Friday, October 30, 2015

வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா?நட்பா ? பகுதி 2

Add caption

கடந்த  அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் நியூயார்க்கில் இலங்கைத்தமிழர் நடத்திய  ‘ஆனந்தம்’ நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்கு பெற்ற பட்டிமன்றம் சிறப்பாக   நடந்து முடிந்தது .அதில் அடியேன் சொன்ன தீர்ப்பு இது.
இருபுறத்தாரும் பேசியதை கேட்டுக் கொண்டிருக்கும் வரையில் கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் இப்போது தீர்ப்புச் சொல்ல நிற்கும் போது தான் திண்டாட்டமாக இருக்கிறது. என்ன செய்வது ஆரம்பம்னு ஒண்ணு இருந்தா முடிவுன்னு ஒண்ணு இருந்து தானே ஆகும்.  
            Man is a social animal   என்று சொல்வார்கள்.  உற்றார்  உறவினர் சுற்றம் நட்பு இவையெல்லாம்  வாழ்க்கையில் அவசியங்கள் தான். கூடி வாழ்ந்ததால் கோடி நன்மைன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.
ஆனால் நம்ம  அனுபவம் அப்படியா இருக்கு? நம்ம சுற்றத்தார் அப்படியா நடந்துக் கிட்டாங்க. நாம அவங்களுக்கு உதவி செய்றவரை எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்துச்சி. ஆனால்  நமக்கு கஷ்டம் வந்து நாம உதவின்னு நிக்கும் போது சுற்றம் முழுசும் காணாமப்போயிருச்சி. அட  பண உதவி வேணாம் , ஆறுதலா இரண்டு வார்த்தை? அதான் கண்ணுக்கு  எட்டின வரைக்கும் காணாமப்போயிட்டாங்களே.
நம்ம வீட்ல ஒரு நல்லது பொல்லாததுக்கு  கூப்பிட்டா நாம நெனைக்கிறது. “இவங்களை கூப்பிட்டுத்தான் ஆகனும், ஆனா வராட்டி நல்லதுன்னு நெனைச்சிருக்கீங்களா. ஏன்னா குறை சொல்றது சுற்றம்தான், கோபிக்கிறது சுற்றம்தான், பிரச்சனை பண்றது அவங்கதான். Invitationல பேரு இல்லை, நேர்ல வந்து கூப்பிடல, பந்தியில கவனிக்கல, வாங்கன்னு கூப்பிடல இப்படி எத்தனை பிரச்சினை பண்ணுவாங்க. ஆனா நட்பு, “டேய் நேரில வரமுடியல இன்விடேஷனும் அனுப்ப முடியல, கண்டிப்பா வந்துரு”. வந்து சொல்லாமயே எடுத்துப்போட்டு வேலை செய்றது நட்புதான்.
நாம வசதியாக இருக்கும்போது, நம்ம சுற்றம் சொல்வாங்க அவங்க எங்களுக்கு நெருங்கிய சொந்தம்னு, நாம கஷ்டத்துல இருக்கும்போது அவங்க தூரத்து உறவு ஆயிருவாங்க. 
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைன்னு ஒரு பழமொழி இருக்கு. இதுக்கு அர்த்தம், தப்புக்கண்டுபிடிச்சுக் கொண்டேயிருந்தா சுற்றமாக யாரையும் சேர்க்க முடியாதுன்னு. ஆனா நான் நினைக்கிறேன் அதோட அர்த்தம் ஒரே ஒரு நல்ல சுற்றத்தைக் கூட பாக்க முடியாதுன்னு.
பழைய கால புராணத்தில பாத்தோம்னா:
மகாபாரதக் கதையில,
துரியோதனன் கெட்டவன்தான். சகோதரத்துரோகம் செய்தவன்தான்.  ஆனா நட்புக்கு எப்பவுமே துரோகம் செஞ்சதில்லை. அதனாலதான் கர்ணன் அவனுடைய உற்றம் சுற்றத்தை விட்டுவிட்டு தன் நட்புக்காக உயிரைக் கொடுத்தான்.  ராமாயணக் கதையில, ராமனை அவனுடைய உறவும் சுற்றமும் கைவிட, அவனுக்கு நட்பாக இருந்த குகனும் சுக்ரீவனும் தான் உதவுறாங்க.
இயேசுநாதர் கூட தன்னை உண்மையாய் பின்பற்றவங்களை , நண்பர்கள் என்றுதான் அழைத்தார். 
நம்ம நெருங்கிய நட்பைத்தான், நாம சொந்தமாக நினைச்சு மாப்ளை மச்சின்னு கூப்பிடுறோம். சொல்லும்போது  ஞாபகம் வருது காலேஜ்ல படிக்கும்போது என் நண்பன் ஒருவன் என்னை மாப்ள மாப்ளன்னு கூப்பிடுவான். ஒரு நாள் சொன்னான், டேய் Alfy உன்னை நான் மாப்ளேன்னு கூப்பிட்டு பேசும் போது எவ்வளவு நெருக்கமா இருக்கு. நீயும் அதே மாதிரி இருக்க, நம்ம ராகவனை மாப்ளன்னு கூப்பிட்டதுக்கு அப்படிக் கூப்பிடாதன்னு சண்டை போடுறான் ஏன்னே தெரியலன்னான். மாப்பிள்ளை அது ஒண்ணுமில்ல, எனக்கு தங்கச்சி எதுவுமில்ல, அவனுக்கு ஒரு அழகான தங்கச்சி இருக்கு அதனாலதான்.  
ஒரு நல்ல அப்பாவை பிள்ளைக எப்படி சொல்வாங்க எங்கப்பா எனக்கு ஒரு friend மாதிரிடா, என் அம்மா எனக்கு ஒரு நல்ல தோழி மாதிரி, உண்மையான நெருக்கமான உறவைக்குறிக்க நட்பு என்றுதான் சொல்றோம்.
Add caption

