதேவதை என்றும் நிரபராதிகளை இது காக்கும் என்ற நம்பிக்கையும் அங்கு இருக்கிறதாம்.
          தூக்குத்தண்டனை நிறைவேற்ற ஓரிரு நாட்களே இருக்கும்போது பலபேர் எடுத்த முயற்சியில் கவர்னர், ஜனாதிபதி ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டது. சோனியா காந்தி அவர்களும் தூக்குத்தண்டனை வேண்டாம் என குடியரசுத்தலைவருக்கு எழுத, அவரின் உத்தரவுப்படி தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்தப் போராட்டங்களில் உயிர்த்தியாகம் செய்த செங்கொடியை நளினி நினைவு கூறுகிறார்.
Related image
Add caption
     முருகன் சிறையில் நாட்களை வீணாக்காத வண்ணம் பல புதிய விடயங்களைக் கற்றுக் கொண்டார். கம்ப்யூட்டரை திறம்பட பயன்படுத்தவும், ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும், இனிப்புகள் பலகாரங்கள் செய்யவும் கற்றுக் கொண்டார். அதோடு சிறைக்குள்ளேயே பூந்தோட்டம் அமைந்ததோடு சுமார் ஐம்பது மரங்களை நட்டு வளர்ந்து வருகிறார். +2-வில் ஆரம்பித்து BCA  படித்து அதன் பின் MCA யும் படித்து முடித்திருக்கிறார். அதோடு ஃபேஷன் டிசைன், DTP, ஆங்கில தட்டச்சு, ரேடியோ மெக்கானிசம் என்று கிடைத்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடாமல் படித்திருக்கிறார். ஓவியக்கலையைக் கற்று சுமார் 20 ஓவியங்களை வரைந்திருக்கிறார். 2011 லிருந்து முற்றிலுமாக எல்லாவற்றையும் துறந்து காவியுடுத்தி ஒரு  சாமியார் போலவே வாழ்கிறார் முருகன்.
          நளினியும் சும்மா இருக்கவில்லை. பியூட்டிசியன் கோர்ஸ், எம்பிராய்ட்டரி, தையல், தோட்டக்கலை மற்றும் யோகா ஆகியவற்றில் பயின்று தேறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது தான் ஏற்கனவே படித்த பட்டயப்படிப்போடு, முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்து அதன்பின் MCA யும் படித்து முடித்து இருக்கிறார். இருவரும் என்ன படித்து என்ன பயன் அதனை வெளியில் வந்து பயன்படுத்த முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி. தங்கள் இளமைக்காலங்கள் முழுவதையும் ஜெயிலில் கழித்திருக்கும் இவர்கள் கிட்டத்தட்ட 26 வருடங்கள் உள்ளே இருக்கிறார்கள்.
          உலகத்திலேயே அதிக நாட்கள் சிறையில் இருக்கும் பெண் என்ற பெருமை அல்லது சிறுமையையும் நளினி பெற்றிருக்கிறார்.
Related image
Book Release Function
        புத்தகத்தின் முன்னுரை அணிந்துரையாக சென்னை உயர்நிதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமல், வைகோ, திருமாவளவன், சீமான், திருச்சி வேலுச்சாமி,கொளத்தூர் மணி, இயக்குநர் புகழேந்தி, தங்கராஜ், வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். எழுதி என்ன பயன்?
          அவர் கோர்வையாக எழுதியிருக்கும் முழுப்புத்தகத்தையம் படிக்கும் எவரும் இவ்விருவரையும் நிரபராதிகள் என்றே நினைப்பார்கள். நானும் விதிவிலக்கல்ல. அப்படியே தெரிந்தோ தெரியாமலோ குற்றம் இழைத்திருந்தாலும் அதற்குரிய தண்டனைக்கும் மேலாக அவர்கள் அனுபவித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
          இதன் அடுத்த கடைசிப்பகுதியில் ராஜீவ் கொலையின் சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் ஒரு சமீபத்திய பேட்டியில் எழுப்பிய கேள்விகளைப் பார்க்கலாம் 
-தொடரும்

 பின்குறிப்பு :
Image result for spirit airlines
Flying to Chicago

அடியேன் குடும்பத்துடன் சிக்காகோவுக்கு சிற்றுலா செல்லவிருப்பதால் அடுத்த வாரம் பதிவுகள் வாராது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றும் நன்றிகள்.  


Tuesday, June 27, 2017

கண்டி ராஜ்ஜியம் உருவான கதை !!!!!

