Thursday, July 14, 2016

அரவிந்த்சாமி ஒரு அதிசயம் !!!!!!!!!!!!!

 ஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1
Fetna -2016
ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் வரும் இந்த விடுமுறை நாட்களில் FETNA  (Federation of Tamil Sangams of North America) என்று அழைக்கப்படும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவையின் 29 ஆம் ஆண்டுவிழா, இந்த வருடம்  நியூஜெர்சியில் உள்ள டிரெண்ட்டன் நகரில் கோலாகலமாக நடந்தேறியது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தமிழ்ச்சங்கம் இதனைப் பொறுப் பேற்று நடத்தும். இந்த வருடம் இதனை நடத்தியது நியூஜெர்சி தமிழ்ச்சங்கம். அதில் நடந்த சில சுவையான நிகழ்வுகளை சில பதிவுகளின் மூலம் பதிய விழைகிறேன்.


ஏறத்தாழ 2000 பேர் நாடு முழுவதிலிருந்து திரளாக வந்து பங்குபெற்றனர். இந்தியாவிலிருந்தும் சிறப்பு அழைப்பாளர்கள் வந்து கலந்துகொண்டனர். அதில் ஒருவர் நடிகர் அரவிந்தசாமி. மேடையில் தோன்றி தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் மிகவும் சுவைபட பதில்களைத் தந்து அசத்தினார்.  

அரவிந்த் சாமி நடிகர் மட்டுமல்ல திறமை வாய்ந்த ஒரு தொழிலதிபர். அவருடைய நிறுவனத்தில் தற்சமயம் 4000 பேர் பணிபுரிகிறார்கள். ஒரு நடிகர் என்ற முறையில் மட்டும் அல்லாது ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் என்ற முறையிலும்  அவர் அழைக்கப்பட்டிருந்தார்.  

சமீபத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட புதிய சீசனான, “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி"யை நடத்தும் அரவிந்த் சாமியின் திறமையைப் பார்த்து ஏற்கனவே வியப்பில் ஆழ்ந்திருந்த என்னை அவருடைய மற்ற பிறகோணங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

Add caption
சிங்கப்பூரில் நடந்த SIMA அவார்டு நிகழ்ச்சியில் தான் விருது வாங்குவதையும் விடுத்து, ஏற்கனவே ஒத்துக் கொண்டதால்  இங்கே ஃபெட்னா விழாவிற்கு வந்திருந்தார்.

1.   Ramakrishnan Chandrasekaran , Exe.Vice Chairman, Cognizant
2.   N Chandra, CEO, TCS
3.   Eash Sundaram, CIO Jet Blue Airways
4.   Jhansi kandasamy, VP, GE

போன்ற ஜாம்பவான்கள் கலந்துகொண்ட, தமிழ் தொழில் முனைவோர் அமர்வில் உரையாற்றினார். பதின் பருவப் பிள்ளைகளின் அமர்வில் ஒரு சிறப்புரை ஆற்றினார்.

அது தவிர பொது மேடையில் வந்தபோது ஒரு சிறிய நேர்காணலில் பங்கு கொண்டார். Fetna  நிகழ்வுக்கு தயாரான ஆரம்ப சமயத்திலிருந்து, NJ தமிழ்ச்சங்கத்தின் தலைவி உஷா கிருஷ்ணகுமாருக்கு, நியூஜெர்சியிலிருந்து ஒரு பெண், அரவிந்த்சாமியைக் கண்டிப்பாய் கூப்பிடுங்கள் என்று facebook மூலம் வேண்டுகோள் விட்டபடி இருந்தாராம். அரவிந்த்சாமி மேடைக்கு வரும்போது இதனைச் சொல்லி, அந்தப் பெண் கூட்டத்தில் இருந்தால் மேடைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார் உஷா. அந்தப் பெண் முந்திய தினமே அரவிந்த் சாமியைப் பார்த்துப் பேசி புகைப்படமும் எடுத்துவிட்டாராம். கல்லூரியில் படிக்கும்போது அரவிந்த்சாமி என்றால் பைத்தியமாம். கல்லூரியைக் கட் அடித்து பல தடவை அவருடைய சினிமாவுக்குப் போயிருக்கிறாராம். அவரும் பலத்த கைதட்டலுக்கிடையே மேடையில் வந்து,  "நேற்று என்னைப் பார்த்தவுடன் என்ன நினைத்தீர்கள் ?", என்ற ஒரு அபத்தமான கேள்வியைக் கேட்க, அரவிந்தசாமி கொஞ்சமும் சளைக்காமல் "இதற்காகத்தான் நியூஜெர்சி வந்தேனோ" என்று தோன்றியது என்று சொல்ல சபை ஆர்ப்பரித்தது.

