Tuesday, April 30, 2013

மெக்சிகோ பயணம்-9 : பூர்வ குடிகளும் , ஸ்பானிய ஆதிக்கமும்

     நடமாட்டமில்லாத, இருள் தெருக்களில் அங்குமிங்கும் பயத்துடன் அலைந்ததுதான் மிச்சம். சம்மந்தமில்லாமல், மெக்ஸிகோ  மாஃபியாக்களைப்பற்றி படித்தது ஞாபகம் வந்து தொலைத்து நடுக்கத்தைக் கூட்டியது .எதிர்ப்பட்ட ஓரிருவரிடம் கேட்டாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை. கையில் போனும் கிடையாது. சுமார் ஒரு மணி நேரம் சுற்றியலைந்து அந்தப்பக்கமாக வந்த போலிஸ் வண்டியை நிறுத்தி, அவர்களுக்கு விளக்கி, வந்து சேருவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.

எச்சரிக்கை: வெளியே செல்லும்போது ஹோட்டலின் முகவரி,மேப்  மற்றும் போன் நம்பர்களை எப்போதும் எடுத்துச் செல்லவும்.

ரூமுக்கு  திரும்பி, ரெண்டு துண்டு கரும்பையும், பழங்கள் சிலவற்றையும் சாப்பிட்டு, வயிறு நிரம்பி, இரவு உணவைத் தவிர்த்து, படுக்கையில் சாய்ந்தபோது, சுற்றிய சுற்றுக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றியது.


டிசம்பர் 1, 2012 சனிக்கிழமை


நேற்று சீக்கிரம் தூங்கிவிட்டதால், அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். (அதாங்க 6 மணி)

     சுறுசுறுப்போடு எழுந்து, இதமான சூட்டில் குளித்து ரெடியாகி, லைட் ஜாக்கெட்டை மறக்காமல் போட்டுக் கொண்டு, இன்டர்நெட் மையத்திற்குச் சென்றேன். காவிரிப் பிரச்சனையும், கரண்ட் பிரச்சனையும் இன்னும் தீரவில்லை. மற்றொரு தீராத பிரச்சனை, கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறிமாறி வெளியிடும் அறிக்கைகள், ஆண்டவா இதுக்கு ஒரு முடிவேயில்லையா?.

    தெருக்களில் ஒரு இனம் தெரியாத பரபரப்பு இருந்தது. Federal Policio  என்று பொறித்த வாகனங்கள் அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்தன. என்னவென்று விசாரிக்க வேண்டும் என்று நினைத்த வண்ணம் ஹோட்டலுக்கு திரும்பினேன். அங்கே ரிஷப்சனில் ஒருவர் என் பெயரை விளித்து, எனக்கு ஒரு பெண் போன் செய்ததாக சொன்னார். யாராக இருக்கும், ஒருவேளை “எரிக்கா” ஆக இருக்குமோ என்று நினைத்த வண்ணம் உணவுக்கூடத்திற்குச் சென்றேன். யார் போன் செய்தார்கள் எனக்கேட்டு குறித்து வைத்துக்கொள்ளும் ஒரு சிறிய அறிவு அல்லது முயற்சி கூட இல்லையே என நொந்து கொண்டு, வழக்கமான காலை உணவை முடித்து வெளியே வந்து பெஞ்சில் அமர்ந்தேன்.

இன்றும் இக்கி வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிக் கொண்டிருந்தபோது, ஒரு ஸ்மார்ட் ஆன இளைஞன், நேரடியாக என்னிடம் வந்து ஹலோ என்று கைகுலுக்கி எப்பூடி ? என்று ஆச்சரியப்படுத்தினான். “எப்படிரா நேரா என்ட வந்தேன்னு” கேட்டபோது ,அதான் நெத்தியிலே எழுதி இருக்கேன்னு சொல்லி சிரித்தான் .நல்ல ஆங்கிலத்தில்  தன்னை டானியல் என்று அறிமுகப்படுத்தியது மேலும் ஆச்சரியப்படுத்தியது. இக்கியை விட இவனது ஆங்கிலம் நன்றாகவே இருந்தது. விசாரித்ததில் ஆங்கில இலக்கியம் படித்து, சில ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து இப்போது டூரிஸ்ட் கைடாக ஆனதை விளக்கினான். அட நானுந்தேன் ஆங்கில இலக்கியம் படிச்சேன், அதையேன் கேட்குறீங்க,அந்தக் கொடுமையை இன்னொரு நாளைக்கு  சொல்றேன்.

வெளியே வந்து பெரிய பஸ்ஸை எதிர்பார்த்து தேடியபோது, ஒரு சிறிய, மிகச்சிறிய காருக்கு அழைத்துச் சென்றான். என்னாச்சு என்று வினவியபோது, இன்று உன்னையும் சேர்த்து மொத்தம் 3 பேர்தான் என்றான். அந்த  இருவரையும் பிக்கப் செய்தவுடன் நகரை நோக்கி விரைந்தது அந்த குட்டிக்கார் .அப்பாடி அவர்களும் நல்ல ஆங்கிலம் பேசிய ஸ்பானிஷ் தம்பதியர். நான் முன்னே, டேனியல் அருகில் அமர்ந்து கொள்ள , தம்பதியினர் பின்னால் அமர்ந்து கொண்டனர். திருமணம் ஆகி கொஞ்ச காலம்  ஆகியிருக்கனும்னு நினைக்கிறேன் . கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்திருந்தனர் .

அன்று இரண்டு டூர் புக் செய்திருந்தேன். காலையில் மெக்சிகோ சிட்டி டூர், மதியம் ஷோஷிமில்கோ ரிவர் குருஸ்.

மெக்சிகோ நகரில் நுழைபவதற்கு முன் அதன் வரலாற்றுச் சிறு குறிப்பு.

மீண்டும் எச்சரிக்கை, என்  மனைவி போல்  வரலாற்று அலர்ஜி உள்ளவர்கள், இந்தப் பத்தியினைத் தவிர்த்து முன்னேறிச் செல்லவும். இப்ப தெரியுதா, ஏன் நான் தனியா  போனேன்னு , இத்தனைக்கும் அவள் ஹிஸ்ஸ்டோரி மேஜர். ஒரு வேளை  அதனால்தானோ ?. அந்த ஹெர்ஸ்டோரி என்னன்னு தெரியலையே?.(ஆழம் இது ஆழம் இல்லை , அது சேரும் கடலும் ஆழம் இல்லை, ஆழம்  அ து அ ய்யா , இந்த பொம்பளை மனசுதான்யா )

     டோல்டெக் சாம்ராஜ்யம் (Toltec Empire) அழிந்தபோது, “நகுவால்” (Nahuatl) மொழி பேசிய “மெக்சிகா” இன மக்கள் (நன்றாக படிக்கவும் அது “மெக்சிகா” தான்) கி.பி.1325 ஆம்  ஆண்டு, மேற்குப்பகுதியில் இருந்த “டெக்ஸ்காகோ” ஏரியில் இருந்த ஒரு சிறிய தீவில் குடியேறினார்கள். அங்கு ஏற்கனவே வாழ்ந்த மூத்த பழங்குடி மக்களை எதிர்த்தும், தோற்கடித்தும் அழித்தும் குடியேறிய இந்த மக்களே "ஆஸ்டெக்" பழங்குடியினர்  (Aztec).
Aztec Soldier
 தங்களுடைய முதன்மைக் கடவுளான “ஹியூட்ஜிலோபோக்டிலி” (Huitzilopochtli -கவனம் , வாசிக்கும்போது, தாடை ஒடைஞ்சிரப்போறது). தம்மை இங்கு அழைத்து வந்ததாக அவர்கள் நம்பினர்.
 அந்தக்கடவுள்தான் ( God of War and Sacrifice) அவர்களுக்கு, ஒரு அடையாளமாக, ராட்சத கத்தாழையில் கால் பதித்த, பாம்பினைக்கவ்விக் கொண்டிருந்த ஒரு கழுகைக் காண்பித்தாராம்.இதுவே இன்றைய மெக்சிகோ அடையாளம்.