இலங்கையில் பரதேசி -16

Kandy Kingdom
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/06/blog-post_20.html

ஆரம்ப காலத்தில் இது கொழும்பு - கோட்டே ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் படிப்படியாக வளர்ந்து தனி ராஜ்யமானது. 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் நடந்த பல குழப்பங்களுக்கிடையே சில சமயங்களில் யாழ்ப்பாண ராஜ்யம் மற்றும் சில சமயங்களில் மதுரையில் ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆகியோரோடு கைகோர்த்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. போர்த்துக் கீசியர் மற்றும் டச்சுக் காரர்களிடம் நட்பு பாராட்டியது. 1590 முதல் பல காலம் தனி ராஜ்ஜியமாக இருந்து கொரில்லா போர் மூலம் தன்னை பாதுகாத்து வந்த கண்டி ராஜ்யம் இறுதியில் 1818ல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்குள் வந்தது. 1815ல்  நடந்த ஒப்பந்தத்தை மீறி 1817ல் நடந்த புரட்சி முறியடிக்கப்பட்ட பின் பிரிட்டிஷார் முழுவதுமாக தன் வசப்படுத்தினர். இதன் ஆரம்பத்தைக் கொஞ்சம் பார்க்கலாமே.
Image result for kingdom of kandy

மூன்றாவது விக்கிரமபாகு (1357-1374) ஆண்ட காலத்தில் செங்கடகலபுரம் என்ற நகர் உருவாக்கப்பட்டது.  இது 14-ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் என்று சொல்லலாம். 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து 16-ஆவது நூற்றாண்டின் இறுதி வரை மத்திய இலங்கையில் கோட்டே ராஜாக்களின் ஆட்சி கொடிகட்டிப் பறந்தது. ஆனால் போர்த்துக் கீசியரின் வருகைக்குப்பின் சிறிது சிறிதாக கோட்டே ராஜ்ஜியம் தன் செல்வாக்கை இழந்தபோது செங்கடகலபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஒரு தனி நாடு சுதந்திரமாக செயல்பட ஆரம்பித்தது. 1521ல் விஜயபாகு தன்னை முழுவதுமாக பலப்படுத்தி பக்கத்து இடங்களையெல்லாம் பிடித்து கண்டி ராஜ்யத்தை நிறுவினான்.

விஜயபாகுவின் தாக்குதலுக்குப்பின் கோட்டே ராஜ்யம் மூன்றாகப் பிரிந்து போனது. சிதவாக்கா, ராய்காமா, மற்றும் ஏழாவது புவனகேபாகு தலைமையில் எஞ்சிய கோட்டே பகுதிகள் என்று பிரிந்த மூன்றும் ஒன்றையொன்று எதிரிகளாகப் பார்த்தது . இதில் மாயாதுன்னே தலைமையில் வீறிட்டு எழுந்த சித்தவாகா ராஜ்யம் பலமாக இருந்தது. 1522ல் போர்த்துக்கீசியர் வந்த போது அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சித்தவாகாவின் தாக்குதலிருந்து பாதுகாக்கும் படி கண்டி ராஜ்ஜியம் வேண்டிக் கொண்டது. வெள்ளைக்காரர்களை நம்ப முடியுமா? அவர்கள் கோட்டே நாட்டுடன்  ஒன்றிணைந்து கண்டியை 1546ல் தாக்கினார். அதனைத் தொடர்ந்து 1560ல் போர்த்துக்கீசியருக்கு எதிராக எழுந்த யாழ்ப்பாண நாட்டுக்கு கண்டி உதவியது.
சித்தவாகாவின் மன்னன், முதலாவது ராஜசின்ஹா போர்த்துக் கீசியர்களை முறியடித்து கண்டியை தன்னுடைய நாட்டுடன் இணைத்துக் கொண்டான். வீழ்ந்துபட்ட கண்டி மன்னன் மூன்றாவது ஜெயவீரா தன் நண்பர்களான யாழ்ப்பாண நாட்டுக்கு தன் மகளான குசுமசனா தேவி மற்றும் மருமகன் யமசிங்கே பண்டாரா ஆகியோருடன் தப்பிச்செல்ல முயன்றான். ஆனால் வழியில் போர்த்துக்கீசியரின் போர்க்கப்பல் வழிமறித்து அவர்களைச் சிறைப்பிடித்தது.  தாங்கள் உயிர் பிழைக்க அவர்கள் இருவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி அவர்கள் இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டன. கரேலியாடே குமார பண்டாரா என்ற மூன்றாம் ஜெயவீரா, டான் ஃபிலிப் என்றும் குசுமசானா தேவி டானா கேத்தரினா என்றும் பெயர் மாற்றம் பெற்றார்கள்.
Image result for donna catherina of srilanka

