Thursday, July 30, 2015

கலாமுக்கு கண்ணீருடன் ஒரு சலாம் !!!!!!!!!!

      கலாமுக்கு கண்ணீருடன் ஒரு சலாம் !!!!!!!!!!


         உலகத்தமிழர் மனதில் நீங்கா இடம் பிடித்த மாபெரும் தலைவர் Dr.A.P.J அப்துல் கலாம் மறைவுக்கு பரதேசியின் கண்ணீர் அஞ்சலி  .

இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் உண்மையான அஞ்சலி  இப்படி எந்த தலைவருக்கும்  சமீபத்தில் கிடைத்ததில்லை  .

இதைப்பார்த்தாவது, நம் அரசியல் வியாதிகள் திருந்தி, போகும்போது கொண்டு போகப்போவது ஒன்றுமில்லை .உண்மையான அன்பும் ,மரியாதையும், புகழும்  மக்களுக்கு நேர்மையான பணி செய்வதில்தான்  கிடைக்கும்  என்று உணரட்டும் .2013 ஜூலை   மாதத்தில்  அடியேன் எழுதிய பதிவின் சில பகுதிகளை  கீழே கொடுத்துள்ளேன்


அப்துல் கலாமின் "திருப்புமுனைகள்" ,வெளியீடு - கண்ணதாசன் பதிப்பகம்.

 

முதலில் புத்தகத்தயாரிப்பைப்பற்றி சொல்ல வேண்டும். மிகவும் நேர்த்தியாக அச்சிடப்பட்டு, கலர்ப்படங்களுடனும் அதிக எடை இல்லாமலும் இருந்தது. மொழி பெயர்ப்பும் நன்றாகவே இருந்தது.
ஆனால் 'அக்னி சிறகுகளில்' இருந்த விறுவிறுப்பும் சுவாரஸ்யமும், சாதனைகளும் இதில் இல்லை. ஏனென்றால் குடியரசுத் தலைவர் ஆனபின் சாதனைகளை விட சமாளிப்புகள் தான் அதிகம் தென்படுகின்றன.
ஆனாலும் அப்துல்கலாம் ஒரு நேர்சிந்தனையுள்ள, நாட்டின் முன்னேற்றத்தையே தன் வாழ்நாள் கனவாகக்கொண்ட  ஒரு அற்புதத்தலைவர் என்பதில் சந்தேகமில்லை. தான் கனவு கண்டதுடன், இந்திய மக்கள் அனைவரும் அதே கனவைக் காண வேண்டும் என முயற்றி செய்து கொண்டிருப்பவர், கலாம்.
இந்தியாவின் தென்கோடிப்பகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து நாட்டின் உயர்ந்த (?) பதவியினைப் பெறும் அளவுக்கு உயர்ந்த இவரின் வாழ்க்கை நிச்சயமாக, இளைஞர்களுக்கு ஊக்க சக்தியை அளிக்க வல்லது.
தான்  குடியரசுத்தலைவர் ஆன சூழ்நிலைகளையும், அதன்பின் நாட்டு வளர்ச்சிக்கென அவர் எடுத்த பலவித முயற்சிகளையும் இந்த நூலில் எழுதியுள்ளார்.
வாழ்க்கையின் பெரும்பகுதியை ஏவுகணைத்தொழில் நுட்பம், அணு ஆராய்ச்சி என்று கழித்துவிட்டபின்,  எஞ்சியுள்ள அவர் வாழ்க்கையில், நாட்டின் ஆக்க சக்திகளுக்கு ஊக்கம் தரும்  முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், நாம் அவரை இன்னும் நல்லவிதமாக பயன்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. நம்ம அரசியல்வியாதிகள் விட்டுவிடுவார்களா என்ன? பிரதமர் போன்ற பதவிகளுக்கு இவரைப் போன்றவர் வந்தால் அல்லவா நாடு உருப்படும்.
சில வருடங்களுக்கு முன், அப்துல்கலாம் அமெரிக்கப்பயணம் செய்தபோது நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகமும், நியூயார்க் / நியூஜெர்சி வாழ் இந்திய அமைப்புகளும் இணைந்து, அவருடைய சொற்பொழிவை ஏற்பாடு செய்திருந்தனர். நியூயார்க்கில் நான் வாழும் குயின்ஸ் பகுதியில் உள்ள "கணேஷ் ஆலய”  வளாகத்தில் உள்ள அழகிய அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்வுக்கு, நானும் அழைக்கப்பட்டிருந்தேன். உள்ளே சென்றபோது அரங்கு, நிரம்பி வழிந்தது. சற்று நேரத்தில் NYPD  போலிஸ் பாதுகாப்புடன், அளவான புன்சிரிப்புடன், சற்றே தலை தாழ்ந்த சிறிய உருவம் உள்ளே நுழைந்தபோது, அனைவரும் தன்னிச்சையாக எழுந்து நின்று கையொலி எழுப்பி வரவேற்றனர். அமெரிக்க மற்றும் இந்திய தேசிய கீதங்கள் பாடப்பட்டன.கலாம் அவர்கள் தன் லேப்டாப் உதவியுடன், இந்திய நாட்டின் முன்னேற்றம் மற்றும் அதற்கு வெளிநாட்டு வாழ் இந்தியர் எப்படி பங்களிக்கலாம்? என்று அருமையாக தன்னுடைய திக் ஆக்சென்ட்டில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
சபையைக் கட்டிப் போட்டது அவர் பேச்சு மட்டுமல்லாது, அதன் பின்னர் நடந்த கேள்வி பதிலும்தான். சிக்கலான கேள்விகளுக்கு சாதுர்யமான பதில்களை கொடுத்து, அன்று அங்கிருந்த எல்லார் மனதிலும் இடம்பிடித்தார்.

குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் சாதனைகள் :
1.    இந்தியா முழுவதிலும் உள்ள எண்ணற்ற இளம் மாணவர்களை சந்தித்து ஊக்கப்படுத்தியது.
2.    ஜனாதிபதி மாளிகையை கனிணி மயமாக்கி ஆவணங்களை 'டிஜிட்டல்' வகைப்படுத்தியது.
3.    காணொலிக் காட்சி (Video Conferencing) மூலம் மாநாடுகள் நடத்தியது.
4.    வெளிநாட்டு பயணங்களை நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தியது.
5.    நாட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் பயணம் செய்து பார்வையிட்டது.
6.    340 ஏக்கர் பரப்பளவுள்ள தோட்டத்தை பராமரித்ததோடு, அதில் புதிதாக Tactical Garden (for the blind), மியூசிக்கல் கார்டன், ஆகியவற்றை புதிதாக அமைத்தது.
7.    நாடெங்கிலும் பரவலாகப் பயணம் செய்த ஒரே ஜனாதிபதி. (முதல் 10 மாதத்திலேயே, 21 மாநிலங்களில் பயணம் சென்றார்.)
அதிகம் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட அவரது நல்ல யோசனைகள்:
1.    விஷன் 2020
2.    நீதிமன்றங்களில் வழக்குகளை விரைவுபடுத்தும் வழிவகைகள். (E -Judiciary Initiative)
3.    PURA (Providing Urban Amenities in Rural Areas).
4.    ராஷ்டிரபதி பவன் ,பிரதம மந்திரி, பிற அமைச்சர்கள் மற்றும் மாநில ஆளுநர்களின் அலுவலகங்களை நெட்வொர்க்கில் இணைத்து  டிஜிட்டல் முறையில் கையெழுத்துப்பரிமாற்றம் செய்தல்.
5.    ஸ்திரமான ஆட்சிக்கு இருகட்சி ஆட்சி முறை.
6.    எரிசக்தி தன்னிறைவு பெற “ பயோடீசல் திட்டம்” மற்றும்  “சூரியசக்தி” திட்டங்கள்.
7.    பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு Code of Conduct அமைத்தல்.
சர்ச்சைக்குரிய முடிவுகள்:
1.    மாஸ்கோவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும்போது, மன்மோகன் சிங்கின் வேண்டுகோளுக்கிணங்க, ஒரு தடவை கூட கூடாத பீகார் சட்டமன்றத்தை கலைத்து (மே, 2005) உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானது.
2.    ஆதாயம் தரும் பதவிகளுக்கான சட்டமுன் வரைவை முதலில் திருப்பி அனுப்பினாலும், பின்னர் பாராளுமன்ற தீர்மானத்திற்குப்பின் ஒப்புதல் அளித்தது (ஜெயா பச்சன் மற்றும் சோனியா காந்தி அத்தகைய பதவிகளில் இருந்தனர்).
3.    பதவிக்குப்பின்னர், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் கூடங்குளம் அணு உலை ஆகியவற்றுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது.
2004 - தேர்தலுக்குப்பின் பெரும்பான்மையை நிரூபித்தபின், காங்கிரஸ் கட்சியின் சார்பாக, சோனியா காந்தியை பல எதிர்ப்புகளின் மத்தியிலும் பிரதமராக்க தயாராய் இருந்தது. ஆனால் சோனியா, மன்மோகன்சிங்கை வழிமொழிந்தது, கலாமுக்கே ஆச்சரியம். சோனியா காந்தி உரிமை கோரியிருந்தால், அரசியல் சாசனப்படி, அவரை அனுமதிப்பதைவிட கலாமுக்கு வேறு வழி இருக்கவில்லை.


