Thursday, January 18, 2018

ஊனமற்றவர்களை வைத்து நடக்கும் பிசினஸ் !!!!

படித்ததில் பிடித்தது

ஏழாம் உலகம் - ஜெயமோகன் - கிழக்கு பதிப்பகம்

Related image

            இந்து மத நம்பிக்கையில் மொத்தம் ஏழு உலகங்கள் இருக்கிறதாம். நமக்கு நன்கு தெரிந்த (?) சொர்க்கம், நரகம் தவிர இன்னும் பல உலகங்கள் இருக்கின்றனவாம். ஆனால் இந்தப் புதினத்திற்கு "ஏழாம் உலகம்" என்று பெயர் வைத்தது, நாம் இருக்கும் இந்த உலகத்திலேயே நமக்குத் தெரியாத பல உலகங்கள் இருக்கின்றன என்று நமக்குத் தெரியப்படுத்துவதற்காகத்தான். ஜெயமோகன், அப்படிப்பட்ட நாம் பார்க்காத, அதிகம் தெரியாத ஒரு உலகத்தை நம் கண்முன்னால் கொண்டுவரும்போது அது ஆச்சரியத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் அளிக்கிறது.

Image result for naan kadavul

          "நான் கடவுள்" என்ற பாலாவின் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதினார் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அந்தப் படத்திற்கு மூலக்கதை இந்தப் புத்தகம்தான் என்பது எனக்குப் புதிய செய்தி.
          கதை முழுதும் நடக்கும் உரையாடல்கள் மலையாளமும் தமிழும் கலந்த நாகர்கோவில் பாஷையில் வருகிறது. பல இடங்களில் அர்த்தம் புரியாது என்பதாலேயே பின் இணைப்பாக அந்த வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தத்தைத் தந்திருக்கிறார்.
          இனி நாவலின் சாராம்சங்களை வழக்கம் போல் புல்லட் பாயிண்டில் பார்ப்போம்.
Related image
Jeyamohan

1)   உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் குறைப் பிறவிகளை வைத்துக்கொண்டு சிலர் வியாபாரம் செய்கிறார்கள். அவர்களை உறுப்படிகள் என்று அழைக்கிறார்கள்.
2)   பல இடங்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று, பிச்சையெடுக்க வைத்து அதன் கலெக்சன் மூலம் லாபம் சம்பாதிக்கிறார்கள்.
3)   இதில் ஈடுபட்டிருக்கும் ஈனப்பிறவிகள் அவர்கள் உறுப்படிகளை அடிக்கடி வாங்கி விற்கும் வேலையிலும் ஈடுபடுகிறார்கள்.
4)   ஒவ்வொரு உறுப்படியின் விலை பத்தாயிரத்திலிருந்து பல லட்சம் வரை  பேரம் பேசப்படுகிறது.
5)   அதுமட்டுமல்ல இவர்களுக்கு கீழே இருக்கும் குறைப் பிறவிகளுக்குள் உடலுறவை உண்டாக்கி மேலும் குறைக் குழந்தைகளை உருவாக்கும் கொடுமையும் நடக்கிறது.
6)   பழநியில் நடக்கும் தைப்பூச விழாவிற்கு கர்நாடகா மற்றும் நாக்பூர் போன்ற தூர இடத்திலிருந்தும் இப்படிப்பட்டவர்களை கொண்டு வந்து இறக்குகிறார்கள்.
7)   அது மட்டுமல்லாமல், திருவிழா சமயத்தில் கள்ளச் சாராயம், கஞ்சா விலைமாதர் சப்ளையும்  வெகுவாக நடக்கிறது. அதோடு திருடர்களும் வந்து கூடுகிறார்கள்.
8)   இந்த பிஸினெஸ்  செய்யும் முதலாளிகளை மிரட்டியும் உருட்டியும் போலீஸ்காரர்களும் தங்கள் பங்குகளை வாங்கிக்  கொள்கிறார்கள்.
9)   அதைவிடக் கேவலம் அந்தக்குறை உருப்படிகள் பெண்களைத் தூக்கிக் கொண்டு போய் போலீஸ்காரர்கள் உடலுறவு செய்வதும் நடக்கிறது என்பதை நினைத்தால் வாந்தி வருகிறது. இரண்டு காலும் இல்லாதவர்கள் அல்லது கையிரண்டும் இல்லாதவர்கள் ஆகியோர்களும் இதிலிருந்து தப்ப முடிவதில்லை.
10)               அதற்கும் மேல் ஆஸ்பத்திரியில் யாருக்காவது இதயமோ கிட்னியோ தேவைப்பட்டால் இந்த ஊனமுற்றவர்கள் முதலாளிகளால் விற்கப்படுகிறார்கள்.
11)               சமூக சேவை மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் பேரில் அல்லது தன்னார்வ இயக்கங்களின் பேரிலும் இந்தச் சுரண்டல் நடப்பதை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது.
12)               அவர்கள் மத்தியிலும் குழு, குடும்பம், அன்பு பரிவு, வாழ ஆசை என்பதையும் பல இடங்களில் ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.
13)               அதோடு பிச்சையெடுக்கும் பிச்சைக் காரர்கள் வருவோர், போவோரை, பரிதாபமாக பிச்சையோடு அணுகுவதும் ஆனால் அவர்கள் பின்னால் பழித்துப் பேசுவதும் நடக்கிறது.
14)               இதைவிடக் கொடுமை என்னவென்றால் சிலர் சிறுபிள்ளைகளைப் பிடித்து முகத்தில் ஆஸிட் ஊற்றி சிதைத்து அடையாளத்தை மாற்றி இந்த மாதிரி முதலாளிகளிடம் விற்றுவிடுவது நடக்கிறது.
15)               இந்த முதலாளிகள் தங்கள் பொறுப்பில் இருக்கும் ஊனமுற்றவர்ளை வெறும் பொருட்கள் போல நடத்துவதும் தன் சொந்தக் குடும்பத்தின் மீதுமட்டும் பாசம் வைப்பதும் பெரிய முரண்.
16)               மனம் பிறழ்ந்த பிச்சைக்காரர்களை சாமியார் ஆக்கி பிழைப்பு நடத்துவதும் நடக்கிறது.
17)               இதுதவிர மனித மனங்களின் பலவித வக்கிரங்களையும் ஜெயமோகன்  எழுதியதைப் படித்தபோது மனம் பேதலித்துப் போனது.

