Thursday, September 29, 2016

அமெரிக்காவில் திருக்குறள்!!!!!!!!!!!!!!!

ஃபெட்னா தமிழர் திருவிழா பகுதி -11

Image result for thirukkural athvika
Advika with her Mom
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க   இங்கே சொடுக்கவும் 
http://paradesiatnewyork.blogspot.com/2016/09/blog-post_22.html

இலக்கிய வினாடிவினாவுக்கு அடுத்து என்னை மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி எதுவென்று கேட்டால் "குறள் தேனீ" என்பேன். அது என்ன 'குறள் தேனீ" என்றால், இரு குழுக்களாகப் பிரிந்த இளைய தமிழர்கள் திருக்குறள் சம்பந்தமான கேள்விகளுக்கு விடையளித்தனர். பிள்ளைகளின் முயற்சி மற்றும் பெற்றோர்களின் உழைப்பு இந்தப் போட்டியில் வெளிப்பட்டது. கேள்விகள் பல வடிவங்களில் வந்தாலும் பிள்ளைகள் திறமையாக திருக்குறள்களை கண்டுபிடித்தனர். ஒரு சிலரின் ஆங்கில உச்சரிப்பில் திருக்குறளைக் கேட்டது கொஞ்சம்  வித்தியாசமாக இருந்தாலும் இந்தளவுக்கு அவர்கள் திருக்குறளை படித்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய முயற்சி.

நான் சென்னையில் இருக்கும்போது, என் பிள்ளைகள் ஆங்கிலவழிக்கல்வி கற்றாலும் தமிழ்மொழியைக் கற்றே  ஆக வேண்டும் என்று சொல்லி பள்ளியில் தமிழ்ப் பாடம் எடுத்திருந்தேன். என் பெரிய மகள் அனிஷா அதுபோல தமிழ் கற்றுக் கொண்டாள். என்னுடைய அப்பாவும் வீட்டில் அவளுக்கு தமிழ் சொல்லித்தந்தார். தவிர வீட்டில் தமிழ் பேசும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தேன். எனவே அவளுக்கு நன்றாக தமிழில் எழுதவும் பேசவும் தெரியும்.

நாங்கள் நியூயார்க் வரும்போது பெரியவளுக்கு ஏழு வயது, சின்னவளுக்கு ஐந்து வயது. வீட்டில் தமிழில் பேசுவது இங்கு வந்ததும் தொடர்ந்தது. சிறிது காலம் சென்று, வெளியில் ஆங்கிலம் மட்டுமே பேசிய மகள்கள் வீட்டிலே நாங்கள் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் பதில் சொல்ல ஆரம்பித்தார்கள். “இல்லை நீங்கள் வீட்டிலே தமிழில் மட்டும் தான் பேச வேண்டும்”, என்று சொல்லி, பிள்ளையார் கோவிலில் நடக்கும் தமிழ் வகுப்பில் சேர்த்துவிட்டேன்.

பலமாதங்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் மிகவும் முயன்று அவர்களை எழுப்பி அங்கே தமிழ்ப் பள்ளியில்விட்டு காத்திருந்து கூப்பிட்டுக் கொண்டு வரும்போது மதியம் ஆகிவிடும்.பிள்ளைகள் இருவரும் நன்கு எழுதப்படிக்க கற்றுக் கொண்டனர். இப்பொழுது அவர்கள் வயது 22 மற்றும் 20. தமிழ் பேசுவார்கள். பெரியவள் ஓரளவுக்குப் படிப்பாள், சின்னவள் எழுத்துக் கூட்டி மட்டுமே  படிப்பாள். கொஞ்சம் கொஞ்சமாக  மறக்கிறார்கள்.

எனவே அமெரிக்காவில் வளரும் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோ, தமிழ்மொழியில் ஆர்வம் ஏற்படுத்துவதோ மிகவும் கடினமான காரியம். அது நன்கு தெரிந்திருந்ததால் குறள் தேனீயில் கலந்து கொண்ட பிள்ளைகளின் உழைப்பை என்னால் உணர முடிந்தது.

குறிப்பாக அதில் ஒரு சிறிய பெண், எப்படி மடக்கி மடக்கி கேட்டாலும் அதற்கான திருக்குறளை கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னாள். அதற்கப்புறம் நாஞ்சில் பீட்டர் அவர்கள் அந்தப் பெண்ணை மேடையில் அழைத்து பாராட்டுப் பத்திரம் கொடுத்தார். அவள் பெயர் அத்விகா. தனது ஏழு வயதில் 1330 குறளையும் பொருளுடன் ஒப்பித்துப் புகழ் பெற்றிருக்கிறாள். அதிலும் ஒரு வார்த்தையைச் சொல்வதோடு அதன் அதிகாரம் மற்றும் அதன் வரிசை எண்ணையும் யோசிக்காமல் சொல்லும் அவள் ஒரு அதிசயப்பிறவிதான்.

Image result for thirukkural athvika
Advika Reciting Thirukkural 
இந்தப் பதிவை எழுதும் போது நாஞ்சில் பீட்டர் அவர்களிடம் விவரம் கேட்டு அந்தக் குடும்பத்தை தொடர்பு கொண்டு மேலும் சில தகவல்களைக் கேட்டுப் பெற்றேன்.
அவளின் அம்மாவான  திருமதி பிரசன்னா அனைத்து குறள்களையும் பொருளையும் இடைவெளி இன்றி 3 மணி 52 நிமிடங்களில் சொல்லியிருக்கிறார்.

