Friday, November 22, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 4: பாறை மேல் பரதேசி !!!!!!!!!!!!!


    போர்ட்டோரிக்கோ தீவு, கடலில் தொடர்ந்து நிகழ்ந்த எரிமலைகளால் உருவானது. அதனால் இங்கு வாழும் பூச்சிகள், மிருகங்கள், பறவைகள் எல்லாமே கடலில் நீந்தியும் பறந்தும் இங்குவந்து சேர்ந்தவையாம். அதனால்தான் இங்கு அவை அதிகமில்லை. இங்கு வசிக்கும் பெரிய பாலூட்டிகள், எலிகள், வவ்வால்கள் மற்றும் கீரிப்பிள்ளைகள் மட்டுமே   என்று சொன்னார்கள்  .
ஒரு மேட்டில் ஏறி சிறிது இறங்கியவுடன், நம்மூர் பண்ணைக்காடு (கொடைக்கானல் போகும் வழி) போல் ஒரு இடம் வர, அங்கே பச்சை இளநிகள் பரப்பி வைக்கப்பட்டிருக்க, நிறுத்து நிறுத்து என மனைவி சொல்ல ஓரங்கட்டினேன். வெட்டிய இளநிகளில்  உறிஞ்சு குழல்களை இட்டு (அதாங்க பாஸ் ஸ்ட்ரா) மனைவியும் பெண்களும் சாப்பிட்டனர். “எங்கூரிலெல்லாம் நாங்கள் அப்படியே தூக்கித்தான் குடிப்போம்”, என்றபடி நான் முயற்சிக்க, பாதி இளநீர் டிசர்ட்டில் கொட்டி, தொப்பையை நனைக்க, மீதி நீர் மூக்கு வழியாக வந்து வழிந்தது. மனைவி அவளுடைய நெற்றியையும் என்னுடைய தலையையும் ஒரே நேரத்தில் தட்டி, “இனிமேல் வாய்வழியாக குடியுங்கள்” என்று சொல்ல சிறிது அசடும் சேர்ந்து வழிந்தது.