இன்னிக்கும் எனக்கு ஏதாவது மனக்கஷ்டம்னா, என் நண்பர்கள் யாராவது ஒருவனுக்கு போனைப் போடுவேன். என்னடா மாப்ள எப்படி இருக்கன்னு கேட்பான் ஒண்ணுமில்லடா மச்சி, சும்மாதான் கூப்பிட்டேன். அட பரவாயில்லை சொல்லு உன் குரலே சரியில்லைடா.
- இந்த ரெண்டு வார்த்தை போடா வாடான்னு பேசிட்டு துயரத்தை இறக்கிவிட்டுட்டா மனசு கலகலன்னு ஆயிரும். ரெண்டு பழைய கதையை பேசி வாய்விட்டு சிரிச்சிட்டா, எல்லாத் துயரமும் மறந்துபோயிரும்ல.

கடைசியா ஒரு மூணு விஷயத்தை சொல்லி முடிக்கிறேன்.
1.    சுற்றம் எப்பொழுதும் நம்மிடம் எதிர்பார்க்கிறது, ஆனா நட்பு எப்பொழுதும் எதிலும் எதையும் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை.
2.    சுற்றம் என்பது சூழ்நிலைக்கேற்ப மாறுவார்கள். ஆனா நட்பு என்னைக்கும் மாறாதது.
3.    சுற்றத்திடம் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாது, நட்பிடம் எதையும் தைரியமாக பகிர்ந்துகொள்ளலாம்.
எனவே வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது என்றும் வாடாத நட்பூவே என் தீர்ப்பூ என்று சொல்லி வாய்ப்புக் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி அமைகிறேன், நன்றி வணக்கம்.


முற்றும்.

Tuesday, October 27, 2015

வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா ?நட்பா ?


         கடந்த  அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் நியூயார்க்கில் இலங்கைத்தமிழர் நடத்திய  ‘ஆனந்தம்’ நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்கு பெற்ற பட்டிமன்றம். சிறப்பாக   நடந்து முடிந்தது .அதில் அடியேன் பேசிய முன்னுரை இது.

மூச்சுக் கொடுத்த இறைவனுக்கும், தமிழ்ப்
பேச்சுக் கொடுத்த என் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த சபைக்கும் என்
வணக்கங்கள் பலப்பல

A

ஆனந்தம் விழாக்குழுவினர் குறிப்பாக கவிஞர் சிவபாலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.இங்கு கூடியிருக்கும், அனைத்து உறவுகளுக்கும் நட்புகளுக்கும் என் வணக்கம். ஆனந்தம் நிகழ்ச்சியின் மூலமாக உங்களை மீண்டும் சந்திப்பதில் ஆனந்தம்.