     இந்தச் சிவிப்பிந்திய மக்கள் கலாச்சாரம் மிகுந்தவர். கி.பி.1325லிருந்து 1521 வரை மிகப் பலுகிப்பெருகி, மெக்சிகோ பள்ளத்தாக்கு முழுவதுமாக பரவினர். ஆஸ்டெக் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்து, மீசோஅமெரிக்கா முழுவதிலும் பரவி மெக்சிகோ வளைகுடா மற்றும் பசிபிக் பெருங்கடலைத் தொட்டது.

     அப்படி சீறும் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கையில் கி.பி.1519ல் ஸ்பெயின் ராணுவம், மூக்கு வேர்த்து மோப்பம் பிடித்து, ஹெர்னன்  கோர்டஸ் (Hernan  cortes) என்பவரின் தலைமையில் வந்திறங்கியது.
Hernan's Spanish Army attacks Aztec
 அங்கே ஏற்கனவே இருந்த பொறாமை, பூசல்கள், தலைமைக்கான போட்டி(அட அங்கேயுமா ?)ஆகியவற்றை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஹெர்னன், கொஞ்சம் கொஞ்சமாய்ப் ஆக்ரமித்து “டெனோசிட்லான்” முழுவதுமாய் பிடித்துவிட்டான். இன்னொரு முட்டாள் தனமும் நிகழ்ந்தது. அப்போது ஆஸ்டெக் சாம்ராஜ்யத்தை ஆண்ட மோக்டெஜீமா (Moctezuma) என்ற மன்னனும், மக்களும்,
Moctezuma
அவர்களுடைய கடவுளான குவெட்ஜல்கோட்டில் (Quetzalcoatl) வரப்போவதாய் நம்பிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஹெர்னன் வரவும், அந்த முட்டாள் மன்னன், அவன்தான் அந்தக்கடவுள் என்று நினைத்துவிட்டான் . இப்படியாக கிட்டத்தட்ட 250 வருடங்கள் கோலோச்சிய ஆஸ்டெக் சாம்ராஜ்யம் முற்றிலுமாக அழிந்தது.

Aztec surrendering to Hernan

     ஸ்பானிஸ்காரர்கள் அழிந்துபோன “டெனோக்டிட்லன்” நகரத்தை மீண்டும் கட்டி எழுப்பி, மெக்சிகோ சிட்டி என்று பெயரிட்டனர். நாம் மெக்ஸிகோ என்று அழைக்க , அங்கேயுள்ள லோக்கல் ஆட்கள் மெஹிகோ  என்று சொல்லுகின்றனர்.கத்தோலிக்க ஆலயங்கள் எங்கும் எழுப்பப்பட்டு, ரோமன் கத்தோலிக்க மதம், பிரதான மதமாகவும், ஸ்பானிஸ் பிரதான மொழியாகவும் ஆகிப்போனது.

     கி.பி.1629ல் ஏற்பட்ட மாபெரும் வெள்ளப்பெருக்குக்குப்பின்னர், நகரைச் சுற்றிலும் இருந்த ஏரி, கொஞ்சம் கொஞ்சமாக வடிகட்டப்பட்டு, முழுவதுமாக ஸ்பெயின் நாட்டுக் காலனியாதிக்கம் நிலைநாட்டப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் மன்னரின் பிரதிநிதியாக, வைஸ்ராய் நியமிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது. மெக்சிகோ சிட்டியில், பல பிரபுக்களின்  குடும்பங்கள் சமூக மதிப்போடு வாழ்ந்தன. அவர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், கவுன்ட் (Count) டியூக்(Duke)  என்ற பட்டங்கள் தரப்பட்டன. அவர்கள் தங்களுக்கென்று பல அரண்மனைகளைக் கட்டிக்கொண்டதால், இந்த நகரம் "அரண்மனைகளின் நகரம்" என்றும்  அழைக்கப்படுகிறது (City of Palaces). ஸ்பெயின், மற்ற ஸ்பெயின் காலனிகள், பிலிப்பைன்ஸ் மற்றும் ஆசிய நாடுகளோடு, வர்த்தகத்தில் ஈடுபட்ட மெக்சிகோ நகரத்தில் செல்வம் கொட்டியது. தங்கள் செல்வத்தை அடுத்தவர்கள் சாப்பிடுவதையும் , தங்கள் நிலைமை  அப்படியே மோசமான நிலைமையில் இருந்ததையும் கொஞ்சம்  லேட்டாக  உணர்ந்த  , பூர்வ குடி மக்கள் கொதித்தெழுந்தனர் .

Friday, April 26, 2013

வைரமுத்துவின்,"மூன்றாம் உலகப்போர்".


 
வைரமுத்து மதுரைக்காரர்,அதுவும் நான் வளர்ந்த ஊராகிய தேவதானப்பட்டியின் மிக அருகில் உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர். என்னுடைய, இள வயதில் அவருடைய புதுக்கவிதைகள் மற்றும் திரைப்படப்பாடல்கள் மூலம் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.எனவே அவருடைய படைப்புகளை விரும்பிப்படிப்பது என் வழக்கம்.வைகை அணை கட்டும் போது இடம் மாற வேண்டிய கட்டாயத்தால் வீடிழந்து, ஊரிழந்து எல்லாவற்றையும் இழந்த  மக்களின் வாழ்வைப்படம் பிடித்துக்காட்டிய அவரின்
“கள்ளிக்காட்டு   இதிகாசம்” எனக்குப்பிடித்த கதை. கருவாச்சி காவியமும் நன்றாகவே இருந்தது.

மூன்றாம் உலகப்போரில் எனக்குப்பிடித்தவை.

1. கதைக்களம் நடக்கும் அட்டணம் பட்டி, அதன் அருகில் வரும் புல்லாக்காபட்டி, தேவதானப்பட்டி ஆகியவை என் சிறுவயதில் சுற்றித்திரிந்த ஊர்கள் என்பதால், ஒரு பெரிய நாஸ்டால்ஜியாவை என்னுள் உருவாக்கியது.
2.விவசாய விளை நிலங்கள்,நீரின்றியும், பராமரிக்க ஆட்களின்றியும், வீட்டு மனைகளாகவும் மற்றும் தொழிற்சா
லைகளாய் 
மாறுவதாலும், ஒரு நாள், சாப்பிடும் உணவையும் நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியகொடுமை நேர்ந்து விடும் என எச்சரிக்கும் விதத்தில் கதையின் போக்கு அமைந்துள்ளது.
3.எந்த ஒரு நன்மை பயக்கும் முயற்சியையும், அரசியல் மற்றும் பண முதலைகள் தடுக்கின்ற வழிவழியாய் வரும் கொடூரங்கள்.
4.குடும்பத்தினுள்ளே,சிறு கார
ங்களால் வீம்பும்,வீராப்பும் வெட்டி ஈகோவும் எப்படி உறவுகளைச்சிதைக்கின்றன  என உணர்த்தும் கதை மாந்தர்கள்.
5.மாறுகின்ற உலகில் மாற முயற்சித்து தோற்கின்ற நம் குக்கிராமங்களின் பரிதாப நிலை.
6.உலகமயம் மற்றும் உலக வெப்பமய மாக்குதலைக் குறித்து கிராமத்திலிருந்து வரும் குரல்,
7.கவிஞர் என்றாலும் கூட  கவிதை, உவமை  உவமேயத்தில் பக்கங்களை நிரப்பாத எச்சரிக்கை உணர்ச்சி.
8. ஆனாலும் உள்ளிருந்து எட்டிப்பார்கும் கவிஞனின் ஆழ் மனம்,மற்றும் பழைய விடலைத்தன குசும்பும் (தன் நாக்கால்,மற்றொரு பெண்ணின் நாக்கில் உள்ள வெற்றிலையை தள்ளி மனைவியிடம் மாட்டிக்கொள்ளும் இடம்).
9.மதுரை மொழியிலிருந்து சற்றே வேறுபட்ட வட்டார வழக்கு நடை.
   