        மீண்டும் பயணம் தொடர ஒரு அவசர சரிவில் அதிசய அருவி கொட்டியது. நம்மூர் கொடைக்கானல் “வெள்ளி நீர்விழ்ச்சி” (Silver Cascade) போலவே இருந்தது. கொட்டிக் கிடந்த பாறைகளில் பட்டுத் தெரித்து நுரைத்து விழுந்த சிற்றருவி பாட்டிசைத்து பாடத்தூண்டியது. இதுவும்  ஒருவகை “ராக்” மியூசிக்தாங்கோ. சில துள்ளும் இளைஞர்கள், கைகளில் அள்ளும் காதலிகளை வழிநடத்தி, மேலேறிச் சென்று தண்ணீரில் நனைந்தனர். திடீரென்று தோன்றிய உத்வேகத்தில் மனைவி தடுத்ததையும் மீறி பாறைகளில் தவ்வித்தவ்வி கொஞ்சம் நேரம் அதிகம் எடுத்தாலும் உயரே போய் நீரைத் தொட்டேவிட்டேன்.  அங்கிருந்து கீழே பார்த்து, ஆச்சரியத்துடனும் சற்றுப் பதட்டத்துடனும் பார்த்துக் கொண்டிருந்த மனைவி பிள்ளைகளை பார்த்து கையை அசைத்தேன். ஏதோ சாதனை செய்தது போன்ற பெருமையில் கீழே பார்த்தால் ம்ஹீம் ஐயையோ இறங்குவது பெரும் சோதனையாகிவிடும் போலிருந்தது.
        மக்களே மறந்துவிட்டால் திரும்பவும் நினைவு படுத்துகிறேன். இந்த மாதிரி கடினப் பாறைகள் வழி ஏறுவது எப்பவுமே கொஞ்சம் எளிது, இறங்குவது மிகக்கடினம். ஒரு வழியாக உட்கார்ந்தும், தேய்த்தும் வழுக்கியும் சறுக்கியும் கீழே வந்து சேர்ந்தபோது சட்டை முழுவதும் நனைந்திருந்தது. நீரினால் அல்ல வியர்வையால். காலில் அடிப்பகுதியில் ஒரு விழுப்புண் வேறு பட்டு தீயாய் எரிந்தது.
Yokahu Observation Tower
 ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மீண்டும் பயணம் தொடர, இப்போது உயரமான ஒரு ஆப்சர்வேஷன் டவர் வந்தது. இந்த மாதிரி சுழலும் படிகளில், ஏறுவதுதான் கடினம், தலையும் சேர்த்து சுழலும். ஆனால் இறங்குவது கொஞ்சம் இலகுவாக இருக்கும். படிக்கட்டுகள் என்பதால் மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்துகொள்ள, ஒருவழியாக மேலேறினோம். அந்த மாதிரி ஒரு பசுமைக்காட்சியினை நான் வேறெங்கும் கண்டதில்லை. ஒரு தேர்ந்த தோட்டக்காரனால் நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டம் போல் காடுகளும் மலைகளும் பலவித பச்சை நிறங்களாய் பரவசப்படுத்தியது.
        கீழிறங்கி வந்தால், சாரல் சிலுசிலுவென்று பிடித்துக்கொண்டது. ரெய்ன் ஃபாரஸ்ட் அல்லவா, ஓடி மறையத் தேடாமல், அப்படியே ஆனந்தமாய் நனைந்தோம்.
எல் யங்க்கி காடுகள் பற்றிய  மேலும் சில ஆச்சரியமூட்டும் உண்மைகள் கீழே.
1) கி.பி.1876-ல் ஸ்பெயின் நாட்டின் அரசர், அல்ஃபோன்சோ XII (King Alfonso XII) தான், இந்த மழைக்காடுகளைப் பிரித்து குடியிருப்புகள் வராமல் ரிசர்வ் காடுகளாக ஆக்கினார். காடுகளின் முக்கியத்துவத்தை அந்த நாளிலேயே அரசர்கள் அறிந்திருந்தது அதிசயம்தான். எனவே மேற்கத்திய ஹெமிஸ்பியரில் (West Hemisphere)இதுதான் மிகப்பழமையானது.
2) அமெரிக்க ஆக்ரமிப்புக்குப் பின்னர் 1903-ல் 65950 ஏக்கர் பரப்பளவுள்ள இது ரிசர்வ் காடுகளாக தொடர்ந்தது. 1906-ல் இது தேசியக்காடுகளாக அறிவிக்கப்பட்டது. 2007-ல் அதிபர் ஜார்ஜ் புஷ் அவர்களால் "எல்  யங்க்கி  தேசியக் காடுகள்" (El Yunque National Forest) என பெயர் மாற்றப்பட்டது.
3) 200 வகையான தாவர வகைகள் இருக்கும் இந்தக் காட்டில், 23 வகைகள் உலகில் வேறெங்குமே இல்லாத வகைகள் ஆகும்.
4) நான்கு வகையான பாம்புகள் இங்கு இருந்தாலும் ஒன்றுக்குக்கூட விஷத்தன்மை கிடையாது.( தப்பிச்சேன்டா சாமி , பாம்புகளுக்கும் எனக்கும் ஒரு நெருங்கிய உறவு உண்டு .அந்தக்கதைய இன்னொரு நாளைக்கு சொல்றேன் .)
5) இங்கு தங்கம் கிடைப்பதாகச் சொல்வது உண்மைதான் என்றாலும், ஒரு நாள் முழுவதும் கடினமாக உழைத்தால் $2 டாலர் மதிப்புள்ள தங்கம் மட்டுமே கிடைக்குமாம். எனவே நாட் வொர்த் இட்  .
        இன்னும் உள்ளே பார்ப்பதற்கு பல இடங்கள் இருந்தாலும், போதும் பசிக்கிறது, திரும்பலாம் என மனைவி சொல்ல, அப்படியே கீழிறங்கி மெதுவாக திரும்பினோம். 
வரும் வழியில் காட்டில் விளைந்த கினிப்பா (Quenepas) பழங்கள் கிடைத்தன. உள்ளே பழுப்பு  நிறத்தில் சதை அதிகமாக இருக்காது. வாயிலிட்டு சுவைத்தால் ஒரு புளிப்பும், இனிப்பும் கலந்த சுவை இருக்கும்.
வழியில் ஒரு சைனீஸ் கடையில் இருந்த ஸ்பானிஷ்காரியிடம், நயன மற்றும் சைகை பாஷையில் எதையோ ஆர்டர் செய்து எப்படியோ சாப்பிட்டுவிட்டு, ரூமுக்கு திரும்பின கையோடு, உடை மாற்றி பீச்சுக்குச் சென்றோம்.

