Thursday, May 22, 2014

புத்தகத்திருடி (Book Thief)

(துருக்கி) இஸ்தான்புல்லுக்கு போக டர்க்கிஷ் ஏர்லைன்ஸில் ஏறி உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, எதிரே உள்ள டிவியில் மேய்ந்ததில் கண்ணில் தென்பட்ட படம் புக் தீஃப். 
Brian Percival
பிரையன் பெர்சிவல் (Brian Percival) என்பவரால் இயக்கப்பட்ட இந்தப்படம் ,இதே தலைப்பில் வந்த நாவலைத்தழுவி எடுக்கப்பட்டது.
Novel

தலைமறைவான கம்யூனிஸ்ட் தாய்க்குப்பிறந்த படத்தின் கதாநாயகி லீசல், ஜெர்மனியின் ஒரு கிராமத்தில் வாழும் ஒரு எளிய குடும்பத்திற்கு தத்துப் பெண்ணாக வருகிறாள். ஹிட்லர் தலைமையில் நாஜிகள் ஆண்ட காலமது. யாரும் வெளிப்படையாக எந்தக் காரியங்களையும் செய்துவிட முடியாது. வரும் வழியில் தன் தம்பியை இழந்ததால் மிகுந்த சோகத்துடனேயே இருக்கிறாள்.  
Sophie Nelisse
புதுத்தந்தை ஒரு வழியாக அவளிடம் நெருங்கிவிட புதுத்தாய் கொஞ்சம் கண்டிப்பானவராக நடந்து கொள்வது அவளுக்குப் பிடிக்கவில்லை. அப்பாவுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை. அம்மா பக்கத்து வீட்டுத்துணிகளை துவைத்து தேய்த்து தருபவள்.

பக்கத்து வீட்டுப்பையன் அவளிடம் நண்பனாக தீவிர முயற்சியெடுக்கிறான். புத்தகங்கள் மேல் அதிக விருப்பமுள்ள பெண்ணுக்கு ஹிட்லரால் புத்தகங்கள் தடைசெய்யப்படுகின்றன. குவியலாக வைத்து கொளுத்தப்பட்ட புத்தகங்களில் யாருக்கும் தெரியாமல் ஒரு புத்தகத்தை மறைத்து எடுக்கும்போது அந்த ஊரிலுள்ள ஒரு சீமாட்டி பார்த்து விடுகிறாள். அவள் வீட்டுக்கு ஒரு நாள் லீசல் அயர்ன் செய்த துணிகளை எடுத்துச்செல்லும்போது, லீசலை அழைத்து சென்று, தன் கணவரின் பெரிய  நூலகத்தைக் காட்டி , அவளை அங்கு வரும்போதெல்லாம் படிக்க அனுமதிக்கிறாள். ஒரு கட்டத்தில் கணவருக்குத் தெரிய வர. அவர் தம் மனைவியைக் கண்டித்து, பெண்ணை இனிமேல வரவிடாமல் தடுத்துவிடுகிறார்.  ஆனால் அவள் யாருக்கும் தெரியாமல் ஜன்னல் வழியாக அடிக்கடி   வந்து புத்தகங்களை படிக்கிறாள்.

இதற்கிடையில் ஒரு கட்டத்தில் லீசலின்  (Liesel Meminger) வளர்ப்புத்தந்தைக்கு பெரும் உதவி செய்த ஒரு யூதரின் மகனுக்கு உதவ வேண்டிய கட்டாயம் நேர்கிறது. உயிருக்குப்போராடும் நிலையில் வந்து சேர்ந்த அவனை இவர்கள் மூவரும் மறைத்து வைத்துக் காப்பாற்றுகிறார்கள். மறைத்து வைத்த தம் புத்தகங்களை அவனுக்கு வாசித்துக் காண்பிப்பதின் மூலம், அவள்மேல்  அவனுக்கு ஒரு  சகோதர  அன்பு ஏற்படுகிறது. ஆனால் சூழ்நிலை காரணமாக அவன் வெளியேற நேர்கிறது. அப்போது அப்பாவை கட்டாயப்படுத்தி ராணுவத்திற்கு அழைத்துப்போய் விடுகின்றனர். நல்ல வேளை சில மாதங்களுக்குப் பின் உயிரோடு திரும்ப வருகிறார்.
அதன்பின் உலகப்போர் கடுமையாகப்பரவ பெண்ணின் கிராமத்தில் குண்டு மழை பொழிகிறது. தன் வளர்ப்புத்தந்தை, தாய் மற்றும் தன் பக்கத்து வீட்டு நண்பனையும் அதில் இழந்துபோகும் அவள் முற்றிலும் தனிமையாக்கப்படுகிறாள். இதற்கிடையில் போரில் தோற்ற ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதால் நாடு ஹிட்லரின் பிடியிலிருந்து விடுபடுகிறது.  
சிறிது நாட்களில் ஊரைவிட்டுப்போன யூதன் திரும்பிவருகிறான். அந்தச் சிறுபெண்ணை தன்னிடம் ஏற்றுக்கொள்கிறான். அதோடு படம் முடிகிறது.
இயல்பான நடிப்பில் ஒவ்வொருவரும் பின்னிப் பெடலெடுக்கிறார்கள். மிகையான நடிப்பு, மிகையான மேக்கப், மிகையான வசனங்கள், திணிக்கப்பட்ட காட்சிகள் என்று எதுவுமில்லாமல் சுவாரஸ்யமாய் நகரும் காட்சிகள் அபாரம்.
இதைப்போன்ற   படங்களை பார்க்கும்போது தமிழ் சினிமா யதார்த்தத்தை விட்டு இன்னும் தொலைதூரத்தில் தான் இருக்கிறது என்றே தோன்றுகிறது.
19மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் மொத்த வசூல் 77 மில்லியன் டாலர். 
John Williams 
ஆஸ்கர் விருது பெற்ற ஜான்வில்லியம்சின் இசை, ஒரு தென்றல் போல தழுவுகிறது. இந்தப்படத்திற்கும் அக்காடெமி, கோல்டன் குளோப் மற்றும் BAFTA ஆகிய நாமினேஷன்ஸ் கிடைத்தது. ஜான் வில்லியம்ஸ் அதிகமான ஸ்டீபன் ஸ்பீர்பெர்க் படங்களுக்கு இசையமைத்தவர்.