Related image

ஜெயமோகன் அந்தப் பகுதியைச் சேர்ந்ததால் அவருக்கு அந்த மொழி தங்கு  தடையின்றி வருகிறது. படிக்கும்போதும் ஆச்சரியப்படுத்தும் ஜெயமோகன், எந்த  மதத்தயக்கமுமின்றி  உண்மைகளைப் புட்டுப்புட்டு வைக்கிறார். ஒரு புறம் முன்னேறிக் கொண்டிருக்குகிறோம். பொருளாதார வளர்ச்சியடைந்தியிருக்கிறோம். வல்லரசாகும் பாதையில் துரித நடை நடக்கிறோம் என்று சொல்லும்போது, நம் நாட்டில் இன்னும் இந்த மாதிரி அவலங்கள் நடப்பதை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே.


Monday, January 15, 2018

வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா !!!!!

வேர்களைத் தேடிய பயணம்: பகுதி 1

Image result for வெள்ளரிப்பிஞ்சு
Thanks to Chithra Sundar
நியூயார்க் வந்தபின் மதுரைக்குப் பலமுறை சென்றும் தேவதானப் பட்டிக்குச் செல்ல வாய்ப்பிருக்கவில்லை. இந்த முறை மதுரை வந்து சேர்ந்ததும் நான் வளர்ந்த ஊருக்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என முடிவு கட்டி நண்பன் மினி சாமிடம் சொன்னவுடன் தன் கார் மற்றும் டிரைவர் சகிதமாக அதிகாலையிலேயே வந்தான். மினி சாம் என்னுடைய அமெரிக்கன் கல்லூரி தோழன் இப்போது சென்ட்ரல் எக்ஸைஸ்-சில் சூப்பரின்டென்டன்ட் . திண்டுக்கல் சென்று என்னுடைய பூர்வீக வீடான ராய சவரிமுத்து பவனில் இருந்து இறந்துபோன அத்தை அவர்களுக்காக என்னுடைய தாய் மாமாவிடம் விசாரித்துவிட்டு அங்கிருந்து தேவதானப்பட்டி கிளம்பினோம்.
சாலையில் கார் விரைந்து முன்னோக்கிப் போகும்போது என்னுடைய நினைவுகள் என்னை பின்னோக்கி இழுத்தன. நான் பிறந்த ஊர் திண்டுக்கல் என்றாலும்  1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படித்த ஊர்  இது என்பதோடு, என் தந்தையும் அவருடைய தந்தையும் அவரோடு பிறந்த சகோதரர்கள் அனைவரும் வாழ்ந்த ஊர் அது. மூன்றாவது தலைமுறையில் அங்கு யாருமேயில்லை. என் பெரியப்பா இறந்துவிட, அவரின் ஐந்து மகன்கள், இரு மகள்கள் அவர்கள் குடும்பங்களோடு இடம் பெயர்ந்து வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள். சித்தப்பாவின் குடும்பமும் சித்தி இறந்தவுடன் மதுரைக்கு சென்றுவிட்டார்கள்.
Related image
Devadanapatii Main Road
எங்கள் குடும்பமும் சென்னையிலும் நியூயார்க்கிலும் வசிக்க ஊரில் யாருமேயில்லை. "அங்கு யாரு இருக்கான்னு அந்த ஊருக்குப்போற? ", என்ற என் அம்மாவின் கேள்வியை ஒதுக்கிவிட்டுத்தான் அங்கு கிளம்பினேன். வாழ்க்கைப்பட்டு என் அம்மாவும் வாழ்ந்த பல வருடங்கள் இங்குதான். ஓய்வு பெறும் வரை இங்குதான் இருந்தாலும் என்னவோ என் அம்மாவுக்கு கடைசிவரை ஊரோடு ஒட்ட முடியவில்லை. தன் தாய் வீடான திண்டுக்கல் பெருமைகளை அவர்கள் பேசுவதில்  இன்றுவரை ஓய்ந்து விடவுமில்லை.
போற வழியில் செம்பட்டி வந்தது. ஊரின் பெயருக்கேற்ப அங்கு செம்மண் புழுதி அப்பும். அது இப்பொழுதும் மாறவில்லை. இங்கு அரிந்த வெள்ளரிப் பிஞ்சுகள் கிடைக்குமே என்று நினைத்தவுடன், எங்கிருந்தோ வந்து அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். சிறு பெண்கள், பையன்களோடு பெரியவர்களும் போட்டி போட்டார்கள். அரிந்த வெள்ளரிக்காய்கள் மேல் கொஞ்சம் உப்பு மிளகாய்ப் பொடி தூவித்தருவார்கள்.
ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால் இப்போது சிறிய பிளாஸ்டிக் கவரில் போட்டுக் கொடுத்தார்கள். அழகாக தோல் சீவி உள்ளே அரிசிப் பற்கள் தெரிய சரியான விகிதங்களாக வெட்டி உப்பு மிளகாய் சிறிதே தூவி தருவார்கள். அதைக் கடித்துச் சாப்பிடும் போது ஜில்லென்று உள்ளே இறங்கும். உப்பு மிளகாய் சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். அப்படியே செம்மண்ணும் கலந்துவிடும். ஒரே நிறம் என்பதால் கடித்துப் பார்த்தால் தான் மட்டுமே நர நர வென்று  தெரியும்.