                                                      பிடிக்காதவை

1.பல இடங்களில் உலக வெப்பமயமாக்குதலை எழுதும் இடங்களில் கட்டுரை போல ஒலிப்பது.
 2. வெளிநாட்டுக்காரர்கள் சொல்லிக்கொடுத்து நாம் கேட்க வேண்டிய நிலை. (அமெரிக்கப்பெண் எமிலி மற்றும் ஜப்பானியப் பையன் இஷிமுரா ஆகியோரின் பாத்திர அமைப்புகள்).
3. கொஞ்சம் படித்தாலும்,உண்மை நிலை மறந்து,வெள்ளைத்தோலில் மயங்குவது.(சின்னப்பாண்டி, எமிலி மேல் காதல் கொள்வது)
4. பெரிதான வாய்ப்புகளின் மூலம் வருங்காலத்தில் ஊரை முன்னேற்ற வாய்ப்புக்கள் வந்தாலும்,தன்னுடைய சிறு நிலத்தில் உழன்று காணாமல் போகும் எதிர்காலம்,
5.எந்த ஒரு நம்பிக்கை ஒளியையும் தராது போவதால் கடைசியில் எழும் வெறுமை.

 
 

Wednesday, April 24, 2013

NYPD ( நியூயார்க் போலிஸ் டிபார்ட்மென்ட்)

    பாஸ்டனில் சமீபத்தில் நடந்த மராத்தான் ஓட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு  தீவிரவாதிகளில் ஒருவன்  கொல்லப்பட்டான் மற்ற ஒருவன் உயிரோடு வளைக்கப்பட்டான் .48 மணி நேரத்தில் இது சாதிக்கப்பட்டது .
Add caption
    கடந்த ஞாயிறன்று ( ஏப்ரல் 20, 2013) நியூயார்க்கில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றதால் , NYPD உஷாரானது .கேன்சல் செய்து விடுவார்கள் என்று பலரும் எதிர்பார்க்க ,ஓட்டம் எந்த பிரச்னையும் இன்றி நடந்து முடிந்தது .
        நாங்கள் நியூயார்க் வந்த புதிதில். குயின்சில் (Queens) உள்ள ஜமைக்காவில் முதல் மாடியில் குடியிருந்தோம். ஒரு நாள் மாலை, வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். எங்கள் தெரு முனையில் திரும்பும்  போது NYPD கார் ஒன்று எங்கள் வாசலில் நின்றதோடு, இரண்டு போலிஸ்காரர்கள் மேலேறிச் செல்வதைப்பார்த்தேன்.
      என் வீட்டுக்கா, இருக்காது என்று நினைத்தாலும், BP எகிற, ஓடி வந்து நானும் மூச்சுமுட்ட ஏறினேன். மேலே ஒரே இருட்டாக இருந்தது மேலும் திகிலூட்டியது. என் மனைவி கையை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். என்னைப்பார்த்ததும் அவள் “போன், போலிஸ்,  அபிஷா” என்று உளற, “முதலில் லைட்டைப்போடு” என்றேன். அங்கே என் சின்னப்பெண் அபிஷா (அப்போது நான்கு வயது) என் வீட்டு லேண்ட் லைனை கையில் பிடித்திருந்தாள்.



    எனக்கு எல்லாம் உடனே விளங்கிவிட்டது. நம் ஊரில் அவசர உதவி 100 போல இங்கே 911. எந்த எமர்ஜன்சி என்றாலும் 911 அடிக்க, பக்கத்தில் உள்ள போலிஸ் உடனே வர, ஆம்புலன்ஸ் அடுத்த நொடியில்  வந்து நிற்கும். லைட்டெல்லாம் அணைத்து விட்டு,  டிவி பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், என் பெண் அவள் சித்தப்பாவை மிஸ் செய்ததால், தானாக போனை எடுத்து, இந்தியாவிற்கு டயல் செய்ய, 91அடிப்பதற்கு பதில் 911அடித்து விட்டாள். போலீசாரின் வேகத்தை கவனித்தீர்களா? என் மகள் போனை கீழே வைப்பதற்கு முன், போலிஸ் வந்துவிட்டது. ஆச்சரியம், மிரட்டல் உருட்டல் எதுவுமில்லை, சிரித்துக்கொண்டே, இனிமேல் கவனமாக டயல் செய்யச்சொல்லிவிட்டு போயே போய் விட்டனர். 
       NYPD என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற நியூயார்க் போலிஸ் டிபார்ட்மென்ட், உலகத்திலேயே தலைசிறந்த போலிஸ் நிறுவனங்களில் ஒன்று. 
சுமார் 85 லட்சம் மக்கள் வாழும், உலகத்தின் மிகப்பெரிய நியூயார்க் பெருநகரத்தின், சட்ட ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு ஆகியவற்றை செயல்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பு NYPD யைச் சார்ந்தது.அதோடு தீவிரவாத கண்காணிப்பையும் FBI மற்றும் CIA யோடு இணைந்து செய்கிறது. 
இதன் கமிஷனரான ரேய் கெல்லி,புதிதாக பயன்படுத்தவிருக்கும் ஹைடெக் சாதனங்களைப்பற்றி, சமீபத்தில் சிட்டி கௌன்சிலில் உரையாற்றினார், அந்த புதிய முறைகளைப்பற்றி கீழே கொடுத்துள்ளேன். 
டேட்டா பேஸ் : NYPD புதிதாக ஒரு மிகப்பெரிய டேட்டா பேஸை உருவாக்கியிருக்கிறது. இதில், வாகனங்களின் லைசென்ஸ் பிளேட்கள், போலிஸ் கேமராக்கள், அரெஸ்ட் ரெகார்ட்ஸ் ஆகிய பல தகவல்கள் தொகுக்கப்பட்டு பராமரிக்கப்படும். முதலில் தனித்தனியாக இருந்தவை இப்பொழுது ஒரே தகவல் களஞ்சியமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான பொதுத்தகவல்கள், இனி ஒரே டேட்டா பேஸில் விரல் நுனியில் கிடைக்கும். இது  மைக்ரோசாஃப்ட்  நிறுவனத்தின் உதவியில்  செயல்படுத்தப்படுகிறது.இப்போதைக்கு கெளன்ட்டர் டெரரிசம் யூனிட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வசதி படிப்படியாக மற்ற யூனிட்டுகளுக்கும் விரிவு படுத்தப்படும். இந்த டேட்டா பேஸில் நான் இருக்கிறேனா இல்லையா? என்று தெரியவில்லையே. 