பட்டிமன்றத் தலைப்பு - வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பது சுற்றமா? இல்லை நட்பா?.
நம்மூரில் திருமணத்திற்கு கொடுக்கும் பத்திரிகையில், ஒரு வரி இருக்கும். எனக்கு ரொம்பப்பிடித்த வரி அது. “சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறோம். தங்கள் நல்வரவை விரும்பும் இருவீட்டார்”,  என்று போட்டிருப்பார்கள். அதுவும் முஸ்லீம் வீட்டு பாய் கல்யாணம்னா, நம்ம நட்பூஸ்  கூப்பிடாமயே கூட வந்துருவாங்க. ஓசி பிரியாணி கிடைக்கும்ல.
ஒரு திருமணம் அல்லது எந்த ஒரு மங்கள நிகழ்வும் மகிழ்ச்சியாக நடைபெற வேண்டுமென்றால், ஒரு புறம் சுற்றம் இருக்க வேண்டும் மறுபுறம் நட்பு இருக்க வேண்டும். இந்த இரண்டும் சூழ்ந்திருந்தால் மகிழ்ச்சிதான். யோசித்துப் பாருங்க உங்க கல்யாணம் அப்படித்தானே நடந்தது.
ஆனா இந்த ஊர்ல அப்படியா நடக்குது, நாலு பேருக்கு நன்றி, அந்த நாலுபேருக்கு நன்றி. கல்யாணம்னாலும் அந்த நாலு பேர்தான் கருமாதினாலும் நாலுபேர்தான்.
என்னனு கேட்டா “பட்ஜெட் கழுதைன்னு”, சொல்றான் என் நண்பன். என்ன கழுதையான்னு கேட்டேன் ?. ஆமாடா பட்ஜெட் இடிக்குது, பட்ஜெட் கடிக்குது, பட்ஜெட் உதைக்குதுனு சொல்றான். நல்லவேளை பட்ஜெட் பொண்டாட்டி மாதிரின்னு சொல்லல ஏன்னா அதுக்கும் நல்லாவே பொருந்தும்.


ஒரு நீண்ட கால நண்பனுக்கு போன் செய்தேன். அவன் சொன்னான், “மன்னிச்சுக்கடா உனக்கு உள்ளத்தில் இடம் இருக்கு. ஆனா என் இல்லத்துல இடமில்லை”.என்னாச்சு”,னு கேட்டேன். “மனைவி வந்தாச்சு, சுற்றமும் நட்பும், நொந்தாச்சு”,னு சொன்னான். அது சரிதான் மனைவி வந்ததும் முதல்ல கட்பண்றது அதத்தானே. “என்னடா Arranged Marriageல தான் இந்தப்பிரச்சனை. நீ காதல் கல்யாணம்தானே. அவள் உன் தோழிதானேன்னு”, சொன்னேன். “ ஆமாடா  அதையேன் கேட்கிற , கல்யாணத்துக்கு முன் தோழிதான் .ஆனா இப்ப காளி ஆயிட்டா”ன்னு சொன்னான். அதோடு காதல் கல்யானம்னாலே தோல்விதானேனு சொன்னான் .அதாவது காதல் பண்ணிட்டு கல்யாணம்  நடக்கலை னாலும் தோல்வி, நடந்தாலும் தோல்விதாணு சொன்னான். எனக்கு அதைப்பத்தி அவ்வளவா தெரியாது.நான் அர்ரெஞ்சிடு மேரேஜ்.
நம்மூர்ல ஒரு நம்பிக்கை உண்டு, காக்கா கத்துனா உறவுக்காரங்க வருவாங்கன்னு, ஒரு பையன் அவங்கப்பாவை  கேட்டானாம், “ஏப்பா காக்கா கத்துனா உறவுக் காரங்க நிசமா வருவாங்களா”,ன்னுஅப்பா சொன்னாரு, “ஆமடா காக்கா கத்துனா உறவுக்காரங்க நிச்சயமா வருவாங்க”. “அப்படியாப்பா அப்புறம் எப்ப போவாங்கப்பா?” “அதுவா உங்க அம்மா கத்துனா போயிருவாங்க”.
தூர இருந்த சேர உறவுன்னு சொல்வாங்க அது உறவுக்கு மட்டுமல்ல நட்புக்கும் பொருந்தும்னு சொல்றாங்க.
இப்படி உறவும் நட்பும் இப்ப பிரச்சினையா இருக்கு.
ஆனா நம்ம தலைப்பு, வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா? நட்பா? வாங்க உங்களோடு சேர்ந்து நானும் கேட்க ஆவலாயிருக்கிறேன்.
தீர்ப்போட திரும்பி வருவேன், வணக்கம்.