லீசலாக நடித்த சோஃபி நெலிசி (Sophie Nelisse) அவருடைய பிரமாதமான நடிப்பிற்காக கீழ்க்கண்ட இரண்டு விருதுகளைப் பெற்றார். இவர் கனடாவைச் சேர்ந்தவர்.
1) Hollywood Film Festival Spotlight Award.
2) The Satellite Newcomer Award
3) Phoenix Film Critics Award
Geoffrey Rush
தந்தையாக நடித்த ஜியாப்ஃரி ரஷ் (Geoffrey Rush) பெயர்  'ரஷ்' என்றிருந்தாலும், மிக நிதானமாக நடித்து பல நாமினேஷன்ஸ் பெற்றார்.


சந்தர்ப்பம் கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்.

அறிவிப்பு:
நண்பர் இசையமைப்பாளர் இரா. பிரபாகர் அவர்களும் அவர் மனைவியும் மதுரையிலிருந்து வந்திருப்பதால்   அடுத்த வாரம் , நம்ம ப்ளாகுக்கு விடுமுறை.

Monday, May 19, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி -பகுதி 2.ஓரமான சீட்டும் ஈரமான பேன்ட்டும் !!!!!!

இயற்கையின் அழைப்பு (Natures call) வந்ததும், "எக்ஸ்கியூஸ் மீ", என்று சொல்லி எழுந்தேன். "நோ நோ, சிட்டவுன்", என்று ஹோஸ்டஸ் சொன்னாள். "அட முட்டாளே கீழே  விடுவாய்", என்ற வசவு அந்த நோ நோவில் ஒளிந்திருந்தது. எமர்ஜென்சி லைட் எரிந்து கொண்டிருந்தது. எனக்கும் எமர்ஜென்சிதான் என்று எப்படிச் சொல்வது என்று தவித்துக் கொண்டிருக்கும்போது, கேப்டனின் அறிவிப்பு வந்தது. விமானம் கடினமான சூழ்நிலையில் இருப்பதால் (Turbulence weather) அவரவர் இருக்கையில் அமர்ந்து சீட்பெல்ட்டை போட்டுக் கொள்ளச் சொல்லி.

விமானம் பயங்கரமாக அதிர்ந்து தடதடக்க, என் நெஞ்சு படபடத்து, என் இதயம், தொண்டைக்கு வந்தது போலத் தெரிந்தது. இருமலும் வந்தது. பாத்ரூமில் நம்பர் 1 அவசரமாக போக காத்திருக்கும்போது,  இருமுவது எத்தனை கஷ்டம்/ஆபத்து  என்பதை அனுபவித்தவர்கள்தான்   சொல்ல முடியும் .
காணாமல் போன மலேசிய விமானம் வேற ஞாபகத்தில் வந்து தொலைத்தது. அதோடு மறந்து போன இயேசு நாதர் ஞாபகத்துக்கு வந்தார். என் மனைவி பிள்ளைகளின் முகங்கள் வந்து வந்து போயின. இந்த சேப்ஃடி இன்ஸ்ட்க்க்ஷன்ஸ் வேற  பார்க்கல. இதற்கிடையில் ஆடின  தண்ணி கப் தவறி பேன்டில் விழுந்து கொட்டி நனைந்துவிட்டது.   