ஆப்பரேஷன் சேஃப்டி கேப் (Operation Safety Cap)
            நம்மூரில் போல் எல்லா மருந்துகளையும், இங்கே மருந்தகங்களில் வாங்கிவிட முடியாது. சில மருந்துகளை மருத்துவரின் மருந்துச்சீட்டு (Prescription)இல்லாமல் தலை கீழாக நின்னாலும் வாங்கவிட முடியாது. சில போதை  வஸ்துகளும் மருந்து போல் செயல்படுவதால், அவைகளுக்கு டிமாண்ட் அதிகம். எனவே அடிக்கடி ஃ பார்மஸிகளில் கொள்ளை போய் விடுகிறது. இதற்கென்றே தனிப்பட்ட திருட்டுக்கும்பல் மற்றும் வாடிக்கையாளர் இருப்பதாக கேள்வி
    இந்த புதிய ஆப்பரேஷன்மூலம், சிட்டியில் உள்ள ஆறாயிரம் மருந்தகங்களும் கண்காணிப்பில் கொண்டுவரப்படும். அதோடு இவைகளுக்கு NYPD மூலம் சில பாட்டில்களும் கொடுக்கப்படும். இதிலே விசேஷம் என்னவென்றால்,இதிலே ஜிபிஎஸ் டிராக்டிங்  டிவைஸ் பொருத்தப்படும்.திருடன் இதனை திருடினால்,இதனை வைத்து பொருளையும்,இடத்தையும் அதன் மூலம் திருடியவனையும் கண்டுபிடித்து விட முடியும். இனிமேல் மருந்து வாங்கினால் பாட்டிலை மாற்றிவிட வேண்டும், எதுக்கு வம்பு.
CCTV கேமராக்கள் :
                  ஏற்கனவே பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், இப்போது அதி முக்கிய இடங்கள் மற்றும் டூரிஸ்ட் அதிகமாக வரும் இடங்களில் பொருத்துவதற்காக NYPD, 650 புதிய கேமராக்களை வாங்கியிருக்கிறது.இதன் விலை 9.4மில்லியன் டாலர்கள் (டாலர் வெள்ளை மாளிகையின்  தோட்டத்தில் விளைவது போல் தெரிகிறதே).இந்த அதி நவீன "டிஜிட்டல் கண்கள் ". ஐபி மெகா பிக்சல் டெக்னாலஜி கொண்டது. இது மிகத்துல்லியமான படங்களையும், வீடியோக்களையும் எடுப்பதோடு தேடும் லிஸ்டில் உள்ளவர்களையும்  போட்டுக்கொடுத்து விடும். இனி மேல் டைம்ஸ் கொயர் போகிறவர்கள், கொஞ்சம் மேக்கப் தாராளமாக போடவும்.
சோஷியல் நெட்வெர்க் மானிடர்:
    ஜூவனைல் ஜஸ்டிஸ் டிவிசன் (Juvenile Justice Division) என்ற NYPD​ -அமைப்பில் உள்ள துப்பறியும் நிபுணர்களுக்கு, இரவும் பகலும் ஒரே வேலை. ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரை கண்காணிக்க வேண்டும்.( ஆஹா ஜாலியான வேலை) நவீன கால கிரிமினல்களும், கேங்குகளும், இப்போது தாங்கள்  திட்டமிடுவது, பேசிக்கொள்வது இவற்றின்  மூலம் தான் என்று கண்டுபிடித்ததால் இந்த முடிவு. இவர்கள் பயன்படுத்தும், சங்கேத கோட் வார்த்தைகளைக்கண்டுபிடிக்க ஒரு புதிய டிக்ஸனரி உருவாக்கப்பட்டு,புதிய  வார்த்தைகள் அனுதினமும் சேகரிக்கப்படுகிறது. ஃபேஸ் புக்கிலேயோ   அல்லது வெறெந்த சமூக வலை தளங்களிலோ, இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அதன் நதிமூலம் ரிஷிமூலம் எங்கிருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டு, அந்தப்பகுதியில் உள்ள NYPD காப்போ அல்லது டிடெக்டிவ்வோ  உஷார் படுத்தப்பட்டு, ஆளை மடக்கி விடுவார்கள்.இதிலே விஷேசம் என்னன்னா, நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்து விடும். இரவும் பகலும் இன்டர்நெட்டில் வாழ்க்கையை சேட்டில் ஓட்டிக் கொண்டிருக்கும் நண்பர்களே, தோழிகளே உஷார்!  உஷார்!  உஷார்!.
கன் ரேடியேஷன் டிடெக்டர்:
          ஜனவரி 2013 முதல் நகரத்தின் சில பகுதியில் இந்த சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. "டெராஹெர்ட்ஸ் இமேஜிங் டிடெஷன் சிஸ்டம்" (Terahertz Imaging Detection System ) என்று அழைக்கப்படும் இந்த காமெராவின் 16அடிக்குள் யார் சென்றாலும், அவர் துப்பாக்கி வைத்திருந்தால், ஆடையை  ஊடுருவிச்சென்று படமெடுத்துவிடுவதோடு, உடனடியாக உஷார்ப்படுத்திவிடும். உடலின் எந்தப் பகுதியிலும் இனிமேல் துப்பாக்கியை மறைத்து விட முடியாது. ஒழுங்கா உள்ளாடைகளை உடுத்திச் செல்லுங்கப்பா இனிமேல்.

Monday, April 22, 2013

மெக்சிகோ பயணம் -8 குவாடலுப் சன்னதி (நவம்பர் 30, 2012)




     International என்று எழுதப்பட்டிருந்த உணவகத்திற்குப் போய்ச் சேரும்போது மணி 2:30. அது வரை எப்படித்தாக்குப்பிடித்தேன் என்று தெரியவில்லை.


     வாசலில் ஆஸ்டெக் ராஜகுமாரனும், ராஜகுமாரியும் நின்று வரவேற்றார்கள். இருவரும் அத்தனை அழகு. உடைகள்தான் சற்று விரசமாக இருந்தது. உள்ளே சென்றபோது, பலவித உணவுகள், சூப், சாலடுகள், பழவகைகள் என ஏராளமாக இருந்தது. Buffet -150 பீசோ என்றார்கள். முதலில் சிறிது மக்காச்சோள ரசத்தை (Corn soup) அருந்தினேன். வயிற்றிரைச்சல் குறைந்தது. ராஜகுமாரி, ராஜகுமாரனுக்கு கொடுத்த முத்தத்தைப்பார்த்த வயிற்றெரிச்சல் மட்டும் அப்படியே இருந்தது. இருவரும் காதலர்கள் போலும்.


 பலவிதமான இறைச்சி வகைகளைத் தவிர்த்து (எதுக்கு ரிஸ்க்?) அரிசிச்சாதம் (அதான பார்த்தேன்) எடுத்து, கொஞ்சம் மொச்சைக் குழம்பை (கிட்னி பீன்ஸ்) வைத்து சாப்பிட்டேன். ருசியாகவே இருந்தது. நல்ல பசியில்  , ஒரு பிடி பிடித்து விட்டேன் .வயிறும் மனதும் நிறைய, மீண்டும் சென்று, சாலடு வகைகள் மற்றும் பழ வகைகளை எடுத்துக்கொண்டு, இல்லை இல்லை, குவித்துக் கொண்டு வந்தேன். பாதி சாப்பிட்டவுடன் நெஞ்சும் நிறைந்தது. மீதியை குற்ற உணர்ச்சியுடன் பார்த்தேன். வேஸ்ட் செய்ய விருப்பமில்லை, கட்டிச் செல்லவும் அனுமதியில்லை, வருத்தத்துடன், யாரும் பார்க்காத சமயத்தில் சட்டென்று கொட்டினேன். எதிர்பாராது அதனைப் பார்த்துவிட்ட,  என் சக பயணியிடம் எனது டிரேட் மார்க் அசட்டுச்சிரிப்புடன் மழுப்பிவிட்டு  நகர்ந்தேன் .

     திடீரென்று காதைப்பிளக்கும் டிரம் இசையுடன், இளவரசியும் இளவரசனும் குத்தாட்டம் போட்டனர். மிகவும் இயற்கையான உற்சாகமான ஆட்டம். போட்டோ  எடுக்க நினைத்து தோற்றேன். அசைவுகள் மிக துரிதமாக இருந்தன.

மீண்டு வந்தபின் அங்கிருந்த கேக் மற்றும் டெசர்ட் வகைகளை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். எதுக்கும் ஒரு அளவு வேணும்ல பாஸ், என்னோட ஸ்டிரக்செர்  போயிரும்ல.

     அருமையாக நடனம் ஆடிய அவர்களை பாராட்டிவிட்டு, போட்டோ எடுத்துக்கொண்டேன். ஒரு 20 பீசோ கொடுத்தேன்.”கிராசியஸ்” என்று ராஜகுமாரி திருவாய் மலர்ந்தார். எங்களுடைய அடுத்த இடமான குவாடலுப் சன்னதிக்கு பஸ் கிளம்பியது .

     குவாடலுப் சன்னதி (Guadalupe Shrine- The Basilica of our Lady Guadalupe ) என்பது ரோமன் கத்தோலிக்கர்களின் ஒரு புனித இடம். இது மெக்சிகோ நாட்டின் தேசிய சன்னதி (National Shrine) ஆகும். மெக்சிகோ நாட்டின் 85 சதவிகிதம் கத்தோலிக்கர்கள்  ஆவார்கள் .இதனை (La villa) லா வில்லா என்றும் அழைக்கின்றனர்.

எச்சரிக்கை: வரலாறு படிக்கும்போது எரிச்சல் அடைபவர்கள் வருகின்ற பத்தியை கடந்து செல்லவும்.