தீர்ப்பு அடுத்த வெள்ளிக்கிழமை  வெளி வரும்

Friday, October 23, 2015

புலம்பல்கள் ஓய்வதில்லை !!!!!!!!!!!!!!!!

Fall Foliage at its Peak in Upstate New York (visitadirondacks.com)
Fall in New York
நியூயார்க்கில் இலையுதிர் காலம் ஆரம்பித்துவிட்டது, குளிர் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஜாக்கெட்டுகளையும், காதடைப்பான்களையும், கையுறைகளையும் தேடியெடுத்து தூசிதட்டி வைத்தாயிற்று. பரதேசியின் புலம்பல்கள் ஆரம்பம்.
இலையுதிர் காலம்
1.    ரூத் இந்த லைட் ஜாக்கெட்டை எங்க எடுத்து வச்சிருக்க? இடம் மாத்தி வைக்காதேன்னு உனக்கு எத்தனைமுறை சொல்றது?
2.    லைட் ஜாக்கெட்டில் தானே என் காதடைப்பானை வச்சிருந்தேன்? எங்க போச்சு? ரூத் நீ எதும் எடுத்தியா?
3.    என்னடாது அவரசத்துக்கு வின்ட்டர் சாக்ஸ் எதையுமே காணல, ரூத் துவைக்கச் சொன்னேனே என்னாச்சு?
4.    என்னடாது இந்த தெர்மல் மறுபடியும் தொளதொளன்னு ஆயிப்போச்சு.போனதடவை மீடியம் தான வாங்கினேன். இனிமே ஸ்மால் சைஸ் வாங்கனுமோ, உடம்பு சின்னதாகப் போயிட்டே இருக்கே.
5.    இந்த ஜாக்கெட்டை விண்டருக்குள்ளே மாத்திரனும், கொஞ்சம் பழைய வாடை அடிக்குது.
6.    இந்த சிலுசிலு காத்து ஏன் இப்படிக் கொல்லுது?
7.    என்னடாது இப்பதானே அள்ளிப்போட்டோம்? இந்த இலைகள் இப்படி கொட்டோ கொட்டுனு கொட்டித் தொலையுதே.
8.    இந்த மரம்லா யாராவது வேணும்னு கேட்டோமா?
9.    இந்த பழுப்பு இலையை பெருக்கிப்பெருக்கியே அலுப்பு ஆயிப்போச்சே உடம்பு?
10. என் மனைவி, 2 பொண்ணுக மூணும் இதே சீஷனில் பிறந்து வச்சிருக்கு, பிறந்த நாளுக்கு எவ எவ என்னென்ன கேக்கப்போறாளோ ?.
-இந்தப்புலம்பல் இலையுதிர்காலத்தில் மட்டுமா? இல்லை நாலு சீசனிலும் நல்லாவே வந்துருது பரதேசிக்கு.
குளிக்கால புலம்பல்கள்:
Winter in New York
1.    என்னடாது இந்த வருஷம் குளிர் சீக்கிரமாவே வந்துருச்சு கொஞ்ச நாள் கழிச்சு வந்தாத்தான் என்ன?
2.    இந்தக்குளிர் காலம் இலையுதிர்காலத்துல பாதியை எடுத்துக்கிது, வசந்த காலத்திலயும் பாதியை எடுத்துக்குது, ரொம்ப அநியாயம்.
3.    அமெரிக்கால எத்தனை ஊரு நல்லா இருக்கு, ஒரு கலிபோர்னியா, ஒரு ஃப்ளோரிடா, ஒரு டெக்சாஸ்னு போகாம, இப்படி வந்து நியூயார்க்கில மாட்டிக்கிட்டு அவஸ்தைபடறேனே.
4.    இந்த ஷூவையெல்லாம் மாத்தனும், இந்தத்தடவை காசு போனா போறதுன்னு நல்ல பூட்ஸ் வாங்கனும்.
5.    திரும்ப விழுந்துவச்சு, இன்னொரு சர்ஜரியை உடம்பு தாங்கவே தாங்காது.
6.    சே குளிர் கூடப்பரவாயில்லை, ஸ்நோ ஏந்தான் கொட்டோ கொட்டுனு கொட்டுதோ.ஸ்நோ விழும்போது நல்லாதான் இருக்குது, ஆனா அடுத்த நாள் உறைஞ்சு போய் நொடியில வழுக்கிவிட்டு அடியில அடிபட்டுறுது சேச்சே
7.    ஸ்நோ தள்ள மெஷின் வாங்கனும், ஸ்நோ கரைக்கிற உப்பு வாங்கனும், ஐஸ் உடைக்கற ஷவுல் வாங்கனும்.
8.    இப்படி ஒரு நொம்பலப்புழப்பு பொழைக்கனுமா? பேசாம ஊர்லயே இருந்திருக்கலாம் போல.
9.    இந்தக் குளிர்காத்து அப்படியே எழும்பைத் துளைக்குதே, இயேசுவே கையெல்லாம் மரத்துப்போச்சே, கால்விரல் விரைச்சுப் போச்சே.
10. இந்த சூரியன் எதுக்குத்தான் டெய்லி  வர்றானோ ஒரு பிரயோஜனம் இல்லை.ஐயையோ எப்பதான் சம்மர் வருமோ?

