Thursday, January 29, 2015

நெய்ப்பொங்கலும் பொய்ப்பொங்கலும் !! பகுதி 2

யாரும் இதை தயவு செய்து படிக்கவேண்டாம் -இப்படிக்கு பரதேசி


     ஹலோ நாந்தாங்க மகேந்திரன். இந்த பரதேசிப்பய நான் சொன்ன பதில்களை மாத்தி சொல்லிரப்போரான்னுதான் நானே வந்தேன்
உங்க வசதிக்காக அவனோட புலம்பலை மீண்டும் கொடுத்து , நான் சொன்ன பதில்களை அதுக்கு கீழே கொடுக்கிறேன்.
1.    நம்மூர் விடலைப் பிள்ளைக, வெத்தலை போட்ட நாக்கை சுழட்டிக்கிட்டே சுத்தி நிக்க, ஊர் இளவட்ட நடுக்கல்லை தலைக்கு மேலே தூக்குவேனே, ஞாபகம் இருக்கா?
      என்னது இளவட்ட நடுக்கல்லை தூக்கினியா, உனக்கு சரளைக்கல்லையே சரியா தூக்கி எறியத் தெரியாது, இதுல நடுக்கல்லைத் தூக்கியிருந்தா அன்னிக்கே நட்டுக்கினு இருப்பியேடா  நாதாரி.
2.    நம்மூர் டீனேஜ் பொண்ணுகல்லாம், சேகரு சேகருன்னு பின்னாடி கணக்குப் பண்ண சுத்துவாங்களே. யாரைக் காதலிக்கிறதுன்னு தெரியாம ஒளிஞ்சு ஒளிஞ்சு ஓடுவேனே.
          சுத்துவாங்கதான் ஒத்துக்கிறேன். ஆனா ,அட அசட்டுப்பயலே அது கணக்குப் பண்ண இல்லடா, கணக்கு போட. ஏன்னா, உங்கப்பாதான கணக்கு வாத்தியாரு. ஓ இப்படி  ஒரு நெனப்பு வேற உனக்கு  இருந்துச்சா?
3.    ஜல்லிக்கட்டுக்கு ஒரு மாசம் முன்னாலேயே ஒடம்பை தயார்படுத்தி, நம்ம ஜமீந்தார் வீட்டு காங்கேயம் காளையை முத ஆளாப்பிடிப்பேனே.
        ஏண்டா ஜல்லிக்கட்டையே ஜன்னல் வழிதான் பாப்ப, இதுல காங்கேயம் காளையை அடக்குற மூஞ்சியைப் பாரு.
4.    நம்மூர் கிருஷ்ண ஜெயந்தி வழுக்கு மரத்திருவிழால, வழுக்குற உளுந்தம் பசையையும் அடிக்கிற தண்ணியையும் மீறி உச்சிமேலேறி , அஞ்சு பவுன் தங்கத்தை அள்ளி எடுப்பேனே.
        திருவிழா முடிஞ்சு, வழுக்கு மரத்தைப் புடுங்கிக் கீழே ஒரு ஓரமாப் போடும்போது உச்சியைத் தொட்டுப்பாத்தியே அதையா சொல்ற.
5.    நம்மூர் வடக்குத் தெருவில நடக்கிற கபடி போட்டில ஒத்த ஆளாப் போயி, ஒம்போது பேரைத்தூக்கிட்டு வருவேனே.
   தொத்தப்பயலா இருக்கியே, சுளுக்கிரப் போவுதுன்னு,கபடியிலேயே ஒன்னைச் சேத்துக்க மாட்டாய்ங்க. இப்படி ஒரு  கனவு உனக்கு இருந்துச்சாடா? பாவம்டா  நீ.
6.    நம்மூர் முத்தாளம்மன் கோயில் திருவிழால அம்மன் உலா வரும்போது சிலம்பம் சுழட்டிக்கிட்டு முன்னால வரும்போது ஊரே வாயப்பிழந்துட்டு பாக்கும்ல.
ஆமாமா சிலம்பத்த வேடிக்கை பார்க்கும்போது, எவனோ உன்னை முன்னால பிடிச்சுத்தள்ளி, சிலம்பம் பட்டு மண்டை ஒடைஞ்சு ரத்தம் கொட்றத ஊரே வாயப்பிழந்து உச்சு கொட்டினாங்களே அதைத்தான சொல்ற. (பரதேசி : இவ்வளவு துல்லியமா நியாபகம் வச்சிருக்கானே, ஒரு வேளை இவன்தான் தள்ளிவிட்டிருப்பானோ ?)