     புனித யுவான்  டியாகோ என்பவர் ஆஸ்டெக் மதத்திலிருந்து, ரோமன்  கத்தோலிக்க மதத்திற்கு கி.பி 1531ல் மாறினார். இந்த இடத்தில் மாதா அவருக்கு காட்சி கொடுத்து, தனக்கு ஒரு கோயிலை அங்கு கட்டப் பணித்ததாகவும், அங்கிருந்த பிஷப் நம்ப மறுத்து அடையாளம் கேட்டபோது, யுவான் கொடுத்த மலர்கள் பிஷப்பின் கவுனில் விழுத்து அடையாளம் ஏற்படுத்தியதாம். அந்தத்துணி இன்னமும் இருக்கிறது. இது நடந்தது டிசம்பர் 12,1531. எனவே அதே தேதியில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடுகிறார்கள்.

பழைய பேராலயம் கட்ட ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு : கி.பி. 1531.

கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு :கி.பி 1709.

முக்கிய கட்டிடப்பொறியாளர் (Architect) :Pedro de Arrieta

ஆலயத்திற்கு பேராலய அந்தஸ்து கொடுத்த வருடம் : 1904.

கொடுத்தவர் - போப் பயஸ்.

புதிய பேராலயம் கட்டிய வருடம் :  1974 - 76.

ஆர்க்கிடெக்ட் : Pedro Ramirez Vazquez

(ஆஸ்டெக் ஸ்டேடியம் மற்றும் ஆந்த்ரபாலஜி மியூசியம் கட்டியவர்)

இருக்கை வசதி - ஒரே நேரத்தில் 10,000 நபர்கள்.

பழைய பேராலயம், நான் இதுவரை பார்த்திராத கட்டிடக்கலையாக இருந்தது. உள்ளே போனால், கலை நுணுக்கங்களுடனும், வேலைப்பாடுகளோடும் மனதை அள்ளியது. மேலும் கற்பனை செய்ய முடியாத அளவு, பெரிய ஓவியங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் கேன்வாஸ் துணியில் வரையப்பட்ட எண்ணெய் ஓவியங்கள். (Oil Paintings). சிறிது நேரத்தில் என் தலை சுற்றுவது போலவும், கீழேவிழுந்துவிடுவதைப் போலவும் உணர்ந்தேன். ஐயையோ இந்த சர்க்கரை தன் வேலையைக் காட்டுகிறது, மதியம் கொஞ்சம் ஓவரா சாப்பிட்டு விட்டேனோ ? என்று நினைத்த போது இக்கி வந்து என்னைப்பிடித்தார். பின்னர், அவர் விளக்கியபோதுதான், இது சர்க்கரை அல்ல என்று புரிந்தது.

முழு மெக்சிகோ நகரமும் அக்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஏரியை ஆக்ரமித்துக் கட்டப்பட்டது. எனவே அதன் அடிப்பூமி மிகவும் மிருதுவான மண்ணைக்கொண்டது.




எனவே பல இடங்களில் பழைய கட்டடங்கள் பூமியின் நெகிழ்ச்சியில் உள்ளே அமிழ் கின்றன. இந்த ஆலயமும் அவ்வாறே ஒரு இடத்தில் உள்ளே இறங்கிப்போய் ஏற்ற இறக்கமாய்  இருந்தது. ஓவியங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நகர்ந்ததால் ,இறக்கத்தில் தடுமாறி மயக்கம் என்று நினைத்துவிட்டேன்   (அப்பாடா நல்லவேளை ஏசுவே )

அந்த ஆலயத்தை அப்படியே தூக்கி நிமிர்த்திவிட முயன்று, அது லேசாக விரிசல்விடத்துவங்கியதால், அப்படியே விட்டுவிட்டு, புதிய பேராலயம் அமைக்கப்பட்டது. பல வருடங்கள் பூட்டப்பட்ட பழைய ஆலயம் சமீபத்தில் தான் திறக்கப்பட்டதாம் . (ஆகா எனக்காகத்தான்)

புதிய பேராலயம் தூண்கள் இல்லாமல் மிகவும் திறமையான மாடர்ன் ஸ்டைலில் கட்டப்பட்டிருந்தது. உள்ளே ஏராளமான மக்கள் வீற்றிருக்க, திருப்பலிகள் ஸ்பானிஷில் தொடர்ந்து நடைபெற்றன. இப்புதிய கட்டடம் அமிழாதபடி, புதுடெக்னாலஜியில் கட்டப்பட்டிருந்தது. அதன் பைப் ஆர்கன் மிகப்பெரியது . சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வந்தேன்.

வெளியில் இருந்த மிகப்பரந்த திறந்த வெளியில் போப் ஜான் பாலின் பிரமாண்ட சிலை இருந்தது. அங்கிருந்த ஆலயக்கடையில் ஓரிரண்டு நினைவுப்பொருட்கள் வாங்கி விட்டு வெளியே வந்தேன். நமது குரூப் அங்கே ரெடியாக இருந்தது. கூட வந்த சக பயணிகள் இப்போது கொஞ்சம் அறிமுகமடைந்து புன்சிரித்தனர்,பேசத்தான் முடியவில்லை.


     இந்த தடவை முதலில் என்னைத்தான் இறக்கிவிட்டனர். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, இக்கியின் கையில் ஒரு 50 பீசோவை (அதிகமா? குறைவா?) திணித்துவிட்டு இறங்கினேன். மணி 7 தான் ஆகியது.

ரூமுக்கு சென்று முகம் கழுவி வெளியே வந்தேன். கொஞ்சம் பழங்கள் வாங்கலாம் Tropical பகுதி என்பதால் சல்லிசாக கிடைக்கும் என நினைத்து, பக்கத்தில் உள்ள மார்க்கெட்டின் முகவரியைப் பெற்றுவிட்டு வந்தேன். (எச்சரிக்கை: தெரு விளக்குகள் அவ்வளவு அதிக ஒளி தருவதில்லை.).


ஒரு வழியாக கண்டுபிடித்து உள்ளே நுழைந்தேன். சிப்ஸ் எங்கே இருக்கும் என்று கேட்டேன். மறுபடியும் அதே பிராப்ளம் , நான் என்ன சொல்கிறேன் என்று யாருக்கும் விளங்கவில்லை. சடுதியாக காய்கறிப்பகுதியில் சென்று ஒரு உருளைக்கிழங்கு எடுத்து சைகையில்  வெட்டி , வாணலியில் இட்டு வறுத்துக்காட்டி  எங்கே சிப்ஸ்? என்று கேட்டேன் . ஊஹீம் ஒன்ணும் பேரல. ஆனால் என்னைப்பார்த்து சிறு கலவரத்துடன் நகர்ந்தனர் . ஒரு வேலை பைத்தியம்னு நெனைச்சிட்டாய்ங்க போல. முழு கடையையும் 40 நிமிடங்கள் சுற்றி சிப்சை  கண்டுபிடித்தேன் . பாக்கெட்டில் ஆங்கில வார்த்தைகள் ஏதுமில்லை . பின்னர் மறுபடியும் காய்கறி பகுதிக்குச் சென்றேன்.

ஆஹா, கொய்யாப்பழம்,சல்லிசான விலையில். நியூயார்க்கில் கொய்யாப்பழம் ஒரு பவுண்டு -(சுமார் 1/2 கிலோ) 4 அல்லது 5 டாலர் இருக்கும். பெரிசு பெரிசா இருக்கும். சாப்பிட்டால் சள்ளென்று ஒரு சுவையும் இருக்காது . ஊர் திரும்பும்  போது வாங்கிக்கொண்டு  போக வேண்டும் என்று நினைத்தபடி, ஒரு மூன்று கிலோ கொய்யா வாங்கினேன் . உள்ளே சிவப்பான, சிந்தாமணி  சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருந்தது. அதில் கொஞ்சம் வாங்கிக்கொண்டு, சிறிய ரஸ்தாளியும்,அத்திப்பழமும் வாங்கினேன். திரும்பினால் ,நன்கு விளைந்த கரும்பு வெட்டி வைத்திருந்தார்கள் . ஒரு நான்கை வாங்கிக்கொண்டு ஹோட்டல் திரும்ப தெருவில் நடந்தால், ஹோட்டலைக் காணவில்லை .