வசந்த காலம்:
Spring in New York
1.    வசந்த காலம் வந்துருச்சா? போச்சு போ, இப்ப என் மனைவி ஆரம்பிச்சுருவா, புல் வாங்கனும் பூச்செடி வாங்கனும்னு.
2.    ஹோம் டிப்போ கார்டில போன வருஷம் வாங்கினதையே இன்னும் கட்டிமுடிக்கல, அதுக்குள்ள அடுத்த சீசன் வந்துரிச்சே.
3.    ஐயோ ஐயோ இந்த உரம் என்ன விலை விக்குது.
4.    இனிமே ஜானுக்கு புல்வெட்டி கூலி வேறவரும். எதுக்கு வளர்க்கனும் எதுக்கு வெட்டனும் இதெல்லாம் தேவையா?
5.    ஐயையோ தண்ணியை மறந்துட்டேனே, தோட்டத்துக்கு தண்ணி 2 நேரம் விடனும், தண்ணிக்கு காசு நான்ல கட்டனும்.
6.    இந்தப் பூவெல்லாம் உதிர்ந்து உதிர்ந்து காத்தோட கலந்து மூக்குல புகுறது, சேச்சே, இதெல்லாம் எதுக்குத்தான் பூக்குதோ.
7.    என்னபா, இது புல்லுக்கும் காய்கறிக்கும் தானே விதை போட்டோம், இந்தக்களை ஏன் காடு மாதிரி வளருது. அதுக்கு யார் விதைபோட்டா?
8.    ஐயையோ, இந்தக் காய்கறிகளை யாருக்கு முதல்ல கொடுக்கிறது, யாருக்கு ரெண்டாவது கொடுக்கறதுன்னு இப்ப பிரச்சனை ஆரம்பிக்கும்.
9.    குளிர் காலமே தேவல போலருக்கு.
கோடை காலம்:
Summer in New York
1.    உஸ் அப்பா என்ன வெயில் என்ன வெயில்,
2.    இந்த ஹால்ல இருக்கிற AC பத்த மாட்டேங்குது. வேற மாத்தனும்.
3.    என் மனைவி வேற சென்ட்ரல் AC இல்லேன்னா அட்லீஸ்ட் ஸ்பிலிட் AC போடுங்கிரா. இதுலதான் எங்க ரெண்டுப் பேருக்கு ஸ்பிலிட் வருது.
4.    பசங்க ரூம்ல AC போட்டுட்டு கதவைத் திறந்து விட்றாங்க, பில் யார் கட்டறது.
5.    சேசே என்ன இது கசகசன்னு வேர்த்து வடியுது. இந்தச் சூரியன் ஏந்தான் நம்பளைப் போட்டு கொல்லுறானோ.
6.    இந்த வருஷம் வெக்கேஷனுக்கு எங்க போறதுன்னு என் மனைவி உயிரெடுக்கிறா, ஒரு பத்தாயிரம் டாலர் பழுத்துறும் போல இருக்கு.
7.    இந்த மிச்சப் பதார்த்தங்களை எல்லாம் ஃபிரிட்ஜ்ல வையின்னு சொன்னா கேக்கமாட்டேங்குறா. இப்பப்பாரு எல்லாம் கெட்டுப்போச்சு.
மகேந்திரன்:
ஏலேய் பரதேசி போதும்டா சாமி நிறுத்து ன் புலம்பல. ஒன் வாயில நல்ல வார்த்தையே வராதா? எப்பப்பாரு புலம்பிக்கிட்டு.  
பரதேசி: ஆண்டவா என்னை யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்களே எனக்கு வேற ஒரு நல்ல நண்பன் கிடைக்கக் கூடாதா? மகேந்திரன் போல ஒருத்தன் தான் கிடைக்கணுமா, ஏசுவே.
மகேந்திரன்: சரியான லூசுப்பய, ஏங்க யாருங்க இங்க வந்து இதப்படிக்கிறது, போய் வேற வேல இருந்தா பாப்பீங்களா?