        அவளின் தந்தை சச்சிதானந்தன் சொல்கிறார், “அத்விகாவிற்கு ஒவ்வொரு நிலையிலும் தமிழ் ஆர்வத்தை ஊட்டி வளர்த்து வருகிறோம். இங்கேயே பிறந்து வளரும் பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியோடு உள்ள தொடர்பு அலாதியானது. இதனூடே தாய்மொழியுடனான உறவை உயிர்ப்புடன் வைப்பது பெரும் சவாலான கடமை எனலாம். அனைவரும் வீட்டுக்குள்ளே நுழையும்போது காலணியை கழட்டி விடுவது போல் ஆங்கிலத்தையும் உதறிவிட்டு உள்ளே வரவேண்டும் என்பது எங்கள் வீட்டிலே அனைவரும் எழுதப்படாத சட்டமாக கடைப்பிடிக்கிறோம் “, என்று .

Advika' with father, Mother and sister

         மினசோட்டா தமிழ்ச் சங்கம் நிகழ்த்தும் ஒவ்வொரு போட்டியிலும் தனது மூன்று வயது முதல் பங்குபெற்று வருகிறாள் அத்விகா. அவ்வையார் மற்றும் பாரதியாரின் ஆத்திசூடிகளை நான்கு வயதில்  ஒப்புவித்தாள். ஐந்து வயது தொடங்கி ஏழு வயது வரை மூன்று பகுதிகளாக அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலையும் பொருளுடன் சொல்லி முடித்தாள். மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின்   "செந்தமிழ்ச் செல்வி", "குறள் மொழியாள்", விரிகுடாக் கலைக்கூடத்தின் " குறள் அரசி " , 2016 பேரவை தமிழ் விழாவில் "குறள் தேனீ" என பல பட்டங்கள் பெற்றாள். நிலா, புறநானூறும் பெண் வீரமும், நேர்மை, ஏன் தமிழ் எனும் தலைப்புகளில் இவர் தந்த மழலை பேச்சுகள் பலரின் கவனத்தையும் கவர்ந்தது. ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் அமையவிருக்கும் தமிழிருக்கைக்கு நிதி திரட்டுவதில் தனது சேமிப்பிலிருந்து சிறுதொகை அளித்ததுடன், பேரவை விழாவில் கிடைத்த பரிசு பணம் ஐநூறு டாலரையும் தமிழ் இருக்கைக்கு அளித்தது குறிப்பிடத் தக்கது. இது மட்டும் இன்றி தான் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழிருக்கை பற்றி எடுத்து சொல்லி இந்த நிதி திரட்டலுக்கு உதவி வருகிறாள்.


          சச்சிதானந்தன் மேலும் சொல்கிறார், “திருக்குறள் உட்பட தமிழ் இலக்கியங்களை சின்னசின்ன கதைகள் மூலம் அத்விகாவிடம் கொண்டு செல்லும் பெருமை முழுதும் எனது மனைவி பிரசன்னா அவர்களையே சாரும். குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க படித்ததால் தானும் திருக்குறள் முழுவதையும் தொடர் பொழிவாய் சொல்ல முடிந்தது என்பார் அவர்”. இந்தப்பெருமைமிகு குடும்பம் மினசோட்டா  மாநிலத்தில் வசித்து வருகிறார்கள் .

          முதல் தலைமுறையில் புலம் பெயர்ந்தவர்கள் தமிழைத் தாங்கிப் பிடிப்பது பெரிய காரியமல்ல. ஏனென்றால் பெரும் பாலானவர்களுக்கு நம் மொழியின் அருமை வெளிநாடு வந்தபின்தான் தெரிய வருகிறது. இதில் இரண்டாவது தலைமுறைக்கு தமிழைக்  கொண்டு போவதுதான் மிகமிகமிக சிரமமான காரியம். அதனைச் செய்யும் தமிழ் உள்ளங்களுக்கு என் வாழ்த்துதல்களும் பாராட்டுகளும். இதில் பலபேர் வெளியிலும் சரி வீட்டிலும் சரி ஆங்கிலம் பேசிக் கொண்டு, தமிழை மறந்து தாய் நாட்டையும் மறந்து முற்றிலுமாக மாறிவிடுகின்றனர். இவர்களுக்கு  நம் நாட்டு நடப்பு கூட சுத்தமாக தெரியாது. "என்ன சிவாஜி  செத்துட்டாரா " கதைதான்.  

நம்நிலை இப்படியிருக்க இலங்கைத் தமிழர்களை பாராட்டியே ஆக வேண்டும்.இன உணர்வும் மொழி உணர்வும் மிகுதியாக உள்ளவர்கள் இவர்கள். இவர்களுள் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை இரண்டாம் தலைமுறை என்று வித்தியாசம் இல்லாமல், எல்லோரும் தமிழ் பேசவும் தமிழ் படிக்கவும் கற்றுக் கொண்டு சரளமாக தமிழ் பேசுகிறார்கள். இவர்களின் விழாக்களில் நம் விழாக்கள் போலன்றி இளைஞர்கள் ஏராளமாக கலந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான திருமணங்களும் அவர்களுக்குள்ளேயே நடக்கிறது.

