Thursday, January 29, 2015

நெய்ப்பொங்கலும் பொய்ப்பொங்கலும் !! பகுதி 2

யாரும் இதை தயவு செய்து படிக்கவேண்டாம் -இப்படிக்கு பரதேசி


     ஹலோ நாந்தாங்க மகேந்திரன். இந்த பரதேசிப்பய நான் சொன்ன பதில்களை மாத்தி சொல்லிரப்போரான்னுதான் நானே வந்தேன்
உங்க வசதிக்காக அவனோட புலம்பலை மீண்டும் கொடுத்து , நான் சொன்ன பதில்களை அதுக்கு கீழே கொடுக்கிறேன்.
1.    நம்மூர் விடலைப் பிள்ளைக, வெத்தலை போட்ட நாக்கை சுழட்டிக்கிட்டே சுத்தி நிக்க, ஊர் இளவட்ட நடுக்கல்லை தலைக்கு மேலே தூக்குவேனே, ஞாபகம் இருக்கா?
      என்னது இளவட்ட நடுக்கல்லை தூக்கினியா, உனக்கு சரளைக்கல்லையே சரியா தூக்கி எறியத் தெரியாது, இதுல நடுக்கல்லைத் தூக்கியிருந்தா அன்னிக்கே நட்டுக்கினு இருப்பியேடா  நாதாரி.
2.    நம்மூர் டீனேஜ் பொண்ணுகல்லாம், சேகரு சேகருன்னு பின்னாடி கணக்குப் பண்ண சுத்துவாங்களே. யாரைக் காதலிக்கிறதுன்னு தெரியாம ஒளிஞ்சு ஒளிஞ்சு ஓடுவேனே.
          சுத்துவாங்கதான் ஒத்துக்கிறேன். ஆனா ,அட அசட்டுப்பயலே அது கணக்குப் பண்ண இல்லடா, கணக்கு போட. ஏன்னா, உங்கப்பாதான கணக்கு வாத்தியாரு. ஓ இப்படி  ஒரு நெனப்பு வேற உனக்கு  இருந்துச்சா?
3.    ஜல்லிக்கட்டுக்கு ஒரு மாசம் முன்னாலேயே ஒடம்பை தயார்படுத்தி, நம்ம ஜமீந்தார் வீட்டு காங்கேயம் காளையை முத ஆளாப்பிடிப்பேனே.
        ஏண்டா ஜல்லிக்கட்டையே ஜன்னல் வழிதான் பாப்ப, இதுல காங்கேயம் காளையை அடக்குற மூஞ்சியைப் பாரு.
4.    நம்மூர் கிருஷ்ண ஜெயந்தி வழுக்கு மரத்திருவிழால, வழுக்குற உளுந்தம் பசையையும் அடிக்கிற தண்ணியையும் மீறி உச்சிமேலேறி , அஞ்சு பவுன் தங்கத்தை அள்ளி எடுப்பேனே.
        திருவிழா முடிஞ்சு, வழுக்கு மரத்தைப் புடுங்கிக் கீழே ஒரு ஓரமாப் போடும்போது உச்சியைத் தொட்டுப்பாத்தியே அதையா சொல்ற.
5.    நம்மூர் வடக்குத் தெருவில நடக்கிற கபடி போட்டில ஒத்த ஆளாப் போயி, ஒம்போது பேரைத்தூக்கிட்டு வருவேனே.
   தொத்தப்பயலா இருக்கியே, சுளுக்கிரப் போவுதுன்னு,கபடியிலேயே ஒன்னைச் சேத்துக்க மாட்டாய்ங்க. இப்படி ஒரு  கனவு உனக்கு இருந்துச்சாடா? பாவம்டா  நீ.
6.    நம்மூர் முத்தாளம்மன் கோயில் திருவிழால அம்மன் உலா வரும்போது சிலம்பம் சுழட்டிக்கிட்டு முன்னால வரும்போது ஊரே வாயப்பிழந்துட்டு பாக்கும்ல.
ஆமாமா சிலம்பத்த வேடிக்கை பார்க்கும்போது, எவனோ உன்னை முன்னால பிடிச்சுத்தள்ளி, சிலம்பம் பட்டு மண்டை ஒடைஞ்சு ரத்தம் கொட்றத ஊரே வாயப்பிழந்து உச்சு கொட்டினாங்களே அதைத்தான சொல்ற. (பரதேசி : இவ்வளவு துல்லியமா நியாபகம் வச்சிருக்கானே, ஒரு வேளை இவன்தான் தள்ளிவிட்டிருப்பானோ ?)
7.    நம்ம ஹைஸ்கூலுல வகுப்புக்குள்ளே வந்த நல்ல பாம்பை நடுவுல புடுச்சு சுத்துனேன்ல, பொண்ணுங்களெல்லாம் என் கையைப்பிடிச்சு ஆனந்தக் கண்ணீர் விட்டாங்கல்ல .
நல்ல பாம்பு வந்ததென்னவோ உண்மைதான். ஆனா அதப்பாத்து பயந்துபோய் ஒருவாரம் நீ பள்ளிக் கூடத்துப் பக்கமே வரலையே. என்னடா என்ட்டையே பூ சுத்துற. ஆமா அப்ப உன் டவுசர் நனைஞ்சு போச்சுன்னு நம்பகமான தகவல்கள் சொல்லுதே அது நெசந்தானா?
8.    நம்ம ஜமீந்தார் வீட்டு அடக்க முடியாத முரட்டுக் குதிரையை ஏறி அடக்கி "மதுரைவீரன்" என்ற பெயர் போயி "குதிரைவீரன்னு" பேர் எடுத்தேன்ல.
பெரிய தேசிங்குராஜன் நெனப்பு, ஜமீன்தார் வீட்ல எங்கடா குதிரை இருந்துச்சு, சும்மா கதைவிடுற அதும் எங்கிட்டேயே. பொதி சுமக்க ஒரு கழுதை தானே இருந்துச்சு.
9.   தேனி ரேக்ளா வண்டி ரேஸில,  என் மயிலைக்காளையைப் பூட்டி பறந்து பறந்து வந்து ஜெயிப்பேன்ல.
தேனி ரேக்ளா ரேசில நம்மூர் மயிலைக்காளை ஜெயிச்சது நெசந்தேன். ஆனா உனக்கும் அதுக்கும் என்னலே சம்பந்தம் ?.
10.            எல்லாத்துக்கும் மேல ஊரே திரண்டுவந்து என்னை ஊர்த் தலைவராய் இருக்கச் சொல்லி வற்புறுத்தும் போது, ஜனநாயகம் தளைக்கனும்னு சொல்லி தேர்தல் நடத்திட சொல்லிட்டு ஒதுங்கியிருந்து ஒளிவிசினேன்ல.
இவரு பெரிய ஜனநாயகக் காவலர், ஏண்டா புல்தடுக்கி இப்படி ஒரு ஆசைவேற உனக்கு இருந்துச்சா?  
ஏண்டா இப்படி உனக்கு எந்த சம்பந்தமுமில்லாத, பல கனவுகளைக்கண்டுட்டு நட்ட நாடு ராத்திரில என்னை எழுப்பி நொம்பலப்படுத்தனதற்கு, உன்னை நேரில வந்து ரெண்டு கும்மாங்குத்து விட்டாத்தாண்டா என் மனசு ஆறும். வேற எவனாவது கொண்டை முடிஞ்சவங்கிட்ட சொல்றா  இதையெல்லாம். வைடா போனை.
 இவன் பரதேசி மட்டுமல்ல , இவன் ஒரு பைத்தியக்காரன். பல்பம் மாதிரி இருந்துக்கிட்டு என்னா  அல்பம் . என்னா பொய்யி  என்னா பொய்யி .
பரதேசி :இந்த மலைமுளுங்கி மகேந்திரன் எதையுமே இன்னும் மறக்கலை போல இருக்கு பயபுள்ளை மானத்தை வாங்கிட்டான் . நல்லவேளை ஆரம்பத்திலேயே யாரும் படிக்க வேணாம்னு சொல்லிட்டேன் .சரி விடு வேற யார்ட்டயாவது ட்ரை பண்ணலாம் .