முற்றும்


ஒரு முக்கிய அறிவிப்பு:
வருகின்ற  அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் இலங்கைத்தமிழர் நடத்தும் ஆனந்தம் நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்குபெறும் பட்டிமன்றம் நடக்க விருக்கிறது. என்னுடன் தோழர்கள் மோகன் , பிரபு சின்னத்தம்பி, தோழிகள் வான்மதி மற்றும் சுபா பங்கு கொள்கிறார்கள். நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிக்கட் பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பங்கு கொள்ளலாம்.
தலைப்பு :வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா ?நட்பா ?
இடம் : PS 131 அபிகைல் ஆடம்  பள்ளி
170-45 84th அவன்யூ
ஜமைக்கா, குயின்ஸ் , நியூயார்க் -11432

நேரம் : மாலை ஆறு மணி

Tuesday, October 20, 2015

ராஜபரம்பரையில் உதித்த கருத்துச்சிருத்த கருவாடு !!!!!!!!!!!!!!

ஏன்டா ‘இந்த வாயில்லாப் பூச்சியை அடிச்ச' என்றார் என் அம்மா இஸ்மாயிலைப்பார்த்து.
சோழப்பேரரசின் குறு நில மன்னர்களாகவும், தளபதிகளாகவும் விளங்கிய கைக்கோளர் (முதலியார் வம்சத்தின் ஷத்திரிய பிரிவு) பரம்பரையில் உதித்த பஞ்சம்பட்டி ஜமீந்தார், "ராய சவரிமுத்து பாண்டியன் - ராஜரத்தினம்மாள் தம்பதிகளின் பேரன் நான். பிற்காலச் சோழர் காலத்தில் சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டை முழுவதுமாகப் பிடித்துக் கொண்டு தன்னுடைய தளபதிகளுக்கு சோழ பாண்டிய பட்டம் சூட்டி மதுரைப் பகுதிகளை பிரித்துக் கொடுத்தனர். அப்படி திண்டுக்கல் பகுதிக்கு வந்தவர் என் தாத்தா.
செங்குந்தர் கொடி  
என்னுடைய திண்டுக்கல் பூர்வீக வீட்டில், குறைதீர்க்க, பஞ்சாயத்துப் பேச வந்த பெருங் கூட்டங்களை என் தாத்தா தன்னுடைய ஈசி சேரில் உட்கார்ந்து ஈசியாக தீர்த்து வைத்த காரியங்களை ஓசியாகப் பார்த்திருக்கிறேன், சிறுவயதில்.
என் தாத்தா "ராய சவரிமுத்து" தன் ஆண் வாரிசுகளுக்கு, தேவராஜ் பாண்டியன், செளந்தரபாண்டியன், ஜேம்ஸ் பாண்டியன், துரைப்பாண்டியன் என்று பெயர் சூட்டி, சொந்தப் பள்ளிக்கூடம், இரண்டு ஏக்கர் காம்ப்பவுண்டின் நடுவிலிருந்த மாளிகை, விவசாய நிலங்கள் என்று ஏராளமான சொத்துக்களை விட்டுச் சென்றார்.  எல்லோரும் உயர்பதவி வகித்த என் தாய் மாமன்கள். என் அம்மாவின் கல்யாணம் ஒரு வாரம் சிறப்பாக நடந்ததோடு, தேவதானப்பட்டியில் தியாகராஜன் (மாமா மகன்) என்ற ஆசிரியருக்கு வாக்கப்பட்டு, சுசீலா டீச்சராகி சொத்துகளை விட்டுவிட்டு வெத்தாக வந்து சேர்ந்தார். பெண்களுக்கு அப்போதெல்லாம் சொத்தில் பங்கில்லை. தியாகராஜன் சுசிலா நேசமணி தம்பதிகளுக்குப் பிறந்த மூன்று ஆண் வாரிசுகளும் வெத்தாகவே பிறந்தோம். ஆனாலும் என்னுடைய பாட்டியார் ராஜரத்தினம்மாள் எங்களுக்கு ஆசையாக ராஜசேகரன், ராஜமனோகரன், ராஜபாஸ்கரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். பாண்டியன் பட்டமும் அத்தோடு பறந்து போனது.

