Tuesday, January 31, 2017

வானத்தில் வட்டமிட்ட நள்ளிரவு தேவதைகள் !!!!!!!!!!

Image result for Tamil Air hostess in Srilankan airlines
Add caption
இலங்கையில் பரதேசி பகுதி -1
‘வணக்கம்' என்ற சொல் என் காதில் தேனாகப் பாய்ந்தது. நிமிர்ந்து பார்த்தால் அந்த தமிழச்சியின் வரவேற்கும் புன்னகையால் உதடுகள் மட்டுமல்லாது கண்களும் புன்னகையைச் சிந்தின. என் நெற்றியிலும் தமிழன் என்று எழுதியிருக்கிறதை நன்றாக படித்துவிட்டாள் போலும்  அந்தப் பெண். வணக்கம் என்ற சொல் இவ்வளவு இனிப்பாக இருக்குமா? ஒரு வேளை அழகிய தமிழ்ப்பெண் சொன்னதாலோ? என்று யோசித்தேன். அதுமட்டுமல்ல சீனா போன்ற நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவிட்டுத் திரும்பும் போது விமானத்தில் சற்றும் எதிர்பாராத 'வணக்கம்' என்ற செந்தமிழ் ஒலித்ததால் என்றுதான் நினைக்கிறேன். மட்டுமில்லாது கொஞ்ச நாட்களாய் மஞ்சள் நிற சப்பை மூக்கு ஆண்களையும் பெண்களையும் பார்த்துச் சலித்துப் போய் இருந்ததால், மினுமினுக்கும் திராவிட நிற தமிழ்ப்பெண் சொன்ன வணக்கம் இனித்திருக்கலாம்.
 ஏனென்றால் தமிழ்நாட்டில் அதுவும் மதுரைக்குப்போகும் விமானத்தில் இந்தியும் ஆங்கிலமும் தவிர தமிழைக் காணோம். வைகோ உட்பட்ட எல்லா அரசியல் வியாதிகளும் அதில்தான் பயணம் செய்கிறார்கள். அதனைப்பற்றி யாரும் சொல்லக்காணோம். ஆனால் இவர்கள் எதிரியாகக் கருதும் இலங்கையின் சிங்கள அரசாங்கம் நடத்தும் விமான சேவையில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ். பாராட்டப் படக்கூடிய ,பெருமைப் படக்கூடிய விடயம்தானே.   

பதிலுக்கு நானும் கையெடுத்து வணக்கம் சொல்ல, சீட் பெல்ட்டை சரிசெய்யச் சொல்லிவிட்டு நகர்ந்தாள் அந்தப்பெண். இலங்கையின் விமான சேவையான 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்" போயிங் விமானம் மிகவும் பெரியதாகவே இருந்தது. விமான பணிப்பெண்கள் அனைவரும் சேலைதான் கட்டியிருந்தனர். ஆனால் முந்தானையை இடதுபுறத்தோளில் இழுத்து  பின்னால் கொசுவம் வைத்துக் கட்டியிருந்தார்கள். எல்லாரும் தமிழ் அல்ல, சிங்களப் பெண்களும் இருந்தனர். ஆனால் நம் தமிழ் பெண்களின் முக லட்சணம் அவர்களிடத்தில் மிஸ்ஸிங். நள்ளிரவிலும் நன்றாக உடுத்தி புன்னகை சிந்திய வானத்துத் தேவதைகள் வளைய வந்து  எங்கள் தேவைகளைக் கேட்டுக் கேட்டு செய்தனர்.


இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் சீட்டின் முன்னால் உள்ள நெறிமுறைகள் தமிழில் எழுதியிருந்தது. அதோடு அறிவிப்பும் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழிலும் வந்தது. அதற்கெனவே தமிழ்ப்பெண்கள் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சுற்றிலும் பார்த்தேன். முக்கால்வாசி சீன மூஞ்சிகள்தான் இருந்தன. இவர்கள் எங்கே இலங்கைக்குப் போகிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. பயணிகளில் தமிழ் மூஞ்சிகளில் இந்தப் பரதேசி தவிர வேறு ஒருவரையும் நான் பார்க்கவில்லை. அதுசரி சீனாவிலிருந்து எந்தத் தமிழ் இலங்கைக்கு வரக்கூடும்?.  அது ஒரு அபூர்வ நிகழ்வுதானே.

அந்தப்பக்கம் திரும்பவும் வந்த தமிழச்சியிடம்," சாப்பிட இட்லி தோசை கிடைக்குமா?” என்றேன்.மீண்டும் முகமெங்கும் விரிந்த செயற்கைத்தனம் கொஞ்சம் கூட இல்லாத புன்னகையுடன் , “அதெல்லாம் கிடைக்காது” என்று  அன்புடன் சொன்னதை,அன்புக்கு நான் அடிமை  என்பதால் ஏற்றுக்கொண்டு கொஞ்ச நேரத்தில் கொடுத்த உணவினை சாப்பிட்டேன்.  ஹும் இட்லி தோசை சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று என்று பெருமூச்சுடனும் மெலிதான ஏப்பத்துடனும் வலிதான ஏக்கத்துடனும் அப்படியே தூங்கிவிட்டேன்.
Image result for chinese travellers in Srilankan airlines