7.    நம்ம ஹைஸ்கூலுல வகுப்புக்குள்ளே வந்த நல்ல பாம்பை நடுவுல புடுச்சு சுத்துனேன்ல, பொண்ணுங்களெல்லாம் என் கையைப்பிடிச்சு ஆனந்தக் கண்ணீர் விட்டாங்கல்ல .
நல்ல பாம்பு வந்ததென்னவோ உண்மைதான். ஆனா அதப்பாத்து பயந்துபோய் ஒருவாரம் நீ பள்ளிக் கூடத்துப் பக்கமே வரலையே. என்னடா என்ட்டையே பூ சுத்துற. ஆமா அப்ப உன் டவுசர் நனைஞ்சு போச்சுன்னு நம்பகமான தகவல்கள் சொல்லுதே அது நெசந்தானா?
8.    நம்ம ஜமீந்தார் வீட்டு அடக்க முடியாத முரட்டுக் குதிரையை ஏறி அடக்கி "மதுரைவீரன்" என்ற பெயர் போயி "குதிரைவீரன்னு" பேர் எடுத்தேன்ல.
பெரிய தேசிங்குராஜன் நெனப்பு, ஜமீன்தார் வீட்ல எங்கடா குதிரை இருந்துச்சு, சும்மா கதைவிடுற அதும் எங்கிட்டேயே. பொதி சுமக்க ஒரு கழுதை தானே இருந்துச்சு.
9.   தேனி ரேக்ளா வண்டி ரேஸில,  என் மயிலைக்காளையைப் பூட்டி பறந்து பறந்து வந்து ஜெயிப்பேன்ல.
தேனி ரேக்ளா ரேசில நம்மூர் மயிலைக்காளை ஜெயிச்சது நெசந்தேன். ஆனா உனக்கும் அதுக்கும் என்னலே சம்பந்தம் ?.
10.            எல்லாத்துக்கும் மேல ஊரே திரண்டுவந்து என்னை ஊர்த் தலைவராய் இருக்கச் சொல்லி வற்புறுத்தும் போது, ஜனநாயகம் தளைக்கனும்னு சொல்லி தேர்தல் நடத்திட சொல்லிட்டு ஒதுங்கியிருந்து ஒளிவிசினேன்ல.
இவரு பெரிய ஜனநாயகக் காவலர், ஏண்டா புல்தடுக்கி இப்படி ஒரு ஆசைவேற உனக்கு இருந்துச்சா?  
ஏண்டா இப்படி உனக்கு எந்த சம்பந்தமுமில்லாத, பல கனவுகளைக்கண்டுட்டு நட்ட நாடு ராத்திரில என்னை எழுப்பி நொம்பலப்படுத்தனதற்கு, உன்னை நேரில வந்து ரெண்டு கும்மாங்குத்து விட்டாத்தாண்டா என் மனசு ஆறும். வேற எவனாவது கொண்டை முடிஞ்சவங்கிட்ட சொல்றா  இதையெல்லாம். வைடா போனை.
 இவன் பரதேசி மட்டுமல்ல , இவன் ஒரு பைத்தியக்காரன். பல்பம் மாதிரி இருந்துக்கிட்டு என்னா  அல்பம் . என்னா பொய்யி  என்னா பொய்யி .
பரதேசி :இந்த மலைமுளுங்கி மகேந்திரன் எதையுமே இன்னும் மறக்கலை போல இருக்கு பயபுள்ளை மானத்தை வாங்கிட்டான் . நல்லவேளை ஆரம்பத்திலேயே யாரும் படிக்க வேணாம்னு சொல்லிட்டேன் .சரி விடு வேற யார்ட்டயாவது ட்ரை பண்ணலாம் .


முற்றும்.

2 comments:

  1. நம்பகமான தகவல்கள் உண்மை தானோ...? ஹிஹி...

    ReplyDelete
  2. நான் படிக்கல...:)
    Mind voice -- எல்லா பயபுள்ளைகளும் நம்பள மாதிரி தான் இருந்து இருகாங்க போலயே..

    ReplyDelete