ஏழை ஆசிரியராக இருந்தாலும் என் அப்பா மிகவும் கம்பீரமானவர், கடைசி வரை தன் காலிலே நின்றதோடு பிள்ளைகளுக்கும் அதையே சொல்லிக் கொடுத்து வளர்த்தார்.
அப்படிப்பட்ட என்னை என் அம்மா எப்படியெல்லாம் சொல்லிவிட்டார்கள். என்ன நடந்ததென்று சொல்கிறேன்.
குதிரையேற்றம், யானையேற்றம் வில் வித்தை, வாள் பயிற்சி. இருங்கள் கொஞ்சம் பொறுங்கள், இவையெல்லாம் விட்டுப்போன தலைமுறையில் பிறந்தாலும் ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் நான் தேர்ந்து விளங்கினேன். அவை கோலிகுண்டு, பம்பரம், கிட்டிப்புள், நொண்டி, கபடி, கிளித்தாண்டு போன்ற பல விளையாட்டுகள் அடங்கிய கலைகள்.
அப்படி பம்பரம் விளையாடும்போது என் கூடப்படிக்கும் மும்தாஜின் முறைப்பையன் இஸ்மாயிலின் பம்பரம் வட்டத்தில் தனியே மாட்டியது. மும்தாஜைப் பார்க்கும் எல்லோருக்கும் இஸ்மாயில் மேல் பொறாமை வருவது சகஜம். எனக்கும் லைட்டாய் இருந்தது. வசமாய் மாட்டினான் என்று நினைத்துக்கொண்டு ,என் பம்பரத்தின் ஆணியை நாக்கில் தடவிப்பதம் பார்த்து, ஒரு கண்ணை மூடி, குறி பார்த்து ஓங்கிக்குத்தியதில் இஸ்மாயிலின் பம்பரம் ரெண்டாகப் பிளந்தது. அதே நேரத்தில் என் நண்பர்களின் கைதட்டல் என் காதைப் பிளந்தது.    என் பம்பரம் எந்த சேதாரமுமில்லாமல் பக்கத்தில் அருமையாக ரொங்கியது எனக்குப் பெருமையாக இருந்தது. விரலினிடையில் லாவகமாக எடுத்து போது உள்ளங்கையிலும் நின்று விளையாடியது.
ரொங்கிய அதன் அழகை கி- றங்கிய படி நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் சிறிய விர்ரிட்ட ரீங்காரம் லேசாக என் காதில் சிறகடிக்க, 'ச் ' என்று என் தலையில் ஒரு இடி இறங்கியது. பெருங்கோபத்தில் இஸ்மாயில்தான் என் தலையில்  குட்டியிருந்தான். பம்பரத்தின் ரீங்காரம் சட்டென மறைய வலியின் ஆங்காரம் தலைமுழுதும் பரவி அப்படியே கிறுகிறுத்துப்போனேன். டீச்சர் மகன் என்ற 'சிறப்பு அந்தஸ்தையும்' மீறி அவன் என்னை அடித்து விட்டதில், என் கர்வம் அடங்கி வீட்டுக்கு ஓடி அப்படியே என் அப்பாவின் ஈஸி சேரில் உட்கார்ந்து வலியை விழுங்க முயன்றேன்.
தலையில் தடவியபோது, இஸ்மாயிலின் பிளந்து போன பம்பரம் முழுதாக என் தலையில் முளைத்திருந்தது. முன்னொரு காலத்தில் முடி (கிரீடம் ?) சூடிய பரம்பரையில் வந்த என் தலை இப்போது அடி சூடி தடியாக இருந்தது.
மட்ட மதியானத்தில் சேகரு இப்படி வந்து படுக்க மாட்டானே என்று முன்னறைக்கு வந்த என் அம்மா, தலையில் இருந்த என் கோரை முடியை மீறி முளைத்திருக்கும் வீக்கத்தின் தாக்கத்தை உடனே பார்த்துவிட அவருக்கு வேகாளம் வந்தது. " எந்த நீசப்பயடா உன்னை அடிச்சதுன்னு", என்னைக் கேட்டார். என்னதான் இருந்தாலும் என் நண்பன் அல்லவா, காட்டிக் கொடுக்க மனதில்லாமல் "கீழே விழுந்து விட்டேன்",  என்றேன். அதை நம்பாமல், “ஏண்டா தலைகீழாவா குதிச்ச, சும்மா கதை விடாதே",ன்னு சொல்லி அவருக்கு டென்ஷன் ஏற எனக்கும் டென்ஷன் ஏறியது.
அதற்குள் "சேகரு ரொம்ப வலிக்குதான்னு", சொல்லிக்கொண்டே  உள்ளே நுழைஞ்ச மகேந்திரன் நடந்ததை உள்ளபடியே சொல்லி போட்டுக் கொடுத்துவிட்டான்.