முதலில் இந்தியப் பயணத்தைத் திட்டமிடும் போது இலங்கை போக எந்த எண்ணமும் இல்லை. சீனா வழியாக இந்தியா போவதுதான் திட்டம். சீனாவில் கடுங்குளிர் என்பது அதன்பின்தான் தெரிய வந்தது. கேன்சல்  பண்ணினால் நஷ்டமாகும் என்பதால் சரியென்று சொன்னேன். நியூயார் க்கிலிருந்து கத்தார் ஏர்லைன்சின் மூலம் பெய்ஜிங் சென்று அங்கிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் சென்னை என்பது என்னுடைய ஐட்டினரியில் தெரிந்தது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு வழியாகச் செல்கிறது என்பதால் மறுபடியும் ஜானியிடம் கேட்டேன், "கொழும்பில் சிலநாட்கள் தங்கிச் செல்ல முடியுமா" என்று. ஜானி என்பது ஜானகிராமன் என்பதன் சுருக்கம். அவர்தான் என்னுடைய ஆஸ்தான டிராவல்  ஏஜென்ட்.
சில நிமிடங்களில் அவர் திரும்பக் கூப்பிட்டு, "முடியும் சிறிதளவு அதிகமாகும்” என்றார். எவ்வளவு என்று கேட்டபோது 50 டாலர்கள் தான் என்றதும் சிரித்துக் கொண்டே உடனே பயணத்திட்டத்தை மாற்றியமைத்ததில் சேர்ந்து கொண்டதுதான் இலங்கைப் பயணம்.
கடைசி நிமிடத்தில் உருவான திட்ட மென்பதால் முன்னரே நன்கு திட்டமிடவில்லை. அடுத்த தடவை போகும்போது யாழ்ப்பாணம் போய்க் கொள்ளலாம். தற்சமயம் கொழும்பைச் சுற்றிப் பார்த்தால் போதும் என்று நினைத்துக் கொண்டேன். யாழ்ப் பாணம் போகவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்ட இலங்கை நண்பர்களும்  உண்டு. அவர்களுக்கு நான் சொல்லுவதெல்லாம் அடுத்தமுறை யாழ்ப்பாணத்திற்கு கண்டிப்பாய் சென்று யாழ் தமிழ்ச் சங்கத்து மக்களை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
கொழும்பு வந்து சேர்ந்துவிட்டதாக மறுபடியும் அறிவிப்பு வர திடுக்கென்று எழுந்தேன். திடீரென்று ஒரு கணம் நான் எங்கே இருக்கேனென்று தெரிந்து கொள்ள சில நிமிடங்கள் ஆயிற்று. சுற்றுப் பயணம் செய்யும்போது இப்படித் தோன்றுவது உண்டு. இது எனக்கு மட்டும்தானா அல்லது எல்லோருக்கும் தோன்றுமா என்று யாராவது சொன்னால் நலமாயிருக்கும். இல்லையென்றால் ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்க்கவேண்டும்.
Related image

நான் இருப்பது நியூயார்க்கிலா, பெய்ஜிங்கிலா, சென்னையிலா அல்லது தேவதானப் பட்டியிலா என்று தெரியாமல் ஒரு கணம் முழிக்கும்போது, சிங்கள அறிவிப்பு முடிந்து மறுபடியும் தமிழ் அறிவிப்பு வரும்போதுதான் தெரிந்தது விமானம் கொழும்புவுக்கு வந்துவிட்டது என்று.
அமெரிக்க வாழ் குடிமக்களும், பச்சை அட்டை தாரர்களும் நியூயார்க்கில் உள்ள இலங்கையின் கான்சுலர் வலைத்தளத்தில் விசாவைப் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையிலுள்ள மதத்தலைவர்களையோ, பத்திரிக்கைக் காரர்களையோ சந்திக்க முயலக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் விசாவைக்  கொடுத்தார்கள். அதனை எடுத்து கையில் வைத்துக்கொண்டேன்.
தமிழில் அறிவிப்புகளைப் படித்துக் கொண்டே குடியுரிமை அலுவலரை வரிசையில் நின்று சந்தித்தேன். அவரின் சிங்கள முகம் கடுகடுவென்று இருந்தது.
நியூயார்க்கில் வசிக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உன்னை இங்கு அனுப்பினார்களா? என்று கேட்ட கேள்வியில் எனக்கு விதிர் விதித்துவிட்டது.
- தொடரும்.


Thursday, January 26, 2017

எம்ஜியாரை மடக்கிய இயக்குனர் மகேந்திரன். !!!!!!

Image result for சினிமாவும் நானும் இயக்குநர் மகேந்திரன்
படித்ததில் பிடித்தது
சினிமாவும் நானும் - இயக்குநர் மகேந்திரன்: பகுதி 1
கற்பகம் புத்தகாலயம், சென்னை.
இயக்குநர் மகேந்திரன் எனக்கு மிகவும் நெருக்கமானவர். முதலிலேயே சொல்லிவிடுகிறேன், ஆனால் அவருக்கு நான் நெருக்கமானவன் அல்ல.
“என்னடா ஒரே குழப்பமா இருக்கு, எப்பவுமே நீ குழப்பவாதிங்கறத திரும்பவும் புரூவ் பண்ணிட்டடா”.
“வாடா மகேந்திரா என்ன ரொம்ப நாளா ஆளக்காணோம்?”.
“போடா இவனே, `உங் கூட பேசக்கூடாதுன்னு நெனைச்சேன்”.
“ஏண்டா நான் என்ன பண்ணேன் உன்னை ?”.
“போடா இவனே, இவ்வளவு தூரம் ஊருக்கு வந்திருக்கிற, அதுவும் 20 வருஷத்துக்கு அப்புறம், என்ட்ட சொல்லவேயில்லை, பார்க்கவும் வரல”.
“இல்லடா மகேந்திரா திடீர்னுதான் வந்தேன். உன்னைக் கேட்டேன்.  ஊர்ல இல்லன்னு சொல்லிட்டாய்ங்க”.
“ஊர்ல இல்லன்னுதானே சொன்னாய்ங்க, உலகத்தில இல்லைன்னு சொன்னாய்ங்களா?
“சரிடா மகேந்திரனை பத்தி எழுத்திட்டிருக்கேன் அப்புறம் உன்ட்ட பேசறேன்”.
“என்னடா என்னைப்பத்திக் கூட எழுதப்போறியா?”
“நீ இல்லடா இது இயக்குனர் மகேந்திரன் பத்தி”.
“அப்படியா சரிடா குடியரசு  தின வாழ்த்துக்கள், மனசு கேக்கல வாழ்த்தத்தான் வந்தேன்.
“ரொம்ப நன்றிடா, ஆனா  இப்ப நம்ம தமிழர் இருக்கிற மனநிலையில ஒருத்தரும் கொண்டாடுற மாதிரி  தெரியலை.”.
இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அடிக்கடி நம்ம பதிவு நடுவில வந்து தொந்தரவு பண்ற அந்த மகேந்திரன் வேற. நான் எழுத வந்தது , நம்ம எல்லோருக்கும் தெரிந்த இயக்குனர் மகேந்திரன் பத்தி. அவருக்கு நான் நெருக்கமானவன் இல்லையென்று சொன் னேன், ஆனால் எனக்கு அவர் நெருக்கமானவர் என்று ஏன் சொன்னேன் என்றால் அதற்குள்ள காரணங்களைக் கீழே கொடுக்கிறேன்.
எனக்கு தமிழில் மிகவும் பிடித்த படங்களில் சிலவற்றை இயக்கியவர் மகேந்திரன் அவர்கள். அவை, “முள்ளும் மலரும்”, “உதிரிப்பூக்கள்”, “நெஞ்சத்தைக் கிள்ளாதே” ஆகியவை.
அவரும் என்னைப் போலவே மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்.
என்னைப்போலவே மதுரைக்காரர். இளையான்குடி அவர் சொந்த ஊர்.
புத்தகக் கண்காட்சியில் அவர் எழுதிய மேற்சொன்ன புத்தகத்தைப் பார்த்ததும் உடனே வாங்கினேன். அதில் நமக்கு தெரிந்த விஷயங்களை விட  தெரியாத அநேக தகவல்கள் இருந்தன. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப்பதிவு.
Related image