செல்வச் சிறப்பில் ஒரு இளவரசன் போல இவரை இவரின் தந்தை வளர்க்கவில்லை. இப்படி வளர்பவர்கள்தான் பிற்காலத்தில் தந்தையினையும் மிஞ்சி உயர்வார்கள். பெற்றோர்கள், என்னையும் சேர்த்து, செய்யும் பெருந்தவறு, எனக்குக் கிடைக்காத, நான் அனுபவிக்காத எல்லாவற்றையும், என் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, அதீத செல்லம் கொடுத்து பிள்ளைகளைக்கெடுத்துவிடுகிறோம். இப்படி வளர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தம் சொந்த முயற்சியில் வாழத்தெரியாமல் வாழ்க்கையில் தோல்வி அடைகிறார்கள். அரச குடும்பத்திலிருந்து சாதாரண குடும்பம் வரை இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

ஆனால் இதற்கு மாறாக, வீட்டில் பல வாகனங்கள் அணிவகுத்து நின்றாலும், அரவிந்தசாமி பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்றது அரசுப் பேரூந்தில் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

கல்லூரியில் படிக்கும்போது கூட அவருடைய தினசரி பாக்கெட் மணி வெறும் பத்து ரூபாய் மட்டும்தான். அதனை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியவில்லை. அதிகம் கேடடாலும் தந்தை மறுத்துவிட்டதால் எப்படி செலவை சமாளிப்பது என்று யோசித்ததில் பிறந்த ஐடியா தான் 'மாடெலிங்'. ஆரம்ப கால கட்டத்தில், யாரிந்த அழகான வாலிபன் என்று டிவி விளம்பரங்களில் நீங்கள் பார்த்து வியந்திருக்கலாம்.

அந்த விளம்பரத்தைப் பார்த்த மணிரத்தினம் தளபதியில் வாய்ப்புக் கொடுத்தார். தளபதியில் அந்தத் துடுக்கான IAS ஆஃபீசரை யாரும் மறக்க முடியாது. அதன்பின் ரோஜா, பம்பாய் என்று உச்சத்தைத் தொட்டது வெறும் 20 வயதுக்குள். திடீரென்று எங்கே அரவிந்த் சாமி என்று எல்லோரும் தேடிக் கொண்டிருக்கையில், அப்பாவின் கட்டளைக்கிணங்க நார்த் கேரலினா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கு வருகிறார். அம்மாவும் அப்பாவும் இறந்துவிட தந்தையின் நிறுவனம் இவர்தலைமேல் விழுந்தது.

அதனை நல்லபடியாக நடத்தி, வளர்த்து, உயர்த்தி ஒரு நல்ல  தொழிலதிபராக வளர்ந்தார். சினிமாவை முழுவதுமாய்க் கைவிட்டார். இதற்கிடையில் ஒரு விபத்தில் முதுகில் டிஸ்க் நழுவ, வாத நோய் தாக்கி, இனிமேல் நடக்க முடியாது போய்விடுமோ என்ற அளவுக்கு படுத்த படுக்கை. ஆனால் அறுவை சிகிசை செய்யாமல் ஆயுர்வேத சிகிசை மட்டுமே செய்து இடைவிடாது கடுமையான உடற்பயிற்சியின் சிறிது சிறிதாக நடக்க ஆரம்பித்து  நன்றாக உடம்பு தேறியதும் ஒரு அதிசயம்தான்.

Add caption
இதற்கிடையில் உடல் பெருத்து 128 கிலோ வரை  போனது. ஒரு பத்திரிக்கையில் எப்படி இருந்த அரவிந்த்சாமி இப்படி ஆயிப்போனாரே என்று இரண்டு படங்களைப் போட்டு கிண்டல் பண்ண, அதற்குக் கொஞ்சம் கூட கோபமோ எதிர்விளைவோ ஆற்றாது, அந்தப் படத்தை தன் ட்ரெட் மில் முன்னால் மாட்டிக் கொண்டு ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டார். திரும்பவும் 80-85 கிலோவுக்கு கொண்டு வந்ததோடு அரை மாரத்தானை 2 தடவை முழுமையாக ஓடி முடித்திருக்கிறார், அந்த முன்படத்தை மாற்றிப்போடும் அளவுக்கு. இதில் எல்லாவற்றையும்விட எனக்கு அவரிடம் பிடித்த அம்சம், பணத்தையோ புகழையோ தலைக்கேற்றாத குணம். சத்தம் செய்யாமல் பலருக்கு செய்யும் உதவி. “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி”யில் தான் நினைத்த உறுதிப்பணத்தை ஒரு சிறு தவறால் நழுவவிட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ஏழை ஆசிரியருக்கு தன் சொந்தப் பணத்தைக் கொடுக்க முன்வந்த தயாளம். அரவிந்த்சாமி ஒரு அதிசயம் தான்.  

நமக்குத் தெரியாத சில உண்மைகள்
1.   அர்விந்த் சாமியின் தந்தை  VD சாமி பெரிய  தொழிலதிபர்.
2.   தாயார் வசந்தா தேவி பிரபலமான பரதநாட்டிய கலைஞர்.
3.   VD சாமி தான் சங்கர நேத்ராலயாவின் நிறுவனர்.
4.   இவர்கள் இருவருக்கும் அரவிந்தசாமி வளர்ப்புப்பிள்ளைதான் .
5. தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமார்தான் அரவிந்தசாமியின் தந்தை.

Companies owned by Arvindsamy :  
1.   Igate Patni
2.   Talent Maximus
3.   Pro Lease India

பின்குறிப்பு :
“நீங்களும் வெல்லலாம் ஒருகோடி” மற்றும் நேரிடைப் பேச்சிலும் தமிழ் உச்சரிப்பில் 'ல,'ழ' சிறப்பாக இருக்கிறது. ஆனால் 'ள' தான் கொஞ்சம் 'ல' வாக ஒலிக்கிறது. கவனித்துப் பார்த்தேன், நன்றாக தமிழ்பேசும் சில தமிழாசிரியர்களுக்குக்கூட இந்தப்பிரச்சனை இருக்கிறது. பயிற்சியினாலும் முயற்சியினாலும் இதனைச் சரி செய்ய முடியும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் தானே. நல்லவேளை இவர், நண்பர் ஜேம்ஸ் வசந்தனிடம் இதுவரை மாட்டிக் கொள்ளவில்லை.

ஃபெட்னா பதிவுகள் தொடரும் 





18 comments:

  1. இதுவரை அவரைப் பற்றி அறியாத தகவல்களும் தெரிந்து கொண்டேன். விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த முன்னோடி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

      Delete
  2. நண்பர் ஆல்ஃபி,

    அரவிந்த் சாமி ஒரு திறமையான, அபூர்பவமான நடிகர். பெரிய அளவில் வந்திருந்தால் தமிழ் சினிமாவின் முகம் கொஞ்சம் மாறியிருக்கலாம். ஆனால் அவர் பெரிய நடிகனாக வர விரும்பியதே இல்லை.

    அவருடைய சொந்தக் கதை (தந்தை, வளர்ப்புத் தந்தை) மகேந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த சாசனம் படத்தின் கருவை ஒட்டி அமைந்தது என்று கேள்வி. அதில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். முடிந்தால் அந்தப் படத்தைப் பாருங்கள். மகேந்திரன், அரவிந்த் சாமி என்ற இனி நிகழ வாய்ப்பில்லாத கூட்டணி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி காரிகன்.சாசனம் என்ற படத்தைப்பற்றி நான் இதுவரை கேள்விப்படாதது ஏனென்று தெரியவில்லை . இதனைப்பார்க்க முயற்சி செய்கிறேன் .

      Delete
  3. அரவிந்த்சாமி அவர்கள் பற்றி இதுவரை அறிந்திராத பல நெகிழ்ச்சியான நிகழ்வுகள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நெடிய இடைவேளைக்குப்பின் வருகை தரும் பதிவுலக ஜாம்பவான் திண்டுக்கல் தனபாலன் அவர்களை நியூயார்க் , ஜமைக்கா வார்டு சார்பாக வருக வருக என்று வரவேற்கிறேன்.

      Delete
  4. அரவிந்த்சாமி பற்றி அறியாத பல தகவல்களை தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  5. அரவிந்த்சாமி அதிசயமே அசந்துபோகும் அதிசயம் தான். அருமையான தொகுப்பு. தொடருங்கள் !!

    ReplyDelete
  6. என்ன ஆல்ஃபி, உங்களைவிட பெரிய அதிசயமா என்ன அவரு?

    "அதென்ன ஃபெட்னா நடத்துறவா எல்லாம் சினிமா நடிகர்களையே கூட்டி வந்து அழுவுறாங்க? இவர்களுக்கு ஆயிரக்கணக்கான டாடலர்கள்க் கொடுத்து அழைத்து வந்து தமிழ் வளக்கிறாங்களாக்கும். சூலை 4ல ஒழுங்கா இண்டிப்பெண்டண்ஸ்டே கொண்டாடாம நடிக நடிகர்களை கூட்டி வந்து கூத்தடிச்சுக்கிட்டு இருக்காங்க ஒரு ரெண்டாயிரம் தமிழர்கள்" என்றெல்லாம் விமர்சனங்கள் உண்டுனு உங்களுக்குத் தெரியாதா? :)

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது வருண் , தமிழனை ஆள்பவர்களும் இவர்கள்தான் , தமிழர்களை கூட்டமுடிபவர்களும் இவர்கள்தான்.
      ஒரு உதாரணத்திற்கு, இந்த வருடத்தின் என்னுடைய பதிவுகளில் அதிகம் பேர் படித்ததும் இந்தப்பதிவைத்தான் .

      Delete
  7. அந்த நிகழ்வுகளை மீண்டும் கண்முன்னே கொண்டுவந்ததற்கு நன்றி ஆல்ஃபி!!!

    ReplyDelete
  8. வணக்கம், அரவிந்த் சாமி ஐகேட் பட்னியின் ஓனர் இல்லை. அந்த நிறுவனத்தில் இண்டிபெண்டண்ட் டைரக்டராக இருந்தார். இப்போது அந்த நிறுவனத்தை கேப்ஜெமினி நிறுவனம் வாங்கிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் .வருகைக்கு நன்றி கார்த்திக் .

      Delete
  9. தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  10. It's great that you are getting thoughts from this article as
    well as from our argument made at this time.

    ReplyDelete