        வெப்பம் 90 டிகிரி  இருந்தாலும் வெயில் அவ்வளவாக தெரியவில்லை. தினமும் மாலையிலும் இரவிலும் மழை பெய்தது. துரத்தும் மழையல்ல தூவும் மழை.
        அன்று மாலை ஏதாவது இந்திய உணவகத்திற்குப் போகலாம் என்றேன். 'மும்பை' என்று ஒரு இடம் இருப்பதாக அனிஷா கண்டுபிடித்துச் சொன்னாள். சரி என்று கிளம்பி, ஊரையே சுற்றியடித்து ஒரு இடத்தில் நுழையும் போது, எதிரே வந்த போலீஸ் கார் டுயூக்கியது, “காப்”பும் கையைக் காட்ட, நம்மைத்தான் என்று ரூத் சொன்னாள். என்னவாக இருக்கும் என்று கார் கதவைத் திறந்து சிறிது பதட்டத்துடன்  ஓலா என்றேன்.

பயணங்கள் முடிவதில்லை++++++++++++

பின்குறிப்பு  :
நண்பர்களே அடுத்த வாரம் முழுவதும் அலுவலக வேலையாக மெக்சிகோ போகிறேன் என்பதால் திங்கள் கிழமையின் பதிவு இன்றைக்கே வந்துவிட்டது. வியாழன் பதிவு வராது.மீண்டும் டிசம்பரில் சந்திக்கிறேன்.

   

Thursday, November 21, 2013

தேர்தல் திருவிழா

பனை மரத்துல வவ்வாலா? கலைஞருக்கு சவாலா?
இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
போடுங்கம்மா ஓட்டு, ரெட்டை இலையைப்பாத்து !!!!!
 போன்ற சத்தம் இன்று நினைத்தாலும் காதோரத்தில் நாராசமாய் ஒலிக்கிறது.
        தேவதானப்பட்டியில் இருக்கும் ஒரே மைதானமான(?) காந்தி மைதானத்தை ஆக்கிரமித்திருக்கும் கோயில் காளைகளும், தெரு நாய்களும்,  எருமைகளும் அப்புறப்படுத்தப்படும். பாப்பான் கிணற்று நீரை சேந்தி, புழுதி அடங்க நீர் தெளித்து சுத்தம் செய்யப்படும்.  தலைவர்கள்( ?) வரும் போது பஞ்சாயத் ஆபிசிலிருந்து ஒரு விதமான வெள்ளைப்பொடி தூவுவார்கள்
        நாகூர் மீரான் ஓலைக்கிடுகுகளையும்  மூங்கில்களையும் வைத்து நிரந்தரப்பந்தல் அமைப்பார். பாவம் காசு வாங்க கட்சி ஆபிஸ்களுக்கு, அடுத்த  தேர்தல் வரை அலைவார்.  இந்து நடுநிலைப்பள்ளியின், பெஞ்சுகளை கொண்டுவந்து மேடை அமைக்கப்படும். பள்ளிக்கூடம் தேர்தல் முடிவதற்குள் பாதி பெஞ்சுகளை  இழக்கும். மைக் செட், ஒலிஒளி அமைப்பு குழாய்கள் கட்டப்பட்டு பாட்டு ஒலிக்க, சிறுவயதில் ஒரே கொண்டாட்டமாயிருக்கும் எலக்ஷ ன் திருவிழா.
        கோயில் திருவிழா காலத்தில் சாதிகளால் பிரியும் சமூகம், இப்போது கட்சிகளால் பிரியும். சுவரில் கட்சிகள் போட்டி போட்டு இடம் பிடிக்கும். சுவர் விளம்பரம் வரைபவர்களுக்கு தற்காலிக டிமாண்ட். மாலையில் போடும் பாட்டுகளை வைத்து எந்தக் கட்சி மீட்டிங் என்று கண்டுபிடிப்போம். தேர்தல் கவிஞர்களும், இசைக்குழுக்களும் புதிதாக முளைக்கும்.
        "இமயமுதல் குமரி வரை இணைக்கும் எங்கள் காமராஜர்."
        "கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே"
        "காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்."
        "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு"
        "நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்"
        எம்.எல்.ஏ , எம்.பி, மாவட்டத்தலைவர்கள், மாநிலத்தலைவர்கள், ஏன் கலைஞர், எம்ஜியார் எல்லோரையும் உள்ளூரிலேயே பார்க்க முடியும். தேர்தலில் நிற்கும் தலைவர்களை வெள்ளையும் சொள்ளையுமாக உங்கள் வீட்டு வாசலிலேயே பார்த்துவிடலாம். வாக்குறுதிகள்   ஏராளமாய் பறக்கும்.
        ஒரு மாதமாகும் இந்தச் சத்தம் அடங்க. காந்தி மைதானத்திற்கு கோயில்காளைகளும், ஆடுகளும், தெரு நாய்களும் திரும்பும். ஜெயித்தவர்கள் புதுப்பணக்காரர்கள் ஆவார்கள். ஊரும் பாப்பான் கிணறும் அன்று பார்த்த மாதிரியே, என்றும் இருக்கும்.
Family of Bill Blassio.