'நாடோடி மன்னன்' படத்தின் வெற்றி விழாக்  கொண்டாட்டத்திற்காக மதுரை வந்திருந்தார் புரட்சி நடிகர் எம்ஜியார். அப்போது காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவர்கள் தங்கள் இலக்கிய வட்டத்தில் அவரை பேச அழைத்தார்கள். எம்ஜியாருக்கு காரைக்குடி திட்டம் எதுவுமில்லை என்றாலும் இளம் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று அழகப்பா கல்லூரிக்கு வர ஒத்துக்க கொண்டார். ஆனால் பேச மட்டும் சொல்லிவிடாதீர்கள் என்றும் நிபந்தனை விதித்தார். மேடையில் எம்ஜியார் வீற்றிருக்க, மூன்று மாணவர்கள் வெவ்வேறு தலைப்புகளில் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலிரண்டு மாணவர்கள் நடுக்கத்துடன் பேச ஆரம்பித்து, மாணவர்கள் கூச்சலிட்டதால் ஆரம்பத்திலேயே அகன்று விட மூன்றாவதாக வந்த மாணவன் தான் நம் மகேந்திரன். பயம் கொஞ்சம் இருந்தாலும் தற்கால தமிழ் சினிமா பற்றி விமர்சித்து, டூயட் பாடுவது,மரத்தைச் சுற்றி ஓடி வந்து செயற்கையாக பாடுவது போன்றவற்றை சாடி ஒரு நீண்ட சொற்பொழிவாற்ற, கூடி இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அமைதியாக கேட்டு அசந்து போயினர். அதுவும் எம்ஜியாரை வைத்துக் கொண்டு அப்படி பேசியதற்கு அசாத்திய துணிவு வேண்டும்தான். ஆனால் கோபப்படுவதற்குப் பதில் வாழ்த்துச் சொல்லி எதிர்காலத்தில் சிறந்த விமர்சராக வருவாய் என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டுச் சென்றுவிட்டார் எம்ஜியார்.
Image result for எம்ஜியார்

பட்டப்படிப்பு முடித்தபின் தஞ்சாவூரில் உள்ள அத்தை உதவி செய்கிறேன் என்று கூறியதினிமித்தம் சட்டம் பயில சென்னை வந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அத்தையின் உதவி நின்றுபோனதால் சட்டக் கல்லூரிப் படிப்பை தொடர முடியாத நிலை. ஊருக்குத்திரும்புவதற்கு ஆயத்தப்படுகையில் திமுக பத்திரிகைகளுள் ஒன்றான 'இன முழக்கம்' என்ற பத்திரிகையில் வேலை கிடைத்தது. வேலை என்னவென்றால் அவருக்கு மிகவும் பிடித்த சினிமா விமர்சனம். அது கொஞ்ச நாள் போய்க் கொண்டிருக்கும்போது அங்கு வந்த எம்ஜியார் அவரைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டு அவருக்கு வேறு வேலை தருவதாக அழைத்துச்சென்று தன்னுடைய T நகர் வீட்டிலேயே மாடியில் தங்க வைத்தார். எம்ஜியாருக்கு கல்கி  எழுதிய பொன்னியின் செல்வன் கதையை சினிமாவாக எடுக்க வேண்டும் என்ற ஆசை. அதற்காகத்தான் மகேந்திரனை அழைத்துச் சென்றவர், பொன்னியின் செல்வன் நாவலைக் கையில் கொடுத்து, அதனை திரைக்கதை வசனமாக எழுதப்பணித்தார். அந்த வேலையை மூன்று மாதத்திற்குள் முடித்துக் கொடுத்தார் மகேந்திரன்.
Related image

பொன்னியின் செல்வனை படமாக எடுக்க எத்தனைபேர்தான்  ஆசைப்பட்டனரோ. ஆனால் இதுவரை ஒருவருக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லை. மகேந்திரன் எழுதிய திரைக்கதை வசனமும் யாரிடம் இருக்கிறதென்று தெரியவில்லை.
அப்போது சாப்பாட்டுக்கு கூட இல்லாது மகேந்திரன் கஷ்டப்படுவதை அறிந்த எம்ஜியார் தன்னிடம் அதனைப்பற்றி சொல்லாததை கடிந்து கொண்டு முழுதாக ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தாராம். அது அந்தக் காலத்தில் பெரிய தொகை என்பதில் சந்தேகமில்லை.
அதன்பின் துக்ளக் பத்திரிக்கையில் வேலை கிடைக்க அங்கும் சினிமா விமர்சனம் எழுதும் வேலைதான். எம்ஜியார் உதவி செய்தவர், தன்னை பாராட்டியவர் என்று எதையும் நினைக்காமல் அவருடைய படத்தை கடுமையாக விமரிசனம் செய்து எழுதினார் மகேந்திரன். விமர்சனத்துக்கு  பதிலாக அல்லது எதிர்வினையாக அந்தப்படத்தில் நடித்த நடிகர் அல்லது இயக்குநரிடம் அவர்கள் கேட்டு அதற்கு அடுத்த வாரம் வெளியிடுவது அப்போது துக்ளக்கின் பழக்கம். அது போல எம்ஜியாரை அணுகியபோது ஏற்கனவே விமர்சனத்தை படித்திருந்த அவர் பெரிதும் கோபப்பட்டு பதில் கொடுக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டாராம். ஆனால் மகேந்திரன் அதற்கெல்லாம் பெரிதாகக் கவலைப் படவில்லை.
இவ்வாறு இருமுறை எம்ஜியாருக்கு எதிராக மகேந்திரன்  நடந்து கொண்டாலும் எம்ஜியார் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாது, “முள்ளும் மலரும்” வெற்றிக்கு பாராட்டியதோடு “உதிரிப்பூக்கள்” வெள்ளி விழாவிலும் கலந்து கொண்டு பாராட்டியிருக்கிறார்.
தற்செயலாக எழுத்தாளர் மற்றும் டைரக்டராக ஆனது முதற்கொண்டு மகேந்திரன் வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்ததை விவரிக்கும் மகேந்திரன் திரைத்துறைக்கு தான் வர காரணமானவர் எம்ஜியார் என்று சொல்லி இப்புத்தகத்தையும் அவருக்கே சமர்ப்பித்திருக்கிறார்.
தொடரும்

Image result for குடியரசு தின  நாள்


நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய குடியரசு தின  நாள் நல்  வாழ்த்துக்கள் .இந்தியாவுக்குள் நமக்கு இருக்கும் உரிமைகளை போராடிப்பெறும் நிலைமைதான் இப்போதும் இருக்கிறதென்றாலும், போராடுவதற்கு நாம் நமது அரசியல் வியாதிகளை நம்பாமல் நம் இளைஞர்களை நம்புவோம் . அவர்கள் முன்னெடுக்கும் எல்லா போராட்டங்களுக்கும் உலகத்தமிழரின் ஆதரவு என்றும் உள்ளது என்பதை  தெரிவித்துக்கொள்கிறேன் . நாம் இந்தியர் , என்பதும் நாம் தமிழர் என்பதும் ஒன்றுக்கொன்று இணைந்தவை என்பதை நினைவில்கொள்வோம் .