கண்டியைப் பிடித்த சித்தவாகா நாட்டுக்கு அதனைக் கட்டுப்படுத்தி ஆள்வது கடினமாக இருந்தது. கண்டியின் சிறு பகுதிகளின் தலைவர்களால் ஆங்காங்கே குழப்பங்களும் கலகங்களும் தூண்டப்பட்டு வந்தது. இதில் ராஜசின்ஹாவின் தளபதியும் கண்டியின் ஆளுநராகவும் இருந்த வீரசுந்தர முடியன்சே தானே சுதந்திரமாக ஆட்சி செய்யும்படி ராஜசின்ஹாவுக்கு எதிராக களமிறங்க அந்தப்புரட்சி அடக்கப்பட்டு  ராஜசின்ஹாவின் ஆட்களால் வீரசுந்தரா கொலை செய்யப்பட்டான். இது நடந்தது 1588ல் ஆனால் அதிலிருந்து தப்பிச் சென்ற வீரசுந்தராவின் மகன் கொன்னப்பு பண்டாரா பிறகு கண்டியை பிடிக்க முயலுகிறான். இதற்கிடையில் 1592ல் போர்த்துக்கீசியர் கண்டியைப் பிடித்துக்கொள்ள கொன்னப்புவுக்கு இப்போது இரண்டு எதிரிகள் ஆகினார். ஆனால் விடாமுயற்சியோடு போராடி  1594ல் இருவரையும் முறியடித்த கையேடு டோனா கேத்தரீனாவைத் திருமணம் செய்துகொள்கிறான் கொன்னப்பு. இதன் மூலம் பழைய அரச குடும்பத்துடன் ஒன்றிணைந்து எல்லோராலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு முதலாவது விமல தர்மசூரியா என்ற பெயரில் கண்டியின் அரசனாகினான்.

Image result for King Wickramabahu III
Vimaladharma Surya I
விமலதர்ம சூரியா பலத்துடன் ஆட்சி செய்ய ஆரம்பிக்க, போர்த்துக்கீசியர் அவனை விட்டுவிட்டு யாழ்ப்பாண அரசைப் பிடித்து அங்கு ஆண்ட புவிராஜா பண்டாரத்தை பதவி நீக்கம் செய்து எதிரியான சிங்கம் என்ற அவனுடைய மகனை பொம்மை ராஜாவாக அரியணையில் அமர்த்துகிறார்கள்.   இதற்கிடையில் சித்தவாகாவின் பலமாக விளங்கிய முதலாம் ராஜசின்ஹா இறந்துவிட அந்த நாடும் அப்படியே சிதைந்து போனது. அப்போது முழு இலங்கையிலும் கண்டி மட்டுமே ஐரோப்பியர் ஆரமிக்க முடியாத பலம் பொருந்திய சுதந்திரநாடாக விளங்கியது.

சீறும் சிறப்புமிக்க ஆட்சி செய்த விமலதர்மசூர்யாவின் காலத்தில்தான் அவனுடைய முயற்சியில் புத்தரின் பல் அங்கு கொண்டுவரப்பட்டு பெரிய ஓரு கோவில் கட்டப்பட்டு அதில் பாதுகாக்கப்பட்டது.

இந்தப் பல்லைக் கொண்டுவந்தது யாருன்னு சொல்றதுக்குத்தான் இவ்வளவு கதையையும் சொல்ல வேண்டியதாயிருச்சு. இந்தப்பல்லைப் பாதுகாக்க படாத பாடு பட்ட கதையினையும் பல்லாயிரம்பேர் அழிந்த கதையையும் நான் சொல்லித்தான் ஆகனும். ஏன்னா கண்டியில் நான் பார்க்கப் போற முக்கியமான இடம் அந்தப் பல்கோவில் தான்.
Image result for ancient kandyan kingdom

என்னடா கண்டியை ஆண்டது தமிழ் மன்னர்கள் ஆச்சே ஒரே சிங்களக்கதையா  நான் சொல்றேன்னு கேக்கறீங்களா? நீங்க நினைப்பது சரிதான். மதுரை நாயக்க வம்சத்தைச் சேர்ந்த தமிழ் மன்னர்களின் பரம்பரை தான் கண்டியை கடைசியாக  ஆண்டார்கள். தமிழ் - தெலுங்கு மன்னர்கள் என்றும் சொல்லலாம். அவர்கள் எப்படி கண்டியின் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதைப் பார்த்துவிடலாம். அவர்களின் அரண்மனையையும் பார்க்கப்போகிறோம் என்பதால் இது மிகவும் அவசியமான செய்தி என்று நினைக்கிறேன். நாயக்க வம்சம் எப்படி கண்டியை ஆண்டது என்பதை அடுத்த பகுதியில் கொஞ்சம் பார்க்கலாமா?

- தொடரும்.

Tuesday, June 20, 2017

ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் நட்ட பீரங்கிக் குண்டுமரம் !!!!!!!!!!!!!!!!