        இத்தகைய எந்தக்கலாட்டாவும் இல்லாமல் நியூயார்க்கில் மேயர் எலக்ஷன் நடக்க, யார் ஓட்டுப்போட்டார்கள் யார் போடவில்லை, எங்கே எப்படி ஓட்டு நடந்தது? என்று எதுவும் தெரியாமல், பில் பிளாசியோ மேயராகிவிட்டார். மைக்கேல் புளூம்பர்கின் 12 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது.

Monday, November 18, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 3: மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் !!!!!!!!!!

பீச்சென்றால் கூட தெரியவில்லை, டிப்டாப்பாக உடுத்தி கறுப்புக்கண்ணாடி போட்டிருந்த போலிஸ்காரர்களுக்கும் கூட தெரியவில்லை. எனவே  சிறிது அலைந்து திரிந்து, கண்டுபிடித்து எப்படியோ போய்விட்டோம்.
        அங்கே போனால் நகரின் பாதிக்கூட்டம் அங்கேதான்  இருந்தது. போர்ட் வாக் (Board Walk) முழுவதும் துள்ளிசை வெடிக்க, உற்சாக பானங்கள் அருந்திய மக்கள் ஆடித்தள்ளிக்கொண்டிருந்தனர். கேட்டால், அதேதான், "ஐலண்ட் கல்ட்சர்". மெரேன்கேயும் சல்சாவும் நெளிந்தன.

              சல்சா டான்சை பார்க்க இந்த வீடியோவை க்ளிக்கவும். 