Thursday, April 18, 2013

மெக்சிகோ பயணம் -7 (நவம்பர் 30, 2012) பொறுக்கியான பரதேசி

 




இக்கியும் என் உடன் பயணிகளும் 
எப்படி என்று ஆச்சரியத்துடன் பார்த்தபோது. சிறிதளவு எச்சிலை அதில் உமிழ்ந்து ஒன்று, இரண்டு என்று எண்ண ஆரம்பித்தார். ஐந்து எண்ணுவதற்குள் அது காய்ந்துவிட்டால் அது குறைந்தது 2000 வருட பழமையானது என்று சர்வ சாதாரணமாய் சொன்னார் இக்கி . மற்றவை அதைவிட குறைந்த வயதுள்ளவையாம். எச்சில் துப்பியவற்றை , கவனமாக தவிர்த்து விட்டு, மற்ற  சிலவற்றைப் பொறுக்கி பையில் போட்டுக் கொண்டேன். சிவப்பு, கறுப்பு, பிரெளன் என்று பலவித வண்ணங்களில் இருந்தது . நானும் கையில் ஒரு உடைந்த ஓடை எடுத்து அதன் மேல் துப்பினேன் .நமக்கு எப்ப குறி சரியாய் இருந்துருக்கு ? . ஓடு தவிர உள்ளங்கையின்  மற்ற எல்லா இடத்திலும் எச்சில் தெறிக்க, “உவ்வே” நெலமை ஆயிப்போச்சு .சுற்றிலும் பார்க்க ,நல்ல வேளை யாரும் பார்க்கல .

மணி மதியம் 12 இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஏறிய வெயில் இப்போது நன்கு உரைத்தது. மொட்டைக்காடாக இருந்ததால் வேர்த்துக்கொட்டியது. என்னுடைய லைட் ஜாக்கெட்டை கழற்றி கையில் பிடித்துக் கொண்டேன்.பஸ்ஸிலேயே விட்டுவிட்டு வந்திருக்க வேண்டும்.

     இக்னேஷியோ சொன்னார், மேலே ஏறுபவர்கள் ஏறிவிட்டு வாருங்கள் என்று, என்னால் முடியுமா? என்று சந்தேகம் வந்தது. உச்சிவெயில் வேறு மண்டையை பிளந்தது. தண்ணீர், தின்பண்டம், உணவு, சோடா எதுவும் கிடைக்காத அந்த இடத்தில் வெறும் கலைப்பொருட்கள் மட்டுமே கிடைத்தது கோபம் கோபமாய் வந்தது.  திடீரென்று ஒரு குருட்டுத்தைரியம், எப்படியாவது ஏறிவிடுவோமென்று இன்றைக்கெல்லாம் இருந்தால் எனக்கு எவ்வளவு வயதிருக்கும் என்று நினைக்கிறீர்கள்,


     செங்குத்தான படிக்கட்டுகள், ஒவ்வொரு படியும் மிக உயரம். பிடித்து ஏறுவதற்காக நடுவில் ஒரு பெரிய வடக்கயிறு. ஏறினேன் ஏறினேன், ஏறிக்கொண்டே, ஏ....றி ஏ....றி, ஒரு படியில் உட்கார்ந்து மூச்சு வாங்கினேன். மேலே பார்த்தால் இன்னும் ஏராளமான படிகள் இருந்தன. இந்த வெயில் வேறு மேலும் உக்கிரமடைந்தது. கலோரிகள் வேகமாக எரிந்ததால் பசி வேறு. கீழேபோய்விடலாம் என்று இருமுட்டிகளும் சொன்னது. மேலே போ என்று மனசு சொன்னது. முட்டி சொன்னதை தட்டிவிட்டு, மனதினை வழக்கம்போல் பின்பற்றினேன். ஏயப்பா ஏறியேவிட்டேன். இந்தியக்கொடி கொண்டு வந்திருந்தால் அங்கே ஊன்றியிருக்கலாம். குறைந்தபட்சம் இரண்டு  தடவை அசைத்திருக்கலாம். ஒரு இந்தியனைக்கூட  இதுவரை சந்திக்காதது அதிசயம்தான்.

     மேலே தட்டையான சமவெளியும், வெறும் பீடமும் இருந்தன. 2000 வருடங்களுக்கு முன்னால், அந்த இடம் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என எண்ணிப்பார்த்தேன் (பெரிய ஸ்பீல்பெர்க் நினைப்பு நிறுத்தப்பு  ).


     அங்கு வாழ்ந்த மக்கள் வலிமையானவர்களாக மட்டுமல்ல திறமையானவர்களாயும் இருந்திருக்க வேண்டும். எதிலும் ஒரு ஒழுங்கும் தெரிந்தது. இறங்குவதை நினைத்தால் இன்னும் மலைப்பாக இருந்தது. மிகவும் செங்குத்தாக இருந்தது. ஓரிரண்டு போட்டாக்கள் எடுத்துவிட்டு (ஒரு எவிடென்ஸ் வேனும்ல) இறங்க ஆயத்தமானேன்.

     இறங்குவது ஏறுவதைவிட கடினமாக இருந்தது (அட நம்புங்க). நீண்ட படிக்கட்டுகள் சற்றே குதித்துத்தான் இறங்க வேண்டும். ஆனால்  தவறினால் அகழ்வாராய்ச்சி, ஆவியாராய்சியாகிவிட வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதிக நேரம் எடுத்து மெதுவாக இறங்கினேன்.  முட்டிகள் இரண்டும், அவை சொன்னவற்றை கேட்காததினால் கோபித்துக்கொண்டது அப்பட்டமாக தெரிந்தது.

     நடுவெளியில் கையசைத்துக்கொண்டு நின்றிருந்த இக்னேஷியோவை அடைந்தேன். ஏற்கனவே எச்சரித்ததுபோல், இந்த சிறு வியாபாரிகள் தொல்லை தாங்கமுடியவில்லை. ஒருவர் அருகில் வந்து மிக வித்தியாசமாக செய்யப்பட்ட இரு நீளமான மண்பொம்மைகளைக் காண்பித்தார். வாங்கலாமா? என்றுயோசித்த போது, அதனை வாயில் வைத்து ஊதினார். அட இது பொம்மைப்புல்லாங்குழல். சிறுசிறு துளைகள் இருந்ததை அப்போதுதான் பார்த்தேன். பல வண்ணங்கள் அடித்து மிகவும் அழகாக இருந்தது. பேரம்பேசி வாங்கியேவிட்டேன் .இரண்டையும் 300 பீசோ சொல்லி 150பீசோவுக்கு வாங்கினேன் - எப்படி இந்த தமிழனின் திறமை.   அந்த ஆள்  ஒரு ஜந்துவைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்துவிட்டு நகர்ந்தான்.விலை தகையவில்லை  என்றால் ஏன்  விற்க வேண்டும்?

இக்னேஷியா ஒரு சேதமடைந்த சுவர் ஓவியத்தைக் காண்பித்தார். மிகவும் உதிர்ந்து போயிருந்த அந்த ஓவியத்தில் வரைந்தவனின் எண்ணமும், குழைத்திருந்த வண்ணமும் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது.

     நடுவெளியில் இருந்த ஒரு சிறு வியாபாரியிடம் இக்கி அழைத்துச் சென்றார். மற்றொரு விற்பனை முகாந்தரமோ என்றெண்ணி தயங்குகையில், புராதன வண்ணங்களை எப்படி படைத்தனர் என்பதை அவர் விளக்கினார்.

சில பூச்சிகளை வைத்திருந்தார், அதிலிருந்து ஒன்றை பிடித்து நசுக்கிப் பின்னர் இன்னொரு தாவரத்தை நசுக்கி இணைக்க ஒரு அழகான கருநீல  ஊதா நிறம் பிறந்தது. இன்னும் சில நிறங்களை உருவாக்கிக் காண்பித்தார். அவை நிரந்தரமாக இருக்குமாம். ஒரு உறையின் மூலையில் ஒரு சூரியனை வரைந்து அதனுள்ளே சில போஸ்ட் கார்டுகளை வைத்து 10 பீசோ என்றார் .அந்த வண்ணங்களின் சூட்சுமத்திற்காக அதனை வாங்கினேன்.