இலங்கையில் பரதேசி -15
Image result for kandy royal botanical garden
Royal Botanical Garden, Peradenya
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/06/blog-post_5.html

            வெள்ளைக்காரன் நுழைந்ததால் கிடைத்த தீமை, ராஜா விமலதர்மா கட்டிய கோவில் அழிக்கப்பட்டது. அதே சமயத்தில் கிடைத்த நன்மை சிறிய ஒரு தோட்டமாக இருந்த இடம் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது.
Image result for kandy royal botanical garden

          கிபி.1821-ல் அலெக்சான்டர் மூன் என்பவரால் இது திட்டமிடப்பட்டு, முதலில் காஃபி மற்றும் இலவங்கம் விளையும் எஸ்டேட்டாக அமைக்கப்பட்டது. ஆனால் கிபி. 1823ல் தான் ஒரு தாவரவியல் பூங்காவாக (Botanical Garden) உருவாக்கம் பெற்றது. அதற்காக கியோ கார்டன், ஸ்லேவ் ஐலன்ட், கொழும்பு, கழுதாரா ஆகிய பல இடங்களிலிருந்து செடிகள் கொண்டுவரப்பட்டன.
Image result for kandy royal botanical garden
Add caption
          அதன்பின்னர் பிரிட்டிஷ் அரசு 1844ல் ஜார்ஜ் கார்டனர் என்பவரை இந்தத் தோட்டத்தின் பொறுப்பாளராக நியமித்தது. இதில் வேடிக்கையைப் பார்த்தீர்களா? பேரைக் கவனியுங்கள். இவருக்கு தோட்டவேலை நன்றாக செய்வார் என்று குழந்தையிலேயே தெரிந்ததால் 'கார்டனர் ' என்று பெயர் வைத்ததால் இவர் தோட்டக்கலையில் நுழைந்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அவர் தன் இறுதிக்காலம் வரை இங்கு சூப்பரின்டென்டென்டாக வேலை பார்த்தார். அதன்பின் தொடர்ந்து பலபேர் அதே பணியில் திறம்பட செயலாற்றினார்கள்.

          1912ல் அக்ரிகல்ச்சர் டிபார்ட்மென்ட்டின் கீழ் இது வந்தது.
          இன்னொரு கொசுறுத்தகவல் என்னவென்றால் இரண்டாம் உலகப்போர் நடந்த போது லூயிஸ் மெளன்ட்பேட்டன் பிரபு தெற்காசியா முழுவதற்கும் சுப்ரிம் கமாண்டராக நியமிக்கப்பட்டார். அந்தச்சமயத்தில் இந்தத் தோட்டத்தைத்தான் தன் தலைமையிடமாகப் பயன்படுத்தினார்.
          "சார் சீக்கிரமாக வந்துவிடுங்கள் நாம் கண்டி போகவேண்டும்", என்று சொன்னான் அம்ரி.
          நான் உள்ளே நுழைந்தேன். நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்த செடிகொடிகள் மரங்களுக்கிடையே அருமையாக பாதை அமைத்திருந்தனர். சிலுசிலுவென அடித்த காற்றுக்கிடையில், தோட்டத்தின் மெலிதான இசை தாலாட்டுப்பாட  ஏதாவது பனைமரத்தின் அடியில் படுத்துவிடலாமா என்று நினைக்கும் அளவிற்கு சொக்கியது. பாய் பிரியாணியின் வேலையாயும் இருக்கலாம் . இங்கு பிரியாணியை புரியாணி  என்றுதான் சொல்லுகிறார்கள்.
Image result for kandy royal botanical garden, cannonball tree
Cannon Ball tree
Full-length portrait in oils of George V
King George V
          ஒரு இடத்தில் கூட்டமாக இருந்தது. அங்கு கூட்டத்தினருடன் வந்த ஒரு கைடு சொன்னதை ஒற்றுக்கேட்டதில் அந்த மரம் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும், அரசி மேரியும் அங்கு 1901ல் வந்த சமயம் நடப்பட்டதாம். மரத்தின் பெயர் பீரங்கிக் குண்டுமரம் (Cannon Ball Tree ) என்பது. அந்த மரத்தின் பழங்கள் பீரங்கிக் குண்டுகளைப் போல் கறுப்பாக உருண்டையாக இருப்பதால் அந்தப் பெயர்.
          இந்த மாட்சிமை தங்கிய ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு நடுவதற்கு வேறு மரமே கிடைக்கவில்லையா?
          இந்தத்தோட்டம் இப்போது டிபார்ட்மென்ட் ஆஃப் நேஷனல் பொட்டானிக் கார்டன் என்ற அரசு நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு இருக்கிறது.
Related image