            http://www.youtube.com/watch?v=rlxNnP-hKtA

        ஒருபுறம் பெரிய பெரிய மீன்களுக்கு, சிறிய மீன்களை உணவாக அளிக்கும் காட்சி, உயரத்தில் இருந்து மீன்கள் கீழே விழுமுன், அதனை அபகரிக்கும் சீகல் பறவைகள், மீன்கள் நழுவவிடுவதை கடத்தும் வாத்துக்கள் என அந்த துறைமுகப்பகுதி ரம்மியமாக இருந்தது.
La Guancha Paseo Tablado Photo, Ponce, Puerto Rico
        அடுத்த பக்கத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் ஏறினால், கடலும் கரையும் துள்ளியமாகத்தெரிந்த பறவைக்கண் (Birds Eye) காட்சி.
        அதன் மறுபுறத்தில் அதிக ஆர்ப்பாட்டமில்லாத கடல், எனக்குக்கூட இறங்குவதற்கு தைரியத்தைக் கொடுத்தது.
 தெளிந்த கடற்கரை, வெண் மணல், நுரைத்த சிற்றலைகள், மறையும் சூரியன், மாலை வெய்யில் என கவிதை எழுதத் தோன்றிய மனதை கட்டுப் படுத்திக்கொண்டு, சிறிது இருட்டியதும் கிளம்பினோம்.
 டிராப்பிக்கல் பகுதி  என்பதால் 7 மணிக்கெல்லாம் நன்றாக இருட்டிவிட்டது.
        போகும் வழியில் மனைவி கேட்டாள். இரவு உணவுக்கு என்ன வேண்டும், "தக்காளி சாதமா, புளி சாதமா பூண்டுக் குழம்பா?", என்று. கிண்டல் செய்து கடுப்பேத்துகிறாள் என்று நினைத்து கம்மென்று இருந்துவிட்டேன். ஆனால் வீட்டிற்குப்போய் குளித்துவிட்டுத்திரும்புவதற்குள் ஆச்சரியம் காத்திருந்தது. மணமணக்கும் சூடான பொன்னி சாதமும் ருச்சி கலவைகளும் ரெடியாக இருந்தன. எப்படியோ கடத்திக்கொண்டு வந்திருந்தாள். ஒரு சிறிய ரைஸ்குக்கரும் கொண்டு வந்திருந்தாள். தக்காளி பேஸ்டை சூடாகப் பிசைந்து, ஒரு விள்ளலை வாயிலிட, ஆஹா என்று இருந்தது. நீங்களே சொல்லுங்க, வாதம் வந்து படுத்தாலும்  சாதம் இல்லாமல் நம்மால் இருக்க முடியுமா? பிள்ளைகள் மட்டும் வெளியே போய் 'சுஷி' சாப்பிட்டு வந்தார்கள்.
ஆகஸ்ட் 5, 2013 திங்கள் கிழமை
        அடுத்த நாள் சற்று விரைவாகவே எழுந்து, எழுப்பி, கிளம்பி -கிளப்பி - சென்ற இடம் "எல் யங்க்கி" (EL Yunque) மழைக்காடுகள் (Rain Forest). ஒரு மணி நேர தூரத்தில் இருந்தது. போகும் வழியில் படக்கென்று பிரேக் போட்டு, ஓரங்கட்டியதில் லேசான கிறக்கத்தில் இருந்த மனைவி பிள்ளைகள் திடுக்கிட்டு எழுந்தனர். வேறு ஒன்றும் இல்லை. பாதையோரத்தில் பழக்கடை பார்த்த பரவசத்தில் தான் அந்த தீடீர் நிறுத்தம். மாம்பழம், அன்னாசி, சப்போட்டா, நேந்திரன் என்று பலவகை பழங்கள். காத்திருக்க முடியாமல், ஒரு வாசனை மிக்க (நியூயார்க்கில்  கிடைப்பவை வாசமற்றவை) மாம்பழத்தை நறுக்கி வாயில் போட்டால், ஆஹா ஆஹா நம்மூர் மல்கோவா போலவே இருந்தது. என் மனைவி, என் சர்க்கரை அளவை ஞாபகப்படுத்தாமல் இருந்திருந்தால், முழு பழத்தையும் சாப்பிட்டு, என் முழு பலத்தையும் இழந்திருப்பேன்.  எல்லா வகைகளிலும் கொஞ்சம் வாங்கிக்கொண்டு பயணம் தொடர்ந்தது.ஒரு பழமே பழம் சாப்பிடுகிறது”,  என்று மனைவியின் கிண்டல் வேற.
காடுகள் உருவானது, வளர்ந்தது, எப்படி பராமரிக்கப்படுகிறது என விளக்கும் சிறிய திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, காட்டின் மேப்பைப் பெற்றுக்கொண்டு, காரை மீண்டும் எடுத்தோம். அடர்ந்த பசுமைக்காடுகள், நீண்டு உயர்ந்த மரங்கள், சில்லிட்டு ஓடும் சிற்றோடைகள், திடீர் நீர்வீழ்ச்சிகள், நீர்த்துளிகளால் கர்ப்பமுற்ற சிலுசிலுக்காற்று  என் வேறு உலகமாய் இருந்தது.


        வழியில் பெரிய பெரிய “மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்”,விண்ணோடும் முகிலோடும் முட்டின. நம்மூரில் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களா" இவை என்று நினைத்தால், இவை வேறு சாதி. இவற்றில் புல்லாங்குழல் செய்தால், நம்மூர் பீமன் கூட வாசிக்க முடியாது.
        இதுல இன்னொரு ஆச்சரியம் என்னன்னா? சில வகை ஊர்வன, பறப்பன மற்றும் புழுபூச்சிகள் தவிர இவ்வளவு பெரிய காட்டில் உறுமுபவை, கர்ஜிப்பவை, பிளிறுபவை என்று ஒரு மிருகமும் இல்லை. ஏனென்று கேட்டோம்.