Tuesday, January 24, 2017

திபெத்தை விழுங்கிய சீனாவும் ,தேளை விழுங்கும் சீனர்களும் !!!!!


சீனாவில் பரதேசி-31

Photo
Dalai Lama
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/01/blog-post_17.html

"திபெத் உணவகம் ரொம்ப தூரம் என்றால் வேண்டாம். இங்கே பக்கத்தில் எங்காவது சாப்பிட்டுப் போகலாம். நினைவிருக்கிறதா இன்று இரவு எனக்கு இலங்கைக்கு விமானம் அதற்குள் முடிக்க வேண்டியவற்றை முடித்துவிடவேண்டும்”.
"இல்லை நடந்து போகும் தொலைவுதான், வா போகலாம்"
திபெத் உணவகம் மிக அருகில் இருந்தது. உள்ளே நுழைந்தோம். அங்கு ஒருவருமில்லை. நான் கொஞ்சம் கலவரத்துடன் லீயைப் பார்த்தேன். அவன் அதனைப் புரிந்து கொண்டு "உணவுக்கு நான் கேரண்டி என்னை நம்பு", என்றான்.
திபெத் உணவு சீன உணவு போலவேதான் எனக்குத் தெரிந்தது. திரும்பவும் எனக்குத் தெரிந்த “வெஜிடபிள் சூப் நூடுல்ஸ் ஆர்டர்”, செய்தேன். நல்லவேளை அங்கே முள் கரண்டி இருந்தது. உணவு சுவையாகவே இருந்தது. சம்மர் பேலசின் அருகில் சாப்பிட்ட நூடுல்ஸ்க்கு சற்றும் குறையாத சுவை. சிறிதே காரமாய் இருந்ததால் எனக்கு ரொம்பப் பிடித்தது.
Image result for tibet restaurant beijing
Tibet Restaurant in Beijing
அந்த சமயத்தில் கலகலவென சிரித்துக் கொண்டு நான்கு இளம் சிட்டுகள் உள்ளே நுழைந்தன. அவ்வளவுதான் அந்த சின்ன உணவகம் களைகட்டியது. அவர்களைப் பார்த்தேன். பள்ளி அல்லது கல்லூரி மாணவிகள் போலத் தெரிந்தனர். சளசளவென்று பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு, ஒருவரை யொருவர் அடித்துக் கொண்டு கும்மாளமாய் இருந்தனர். அதே உற்சாகம் என்னையும் தொற்றிக் கொள்ள லீயிடம் கேட்டேன்.
"இந்தப் பெண்கள் யார்?"
"இவர்கள் திபெத்திய பெண்கள், பள்ளி மாணவிகள்"  
"என்ன மொழி பேசுகிறார்கள்".
இவர்கள் திபெத்து மொழி பேசுகிறார்கள்.
நான் உடனே அந்தப் பெண்களை நோக்கி.
";ஹலோ பெண்களே, நான் இந்தியாவிலிருந்து வருகிறேன், நாங்கள் தான் உங்கள் தலைவரான தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறோம்"
அவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டு என்னை ஆச்சரியமாக பார்த்தனர். அப்போது லீ பேச வேண்டாம் என சைகை செய்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் தப்பாக ஒன்றும் சொல்லவில்லையே.
அதன்பின் அமைதியுடனேயே சாப்பிட்டு முடித்து வெளியே வந்தோம். நாங்கள் வெளியே வரும்போது அந்தப் பெண்கள் என்னைப் பார்த்து, 'ஹேவ் எ நைஸ் டே" என்று சொன்னார்கள். நன்றி சொல்லி வெளியே வந்ததும் லீயைக் கேட்டேன்.
“லீ ஏன் என்னைப் பேச வேண்டாம் என்று சொன்னாய் ?, அவர்கள் திபெத்தியர்கள் என்றுதானே சொன்னாய். பாவம் சீனாவில் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்”. "அப்படியெல்லாம் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக  இருக்கிறார்கள்".
"புரியவில்லை சுதந்திர நாடாக இருந்த திபெத்தை ஆக்கிரமித்தது சைனாதானே".
“ஆமாம்”.
“அவர்களின் தலைவர் தலாய் லாமா அதனால்தானே தன் தொண்டர்களோடு வெளியேறினார் ?”.
“ஆமாம் நீ சொல்வது உண்மைதான்”.
“பின்னர் ஏன் என்னைத் தடுத்தாய்?”.
“நீ சொல்வது உண்மைதான். ஆனால் சைனாவின் பகுதியாக திபெத் மாறிவிட்டபின், அது நன்றாக முன்னேறிவிட்டது”.
“பழமையில் ஊறியிருந்த அவர்கள் இப்போது வெகுவாக நாகரிக மடைந்துவிட்டனர். அதோடு அவர்கள் சீனாவில் எந்த இடத்துக்கும் வரலாம் போகலாம். எனவே அவர்கள் முன்பைக் காட்டிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்”.
Image result for karmapa
Karmappa
"ஆனால் அவர்களின் தலைவர் தலாய் லாமா அகதியாய் இந்தியாவில் வாழ்கிறாரே ?"
“தலாய் லாமா அவர்கள் தலைவரில்லை. இப்போது வேறு ஒரு தலைவர் இருக்கிறார். அவரின் கீழ் திபெத் மக்கள் நிம்மதியையும் மகிழ்ச்சியாயும் இருக்கிறார்கள்”.
           “புதிய தலைவர் ?”.
“சொல்கிறேன் கேள் ஒன்றுக்கு 2, ஒருவர் கர்மப்பா”
 “அது என்ன கர்மமோப்பா?”
“அடுத்து இன்னொரு தலைவரும் இருக்கிறார். அவர் பெயர் பஞ்சன் லாமா. இவரை சீன அரசு அங்கீகரித்துள்ளது”
 “ஏன் அங்கீகரிக்காது?, இவர்கள் சீன அரசை அண்டிப்பிழைத்து நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சாமியார்கள் ஆக இருப்பார்கள்”.
”ஷ் மெல்லப் பேசு. அவர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்”
“என்ன இழவோ, சரி ரூட்டை மாத்து இப்போது எங்கே போகிறோம்?”.
“மியூசியம் போகனும்னு  சொன்னியே?”.
“ஆமா லீ ஒரு மியூசியம் கூட போகலியே?”.