ஒரு பதினைந்து நிமிடங்கள் உலு உலு என்று உலுக்கியெடுத்துவிட்டு விமானம் சரியானது. எனக்கு வேர்த்துக் கொட்டியிருந்தது. அதே அப்சரஸ்  ஒண்ணுமே நடக்காத மாதிரி நளின நடையில் வந்து மெனு கார்டுகளை கொடுத்து புன்னகைத்தாள். "இப்போது பாத்ரூம் செல்லலாமா?”, என்று கேட்டேன். "ஷ்யூர்", என்றாள். "அப்பாடா", என்று எழுந்தேன். என் பேண்ட் அந்த இடத்தில்  நனைந்திருந்ததைப் பார்த்து, அவள் சந்தேகமாய்ப் பார்த்தாள். "நோ நோ ஆடிய ஆட்டத்தில் தண்ணீர் கொட்டிவிட்டது", என்றேன். சந்தேகம் தீராமலேயே நகர்ந்து சென்றுவிட்டாள். அதன்பின் எனக்கே ஒரு சந்தேகம் வந்துவிட்டது, ஒரு வேளை ??????????.
சரி விடு, இதயெல்லாம் புரூவ் பண்ணமுடியாதுன்னு நினத்து ரெஸ்ட் ரூமுக்கு சென்றேன். அதற்குள் பலபேர் என்னை மாதிரி எழுந்து வர, பெரிய லைன் அங்கு உருவாகியது. நல்ல வேளை நான் தான் முதலில். "ரெஸ்ட் ரூமில்", ஆக்குபைட்" என்று தெரிந்தது. சிறிது நேரத்தில் உள்ளே கொஞ்சம் வித்தியாச சப்தங்கள் கேட்டன. இப்பதான் தடதடப்பு குறைஞ்சு போச்சே, இதென்ன ரெஸ்ட் ரூமின் உள்ளே டப்பாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நம்ம ஊர் போல தட்டிக்கொட்டி? சீய் சும்மாரு விவஸ்தையில்லை?.
லைன் நீளமாகிக் கொண்டிருக்க, உள்ளே போன அவளோ அவனோ வெளியே வரவில்லை. பொறுமையை இழந்த என் பின்னாலிருந்து ஒரு வஸ்தாது, ரெஸ்ட் ரூம் கதவை எட்டித் தட்டினார். என்னால் தட்டமுடியாது, ஏன்னா ரெண்டு கையிலும்  பேண்டின் ஈரத்தை மறைத்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு ஒரு சந்தேகம், உள்ளே ரெண்டு பேர் இருப்பது போல் தெரியுது. கற்பனை விரிந்ததில் ஒருவேளை ஒரு ஆணும் பெண்ணும், அல்லது இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்கள். இந்தக் கற்பனைக்கு அளவேயில்லை என்று அதட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் வெளியே வந்தது இரண்டு ஆண்கள்.
ஏய் நிறுத்துங்க நிறுத்துங்க, நீங்க நினைப்பது போலில்லை. ஒரு அப்பாவும் அவரின் சிறு பையனும் வெளியே வந்தார்கள். அதன் பின்னர் நான் உள்ளே போய்விட்டு வந்தேன். உஷ் அப்பாடா என்ன ஒரு விடுதலை. இதனால் தான், நான் நிறைய தண்ணீர் குடிப்பதில்லை, அடிக்கடி வந்து அவஸ்தையைக் கொடுக்கும்.
வந்து மிச்சப் படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். மெனு கார்டில் இருந்த ஐட்டங்களின் பேர் ஒன்னும் புரியலை.

வேறொரு பெண் வந்து," என்ன மீல் வேண்டும்", எனக்கேட்ட போது நான் சேஃபாக வெஜிடேரியன் மீல்ஸ் என்றேன். "ஹீண்டு மீல்?" என்றாள் நானும் ஏதோ ஞாபகத்தில் "இல்லை கிறிஸ்டியன் மீல்" என்று சொல்லி நாக்கைக் கடித்துவிட்டு, ஆமாம், என்றேன். வெஜிடேரியன் சாப்பாட்டைத்தான் விமானங்களில் ஹிண்டு மீல் என்கிறார்கள். நினைத்தால் சிரிப்பு வந்தது. ஒரு முஸ்லீம் நாட்டுக்குச் செல்லும் ஃபிளைட்டில் ஒரு கிறிஸ்தவன் ஹிண்டு மீலைச் சாப்பிடுகிறான். சாப்பாட்டுக்குப்பின் "பேசாம தூங்குங்க” என்று சொல்வது போல், எல்லா லைட்டையும் ஆஃப் செய்து விட்டார்கள்.
எப்போது அசந்தேன் என்று தெரியவில்லை. விமானம் இறங்கும் அறிவிப்பு வந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் இஸ்தான் புலில் விமானம் தரையிரங்கும் என்றார்கள். மீண்டும் அழகாக வெட்டிய பழங்களுடன் ஒரு சிற்றுண்டி வந்தது. கச்சிதமாக  தரையிறங்கிய விமானத்துக்கு, பயணிகள் அனைவரும் கைதட்டி தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ஏப்ரல் 25, 2014 , மதியம் 12 மணியளவில் இறங்கியது. நியூயார்க்குக்கும் இதற்கும் 7 மணி நேரம் வித்தியாசம் .
இஸ்தான்புல் "ஆட்டடுர்க் ஹவில் மணி" (Ataturk Havilmani) ஏர்போர்ட்டில் காலை வைத்தேன். யாரிந்த ஹவில்மணி என்று பக்கத்தில் கேட்ட போது அவர்களுக்குத் தெரியவில்லை. சரி விடு நம்மூர் கவுண்டமணி போல இங்கு ஒரு ஹவில்மணி என்று நினைத்துக் கொண்டு இமிக்ரேஷன் பக்கம் சென்றேன். 
ஏராளமானவர் லைனில் இருந்தனர். ஏற்கனவே ஆன்லைனில் விசா வாங்கியிருந்தேன் என்பதால் ஓரிறு கேள்விகளுடன், "வெல்கம் டு இஸ்தான்புல்", என்று சொல்லி பாஸ்போர்ட்டில் ஒரு சாப்பா குத்தி அனுப்பினார்கள்.
லக்கேஜை பொறுக்கிக்கொண்டு முன்பகுதிக்கு வந்தேன். "ஹேன்ஸ் ஹாஸ்டல்" போகவேண்டும் என்று ஒரு கார் கம்பெனியில் கேட்டேன், 110 லிரா என்றான். அதிகம் என்று நினைத்து இன்னொரு இடத்தில் கேட்டேன் 70 லிரா ஆகும் என்றான். நேராக வெளியே வந்தால், நியூயார்க் போலவே டாக்சி ஸ்டாண்ட் இருந்தது. வரவர ஒவ்வொருவராய் ஏற்றிவிட்டார்கள். ஃபியட் காரில் TAKSI என்று எழுதி வந்த வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். அவன் கேட்டது ஒன்றும் புரியாமல், ஃபைலை எடுத்து அட்ரஸைக் காண்பித்தேன். ப்ச் என்று அலுத்துக் கொண்டான். பக்கம் என்பதாலோ, என்னவோ தெரியவில்லை. ஆனால் மீட்டர் போட்டான்.
பத்து நிமிடத்தில் ஹோட்டல் வந்துவிட்டது. 12.50  என்று காண்பித்தது. 20 லிராவை எடுத்துக் கொடுத்தேன். மீதம் சில்லறையை எடுக்கப்போன போது தடுத்து மீதியை வைத்துக் கொள்ளச் சொன்னேன். அதன்பின்தான் அவன் நார்மலுக்கு வந்து சிரித்தான். போனால் போகிறது ,டூர் கம்பெனியில் 100 லிரா அல்லவா கேட்டார்கள். 20 லிரா என்பது 10 டாலருக்குச் சமம்.
ரூமில் போய் ஒரு குளியலைப்போட்டு உடைமாற்றி வெளியே வந்தேன். மாலை மணி நான்கு. பக்கத்தில் ஒரு  மால் இருந்ததாகச் சொன்னாள் ரிஷப்ஷன் பெண். ஏறியும் இறங்கியும் போன தெருக்களில் போய் "Star city" என்ற மாலுக்குச் சென்றேன். US போலவே மிகப்பெரிய மால். US-ன் எல்லா பிராண்டு கடைகளும் இருந்தன.