"டேய் மினி உனக்கு ?" என்றேன்.
“டேய் இதெல்லாம் சாப்பிடாதே. போனதடவை படுத்து எங்களை படுத்தியது ஞாபகமில்லையா வேண்டாம்டா. நான் கூட இப்படி தெருவில் வாங்கி சாப்பிடுவதேயில்லை" என்றான். (போன தடவை செத்துப்பிழைத்ததை  இன்னொரு முறை சொல்கிறேன் )
அவனுக்குப் புரியாது, நான் என்னுடைய இளமைக் காலத்தை மீண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று. அவனுடைய அறிவுரையை உதாசீனம் செய்து வாங்கி ஒரு கீத்தைப் பிடுங்கி வாயில் வைத்தேன். அப்படியே கண்களை மூடிக் கொண்டேன். ஆஹா என்ன சுவை, உப்பும் காரமும் இணைந்த சில்லிட்ட வெள்ளரிக்காய்ப் பிஞ்சு அப்படியே வயிற்றில் இறங்கி என்னை குளிர வைத்தது. சாம் மட்டுமல்ல அவனின் டிரைவரும் கூட வேண்டாமென்று சொல்லிவிட நானே ஒவ்வொன்றையும் ரசித்து ருசித்து சாப்பிட்டேன் .சட்டென்று நினைவுக்கு வர பாக்கெட்டின் உள்ளே தடவியபோது இமோடியம் தட்டுப்பட்டது .(ஜஸ்ட் இன் கேஸ்)   
100 ரூபாய் கொடுத்துவிட்டு சில்லரை இல்லையென்றாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு வண்டியை எடுக்கச் சொன்னேன். அந்தச்சிறுமி வாயைப்பிளக்க , அதற்கு தெரியாது இந்த அனுபவத்திற்கு விலையே  இல்லை என்பது. சிறிதே கலவரத்துடன் என்னைப் பார்த்தான் நண்பன் சாம்.
கார் வேகமெடுத்து விரைந்தது. வத்தலக்குண்டு எப்ப வரும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும்போது, கார் புதிய பைபாசில் நுழைந்து காட்ரோடு வந்துவிட்டது. ஏமாந்துபோன நான் போகும்போது வத்தலக்குண்டு வழியாக செல்லச் சொன்னேன்.
காட்ரோடு மூலையில் என் தாத்தா அவர்கள் கொடைக்கானல் ஜெயராஜ் நாடார் உதவியுடன் கட்டிய ஆலயம் தெரிந்தது. அதன்பின்னர் வரும் பெரிய ஆலமரத்தை  நான் அந்தச் சாலையில் செல்லும்போது எப்போதும் தவறவிடுவதில்லை. இப்போது இன்னும் பெரிதாக இருந்தது.
அப்படியே புல்லாக்கப்பட்டி ஐயர் பங்களாவைத் தாண்ட “தேவதானப்பட்டி பேரூராட்சி மன்றம் உங்களை வரவேற்கிறது”, என்ற மஞ்சள் நிற போர்டு வரவேற்றது. ஓடைக் கரையின் ஓரத்திலேயே இருந்த சாலையில் வண்டி நுழையும் போது கொஞ்சம் மெதுவாகவே விடச் சொன்னேன்.
இடது புறம் பலமுறை பெயர் மாறிய சிவராம் டாக்கீஸ் பாழடைந்து கிடந்தது. “என்ன ஆச்சு ஏன் மூடிக்கிடக்கிறது” என்ற என் கேள்விக்கு பதில் சொல்ல யாருமில்லை. 
அப்படியே இன்னும் கொஞ்சம் முன்னே போக, மஞ்சளாறு  அணை சாலை வந்தது. காமாட்சி அம்மன் கோவிலுக்கும் அதே சாலைதான் சிறிது தூரத்தில் அது இரண்டு பாதையாகப் பிரியும், காமாட்சி அம்மன் திருவிழா களைகட்டியிருக்கும்போது ஊரே ஒரே கூட்டமாக யிருக்கும். சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். குதிரை வண்டிகளும் இருக்கும், இப்போதும் குதிரை வண்டிகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
அதனைத் தாண்டியவுடன் சி.எஸ்.ஐ ஆரம்பப்பள்ளி வந்தது. என் தாத்தா ஆரம்பித்து அதன்பின் என் பெரியப்பா நிர்வாகத்தில் வளர்ந்த பள்ளி. பள்ளியிலேயே ஒரு பகுதியில்தான் ஞாயிற்றுக் கிழமையில் ஆலயம் நடக்கும். அதனை உருவாக்கி கட்டிய தாத்தா இல்லை. அதன் பின் அதற்கு தலைமையாசிரியராக பொறுப்பேற்ற என் பெரியப்பாவும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தை நடத்தும் போது உதவி செய்த என் அப்பாவும் உயிரோடு இல்லை. தாத்தாவின் கதையை அடுத்த வாரம் சொல்கிறேன் .
காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். மாணவ மாணவர்கள் எல்லோரும் எழுந்து நின்று  "வணக்கம் ஐயா" என்று குரல் எழுப்பினார்கள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் யாரோ வந்துவிட்டார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது. நான் திடுக்கிட்டு நிற்க கலவரத்துடன் இரண்டு ஆசிரியைகள் என்னை நோக்கி வந்தனர்.
தொடரும்


