Monday, December 31, 2012

பரதேசி@நியூயார்க் - என் திருமுகம் ஒரு அறிமுகம்



 ‘சும்மா இருப்பவனின் மூளை சாத்தானின் தொழிற்சாலை’ என்று எழுதிவைத்தவர் அதை தான் ‘சும்மா’ இருந்தபோது எழுதினாரா அல்லது பிஸியாய் இருந்தபோது எழுதினாரா என்பதை, நான் வேலைவெட்டி இல்லாமல் சும்மா இருந்த எல்லா சமயங்களிலும் யோசித்திருக்கிறேன்.

அந்த மாதிரி சமயங்களில், எதிர்பாராத இடங்களிலிருந்து, மசால்வடை கூட கிடைத்திருக்கிறதே ஒழிய இந்தக் கேள்விக்கு விடை கிடைத்ததில்லை.

‘பீடிகையை விட்டுட்டு மேட்டருக்கு வாங்க பாஸ். உங்களை மாதிரி நாங்க எவ்வளவு பேரைப் பாத்திருப்போம்?’
காரணகாரியங்கள் மற்றும் ஏன் இப்படி ஒரு விபரீத முடிவெடுத்தேன் என்பது குறித்தெல்லாம் விலாவாரியாக, வரும் நாட்களில் விஸ்தீரணமாக பேசலாம் என்பதால், சுருக்கமாக ஒர் வரியில் சொல்லிவிடுகிறேன்.
வேறு வழியில்லை. இனி யார் தடுத்தாலும் கேட்பதாயில்லை. நானும் ப்ளாக்’ எழுத முடிவெடுத்துவிட்டேன்.

‘கோட்,ஷூட் அணிந்து ஸ்டைலாக அமெரிக்காவுக்கு பஞ்சம் பொழைக்க வந்த 56,976 வது தமிழன் நான்’.

‘ஊரைப்பற்றிய விசாரணைகள் என்று வருகிறபோது எல்லோரும் ஒரேமாதிரியாகவே இருக்கிறார்கள்’.
கடந்த வாரம் கூட மெக்ஸிகோ போயிருந்தபோது, போகும் வழியில், எனது தேக லட்சணங்களைப் பார்த்து,சந்தேகம் அடைந்த சக தமிழர் ஒருவர், அக்கறையாய் கேள்விகள் எழுப்பினார்.
‘ தம்பிக்கு எந்த ஊரு?’
‘மதுரைக்காரங்க’
’இந்தப்பக்கம் ரொம்பப்பேரு அப்பிடித்தான் சொல்லிக்கிட்டுத் திரியிறாய்ங்க. கரெக்டான ஊரைச் சொல்லுங்க?’
லேசாய் தலையைச்சொறிந்தபடி,’’பெரியகுளம்’ என்றேன்.
‘பெரியகுளத்துக்குப் பக்கத்துல?’
அந்தப்பிரமுகரின் நக்கல் குரலில் அவரும் மதுரைப்பக்கத்து ஆளுதான் என்பதைப் புரிந்துகொண்டேன்.
’கடல்கடந்து வந்தும் கலாய்க்கிறாய்ங்களே?’ என்று ‘மைண்ட வாய்ஸில்’ நான் கடுப்பானாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