சும்மா விண்டோ ஷாப்பிங் செய்துவிட்டு ஒரு சாண்ட்விச்சை சாப்பிட்டு முடித்து படுக்கச் சென்றேன். இஸ்தான்புல்லில் இருப்பதை  நம்ப முடியவில்லை. அடுத்த நாள் என்னவெல்லாம் அதிசயங்கள் காத்திருக்கிறதோ?

 தொடரும் >>>>>>>>>>>

அறிவிப்பு:
நண்பர் இசையமைப்பாளர் இரா. பிரபாகர் அவர்களும் அவர் மனைவியும் மதுரையிலிருந்து வந்திருப்பதால்   அடுத்த வாரம் , நம்ம ப்ளாகுக்கு விடுமுறை. இஸ்தான்புல்  ஜூனில் தொடரும்.
.

Thursday, May 15, 2014

நாயும் பேயும் !!!!!!!!!

Add caption
நாய்களைக் கண்டால் எனக்கு ரொம்பப் பயம். ஆனால் என்னைக்கண்டாலும் நாய்களுக்குப் பயமா? என்று தெரியவில்லை. என்னைப் பார்த்ததும் குலைக்க ரம்பிச்சிருதுக. தேவதானப்பட்டியில் தெருநாய்கள் பலதடவை துரத்தியிருக்கு, ஆனா நல்லவேளை ஒரு தடவை கூட கடி வாங்கல. ஒரு தடவை நாய் துரத்தி தெருத் தெருவா ஓடி ரொம்பதூரம் போய் காணாமப் போயிட்டேன்.

 இந்தப்பிரச்சனை நியூயார்க் வந்தும் ஓயல. என் பக்கத்து வீட்டுல ஒரு வயதான ஆப்பிரிக்க சகோதரரும், கொஞ்சம் இருங்கள், வயதானவர் எப்படி எனக்கு சகோதரரா இருக்க முடியும்?. வயதான ஆப்பிரிக்கத் தாத்தாவும் அவர் நாயும் வசித்து வருகிறார்கள். இருவர் மூஞ்சியும் ஒரே மாதிரி இருக்கும். இருவருக்குமே என்னைப் பிடிக்காது. ஏன்னு தெரியல. ஆப்பிரிக்கத் தெருவுல தொடர்ந்து இந்தியர்கள் குடியேறுவது பிடிக்கலேன்னு நினைக்கிறேன்.   

அவர் ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரின்னு சிலரும், ஓய்வு பெற்ற செக்யூரிட்டி கார்டு என்று பலரும் சொல்றாங்க. உண்மை தெரியல. எது எப்படியோ அவர் பக்கத்துல இருக்கிறது கொஞ்சம் பாதுகாப்பு தான்.  ஏன்னா தெருவில யார் வந்தாலும் என்ன ஏதுன்னு விசாரிப்பார்.
My NY house

என்னோட டிரைவ் வே பக்கத்தில் இடுப்பளவு வேலியின் அந்தப்புறம் அவங்க வீடு. நாய் இருந்தா அந்தப்பக்கம் போக மாட்டேன். அது இருக்கிற உயரத்திற்கு வேலியின் மேல் கொஞ்சம் எட்டிப்பார்த்தா போதும், நேரா என் அது மூஞ்சி என் மூஞ்சிகிட்டே வந்துரும்.