     சில அடிகள் நகர்ந்ததும் மிகவும் பெரிய சந்திரக்கடவுளின் பிரமிடு வந்தது. சூரியக் கடவுளின் பிரமிடைவிட உயரத்தில் பெரியது. ஐயையோ என்றது முட்டி. இந்தப் பைத்தியக்காரன் மறுபடி ஏறிவிடுவானோ என நினைத்து நடுங்கியது. இந்த முறை மனதின் ஆசையைத்தவிர்த்தேன். வயிறு வேறு கடமுடா என்றது. ஓ ஒரு மணியாகிவிட்டது, நடுவில் ஒன்றும் சாப்பிடவில்லை. திடீரென தாகமும் பசியும் சேர்ந்து வாட்டியது.

பல வியாபாரங்கள் அங்கு நடந்தும் சாப்பிவோ குடிக்கவோ ஒன்றுமே இல்லை. ஓரிரு புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு, இக்கியைத் தேடிப்பிடித்து சாப்பாடு எப்போது? என்றேன். இங்கிருந்து நேராக அங்கேதான் என்று வயிற்றில் நம்பிக்கைப்பாலை ஊற்றினார்.  

Monday, April 15, 2013

பரதேசி பார்த்த பரதேசி


          பாலாவின் பரதேசி பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதால், எப்படியாவது தியேட்டர் சென்று பார்த்துவிடுவது என முடிவு செய்தேன். தியேட்டர் போய்ப் பார்ப்பது அவ்வளவு கஷ்டமா? என்று  கேட்பது காதில் விழுகிறது . ஆமங்க கொஞ்சம் கஷ்டம்தான். நியூயார்க்கில் தமிழ்ப்படம் தற்சமயம் எங்கும் இல்லை.எனவே ஒரு மணி நேரம்  டிரைவ் செய்து, பக்கத்தில் உள்ள நியூஜெர்சி மாநிலம் சென்றுதான் படம் பார்க்க முடியும்.சுமார் 60 மைல் , நன்றாக படிக்கவும் "மைல் ", கிலோ மீட்டர் அல்ல. சில வேளைகளில் ட்ராபிக்கில் மாட்டினால்  மூன்று மணி நேரம் கூட ஆகிவிடும் .

            பாலாவின் மீது எப்போதும் எனக்கு பாசம் உண்டு. காரணங்கள் இரண்டு

1) அம்மூர் மதுரைக்காரன் 2) எங்க “தி அமெரிக்கன் கல்லூரி” மாணவன். அமெரிக்கன் கல்லூரி கொடுத்த இயக்குநர் மகேந்திரனுக்குப்பின் பேசப்படுபவர்.பாலா இயக்கியதில் பிதாமகன் மற்றும் நான் கடவுள் என்ற இரு படங்கள் எனக்குப்பிடித்தவை.
   

            எதிர்பார்ப்புகளோடு போகாதே என்று மனம் சற்றே எச்சரித்தது. இப்படித்தான், இதற்கு முன்னால், "அவன் இவன்" வந்தபோது, எவன் இவன்? என்று பார்க்கப்போய், நடுவில் தூங்கி  எழுந்த சமயத்தில், அம்மண ஜமீந்தாரைப் பார்த்து அலறி, கண்கள் கோனி ஒரு வாரமா விஷால் மாதிரியே பார்த்துட்டு அலைஞ்சது ஞாபகம் வந்தது.
ஆனாலும், இது "நம்ம பாலா" படம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு, பிளான் பண்னேன். அந்தச் சமயத்தில்தான், நண்பன் முத்துராமலிங்கம் (hellotamilcinema .com ) ஃபேஸ்புக் ஸ்டேடசில், "மனப்பிறழ்ச்சி உள்ளவர்கள்தான் இந்தப்படத்தைப் பார்க்கமுடியும்" என்று பயமுறுத்தியதைப்  படிக்கும் போது, எதுக்கும் என் மனைவியையும் அழைத்துச்செல்லலாம் என்று அழைத்தேன். அதோடு நியூஜெர்சி வரை போவதால் துணையாகவும் இருக்கும்.

     அவள் தியேட்டரில் படம் பார்ப்பது அரிது. எப்போதாவது ரஜினி படம் வந்தால் போவாள். அப்போதெல்லாம் சில தமிழ்ப்படங்கள் நியூயார்க்கிலேயே பார்க்கலாம். 

     அவள் சில தோழிகளோடு எந்திரன் சென்றதுதான் கடைசி. அன்று எனக்கு வேறுவேலை இருந்தது. கூட்டத்தில் சிக்க வேண்டாம் என்று நினைத்து ஒரு மூன்று நாட்கள் கழித்துச் சென்றேன். ஜாக்சன் ஹெய்ட்சில் உள்ள, அந்த புராதன தியேட்டர் தூண்கள் சூழ்ந்து, சிதிலமடைந்த அஜந்தா ஓவியங்களுடன் தொல்பொருளாக இருந்தது. ஒரு இலங்கைத்தமிழர் புதிதாக அதனை லீசில் எடுத்து ஒரு தெலுங்குப்படம் மற்றும் எந்திரனை ரிலீஸ் செய்திருந்தார்.டிக்கட் வாங்கும்போது படம் ஆறுமணிக்கென்று சொன்னார்கள். எனக்கு ஆரம்பத்தில் இருந்து வணக்கம் போடும் வரை பார்த்தால்தான் திருப்தி என்பதால் 5.30 மணிக்கு வந்து தனியாக அமர்ந்திருந்தேன். மேலே பார்த்தால் சில இடங்களில் காரையோ எதுவோ பெயர்ந்து இருந்தது, திகிலைக் கூட்டியது. சேஃப்டி ஹெல்மட் வேற தரவில்லை.

     6.30 ஆகியும் படம் போடாததால் வெளியே சென்று விசாரித்தால், படம் போட்டாச்சே, அதோ பக்கத்தில் இருக்கிற சின்ன தியேட்டர் என்றார்கள். சொல்லவேயில்லை என்று முறைத்துவிட்டு, அந்த சிறிய தியேட்டரில் நுழைந்தால் "காதல் அணுக்களை" எண்ணியபடி, ரஜினி தப்புத்தப்பாக கிடாரை தடவிக்கொண்டிருந்தார். நம்பினால் நம்புங்கள். அங்கே ஒருவரும் இல்லை,  ரஜினியும் உலக அழகியும் தவிர. 15 டாலரில் ஒரு பிரத்யேக காட்சி ரஜினிக்குக்கூட கிடைத்திருக்காது. ஆனால் ஒவ்வொரு குளோஸ் அப் காட்சி வரும்போதும் கொஞ்சம் பயமாக இருந்தது, குறிப்பாக ரஜினியின் குளோஸ் அப். பாதிக்கு மேல் ஒரு ஸ்பானிஸ் பையன் வந்து உட்கார்ந்தான். அவனும் சிறிது நேரத்தில் ஒன்றும் புரியாது அல்லது ரஜினியை சகிக்க முடியாமல் வெளியே போய்விட்டான்.
     டிவின் டவர்  உயர கனவுகளோடு தியேட்டர் ஆரம்பித்த, இலங்கைத்தமிழர் ஜீரோகிரவுண்ட்  ஆகி முதல் படமான எந்திரன்  ரிலீஸ்லெயே, நொந்திரன் ஆகி தியேட்டரை மூடிவிட்டதில், நியூயார்க்கில், இப்ப தமிழ்ப்படம் போட எந்த தியேட்டரும் இல்லை. மன்னிச்சுடுங்க எங்கயோ டிராக் மாறிட்டேன்.

