Monday, October 31, 2016

சீனாவின் ஏமாற்று வேலை!!!!!!!

சீனாவில் பரதேசி -27

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_25.html

zhengyanmen gate ( Courtesy Wikipedia)

சிறிது நேரம் கழித்து பாராக்குப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த லீயைப் பின்னால் போய் முதுகில் தட்டினேன். அவன் திரும்பிப் பார்த்து 'ஓ வந்துட்டியா" என்றான்.
"எப்படி இருந்தது"?
"ஒரு 'ஃபியூனரல் ஹவுசில்' நடக்கும் 'வியூவிங்' போல இருந்தது. இதில் ரசிக்க ஒன்றுமில்லை. ஆனால் முதன்முதலாக இவ்வளவு ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டிருக்கும் உடலைப் பார்க்கிறேன்".
"வேறு எங்கும் பார்த்ததில்லையா"
"சில இடங்களில் இவ்வாறு வைக்கப்பட்டதை அறிந்திருக்கிறேன்.  குறிப்பாக எகிப்திய மம்மிகள்,ரஷ்யாவில் லெனினின் உடல், ஏன் எங்கள் இந்தியாவில் கோவாவில் புனித பிரான்சிஸ்-ன் உடலும் பாடம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஒன்றையும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்று முன்பிருந்த ஆவலும் இப்போது மாவோவைப் பார்த்தவுடன் தணிந்துவிட்டது".
"ஆமாம் மாவோவின் உடல் எப்படி இருந்தது"?
" ஒரே மஞ்சள்  மயமாக அதீத மேக்கப் போட்டதுபோல இருந்தது". 
"அது மாவோவின் உடல் என்று நினைக்கிறாயா?”
"ஆமாம் பிறகு வேறென்ன"?
"அது வெறும் மெழுகுச் சிலைதான்".
"இல்லை, நான் அந்தச் சிலையைச் சொல்லவில்லை. இன்னொரு ரூமில் பூந்தொட்டியின் நடுவிலிருந்த மேடையில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்த உடலைச் சொல்கிறேன்".
"நானும் அதைத்தான் சொல்கிறேன்".
"என்ன? அது உண்மையான உடல் இல்லையா?”
"இல்லை அது வெறும் மெழுகு பொம்மை".
"உண்மையாகவா? என்ன ஒரு ஏமாற்று வேலை".
"அப்ப உடல் எங்கே? புதைக்கப்பட்டுவிட்டதா?”
"இல்லை சில முக்கிய நாட்களில் மட்டும் உடலை வைப்பார்கள்".
"என்ன மாதிரி முக்கிய நாட்களில்?”
"மாவோவின் பிறந்த நாள், இறந்த நாள், சீனக்குடியரசின் நிறுவன நாள் என்று வெகு சில நாட்களில் மட்டும்தான் உண்மையான உடலை வைப்பார்கள். அவர் பிறந்த இறந்த நாட்களில் அவருடைய குடும்பத்தினர் வந்து போவார்கள்".
"ஏன் இப்படி ஏமாற்றுகிறார்கள்?”
"மாவோவின் உடலென்பது சீன கம்யூனிஸ்ட்  ஆட்சியின் முக்கிய அடையாளம். இது மக்களை ஒன்று சேர்த்து இன்றைக்கும் மக்களை உணர்ச்சி வசப்பட வைக்கிறது. ஆனால் அவரின் உடல் நல்ல ஷேப்பில் இல்லை. வெறும் ரசாயனங்களால் எத்தனை நாள் தான் உடலைப் பாதுகாக்க முடியும்?”
"அது உண்மைதான். இதை நீ முன்பே சொல்லியிருந்தால் இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்திருப்பேனே"  என்று சொல்ல லீ சிரித்தான்.
 "இது மிகவும் ரகசியமானது டாப் சிகரெட்".
என்னால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை இன்னொரு முறை உள்ளே போய்ப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியது. மறுபடியும் நீண்ட வரிசையில் நிற்கவேண்டுமே என்று நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
"சரி லீ இப்போது வேறெங்கே?"
"இதோ இங்கேதான்",என்று சொல்லி எதிரே காண்பித்தான்.
 "வா போய் பார்க்கலாம்".
"என்ன? உள்ளேபோய் பார்க்கமுடியுமா?”, என்று சொல்லிவிட்டு பின்தொடர்ந்தேன்.

இது ஷியான்மன் (Quianmen) என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. அதற்கு 'Front Gate' என்று அர்த்தம்.  ஆனால் இதன் பெயர் ஜென்கியாங்மென் (zhengyanmen) என்பது அதன் அர்த்தம் "சூரிய வாசல்" (Gate of the Zenith Sun) என்பது . இது பீஜிங்கின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மதிலுக்கு தெற்குவாசலாக இருந்ததாம். டியன்மன் சதுக்கத்தின் தெற்குப்புறம் அமைந்துள்ள இந்த வாயில், உள்புற நகரின் தெற்குப் பகுதியை பாதுகாக்கும் கோட்டையாக இருந்திருக்கிறது. பீஜிங்கின் நகரின் வெளிப்புறச் சுவர்கள் முழுவதும் இடிக்கப்பட்டு விட்டாலும் ஜெஸ்கியாங்மென் மட்டும் இப்போதும் கம்பீரமாக பழைய பீஜிங்கின் அடையாளங்களுள் ஒன்றாக நிற்கிறது.