Monday, July 27, 2015

பரதேசியின் படை !!!!!!

மாற்றாரை மாற்றும் படை !!!!!!!


கடந்த வாரம் ஜூலை 25&26 தேதிகளில் மேரிலாண்டில் நடைபெற்ற 7ஆம் உலகத்தமிழ் ஒற்றுமை மாநாட்டில்  நடந்த கவியரங்கில் அடியேன் கலந்து கொண்டு வாசித்த கவிதையை ( ?)  கீழே கொடுத்துள்ளேன்.
தலைமை : பெருங்கவிக்கோ வாமு சேதுராமன்
வரவேற்புக்கவிதை : முனைவர் பேராசிரியர் வாமு சே ஆண்டவர் ( பச்சையப்பன் கல்லூரி )
தொடங்கி வைத்தவர் :கவிச்சிங்கம் கண்மதியன் ( தமிழக   அரசு பாவேந்தர் பரிசு பெற்றவர் )
முன்னிலை : தவத்திரு சீரடிபாபா ரவிச்சந்திரன் ( தலைவர் உலக அன்னதான மையம் )
என்னுடன் கவிதை வழங்கியோர்
1) மலை அன்பன் கவிஞர் உதயம் உலோகேந்திரலிங்கம்-நிறுவனர் உதயம் இதழ் , கனடா
2)மாவிலி மைந்தன் சண்முகராசா ( தலைவர் கனடா தமிழ்க்கவிஞர் கழகம் )
3) கவிஞர் சுதந்திரன் தேவகி ( மலேசியா)
4)  கவிஞர் பன்னீர்செல்வம் ( பாரதிதாசன் பரம்பரையில் வந்தவர்)
5)கவிஞர் மகேந்திரன் ( வாஷிங்டன் தமிழ் சங்கம்
6) கவிஞர்.தமிழ் மணிகண்டன் , மேரிலாந்து 






மாற்றாரை மாற்றும் படை !!!!!!!

மூச்சுக்கொடுத்த இறைவனுக்கும் - தமிழ்ப்
பேச்சுக் கொடுத்த அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த அவைக்கும் சான்றோர்க்கும்
வணக்கங்கள் பல

வணக்கம் என்ற சொல்லே
வழக்கொழிந்து போனதோ என்கையில்
வணக்கம் வணக்கம் என்று இங்கு
வாயாரச் சொன்னதை
காதாரக் கேட்டு
களி உவகை கொண்டேன்
மாநாட்டுக்கு வணக்கம் .

இலக்கியத்தில் நான்
வெறும் சிசு
என்றெண்ணியிருந்தேன்
இங்கு வந்து பின் அறிந்தேன்
இலக்கியத்தில் நான்
சிறு கொசு !!!!

கவிக்கோ முன்னால்
நான் வெறும் பெயர்க்கோ !
(பெயர்க்கு மட்டும் அரசன்  
என் பெயர் ராஜசேகர் )

கவிச்செருக்கு
என்பார்கள்
இன்றுதான் கண்டேன்
அதனை இவரின் மீசை முருக்கில்

மீசைக்காரர் தான் இவர் - ஆனால்
பழகியவர்க்குத் தெரியும் இவர்
ரொம்ப பாசக்காரர்.
கோபம் வந்தால் சத்தமும் போடுவார்
கொஞ்சுதமிழ் பேசினால் முத்தமும் கொடுப்பார்

ஐயாவுக்கு வணக்கம் .

சுய அறிமுகம்
சங்கம் வளர்த்த
மதுரை மாநகரில்
அங்கம் வளர்த்தவன் நான்.

என்னை வளர்த்த
சென்னை மாநகரில்
அறிவு வளர்த்தவன் நான்!