ஏனென்றால் மதுரைக்காரன் என்றவுடன், சதா  திருப்பாச்சி அருவாளை முதுகு ஸ்டேண்டில் மாட்டிக்கொண்டே அலைபவர்கள் என்ற ஒரு கெட்ட இமேஜ் ஜனங்களிடம், அதுவும் பேரரசு போன்ற டைரக்டர்களின் படம் பார்த்துக்கெட்ட ஜனங்களிடம், அதிகம் இருக்கிறது.
நானோ அரிவாளின் பெயரைக்கேட்டாலே மயங்கி விழுந்து, அரைமணி நேரம் கழித்து, மாட்டிக்கொள்ள, வேறு டிராயர் தேடுகிறவன். [சின்ன வயசுலதான்]. வீரத்துக்கும் எனக்கும் வெகுதூரம்.மதுரைக்காரய்ங்கன்னாலே வீரமானவய்ங்க’ என்ற பொதுவான தகவல் எனக்குப் பொருந்தாது.
‘எதையோ சீரியஸா திங்க் பண்ற மாதிரி போஸ் குடுத்தா அப்பிடியே விட்டுற முடியாது பாஸு. பெரியகுளத்துக்குப் பக்கத்துல எந்த ஊரு சொல்லுங்க?’ ஏன்னா சுத்துப்பட்டி முச்சூடும், முன்னூறு கிலோமீட்டருக்கு தள்ளி இருக்கிற பக்கிங்க கூட, மதுரை பேரை சொல்லிட்டு அலையிதுங்க?’
‘சரிதான் சனியன் நமக்குன்னே பாஸ்போர்ட், விசா எடுத்து அமெரிக்கா வரைக்கும் ஆஜராயிருக்கு’ என்று மனசுக்குள் மருகிக்கொண்டபடியே ‘ தேவதானப்பட்டி’என்றேன்.
அவர் விடுவதாயில்லை. ‘’தேவதானப்பட்டிக்கு பக்கத்துல?’ என்று அவர் அடுத்த கேள்வியை ஆரம்பித்தாரா என்பது எனக்குத் தெரியாது. அப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளவும் நான் விரும்பவில்லை. அந்தமாதிரி நக்கல் பார்ட்டிகளின் விருப்பம், நாம் ஏதோ ஒரு ஒற்றைப் பனைமரத்துக்கடியில் உதித்து வந்த ஜன்மம் என்று அறிந்துகொண்டு, தங்கள் ஈகோவை சொறிந்துகொள்வதாகவே இருக்கிறது.

இவ்வளவுக்கு அப்புறமும் நான் உரக்கச்சொல்வேன் பாஸ், நானும் மதுரைக்காரன் தான்.
ஏழு வருஷத்துக்கு மேல குடியிருந்தா வாடகைவீடே சொந்த வீடாகுறப்ப, அமெரிக்கன் காலேஜ்ல ஆங்கில இலக்கியம் படிச்சி, இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் வொர்க்ஸ் முடிச்சி, மதுரையில இருக்க அம்புட்டு ரோட்டுக்கடைகள்லயும் பரோட்டாக்களும், ஆஃப் பாயில்களும் சாப்பிட்டு, வைகைத்தண்ணி அடிச்சி [குடிச்சிதாங்க,.. ஒரு ஃப்ளோவ்ல வந்துடுச்சி] வளந்தவங்க நாங்க,.. மதுரைக்காரன்னு சொல்லிக்கக்கூடாதா?

‘கூல் பாஸ் கூல். எவனோ ஒருத்தன் உங்களை எடக்குமடக்கா கேட்டதுக்காக ஏன் இப்பிடி கொதிக்கிறீங்க. பை த பை, வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்னு தெரிஞ்சிக்கலாமா?
’ஒண்ணுமில்ல. இங்க இயந்திரத்தனமான யூ.எஸ். லைஃப், தன்மானமிக்க தமிழனான எனக்குக் கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சிருச்சி. வாரத்துல ஏழு நாளும் வேலை செஞ்சாலும், இதயத்தோட எட்ஜ்ல ஏதோ குறையிறமாதிரி ஒரு ஃபீலிங்க்ஸ்.
சரி, பொதுச்சேவைன்னு இறங்கியாச்சி. இலக்கியத்தை மட்டும் விட்டுவைப்பானேன்? 2013 நியூ இயர்லருந்து, தமிழ் இலக்கிய உலகுக்காவது கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கட்டுமேன்னுதான் ’ப்ளாக்’ எழுத முடிவு பண்ணியிருக்கேன்,..’
‘அட நாதாரி உனக்கு லைஃப் போரடிச்சதால, மத்தவங்க லைஃபை நாரடிக்கனும்னு முடிவு பண்ணிட்ட, அப்பிடித்தானே?’ உலகின் சகல திசைகளிலிருந்தும் கோரஸாக குரல் எழும்புவதை என்னால் கேட்க முடிகிறது.
’இவ்வளவு அவமானத்தை சகிச்சிக்கிட்டு, அப்பிடி என்னத்துக்கு ‘ப்ளாக்’ எழுதனும்? ஒரு கணம் என்னை நானே கேட்டுக்கொண்டேன்.ஆனால் விதி யாரை விட்டது?
 இதோ ‘ப்ளாக்’ எழுதும் துணிச்சலோடு தனிக்குடித்தனம் கிளம்பி வந்துவிட்டேன். தமிழ் மற்றும் என் இலக்கிய எதிர்காலம் உங்கள் கையில்.