இங்கு கார் எல்லாம் லெஃப்ட் ஹேன்ட் டிரைவ்னால, டிரைவர் பக்க டோர்  அவர்கள் வேலி பக்கம் இருக்கும்.   சில சமயம் நாய் உள்ளே போற வரைக்கும் காரை எடுக்க முடியாம அவஸ்தைப்பட்டிருக்கிறேன்.
கறுகறுன்னு கொஞ்சம் சடைபோட்டு, நீள நாக்கைத் தொங்கப்போட்டு இழைத்துக் கொண்டே தாடையோரப் பற்களைக் காட்டும்.எந்த டங் கிளீனர் யூஸ் பண்ணுதுன்னு தெரியல, நாக்கு எப்பவும் சுத்தமா இருக்கும்.

ஒரு தடவை ஒரு  புல்தகத்துல படிச்சேன். நாய்க்கு பேய்களை அடையாளம் தெரியும்னு. பேயைப் பார்த்ததும் குலைக்குமாம். இதைப்படிச்சதும் எனக்கு ஒரே சந்தேகமாய்ப் போயிருச்சு. அப்புறம் எதுக்கு என்னைப் பார்த்து குலைக்குதுன்னு. தம்பித்தேட்டம் ஹாஸ்டல்ல படிக்கும்போது, ராத்திரி ஸ்டடி நடக்கும்போது நாங்க நாய் ஆராய்ச்சி பண்ணுவோம். அதுல ஆறுமுகம் இருக்கானே அவன் எக்ஸ்பெர்ட். குலைக்கிற சத்தத்தைக் கேட்டு சொல்லிருவான் எதுக்கு குலைக்குதுன்னு. 

உஊ உஊ உ ஊன்னு குலைத்தா, அதுக்கு பிடிக்காத யாரோ அல்லது திருடன் வாரான்னு சொல்வான்.
உக்கு உக்கு உக்குன்னு குலைச்சா அதுக்குப் பசியெடுக்குதுன்னு சொல்வான்
ஊ ஊ  ஊன்ணு நீளமா ஊளையிட்டா, யாரோ சாகப்போறாங்கன்னு சொல்வான்.
உ... உ... உ.. ன்னு இடைவெளிவிட்டு சத்தமில்லாம அடித் தொண்டையில் கூவினா காதலியக் கூப்பிடுதுன்னு சொல்வான்.
உ உ உ உ ன்னு இடைவெளி விடாம குலைச்சதுன்னா, ஏதோ பேய் நடமாடுதுன்னு சொல்வான்.
கேட்க கேட்க ஆச்சரியமாயிருக்கும்.பேயைப்பார்த்தா குலைக்கற சத்தம்னு அவன் சொன்னா, அவனுக்குப்பக்கத்துல போய் உட்கார்ந்து, அவன் போர்வைக்குள்ள முண்டி உள்ளே போயிருவேன்.

ஒரு தடவை அந்த சமயத்தில் அங்கு வந்த வார்டன் அதப்பாத்து தப்பா எடுத்துக்கிட்டாரு. ஆனா ஒண்ணும் கேக்கல, நானும் சொல்லலை. அவரை எப்பனாச்சும் பாத்தா சொல்லனும், நான் அப்படிப்பட்டவன் இல்லைன்னு.

இந்த பக்கத்துவீட்டு நாய் என்னைப்பாத்து குலைக்கறது, ஆறுமுகம் சொன்ன எதுலயும் அடங்கல. ஆனா கொஞ்சம் கொஞ்சம் பேயைப் பாத்து குலைக்கற மாதிரி தெரியுது.

ஒருவேளை எனக்குத் தெரியாம என்ட்ட பேய் எதனாச்சும் இருக்குமோ? எல்லார் மனசிலும் good & Evil ரெண்டுமே இருக்குன்னு தெரியும். அதுனால என்ட்ட இருக்கிற Evil ஐ பாத்து குலைக்குதோ. 

ஏன் என்ன காரணம் எதுக்காக என்னைப்பார்த்து ஆக்ரோஷமா குலைக்குதுன்னு யோசிச்சு யோசிச்சு மண்டையைப் பிச்சுக்கலாம் போல இருக்கு.
ஆறுமுகம் இப்ப எங்கிருக்கான்னு தெரியல. யாராவது காரணம் தெரிஞ்சா சொல்லுங்களேன், வீடு வேற என் சொந்த வீடு. இந்த நாய்க்காக வீட்டை மாத்த முடியாது.
"ஏலேய் சேகரு"?
"என்னடா மகேந்திரா"
"ஏண்டா இதுக்குப்போய் இப்படி புலம்புற ? "
"இல்லடா எனக்கு ஒரே ஆத்திரம் ஆத்திரமா வருது"
"அட லூசு, இது ரொம்ப சிம்பிள்றா"
"சரி நீதான் சொல்லேன்"
"நீ சொல்லு, நாய்க்கு எது ரொம்ப பிடிக்கும்"
"பொரையும் பிஸ்கட்டும்"
"போடா இவனே, எதுறா ரொம்பப்பிடிக்கும்"
தயிர்சோறு பால்சோறு, கறி"
"இப்பதான் நெருங்கி வர்ற, கறியில் எது ரொம்பப் பிடிக்கும்"
"ஆமா ஆமா எலும்பு  எலும்புதான் நாய்க்கு ரொம்பப் பிடிக்கும்"
"இப்ப விளங்குதா உன்னைப் பார்த்து அந்த நாய் ன் குலைக்குதுன்னு" .


....        ...