     நானும் என் மனைவியும் எங்கள் காரில் கிளம்பி, நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள எடிசன் என்ற பகுதிக்கு வந்தோம். இந்தியர்கள் அதிகமாக வாழும் அந்தப் பகுதியில் இருந்தது, "பிக் சினிமா" என்ற தியேட்டர் காம்ப்ளக்ஸ். நம்மூர் ரிலையன்ஸ் கம்பெனி இதுபோன்ற செயின் தியேட்டர் காம்ளக்ஸ் -ஐ பல இடங்களில் நடத்துகின்றனர். பிக் சினிமா , ஓக் ட்ரீ ரோடில் இருந்தது .அங்கேதான் நிறைய நகைக்கடைகள் இருப்பது நல்ல வேளை நியாபகம் வர , குறுக்கு வழியில் நுழைந்து , நகைக்கடைகளை தவிர்த்து விட்டு போய்ச்சேர்ந்தேன். தப்பிச்சேன்டா சாமி.

         ஒரே கூட்டமாய் இருந்தது. ஆஹா பரதேசிக்கு நல்ல கூட்டம்னு நினைத்தேன். எந்தப் படம் என்றாலும் டிக்கெட் வாங்க  ஒரே லைன். அப்புறம்தான் தெரிந்தது, அது தெலுங்குலு  படம்லு  பார்க்கலு வந்த கூட்டம்லு.

     டிக்கட் வாங்கி உள்ளே சென்றால் அது "பிக் சினிமா" இல்லை "ஸ்மால் சினிமா" என்று தெரிந்தது, நீளமாக குகை போல இருந்தது. மதுரை மினிப்பிரியா ஞாபகம் வந்தது. ஆனால் அது சூப்பரா, இருக்கும். தட்டையாக இருந்ததால், முன்னால் உட்கார்ந்தவர்களின் தலை மறைத்தது. அதுவும் என் முன்னால் அமர்ந்தவரின் கழுத்து, அதீத நீளமாய், கால்வாசி திரையை மறைத்தது. முன்பிறவியில் ஒட்டகமோ என்னவோ?

     படம் ஆரம்பித்தவுடன் கலரைப்பார்த்துவிட்டு என்னைத் திரும்பிப்பார்த்த என் மனைவி "புதுப்படம்தானே" என்றாள். "புதுப்படம்தான் ஆனால் பழைய படம்", என்றேன். முறைத்துப் பார்த்ததில், அவள் விழிகள் ரெண்டும் இருட்டிலும் பயமுறுத்தியது "புதுப்படம்தான் ஆனால் பழைய கதை, பீரியட் பிலிம்". என்றேன்.

     சூலூர் கிராமம் சுத்தமாகவே இருந்தது. நானும் கிராமத்தான் தான். ஆனால் என்னவோ தெரியல, என்னால அவங்களோட ஒட்ட முடியல. கால்வாசி படம் முடியும்போது, " ஆமா எங்க ஹீரோ? என்றாள் என் மனைவி, "இவந்தான் வட்டுறுப்பி, பேர் ஓட்டுப்பொறுக்கி" என்று காண்பித்த போது, "இவனா, அப்ப ஹீரோயின்", காண்பித்தேன். கலவரமடைந்தாள் என் காதல் மனைவி. டென்சன் ஆகாதிங்க பாஸ், ஒரு ரைமிங்க்கு சொன்னேன். ஒரே மனைவிதான் எனக்கு.

     என் மனைவி எழுந்தாள், என்ன என்று கேட்டதற்கு, ஒன்றுமில்லை, ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வர்றேன்னு சொன்னா. சரின்னு அனுப்ப, சமூசா வாங்கி வந்தாள். சில நொடிகளில் திரும்ப எழுந்தாள். என்ன என்றதற்கு, "சனியன் சமூசாவும் நல்லாயில்ல", என்று எழுந்து குப்பையில் போட்டு வந்தாள்.  என் மனைவி மட்டுமல்ல, அங்கு பலபேர் ரெஸ்ட்லஸ் ஆகி, வெளியே போவதும் உள்ளே வருவதுமாக இருந்தனர். சிலர் திரும்பி வரவேயில்லை .

     “வா வீட்டுக்குப் போகலாம்” என்றவளை, நான் தான் கொஞ்சம் கெஞ்சி, கூத்தாடி உட்கார வைத்தேன். உங்களுக்குத் தெரியும்ல, எனக்கு எளகின மனசு. ஏதாவது சோகக்காட்சிகள் வந்தா அழுதுருவேன்.  ஆனால் என்னவோ தெரியல, சோகத்தை பிழியும் எந்தக் காட்சி வந்தாலும் அது எரிச்சலைத்தான் கூட்டியது.

     பாட்டு ஒவ்வொன்னும் நல்லா  இருந்துச்சு, ஆனா தனியாக கேட்டபோது. படத்தோடு ஒன்னுகூட ஒட்டல. அட இந்த, பேக்ரவுண்டு மியூசிக்கும் சுத்தமா ஒட்டவேயில்லை என்னாச்சு பாலாவுக்கு?. அந்த பரிசுத்தம் கேரக்டர், வெள்ளைக்கார மனைவியோட குத்தாட்டம் எல்லாம் ரொம்பவே ஓவர். வாழ்க்கையை வாழ்றதுக்கு ஒரு நம்பிக்கை ஒளின்றது படத்துல சுத்தமா இல்லை.
     இன்னொரு விஷயம் எந்த இடத்திலும் எதார்த்தமே இல்லை. கொடூர ராட்சத உலகத்தில வாழவே வேண்டாம் செத்தொழின்னு சொல்லுறது படம். அடக்கொடுமையே
.

     என் மனைவி பொறுத்து பொறுத்துப் பார்த்து தள்ளுங்கன்னு சொல்லிட்டு வெளியே போயிட்டா. நல்லவேளை கார் சாவி என்டயிருந்துசு. படம் முடிஞ்சி, வெளியே வந்த தமிழ் மூஞ்ச்சிகள் எல்லாம் நீளமாகி பாக்கச் சகிக்கல. சோகத்தில இல்லை ,வெறுப்பில.ஒரு நல்ல வீக்கென்ட் தொலைந்துபோன வெறுப்பு.

     வெளியே என் மனைவி ஐஸ்கீரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். சூடான மூடை குளிரவைக்கிறாள் என்று நினைத்தேன். ஆனாலும் என்னைப் பார்த்து முறைத்தாள்.
 56 மார்க் போட்ட ஆனந்தவிகடன் மேல் ஆத்திர ஆத்திரமாய் வந்தது. சாரு நிவேதிதா
(http://charuonline.com/blog/?p=258), முத்துராமலிங்கம் (http://hellotamilcinema.com/index.php?option=com_content&view=article&id=1611:bala-paradesi-review-hot-review&catid=79:space&Itemid=422) மற்றும் முருகவேள் (http://charuonline.com/blog/?p=271) எழுதிய விமர்சனங்கள் முற்றிலும் சரி. முருகவேள் தான் , மூல நாவலான "ரெட் டி" ஐ தமிழில் மொழி பெயர்த்தவர். இவ்வளவு கொடூர  சோகத்துல எனக்கு ரொம்பப்பிடித்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் காணாப்போயிட்டார்.

     என்னத்தைச் சொல்றது, என் மனைவி வழக்கத்துக்குமாறா பின்னாடி உட்கார்ந்து தூங்கிப்போக, வெரஜோனா  பாலத்தில் டிராஃபிக்ல மாட்டி, வீடு வந்து சேரும்போது, நடுராத்திரி தாண்டிருச்சு. நியாயமாரேன்னு எழுப்பினா , ஆமா வெளக்குமாரேன்னு சொல்லிட்டு உள்ளே போயிட்டா என் பாரியாள் .

     மூடை மாத்த சிரிப்பு டிவியைப் போட்டாலும், ஒன்னும் முடியாமல் அவஸ்தையாகி, அப்புறம் எப்ப தூங்கினேன்னு எனக்கே தெரியல.

     பரதேசி படத்தாலே நடந்த ஒரே நல்லவிஷயம் ஒரு நாலு நாள், என் மனைவி என்ட்ட பேசல நியாயமாரே.