ஃபெட்னாவும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஏனென்றால் நாடிழந்து அல்லது நாடு துறந்து வெளிநாட்டில்  வாழும் நாம் மொழியையும் துறந்தால். நாம் யார் நம் இனம் என்ன என்பது அழிந்துபோய்  நாம் முகமிழந்து உருவிழந்து போய்விடுவோம்.


(தமிழர்  திருவிழா பதிவுகள் தொடரும்.)

Monday, September 26, 2016

மாவீரன் மாவோ சேதுங்!!!!!!!!!


சீனாவில்  பரதேசி 24
Image result
Mao 
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க   இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2016/09/blog-post_19.html

மாவோ சேதுங்கின் மசூலியத்தில் நுழையும் முன் அவரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வது நல்லது என்பதால் இந்தப்பதிவில் அவற்றைத் தர முயல்கின்றேன்.

மாவோ சேதுங் சீனாவில் ராணுவப்புரட்சியை மட்டுமல்ல ,பண்பாட்டுப் புரட்சியையும்  ஏற்படுத்திய ஒருவர். 1893 டிசம்பர் 26-ல் ஹியூனன் மாவட்டத்தில் (Hunan Province) உள்ள, ஷாவோஷான் (SHAOSHAN) என்ற ஊரில் பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் இருந்தது.  ல  தலைமுறைகளாக அந்த நிலம் மட்டும்தான் தான் இருந்தது. பல சீனக் குடிமக்கள் அப்போது வறுமையில் வாடிய சமயம் அது.  மாவோவின் குடும்பம் எவ்வளவோ பரவாயில்லை. விவசாயம் தவிர மாவோவின் அப்பா தானிய விற்பனையிலும்  ஈடுபட்டிருந்தார். அவர் பெயர் மாவோ ஜெதுங்  (Mao Zedong) மாவோவின் அம்மா வென் சிமெய் (Wen Qimei) மிகவும் அன்பானவர்.
Image result for mao zedong with his parents
Mao with his brothers and mother and father is in the next photo 
மாவோ எட்டு வயதில் அவர் ஊரிலுள்ள ஒரு சிறு பள்ளியில் சேர்ந்து கொஞ்சம் கல்வி கற்றார். அவருக்கு 13 வயது ஆனபோது அப்பாவின் வயலில் முழுநேர விவசாயப் பணி புரிந்தார். ஆனாலும் எப்போதும் துறுதுறுவென்று ஏதாவது இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்ற எண்ண ஓட்டம் இருந்தது.
அவருக்கு 14 வயதான போது, அவருடைய அப்பா அவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். ஆனால் மாவோ அதை ஒத்துக் கொள்ளவில்லை. அவருக்கு 17 வயதான போது வீட்டைவிட்டு வெளியேறி ஹியூனன் மாவட்டத்தின் தலைநகரான சாங்ஷா (Changsha) என்ற இடத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில்  சேர்ந்தார்.
Mao at young age
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீனாவை ஆண்ட சிங் (Qing Dynasty) பரம்பரையின் மேல் மக்களுக்கு வெறுப்பு இருந்தது. எனவே ஆங்காங்கே புரட்சிச் சிந்தனைகள் வெளிப்பட்டன. முடியாட்சிக்கு எதிரான சின்ஹுவா புரட்சி  (Xinhuva) வெடித்தது. மாவோ, குவோமின்டாங் (Kuomintang) என்ற தேசியக் கட்சியில் சேர்ந்ததோடு, அதன் புரட்சிப் படையிலும் சேர்ந்தார். Dr.சான் யாட் சென்  (Dr.Sun Yat Sen) தலைமையில் குவோமின்டாங், 1912ல் முடியாட்சியைத் தகர்த்து சீனக்குடியரசை உருவாக்கியது. மாவோவும் சீனாவின் புதிய எதிர்காலத்தை மனதில் வைத்து தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்.

Image result for dr.sun yat sen
Dr.Sun Yat Sen
மாவோ 1918ல் பீகிங் பல்கலைக்கழகத்தின் ஹுயூனன்  பள்ளியில் ஆசிரியராக பட்டம் பெற்றார் . அதே ஆண்டில் அவருடைய அன்பு அம்மா இறந்து போனதால், வீட்டுக்குத் திரும்பும் விருப்பம் குறைந்து  போனது. அங்கிருந்து பீஜிங் வந்து சிறிது காலம் வேலை தேடியலைந்து எதுவும் கிடைக்காதலால், பீஜிங் பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் உதவியாளராக சேர்ந்தார். அந்தச் சமயத்தில்தான் வெற்றிகரமாக நடந்த ரஷ்யப் புரட்சியைப் பற்றியும், கம்யூனிஸ்ட் சோவியத் யூனியன் அமைந்ததைப் பற்றியும் அறிந்து கொண்டார். அதன்பின் 1921ல் உதயமான சீனக்கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய வர்களில் இவரும் ஒருவர்.

சீனக்கம்யூனிஸ்ட் கட்சி வெகுவாக  வளர்ந்ததால் சன் யாட் சென், அவர்களோடு ஒத்துழைப்புடன் செயல்பட்டார்.  மாவோ இரு கட்சிகளுக்கும் ஆதரவாளராக முதலில் இருந்தாலும், லெனினின் கருத்துக்களில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். சீனக்கம்யூனிஸ்ட் கட்சியில் சிறிது சிறிதாக வளர்ந்து  ஷங்காய்  பகுதியின் தலைவராக உருவெடுத்தார்.  