Monday, May 12, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி பகுதி-1 டர்க்கிஷ் பணிப்பெண் கொடுத்த டர்க்கிஷ் டிலைட் !!!!!!!!!!

செறிவான வரலாறு உடைய இஸ்தான்புல்லுக்கு போக வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு எப்போதுதான் நனவாகுமோ என்று புலம்பிக் கொண்டிருக்கும் போதுதான், என் மனைவி சொன்னாள், "போறதுனா போய்ட்டு வாங்க, இதுதான் உங்களுக்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு”, என்று.

துள்ளிக்குதித்த நான் காசை உடனே கறந்துவிட்டு, வழக்கம்போல் எக்ஸ்பீடியாவில் (Expedia.com) புக் செய்தேன். துருக்கி ஏர்லைன்சில் நியூயார்க் JFK விமான நிலையத்திலிருந்து துருக்கி இஸ்தான்புல்லுக்கு டைரக்ட் பிளைட். ஏப்ரல் 26 மாலை 6.50க்கு கிளம்பி அடுத்த நாள் காலை 11.50க்கு சென்று சேர்ந்தது. மொத்தம் கிட்டத்தட்ட 11 மணி நேரம் பிளைட்.

கொஞ்சம் இடைவேளைக்குப் பின்னர் பெரிய போயிங் விமானப்பயணம். எனக்கு விண்டோ சீட், கிரீஸுக்கு செல்லும் வெள்ளைக்கார தம்பதிகளை எழுப்பிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தேன். முதல் பல்பு என்னன்னா, முன்னால் பொருத்தப்பட்டிருந்த டிவி எனக்கு மட்டும் வேலை செய்யவில்லை.

ஹோஸ்டஸ்களிடம் இருமுறை சொல்லியும், கண்டுகொள்ளாமல் சிலிப்பிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்தார்கள். சரிதான் முழுப்பயணமும் மொக்கையாப்போறது என்று நினைத்து வருத்தத்துடன் கண்களை மூடி உட்கார்ந்திருந்தேன். எக்ஸ்யூஸ் மி என்று விளித்து, ஒரு அப்சரஸ் எதிரே நின்றாள். இது கனவா அல்லது நனவா  என்று திடுக்கிட்டு விழித்தேன் .சூடான சிறிய டவல் ஒன்றைக் கொடுத்தாள். என்னடாது அசடு அவ்வளவு மோசமாவா வழியுது என்று நினைத்துக்கொண்டே பார்த்தால், அட எல்லோருக்கும் தான் தருகிறார்கள். சரிவிடுன்னு நினைத்து டவலை விரித்து முகத்தைத் துடைத்தேன். சரியான சூடு, சுட்டுறுச்சு, படக்குன்னு எடுத்துட்டேன். இது ரெண்டாவது பல்பு. யாரும் பாக்குறாங்களான்னு பக்கத்தில் பார்த்தா, அங்கு உட்கார்ந்திருந்த மாபெரும் வெள்ளைக்காரப் பெண், "டூ ஹாட் இஸ் இட்?",  என்று புன்னகைத்தாள்.  இப்ப என்ன ஒன்னைக் கேட்டமா?, என்று கடுப்புடன் முகத்தைத் தொட்டுப்பார்த்தேன். ஏற்கனவே கருமூஞ்சி இப்ப கருகருமூஞ்சியா ஆயிருக்கும்னு நெனைச்சி ரொம்ப வருத்தமாப் போச்சு.

திரும்பவும் அதே பெண் ஒரு தட்டில் சிறுசிறு மிட்டாய்களை கொண்டு வந்து கொடுத்தாள். அந்த சிறு மிட்டாய்களுக்கும் சிறு சிறு கவர்  போட்டு ஒரு சிறிய கப்பில் போட்டு கொடுத்தாள். நம்மூர் ஜூஜூபியில் சில பாதாம் பிஸ்தா பருப்புகளை போட்டுச் செய்த மாதிரி இருந்தது. "டர்க்கிஷ்  டிலைட்" ( Turkish  Delight) என்று பெயர் சொன்னார்கள். நன்றாகவே இருந்தது. சைஸ்தான் சின்னதா இருந்ததே என்று வருத்தப்படும்போது, என்னோட சுகர் ப்ராப்ளம் ஞபாகம் வர சரிவிடு போதும் போதும் என்றேன்.

விண்டோ சீட் ஆசைப்பட்டு வாங்கினாலும், சிலசமயம் ஏண்டா வாங்கினோம் என்றிருந்தது. ஏன்னா ஒரு பாத்ரூம் போகனும்னா கூட குறைஞ்சது ரெண்டு பேர் வழி விடனும்.

என் சீட்டில் ஏதோ உறுத்த, பார்த்தால் ஒரு மெல்லிய துணிச் செருப்பு. பாலித்தின் உறையில் இருந்தது. ஆஹா என்று அதனைப்பிரித்து, என் ஸ்னீக்கரை கழற்றி ஓரமாய்  வைத்துவிட்டு மாட்டிப் பார்த்தேன். உரலுக்குள் விரல் விட்டமாதிரி, கொஞ்சம் பெரிதாக இருந்தது. சீட்டில் இன்னொரு பெளச் இருந்தது. உள்ளே தூங்குவதற்கு கண்ணில் போடும் மறைப்பு (Blind Fold) ஒரு டூத்பிரஷ் ஒரு சிறிய பேஸ்ட் டியூப் மற்றும் லிப் பாம்  ஆகியவை இருந்தன. ஆனா நேரம் மாறி மாறி வருவதால் எப்ப பல் விளக்கனும்னு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்.அதோடு ஒரு நல்ல ஷாலும் (Shawl) இருந்தது. டர்க்கி டவல் போல இது டர்க்கி ஷால் என்று நினைத்துக் கொண்டேன்.  