          சுருக்கமாகஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே வந்தேன். அம்ரியை தேடிக் கண்டுபிடிப்பதற்கு சிறிதுநேரம் பிடித்தது. ஏராளமான கார்கள் இருந்தன. எதிர்த்தாற்போல் ஒரு அழகிய கட்டிடம் இருந்தது. ஒரு வேளை கண்டிராஜாக்களின் அரண்மனையோ என்று அம்ரியிடம் கேட்டேன். அவனுக்கு அதைப்பற்றி தெரியவில்லை.
          “அம்ரி, ஒரு 5 நிமிடத்தில் வந்துவிடுகிறேன்”, என்று அந்தக்கட்டடம் உள்ளே நுழைந்தேன். பழைய கட்டிடம் ஆனால் நன்கு பராமரிக்கப்பட்டு இருந்தது. இப்போது ஹோட்டலாக செயல்பட்டுவருகிறதாம். அந்தக் கட்டிடத்தின் பாரம்பர்யத்தைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை.
          ஆனால் சுவர்களின் பழைய கண்டிராஜாக்களின் புகைப்படங்களை மாட்டி வைத்திருந்தார்கள். ஓரிரு படங்களை மட்டும் என்னுடைய ஐபோனில் கிளிக்கிவிட்டு நகர்ந்தேன்.

          காரில் ஏறியதும் கார் மெதுவாக நகர்ந்தது. டிராபிக்கும் நிறைய இருந்தது. அந்த முழு ஊருமே ஒரு தோட்டம் போலத்தான் இருந்தது. அங்கிருந்து வெளியே வந்து கண்டி செல்லும் சாலையில் விரைந்தோம்.
          அழகிய கண்டிக்குள்ளே நுழையும் முன்பு கண்டி ராஜ்ஜியத்தினைப் பற்றி யோசனை வந்தது. குறிப்பாக பேரடோனியாவில் கம்பிரமான கண்டி அரசர்களைப் பார்த்தவுடன், அவர்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவல் பிறந்தது.

          இதோ அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கண்டிராஜ்யம் என்பது இலங்கைத்தீவில் இருந்த சுதந்திர ராஜ்யமாகும்.
          இந்த ராஜ்யம் 15 ஆவது நூற்றாண்டில் ஆரம்பித்து. 19ஆம் நூற்றாண்டு ஆரம்பம் வரை செழித்து இருந்தது.
Add caption

          டச்சுக்காரர்களும், பிரிட்டிஷ்காரர்களும் வந்து முழுமையாக ஆக்கிரமிக்கும் வரை இது தனித்துவத்துடன் நன்றாக இருந்தது.
          முற்றிலும் மலை சூழ்ந்த நாடான இதனை டச்சுக்காரர்களால் நெருங்கவே முடியவில்லை. பிரிட்டிஷ்காரர்களுக்கும் சிம்ம சொப்பனமாகவே விளங்கிய இந்த ராஜ்ஜியத்தில் பல தளபதிகள் கொரில்லாப் போர் புரிந்ததால் இதனைக் கட்டுக்குள் கொண்டுவருவது மிகவும் கஷ்டமாகவே இருந்தது.
          இதிலே இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் மிகுந்த தொடர்பு இருந்தது. அதுவும் குறிப்பாக மதுரைக்கு இருந்தது யாழ்ப்பாண நாடான ஜாஃப்னா, கண்டி மற்றும் மதுரைக்கு இருந்த தொடர்பை நாம் அடுத்த வாரம் பார்க்கலாம்.
-தொடரும்.

Thursday, June 15, 2017

நளினி சிறையில் பட்ட சித்ரவதைகள் !!!!!!


ராஜீவ் காந்தி கொலை - பகுதி -4
படித்ததில் பிடித்தது.
ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும்,
பிரியா நளினி சந்திப்பும் - நளினி முருகன்.
யாழ் பதிப்பகம் - எழுத்தாக்கம். தொகுப்பு - பா.ஏகலைவன்