Thursday, January 11, 2018

கண்ணதாசனின் காதலும் காமமும் !!!!

Image result for Muthal iravu movie
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 37
“மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/11/blog-post_30.html

          1979ல் வெளிவந்த “முதல் இரவு” என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.


பாடலின் பின்னணி:
          இளம் காதலர்கள் இணைந்து போகும்  ரயிலில் டூயட் பாடுவது போல் அமைக்கப்பட்ட பாட்டு இது.
இசையமைப்பு :
Image result for ilayaraja in muthal iravu movie

          இரண்டு உப்புத்தாளை தாளம் தப்பாது உரசினால் வரும் ரயில் போகும் சத்தத்தில் ஆரம்பிக்கிறது பாட்டு, பின்னர் ரயில் கூவும் சத்தம் வருகிறது. பின்னர் அதனுடன் கிடார் ரிதம்  ஸ்ட்ரம்மிங் இணைந்து அதே ரயில் சத்தம் போல் ஒலிக்க ,ஊஊஊ என்று ரயில் கூவுவது போல் பெண் குரலில் ஹம்மிங் வருகிறது. ஹம்மிங், ஃபேட் ஆகி முடியும் போது “மஞ்சள் நிலாவுக்கு”, என்று ஆண்குரலில் பாடல் ஆரம்பிக்கிறது. பல்லவி ஆரம்பிக்கும்போது காங்கோ ஒரு வித்தியாச ரிதம் பேட்டர்னில் சேருகிறது.அடுத்த வரியில் "இது முதல் உறவு" என்று பெண் குரல் சேர்ந்துகொள்ள இருகுரலும் "இந்தத் திருநாள்  தொடரும் தொடரும்” என்று மாறி மாறி பாட பல்லவி முடிகிறது.
          அதன்பின் வரும் முதல் BGM ல் வயலின் குழுமம், புல்லாங்குழல், கீ போர்டு, தபேலா மற்றும் காங்கோ ஆகியவை கலந்து கட்டி ஒன்றின் மேல் ஒன்று உட்கார்ந்து பாடலின் அதே மூடை மெயின்டெய்ன் செய்து முடிக்க, சரணம் "ஆடுவது பூந்  தோட்டம்" என ஆண் குரலில் ஆரம்பிக்கிறது. பல்லவி போலவே சரணத்திலும் ஆண் /பெண் குரலின் ஹம்மிங்கோடு முதல் சரணம் முடிகிறது. இரண்டாவது BGM ல் ஒலிக்கும் புல்லாங்குழல், வயலின் குழுமம், கிடார் ஆகியவை முதல் BGMக்கு முற்றிலும் மாறாக எங்கெங்கோ சென்று அலைந்து திரும்பவும் பழைய சுருதிக்கு வந்து சேர 2--ஆவது  சரணம் "வீணையென நீ மீட்டு" என பெண்குரலில் ஆரம்பிக்கிறது, முதல் சரணம் போலவே ஆண்பெண் குரல்கள் மாறி  மாறி ஒலிக்க ஊ ஊ என்று ஹம்மிங்குடன் ரயில் சத்தம் வர அப்படியே ரயில் தூரத்தில் சென்று மறைகிறது.