மார்ச் 1925ல் சீன அதிபராக இருந்த சான் யாட்சென் இறந்து போனதால் அவருடைய சீடர், சியங் கைஷேக் குவோமின்டங்கின் தலைவரானார். 
Chiang Kai-shek(蔣中正).jpg
Chiyang Kai-shek
இவர் சன் யாட்சென்னைப் போலன்றி, மிகவும் பழைய வழக்கங்களில் ஊறியிருந்தார். எனவே ஏப்ரல் 1927ல் கம்யூனிஸ்ட்டுகளிடம் செய்த ஒப்பந்தத்தை முறித்து கம்யூனிஸ்ட்களை ஒழிக்க முனைந்து பல பேரைக்  கொன்றார். அதே ஆண்டு செப்டம்பரில் மாவோ, விவசாயிகளை ஒன்றிணைத்து ஒரு படையை உருவாக்கி அரசாங்கத்தைத்  தாக்கினார். ஆனால் குவோமின்டங் அரசுப்படைகள் அதை முறியடித்து அவர்களை விரட்டியடித்தனர். மாவோ எஞ்சிய மக்களுடன் ஜியாங்ஸி பகுதிக்கு (Jiangxi).  தப்பியோடினார் . அங்கே அந்த மலைப்பகுதியில் சோவியத் சீனக்குடியரசை நிறுவி அவரே அதன் சேர்மன் ஆனார். அதன்பின் சிறிய ஆனால் வலிமையான ஒரு கொரில்லாப்படையை உருவாக்கி, கம்யூனிஸ சட்டத்தை எதிர்ப்பவர் மற்றும் மீறுபவர்களை சித்தரவதை செய்து கொல்ல உத்தரவிட்டார்.

1934ல் பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்கள் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இணைக்கப்பட்டன. இதனால் ஆத்திரப்பட்ட சியங்  காய்ஷேக் சிறுசிறு தாக்குதல்களை நடத்தினார். ஆனால் அது உதவாதலால் 1934 அக்டோபர் மாதம் கம்யூனிஸ்ட்களை முற்றிலும் ஒழிக்க 10 லட்சம் பேர் கொண்ட அரசுப்படைகளை அனுப்பினார். மற்ற தலைவர்கள் ராணுவத்தை எதிர்க்க வேண்டும் என்று ஆத்திரப்பட்டாலும், மாவோ அது ஞானமற்ற செயல் என்று மறுத்து, பின்வாங்குவதே  நல்லது என்று  முடிவெடுத்தார். எனவே மலைப்பகுதிகளில் சுமார் 1 லட்சம் கம்யூனிஸ்ட்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரோடு, ஒரு வருடம் மலைக்காடுகளில் சுமார் 8000 மைல்கள் கடந்து வந்தனர். கடினமான அந்தப்பயணத்தை 'லாங் மார்ச்' என்று அழைக்கிறார்கள். கடும் குளிருக்கும், பஞ்சத்துக்கும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்கள் இறந்து போனார்கள்.

அதன் பின் மாவோ சென்ற அந்தப் பகுதிகளில் தன்னுடைய பேச்சுத்திறமையால் பல இளைஞர்களை கட்சியுடன் இணைத்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் தன்னிகரற்ற தலைவராக வளர்ந்தார்.  

இதற்கிடையில் 1937ல் ஜப்பானின் படைகள் சீனாவில் நுழைந்து அதகளம் செய்து பல பகுதிகளைப் பிடித்துக் கொண்டனர். சீன அதிபர் சியங் கைஷேக்  தலைநகர் நான்கிங்கை விட்டு தப்பியோட நேர்ந்தது. கடற்கரை நகரங்கள் மற்றும் பல பெரிய நகரங்கள் ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. சியங் இருபுறமும் நெருக்கிய சண்டையைச் சமாளிக்க முடியாமல் கம்யூனிஸ்ட்களிடம் சமாதானம் பேசி ஜப்பானுடன் சண்டையிட அவர்களின் உதவியை நாடினார். கூட்டு ராணுவத்தின் தலைவராக மாவோ இருந்தார். 1945ல் ஜப்பானியர் தோற்கடிக்கப்பட்டனர்.

அமெரிக்க அரசின் மத்தியஸ்தத்துடன் இருபெரும் கட்சிகளும் இணைந்து ஒரு அரசை ஏற்படுத்தினர். ஆனால் அது உள்நாட்டுப் போரில் முடிந்தது. அக்டோபர்   1, 1949-ல் மாவோ இதே டியன்மனன்  சதுக்கத்தில் சீனமக்கள் குடியரசை நிறுவினார். சியங் கைஷேக்கும் அவரைப் பின்பற்றியவர்களும் தைவானுக்குத் தப்பிச்சென்று அங்கு சீனக் குடியரசை உருவாக்கினார்.
Image result for Mao in military uniform
Mao in Military Uniform
மாவோவின் சில திட்டங்கள் சீனாவின் முன்னேற்றத்திற்கு உதவியது. பல உதவவில்லை. அவருடைய ஆட்சியில் வந்த பஞ்சத்தில் 40 மில்லியன் சீன மக்கள் அழிந்தனர். எனவே அவர் ஓரம் கட்டப்பட்டார். 1960 முதல் 1966 வரை தலைமையை இழந்த அவர் தன் 73-ஆவது வயதில் தலைமைக்குத் திரும்பினார். சீனாவின் வளர்ச்சிக்கு பல முயற்சிகளை எடுத்தார். 1972ல் அமெரிக்க அதிபர் நிக்சனைச் சந்தித்தார். உலக நாடுகளுடன் உறவைப் புதுப்பிக்க முயற்சித்தார். ஆனாலும் ஒரு வெற்றிகரமான ராணுவத்தலைவராக உருவெடுத்த அவருக்கு, நாட்டை வளர்ச்சியின் பாதையில்  நடத்த முடியவில்லை. இறுதியில் மாவோ1976ல் தன் 82-ஆவது வயதில் பீஜிங்கில் இறந்தார்.