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/06/blog-post.html

Image result for Malligai CBI office

            திருப்பதியில் வேண்டுதலுக்காக போட்ட மொட்டை, ஆள் அடையாளம் தெரியாமலிருக்கும்படி போட்ட மொட்டையாக போலீசாரால் எடுத்துக் கொள்ளப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால் பத்திரிக்கை செய்தி பார்த்தபின்தான் போலீஸ் தம்மேல் சந்தேகப்படுகிறது என்று இருவருக்கும் தெரிந்தது. உடனே எந்த முடிவெடுக்கவும் முடியாமல் திருப்பதியில் இருந்து மதுரை அங்கிருந்து பெங்களூர், வேலூர், விழுப்புரம் என்று முட்டாள் தனமாக ஓடித்திரிந்து இறுதியில் வெறுத்துப் போய் சென்னையில் சரணடைய வந்தவர்களை சைதாப் பேட்டையில் வைத்து போலீஸ் பிடித்தது.
          அப்போதிலிருந்து தொல்லைகள், கொடுமைகள் இருவருக்கும் நடக்க ஆரம்பிக்கின்றன. கோர்ட்டில் ஆஜர் படுத்த கூப்பிட்டுக் கொண்டு செல்லும்போது பக்கத்தில் நெருக்கி உட்கார்ந்த சப் இன்ஸ்பெக்டர் தன் பாலியல் தொந்தரவை ஆரம்பித்தான். தொடக்கூடாத இடங்களில் அவன் தொட்டுத்தடவ நளினி அழுது கொண்டே பல்லைக் கடித்துக் கொண்டே வந்திருக்கிறார். அந்த S.I.க்கு பதவி உயர்வு  கிடைத்தது  தனிக்கதை. சித்தரவதைகள் ஆரம்பித்தன.
Image result for Nalini murugan in CBI custody
Nalini  during CBI custody
          அதன்பின் CBI அவர்களுக்கு பொறுப்பேற்று, காவலில் எடுத்து 5க்கு 5 அடி இடத்தில் சங்கிலியால் கட்டிப் போட்டது.குளியலோ மாற்றுத்துணியோ தரப்படாமல், அவருடைய நாற்றம் அவருக்கே வாந்தியை வரவழைத்தது என எழுதுகிறார். கிட்டத்தட்ட 20 நாட்கள் தூங்கவிடாமல் இரவும் பகலும் மாறி மாறி விசாரணை நடத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து நடந்தவற்றை புல்லட் பாயின்டில் கொடுக்கிறேன்.
Image result for Rahothaman IPS
Rahothaman IPS
1.   இருவரையும் தனித்தனியாக அடைத்து வைத்து விசாரித்தார்கள். ஒரு நாள் இருவரையும் ஒன்றாக அழைத்து ஒரு அதிகாரி நீங்கள் உண்மையிலேயே கணவன் மனைவி என்று நிரூபிக்க என் முன்னால் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.
2.   அதற்கு சம்மதிக்கவில்லை என்பதால் நளினியை திருமணமாகாதவர் என்றும் செல்வி நளினி என்றே ரெக்கார்டுகளில் எழுதினர்.
3.   தலைமைப் புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் என்பவர் அதனால் நளினியின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து எறிகிறார். ஆனாலும் மற்றவர்களோடு ஒப்பிடும்போது இவர் நல்லவர் என்றே நளினி குறிப்பிடுகிறார்.   
4.   மற்ற அதிகாரியான கார்த்திகேயன், தியாகராஜன் ஆகியோர் மிகவும் மோசமானவர்கள் என்று சொல்லுகிறார். ஆனால் தியாகராஜன் சமீபத்தில் நீதிப்பிழை செய்துவிட்டேன் என்று அறிக்கை அளித்திருக்கிறார்.
5.   இந்தச் சூழ்நிலையில் தாய், தம்பி, மன வளர்ச்சி குன்றிய மாமா, உதவியாய் இருந்த பெண் என்று எல்லோரையும் போலீஸ் கைது செய்து சித்ரவதை செய்தது.  மனவளர்ச்சி குன்றியவரையும் விடவில்லை. அவர் நடிப்பதாகவே நினைக்கப்பட்டது.
6.   CBI தலைமையிடமான மல்லிகையில் தான் அவர்கள் அனைவரும் பலத்த காவலுடன் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
7.   சித்திரவதை தாங்கமுடியாது அம்மாவும், தம்பியும் நளினிக்கு எதிரான வாக்குமூலத்தில் கையெழுத்துப்போட வேண்டிய நிப்பந்தம் எழுந்தது.
8.   கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிகாரி தியாகராஜன், “ உன்னை அம்மணமாக்கி அடித்து போலீஸ்காரர்களுக்கு சுவைக்கக் கொடுப்பேன்”, என்று மிரட்டி பொய் வாக்குமூலத்தில் நளினியிடம் கையெழுத்து வாங்கினார். ஒரு கட்டத்தில் சேலையைப்பற்றி இழுத்திருக்கிறார்.
9.   அதன்பின் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முருகனுக்கு நளினியைப் பார்க்க அனுமதி கிடைக்காதலால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபின் தினமும் 15 நிமிடங்கள் பார்க்கலாம் என்று அனுமதிக்கிறார்கள்.
10.                நடந்த கொடுமைகளை விளக்கி நீதிபதிக்கு கடிதம் எழுதியும் எந்தப் பலனும் இல்லை.
11.                நளினி சிறையில் இருந்தபோது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரசவம் ஆனபின் ஒரு இரவு கூட அங்கு தங்க அனுமதிக்கவில்லை. அதோடு முருகனை குழந்தையைப் பார்க்கவும் அனுமதிக்கவில்லை.
Image result for Rahothaman IPS
karthikeyan IPS