வரிகள்:
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
 இது முதல் உறவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்

மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று
ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி
ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்
அணைக்கின்ற பொதுமொழிகள் ஒன்றாக வடிக்கின்ற புது கவிகள்
ஊஊஊ ……

வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு
மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி
காலம் முழுதும் காவியம் ஆனந்தம் ராகம்
இனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை
ஊஊஊ
மஞ்சள் நிலாவுக்கு

Related image


          இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இதை எழுதும் போது  கோப்பையும் கோலமயிலும் துணையாக இருந்தனவா என்று தெரியாது. ஆனாலும் காதல் சொட்டும் இந்தப் பாடலில் காமத்தை சற்றே குழைத்து உள்ளே அமைத்திருக்கிறார். பல்லவியிலேயே இதுதான் முதல் உறவு என்று சொல்வதோடு இதுதான் முதல் கனவு என்றும் சொல்லி காதலர்களுக்கு  காதல்தான் எல்லாம் என்று சொல்லியிருக்கிறார். முதல் சரணத்தில் வழக்கமான வரிகள் என்றாலும் இரண்டாவது சரணத்தில், "மேனியை வீணையாக்கி  பாட்டொன்றை மீட்டு என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அடுத்த வரிகளில் வேண்டாம் விவகாரமாகப் போய்விடும். ஆனால் இதனைப் படிக்கும் போது கண்ணதாசன் காதல்தாசனா? இல்லை காமதாசனா? என்று விளங்கவில்லை. காமமின்றி காதல் ஏது? ஆனால் காதலின்றி காமம் தீது.
குரல்:
Image result for jayachandran with susila
Jeyachandran with P Susila 
          இசையினிமைக்கு குரலினிமை சேர்த்தவர்கள், ஜெயச்சந்திரனும் பி.சுசிலாவும் குறிப்பாக எல்லா மலையாளிகளின் பேஸ் குரல்களில் ஒரு சோகம் ஒளிந்திருக்கும். இந்தப்பாடலில் உற்சாகமாக ஆரம்பித்தாலும் 2-ஆவது சரணத்தில் "எந்நாளும் உறவினரை பிரிவும் இல்லை" என்ற வரிகளில் சோகம் ஓடிவிடுகிறது. பி.சுசிலா தனது இனிமையான குரலில் பாடலுக்கு அழகு சேர்க்கிறார். சேட்டைகள் இல்லாத ஆனால் இளமை ததும்பும் குரல்.
இளையராஜா அசால்ட்டாக இசை அமைத்திருக்கும் இந்தப் பாடல் அப்படியே ரயில் பயணத்தைக்  காதுகளில் ஒலித்து கண்கள் முன் கொண்டு வருகிறது. இந்தப் பாடலை ரயில் பயணம் செய்யும் போது கேட்டுப் பாருங்களேன். என்ன டூயட் பாட துணை வேண்டுமா? அய்யய்யோ அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.
இன்னும் வரும்>>>>

Tuesday, January 9, 2018

பயணங்கள் முடிவதில்லை !!!!!!!!!!!!!!

Related image

          பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்த செயல் என்பது என் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு தெரியும். பயணம் செய்து வேறு நாடு, மொழி கலை கலாச்சாரங்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவு விரிவடைகிறது. இந்தப் பரந்த உலகத்தில் உள்ள அதிசயங்கள் உங்களை ஆச்சரியமூட்டுகிறது.
          சிறுவயதில் முத்து காமிக்ஸ், டின்டின் போன்ற காமிக்ஸ்களும் , தமிழ்வாணன் எழுதிய துப்பறியும் நூல்களும் பல இடங்களுக்கும் போகத்தூண்டும் கனவுகளை என்னில் விதைத்தது.
அதன் காரணம் தான் நான் அமெரிக்கா வந்தது கூட  . அப்படிப்பட்ட என் கனவுகளுக்கு முதலில் ஒரு வடிகால் அமைத்துக் கொடுத்தவர் என் தந்தைதான். தேவதானப்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் ஒவ்வொரு வருடமும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் செல்லும்   சுற்றுலாவில் என்னுடைய பெற்றவரும் ஆசிரியருமாகிய திரு. அ.செ.தியாகராஜன் என்னை தவறாது கூப்பிட்டுப்போவார். அப்படி நான் தமிழகத்தில் பார்த்த இடங்களை கீழே தருகிறேன்.