கொஞ்ச நேரத்தில் அந்தப்பெண் குடிக்க என்ன வேண்டும் என்று கேட்டாள். விஸ்கி, வைன், ரம், பியர் என பல வகைகளோடு கோக் மற்றும் பலவகை ஜூஸ்கள் இருந்தன. நமக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லையே. "டயட் வாட்டர்" என்றேன். "வாட்". என்றாள்.

"ஜஸ்ட் வாட்டர் வித்தவுட் ஐஸ்" என்றேன். ஓ இவன் அந்தக் கேஸ் என்று நினைத்தாளோ என்னவோ, ஒரு நமட்டுச் சிரிப்புடன் தண்ணீர் கொடுத்தாள்.
அவளிடம் மிகவும் கோபமாக, "பிளீஸ் இந்த டிவியை பிளீஸ் சரி செய்யுங்க பிளீஸ்", என்றேன். ஏழு ப்ளீஸ் போட்டுப் பேசுவதுதான் கோபமாகப் பேசுவதா என்று நீங்கள்  நினைப்பது எனக்குத்தெரிகிறது. என்னவோ தெரியலை அழகான பெண்களிடம் கோபப்படமுடியவில்லை.

சற்று நேரம் அங்குமிங்கும் பராக்குப் பார்த்தேன். பக்கத்தில் உள்ள டிவியும் எனக்குத் தெரியவில்லை. ஸ்கீரின் கார்ட் ( Screen Guard) போட்டிருப்பார்கள். அவரவருக்கு மட்டும்தான் தெரியும். சிறிது நேரத்தில் என் டிவியை எனக்குத் தெரியாமல் யாரோ நோண்டுவது தெரிந்தது. ரிமோட் ஆப்பரேஷன் மூலம் ரீலோட்  பண்ணி,ரீஸ்டார்ட் பண்ணினார்கள். பளிச்சென்று ஸ்கீரின் வந்தது. காதுகளில் இயர்போனை மாட்டிக் கொண்டு டச் ஸ்க்ரீனில் பிரெளசினேன்.

நியூஸ், டிவி, மேப் மற்றும் என்டர்டைன்மென்ட்  பட்டன்கள் இருந்தன. என்டர்டைன்மென்ட் பட்டனை தட்டினால், பிளாக்பஸ்டர், காமெடி, டிராமா மற்றும் வேர்ல்ட் சினிமா என்று இருந்தது. தமிழ் கூட இருக்குமோ என்று எண்ணி வேர்ல்ட் சினிமாவை தட்டினேன். இதோ "சென்னை எக்ஸ்பிரஸ்". ஆனால் இந்தி வெர்ஷன். பக்கத்தில் பார்த்து தொட்டுக்காண்பித்து பெருமையாக, "என் நேட்டிவ் பிளேஸ்", என்றேன். வாட் என்று கண்விரித்த அந்த கிரீஸ் பெண்ணிடம், நத்திங் என்றேன். (உன்னால் அவங்க ஸ்கீரினை பாக்க முடியலைன்னா அவங்களாலும் உன் ஸ்கீரினை எப்படி பார்க்க முடியும் முட்டாளே).

பிளாக்பஸ்டரை நோண்டியதில் "புக் தீஃப்" என்ற ஹிட்லர் கால பீரியட் ஃபிலிம் ஒன்றிருந்ததைப் பார்த்தவுடன், நன்றாக உட்கார்ந்து படத்தை ஆரம்பித்தேன். படத்தில் நேசப்படைகள் அந்தக் கிராமத்தை குண்டுபோட்டுத் தவிடு பொடியாக்க, என் விமானம் பெரும் ஆட்டம் போட்டது. என்ன 3D எஃபக்டா இருக்குமோ என்று நினைத்த போதுதான் எமர்ஜென்சி லைட் எரிந்தது. எனக்கு அவசரமாக பாத்ரூம் வேறு வந்தது.

தொடரும் >>>>>>>>>>>>>>


Thursday, May 8, 2014

புரூக்ளினில் புரட்சி !!!!!!!!!!!!!

அந்தப்பெண்ணை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அவள் என்னைப் பார்த்துப் புன்னகைக்க நான் மையமாக சிரித்தேன். கடந்த வாரம் புரூக்ளினில் உள்ள புரூக்ளின் மருத்துவமனைக்கு சென்றேன். எனக்குத்தெரிந்த ஒருவர் அங்கு அனுமதிக்கப் பட்டிருந்தார். எனவே ஒரு "கெட்வெல் சூன்" (Get well soon) கார்டை வாங்கிக்கொண்டு அவரைப் பார்க்கச் சென்றேன்.

பல மாடிகளைக் கொண்ட மிகப்பிரமாண்டமான மருத்துவமனை. உள்ளே மிகச் சுத்தமாகவும், எந்த ஒரு ஆஸ்பத்திரி வாடையும் இல்லாமலும் இருந்தது. அங்கு மெதுவாய் நடந்து கொண்டிருந்த நோயாளிகள், அவர்களைப் பார்க்க வரும் சற்றே கவலை தோய்ந்த முகங்கள், பரபரவென்று இயங்கிக் கொண்டிருந்த நர்ஸ்கள், டாக்டர்கள் என்று ஒரு வித்தியாசக்கலவையாய் இருந்தது.