பிழைப்புக்காக
பிறதேசம் வந்த ஒரு
பரதேசி நான்.

மாற்றாரை மாற்றும் படை,
எந்தப்படை இது?
யார் நடத்துவார்  இதை?

அகிலத்தை ஆளமுயன்ற
அலெக்சாண்டரின் படை
அழிந்து போனது.

நேரில் எதிரே மோதினால்
பாரில் யாரும் இணையில்லை
என்றிருந்த
நெப்போலியனும்
நீரின்போரில் (Waterloo யுத்தம்)
நிர்மூலமானான்.


மண் காக்க
மானம் காக்க
மொழி காக்க போரிட்ட
புலிகளும்
பலிகள் ஆனார்.

தமிழன் என்றொரு படை
தனித்துவம் தான் அதற்கு தடை
(தனித்துவம் என்று நான் சொன்னது
தமிழர் தனித்தனியாக ஒற்றுமை இல்லாமல் இருப்பது)

சோழனின் பெருமையை கொண்டாடும் போது
அவன் அழித்தது சேர பாண்டிய தமிழர்கள்தானே !
பாண்டியன் வெற்றியை பீற்றும் போது
தோற்றுப்போனவன் சேரசோழ தமிழன்தானே.

தமிழனை தமிழன் தோற்கடித்ததற்கு
தற்பெருமை எதற்கு?

மூவரும் ஒன்றாக இருந்திருந்தால்
மூவுலகை ஆண்டிருக்கலாமே?
அது அன்றுமில்லை
இன்றுமில்லை

ஜாதியால் பிரிந்தவர் பாதி
மதத்தால் முறிந்தவர் மீதி
ஊரினால் கூட பிரிந்திருக்கிறோம் என்று 
கூறினால் என் கூற்றை மறக்க இயலுமா? (வேலூர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி)

இதற்கெல்லாம்
காரணம் ஒன்றை
கூறணும் என்றால்
செருக்கு என்ற
கிறுக்குதானே.

தாடிக்காரரிடம்      
தஞ்சமடைந்தால்   
வினாக்களுக்கு
விடை கிடைக்கும் 

வள்ளுவரிடம் சென்றவர்
அள்ளுவர்
அறிவுதனை.

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை

புதுப்படை ஒன்று
புறப்பட்டு வரவேண்டும்

அது
துப்பாக்கி தூக்கும்
துன்பப் படை அல்ல
கத்தியைத் தூக்கும்
கயமைப்படை அல்ல
அரிவாளைத்தூக்கும்
அறிவிலிப் படை அல்ல

அது
பேனாவைத்தூக்கும்
பெரியவர் படை
ஆன்மாவை எழுப்பும்
ஆன்றோர் படை
பிரிவெனும்
சாக்காட்டை ஒழிக்கும்
சான்றோர் படை


துணிவென்னும்
ஆயுதத்தை
தூக்கிவரும் படை

பணிவெனும் பண்பை
பகிர்ந்தளிக்கும் படை
ஏனெனில்
பணிவுதானே இங்கு
துணிவு

பணிவினால் பகைவரை
நண்பராக்கி
மாற்றங்களை தடுக்கும்
மாற்றாரை
மாற்றும் படை

போர்ப்பரணி பாடி
புறப்படும்
அந்தப்படை - இங்கிருந்து

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்,
வாழிய பாரத மணித்திருநாடு
நன்றி வணக்கம்.


Thursday, July 23, 2015

ஈரானுக்கு ஒபாமா வைத்த செக் !!!!!!!!!!!!