Image result for capital museum in beijing
Capitol Museum
அங்கிருந்து ஒரு டேக்சி எடுத்து ஒரு பிரமாண்ட கட்டிடத்துக்கு போனோம். அதற்குப் பெயர் "கேப்பிடல் மியூசியம்" என்றான் லீ.
“புத்தம் புதிதாக இருக்கிறதே”, என்று கேட்டேன்.
“2006ல் கட்டப்பட்டது இந்தப்புதிய கட்டிடம். ஆனால் 1981ல் இந்த மியூசியம் அமைக்கப்பட்டது”, என்றான்.
நன்கு சோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டோம். ஒரு தேர்ந்த அமெரிக்க மியூசியம் போலவே உள்ளமைப்பு இருந்தது. பல மாடிக்கட்டிடம், எஸ்கலேட்டர்கள், திரையரங்குகள், அதில் சீன வரலாறு ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஏரியாயும், மாடியிலும் வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. அதில் சீனாவின் மிகப் பழமையான போர்சலின், பிரான்ஸ்( Bronz), ஓவியங்கள், ஜேட், சிலைகள், புத்தர் அமைப்புகள் என்று பல இருந்தன. கிட்டத்தட்ட 2 லட்சம் பொருள்கள் இருக்கின்றன. 2 கோடிப் பேர் ஒரு ஆண்டுக்கு வருகிறார்கள். மிகச் சுத்தமாக பராமரிக்கப் பட்டிருந்தன.
Related image
Capitol Museum
     சீனா எங்கேயோ போய்விட்டது. பல பரம்பரைகளின்  பல பேரரசர்கள் காலத்துப் பொருட்கள் அங்கு இருந்தன. சீனா போகிறவர்கள் கன்டிப்பாகப் போக வேண்டிய இடம்.
அதனைப் பார்த்து முடித்து அடுத்து "டர்ட் மார்க்கெட்"( Dirt Market) என்ற இடத்துக்குப் போனோம். அமெரிக்காவில் இருக்கும் ஃபிளீ  மார்க்கட் போல (Flea Market) இருந்தது. நம்மூர் சந்தை  போல வைத்துக் கொள்ளுங்களேன். இங்கு பழைய புதிய கலைப் பொருட்கள் ஏராளமாக இருந்தன. விலைதான் அதிகமாக இருந்தது. நம்பி வாங்குவதற்கு பயமாக இருந்தது. பழைய பொருட்களை அப்படியே பிரதி எடுப்பதில் சீனர்கள் வல்லவர்கள் ஆயிற்றே.
Weird food at a night market in Beijing, China via Foodie International:

அதையும் பார்த்து முடித்து லீயிடம் விடைபெற்று ரூமுக்கு வந்தேன். பக்கத்தில் ஒரு உணவு மார்க்கட்டையும் பார்த்துவிடச் சொன்னாள் ஜோஹன்னா. அதன் பெயர் வாங்பியூஜிங் ( Wangfuging) மார்க்கெட்  .கடைசியாக சீன உணவை ஒரு கை பார்த்துவிடலாம் என்று போனால் அங்கே பாம்பு, தவளை மற்றும் தேள் வகைகள் பொறித்து வைக்கப்பட்டதைப் பார்த்து தெறித்து ஓடி வந்துவிட்டேன். 
Wangfujing Night Market 
சீனர்கள் அதனை காராசேவு போல கரக் மொறுக்கென்று சாப்பிடுவதைப்பார்க்கும்போது எனக்கு வயிற்றில் தேள் ஊறியது போல இருந்தது. நமக்கு சான்டவிச் தான் லாயக்கு என்று சாப்பிட்டுவிட்டு கிளம்பி ஏர்போர்ட் வந்து ஏர்லன்கா விமானத்தில் உட்கார, சேலை கட்டிய பணிப்பெண் வந்து வணக்கம் என்று சொல்லியது காதில் தேனாய்ப்  பாய்ந்தது. விமானம் மேலேறிப் பறக்க பீஜிங்கிற்கு குட்பை சொன்னேன்.

Related image
-முற்றும்.

பின்குறிப்பு :

அடுத்த வாரம் முதல் இலங்கையில் பரதேசி தொடர் ஆரம்பம், உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

Friday, January 20, 2017

ஜல்லிக்கட்டு தமிழ் வார்த்தையா?