கீழ்ப்புறத்தில் பெரிய ஹோட்டலின் ரிஷப்ஷன் போன்று இருந்தது. பக்கத்தில் ஒரு சிறிய கடை பரபரப்பான வியாபாரத்தில் இருந்தது. கெட்வெல் கார்டுகள், பலூன்கள், பொம்மைகள், சிறிய பூந்தொட்டிகள், அழகிய சிறு அலங்காரச் செடி வகைகள், பூங்கொத்துகள் என்று இருந்தன. அனைத்தும் அங்குள்ள நோயாளிகளுக்குக் கொடுக்கத்தான்.

எலிவேட்டரில் ஏறும்போது, அதே நடுத்தர வயதுப்பெண் என்னையே பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள். தென் அமெரிக்கப் பெண் போலத் தெரிந்தது. டாக்டரா நர்சா என்று தெரியவில்லை. இங்கேதான் ரெண்டு பேருமே ஸ்டெதாஸ்கோப் வைத்திருக்கிறார்களே. ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறாள்?. ஒருவேளை என்னைத் தெரியுமோ. எலிவேட்டரில் நிறையப்பேர் இருந்தார்கள். நானும் சிரித்து வைத்தேன். நாலாவது மாடியில் நான் இறங்கிக் கொள்ள, அவளும் அங்கேயே இறங்கினாள். வேறு யாரும் இறங்கவில்லை. இறங்கியவள் என்னைப்பார்த்து "ஹாய்", என்றாள். நானும் "ஹாய்", என்றேன்.
நான் ஏற்கனவே கூச்ச சுபாவம் உள்ளவன். (சொன்னாங்க, சொன்னாங்க) அதுவும் பெண்களிடம், சொல்லவே வேணாம். நான் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். "ஹலோ உங்களைத்தான் எங்கே செல்ல வேண்டும்" என்றாள். நான் சொன்னேன். "வாருங்கள் நான் அந்தப்பகுதிக்குத் தான் செல்கிறேன்", என்றாள். அழகாக வேறு இருந்தாள்.

இதென்னடா வம்பாப்போச்சு என்று நினைத்தாலும் உதவி பண்ண வந்தவளை உதாசீனப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணெத்தில் அவள் கூட நடந்தேன்.

"நீங்கள் ஒரு இந்தியர்தானே?", என்றாள். அப்பாடா ஒருவர் நியூயார்க்கில் என்னை இந்தியரா என்று கேட்டது மகிழ்ச்சியாயிருக்கிறது. சமீப காலமாக "பங்களாதேஷா ?" என்று கேட்டவர்கள்தான் அதிகம்.

"ஆம்", என்று புன்னகைத்தேன்.
“மகாராஜாக்களின் தேசம்”,
"ஆம்”
“ஒருநாள் இந்தியா செல்லவேண்டுமென ஆசை. இந்தியர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்"
ஐயையோ இவள் எதற்கு அடிபோடுகிறாள் என்று தெரியவில்லை. அவளுக்கோ அல்லது எனக்கோ காதலிக்கும் வயதில்லை.
அவள் மீண்டும் என்னைப்பார்த்து புன்னகைத்துவிட்டு, “எனக்கு ஒரு இந்திய இளவரசரைத் தெரியும்", என்றாள். "நான் இங்கு மாணவியாக இருக்கும்போது தான் அவர் இங்கு வந்திருந்தார். அடேயப்பா அவர் வரும்போதெல்லாம் ஒரு ஊர்வலம் போல பல கார்கள் அணிவகுத்து வரும். குறைந்தது 50 பேர் அவரைச் சுற்றி இருப்பார்கள். சில சமயம் கூட்டம் கட்டுக்கடங்காது", என்று தொடர்ந்தாள்.
யாராக இருக்குமென யோசித்த நான், இளவரசர் என்றால் ஏதாவது வட இந்திய மாகாணத்திலிருந்து வந்திருப்பார் என நினைத்தேன்.
“இந்தியா மிகப்பெரிய நாடு, எந்தப்பகுதி என்று தெரியுமா?”, என்றேன்.
"செளத் இந்தியா", என்றாள்.
"தென்னிந்தியாவா?, ஒரு வேளை ஆற்காடு இளவரசராக இருப்பாரோ.
"அவர் இளவரசர் என்று யார் சொன்னது".
"இல்லை நானாகவே யூகம் செய்து கொண்டேன்"
"யாரிடமாவது கேட்டீர்களா?"
"இல்லை அப்போது நான் ஸ்டூடன்ட் தானே, ஆனால் யாரோ, அவர்தான் ரூலர் என்றார்கள், அவரைக்கண்டவுடன் எல்லோரும் வணங்குகிறார்கள்".
"எப்படி இருப்பார்"


"கருப்புக் கண்ணாடியும், வெள்ளைத் தொப்பியும் எப்போதும் அணிந்திருப்பார்.
"பேர் தெரியுமா?"
"தெரியாது ஏதோ இனிஷியல் சொன்னார்கள்".
"MGR-ஆ"

"அட ஆமாம், அவரே தான்"