உடனே யாரும் எதிர்பாராமல் என்னை தரத்தவென்று இழுத்துக் கொண்டு  மும்தாஜின் அப்பா செளகத்தலி வீட்டுக்கு சென்றார் என் அம்மா. கூட மகேந்திரனும் வந்தான். போகிற வழியில் பார்த்த என் மற்ற கூட்டாளிகளும் சேர்ந்தனர்.   
"வாங்க டீச்சரு",ன்னு, செளகத்தலி மனைவி எங்கம்மாவைக் கூப்பிட, எட்டிப்பார்த்த மும்தாஜ், "வா சேகரு",ன்னு சொல்லுச்சு. இவர்களை எல்லாம் உதாசீனம் செய்த என் அம்மா, கோபத்துடன் "எங்க அவன் இஸ்மாயில்", என்று கேட்க, இஸ்மாயில் தயக்கத்துடன் வெளியே வந்தான்.
எங்கம்மா அவனைப் பார்த்து, "ஏண்டா இஸ்மாயில் ஏண்டா சேகரை இப்படி அடிச்ச?"ன்னு கேட்டுட்டு மூச்சுவிடாமப் பேசினாங்க.
"ஏண்டா இந்த வாயில்லாப்பூச்சியை அடிச்ச, அவனே சத்தில்லாத தொத்தப்பய, பிறவியிலேயே சித்துப்பய, இந்த ஒல்லிக்குச்சிப்பயல அடிக்க எப்படிடா மனசு வந்துச்சு, இந்த புல்தடுக்கியை வெளியே போகாதேன்னு சொன்னா கேக்கிறானா, குச்சிக்கையை வெச்சுக்கிட்டு எப்படித்தான் விளையாடுரானோ. பாரு அவனை, வெயில சுத்தி கறுத்துச்சிறுத்து கருவாடா இருக்கான். உசிரைக் கண்ணுல வச்சிக்கிட்டு இருக்கிறவனைப் போய் நீ அடிக்கலாமா? ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனா அவங்கப்பா என்னை கொன்னுடுவாரு. படாத இடத்தில் பட்டுட்டா என்ன ஆவுறது, ஏற்கனவே எறும்பு கடிச்சதுக்கே வீங்கிப் போய்>>>>>>>>. சொல்லி முடிவதற்குள், மும்தாஜ் அங்கே வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தாள். திரும்பிப்பார்த்தால் அதற்குள் அங்கு கூடியிருந்த என் நண்பர் குழாம் முழுவதும் அதே போல் வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தார்கள். மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க என் மானம் காற்றில் பறந்தது.
வெக்கமும் கோபமும் பொங்கி வர,"அம்மா கொஞ்சம் நிறுத்திரியா",ன்னு கத்திட்டு, அவங்களையும் இழுத்துட்டு வெளியே வந்தேன்.
எல்லாத்துக்கும் மேலே மும்தாஜ் சிரிச்சதை நினைக்கும்போது என் தலையில் முளைச்ச பம்பரத்தின் வலியைக் காட்டிலும் அதிகமாவே இருந்துச்சு. அவனை திட்டுவாங்கன்னு பாத்தா அவங்க என்னை என்னை என்னை??????? எனக்குப்பொங்கி பொங்கி அழுகையாய் வந்துச்சு .நான் எப்படி மும்தாஜ் முகத்தில முழிப்பேன்.
முற்றும்
ஒரு முக்கிய அறிவிப்பு:

வருகின்ற அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் இலங்கைத்தமிழர் நடத்தும் ஆனந்தம் நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்குபெறும் பட்டிமன்றம் நடக்க விருக்கிறது என்னுடன் தோழர்கள் மோகன் , பிரபு சின்னத்தம்பி, தோழிகள் வான்மதி மற்றும் சுபா பங்கு கொள்கிறார்கள். நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிக்கட் பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பங்கு கொள்ளலாம்.
தலைப்பு :வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா ?நட்பா ?
இடம் : PS 131 அபிகைல் ஆடம்  பள்ளி
170-45 84th அவன்யூ
ஜமைக்கா, குயின்ஸ் , நியூயார்க் -11432

நேரம் : மாலை ஆறு மணி