ஈரான் ஒப்பந்தம் 

உலகத்தில் சில நாடுகள் எப்போது என்ன செய்யும் என்று யூகிக்கவே முடியாது. அவற்றுள் சீனா, வட கொரியா,பாக்கிஸ்தான், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவை தலையானவை. இந்த நாடுகளையும் அதன் தலைவர்கள் அல்லது ராணுவத்தையும் நம்பவே முடியாது.
கடந்த வாரத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து ஒபாமா அவர்களிடமிருந்து எனக்கு ஈமெயில் வந்தது. ஏதாவது முக்கிய நிகழ்வுகள் இருந்தால் அவ்வப்போது அவர்களிடமிருந்து ஈமெயில் வரும் இப்போது வந்தது ஈரான் ஒப்பந்தம் பற்றி. இதனைப்பற்றி கடந்த சனியன்று வானொலியிலும் உரையாற்றினார். ஒவ்வொரு சனியன்றும் வானொலி மூலம் நேரடியாக மக்களிடம் பேசும் வழக்கத்தை தாம் முதல் முறை பதவியேற்றதிலிருந்து  வழக்கமாக வைத்துள்ளார்.
நான் அறிந்து கொண்ட அந்த ஈரான் ஒப்பந்தத்தைப்பற்றி இதோ சில குறிப்புகள் உங்களுக்காக.
1.    இனிமேல் ஈரான் செறியூட்டப்பட்ட யுரேனியத்தையோ, அணுகுண்டு தயாரிக்க உதவும் புளூட்டோனியத்தையோ தயாரிக்க முடியாது.
2.    தன்னிடமுள்ள மொத்த சேமிப்பில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை 98 சதவீதம் குறைக்க வேண்டும்.
3.    யுரேனியம் தயாரிக்கப் பயன்படுத்தும் இயந்திரங்களில் மூன்றில் இரண்டு பகுதியைப் பிரித்து தனியே வைத்து விட வேண்டும். அது உலக நாட்டாரின் கண்காணிப்பில் இருக்கும்.
4.    ஈரான் 'அரக்' என்னுமிடத்தில் உள்ள தன் நியூக்ளியர் ரியாக்டரை, இனிமேல் அணு ஆயுதம் தயாரிக்க முடியாதபடி மாறுதல் செய்யும்.
தன்னிடமுள்ள மொத்த யுரேனியத்தின் மூலம் ஈரான் குறைந்தபச்சம் 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியுமாம். ஆனால் தற்போது ஒப்பந்தம் அமுல் படுத்தியபின் ஒரு ஆயுதம் தயாரிக்கக்கூட அவர்களிடம் மூலப் பொருள்கள் இருக்காது.
மேலும் இந்த மின்னஞ்சல் சொல்கிறது, இது பரஸ்பர நம்பிக்கையின் மூலம் ஒத்துக்கொண்ட ஒப்பந்தமில்லை. ஒவ்வொரு படியிலும் நடக்கும் பரிசோதனையின் அடிப்படையில் ஊர்ஜிதம் செய்யப்படும் வகையில் அமைந்ததாகும்.
முதன்முறையாக, அமெரிக்கா இந்த ஒப்பந்த நடைமுறையை மேற்பார்வை இடும். அகில உலக சோதனையாளர்களும், ஈரானின் நியூக்ளியர் திட்டத்தை கண்காணிப்பார்கள்.
ஈரான், ஒப்பந்தத்தை மீறி ரகசியமாகச் செயல்பட்டால் இந்த உலக சோதனையாளர்கள் அதை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்களாம்.  
ஈரான் இதனை முழுமையாகக் கடைப்பிடிக்கத்துவங்கும்போது, அதன் மீது தற்போதுள்ள  பொருளாதாரத்தடைகள் படிப்படியாக விலக்கிக்  கொள்ளப்படும் .
அதுமட்டுமல்லாமல், இதனை செயல்படுத்த தடையாக அமெரிக்க சட்டங்கள் இருக்குமென்றால், அதிபர் தன்வீட்டோ பவரை பயன்படுத்துவேன் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.
ஒபாவின் பதவி காலத்தில் இது ஒரு சாதனையாக அமையும் என்று நம்பப்படுகிறது.


எல்லாம் சரிதான், ஆனால் ஈரானை நம்ப முடியுமா?
 “என்னது ஒபாமா உனக்கு  ஈமெயில் அனுப்பினாரா  என்னடா கதைவிடுற ?. “
“டேய் மகேந்திரா, வந்துட்டியா , சம்மன் இல்லாம ஆஜர் ஆகிறது நீ ஒருத்தன் தாண்டா. சொல்றேன் கேளு, அவர் அதிபர் பதவிக்கு போட்டியிடும்போது அந்த கேம்பெய்னில் நானும் இணைய வழி மூலமாக இணைந்தேன். அதிலிருந்து அவருடைய ஈமெயில் லிஸ்ட்டிலும் ,வெள்ளைமாளிகையின் ஈமெயில் லிஸ்ட்டிலும் நான் இருக்கிறேன்.
“சரிடா என்னவோ சொல்ற ஒண்ணும் விளங்கல”.

முற்றும்.

Email proof is given below

Tuesday, July 21, 2015

பரதேசியின் செல்ஃபி புள்ள !!!!!!!!!!!!!!!!!