பயணம் தொடரும் !!!!!!!!!!!!!!!   

        

Thursday, November 14, 2013

பாண்டியராஜனுடன் பரதேசி !!!!!!!!!!


        தீபாவளித்திருநாளான நவம்பர் 2, 2013 சனிக்கிழமையன்று, நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் சிந்தனை வட்டம் நடத்திய “சிரிப்போம் சிந்திப்போம்” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, இயக்குநரும்  நடிகருமான R.பாண்டியராஜன் கலந்து கொண்டார். இது ஒரு பொது நிகழ்ச்சியாக இல்லாமல், ஏற்கனவே இன்விட்டேஷன்   அனுப்பப்பட்டவர்களில்,முன்பதிவு செய்த சிலருக்கு மட்டும் நடந்தது. பாக்கியராஜின் பட்டறையில் உருவான 'பா' வரிசை இயக்குநரான இவர், பாக்கியராஜின் அதே வெற்றி ஃபார்முலாவான, அப்பாவித்தனம் கலந்த நகைச்சுவையில் கால் பதித்து பல வெற்றிப்படங்களை இயக்கியவர்.
        பல்லவன் பஸ் டிரைவருக்கு மகனாக எளிய குடும்பத்தில் பிறந்த இவர், (ஓட்டுநரின் மகன் இயக்குநர்) தன்னுடைய குட்டையான உருவம், முட்டைக்கண் போன்ற எல்லா நெகட்டிவ் காரியங்களையும் பாஸிட்டிவ்வாக மாற்றி வெற்றி பெற்றவர். 54 வயதிலும் இளமையாகவே தோன்றினார்.அன்றைய சந்திப்பிலும் எளிமையாகவே பேசி வந்திருந்த அனைவரையும் கவர்ந்து கொண்டார்.
        அவர் இயக்கிய பானை (The Pot) என்ற குறும்படம் முதலில் திரையிடப்பட்டது. அவர் இயக்கிய குறும்படங்கள், உலக அளவில் திரையிடப்பட்டு பரிசுகளை அள்ளியிருக்கிறது. நியூஜெர்சியின் “பிஸ்காட்டவே” என்ற நகரில் உள்ள நூலகத்தின் ஒரு அறையில் வைத்து இந்த சந்திப்பு நடந்தது.
        முன்னதாக, பெங்களூர்  தீபா அக்காடமியைச் சேர்ந்த பார்வைத்திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளான, ஆறு இளம் பெண்கள் பரத நாட்டியம் ஆடி உருக்கினார்கள். அவர்களுடைய 'ஸ்பேஸ்  சென்ஸ்' மிகவும் ஆச்சரியமூட்டியது.
        தமிழ்ச்சங்கத்தலைவர் கவிதா ராமசாமி (கவிமாமணி இலந்தை ராமசாமியின் மகள்) வழங்கிய சம்பிரதாய அறிமுக நிகழ்ச்சியில்,அவருடைய “ஆண்பாவம்” படத்தில் வரும் கார் பார்க்கிங் செய்யும் போது முட்டுதா முட்டுதா முட்டிருச்சு என்ற காட்சியை சொல்லி “ஒவ்வொரு முறை பார்க்கிங் செய்யும்போதும் அது ஞாபகம் வரும்”, என்றார். அது உண்மைதான்.
        பாண்டியராஜனின் நகைச்சுவை உணர்ச்சியும் (Sense of humor) பிரசன்ஸ் ஆஃப் மைண்டும் அநேக இடங்களில் வெளிப்பட்டது. தன் முன்னேற்றத்திற்கு சினிமா உலகில் பட்ட கஷ்டங்களை, நகைச்சுவையோடு சிறிது நேரம் பேசியபின் வந்திருந்தவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கலந்துரையாடல் நடந்தது.
        கீழே நின்று பேசிக் கொண்டிருந்தவரை, கவிதா மேடைக்குச் செல்லும்படி சொல்ல, "ஏன் உயரம் கம்மியா இருக்குன்னு சொல்லாம சொல்றீங்களா" என்று கேட்டு கலகலப்பூட்டியபடி மேடை ஏறினார். நடுவில் ஒருவர் தண்ணீர் கொடுக்க, "நான் அந்தளவுக்கு எதுவும் பேசலைன்னு சொல்லி சிரிப்பில் ஆழ்த்தினார்".
நீங்கள் இயக்கிய படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தபடம் என்ன என்ற கேள்விக்கு, "அதை இனிமேல்தான் எடுக்க வேண்டும்" என்று சொல்லி கைதட்டல்களை அள்ளினார்.
        அரசியலில் நுழைந்து முதலமைச்சர் ஆவீர்களா? என்ற கேள்விக்கு, "CM ஆசையெல்லாம் இல்லீங்க நேரா PM ஆசைதான்" என்று  சொல்ல சபை ஆரவாரித்தது.
        கடந்த கால சாதனைகளைப்பற்றிக் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் என்னை மிகவும் கவர்ந்தது. “Yesterday's Newspaper is todays wastepaper எனவே பழைய சாதனைகளை நினைக்காமல் புதிய சாதனைகளில் ஈடுபடுவதே எனது விருப்பம்”, என்றார்.
        பாக்கியராஜ் உங்களுக்கு வழங்கிய அறிவுரை என்ன என்ற கேள்விக்கு, அவர் சொன்ன பதில், "டைரக்ட் பண்ணு, பண்ற மாதிரி நடிக்காதே" என்பது.