கோவில்கள்:
அறுபடை வீடுகள்: - திருத்தணி, திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம்.

சிவத்தலங்கள்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை; தஞ்சைப் பெரிய கோவில்; தில்லை நடராசர் அம்பலம், சிதம்பரம்; இராமநாதசுவாமி கோவில், இராமேஸ்வரம்; திருவண்ணாமலை; கபாலீஸ்வரர் கோயில், சென்னை; ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்; வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம்; காசி விஸ்வநாதர் கோவில்; திருவான்மியூர் மருந்தீஸ்வரர்; கும்பகோணம்; பாலலீஸ்வரர் கோயில், கடலூர்; காளையார் கோவில், சிவகங்கை, பூம்புகார் கோவில், வைத்தீஸ்வரர் கோவில், சீர்காழி சட்டைநாதர், திருநாகேஸ்வரம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாரூர், வேலூர்.  இன்னும் பல கோவில்கள் ஞாபகம் வரவில்லை.
          “தென்னாடுடைய சிவனேபோற்றி” என்று  சொல்லும் தமிழ் நாட்டில் இருக்கும் அளவிற்கு  சிவத்தலங்கள் வேறெங்கும் இல்லை எனலாம்.

வைணவத்திருத்தலங்கள்:
          ஸ்ரீரங்கம், திருச்சி, திருப்பதி, சீர்காழி, காஞ்சிபுரம், அழகர் கோவில்

பார்த்த ஊர்கள்:
தமிழ்நாடு : முழுவதும்

கர்நாடகா: பெங்களூர், மைசூர், ஸ்ரீரங்கப்பட்டினம்.

ஆந்திரா:ஹைதராபாத், கோல்கொண்டா, விசாக பட்டினம், திருப்பதி.

கேரளா: தேக்கடி, திருவனந்தபுரம், கொட்டாரக்காரா, ஆலப்புழா , மலம்புழா.

வடஇந்தியா: உம்ஹும் இன்னும் ஒரு இடம் கூட போகவில்லை. கண்டிப்பாய் போக வேண்டும்.

வெளிநாடுகள்: சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, போர்ச்சுக்கல், துருக்கி, மெக்சிக்கோ, போர்ட்டரிக்கோ, கனடா, இஸ்ரயேல், பாலஸ்தீனம்.

அமெரிக்கா: நியூயார்க் (வாழுமிடம்), நியூஜெர்சி, கனக்டிக்கட், டெலவேர், வாஷிங்டன் டி.சி, மெய்ன், டெக்சாஸ், கலிபோர்னியா, பென்சில்வேனியா, ரோட் ஐலன்ட், மாசசூசட்ஸ், ஹவாய், நியூ ஹாம்ஷயர், வர்ஜினியா, மேரிலாண்ட், மிசெளரி.  

போகத்திட்டமிட்டிருக்கும் வெளிநாடுகள்:
          தாய்லாந்து, ரஷ்யா, ஃபிரான்ஸ், ரோம், வெனிஸ், ஸ்பெயின், கியூபா, டொமினிக்கன் ரிபப்ளிக், பெரு, ஸ்விட்சர்லாந்த்.

          தூரம் அதிகம், வேகம் குறைவு காலமும் குறைவு. ஆனாலும் அலைகள் ஓய்வதில்லை, பயணங்கள் முடிவதில்லை.  

Image result for airplane
Add caption


Tuesday, January 2, 2018

இலங்கையில் தாய்லாந்து மசாஜ்!

இலங்கையில்  பரதேசி -32
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post_18.html
Image result for colombo galle face beach
Galle Face 