          என்னை அந்த கிளியோபாட்ரா குறுகுறுவென்று பார்த்தாள். ஒரு கறுப்பின மன்னிக்க ஆப்பிரிக்க அமெரிக்கப்பெண் எதற்கு என்னை இப்படிப்பார்க்கிறாள் என்று ஆச்சரியமாகவும் அதே சமயத்தில் கவலையாகவும் இருந்துச்சு.
       பிரிக்காத கைக்கட்டுடன் இருப்பதால் ஒருவேளை பரிதாபமாக பார்க்கிறாளோ, இல்லை சட்டை பட்டன், இல்லை பேண்ட் ஜிப், அட எல்லாம் சரியாத்தானே இருக்கு. ஒருவேளை என் தலை கலைஞ்சிருக்கோ? என்னன்னே தெரியலயே ?.
மதுரைப் பக்கம் கிராமங்களில், தலையில் தட்டக்கூடாது. "தாயில்லாப்பிள்ளையா தலையில் தட்ட", என்பார்கள். எனக்கும் தலையில் தொட்டா சுள்ளென கோபம் வரும். ஏன்னா என்னோட கோர முடியை ஈர சிக்கினால் வார முடியாமல் கஷ்டப்பட்டு வாரி வரும்போது, யாராவது தொட்டால் கலைஞ்சிடும். அப்புறம் அதை ஃபிக்ஸ் பண்ண கனநேரம் ஆகும்.அதனால தலையைத் தொட்டா எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது.
ஒரு கையால் தலையை சரி பண்ண முயற்சி பண்ணதில் மேலும் கலைந்து போனதோ என்றும் சந்தேகமா இருந்தது.
சப்வேயில் அன்னிக்கு சரியான கூட்டம். கையில் இடித்தால் என்னாகும் என்ற பயம் இருந்தாலும் ஆஃபிசில் ஒரு கான்ஃபிரஸ் கால் செய்யணும்கிற துடிப்போட உள்ளே ஏறிட்டேன்.
என்னுடைய கட்டுப்போட்ட கையைப் பார்த்தோஅப்பாவியான பரிதாப முகத்தைப் பார்த்தோ ஒரு பெண் எழுந்து இடம் கொடுத்தது. நன்றி சொல்லி ஒரு ஸ்மைலியை முகத்தில் போட்டுவிட்டு இடத்தில் அமர்ந்தேன்.

எதிர்வரிசையில் பல வயதுப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நடுவில் ஒரு கிளியோபாட்ரா இருந்துச்சு. அதுதான் என்னைப்பார்த்து சிரிச்சுச்சு.
என்னவா? இருக்கும்?(சே ஒரு கண்ணாடி இருந்தா முகத்தைப் பார்த்து என்னன்னு கண்டுபிடிச்சுரலாமேன்னு தோணிச்சு. உடனடியாக ஒரு யோசனை வந்துச்சு, "நம் மொபைல் போனில்தான் செல்ஃபி" இருக்குதே. அதில பாத்தா முகம் தெரியப் போறதுன்னு நெனைச்சு ஒத்தக்கையால கொஞ்சம் சிரமப்பட்டு போனை வெளியில் எடுத்தேன்.
கொஞ்ச நேரம் நோண்டிக் கண்டுபிடிச்சு கேமராவை ஆன் செஞ்சேன். எதிரில இருந்த எல்லாக்காலும் தெரிஞ்சுச்சு, கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தேன். எதிரில இருந்த கிளியோபாட்ரா என் செல்போனுக்குள் வந்துருச்சு. ஐயையோன்னு நெனைச்சு, அதனை செல்பி மோடுக்கு மாத்தினேன். அதுக்குள்ள பக்கத்துல உட்கார்ந்திருந்த இன்னொரு நடுத்தர வயதுப் பொண்ணு என்னைப் பார்த்து முறைச்சுது. என்னடாது ஆளாளுக்கு முறைக்கிறாங்கன்னு நினைக்கும்போது, ந.வ.பொ "இப்ப போட்டோ எடுத்தியான்னு" கேட்டுச்சு. எனக்கு தூக்கி வாரிப் போட்டுருச்சு.
இல்லையேன்னு சொன்னேன், உடனே நான் கொஞ்சமும் எதிர்பாக்காத நேரத்தில், எதித்த சீட்டில இருந்த கிளியோபாட்ராவைப் பார்த்து, "உன்னை இவன் போட்டோ எடுக்கிறான்”,னு சொல்லிவிட்டுரிச்சு.