பாண்டியராஜன் பற்றிய சில குறிப்புகள்:
பிறந்த தேதி : 2 அக்டோபர் 1959, (54 வயது)
பிறந்த இடம்: சைதாப்பேட்டை, சென்னை .
படிப்பு : 10th std  - இயக்குனராவதற்கு முன்.
தமிழிசைக் கல்லூரி : இசைச் செல்வம் (டிப்ளமோ இன் வயலின்)
தற்போது - MA., M.Phil., (PHD)
இயக்கியவை : 9 படங்கள்
நடித்தவை : 90 படங்கள் (தமிழ்) ஒருபடம் - மலையாளம்
இசையமைத்த படம் : நெத்தியடி
குறும்படங்கள் : மகள், இருதுளிகள், குடம், Help
அறிமுகப்படுத்திய நடிகர்கள் : சீதா, கொல்லங்குடி கருப்பாயி, மயில்சாமி, தேப ஸ்ரீ ராய்.
அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
அறிமுகப்படுத்திய ஆர்ட் டைரக்டர் : தோட்டா பானு,
மனைவி பெயர் :வாசுகி (இயக்குநர், தயாரிப்பாளர் புலவர் அவினாசிமணியின் மகள்).
        சந்தித்து வாழ்த்துக்களை சொல்லிவிட்டு, வழங்கிய தீபாவளி இனிப்பையும் காரத்தையும் சுவைத்தபடி வீடு திரும்பினேன்.
        பாண்டியராஜனுடன் எடுத்துக் கொண்ட போட்டாவை பார்த்த என் மனைவி "ஓ இவர்களை எனக்குத் தெரியும்" என்றாள். "பாண்டியராஜனை எல்லோருக்கும் தெரியும்" என்றேன். இல்லை இல்லை, அவரின் மனைவி வாசுகியை எனக்கு நல்லாத் தெரியும்" என்றாள்.
        "அவர்களுக்கு உன்னைத் தெரியுமா? என்றேன். "தெரியும் தெரியும் நான் படித்த மோனகன் பள்ளியில் வாசுகி என் சீனியர். பின்னர் நான் செயின்ட் எப்பாசில் படிக்கும் போதும் அங்கேயும் படித்தார்கள். அதன்பின் நான் எப்பாசில் டீச்சராக சேர்ந்தபின்னரும், சில விழாக்களுக்கு வந்திருக்கிறார்கள். ப்ளீஸ் ப்ளீஸ் அவர்களோடு பேச வேண்டும்", என்றாள். "நீயும் வந்திருக்கலாமே", என்று அலுத்தபடி, அவர்களை போனில் பிடித்தேன்.

        போனில் குலவிய இருவரும் இறுதியாக முடிவெடுத்தது, அடுத்த தடவை அவர்கள் அமெரிக்கா வரும் போது, நியூயார்க்கில் என் வீட்டில் தங்குவதாக.