இப்போது நிம்மதியாக உறங்கும் சேர்மன் மாவோ சேதுங்கைப் பார்க்க வாருங்கள் உள்ளே போவோம்.
-தொடரும்.


Thursday, September 22, 2016

தமிழர் விழாவில் அறுசுவை உணவு!!!!!

Image result for fetna 2016, NJ
Fetna Logo
ஃபெட்னா தமிழர் திருவிழா 2016 பகுதி 10
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க   இங்கே சொடுக்கவும் 
http://paradesiatnewyork.blogspot.com/2016/09/blog-post_15.html

தமிழர் கூடும் எந்த விழாவிலும் சாப்பாடு என்பது மிகவும் அவசியம். நான் கலந்து கொள்ளும் இம்மானுவேல் தமிழ்த் திருச்சபையிலும் எப்போது நாங்கள் கூடினாலும், ஆலய வழிபாடு முடிந்ததும் மதிய உணவு இருக்கும். ஃபெட்னாவுக்கு பதிவு செய்யும் போதே மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கும் சேர்த்தே கட்டணம் செலுத்தியிருந்தேன். வெளியே வந்து சாப்பிடுவதில் என் மனைவி மிகவும் கட்டுப்பெட்டி. இந்திய உணவு அதுவும் தென்னிந்திய உணவு அதிலும் தமிழ் உணவு அதுவும் அசைவ உணவை மட்டுமே விரும்பிச் சாப்பிடுவாள். நான் ஒரு சைவக்கொக்கு.

 ஆயிரக் கணக்கானவர்களுக்கு சமைக்க வேண்டுமே சாப்பாடு எப்படி இருக்குமோ என்ற ஒரு பதட்டம் எங்கள் இருவருக்குமே இருந்தது.

அரங்கத்திற்குள் நுழையும்போது  கொடுக்கப்பட்ட துணிப்பையில் கையேடுகள், நிகழ்ச்சி நிரல், விழா மலர், இவைகளோடு ஜானகி முறுக்கும், இனிப்பும் இருந்தன. நிகழ்ச்சி நிரல் கையேட்டில் பல நிகழ்ச்சிகளைப் பற்றிமட்டுமல்ல, உணவு நேரங்கள் மட்டுமல்ல, உணவு வகைகளை பற்றியும் பட்டியல் போடப்பட்டிருந்தது ஆச்சரியத்தைத் தந்தது.

முதல்நாள் மதிய நேரமும் வந்தது. நாங்கள் உணவுக்கூடத்துக்குச் சென்றோம் பந்திக்கு முந்த வேண்டும் என்று இரத்தத்தில் எழுதியிருக்கும் தமிழ் மக்கள் அங்கு ஏராளமானவர் ஏற்கனவே வந்திருந்தனர். இவர்களெல்லாம் நிகழ்ச்சிகள் எதுவும் பார்க்காமல் காலையிலேயே வந்து வரிசையில் நின்றுவிட்டனரோ என்று எண்ணும் வகையில் மிக நீண்ட வரிசை, பாம்பு போல வளைந்து சென்றது.

டைனிங் ஹாலோ, உணவு பரிமாறுவதோ கண்ணுக்குத் தெரியவில்லை. கொடுக்கப்பட்ட டோக்கன்களை கையில் வைத்துக் கொண்டு நின்றோம். ஆனால் நண்பர்கள் பலரையும் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. எங்களுக்கு முன்னால் சூப்பர் சிங்கர் ஜெசிக்காவின் பெற்றோர் நின்றிருந்தனர். ஜெசிக்கா புலம் பெயர்ந்த மக்களின் டார்லிங் ஆன பிறகு மிகவும் பிஸி ஆனாலும் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லா நிகழ்ச்சிகளையும் ஒத்துக்கொள்வதில்லை என்று சொன்னார்கள்.

சூப்பர் சிங்கர் போட்டியில் ,தந்தையும் மகளும் பாடிய 'அன்று வந்ததும் அதே நிலா" என்ற பாடலை நினைவு கூர்ந்து அவரிடம் சொன்னேன். அவர் சிரித்தபடியே நன்றி சொன்னார்.

ஒருவழியாக வரிசை நகர்ந்து சென்று, ஆப்பிரிக்க கடோத்கஜன்கள் பாதுகாத்த கோட்டைக் கதவுகளுக்கு அருகில் சென்றது. கையில் வைத்திருந்த டிக்கட்டை கவனமாகச் செக் செய்து கதவைத் திறந்து உள்ளே அனுப்பினர்.