Image result for jallikattu

ஜல்லிக்கட்டுக்கான தன்னெழுச்சியான போராட்டம் தமிழகம், ஏன் உலகம் முழுவதும்  பரவி வரும் சூழ்நிலையில், அதனைப்பற்றி அநேக தகவல்கள் வாட்ஸ் அப்பில் உலவி குழப்பத்தை ஏற்படுத்துவதாலும், இதனைப்பற்றி தெரிந்தவர்களைத்தவிர தெரியாதவர்களே அதிகம் என்பதாலும், இதனைக்குறித்து  தெளிவு பெற யாரை அனுகலாம் என்று யோசித்த போது உடனடியாக நினைவுக்கு வந்தவர் நண்பர், முனைவர். பிரபாகர் அவர்கள். இவர் அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் நீண்டகாலம் பேராசிரியராக இருப்பதோடு மாணவர்கள் மத்தியில் தமிழ் உணர்வை தொடர்ந்து ஊட்டி வருபவர். சம்பிரதாய நலம் விசாரிப்புக்குப்பின் இதோ என்னுடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள்.
Image may contain: 1 person
Professor Dr.R Prabahar
1.  ஜல்லிக்கட்டு என்பது உண்மையிலேயே தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுதானா?
ஆமாம் அதில் எந்த  சந்தேகமுமில்லை.
2.  எவ்வளவு காலம் இது தமிழகத்தில் இருக்கிறது? அதற்கு ஆதாரம் என்ன?
தமிழகத்தில் நிலவுடமை சமூகம் வளர்ந்த காலத்திலிருந்தே காளையுடன் மனிதன் தொடர்பு ஏற்படுத்தி அதனை வீட்டு மிருகமாக்கி(Domesticate)  தன்னுடைய விவசாயத் தேவைகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தான். அன்றிலிருந்து இன்று வரை காளை, உழவனின் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது. அப்போதிருந்து இந்த காளை விளையாட்டு வந்திருக்கலாம். வீரயுக காலத்திலிருந்து உருவாகியிருக்கலாம். 2000 வருடம் அல்லது அதற்கும் மேலாகவும் இருக்கலாம். ஆதாரம் என்று எடுத்துக் கொண்டால் கலித்தொகை போன்ற சங்ககாலப் பாடல்களில் இதனைக் காணலாம். பல கல்வெட்டுகளில் இதனைப்பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது. சிந்து சமவெளியின் திராவிட நாகரிகத்தில் காளைச் சின்னம் காணப்படுகிறது. அசோக சக்கரத்தில் கூட காளையின் உருவம் இருக்கிறது. இன்னொரு விஷயம், பண்பாடு அல்லது பாரம்பரியம் என்பது ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. 100 வருடங்களில் கூட பண்பாட்டு மாற்றங்கள் நடைபெற்று  புதிய பண்பாடு தோன்றலாம். அதில் தவறில்லை. ஏனென்றால் தமிழ்ச்சமூகம் மாற்றங்களை வரவேற்று தொடர்ந்து மாறிவருகிற சமூகம்தான். குறிப்பாக உடை, உணவு, ஏன் தமிழ் மொழியில் கூட  எழுத்து மற்றும் பேச்சு வடிவங் கூட 100  வருடங்களில் பெரிய மாறுதலையடைந்திருக்கிறது.
3.  ஜல்லிக்கட்டு என்றால் என்ன அர்த்தம்? இது தமிழ் போலத் தெரியவில்லையே?
சல்லிக்கட்டு என்பதுதான் ஜல்லிக்கட்டு என்று மறுவியுள்ளதாக சொல்கிறார்கள். 'ஜ' என்பது தமிழ் வார்த்தை அல்ல. 'சல்லி' என்றால் காசு அதாவது பணம் என்று பொருள். காளையின் கொம்பில் பணமுடிப்பைக் கட்டி இதில் வெற்றி பெறுபவருக்கு அந்தக் காசுகளை கொடுத்து வரும் விளையாட்டுத்தான் ‘சல்லிக்கட்டு’ என்று அழைக்கப்பட்டிருக்கலாம். 'சல்லிக்காசு கூட இல்லை' என்று சொல்வது இன்றும் வழக்கத்தில் இருக்கிறதே.
Related image

4.  ஏறுதழுவுதல் போன்ற பல பெயர்கள் இருக்கின்றனவே? அவை வேறு வேறா?
சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது கட்டு, ஏறுதழுவுதல் ஆகிய பல பெயர்கள் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொன்றுக்கும் சிறுசிறு  வித்தியாசங்கள் இருக்கின்றன. இப்போது நடக்கும் விளையாட்டை ஏறு தழுவுதல் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
5.  காளைச் சண்டை என்பது வேறா?
காளைச் சண்டை என்பது இப்போது வழக்கத்தில் இல்லை. ஆனாலும் இதனை ஸ்பெயின், மெக்சிகோவில் நடக்கும் சண்டையோடு ஒப்பிட முடியாது. அங்கு காளையைக் கொன்றால்தான் வெற்றியடைந்தவர் என்று அர்த்தம்.
6.  பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டு வருவதன் காரணம் என்ன?
பொங்கல் என்பது அறுவடைத்திருநாள். விவசாயி தன் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கு ஒரு நாளையும் அதற்குச் சமானமாய் மாட்டுக்கு ஒரு நாளையும் ஒதுக்கி கொண்டாடுகிறான். அந்த நாளில்தான் மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் ஆகியவை நடைபெறுகின்றன.
7.  ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப் படுகின்றனவா?
மாடுகளை பிள்ளைகள் போலவும், குடும்பச் சொத்து போலவும் மதிக்கும் விவசாயிகள் அவற்றை துன்புறுத்துவார்களா? அல்லது அதற்கு அனுமதிப்பார்களா? நிச்சயம் இல்லை.
8.  பீட்டா மற்றும் புளுகிராஸ் அமைப்புகள் தவறானவையா?
அப்படி முற்றிலுமாகச் சொல்லமுடியாது. விலங்கு வதைச் சட்டம் சரிதான். ஆனால் ஜல்லிக்கட்டை அதன் கீழ் கொண்டு வரத் தேவையில்லை. நம்முடைய பாரம்பரியம் பண்பாடு, வழக்குமுறை தெரியாத அவர்களின்  பார்வை தவறானது என்று அரசு அவர்களிடம் ஆணித்தரமாக சொல்லவில்லை. வேண்டாம் என்று முற்றிலும் ஒழிக்காமல் அதற்கான சட்டதிட்டங்கள் வரைமுறைகளைப்பற்றி ஆராய்ந்து ஆலோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
9.  நம்முடைய நாட்டினங்களை அழிக்கும் முயற்சிதான் இது என்று சொல்கிறார்களே?
அப்படி பொத்தாம் பொதுவாகச் சொல்லமுடியாது. நாட்டினங்கள்  அழிந்து போகக் கூடாது என்றால் அரசும், விவசாய சங்கங்களும் தான் நடவடிக்கை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். அவைகளை வளர்க்க எந்தத்தடையும் இல்லையே . இவை வருமானம், பொருளாதாரம் மற்றும் உலக மயமாக்கலின் பக்க விளைவுகள். விவசாயத்தில் உழுவதற்கு டிராக்டர்கள் வந்துவிட்டதால் காளைகள் பயன்படுத்தப்படுவதில்லை. நம்முடைய பசு மாடுகளைக் காட்டிலும் மற்ற இன மாடுகள் பாலை அதிகமாக கறக்கின்றது. எனவே எது லாபகரமோ அதைத்தானே மக்கள் செய்வார்கள். காளைகள் தேவையில்லையென்றால் யார் அதனை வளர்ப்பார்கள். ஜல்லிக்கட்டு நடக்காததால் மட்டுமே நாட்டினங்கள் அழிந்துபோகும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
10.            கிரன்பேடி சொல்வதைப்போல் சதி போன்ற தீய பாரம்பரிய பழக்கங்களை விட்டுவிட்டோம். அதுபோல இதையும் விடவேண்டும் என்று சொல்வது சரியான வாதமா?
சதி வழக்கம், குழந்தை மணம், பெண்குழந்தை அழிப்பு போன்ற சமூகத்தீய வழக்கங்களோடு ஜல்லிக்கட்டை பொருத்திப் பார்க்க முடியாது. இது கண்டிப்பாக சமூகத் தீவினைப் பழக்கம் இல்லை.
11.            பொங்கல் என்பது தமிழகத்தின் பொதுவான விழாவா?
ஆம் தீபாவளி போன்ற மற்ற பண்டிகைகள் போலன்றி பொங்கல் என்பது சாதிசமய வேறுபாடுகளைத்தாண்டி தமிழ் பேசும் மக்கள் எல்லாரும் உற்சாகத்துடன் கொண்டாட வேண்டிய பண்டிகை. கிராமங்களில் அப்படித்தான் இன்றுவரை கொண்டாடப்படுகிறது. நகரில் கிறித்துவர்கள் மற்றும் முஸ்லீம்களும் இணைந்து பெருவிழாவாக இதனைக்  கொண்டாட வேண்டும்.
12.            பாரம்பரிய விளையாட்டு என்பதனால் மட்டுமே இந்த ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டுமா?
இது ஆபத்தான விளையாட்டு இல்லை. இதனால் மரணங்கள் நிகழ்வது இல்லை அல்லது மிகமிக அரிதாக ஏற்படலாம். காயங்கள் ஏற்படுவது இயல்புதான். அப்படிப் பார்த்தால் எந்த விளையாட்டையும் விளையாட முடியாது.
13.            நம் அழிந்து போகும் அல்லது அழிந்து போன பாரம்பரிய விளையாட்டுகள் வேறெதும் இருக்கின்றனவா?
நாம் சின்ன வயதில் விளையாண்ட பலவகை விளையாட்டுக்கள் இன்று நடைமுறையில் இல்லை. கிட்டிப்புள் விளையாண்டவர்கள் எல்லாம் இப்போது கிரிக்கெட் விளையாடச்  சென்று விட்டார்கள். மற்றும் குஸ்தி, மல்யுத்தம் ஆகியவை முற்றிலும் அழிந்துபோய் இப்போது நகரில் மட்டும் குத்துச் சண்டை  என்ற வெளிநாட்டு பாக்சிங் வந்துவிட்டது. ரெஸ்லிங் என்பது முற்றிலும் வேறு ஒன்று. சிலம்பம் கூட எங்கோ ஓரிரு இடங்களில் தான் இருக்கிறது.
14.            வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு ம்  அழிந்து போகும் என்கிறீர்களா?
அப்படிச் சொல்ல முடியாது நவீன விஞ்ஞான யுகத்திலும் சில பழக்க வழக்கங்கள் மாறுவதில்லை. அதுபோல ஜல்லிக்கட்டும் நீண்ட நாட்கள் இருக்குமென்றுதான் தோன்றுகிறது. 
15.            பிஜேபி ஆர் எஸ் எஸ் ஆகியோர் தமிழ் நாட்டைப்பற்றி என்னதான் நினைக்கிறார்கள்?.
என்னதான் முயன்றாலும் தமிழ்நாட்டில் அவர்களால் காலூன்ற முடியவில்லை என்ற வெறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. சமஸ்கிருதம் மற்றும் இந்தி இங்கே வரமுடியவில்லை. வட இந்தியர் நம்மை காட்டுமிராண்டிகள் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் பழமையான, பண்பாடு மிக்க மூத்த மொழியைக் கொண்ட  சமூகம் நாம். திராவிட இயக்கத்தின் மதஞ்சாரா கொள்கையின் எச்சம் இன்னும் இங்கு இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய வாழ்க்கையிலும் படிப்பறிவிலும் எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும், நம்முடைய உரிமைகளுக்காக ஒன்றுபட்டு தொடர்ந்து போராடித்தான் ஆகவேண்டும் என்ற நிலைதான் இன்னும் இருக்கிறது.
Image result for Jallikattu protest in Tamilnadu
Protest in Tamilnadu