          “அம்ரி அடுத்து எங்கே?”
          “சார் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம், கால் (Galle)பகுதி மட்டும் பாக்கியிருக்கிறது”.
          “சரி போவோம், ஆனால் எங்கே போவதென்றாலும் சாப்பிட்டு விட்டுச் செல்வோம்”.
          “சரி சார் ஷண்முகாஸ் போவோமா? அங்கு மதியம் நல்ல தாலி (எந்த லி, ளி,ழி என்று தெரிய வில்லை) மீல்ஸ் கிடைக்கும்”.
          ஒரு பாயே சைவ உணவைச் சொல்லுகிறான் நானும் சைவப் பிரியன் என்பதால் பலமாகத்தலையாட்டினேன்.
          ஷண்முகாஸ் தாலி மீல்சில் எனக்குப் பிடித்த வெண்டைக்காய் பொறியல், அவரைக்காய் சாம்பார், புடலங்காய் கூட்டு போன்ற காய்கறிகளுடன் மெலிதான சப்பாத்தி, வத்தல் குழம்பு, ரசம் மற்றும் வடை பாயாசம் என்று நல்ல சைவ விருந்து உண்டு களித்து வெளியே வந்தோம். கால் (Galle) பகுதிக்கு வந்து சேர்ந்தோம். காலே கோட்டையும் ஊரும் இருக்குமிடம் வேறு. இது கொழும்பின் மையப்பகுதியில் இருக்கிறது “கால் ஃபேஸ் கிரீன்” என்று இதற்குப் பெயர். 
          கொழும்பின் அழகிய கடற்கரை யொட்டி அமைந்துள்ள பார்க் இது. மெரினா கடற்கரையை ஒட்டி  இருப்பதைப் போலவே இருக்கிறது. கடல் இன்னும் நீளமாக, கடற்கரை இன்னும் சுத்தமாக, பார்க் இன்னும் பச்சையாக இருப்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
          5 ஹெக்டர் அளவில் இந்த பார்க் அமைந்துள்ளதாம். அதாவது சுமார் 1/2 கி.மீ நீளத்திற்கு இந்த பார்க் அமைந்துள்ளது. இது கொழும்பின் ஃபைனான்சியல் டிஸ்ட்ரிக்ட் இருக்கும் முக்கியப் பகுதியில் இருப்பதால் இன்னும் சிறப்புப் பெறுகிறது. 1856ல் இலங்கையின் கவர்னர் சர் ஹென்ரி ஜார்ஜ் வார்டு என்பவர்தான் இதனை அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். 1859ல் இது கட்டி முடிக்கப்பட்டது. அப்போது இதைவிட நீளமாக  இருந்ததாம். ஆரம்பத்தில் இங்கு குதிரைப் பந்தயம், கால்ஃப், கிரிக்கெட், போலோ, கால்பந்து, டென்னிஸ், ரக்பி போன்ற விளையாட்டுக்கள் விளையாடப்பட்டன.
          இந்தப் பகுதியில்தான் போர்த்துக்கீசியரை முறியடிக்கவும், உள்ளே நுழைய விடாமல் செய்யவும் டச்சு பீரங்கிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனவாம்.
          கிரிக்கெட் ஸ்டேடியம் இருந்த  இடத்தில் இப்போது "தாஜ் சமுத்திரா" என்ற
 ஐந்து நட்சத்திர விடுதி இருக்கிறது. குதிரைப்பந்தயம் இருந்த இடத்தில் இருந்த பங்களா தாஜ் ஹோட்டலின் பால் ரூமாக (Ball Room) இருக்கிறது.
Image result for taj samudra colombo
Taj Samudra 
          கால் சாலையிலிருந்து இந்தப் பெருங்கடலுக்கு இடைப்பட்ட இந்த இடம்தான் கொழும்பிலேயே இருக்கும் பெரிய வெட்டவெளி. நமது மெரினா போலவே இங்கு மாலை நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் கூட்டம் அள்ளுமாம். சிறு கடைகளும் ஆங்காங்கு முளைக்குமாம்.
          “அப்ப தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் கிடைக்குமா?” என்று நினைத்துக் கொண்டேன். 
          “சார் அதெல்லாம் கிடைக்காது”, என்றான் அம்ரி. என்னது இது, என் மைண்ட் வாய்ஸ் வெளியே சத்தமாகக் கெட்டுவிட்டது போல் தெரிகிறது.
சாலையின் மறுபகுதியில் நிறைய விடுதிகள் இருந்தன.
          “சார் மசாஜ் போறீங்களா?”
 “என்ன மஜா? என்ன மசாஜ்?”
“தாய் மசாஜ் சார்”
“தாய் மசாஜ் டெக்னிக் போல இங்கு இருப்பவர்கள் பண்ணுவார்களா?”.
          “இல்லை சார் தாய்லாந்து பெண்களே இங்கு இருக்கிறார்கள் அங்கிருந்து இங்கு வந்து சிலகாலம் தங்கி வேலை செய்துவிட்டு திரும்பிவிடுவார்கள்”.
          “அப்படியா?”
 “ஆமா சார், உள்ளூர் மசாஜ் 1500 ரூபாய். தாய் மசாஜ் 2500 ரூபாய்”.