இதோ அதனைப்பற்றிய தகவல்கள்:
1.   இது 1419ல் மிங் வம்சத்தால் கட்டப்பட்டது.
2.   இந்த வாயில்தான் "விலக்கப்பட்ட நகரை" நேரடியாக பாதுகாத்தது.
3.   இந்த வாயில் மற்றும் அதன் பக்கத்தில் இருந்த இடங்களில்தான் போர்த்தளவாடங்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
4.   பீஜிங் நகரின் முதல் ரயில் நிலையம் இதனருகில்தான் அமைக்கப்பட்டது.
5.   சிங் வம்சம் ஆண்டபோது 1900 -ல் பாக்சர் புரட்சி நடைபெற்றது. அ ப்போது எட்டு நாடுகள், மாஃபுலு   தலைமையில் இணைந்து தாக்கியபோது இந்த வாயில் அதிக சிதிலமடைந்து. இதனைக் காக்கப்போரிட்ட 100 பேரும் அந்த இடத்திலேயே மாய்க்கப்பட்டனர்.
6.   சிங் பேரரசர் அதன்பின் அந்த வாயிலில் ஒரு கோபுரத்தைக் கட்டினார். அதுதான் இப்போது "ஆர்ச்சரி டவர்" என்று அழைக்கப்படுகிறது.
7.   1914ல் இது மீண்டும் புனரமைக்கப்பட்டது.
8.   1949ல் நடந்த சின்ன உள்நாட்டுப் போரில், கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி பெற்றபிறகு மக்கள் விடுதலை ராணுவம் (People's Liberator Army) இதனை ஆக்கிரமித்து தங்கள் தளமாக பயன்படுத்தினர்.
9.   1980ல் ராணுவம் அகன்றபின் இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக ஆகிவிட்டது.
10.               42 மீட்டர் உயரமுள்ள இந்த ஜெங்கியாங்மன் வாயில்தான் பீஜிங் நகர வாயில்களில் மிகவும் உயரமானது.
11.               1960கலீல் சப்வே கட்டப் படுவதற்கு பல கட்டடங்களும் வாயில்களும் மதில்களும் இடிக்கப்பட்டாலும் இந்த வாயில் மட்டும் பிழைத்துக் கொண்டது.
சிறிய கட்டணம் செலுத்தி இருவரும் உள்ளே சென்றோம். உள்ளே பலவித வரலாற்றுப் பொருட்கள் ஆவணங்கள், வரைபடங்கள், மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  மூன்று மாடிகளில் ஏறிஏறி மேலே வந்தோம். பால்கனி போல இருந்த சுற்றுப்புற சுவர்களில் இருந்து பார்க்கும்போது, முன்புறம் ஒரே வரிசையில், மாவோ மசூலியம், டியனன்மன் ஸ்கொயர் நினைவுத்தூண், பரந்த மைதானம், அதன் பின் விலக்கப்பட்ட நகரம் அதன் உள்ளே கூட  வரிசையாக பலவித வாயில்களும் தர்பார் மண்டபங்களும் தெரிந்தன.
பார்த்துவிட்டு கீழே இறங்கும்போது தரையில்  பாதிக்கப்பட்ட ஒரு அடையாளத்தைப் பார்த்தேன். அதனைச் சுற்றிலும் நான்கு மிருகங்கள் இருந்தன. அது என்னவென்று கேட்டபோது லீ சொன்னான் "அதுதான் சீனாவின் நெடுஞ்சாலையின் ஜீரோ பாயின்ட்" என்றான். சீனாவின் அனைத்துச் சாலைகளுக்கும் அதுவே ஆரம்பப்புள்ளி என்றும், அங்கிருந்துதான் தூரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று சொன்னான்.
அதோடு "நீ மிகவும் அதிர்ஷ்டசாலி"  என்றான்.
"எதற்கு?" என்று கேட்டேன்.
- தொடரும்.
Happy Diwali Tamil Images

நண்பர்கள்  அனைவருக்கும் என் இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்.
இந்த நல்ல நாளில் , இருள் நீக்கும் ஒளியாக இறைவன் உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் அருள் புரிவானாக .

ஒரு முக்கிய அறிவுப்பு :

Image result for Emirates flight


குடும்பத்தில் நடக்கும் திருமண விழாவிற்காக நான் நவம்பரில் சென்னை வருகிறேன்.நவம்பர் 13 முதல் 25 வரை சென்னையில் இருப்பேன் .இடையில் நவம்பர் 20 முதல் 22 வரை மூன்று நாட்கள் மதுரையில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் ஈமெயில்( Alfred_rajsek@yahoo.com) அல்லது whatsupல் ( 12123630524) தொடர்பு கொள்ளவும் . அந்த நாட்களில் பதிவுகள் வெளி வராது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன் .ஆனால் பல புதிய பதிவுகளுடன் உங்களை டிசம்பரில் சந்திப்பேன் .நன்றி.

Thursday, October 27, 2016

எம்ஜியாரின் தமிழ்ப்பற்று!!!!!!!!!!!!!

படித்ததில் பிடித்தது:- நான் ஏன் பிறந்தேன் பகுதி 1

நான் ஏன் பிறந்தேன் [பாகம்-1]

எம்ஜியாரின் வளர்ப்புப் பிள்ளையாகிய ஜெ.சுரேந்திரனின் அனுமதியின் படி கண்ணதாசன் பதிப்பகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட புத்தகம்தான் “நான் ஏன் பிறந்தேன்”. இது எழுபதுகளில் எம்ஜியார் அவர்கள் ஆனந்த விகடனில் தன் சுயசரிதையை தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.
Image result for J Surendran, son of Janaki
J Surendran
இந்தப்புத்தகத்தின் உரிமை யாருக்குச் சொந்தம் என்பதில் பிரச்சனை ஏற்பட்டு அது கோர்ட்டு வரைக்கும் போய் அது சுரேந்திரன் பக்கம் தீர்ப்பானபின் இது வெளியிடப்பட்டதால் தான் இவ்வளவு காலதாமதம்.
எம்ஜியார் அவர்களின் முற்றிலும் புதியமுகம் இதில் வெளிப்படுகிறது . பெரும்பாலான இடங்களில் அவரின் வெளிப்படைத் தன்மை இதில் தெரிகிறது. இந்தப்புத்தகத்தில் எழுதியிருக்கிற விஷயங்களின் காலகட்டம் முன்னுக்குப்பின் முரணாக இருந்தாலும் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவே இருந்தது.
இந்தப்புத்தகம் இருபெரும் தொகுப்புகளாக வெளிவந்திருக்கிறது ஒவ்வொன்றும்குறைந்தபட்சம் சுமார் 700 பக்கங்கள் கொண்டது. என்னை மிகவும் கவர்ந்த ஒரு சில விஷயங்களை சில பதிவுகளாய் சொல்ல விரும்புகிறேன்.
எம்ஜியாரின் தமிழ்ப்பற்று!!!!!!!!!!!!!
எம்ஜியார் அவர்கள் மலையாள நாயர் வகுப்பில் பிறந்தவர் என்பதால் அவர் வாழும் காலத்தில் பலநேரத்தில் மலையாளி எப்படி தமிழ் நாட்டை ஆளலாம்? என்ற விமர்சனங்கள் அவர் மேல் எழுந்தன. தமிழ் நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று ஒரு சிலர் சொல்லிப்பார்த்தனர். ஆனால் தமிழ் மக்கள் அவரை முழுவதுமாக ஏற்றுக் கொண்டதோடு கொண்டாடினர். ஏன் இன்னும் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தமிழனாகவே வாழ்ந்து தமிழனாகவே மறைந்தார்.

Image result for MGR in young age
MGR at young age
பிறப்பினால் மலையாளி ஆனாலும் என்றுமே அவர் தன்னை மலையாளியாக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. தமிழ் மேல் நல்ல பற்றுக் கொண்டிருந்தார் என்பதற்கு பல உதாரணங்களை இந்தப் புத்தகத்தில் படித்தேன்.
முதலாவது அவர் பிறந்தது இலங்கையில், கேரளாவில் இல்லை. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவுடன், அவரின் தாய் தன் இரு மகன்களான சக்ரபாணி, ராமச்சந்திரன் ஆகிய இருவருடன் பிழைப்புத்தேடி வந்த மாநிலம் தமிழ்நாடுதான்.அவர் முதலில் பள்ளிக்குப்போனது தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ்ப் பள்ளியில்தான். தமிழ்ப்பள்ளியில் சிறிது காலமே படித்தாலும் ஆரம்பக்கல்வியை நல்லமுறையில் கற்றுக் கொண்டார்.
குடும்ப வறுமையின் காரணமாக ஏழை விதவையான சத்யபாமா, தன் பிள்ளைகள் இருவரையுமே நாடகக்கம்பெனியான மதுரை பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்துவிட்டார்.  எம்ஜியாருக்கு அப்போது ஏழு வயதுதான் இருக்கும். எம்ஜியார், நடிப்பு, பாடுதல், மனனம் செய்தல் போன்ற பல விடயங்களை கற்றுக் கொண்டார். அதுவும் ஆரம்பகாலம் முதல் தமிழ்தான். வசனம் பேசி, நடிக்க தமிழ் உச்சரிப்பையும் நன்கு கற்றுக் கொண்டு, குரல் மகரக்கட்டு உடையும் வரை பெண்குரலில் பாடி பெண் வேஷங்கள் பலவற்றைப் போட்டிருக்கிறார்.
பாய்ஸ் கம்பெனியில் முதலில் அவருக்கு கிடைத்தது வெறும் சாப்பாடு மட்டும்தான். கொஞ்சம் அனுபவம் கிடைத்து வேஷம் கட்ட ஆரம்பித்தபின் தான் வாரம் நான்கு அணா வாங்கினார் அதாவது 25 பைசாதான் அவரது முதல் சம்பளம். அப்படியென்றால் மாதத்திற்கு 1 ரூபாய் மட்டும் தான் என்று நினைக்கும்போது அது ஆச்சரியமளிக்கிறது. பாய்ஸ் கம்பெனி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் செல்ல வேண்டும். தங்குமிடமும் சாப்பாட்டும் கம்பெனி பொறுப்பு. அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் சம்பளத்தில் தான் அவர்கள் குடும்பம் நடந்தது என்பதை நினைத்தால் அதிசயமாயிருக்கிறது.
எம்ஜியார்  வளர வளர அவருடைய தமிழ் ஆர்வமும் நன்கு வளர்ந்தது. மலையாளம் அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை. அம்மா இருக்கும்வரை தான் மலையாளத்தில் பேசுவதுகூட
M.V. மணி அய்யர் என்பவர் எம்ஜியாருக்கு தமிழ்ப்பற்றை ஊட்டினார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் சென்று தமிழ் பற்றியும் அதன் பெருமைகளைப் பற்றியும் அளவளாவுதலில் மிகுந்த விருப்பம் கொண்டார். மணி அய்யர். எம்ஜியாருக்கு நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்.
எம்ஜியார் படித்த புத்தகங்களையும் சில எழுத்தாளர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளது மிகவும் சிறப்பு. மணிக்கொடியில் ஆரம்பித்து பல பத்திரிக்கைகளைத் தொடர்ந்து படித்து வந்தார். அது தவிர தி.ஜானகிராமன், க.நா.சுப்பிரமணியன், ந. பிச்சமூர்த்தி, மு.வரதராசனார், கு.ப.ராச கோபாலன் புதுமைப்பித்தன் ஆகிய அந்தக் காலக்கட்டத்தில் இருந்த சிறந்த படைப்பாளர்களை எம்ஜியார் படித்தார்.
மகாத்மா காந்தியின் கொள்கைகளில் கவரப்பட்டு, சுதந்திரப் போராட்ட காலத்தில் கதர் ஆடை உடுத்த ஆரம்பித்தார். அதன் பின் NS. கிருஷ்ணன் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிச் சொல்லி "குடியரசு" பத்திரிகையை அறிமுகப்படுத்தினார்.
ஏற்கனவே எழுத்தாளர்கள், கதாசிரியர்களிடம் நீண்ட நேரம் ஆர்வமுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டார்.
Image result for MGR in young age
MGR with Anna, Rajaji and Karunanidhi 
அறிஞர் அண்ணாவின் அறிமுகம் அவரை அப்படியே வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று திராவிட இயக்கத்தில் ஐக்கியமானார். அதற்கு முக்கியக் காரணம் அண்ணாவின் எழுத்தும், பேச்சும் அவருடைய எளிமையான அணுகுமுறையும் தான்.
கலைஞர் கருணாநிதியுடன் நட்புக் கொண்டதன் காரணமும் அவருடைய எழுத்தின் மேலுள்ள காதலால் தான். இந்தப்புத்தகத்தில் கலைஞரைப் பற்றிக் குறிப்பிடும் ஒவ்வொரு இடத்திலும் மிகவும் மரியாதையுடன் குறிப்பிடுகிறார். அவருடைய எழுத்தையும் கதை வசனத்தையும் மிகவும் சிலாகிக்கிறார்.
Image result for MGR with karunanidhi
MGR with Karunanidhi
இந்தப் புத்தகம் எழுதும்போது கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த சமயம். ஒவ்வொரு முறையும், மாண்புமிகு டாக்டர் கலைஞர் என்றே குறிப்பிடுகிறார்.
திராவிட இயக்கத்தில் முழுவதுமாக ஈர்க்கப்பட்டதோடு, இயக்கத்தின் முக்கிய கொள்கை பரப்பு பேச்சாளராக மாறிப்போனார். திரைப்படங்களில் நடித்துப்புகழ் பெற்றதால், அவர் எங்கு சென்றாலும் அவரைப் பார்க்க ஏராளமான மக்கள் கூடினர். எம்ஜியாரின் வரவு நிச்சயமாக திராவிட இயக்கத்திற்கு வலிமை சேர்த்தது.
கலைஞரின் எழுத்து மற்றும் பேச்சு வன்மையில் கவரப்பட்டதால் தான் அண்ணாவின் மறைவுக்குப்பின் கலைஞரை முன்னிறுத்தி, கலைஞர் முதலமைச்சரானதில் பெரும்பங்கு வகித்தவர் எம்ஜியார்.
இணை பிரியாத நண்பர்களாக இருந்தவர்கள் பிரிந்ததுதான் காலம் செய்த கோலம். யோசித்துப் பார்த்தால் இந்த இரு பிரதான கட்சிகளும் இணைந்தே இருந்திருந்தால் தமிழ் நாட்டில்  எதிர்க்கட்சியே இருந்திருக்காது.
இந்தப் புத்தகத்தில் எம்ஜியார் நடித்துப் புகழ்பெற்ற 'மருத நாட்டு இளவரசி' என்ற திரைப்படத்திற்கு கலைஞர் எழுதிய வசனத்தைப் பற்றி மிகவும் வியந்து பாராட்டுகிறார்.
எம்ஜியார் ஒரு காலகட்டத்தில் இரு கட்சிகளையும் மீண்டும் இணைத்துவிட விரும்பினார். அதற்கான பேச்சு வார்த்தைகள் முடிந்து, கலைஞர் கட்சித்தலைவராகவும், எம்ஜியாரே முதலமைச்சராக தொடரவும் கலைஞர் ஒத்துக்கொண்டார். ஆனால் அதற்கு தடைபோட்டது ஜெயலலிதா என்று சொல்லுகிறார்கள்.
Image result for MGR with karunanidhi
MGR with Periyar, Anna and Karunanidhi
மீண்டும் தன் இறுதி நாட்களில் திமுகவுடன் கட்சியை இணைத்துவிடத்துடித்தார். ஆனால் அது நடைபெறாமலேயே இறந்துபோனார். ஆனால் தன் கட்சியை ஜெயலலிதா வழிநடத்துவார் என்பதை அவர் எந்தக் காலக்கட்டத்திலும்  வெளியே சொன்னதில்லை. அவர் கடைசியில் கருணாநிதியை சந்திக்க விரும்பி அதனை கூட இருந்தவர் தடை செய்துவிட்டதாகவும் புரளி உள்ளது. 

தொடரும்

Tuesday, October 25, 2016

கண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் !!!!!!!!!!!

சீனாவில் பரதேசி -26
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.html

Image result for mao's marble statue inside the Maos memorial
Marble statue at the Memorial

எனக்கு முன்னாலும் பின்னாலும் இருந்தவர்கள் எதுவும் பேசாமல் மிகவும் அமைதியாக ஒரு சோக முகத்தோடு இருந்தனர். போலீஸ் மீதிருந்த பயத்தாலா இல்லை தங்கள் தலைவரின் மேலிருந்து மரியாதையாலா என்று தெரியவில்லை.ஏதோ ஒரு இறுதி யாத்திரையில் நடக்கும் மெளன ஊர்வலத்தில் கலந்து கொள்வது போன்ற  பிரம்மை எனக்கு இருந்தது. ஒரு சிறு வெராண்டாவைக் கடந்து வந்த மிகப்பெரிய ஹாலில் மாவோ சேதுங்கின் ஒரு மாபெரும் மார்பிள் சிலை இருந்தது. அதனைச் சுற்றிலும் ஏராளமான  பூந்தொட்டிகள் இருந்தன. பூக்கள் கொண்டு வந்தவர்களையும்  அங்கேயே வைக்கப் பணித்தனர். பூங்கொத்துகளும் அங்கு குவிந்திருந்தன.
Image result for mao's temple
Maos Temple
அந்த மார்பிள் சிலை மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தது. பளபளக்கும் வெள்ளை மார்பிளில் செய்யப்பட்டிருந்தது. பார்த்த எனக்கு அது ஒரே கல் போலத் தெரிந்தது.  மாவோவின் உடல் இருக்கிறது என்று சொன்னார்களே இங்கே வெறும் சிலை மட்டும்தானே இருக்கிறது. பூக்கள் கொண்டு வந்தவர்களையும் அவற்றை இங்கேயே வைக்கச் சொல்கிறார்களே என்று நினைத்தேன். அந்த சிலையின் முன்னால் அங்கு வந்த அனைவரும் கடவுளை வணங்குவது போல் குனிந்து குனிந்து வணங்கினர். சிலர் மண்டியிட்டு வணங்கினர். சிலர் தங்களின் நெற்றி தரையில் படுமளவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்கள். அப்போதுதான் தெரிந்தது, சீன மக்கள் அவரை எவ்வளவு உயர்வாக மதிக்கிறார்கள் என்பது. அது 'மாவோ ஆலயம்' என்று அழைக்கப்படுவதன் அர்த்தமும் அப்போதுதான் விளங்கியது.

வரிசை மீண்டும் மெதுவாகி ஒரு கட்டத்தில் அப்படியே நின்றுவிட்டது.அங்கு நின்றிருந்த போலீஸ்காரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறுபுறம் ஒரு குறுகலான வழியில் வழி நடத்த,  அங்கு மஞ்சள் வெளிச்சம் கண்ணைப் பறித்தது. சுற்றிலும் இருந்த பூந்தொட்டிகளின் நடுவே>>>>>>> ஆம் அங்கேதான் இருந்தது. என்னால் நம்ப முடியவில்லை. ஒரு உயரமான பீடத்தில் ஒரு பெரிய கண்ணாடிப் பேழையில் மாவோவின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

ஒளி வெள்ளத்தில் கண்ணாடிப்பேழையில் இருந்த மாவோ சேதுங் மடிப்புக்கலையாத உடையில் படுத்திருந்தார். முகம் அதீத  மஞ்சளாய் இருந்தது, வெளிச்சத்தாலா அல்லது அவருடைய நிறத்தாலா என்று தெரியவில்லை. சில சமயங்களில் எம்பார்மிங் செய்யும்போது செலுத்தப்படும் வேதியக்கலவைகளால் நிறம் மாறிவிடுவது உண்டு. எனவே தான் பாடம் செய்வதற்கு முன்பு நபரின் நல்ல நிறமுள்ள புகைப்படத்தை கொடுக்க வேண்டும். சமீபத்தில் நியூயார்க்கில் எனக்கு பலகாலம் தெரிந்த ஒரு சகோதரி இறந்து போனார்கள். அதன் வியூவிங்கிற்கு நான் சென்றபோது பெட்டியில் இருந்த உருவத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன். எனக்குத் தெரிந்த சகோதரியின் முகம் மிகவும் கறுத்துப் போய் உருமாறி, அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தது. இது எம்பார்மிங் கோளாறு என்று உடனே தெரிந்து கொண்டேன்.  

Image result for mao's temple

ஆனால் மாவோ வின் உடல் கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகியும் நேற்றுதான் இறந்ததுபோல இருந்தது. முகம், முடி, கைகள், உடை என எல்லாமே புத்தம் புதிதாக தெரிந்தன.

அதுவரையில் அதனைப் பார்க்க ஆவலாயிருந்த எனக்கு திடீரென்று பிணவறைக்குள் நுழைந்ததுபோல ஒரு அருவெறுப்பு எழுந்தது. அங்கிருந்த ஒரு வித மணம், பூக்களின் மணம் இவையெல்லாம் இனணந்து அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கியிருக்கலாம் என்று நினைக்கிறேன். அதோடு அந்த மணம் ஒரு கிறுகிறுப்பை உருவாக்கி குமட்டிக் கொண்டு வந்தது. அதன்பின் நான் வந்தேனா அல்லது பிறரால் தள்ளப்பட்டு வந்தேனா என்று தெரியவில்லை. ஆனால் வெளியே வந்துவிட்டேன்.  

நீண்ட படிகளில் இறங்கி வந்தேன். பின்புற வழியாக நுழைந்து முன்புறமாக வெளியேறி வந்து கீழிறங்கி  திரும்பி அன்னாந்து பார்த்தேன். பிரம்மாண்டமான மிகவும் உயரமான அந்தக் கட்டடம் தெரிந்தது. ஒரே ஒரு உடலுக்காக இவ்வளவோ பெரிய கட்டிடமா என்று ஆச்சரியமாக இருந்தது.

உலகத்தில் எத்தனையோ பேர் பிறந்து ஊர் பேர் தெரியாமல் மறைந்து விடுகிறார்கள். ஆனால் ஒருசிலர் பலதலைமுறைகளுக்கு அழியாப்புகழ் பெற்று மக்கள் கொண்டாடும் நிலையில் இறந்தும் வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும் போது ஏன் எப்படி எதனால் என்று ஒன்றும் புரியவில்லை.

Paradesi at the Memorial

முன்புறம் அழகிய சிறிய பூங்கா இருந்தது. அதில் சில தியாகிகள், சீன வீரர்கள் சிலை இருந்தது. அதில் நின்று சில படங்களை எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் பார்த்தேன்.

In front of the Memorial


கொஞ்சம் தள்ளி முன்னால் பழமையான ஒரு  அலங்கார வாயில் இருந்தது, பழையது என்றாலும் புதுப்பிக்கப்பட்டு பளிச் சென்ற வண்ணங்கள் பூசப்பட்டு மிகமிக உயரமாக நின்றது. பல அடுக்குகளைக் கொண்ட இதுதான் நான் நான் பார்க்கப்போகும் அடுத்த இடமான ஜென்சியாங்மென் என்று புரிந்து கொண்டேன்.

இந்த லீ எங்கே போனான் என்று யோசித்துக் கொண்டு ஒரு ஓரமாக நின்று கொண்டு காத்திருந்தேன்.


-தொடரும்.

Monday, October 17, 2016

சீன அரசால் தடை செய்யப்பட்ட மாவோ சேதுங்கின் மூன்றாம் மனைவி !!!!!!

சீனாவில் பரதேசி -25
Chairman Mao Memorial Hall
Mao's Memorial Hall.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க   இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2016/09/blog-post_26.html
'சேர்மன் மாவோ' மெம்மோரியல் ஹால்' என்று அழைக்கப்படும் மாவோ சேதுங்கின் நினைவுக்கட்டிடம் என் முன்னால் பிரம்மாண்டமாக நின்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவின் சேர்மனாக 1943லும், சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் சேர்மனாக 1945 முதல் அவர் இறந்த 1976 வரையும் இருந்ததால் இன்றும் அவர் சேர்மன் என்றே அழைக்கப்படுகிறார்.
மாவோ தன் உடலை எரித்துவிடும்படி சொன்னாலும் அவருடைய விருப்பத்திற்கு மாறாக அவர் உடல் பாடம் செய்யப்பட்டது. இது இப்போது உலகம் எங்குமிருந்து மக்கள் வந்து பார்க்கும் முக்கிய சுற்றுலாத்தலமாகி விட்டது. 'கேட் ஆஃப் சைனா' இருந்த இடத்தில்தான் இந்த நினைவகம் கட்டப்பட்டிருக்கிறது.
1976 செப்டம்பரில் இறந்த அவருக்கு, நவம்பர் 1976ல் இந்த நினைவகம் கட்ட ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 1977ல் முடிக்கப்பட்டது. ஹூவா குவாஃபெங்க்  என்பவர்தான். இந்த கட்டிட வேலை நடைபெற்றபோது மேற்பார்வையிட்டு தன்னுடைய கையெழுத்தையும் இட்டிருக்கிறார். இந்தக்கட்டிடத்தின் அமைப்பு மற்றும் வரைபடத்தை உருவாக்க நாடு முழுதிலும் உள்ள மக்களின் கருத்து கேட்கப்பட்டதோடு, சுமார் ஏழு லட்சம் பேர்கள் தன்னார்வத்துடன் எல்லா இடங்களிலுமிருந்து வந்து பணியாற்றினார்கள். மேலும், பயன்படுத்தப்பட்ட பொருட்களும் நாடு முழுவதிலுமிருந்து கொண்டு வரப்பட்டன. உதாரணமாக கிரானைட் கற்கள் சிச்வான் (Sichuan Porvince) பகுதியிலிருந்தும், போர்சலின் பிளேட்டுகள் குவாங்டாங்  (Guangdang) பகுதியிலிருந்தும், பைன் மரங்கள் ஷான்ஷி (shaanxi) யிலிருந்தும் , வண்ண கூழாங்கற்கள் நான் ஜிங்கிலிருந்தும் (Nanjing) குவார்ட்ஸ் கற்கள் குன்லுன் மலையிலிருந்தும் (Kunlun Mountains), கற்கள் இமய மலைப்பகுதியிலுருந்தும் கொண்டுவரப்பட்டனவாம். மணல் கூட தைவான் பகுதியிலிருந்து வந்ததாம். சீனாவுக்கு தைவான் மேலுள்ள உரிமையை உறுதிப்படுத்தவும் இது செய்யப்பட்டது என்கிறார்கள்.
Image result for sun yat sen
Sun Yatsan
1925ல் சன் யாட்சன் இறந்துபோனபோது, அவரை வைப்பதற்காக ரஷ்யா ஒரு கிறிஸ்டல் கண்ணாடிப்பெட்டியை அளித்தது. முதலில் அதே பெட்டியைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தார்கள். ஆனால் மாவோ, சன்யாட்சென்னை விட உயரமானவர் என்பதால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது.
கிறிஸ்டல் கண்ணாடிப் பெட்டி செய்யவும் போட்டி போட்டுக் கொண்டு பல நிறுவனங்கள் மொத்தம் 24 பெட்டிகளை கொண்டு வந்தனர். அதில் சிறந்த ஒன்றான 608-ஆவது தயாரிப்பு நிறுவனத்தின் பெட்டி தேர்வு செய்யப்பட்டது.
மாவோ சேதுங்கின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நினைவகத்தை அவருடைய பிறந்த நாளிலும், மறைந்த நாளிலுமாக ஆண்டிற்கு இருமுறை வந்து பார்க்கிறார்கள்.
Image result for He Zizhen
Mao with He Zichen
ஏதோ சில காரணங்களுக்காக மாவோவின் மூன்றாவது மனைவி ஹி ஜிஜென் (He zichen) மசூலியத்திற்கு வரக் கூடாது என்று சீன அரசால் தடை செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஒரு வருடமாக தொடர்ந்து வேண்டிக் கேட்டுக் கொண்டதன் மூலம் ஒரே ஒரு முறை பல நிபந்தனைகளுடன் ரகசியமாக அழைத்துவரப்பட்டார்.
He Zizhen.jpg
He Zichen
அந்த நிபந்தனைகள், அழக்கூடாது, எந்த சத்தமும் போடக்கூடாது பத்திரிக்கைக் காரர்களை சந்திக்கக்கூடாது ஆகியவை. ஆனால் கணவனின் உடலோடு ஒரேயொரு புகைப்படம் மட்டும் எடுக்க அனுமதிக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா என்று நினைத்துக் கொண்டேன்.மாவோவுக்கு நான்கு மனைவிகள் என்பது கூடுதல் தகவல் .
லீ என்னை உள்ளே அனுப்பிவிட்டு, கட்டிடத்தின் மறுபகுதியில் சந்திப்பதாகச் சொல்லி அகன்றான். தங்கள் தலைவரைக் காணும் ஆர்வத்தில் பல சீனர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். என்னைத்தவிர வேறு வெளி நாட்டு டூரிஸ்ட்டுகளை நான் அங்கே பார்க்கவில்லை. ஒருவேளை இனிமேல் வரலாம். வரிசை மெதுவாக நகர்ந்தது. சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு இருந்தது. வழியில் பூங்கொத்துகளை விற்றுக் கொண்டிருந்தனர். அநேகமாக எனக்கு முன்னால் நின்ற அனைவரும், என் பின்னால் நின்றவர்களும் பூவை வாங்கிக் கொண்டார்கள். நான் மட்டும்தான் வாங்கவில்லை. பிரமாண்டமான கட்டிடத்தின் பின்புற வழியாக நுழைந்தேன்.   வரும்வழியில் சதுக்கத்தின் நுழைவாயிலேயே ஏற்கனவே சோதனை முடிந்து விட்டதால் மறுபடியும் எந்த சோதனையும் இல்லாமல் உள்ளே பல படிகளில் ஏறி கட்டிடத்தில் நுழைந்தேன்.

தொடரும்

Thursday, October 13, 2016

இளையராஜாவிடம் மாட்டிய பாடகர் மனோ!!!!!!

அமெரிக்காவில் இளையராஜா பகுதி -3

Image result for mano with ilayaraja
Photo courtesy: Chakpak.com 
அடுத்து வந்த பாடலைப்பாட வழக்கம்போல் கார்த்திக் துள்ளிக்குதித்து வந்து, துறுதுறுவென்று அங்குமிங்கும் அலைபாய்ந்து நிற்பதைப்பார்த்த இளையராஜா, "எப்பவும் ஓடிப்போற மாதிரியே வரியே ", என்று கலாய்க்க கார்த்திக் சிறிது வழிந்தார். அவருடன் அனிதா இணைந்து கொள்ள, "வேதம் அனுதினம் ஒரு கானம்" என்று தெலுங்கில் ஆரம்பித்து தமிழில் முடித்தனர். அனிதாவின் அருமையான குரலைக்கேட்டு மயங்கிய ரசிகர் ஒருவர் ,அனிதா தன் இடத்திற்குச் சென்றபோது 'அனிதா அனிதா" என்று அரற்றியது அரங்கில் எல்லோருக்கும் கேட்க, சிரிப்பொலி எழுந்தது. அனிதா சற்றே நாணத்துடன் போய் அமர்ந்தார்.
Karthik
Karthik Singing
அடுத்து வீணையின் நாதம் எழுந்து BGM  ஆரம்பிக்க பலத்த கைதட்டல் எழுந்தது. Prelude & interlude என்று BGM -க்கும் கைதட்டல் வாங்கும் ரே இசையமைப்பாளர் இளையராஜாவாகத்தான் இருக்கும். மனோவும் சுறுமுகியும் இணைந்து "பொத்திவச்ச மல்லிகை மொட்டை" நோகாமல் பிரித்தனர். SPB,  ஜானகி பாடி பாரதிராஜாவின் மண் வாசனையில் இடம்பெற்ற பாடல். இளையராஜாவின் மெலடிகளில் தலைசிறந்த ஒன்றாகும். இசை வழிந்து காதில் தேனாக பாய்ந்தது. அச்சரம் பிசகாமல் இசைக்குழு அப்படியே வாசித்தார்கள். மனோ சுறுமுகியின் குரல்கள் நன்கு பொருந்தின. பாடி முடித்து  அவர்கள் கிளம்பும் போது மனோவைக் கூப்பிட்டார் இளையராஜா.
"முதல்  சரணத்தை எப்படிப்பாடினாய் ?"
“மாலையிடக் காத்து அள்ளியிருக்கு"( பாடுகிறார்)
"அந்த கடைசி வரியை திரும்பச்சொல்லு.
"அள்ளியிருக்கு".
"அது அள்ளியிருக்கு இல்லை அல்லியிருக்கு. அல்லிப் பூ இருக்கு என்று அர்த்தம்.  அதனாலதான் அடுத்த வரி இறுதியா சொல்லியிருக்கு என்று வருது. அள்ளி என்று வந்தால் கிள்ளி என்றுதான் வரும்.( அரங்கைப்பார்த்து) இப்படித்தான் மனோ வந்து என்னிடம் அடிக்கடி மாட்டிக் கொள்வான்"
மனோ பம்மிக்குனிந்து மீண்டும் சரியாக உச்சரித்துச் சென்றார்.
Sadhna Sargam
Sadhana with Anitha
இளையராஜாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது இன்னொன்று, உச்சரிப்புச் சுத்தம். ஏ.ஆர். ரகுமானிடம் பிடிக்காத ஒன்று உச்சரிப்பு சரியில்லாததுதான். அதோடு இளையராஜா நல்ல கவிஞரும் கூட. பல சூப்பர் ஹிட் பாடல்களை அவரே எழுதியதோடு, பலவற்றிற்கு பல்லவியை அவரே எழுதியிருக்கிறார். அல்லி என்று வருவதால்தான் அடுத்த வரியில் சொல்லி என்று வருகிறது என்று சொல்லும்போது அவருடைய தமிழ் அறிவும், கவிதை உணர்வும் வெளிப்பட்டது. ஆனால் பாடலை எழுதிய வைரமுத்துவைப்பற்றி ம்ஹிம் மூசசு விடவில்லை. இளையராஜாவிடம் பிடிக்காத ஒன்றில் இது தலையாயது.

மனோவும் சாதனாவும் அடுத்து வந்து "மாத்தலாடி"னார்கள். கேட்காத தெலுங்குப் பாடல் அது.
அடுத்து வந்த BGM  ஆரம்பித்தவுடன் என் கண்களில் நீர் நிரம்பியது.  ஷ்யாம்  வந்து அந்தப்பாடலைப்பாட என்னை அறியாமல் கண்ணீர் தழும்பி வடிந்தது. பாட்டு முடியும்வரை நிற்கவில்லை. இந்தப்பாடலை எப்போது கேட்டாலும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. செல்ஃப் ஹிப்னாசிஸ் செய்து பார்க்க வேண்டும். அந்தப்பாடல் "கோடை கால காற்றே" என்பது. மலேசியா வாசுதேவன் இளையராஜாவுக்குப் பாடிய ஒரு சில மெலடிகளில்  இது முக்கியமான ஒன்று.
அடுத்து மனோ வந்து தெரியாத, அவருக்குத்தெரியாத அல்ல எனக்குத் தெரியாத ஒரு பாடலை இளையராஜா அவரிடம் தெலுங்கிலேயும் உச்சரிப்பு சரியில்லை என்று சொல்லித்திருத்தினார். அப்படிப்பாடினால் அந்தப் பாடலின் அர்த்தம் மாறிவிடும் என்பதை தெலுங்கிலேயே மாத்தலாடினார். தெலுங்கு மொழியிலும்   இருந்த இளையராஜாவின் பாண்டித்யம் வியக்கவைத்தது. சரியாகப் பாடிவிட்டு அதன் பின்னரும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.இளையராஜா அவரிடம் கேட்டார்
“ஏன் நிற்கிறாய்?”
"அடுத்த பாட்டு என்ன?"
"என்கிட்டயே கேள்வி கேட்கிறாயா?”
"இல்லை அடுத்த பாட்டும் நான் பாடனுமான்னு கேட்டேன்"
 இளையராஜா மக்களைப் பார்த்து "பாருங்க என்னயே  கேள்வி கேட்கிறான். என்ன பாடப்போற? , என்ன பாடலைப் பாடி கிழிக்கப் போறன்னு கேட்கிறான். நான் பாத்து வளர்ந்த பய, என்னைக் கேள்வி கேட்கிறான்" ,என்று சொல்லிக் கொண்டே போக, மனோ வந்து காலில் விழ சபை ஆரவாரம் செய்து மகிழ்ந்தது.
இளையராஜா அன்றைய தினம் ஆரம்ப முதல் முடிவு வரை நல்ல மூடுல இருந்தது எல்லோருக்கும் ஆறுதலைத்தந்தது. ஆனால் பாடகர்கள் மற்றும் ஆர்க்கெஸ்ட்ராவில்   ஒரு சிறு பதட்டம் ஒளிந்திருந்தது கண்கூடு .
அடுத்து மிகவும் வித்தியாசமாக செந்தில், அச்சு அசல் கமல் போல பேச சுறுமுகி வந்து "கண்மணி அன்போட காதலன்" என்ற அபிராமிப் பாடலைப்பாடி அப்ளாஸ் அள்ளினார். அடுத்து  கார்த்திக்கும் அனிதாவும் 'ஏகாந்த வேளை"யை தெலுங்கில் பாடி அசத்தினார். அதன்பின் வந்த சித்ரா "நின்னுக்கோரி வர்ணம் வரணும்" என பாடலை அட்டகாசமாக ஆரம்பித்தார். ஆர்க்கெஸ்ட்ரா தன் அற்புதத்திறமையைக் காட்டி அப்படியே ஒரிஜினலாக வாசித்தார்கள். மணி 10.30 வழக்கம்போலஎன்னுடைய அமெரிக்கன் கல்லூரி வகுப்புத் தோழர்களின் 'வாட்ஸ் அப்' குரூப்பில் நண்பன் சாரதா மெஸ் ஓனர் ராஜசேகர் வந்து GM என்றான். இளையராஜாவின் பரம பக்தன். உடனே வாட்ஸாப்பில் அவனைக் கூப்பிட்டுவிட்டு ",இதைக் கேளு", என்று சொல்லிவிட்டு அப்படியே டோனை ஸ்பீக்கருக்கு முன்னால் பிடித்தேன். நின்னுக்கோரியை முடியும்வரை வைத்துவிட்டு "எப்படி" என்று கேட்டேன். ஆள் அசந்துபோனான். சென்னையில் உள்ள நண்பனுக்கு நியூஜெர்சியில் நடக்கும் இளையராஜாவின் கச்சேரியை லை லைவ் ரிலே செய்ததை கேள்விப்பட்டியிருக்கிறீர்களா ?. ராஜசேகர் அதனை குரூப்பில் பகிர்ந்து நன்றி சொன்னான்.
கார்த்திக், பிரியா, யுவன் வந்து "அடியே நான் நில்லுன்னா நிக்காதடி" என்ற பாடலை அதிர அதிர பாட, யுவன் பாடாமல் கார்த்திக்கே முழுதும் பாடியிருந்தால் இன்னும்   நன்றாக இருந்திருக்கும் என நினைத்தேன்.
அதன்பின்னர் கார்த்திக்கும் யுவனும் "போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி" என்ற பாடலைப் பாடினர். இதில் யுவன் பரவாயில்லை. ஏனென்றால் இதே பாடலைப் பலமுறை பாடியிருக்கிறார். ரொம்ப நேரம் பாடாமல் இருந்த இளையராஜா "வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" என்ற பாடலைப்பாடினார். யுவன் குரலுக்கு இளையராஜாவின் குரல் இந்த வயதிலும் நன்றாகவே இருந்தது.
Ilayaraja
Ilayaraja at Prudential NJ
கீழே இருந்த VIP களில் DSP என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் டிரம்ஸ் சிவமணி இருந்தனர். கடைசி வரை மேடைக்கு கூப்பிடவே இல்லை. மேலே உள்ள திரையில் பார்க்கும்போது தான் தெரிந்தது. டிரம்ஸ் வாசித்தவர்களுள் ஒருவன் வெள்ளைக்காரன், நியுயார்க்கைச் சேர்ந்தவனாம். இளையராஜாவின் US டூரைப்பற்றி  கேள்விப்பட்டு , தன்னுடைய சொந்தக்கச்சேரிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருமாதமாக இவர்களுடன் இருப்பதாக சொன்னார் .

 அடுத்து வந்த கார்த்திக்கும் மனோவும் எவர்கிரீன் பாடலான "காட்டுக்குயிலு மனசுக்குள்ள" என்ற பாடலை அற்புதமாகப் பாடினர். கார்த்திக் தொடர்ந்து "மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு"  என்ற பாடலை சிறப்பாகப்பாடினார்.  அதன்பின் 'மனோ ஏ ஆத்தா ஆத்தோரமா" என்ற பாடலைப்பாட சில  பேர் பயந்து பயந்து ஆட ஆரம்பித்தனர். அடுத்து கார்த்திக்கும் மனோவும் இணைந்து "பொதுவாக எம்மனசு தங்கம்" என்று பாட ஆரம்பிக்க, இளையராஜா அதை நிறுத்திவிட்டு, "பொதுவாக எம் மனசு தங்கம்" என்ற வரியை மட்டும் பாடிவிட்டு அப்படியே இறங்கிப்போனார். கொஞ்சம் ரிலாக்சான கூட்டம் ஆங்காங்கே எழுந்து ஆட ஆரம்பித்தது.கச்சேரி முடியும் தருணம் வந்துவிட்டது என நினைக்கும்போதே திடீரென்று சவுண்ட் சிஸ்டம் அப்படியே நின்றுவிட்டது. எல்லோரும் திடுக்கிட்டு உட்கார்ந்து விட மணியைப் பார்த்த எனக்கு உடனே புரிந்துவிட்டது. மணி 11, அரங்கு 11 மணிவரை தான் அனுமதிக்கப்படும். அதற்குள் முடிக்கவில்லையென்பதால் ஆஃப்  செய்துவிட்டார்கள். மனோ  வந்து 'குட்நைட் எவ்ரி படி' என்று சத்தமாகச்  சொல்ல, புரிந்து கொண்ட மக்கள் எழுந்தார்கள். அப்போதுதான் ஞாபகம் வந்தது. பார்க்கிங் கூட 11 மணி வரைதான் என்று. மடமடவென்று வந்து வண்டியை எடுத்துக் கொண்டு, சுமார் 1 1/2 மணி நேர டிரைவ்வில்  வீடு சேர்ந்தோம்.
Ilayaraja
With Suresh, CEO of  8k Miles  Radio
தேர்ந்தெடுத்த பாடல்கள், அழகிய அரங்கு, அருமையான சவுண்ட் சிஸ்டம், இளையராஜாவின் ஆளுமை, திறமையான இசைக்கலைஞர்கள், அட்டகாசமான பாடல்கள், ராஜாவின் நல்ல மூட் என்று மிக அருமையான இசைக் கச்சேரி கொடுத்த திருப்தி ரொம்ப நாள் மனதில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முற்றும்