நீங்கள் சொல்வது சரிதான் பிரபா .ஆனால் இந்த முறை நிச்சயம் மாணவர் போராட்டம் வெற்றி பெறும் .உங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றி பிரபா .

Tuesday, January 17, 2017

சீனாவில், நான்கு முறை அழிந்து எழும்பிய நானூறு வருட கத்தோலிக்க ஆலயம் !!!!!!


சீனாவில் பரதேசி 30

Cathedral of the Immaculate Conception

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/01/blog-post_5.html

"ஆரம்ப காலம் போல அல்லாது இப்போதெல்லாம் கம்யூனிச அரசாங்கம் மத விஷயங்களில் தலையிடுவதில்லை. எனவே இங்கு எல்லா மதத்தினரும் அவரவர் மதங்களை கடைப்பிடிப்பதற்கும் விழாக்கள் கொண்டாடுவதற்கு அனுமதியிருக்கிறது”.

"மதமென்று பார்த்தால் இங்கு எந்த மதத்தினர் அதிகமாக வாழ்ந்திருக்கிறார்கள் ?”. “புத்தமதம் அதிகம் என்று சொல்லலாம். டாவோயிசமும் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் மிகவும் குறைவு. எந்த மதத்தையும் சாராதவர்களும் அதிகமாக இருக்கிறார்கள்”.

"சரி இந்த ஆலயத்திப் பற்றி மேலும் விவரங்களைச் சொல்லு"

“முதலில் சேப்பல் என்று அழைக்கப்படும் சிற்றாலயமாக அமைக்கப்பட்டு பின்னர் விரிவு படுத்தப்பட்டு பேராலயமாக ஆக்கப்பட்டது. 1650ல் சிங் வம்சத்தைச் சேர்ந்த ஷின்ஜி பேரரசர், அவர் ஆட்சிக்கு வந்த ஏழாவது வருடத்தில் ஜெர்மனியிலிருந்து வந்த ஜேஸுட் பாதிரியாரான ஜோகன் ஆடம் ஷ்கால் வான்பெல் (Johann Adam Schall Von Bell) என்பவருக்கு விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கினான்.அப்போது ஆரம்பித்து இரண்டு வருடங்களில் இந்தப் பேராலயம் கட்டி முடிக்கப்பட்டது.
From outside( I am standing in the front)

ஷுன்ஜி பேரரசர் பாதிரியாரோடு  மிகவும் நட்பு பாராட்டியதோடு 24 முறை இந்த பேராலயத்துக்கு வந்து சென்றாராம்.

கி.பி.1690ல் பீஜிங் தனது முதல் ரோமன் கத்தோலிக்க பிஷப்பான ஃபிரான்சிஸ்கன் பெர்னட்டின் டெலா சிசியா வை பெற்றது. அது முதல் இதற்கு ஒரு பேராலய( கதீட்ரல்) அந்தஸ்து கிடைத்தது. அதுமட்டுமல்ல பலமுறை அழிந்தாலும் மறுபடியும் மறுபடியும் இந்த ஆலயம் மீண்டு வந்தது என்பதைக் கேள்விப்பட்ட போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து சொல்கிறேன்.