          “அம்ரி தாய்நாடு போகும்போது தாய் மசாஜ் என்ற விபரீத ஆசை வேண்டாம் விட்டுவிடு”.
கொழும்பு போகிறவர்களுக்கு இது நல்ல செய்தியா அல்லது கெட்ட செய்தியா என்று தெரியவில்லை.
Image result for Galle face hotel
Galle Face  Hotel in 1890 
          கால் ஃபேஸ் கிரீனின் இருபுறமும் இரு பெரிய பழைய ஹோட்டல்கள் இருக்கின்றன.  ஒன்று சிலோன் இன்ட்டர் கான்டினென்டல் ஹோட்டல். இன்னொன்று கால் ஃபேஸ் ஹோட்டல். இதில் இரண்டாவது மிகப்பழையது.
          இந்தப்பகுதியிலிருந்துதான் சிலோன் ரேடியோவும் ஒலி பரப்பப்பட்டு இருந்ததாம். K.S. ராஜா, அப்துல் ஹமீது ஆகியோரெல்லாம் ஞாபகம் வந்தது.
Image result for Galle face hotel
Galle Face Hotel today
          அங்கிருந்து கால்ஃபேஸ் ஹோட்டலுக்குப் போனோம். இது மிகப்பழமையான முக்கியமான ஹோட்டல். அதோடு உலகில் சாகும் முன் பார்க்க வேண்டிய ஆயிரம் இடங்கள் என்ற லிஸ்ட்டில் உள்ள ஒன்று என்பதால்  ஆவலைத்தூண்டியது. பல விருதுகளைப்   பெற்ற இது செலக்ட் ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் இன்ட்டர் நேஷனல் குரூப்பில் ஒரு மெம்பர் ஆகும். இதன் சேர்மன் சிரில் கார்டினர் 1997ல் இறந்தபின் இதன் தற்போதைய சேர்மனாக இருப்பவர் அவர் மகன் சஞ்சீவ் கார்டினர். இலங்கை அரசு ஸ்டாம்ப் வெளியிட்டு பெருமைப்படுத்திய முதல் ஹோட்டலும் இதுதான்.
          இது1864ல் பிரிட்டிஸ்காரர்களால் கட்டப்பட்டது. 1894ல் ஆர்க்கிடெக்ட் தாமஸ் ஸ்கின்னரால் தற்போதைய கட்டிடம் முடிக்கப்பட்டது. பிரிட்டிஸ் கலோனியல் ஸ்டைலில் கட்டப்பட்டது.
          இங்கு பல தலைவர்களும் பிரபலமானவர்களும் தங்கியிருந்திருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவர், நம் பாரதப்பிதா மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ஜான்.டி.ராக்கேஃபெல்லர், டென்மார்க் இளவரசி அலெக்சான்ரா  இளவரசர் பிலிப், ஜப்பானிய மன்னர்  ஹிரோஹிட்டோ, அமெரிக்க அதிபர் நிக்சன், மெளன்ட்பேட்டன்  பிரபு, எனப்பெரிய தலைகள் பலரும் இங்கு தங்கியிருக்கின்றனர். பார்க்க வேண்டிய இடம்தான். ஒரு நாளாவது தங்கியிருந்தால் இந்த பிரபலங்களின் வரிசையில் இணைந்திருக்கலாம். என்ன செய்வது இன்று மாலை எனக்கு சென்னைக்கு ஃபிளைட்.
          அம்ரி சொன்னான், “சார் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டுத்தான் போக வேண்டும்”. நேரமிருந்ததால் தட்டாமல் அவன் வீட்டுக்குச் சென்றேன். அவனுக்கு இரு ஆண் குழந்தைகள். சின்னவன் படு சுட்டி. நான் வாங்கிக் கொடுத்த சிறிய நீச்சல் குள டப்பில் நீரில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். அந்த  வீட்டுக்குப் போனது எனது சொந்த ஊரில் உள்ள முஸ்லீம் உறவினர் வீட்டுக்குப் போன உணர்வையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
          அங்கிருந்து ரூமுக்குப் போய், பெட்டிகளை எடுத்துக் கொண்டு நேராக கொழும்பு ஏர்ப்போர்ட் சென்றோம். அங்கே அம்ரிக்கு நன்றி சொல்லி விடைபெற்று ஸ்ரீலங்கன் ஸ்ரிலங்கன் ஏர்வேய்சில்  பயணம், கிட்டத்தட்ட என்னைத்தவிர மற்ற அனைவரும் ஐயப்ப பக்தர்கள். இருமுடி தாங்கி, காவியணிந்து தாடி வளர்த்து, காலணிகள் இல்லாமல் பயணம் செய்தனர். K. வீரமணியின் “இருமுடிதாங்கி ஒரு மனதாகி, குருவெனவே வந்தோம்”  என்ற பாடல் மனதில் ஒலிக்க, விமானம் மேலேறிப் பறந்தது.

Image result for srilankan airlines
- முற்றும். Image result for ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் 2018


பின் குறிப்பு : அடுத்த வாரம் முதல் "வேர்களைத்தேடி" என்ற புதிய தொடர் ஆரம்பிக்கிறது .இது நான் வளர்ந்த ஊருக்கு சென்று வந்த மலரும் நினைவுகள்.இதற்கும் உங்களின் ஆதரவைக்கோரி  நிற்கிறேன்.
அன்புள்ள
பரதேசி