12.                மகளுக்கு தேவைப்படும் பாலுக்கு, பணத்துக்கு, பிறப்புச்சான்றிதழ் பெற, மகளுக்கு விசா பெற என்று ஒவ்வொரு காரியத்திற்கும் உண்ணாவிரதம் இருந்தே முருகன் சாதித்திருக்கிறார். ஒரு சில சமயங்களில் உண்ணாவிரதம் 23 நாட்கள் வரை தொடர்ந்திருக்கிறது . முருகன் மொத்தமாக தன்  சிறை வாழ்வில் 365 நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார் என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.
13.                மனவளர்ச்சி குன்றிய நளினியின் தாய் மாமா 40 நாட்கள் கழித்து வெளியே தெருவில் எறியப்பட அவர் பிச்சைக் காரன் போல தெருவில் அலைந்து உணவில்லாமல் அனாதைப்பிணமாய் செத்துப்போயிருக்கிறார்.
14.                தங்கை கல்யாணியும் அதேபோல் விரட்டப்பட்டு உறவினர் யாரும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு இறுதியில் இவர் நிலையைப் பார்த்து இரக்கப்பட்டு ஒருவர் திருமணம் செய்திருக்கிறார். ஏனென்றால் அவருடைய வீடு சீல் வைக்கப்பட்டு அவர்களுக்கு திரும்பவும் தரப்படவில்லை.
15.                ஒப்புதல் வாக்குமூலத்தை யார் படித்தாலும் அது முன்னுக்குப்பின் முரணாக எழுதப்பட்டதையும் அது வற்புறுத்தப்பட்டு பெறப்பட்டது என்பதையாரும் அறிந்து கொள்ள முடியும் என்கிறார் நளினி. அதோடு தீர்ப்புகளில் இருக்கும் முரண்களையும், தவறுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக சுட்டிக் காட்டுகிறார்.
16.                சிறையிலும் வெளியிலும் தன் மகள் பட்ட பாட்டை விவரிக்கும் போது மிகவும் பரிதாபமாக இருந்தது. இறுதியில் முருகனின் வெளிநாட்டு உறவினர்கள் தொடர்ந்து எடுத்த முயற்சியில் லண்டனில் மருத்துவர் ஆனது பெரிய சாதனைதான்.
17.                ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா 2008ல் வந்து தன்னைச் சந்தித்த தருணத்தை கதைபோல விவரிக்கிறார். ராஜீவ் கொல்லப்படும் போது பிரியங்காவிற்கு 17 வயது. ஏன் கொன்றீர்கள் என்று கேட்டு தேம்பித்தேம்பி அழுததையும் அவரோடு சேர்ந்து நளினியும் அழுததையும் குறிப்பிடுகிறார்.
18.                தனக்குக் கிடைத்த நேரத்தில் தானும் தன் கணவனும் நிராதிபதிகள் என்பதை நன்கு விளக்கினேன். பிரியங்காவும் அதனை ஏற்றுக் கொண்டார் என்பதையும் எழுதுகிறார்.
19.                ஆனாலும் பிரியங்காவின் விசிட் அரசியலாக்கப் பட்டதையும் அதன் மூலம் ஒரு வேளை இந்திய அரசாங்கம், இலங்கையின் மேல் ஒரு அட்வான்டேஜ் எடுத்ததையும்தான் சந்தேகப்படுவதாக எழுதுகிறார்.
          மேலும் முருகன் எடுத்த வழக்கறிஞர் முகத்தையும், அதன்பின் என்னவெல்லாம் நடந்தது என்பதையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

- தொடரும்.

Monday, June 12, 2017

படவா கோபியுடன் பரதேசி !!!!!!!!!!!!