கதவு திறந்ததும் உள்ளே பிரம்மாண்டமான டைனிங் ஹாலில் ஏராளமான தமிழ் மக்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களெல்லாம் எப்போது வந்திருப்பார்கள் என நினைத்து ஆச்சரியமாக இருந்தது. ஹாலில் நுழைந்ததும் வரிசை இரண்டாகப்பிரிந்தது. ஒன்று சைவ வரிசை மறறொன்று அசைவ வரிசை. என் மனைவி தன்னிச்சையாக அசைவ வரிசையில் நகர்ந்து தொடர, நானும் ஆடுபோல் பின் தொடர்ந்தேன். வகை வகையான உணவுகளை  வரிசையில் நின்று பரிமாறினர். அதில் நம் மக்களோடு இணைந்து  சில ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களும் பரிமாறுவதற்கு அமர்த்தப்பட்டிருந்தனர். என்னென்ன உணவு வகைகள் என்று அப்புறம்  சொல்கிறேன். பல குழிகளைக் கொண்ட பிளாஸ்டிக் தட்டில் எல்லாக் குழிகளும் நிரம்புமளவுக்கு அத்தனை வகைகள் பரிமாறப்பட்டன.

அப்போது என் வரிசைக்கு நடுவில் வந்த நியூஜெர்சி தமிழ்ச்சங்கத் தலைவரும், ஃபெட்னா நிகழ்ச்சியைத் திறம்பட நடத்திக் கொண்டிருந்த, “உஷா கிருஷ்ணகுமார்” வந்து ஒரு தட்டைக் கேட்க, தட்டு டிபார்ட்மெண்ட்டின் இன்சார்ஜாக இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் டோக்கன் கேட்டாள். இனி நடந்த உரையாடலைக் கீழே கொடுக்கிறேன் தமிழில்.

"தயவு செய்து ஒரு தட்டுக் கிடைக்குமா?"
“தயவு செய்து டோக்கன் தாருங்கள்”
"டோக்கனை அங்கேயே கொடுத்துவிட்டேன்"
"சாப்பாடு ஏற்கனவே வாங்கிவிட்டீர்களா"
“ஆமாம் இப்போதுதான் வாங்கினேன்”.
"ஒரு டோக்கனுக்கு ஒரு சாப்பாடுதான் தருவோம்"
"இல்லை இங்கே உட்கார்ந்து சாப்பிட நேரமில்லை. இன்னொரு பிளேட் கொடுத்தால் இந்த சாப்பாட்டை மூடி எடுத்துச் சென்றுவிடுவேன்."
"மன்னிக்கவும் இன்னொரு பிளேட் தரமுடியாது"
உடனே நான் தலையிட்டு, "இவர்கள்தான் உஷா, தமிழ்ச் சங்கத்தலைவர் இந்தத் திருவிழாவை நடத்துபவர் தட்டைக் கொடு" என்றேன்.

அதன்பின்னர் தான் அந்தப்பெண் மன்னிப்புக் கூறி ஒரு தட்டைக் கொடுத்தாள். உஷாவுக்கே அந்தக்கதி. அந்தப் பெண்ணையும் குறை சொல்ல முடியாது. அவளுக்கு இடப்பட்ட பணியை அவள் நிறைவேற்றினாள். கொஞ்ச நேரத்தில் வேர்த்து நொந்து போன உஷா தட்டுடன்  எனக்கு நன்றி சொல்லி நகர்ந்தார். சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த அவருக்கு நான் அல்லவா நன்றி சொல்லியிருக்க வேண்டும்.



உணவுப் பதார்த்தங்கள் நல்ல ருசியாக இருந்தன. உஷாவிடம் கேட்டபோது பாஸ்டனிலிருந்து வந்த ஒரு குழு அங்கேயே பின்னால் சமைத்துச் சுடச்சுடப் பரிமாறினர் என்று அறிந்துகொண்டேன்.

முதல் நாள் மதிய உணவுக்கு நீண்ட நேரம் நிற்க வேண்டி திரும்பவும் அரங்கு வருவதற்கு நீண்ட நேரம் ஆகிவிட்டதால், அன்றைய இரவே திட்டத்தை மாற்றி, அசைவத்துக்கு இரண்டு இடத்திலும் சைவத்துக்கு இரண்டு இடத்திலும் செட் பண்ணி நீள வரிசையை உடனடியாக குறைத்தனர்.

ஒவ்வொரு நேரமும் எதிர்பார்க்க வைத்த உணவு. அவ்வப்போது அந்த நேரம் வரும்போது, மெனுவை எடுத்துப் பார்த்துக் கொள்வோம். அப்படி என்னதான் சாப்பிட்டீர்கள் என்று கேட்கும் மக்களுக்கு இதோ கீழே முக்கிய உணவு வகைகளைக் கொடுக்கிறேன்.

சென்னை சிக்கன் குழம்பு, செட்டி நாடு சிக்கன், மட்டன் சுக்கா வருவல், ஜிஞ்சர் சிக்கன், மட்டன் பிரியாணி ஆகியவை சில.
Usha Krishnakumar
செவிக்கு மட்டுமல்ல எல்லாப்புலன்களுக்கும் விருந்து கொடுத்ததோடு வயிற்றுக்கும் ஈயப்பட்ட அறுசுவை உணவுக்காக நன்றி. பாஸ்டனிலிருந்து வந்த நளபாகம் சமைத்த நண்பர்களுக்கு நன்றி. இங்கே திருமணத்திற்கே நூறு பேர் என்பதே மிகவும் அதிகம் என்ற நிலையில் 2 ஆயிரம் பேருக்கு உணவு படைத்த நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் குறிப்பாக அதன் தலைவி உஷாவுக்கு நன்றி.