கி.பி. 1703ல் காங்லி பேரரசரின் 24 ஆவது ஆண்டு ஆட்சியில் அவரின் உதவியோடு இது மராமத்து செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது ஐரோப்பிய கட்டிடக்கலை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் 1720-ல் பீஜிங்கில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இந்த ஆலயம் முற்றிலும் அழிந்து போனது. மீண்டும் சிலுவை வடிவத்தில் எழும்பிய ஆலயம் 1730ல் மீண்டும் வந்த நில நடுக்கத்தால் சிதிலமடைந்து போனதாம்.

ஆனால் அப்போதிருந்த யாங் செங் (Yang zhang) பேரரசர் 1000 வெள்ளிக்காசுகளை அளித்து அதனை மறுபடியும் கட்ட உதவியிருக்கிறார்.

1775ல் அந்தோ இது தீ விபத்தில் முற்றிலும் எரிந்து போனது. அப்போது தன்னுடைய 40 ஆவது ஆண்டுஆட்சியில் இருந்த சிங்லாங் பேரரசர் இதனை மறுபடியும் கட்ட 10 ஆயிரம் வெள்ளிக்காசுகளைக் கொடுத்திருக்கிறார்.  

இப்படி கத்தோலிக்க ஆலயம் சீன நாட்டில் சீரோடு வளர்ந்து வரும் வேளையில், ஒரு பெரும் பிரச்சனை வந்தது. கி.பி.1838ல் தனது 14 ஆம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த டாவோ குவாங் பேரரசர் ,பல குழப்பங்கள் நிலவிய சூழ் நிலையில், சீனாவில் கத்தோலிக்க ஆலயங்களைத் தடை செய்தார். அதனால் இந்த ஆலயம் அரசால் கைப்பற்றப்பட்டு அதில் நடந்து வந்த ஆராதனைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் இரண்டாவது ஓப்பியம் யுத்தமெல்லாம் முடிந்தபின் கி.பி. 1860ல் தான் இது மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது அதன் பிஷப்பாக வந்தவர் ஜோசப் மார்ஷியல் மெளலி ( Joseph Martial Mouli) என்பவர்.

அதன் பின்னர் 1900ல் பாக்சர் புரட்சி நடைபெற்றபோது சீனா முழுவதிலும் இருந்த எல்லா கத்தோலிக்க ஆலயங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அவ்வமயம் இந்தப் பேராலயம் தீக்கிரையாக்கப்பட்டு முற்றிலும் தூர்ந்து போனது.
[IMG]http://i265.photobucket.com/albums/ii232/TERESA7_album/FORUM-1%20TO%20041408/LI-SHAN.jpg[/IMG]
Arch Bishop Joseph Li Shan
நான்கு ஆண்டுகள் கழித்து நான்காவது முறையாக மீண்டும் இந்தப் பேராலயம் எழுப்பப்பட்டது. அதுதான் இன்று வரை நிலைத்திருக்கிறது.

இப்போது தினமும் அதி காலையில் சீன மொழியிலும், ஞாயிறுகளில் ஆங்கில மற்றும் இத்தாலிய ஆராதனைகளும் இங்கு நடக்கின்றன. இந்த வளாகத்தில் தான் சீனக் கத்தோலிக்க தலைமை குருவான ஆர்ச் பிஷப் ஜோசப் லி ஷான்  என்பவர் இருக்கிறார்.

சமீபத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்ததென் அடையாளங்கள் இருந்தன. ஐரோப்பியக் கட்டிடக்கலையில் உள்புறம் அற்புதமாக இருந்தது. உள்ளே அமைதியாக சில நிமிடங்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்தேன்.  புதுவருடமும் அதுவுமாக ஆலயத்தில் அந்த நாளை ஆரம்பித்தது மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

வெளியே வந்து  லீக்கு நன்றி சொல்லி “அடுத்து எங்கே?” என்றேன்.
“அடுத்து ஒரு டாவோ ஆலயம்” என்றான்.
"ஏன் நீ போக வேண்டுமா புது வருடத்திற்கு?
“இல்லை உன்னைத்தான் கூப்பிட்டுப் போகிறேன். மற்ற நம்பிக்கைகளை பற்றியும் உனக்குத் தெரிய வேண்டுமல்லவா”.
“நல்ல ஐடியாதான் போகலாம்”.
அங்கிருந்து ஒரு கேப்பை பிடித்து அரைமணிநேரத்தில் ஒரு ஆலயத்திற்குச் சென்றோம்.
“இதன் பெயர் என்ன லீ?”.
“இதன் பெயர் வெள்ளை மேக ஆலயம் (White Cloud Temple) டாவோயிஸக் கோவில்களின் முக்கிய மூன்று இடங்களில் இதுவும் ஒன்று ஆகும். இது சொர்க்கத்தின் கீழுள்ள முதல் ஆலயம் (The First Temple Under Heaven) என்றும் சொல்கிறார்கள்”.
White cloud Temple

இப்போதுள்ள ஆலயம் 14 ஆம் நூற்றாண்டில் மிங் வம்சத்தால்  கட்டப்பட்டது. ஆனால் இதே இடத்தில் 8 ஆம் நூற்றாண்டு முதலே ஆலயமிருக்கிறது. 1215ல் மங்கோலியரின் ஆக்கிரமிப்புக்கு முன்னால் முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கும் இடமாக இது செயல்பட்டிருக்கிறது.

1222ல் டாவோயிஸ குரு குயு (Qiu) என்பவர் ஜெங்கிஸ்கானைச் சந்தித்து டாவோயிஸத்தின் விளக்கத்தைக் கொடுத்தார். அவருடைய நினைவகமும் இதன் உள்ளே இருக்கிறது. அதன் மேல்தான் இந்தக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது.


நாட்டில் பலவித மாறுபாடுகள் ஏற்பட்டாலும்  ஆலயம் அதனால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது.
Forgot to remove the mask for pollution 

1949ல் நடந்த கம்யூனிஸ் புரட்சியின் போது  மூடப்பட்டது. ஆனால் திரும்பவும் திறக்கப்பட்டு இப்போது முழுவதும் செயல்படும் ஆலயமாக இருக்கிறது.

உள்ளே சில படங்கள் எடுத்தோம். அதன்பின் சாப்பிடப் போகலாம் என்றேன் லீயிடம்.
“பக்கத்தில் நல்ல திபெத் உணவகம் இருக்கிறது, அங்கே போகலாம்”, என்றான்.
தொடரும். 

பின்குறிப்பு :

"சீனாவில் பரதேசி" அடுத்த பகுதியில் முடியும் .விரைவில் எதிர்பாருங்கள் “இலங்கையில்  பரதேசி”.உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி