Thursday, April 24, 2014

நியூயார்க்கில் மகாநதி ஷோபனா !!!!!!!!!!!!!


தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் விதத்திலும், சித்திரைத் திருநாளைக் கொண்டாடும் விதத்திலும், நியூயார்க் தமிழ்ச்சங்கம், மகாநதி ஷோபனா அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையின் டிசம்பர் கால இசை சீசனில் "சென்னையில் திருவையாறு" நிகழ்ச்சியில் ஷோபனா அவர்களின் கச்சேரியை கண்டும் கேட்டும் மகிழ்ந்திருக்கிறேன். எனவே ஆவலோடு சென்றேன்.
கடந்த சனியன்று மாலை (ஏப்ரல் 19, 2014) குயின்சில் உள்ள ஃபிளஷிங்கில்  உள்ள ஒரு பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.
தமிழ்ச்சங்க பொறுப்பாளர் ஆல்பர்ட் செல்லத்துரை அவர்கள்  வரவேற்று டிக்கெட்டுகள் வழங்கினார். அரங்கத்திற்குள் என்னையும் சேர்த்து ஒரு ஐம்பது பேர்தான் இருந்தனர். கர்நாடக இசை ரசிகர்கள் நியூயார்க்கில் அவ்வளவுதானா என்று ஒரு வருத்தம் வந்தாலும், ஒருவேளை வழக்கம்போல் தாமதமாக வருவார்கள் என நினைத்துக்கொண்டேன்.
அதற்குள் பரதேசி பிளாக்கை படித்த, கேள்விப்பட்ட பலரும் வந்து கைகுலுக்கினார்கள். குறிப்பாக தற்போதைய தலைவர் விஜயகுமார், செயலாளர் ராம்மோகன் ,பொறுப்பாளர்கள் காஞ்சனா பூலா ,வனஜா பார்த்தசாரதி ஆகியோர்.
புதிதாக பொருளாளராகப் பொறுப்பேற்றிருக்கும் ரங்கா புருஷோத்தமன் என்னுடைய நெருங்கிய நண்பர்.  CPA முடித்து ஒரு நிதிநிறுவனத்தின் தலைவராக இருப்பவர். சரியான ஆளைத்தான் பொருளாளராகப் போட்டிருக்கிறார்கள்.
Ranga  on my right Bala on the left

மேடை அலங்காரங்கள் மற்றும் செளன்ட் சிஸ்டம் ரெடியாக இருந்தது. பக்கவாத்தியக் கலைஞர்களும் சுருதி சேர்த்து ரெடியாக, தமிழ்ச்சங்க பொறுப்பாளர்கள் புடை சூழ தங்கத்தாரகையாய் வைரங்கள் ஜொலிக்க மேடையேறி, விரிந்த தாமரையாய் அமர்ந்து, மலர்ந்து தகத்தக தகாயமாய் மின்னும்போதே பாதி மக்களின் மனதைக் கவர்ந்துவிட்டார் ஷோபனா.
குரலுக்கு அனுதினம் சாதகம் செய்தால்தான் சாதனை செய்ய முடியும் என்பார்கள். சப்பணமிட்டு மூன்று மணிநேரம் உட்கார்ந்து பாடுவதும் சாதனைதான். நம்மால ஒரு பத்து நிமிஷம் கூட உட்கார முடியாது.
கச்சேரிகளில் இப்போதெல்லாம் தம்புராவைப் பார்க்க முடிவதில்லை, எல்லாமே எலக்ட்ரானிக் ஸ்ருதிப்பெட்டிதான். ஸ்ருதிப்பெட்டியை ஆன் செய்ததும் பக்க வாத்தியங்களான வயலின், மிருதங்கம் மற்றும் தபேலாக்காரர்களும் தட்டிக்கொட்டி சுருதி சேர்த்துக்கொள்ள, ஷோபனா மெதுவாக இதழ் பிரித்து ஆலாபனையை ஆரம்பித்தார்.
பிள்ளையார் சுழியாக நாட்டை ராகத்தில், ஆதிதாளத்தில் "மஹா கணபதிம்" வந்து விழுந்தது. இதே பாடலை பலமுறை பலபேர் பாடியதைக் கேட்டிருக்கிறேன். குறிப்பாக சிந்துபைரவியில் ஜேசுதாஸ் பாடியபின் இந்தப்பாட்டு மிகவும் பிரபலமடைந்தது. ஆனால் ஷோபனா இந்தப் பாடலை எளிமையாகவும், அதே சமயம் இனிமையாகவும் கையாண்டார். பாட ஆரம்பித்தபோது பக்க வாத்தியங்களின் இசை, ஷோபனாவின்  குரலை அமிழ்த்த முயல, PA சிஸ்டத்தில் ஒரு சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்தவுடன்  , கச்சேரி களை கட்டியது.
இரண்டாவதாக ஒரு தமிழ்ப்பாடலாக "மாமயூர மீதிலேறி வா" என்ற முருகன் பாடல். இது பிலஹரி ராகத்தில் தி தாளத்தில் நித்யஸ்ரீ பாடிப் புகழடைந்த ஒரு பாடல்.
அதன்பின்னர் ஊத்துக்காடு வெங்கட்ட சுப்பு ஐயர் இயற்றிய "அலைபாயுதே" வந்தது. ராகம் கானடா என்றாலும் தாளம் அதே ஆதிதான். ஒரு பாடலுக்கு பக்க வாத்தியங்களாக மிருதங்கம், தபேலா இரண்டையும் ஒரே சமயத்தில் வாசிக்கும்போது இருவருக்கும் கோஆர்டினேஷன் மிக முக்கியம். இருவரும் அருமையாக வாசித்தார்கள்.
அடுத்த பாடல் தியாகராயர் கீர்த்தனைகளில் உலகப்புகழ் பெற்ற "மானச சஞ்சரரே" என்ற பாடல் ஷோபாவுடைய மெல்லிய குரலில் தேனாக ஒலித்தது. ஸ்யாமா ராகத்தில் மறுபடியும் தி தாளத்தில் வந்த பாடல்.  
பக்கத்திலிருந்த நண்பரிடம் சொன்னேன், "மிருதங்கத்தையும் தபேலாவையும் மறைத்தாற் போல இந்த மானிட்டரை வைத்துள்ளார்கள்.மானிட்டரை சற்றே நகர்த்தினால் நன்றாக இருக்கும்", என்று. என்ன ஆச்சரியம் நான் சொன்னது காதில் விழுந்ததுபோல் புதிதாக போட்டாகிராபர் அவதாரம் எடுத்துள்ள ஜெர்சி இசைக்குழுவைச் சேர்ந்த கிடாரிஸ்ட் ரமேஷ் ராமநாதன் போய் மானிட்டரை தள்ளி வைத்தார். இப்போது மேடையின் முழு வியூவும் நன்றாகத் தெரிந்தது.

அதை அடுத்து வந்த மூன்று பாடல்களும் தமிழ்ப்பாடல்கள்தான். குறிப்பாக நம்ம ராஜாஜி (ஆம் அவரேதான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்) அவர்கள் எழுதி M.S.சுப்புலட்சுமி அவர்களால் ஐ.நா சபையில் பாடிப்புகழடைந்த "குறையொன்றும் இல்லை" என்ற பாடல், கொஞ்சம் கூட இமிட்டேட் செய்யாமல் பாடினார். ராகமாலிகையில் அமைந்த இந்தப்பாடலும் ஆதிதாளம்தான். குறையொன்றும் சொல்லமுடியாது.
என்ன இது எல்லாமே ஆதிதாளமாக வருகிறதே, பக்க வாத்தியக்காரர்களுக்கு வேறு தாளம் வராதா என்று சந்தேகப்பட்ட சமயத்தில், அதைப்போக்கும் விதமாக ரூபக தாளத்தில் பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளியே" ஊற்றாக வந்தது. ராகமாலிகையை அநாயசமாகக் கையாண்டார் ஷோபனா.
Rammohan,Vijaykumar,Kanjana with Shobana 

சிறியதொரு இடைவேளையில், தலைமை விருந்தினராக வந்திருந்த நியூயார்க் வாழ் சாவித்திரி ராமநாதன் (பாம்பே சிஸ்டர்சின் இளைய சகோதரி) வந்து ஷோபனாவை கெளரவித்து, தமிழ்ச்சங்கம் சார்பாக “தமிழ் இசைப்பேரொளி”  என்று விருதை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த கிடார் பிரசன்னாவும் கெளரவிக்கப்பட்டார். இப்போது இவர் நியூயார்க்கில் வாழ்கிறார். வருங்காலத்தில் தமிழ்ச் சங்கத்தில் அவருடைய கச்சேரியை எதிர்பார்க்கலாம்.
Guitar Prasanna 

இடைவேளை முடிந்ததும் ஷோபனா பாடிய பாடல் “நீலகண்ட கருணாகரனே" என்ற பாகவதரின் பாடல். சமீபத்தில் விஜய் டிவியின் சூப்பர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதும் ஷோபனா இதே பாடலைப் பாடியதை பலபேர் பார்த்திருக்கலாம். இப்போது நேரில் பார்க்க ஒரு சந்தர்ப்பம். பின்னர்  "தந்தனானான" என்ற காவடிச்சிந்துப் பாடல் வந்து முடிய, சபையில் யாரோ சினிமாப்பாடல் பாடச்சொல்லிக் கேட்டனர். அப்போது, ஷோபனா அவர்கள் சிறுவயதில் மகாநதியில் பாடிய, இளையராஜா இசையில் வந்த "ஸ்ரீரங்க ரங்கநாதனே" என்ற பாடலைப் பாடினார். வல்லிசையிலிருந்து மெல்லிசைக்குத் தாவிய குரல் இனிமையாகவே ஒலித்தது. திரையிசையில் இவர் ஏன்  அதிகம் சோபிக்கவில்லையென வருத்தமாய் இருந்தது.       இறுதியில் முத்தாய்ப்பாக ஸ்ரீ அருணகிரி சுவாமிகளின் திருப்புகழ் பாடல்களில் TMS பாடி மிகப்பிரபலமடைந்த "முத்தைத்திரு பத்தி திருநகை " என்ற பாடலை கொஞ்சம் கூட மூச்சு வாங்காமல், அநாயச சாதகத்தில் பாடி பின் “வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர் ” பாடி முடிக்க கச்சேரி இனிதே முடிந்தது.
ஆரம்பத்தில் இருந்ததைவிட நிறையப்பேர் வந்திருந்தாலும் அரங்கம் பெரும்பாலும் காலியாகவே இருந்தது.
கச்சேரியின் பெரும் வெற்றிக்கு மேலும் ஒரு முக்கிய காரணம் மூன்று பக்க வாத்தியங்கள் தான். வயலின் வாசித்த கெளரி ராமகிருஷ்ணன் மிகுந்த அனுபவசாலி.  வானொலியிலும் தூர்தர்ஷனிலும் டாப் கிரேட் ஆர்டிஸ்ட். பல கர்நாடக விற்பன்னர்களுக்கு வாசித்தது மட்டுமல்லாது, வயலின் தனிக்கச்சேரியும் ஏராளமாகச் செய்திருக்கிறார். இங்கேயே வாழ்பவர். வயலின் தனி ஆவர்தனத்தில் வாசித்து அசத்த, பாராட்டும் வண்ணம் ஷோபனா பலமுறை புன்னகைத்தும், பதில் புன்னகையோ பேச்சோ எதுவுமில்லை. ஆனால் மாறாக அவருடைய வயலின் பேசியது, புன்னகைத்தது, சிரித்தது. 
தபேலா வாசித்த ரவீந்திர குமார்தாஸ், கனெக்டிகட்டிலிருந்து வந்திருந்தார். தமிழரல்ல, ஆனால் ஆடாத  குடுமியுடனும் அசையாத உடம்புடனும் விரல்கள் மட்டும் நர்த்தனமாட அருமையான நாதம் பிறந்தது.
யாழ்ப்பாணம் செந்தூரான்

மிருதங்கம் வாசித்த “யாழ்ப்பாணம் செந்தூரான்” இலங்கைத் தமிழன். சிறுவயதிலிருந்தே எனக்குத் தெரியும். இப்போது வளர்ந்த அழகிய இளைஞன். அவனுடைய வாசிப்பைப் பார்த்து நான் மட்டுமல்ல வந்திருந்த அனைவரும் அசந்துபோயினர். விரல்கள் புரோகிராம் செய்யப்பட்டு தானியங்கும் ரோபோ போல் வாசிக்க வாசிக்க, விரலசைவில் பெரும் வித்வத்வம் தெரிந்தது. உமையாள்புரம் சிவராமனின் சீடனல்லவா, சொல்லவா வேண்டும்.
முழுவதுமாகவே பக்திப்பாடல்கள் பாடாமல் பாரதியார், கவிமணி என்று சிலரின் தேசபக்திப் பாடல்களையும் பாடியிருக்கலாம் என்று நினைத்தேன். அதோடு மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதிய பொதுவான ஓரிரு கிருதிகளை பாடியிருக்கலாம். தமிழ்ச்சங்கத்தில் மற்ற மதத்தினரும் இருக்கிறார்களே.
எல்லோருக்கும் பெரும்பாலும் தெரிந்த பாடல்களே என்றாலும், வந்த அனைவருமே கர்நாடக சங்கீத ரசிகர்கள் என்று சொல்லமுடியாது. எனவே வழக்கமில்லை என்றாலும், யாருடைய பாடல் என்றும் ராகம் தாளத்தையும் சொல்லியிருந்தால் என்னைப்போல குறைந்த அறிவுள்ள பரதேசிகளுக்கு பிரயோஜனமாயிருந்திருக்கும். நன்கு அறிமுகமான பாடல்கள் என்பதும் அதிகம் தமிழ்ப் பாடல்கள் என்பதும் பிக் பிளஸ்.
மந்திர ஸ்தாயிலும் சரி, மத்திய ஸ்தாயி, தரஸ்தாயிலும் ஒரே கனத்துடன் இனிமையாக ஒலித்தது ஷோபனா குரல். குறிப்பாக மேல் பஞ்சமத்தில் மேலும் இனிமை சேர்ந்தது. பிர்காக்கள் பனியில் சறுக்கும் இக்லூ வண்டிபோல் அனாசயமாக வழுக்கி வழுக்கி விழ, ஸ்வரப்பிரஸ்தாரங்கள் துல்லியமாக ஒலித்தன. மொத்தத்தில்  காதில் தேன் பாய்ந்த கச்சேரி என்றே சொல்லலாம்.

மகாநதி ஷோபனா சிறுவயதிலிருந்து, 1500 பாடல்கள் அடங்கிய 130 ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறாராம். அவர் மேன்மேலும் வளர்ந்து புகழ்பெற பரதேசியின் வாழ்த்துக்கள். நல்ல ஒரு  மாலைப்பொழுதினை வழங்கிய நியூயார்க் தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் .


பின்குறிப்பு : பரதேசி, துருக்கி நாட்டுக்கு  பரதேசம் போவதால் வரும் திங்கள்கிழமை பதிவு  வராது. மறுபடியும் உங்களை வரும் வியாழனன்று சந்திக்கிறேன்.நன்றி  

Monday, April 21, 2014

வாடி என் கப்பங்கிழங்கே !!!!!!!!!!!!!


"டேய் ஆறுமுகம், கப்பக்கிழங்கு வேட்டைக்குப் போகலாமா?
"கொஞ்சம் இருடா ஓடைக்குப் போயிட்டு வந்துர்றேன்.வயிறு கொஞ்சம் கடமுடாங்குது".
“உனக்கு ஏன்டா எப்பவும் நேரங்  கேட்ட நேரத்தில வருது”.  
தம்பித் தோட்டம் மேல் நிலைப்பள்ளி, காந்திகிராமத்தில் பள்ளியைச் சுற்றிலும் பள்ளிக்குச் சொந்தமான வயல்களும் தோப்புகளும் உண்டு. தம்பித்தோட்டம் ஹாஸ்டலைச் சுற்றிலும் இடதுபுறம் தென்னந்தோப்பும், வலதுபுறம் வயல்வெளியில் கப்பக்கிழங்கும் போடுவார்கள்.

கப்பக்கிழங்குக்கு பல பெயர்கள் உண்டு. மதுரைப்பக்கம்தான் இதை கப்பக்கிழங்கு என்று சொல்வார்கள். திண்டுக்கல்லில் இதற்குப் பேர் குச்சிக்கிழங்கு அல்லது ஆழிவள்ளிக் கிழங்கு. சென்னையில் மரவள்ளிக்கிழங்கு.
நாற்சத்து அதிகம் உள்ளதால் இது உருளைக் கிழங்கை விட நல்லது. மலையாளிகளுக்கு இது திடமான காலை உணவு. நமது நாட்டில் பஞ்சம் வந்தபோது, பலபேர் உயிரை இந்தக் கிழங்குதான் காப்பாற்றியதாம்.
தேவதானப்பட்டியில் புதன்கிழமை நடக்கும் வாரச் சந்தையில்  எங்கம்மா தவறாது கப்பக்கிழங்கு வாங்கி வருவார்கள். நன்கு விளைந்த கிழங்கை செம்மண்ணுடன் வாங்குவார்கள். வீட்டில் அதனை நான்தான் கழுவிவிட்டு, அருவா மனையில் சிறிய துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் உள்ள நீரில் போடுவேன். பின்னர் கத்தியில் தோலை லேசாக கீறி உறித்தால் தோல் அப்படியே பெயர்ந்து வந்துவிடும். வெட்டும்போது ஒன்றிரண்டை பச்சையாக சாப்பிடுவேன். பின்னர் மீண்டும் கழுவி அம்மாவிடம் கொடுத்தால் வேகவைத்து கொடுப்பார்கள். நன்கு விளைந்த கிழங்கு பூவாய் மலர்ந்து மிகுந்த சுவையாயிருக்கும். ஆனால் என் வீட்டில் அப்பாவும் தம்பிகளும் தொட மாட்டார்கள். நானும் என் அம்மாவும் மட்டும் தான் ரசித்து ருசித்துச் சாப்பிடுவோம்.கப்பக்கிழங்கு பிடிக்கும்   என்பதால்  கப்பக்கிழங்கு சிப்சும் ரொம்ப பிடிக்கும்.

இங்கு நியூயார்க் வந்ததும் கடைகளில் இதைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தேன். மெக்சிகோ மக்களுக்கு இது முக்கிய உணவு. இங்கும் பல பெயர்கள் உண்டு. Tapioca, yuca, Casava என்று சொல்கிறார்கள். என் மனைவி சிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக மஞ்சள் தூவி தாளித்துக் கொடுப்பாள். அது வேறு சுவையாக இருக்கும்.
Add caption
பிஞ்சுக் கிழங்காய் இருந்தால் சரியாக மலராது. எவ்வளவு நேரம் வேக வைத்தாலும் மலராது. அது நன்றாகவும்  இருக்காது. ஆனால் தம்பித் தோட்டம் போன பின்னால் தான் கண்டுபிடித்தேன் பிஞ்சுக்கிழங்கை அப்படியே பச்சையாகச் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்குமென்பதை.
ஆறுமுகம் வந்தவுடன், "டேய் நல்லாக்கழுவிட்டயா" என்று கேட்டேன். முறைத்த அவனை தோளில் கைவைத்து அழைத்துக்கொண்டு போனேன். கப்பக்கிழங்கு வயல் முற்றிலுமாக வேலி அடைக்கப்பட்டது. வேலை செய்யும் ஆட்களைத்தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை. ஆறுமுகமும் நானும் நேராக வாட்மேன் தாத்தாவிடம் போனோம். "தாத்தா என்னமோ தெரியல, வயலுக்குள்ள போனாதான் நல்லா படிக்க முடியுது", என்றான் ஆறுமுகம்.
"தம்பி உள்ளே போகமுடியாது, கொஞ்ச நாளா எவனோ களவாணிப்பயக, பிஞ்சுச் செடியெல்லாம் பிடுங்கிப் போட்டுறாய்ங்க," என்றார் வாட்ச்மேன். ஆறுமுகம் என்னைப் பார்த்து கண்ணடித்தான்.
“ஒண்ணும் கவலப்படாதீங்க, நாங்க உள்ளே போனா, காவலும் இருப்போம்ல”, இது ஆறுமுகம். பாலுக்குக் காவல் பூனையா என்று நினைத்துக் கொண்டேன் .
"இல்லப்பா முடியாது, எனக்கு வேல போயிறும்", இது வாட்ச்மேன்.
"தாத்தா ஒண்ணும் கவலைப்படாத நாங்க பாத்துக்கிறோம்," என்று சொன்ன ஆறுமுகம், நைசாக வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை எடுத்து வாவகமாக உள்ளங்கையில் மறைத்துக் கொடுத்தான்.
சொக்கலால் பீடி குடிக்கும் வாட்ச்மேனுக்கு  சிகரெட் அதுவும் ஃபில்டர் சிகரெட் கிடைத்தால் விடுவாரா. "சரிசரி யார்ட்டயும் சொல்லாம உள்ளே போங்க என்று கேட்டை திறந்துவிட்டதோடு, சாவியையும் எங்களிடம் கொடுத்தார்.
உள்ளே சென்றோம், "போதுமாடா ஆல்ஃபி," என்றான் ஆறுமுகம். "ரொம்ப தேங்க்ஸ்டா" என்றேன் நான். அவனுக்கு கப்பக்கிழங்கு அவ்வளவாய் பிடிக்காது.  எனக்காகத்தான் வந்தான்.
உள்ளே வயலில் கப்பக்கிழங்குச் செடிகள் தளதளவென்று வளர்ந்திருந்தன. மாலை வெயிலில் பச்சைப் பசேலென்று தலையாட்டின. அன்று தான் தண்ணீர் பாய்ச்சியிருந்தார்கள்.வாரமொருமுறை பாய்ச்சினால் போதும். அதிக தண்ணீர் தேவைப்படாது. அதனால் தான் அந்த நாளைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் செடிகளை லேசாகப்பிடிங்கினாலே வந்துவிடும். ஈரமில்லாவிட்டால் செடிகளைப்பிடிங்கினாலும், வேரில் இருக்கும் கிழங்கு வராது.   
கொஞ்ச நேரம் படிப்பது போல பாவனை செய்தோம். அப்புறம் பதமாகப் பார்த்து ஒரு செடியைப் பிடிங்கினேன். ஈரப்பதத்துடன் இலகுவாக வந்தது. முற்றாத பிஞ்சுக் கிழங்குகள் நீள நீளமாய் வேரில் தொங்கின. இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும். கையிலிருந்த நகவெட்டியில் இருந்த கத்தியால் கிழங்கை வெட்டியெடுத்து நுனியை  வெட்டிவிட்டு தோலை உரித்துவிட்டு மடக்கென்று கடித்தேன். நீரும் சாருமாக இனிப்பாய் தொண்டையில் இறங்கியது. கொள்ளை ருசி. இன்னொரு துண்டை உடைத்து ஆறுமுகத்திடம் கொடுத்தேன். அவனும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, "நல்லாத்தேன் இருக்கு, திருட்டு மாங்காதான் இனிக்கும்பாய்ங்க, திருட்டு கிழங்கும் இனிப்பாய்த்தான்   இருக்கு” , என்றான் .
சூரியனும் சற்றே மறையத்துவங்கியது. தோலுரித்த சில கிழங்குகளை மடித்த கைலியில் (லுங்கி மற்றும் சாரம் என்றும் இதனை அழைப்பார்கள்) வைத்துக்கொண்டு வெளியே வந்தோம்.
ஆறுமுகம் ,"வாடா சாவியை வாட்ச்மேன் தாத்தாட்ட கொடுத்துட்டு வருவோம்".
"டேய் மடியில கிழங்கை வச்சிட்டு, வேணாம்டா நான் போறேன்." என்றான் .
"சும்மா வாடா, பொழுது சாய்ஞ்சிருச்சு, தாத்தாவுக்கு கண்ணு தெரியாது"
"ஆமா, நான்தான கிழங்கை எடுத்தேன், உன் கைலில என்னடா இருக்கு ?"
“வந்து வேடிக்கைய பாரு"
ஆறுமுகம் என்ன செய்யப்போகிறானோ என்று திகிலுடன் சென்றேன்.
வாட்ச்மேன் தாத்தா வீட்டு வாசலுக்குப் போய், கைலியை உதறி விட்டான். பிடுங்கிய செடிகளும், கிழங்கின் தோல்களும் அவர் வாசலில் விழுந்தன.
"ஏன்டா உனக்கு பைத்தியமா?’, என்றேன்.
“டேய் இதையெல்லாம் வயலுக்கு உள்ளேயே போட்டா, நாமதான் பிடுங்கினோம்னு தெரிஞ்சிறும்டா அதனால் தான் இப்படிச் செஞ்சேன்”.
வெளியே வந்த தாத்தாவிடம், “இந்தா சாவி, ஆமா இது என்ன உன் வாசல்ல செடியும் தோலுமா கிடக்கு, ஓரமாப் போடக் கூடாது?”, என்றானே பார்க்கனும் எனக்கு வாயடைச்சுப் போச்சு. 

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் :

 என்னுடைய ஒவ்வொரு பதிவையும் பலநூறு பேர் டிக்கிறீர்கள்.உங்களுடைய மேலான விமர்சனங்களை சுட்டிக்காட்டுங்கள். இன்னும் சிறப்பாக எழுத அது ஏதுவாக இருக்கும் .55000 ஹிட்களை தாண்டி வளர் நடை போடும் பரதேசியின் பதிவுகள் பற்றி உடனே அறிந்து கொள்ள உங்களின்  ஈமெயிலை  இணைத்து உறுப்பினர் ஆக கேட்டுக்கொள்கிறேன் அதற்கு  Join this site என்ற பகுதியில் சுட்டவும்.உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

Thursday, April 17, 2014

வெள்ளை யானை - ஜெயமோகன்


சாரு நிவேதிதா அவர்களின் தீவிர வாசகனாய் இருந்ததால் ஜெயமோகன் பக்கம் போகாமலே இருந்தேன். ஆனால் பல இடங்களில், பல நேரங்களில், பலர் ஜெயமோகன் படைப்புகளை மிகவும் சிலாகித்துச் சொல்லும்போது, சந்தர்ப்பம் கிடைத்தால் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
Jeyamohan
அச்சமயத்தில்தான் நண்பர் பேராசிரியர் பிரபாகர் வெள்ளை யானையைப் பற்றிப் பாராட்டிச் சொல்லி, மிகுந்த பொருட் செலவில் அதனை மதுரையிலிருந்து நியூயார்க்குக்கு அனுப்பித் தந்தார்.
வெள்ளையர் நம்மை ஆண்ட காலகட்டத்தினை ஒட்டி இந்த நாவல் படைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சமயத்தில் (1810) ஒரு பெரிய பஞ்சம் வந்து, இந்தியாவில் கால்வாசிப்பேர் இறந்து போயினர்.

அந்தப்பஞ்சத்தின் கொடுமைகளை விளக்கும் இந்த நாவலின் மையப்பொருள், சென்னை ஐஸ்ஹவுசில் நடந்த வேலை நிறுத்தம். இந்தியாவிலேயே இதுதான் முதல் வேலை நிறுத்தமாம். இந்தியாவில் விளைந்த தானியங்கள் எல்லாம் உலகத்தின் பல இடங்களில் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத்திற்கும், இங்கிலாந்திற்கும் அனுப்பப்பட, இந்தியாவில் மக்கள், குறிப்பாக கடைநிலையில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு இறந்துபட்டார்கள் என்பதனை மிகவும் உருக்கத்துடன் நாவல் விவரிக்கிறது. பல இடங்களில் நம் மக்கள் இப்படியும் இழிநிலையில் இருந்தார்கள் என்பதை கற்பனையிலும் கொடுக்கப்பட்ட படங்களிலும் பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது.

ஐஸ் கட்டிகளை அமெரிக்காவின் நியூ இங்லேண்ட் பகுதியிலிருந்து பாளம் பாளமாய் வெட்டிக் கப்பலில் கொண்டு வந்து கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்த அமெரிக்க நிறுவனம் “டியூடர் கம்பெனி" தான் ஐஸ் ஹவுசை கட்டிப் பராமரித்தது என்பது ஆச்சரிய செய்தி.
 சென்னை நகரம் வெள்ளையர் நகரம் மற்றும் கறுப்பர் நகரம் என்று பிரிக்கப்பட்டு இருந்தது நமக்குத் தெரிந்தாலும், வெளிவந்த சொற்ப நாவல்களில் அதிகமாக வெள்ளை நகரத்தைப் பற்றிதான் அறிந்துகொண்டோம். ஆனால் இந்த நாவலில் கறுப்பர் நகரத்தின் அன்றைய மோசமான நிலை வெகுவாக விளக்கப்பட்டிருக்கிறது.

ஜார்ஜ் கோட்டை அந்தச் சூழ்நிலையில் எப்படி இருந்தது, அங்குள்ள கவர்னராக இருந்த டியூக் ஆப் பக்கிங்ஹாம், டியூக் சாண்டோஸ் எவ்வாறு அதிகாரம் செலுத்தினர். பிரிட்டிஷ்  அரசாங்கத்தின் அமைப்பு முறைகள் அங்கு எப்படி என்பதை மிகவும் விரிவாக  விளக்குகிறது இந்த நாவல்.  
Richard Temple Nugent Brydges Chandos Grenville, Governor of Madras Presidency
Duke of Buckingham
வெள்ளையர் மனதிலும்  ஈரமிருந்ததையும்,  அவர்கள் எப்படி இந்திய இடை மற்றும்   மேல்தட்டு வர்க்கத்தால் தடுக்கப்பட்டதையும் கேப்டன் ஏய்டன் குறித்து வரும்போது அறிகிறோம்.
மேல்தட்டு வர்க்கத்திற்கும் கீழ்த்தட்டுக்கும் இருந்த வர்க்கபேதம், சாதிபேதம் எவ்வளவு நீண்ட இடைவெளியைக் கொடுத்தது என்பது மட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதாரத்தில் தாழ்ந்து அடிமைகளாய் ஒரு புழுவைப்போல வாழ்ந்தார்கள் என நினைக்கும் போது, மனிதாபிமானம் என்பது அந்தக் காலத்தில் கிஞ்சித்தும்  இல்லாதது தெரிந்தது.
சில இடங்களில் வரும் உரையாடல்கள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது போல அமைந்திருந்தது கொஞ்சம் உறுத்தியது. அது தவிர உருவகங்களும் உவமானங்களும் இதுவரை நான் எதிலும் படிக்காத கற்பனையாய் இருந்தது ஆச்சரியமூட்டியது. இவரை நான் இவ்வளவு நாள் தவிர்த்தது பெரிய முட்டாள்தனம்.
பிரிட்டிஷ் மேலாட்சி, முதல் வேலைநிறுத்தம், தலித் வரலாறு, அந்தக்காலக் கட்டத்தில் இருந்த தமிழகம் ஆகியவற்றை அறிய ஆவலுள்ளவர்கள் இந்த நாவலை கண்டிப்பாக படிக்க வேண்டும்.


Monday, April 14, 2014

அப்பன் சொரியன் ஆத்தா சடைச்சி, பிள்ளை சக்கரைக்கட்டி

முக்கனிச்சுவையே வருக.


மா, பலா, வாழையினைத்தான் முக்கனி என்று சொல்வார்கள். மூன்றும் மூன்று விதம். விருந்தோம்பலில் சிறந்த (இப்ப எப்படின்னு தெரியல) தமிழக விருந்துகளில் இந்த மூன்று பழங்களும் பரிமாறுவது மிக தொன்மையான பழக்கம்.
இந்தியாவில் கோடை காலத்தில் இந்த மூன்றும் கிடைக்கும். ஆனால் நியூயார்க்கில் மற்ற இரண்டு கிடைத்தாலும் பலாப்பழம் கிடைப்பது அரிது. டின்னில் வரும் பலாச்சுளைகளையே சுவைத்து நொந்து போயிருந்த எனக்கு ஒரு சனிக்கிழமையன்று அப்னா பஜாரில் முழுப்பழத்தை பார்த்து மனம் துள்ளிக்குதித்தது. எவ்வளவு என்று கேட்டால், நிறுத்துப்பார்க்க வேண்டும் என்றார்கள். என்னது பலாப்பழத்தை நிறுக்க வேண்டுமா? என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன். இங்கே எல்லாவற்றையும் நிறுத்துத்தானே தருகிறார்கள் என நினைத்துக்கொண்டு, எவ்வளவு என்று பார்க்கச் சொன்னேன். $62 டாலர் வந்தது. ஐயையோ 3720 ரூபாய் கக்கல்லவா வருகிறது என்று சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்று நினைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.
எங்கப்பா பண்ணைக்காட்டிலிருந்து வரும் மலைப்பலாப்பழத்தை 10 ரூபாய் கொடுத்து வாங்கி வருவார். நான்தான் வெட்டுவேன். பலாச்சுளையில் தேன் ஒழுகும். வெட்ட ஆரம்பித்து ஒரு அரைமணி நேரம் கழித்து வந்து அம்மா பார்ப்பார்கள். ஒரு சுளையும் இருக்காது. ஏனென்றால் சுளைகளை வெட்டி எடுக்க எடுக்க என் வயிற்றுக்குள் போய்க் கொண்டே இருக்கும்.
டிரைவ் செய்து வரும்போதும் சரி, மாலையிலும் சரி, பலாச்சுளை நினைப்பே வந்து வந்து போனது. இரவில் கனவிலும் பலாச்சுளைகள் கால்முளைத்து வந்து என் முன்னால் நடனம் ஆடி  கடுப்பூட்டின.
காலையில் சர்ச் போய்விட்டு வரும் வழியில் என் மனைவி கேட்டாள், "ஏன்  நேற்றிலிருந்து ஒரு மாதிரியாய் இருக்கிறீர்கள் ?" என்று.
நான் பலாப்பழ பிரச்சனையை சொன்னேன். "அவ்வளவுதானே இதுக்குப்போய் ஏன் தயங்கறீங்க, காசு போனா போகுது, வாங்க போய் வாங்கலாம்," என்று காரை அப்னா பஜார் விடச்சொன்னாள். என் மனைவி முழுப்பழத்தையும் $60 டாலர் கொடுத்து வாங்க ரெடியாய் வந்தாள். எனக்குதான் மனசு கேக்கல.அங்குள்ள மேனேஜர் சுரேஷ் தமிழ்தான். அவரைப்பார்த்து தயங்கி தயங்கி ,"பாதி பழம் கிடைக்குமா", என்று கேட்டேன். "இதுக்கு ஏன் சார் தயங்கறீங்க, வாங்க வெட்டித்தரச் சொல்றேன்," என்றார்.  அப்படியே கொஞ்சம் மாம்பழங்களையும் வாங்கி வந்தோம்.

வீட்டிற்கு வந்து, முக்கனிகளையும் ரெடி செய்தேன். என் பிள்ளைகளிடம் "அப்பன் சொரியன் ஆத்தா சடைச்சி பிள்ளை சக்கரைக்கட்டி" என்ற பலாப்பழ விடுகதையைச் சொல்லி விடை கேட்டேன். அவர்கள் யோசித்துக்கொண்டு இருக்கும்போது முக்கனிகளைப் பற்றிய நான் படித்த சிறு குறிப்புகளைச் சொல்லிறேன்.
இந்த முக்கனிகளின் பூர்வீகம் இந்தியாவாகும்.
 மாம்பழம் : ராஜகனியான ( King of Fruits) மாம்பழம் முக்கனிகளில் முதல் கனியாகும். மாம்பழத்தின் பூர்வீகம் தென்னிந்தியாதான். தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. ஆந்திராவிலும் விளைகிறது.நன்கு கனிந்த மாம்பழத்தை உண்பது நல்லது. மாம்பழம் உடலுக்கு உஷ்ணம் தரும் பழம் தான்.ஆனால் சமையலுக்கு பயன்படுத்தும் புளியில் உள்ள உஷ்ணத்தை விட குறைவு.மாம்பழத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெறும்வயிற்றில் சாப்பிடக் கூடாது. உணவு உண்டபின் 20 நிமிடம் கழித்துசாப்பிடுவது நல்லது.
பலாப்பழம்: பலாப்பழம் முக்கனிகளில் இரண்டாவது கனியாகும்.பலாப்பழத்தை நேரடியாக உண்பது நன்கு சுவையாக இருக்கும். ஆனால் அவ்வாறுஉண்ணாமல் பலாப்பழத்தை தேன், நெய், சர்க்கரை சேர்த்து உண்பது நல்லது.
வாழைப்பழம் : முக்கனிகளில் மூன்றாவது கனிதான் வாழை. எந்தக் காலத்திலும் கிடைக்கும் பழமாகும். உலக மக்கள் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களில் வாழைப்பழத்திற்குத்தான் முதலிடம்.

 உடல் பருமன் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அதாவது இரவு உணவுக்குப் பதில் (நன்றாக கவனிக்கவும் , இரவு உணவுக்குப் பதில், இரவு உணவுக்கு மேல் அல்ல) 3 பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம்கழித்து வெந்நீர் அருந்தி வரவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தொப்பை குறையும்.( நம்ம போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு ஹோல் சேலில் வாழைப்பழங்களை   அனுப்புங்கப்பா)
   சரி விடுகதைக்கு வருவோம். பிள்ளைகளுக்கு புரியாததால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சி செய்து கைவிட்டுவிட்டேன். அப்பன் சொரியன் என்பதை எப்படிங்க ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியும். கடைசியில் "அப்பன் சொரியன்" என்பதை பிள்ளைகள் என்னைப்பற்றி தான் சொல்கிறேன் என தப்பாக நினைக்க ஒரே ரகளையாப் போச்சு. ஆத்தா சடைச்சி என்பதை  எப்படி பிள்ளைகளுக்கு விளக்குவது என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது, என் மனைவி அப்போதுதான் குளித்து முடித்து , தலை  விரி கோலமாய் வந்து கொண்டிருந்தாள். எதுக்கு வம்புன்னு பேசாம இருந்து விட்டேன்.

அப்புறம் தெரிந்தும் தெரியாமலும் நான் சாப்பிட்ட முக்கனிகளால் என் உடம்பு பழுத்த பழமாக, யாருக்கும் தெரியாமல் பாத்ரூம் சென்று சுகர் டெஸ்ட் செய்து பார்த்தேன். அம்மாடியோவ் அதில் வந்த நம்பரைப்பார்த்து தலை கிறுகிறுத்துப் போச்சு.
நீங்களே சொல்லுங்க, தலை கிறுகிறுத்துப்போனது சுகர்னாலயா இல்லை சுகர் மிஷின் காட்டிய நம்பர்னாலயா?


நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.