தமிழர் விழா பதிவுகள் தொடரும்.


பின்குறிப்பு: இதில் என்ன வேடிக்கையென்றால் அறுசுவை உணவு அரங்கிலேயே கிடைக்க, சிலபேர் கட்டுச் சோறுடன் வந்து கார்களில் ஒதுங்கினர்.

Monday, September 19, 2016

ஆறு லட்சம் மக்கள் கூடும் அதிசய சதுக்கம் !!!!!!!!!!!!


சீனாவில் பரதேசி -23
Image result for Xianfeng Emperor
Xianfeng Emperor
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க   இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2016/09/blog-post_12.html

சீன மக்களுள்  வயது வித்தியாசமின்றி யாரைப் பார்த்தாலும் ஒரு இனம் புரியாத ஒரு சோகம் அப்பியிருந்தது. ஒருவேளை முக அமைப்பே அப்படித்தானோ என்ற சந்தேகத்தில் லீயைக் கேட்டேன். அவன் சொன்னான். "பீஜிங்கில் வாழ்க்கை மிகவும் கடினம்?, எங்களுக்கு சிரிக்கவோ, மகிழ்ந்திருக்கவோ நேரமில்லை. எனவே ஓடிக் கொண்டேயிருக்கிறோம் .எங்கேயாவது உன்னைப்போல வெளியே சுற்றுலா போனால் ஒருவேளை நாங்கள் சிரித்து மகிழலாம். உதாரணமாக என்னை எடுத்துக் கொள் ,ஒவ்வொரு நாளும் நிலையில்லாத  நிலையில் தானே இருக்கிறேன்”, என்றான்.  அது உண்மைதானே. ஒருவேளை என்னை வந்து நியூயார்க்கில் பார்த்தால் நானும் அப்படித்தான் ஓடிக் கொண்டிருப்பேன் எனத் தோன்றியது.

“சரி லீ டியனன்மென் ஸ்கொயர் பற்றி மேலும் தகவல்கள் இருக்கிறதா?”

“Gate of Heavenly Peace”, என்ற அர்த்தத்தில் அழைக்கப்படும் இது,முதன்முதலில் 1415ல் மிங் டைனாஸ்டி ஆளும் போது வடிவமைக்கப்பட்டது. அதன் பின்னர் மஞ்சு இனத்தவரின் சிங் டைனாஸ்டி (Qing Dynasty)ஆளும் போது 'லி ஜிக்செங்’ கின்' (Li Zicheng) 'புரட்சிப்படை இதனைத் தாக்கி முற்றிலும் அளித்துவிட்டனர். அதன்பின்னர் 1651ல் இது மீண்டும் கட்டப்பட்டது. 1950ல் தான் இப்போதிருக்கும் அகலமான சதுக்கம் உருவானது.  

சதுக்கத்தின் நடுவில் "பெரிய மிங் வாயில்" (Great Ming Gate) இருந்தது. இதுவே “பெரிய சிங் வாயில்”  என்று சிங் பரம்பரையினர் ஆளும் போது பெயர்மாற்றம் செய்யப்பட்டது. சீனக்குடியரசு ஆட்சியில் "கேட் ஆஃப் சைனா" என்று அழைக்கப்பட்டது.
File:Beijing Zhonghuamen 1912.jpg
The great wall of China
1860ல் நடந்த இரண்டாம் ஓப்பியம் யுத்தத்தில் பிரிட்டிஷ்  மற்றும் ஃபிரெஞ்சுத் துருப்புகள் இந்த அலங்கார வாயில் மற்றும் விலக்கப்பட்ட நகரத்தை எரித்துவிடத் திட்டமிட்டனர். இறுதியில் இவைகளை விட்டுவிட்டு சம்மர் பேலஸை எரித்து  தன் ஆத்திரத்தைத் தனித்துக் கொண்டனர். அதன்பின்னர் சியன்ஃபெங் பேரரசர் (Xianfeng Emperor)  அந்நியத்துருப்புகள் தங்கிக்கொள்ள அனுமதி அளித்ததோடு, அந்த நாடுகள் தங்கள் அலுவலகங்களைக் கட்டிக் கொள்ளவும் ஒத்துக் கொண்டார். ஆனால் 1900ல் நடந்த எட்டு  நாடுகள் இணைந்து மேற்கொண்ட பாக்சர் புரட்சியின்போது அவர்கள் பீஜிங்கை முற்றுகையிட்டு இந்த அலுவலகங்கள் அனைத்தையும் எரித்துவிட்டனர்.  
Image result for monument to the people's heroes beijing
Monument of People's Heroes
1954ல் 'கேட் ஆஃப்  சைனா' முற்றிலுமாக எடுக்கப்பட்டதால் சதுக்கம் இன்னும் அகலமானது. மாவோ சேதுங் இந்த சதுக்கத்தை உலகத்திலேயே அகலமான சதுக்கமாக ஆக்குவதற்கு முயற்சி  எடுத்து நவம்பர் 1958ல் ஒரு ஆணையை பிறப்பித்தார். அவருடைய ஆசை, இந்தச் சதுக்கம் குறைந்து 5 லட்சம் பேர் கூடக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பது. 1959 ஆகஸ்ட்டில் இந்த பிராஜக்ட் முடிவடைந்தது. இதற்காக சுற்றியிருந்த பல கட்டடங்களும் அமைப்புகளும் இடித்துத் தள்ளப்பட்டன. 1958-59-ல் சீனக்குடியரசின் 10ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வண்ணம்  சதுக்கத்தின்  தென்புறத்தில் சீன ஹீரோக்களுக்கு ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. அது தவிர சுற்றிலும் 10 முக்கியமான பெரும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் சீனக்கட்டடக்கலையை பறை சாற்றும் பிரமாண்டங்கள். அரண்மனைகளே தோற்றுப் போகும் அளவுக்கு அழகாக அமைந்த கட்டடங்கள் அவை. 
The Great Hall of People