with Badava Gopi and his wife Haritha

        தமிழ்நாடு அறக்கட்டளை நடத்திய 'அன்னையர் தினம்' நிகழ்ச்சியில் (மே  6, 2017) வழக்கம்போல் பரதேசி ஆஜர். அதன் தலைவி பிரகஷிதா குப்தா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி விவாத மேடையிலும் பங்கு பெற்றேன். தொகுத்து வழங்கும் மாடரேட்டராய் இருந்தவர் பிரபல பலகுரல் மன்னன் 'படவா கோபி' அவர்கள். அவருக்கு மிமிக்ரி தானே தெரியும். கோபி என்று பெயர் வைத்தவர்களெல்லாம் விவாத மேடையை நடத்தமுடியுமா என்று நினைத்த என்னை படவாகோபி ஆச்சரியப்படுத்தினார். ( படவா, சொல்லவே இல்லை)  அவர் நடத்தியிருக்காவிட்டால் ரொம்ப போர் அடித்திருக்கும்.
          விவாதத்தின் தலைப்பு, “பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்த விஷயங்களில் பெற்றோர் தலையிட வேண்டுமா கூடாதா??” என்பது. மூன்று குரூப்கள் பிரிக்கப்பட்டது ஒன்று தாத்தாக்கள், இரண்டாவது பெற்றோர்கள், மூன்றாவது பிள்ளைகள் என்று. அடுத்த வாட்டி தாத்தா குரூப்பில் வருவேனா என்னவோ ஆனா  இந்தத்  தடவை  பெற்றோர்கள் குழுவில் நான் பங்குபெற்று, கல்வி பற்றி ஆங்கிலத்தில் சுருக்கமாகப் பேசிய கருத்தின் தமிழாக்கம் இதோ.
          பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் பிள்ளைகளை இறைவன் அளித்த சிறந்த பரிசாகத்தான் நினைக்கிறோம். எல்லாச் சமயங்களில் இல்லாவிட்டாலும் பெரும்பாலான சமயங்களில் அவ்வாறு நினைக்கிறோம்.பிற சமயங்களில் நாங்கள் எப்படி நினைக்கிறோம் என்பதை சொல்ல விரும்பவில்லை.( எல்லோரும் சீரியஸாய்   இருந்ததால் இந்த ஜோக் எடுபடவில்லை !!!!!!!! ). எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் அளிக்கும் சிறந்த பரிசாக கல்வியினைக் கருதுகிறோம்.
        எங்கள் பிள்ளைகள் நல்லபடியாக வளர்ந்து, வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆக வேண்டும், என்பதுதான் எங்கள் ஆசை. இந்தப் பொறுப்புணர்ச்சி எங்களுக்கு கூடும்போது கொஞ்சம் பதற்றம் வருவது இயற்கைதான். அதனால்  இந்த முயற்சியில் சில தவறுகளைச் செய்து விடுகிறோம். எங்களுடைய பெற்றோர்கள் அணிந்த எங்களுக்குப் பிடிக்காத ,நாங்கள் வெறுத்த, அதே முகமூடியை  நாங்களும் எடுத்து மாட்டிக் கொள்கிறோம்.
          ஆனால் இங்கே சூழ்நிலை வேறு, காலகட்டம் வேறு, தேசம் வேறு, எங்கள் பிள்ளைகள் வேறுவிதமாக வளர்பவர்கள்.மேலும் இங்கு கல்வியும் வேறு அதன் செயல்முறையும் வேறு என்பதை மறந்துவிடுகிறோம்.
          எனவே நம்முடைய நிறைவேறாத கனவுகளையும், விருப்பங்களையும் பிள்ளைகள் மேல் திணிக்கிறோம். குறிப்பாக கல்வியில். ஆனால் இது எதிர்மறை விளைவைத்தான் உருவாக்கும்.
Image may contain: one or more people
Vivetha Medai
          அதே சமயத்தில் முழுவதாக அவர்களுடைய சொந்த விருப்பத்திற்கும் விட்டுவிடமுடியாது. அப்படி விட்டுவிட்டால் அவர்கள் மாறி மாறி சப்ஜெக்குகளை மாற்றி மாற்றி நம்முடைய சொத்தை அழித்துவிடுவார்கள். ஏனெனில் தங்களுக்கு என்ன கல்வி பிடிக்கும் என்பதைத் தெரிவு செய்ய அவர்களுக்கு நீண்ட காலம் பிடிக்கிறது. டிகிரி முடிக்கவும் நீண்ட காலம் ஆகிவிடுகிறது. டிரையல் மற்றும் எர்ரர் மெத்தடில் இது மிகவும் செலவு வாய்ந்தது.
          ஆனால் நாம் என்ன செய்கிறோம் ?. ஒரு புறம் கட்டாயப்படுத்துகிறோம். இல்லையென்றால் மிகவும் சுதந்திரம் கொடுத்துவிடுகிறோம். ரெண்டுமே தவறுதான். ரெண்டுமே எதிர்மறையாய்ப் போய்விட வாய்ப்பிருக்கிறது.  
          என்னுடைய ஆலோசனை என்னவென்றால், பெற்றோர்கள் பிள்ளைகளின் முடிவில் நம்முடைய ஆலோசனைகளைச் சொல்லவேண்டும்.
          ஒவ்வொரு படிப்புக்கும் என்னமாதிரி எதிர்காலம் அமையும் என்பதை முன்னரே சொல்லித்தர வேண்டும். ஏனென்றால் நல்ல ஒரு பாடப்பிரிவுதான் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும்.
          ஆனால் இந்த வேலையை நாம் சர்வாதிகார முறையில் அல்லாது அன்பான வழியில் மட்டுமே அதுவும் ஆலோசனையாக மட்டுமே அணுக வேண்டும்.
          அதோடு பிள்ளைகளுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள்தான் எங்களுக்கிருக்கும் மிகப்பெரிய சொத்து. எங்களுடைய வாழ்க்கை உங்களைச் சுற்றித்தான் வளைய வருகிறது. எங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமே எங்களின் ஒரே குறிக்கோள் அன்றி வேறு ஒன்றுமில்லை. எனவே பெற்றோர்களிடத்தில் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடியுங்கள் பிள்ளைகளே.      கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

என்ன மக்களே நான் சொன்னது சரிதானே ?