கிளியோபாட்ராவின் புன்னகை மாறாமல் இருந்தது. ஆனா அதன் பக்கத்துல இருந்த ரெண்டு சீனியர் சிட்டிசன்களும் என் கூட சண்டை போட ஆயத்தம் ஆயினர்.
"அடுத்தவர்களை அவர்கள் அனுமதியில்லாமல் ஃபோட்டோ எடுப்பது சட்டவிரோதம் தெரியுமா?"
"நான் ஃபோட்டோ எடுக்கவில்லை".
"எத்தனைபேர் இப்படி அலைகிறீர்கள்"
"நான் ஃபோட்டோ எடுக்கவில்லை"
“எதற்காக ஃபோட்டோ எடுத்தாய்?”
“நான் ஃபோட்டோ எடுக்கவில்லை”.
"போலிசைக் கூப்பிடு"
“நான் ஃபோட்டோ எடுக்கவில்லை”.
-இத்தனை கன நேரத்திலும் கிளியோபாட்ரா இலேசாக இதழ் பிரித்து, முல்லை விரித்து புன்சிரித்து மாறாமல் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நான் ஏசியிலும் வியர்த்து கைக்குட்டையை எடுத்து வியர்வையோடு வழிந்த பயத்தையும் துடைக்க முயன்று தோற்றேன். பேசாமல் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிடலாமா என்று நினைத்தேன்.
“நீ எந்தத் தப்பும் செய்யவில்லை, நீ இறங்கத் தேவையில்லை பயந்து ஓடாதே, துணிந்து நில்”, என்று சொன்னது என் மனசாட்சி. அவள் கண்களும்தான்.
பாதிக்கப்பட்ட (?) பெண்ணே சும்மா இருந்தால் மற்றவர்கள் கொஞ்ச நேரத்தில்  அடங்கினார்கள் அல்லது அடுத்தடுத்த ஸ்டாப்புகளில் இறங்கி விட்டார்கள்.
கிளியோபாட்ரா மட்டும் என்னை தொடர்ந்து குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்க, நான் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தேன்.
ஒருவேளை எனக்கே தெரியாமல் செல்ஃபி எடுக்கும் முயற்சியில் அந்த குல்ஃபியை, சேசே அந்தப் பெண்ணை எடுத்துவிட்டேனோ என்று நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தேன். மீண்டும் செல்போனை எடுத்துப் பார்க்க தயக்கமாயிருந்தது.
லெக்சிங்டன் அவென்யூவில் அந்த செக்சிங்டன் இறங்கும் போதும், என்னை பார்த்த மாதிரியே போகும் போது எனக்கு வேர்த்த மாதிரியே இருந்தது.
தகறாறு செய்த அனைவரும் ஒவ்வொருவராக இறங்கிச் சென்றுவிட மெதுவாக செல்போனை எடுத்து கேலரிக்கு சென்று போட்டோ இருக்கிறதா என்று பார்த்தேன்.
ஃபோட்டோ 
 இருந்தது.
 ஆனால்
 ஒரு
 ஐந்து
 ஜோடி
கால்கள்
மட்டும்
விதவிதமான 
சைஸில் !!!!!!!!!

முற்றும்.


ஒரு முக்கிய  அறிவிப்பு :

நண்பர்களே, 
பன்னாட்டுத் தமிழ் மன்றமும் , உலகத்தமிழ் அறக்கட்டளையும்( www.worldtamiltrust.org ) இணைந்து நடத்தும் " உலகத்தமிழர் ஒற்றுமை மாநாடு" வரும் ஜூலை மாதம் 25 . 26 தேதிகளில் , மேரிலாண்டில் இருக்கும் ஹோவர்ட்  கவுண்டியில்   உள்ள ஹாலிடே   இன் கொலம்பியாவில் நடக்க இருக்கிறது .பெருங்கவிக்கோ வாமு சேதுராமன், அவர்கள் தலைமையில் உலகமெங்கிலும்   இருந்து  தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள் .இவ்விழாவில் பட்டிமன்றம் மட்டும் கவியரங்கத்தில் அடியேன் கலந்து கொள்கிறேன்.அருகில் வசிக்கும் ஆர்வமுள்ள நண்பர்கள் கலந்து கொள்ள  அன்புடன் அழைக்கிறேன் .