“தி கிரேட் ஹால் ஆஃப் தி பீப்புள்”, “நேஷனல் மியூசியம் ஆஃப் சைனா”, ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

1976ல் மாவோ இறந்தபிறகு "கேட் ஆஃப் சைனா” இருந்த இடத்தில் ஒரு மாபெரும் மசூலியம் அவருக்காக கட்டப்பட்டது. அதனால் கூட்டம் இன்னும் அதிகரிக்கலாம் என்று நினைத்து சதுக்கம் மேலும் அகலமாக்கப்பட்டு, இப்போது முழுச் செவ்வக வடிவில் காட்சியளிக்கிறது. இப்போது இங்கே ஆறுலட்சம் பேர்வரை கூட முடியுமாம். 
18th National Congress of the Chinese Communist Party
Great Hall inside
நினைவுத்தூண் அருகில் சென்று பார்த்தேன். “சுமார் 125 அடி உயரம்”, என்றான் லீ. இந்தச் சதுக்கம் முற்றிலுமாக வெட்டவெளியில் இருந்தது. எங்கும்  மரங்கள் கிடையாது. ஆனால் உயரமான விளக்குத்தூண்கள்  ஆங்காங்கே இருந்தன. ஒவ்வொரு தூணிலும்  கேமரா பொருத்தப்பட்டிருந்தது. எல்லா இடங்களிலும் சீனப் போலீஸ்காரர்களைக் காண முடிந்தது. சீக்ரட் சர்வீஸ்  ஆட்களும் இங்கு யூனிபார்ம் இல்லாமல் இருப்பார்கள் என்று லீ சொன்னான்.
பக்கத்தில் உள்ள சாங்கன் அவென்யூவில் தான் ஊர்வலங்கள் நடக்கும் என்றான். நியூயார்க்கில் உள்ள ஐந்தாம் அவென்யூ போல.  

       இந்தச் சதுக்கத்தின் இன்னொரு சிறப்பு 1949ல் அக்டோபர் 1ஆம் தேதி, இங்குதான் மாவோ சேதுங் மக்கள் சீனக்குடியரசை பிரகடனம் செய்தார். (People's Republic of China). அதுமட்டுமல்லாமல்  ஆண்டு விழாக்களில் சீன ராணுவத்தின் அணிவகுப்பும் இங்குதான் நடக்குமாம்.

'தி கிரேட் ஹால் ஆஃப் சைனா', என்பது நம்மூர் பார்லிமென்ட் கட்டடம் போல. சீன அரசின் உயர் தலைவர்கள் இங்குதான் கூடி முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர்.அதன் பக்கத்தில் உள்ள பெரிய ஹாலில் காலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்குமாம்.

சதுக்கத்தின் நடுவிலிருந்து பார்த்தால் முன்புறம் சாலையைத் தாண்டி விலக்கப்பட்ட நகரின் முன்வாயில் தெரிந்தது. 
Entrance of Forbidden City
அதன் பிரதானமாக மாவோ சேதுங் அவர்களின் பெரிய படமொன்று மாட்டப்பட்டிருந்தது. நடுவில் நினைவுத் தூண் இருந்தது. இடதுபக்கம் கிரேட் ஹால், வலதுபக்கம் மியூசியம். என்னுடைய பின்புறத்தில் மாவோ சேதுங்கின் மசூலியம். அதன் பின்னால் ஜெங்கியாங்மென் என்றழைக்கப்படுகிற பீஜிங்கின் நுழைவாயில் கோபுரம் வண்ணமயமாக ஜொலித்தது.   

மாவோவின் மசூலியத்தில் அவரின் பாடம் செய்யப்பட்ட உடல் வைக்கப்பட்டிருக்கிறது என்பது ஞாபகம் வர, லீயிடம் கேட்டேன் “உள்ளே அனுமதிப்பார்களா”?, என்று.

“தாராளமாக வா போகலாம். நான் வெளியே நின்று கொள்கிறேன். நீ உள்ளே போய்விட்டுவா”, என்றான். மசூலியத்தின் பிரமாண்டமான கட்டடத்தை நோக்கிச் சென்றோம் கிட்டப்போய்ப் பார்த்தால் அங்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். மாவோவின் உடலைப் பார்க்கும் ஆவலோடு நானும் வரிசையில் நின்றேன்.


- தொடரும்.