முற்றும்.

Monday, January 26, 2015

நல்லது செய்திட பொய் சொல்லலாம் - சரியே - தவறே. பகுதி 2 முடிவுரை !!!!!!!!!







எல்லாரும் பேசி முடிச்சுட்டாங்க. நல்லாத்தான் பேசினாங்க. ஆனா இதுல யார் பொய் பேசினா யார் உண்மை பேசினான்னு தெரியல. தலை கிறுகிறுத்துப்போச்சு. எனக்கு இருக்கிற சின்ன மூளைக்கு எவ்வளவுதான் தாங்குறது.

காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடான்னு சொன்னது சரியாத்தான் இருக்கு. காயம் என்றால் உடல். இந்த உடம்பை மெய்னுகூட சொல்வாங்க. ஆனா உடம்பு என்ன நிரந்தரமா? இதுவும் மெய்யில்ல பொய்தான்.

கவிஞர் வாலி ஒரு பாடலில் சொல்லியிருப்பார்.

“திருவோடு வந்தது தெருவோடு போனது, மெய்யென்று மேனியை யார் சொன்னது”- வாழ்வே மாயம்.

“கவிதைக்குப் பொய் அழகு”, என்று சொல்வாங்க ஆனாலும் நம்ம கவிதைகளும் பாடல்களும் ரொம்ப ஓவர். ஒரு பாடல் ஞாபகம் வருது. வைரமுத்து எழுதினது.

“அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது”

ஒவ்வொரு துளியிலும் முகமா. ஐயையோ ஆயிரக்கணக்கான முகமா. ஒரு முகத்தையே இங்க தாங்ங்ங்ங்க முடியல.

“இந்திரன் தோட்டத்து முந்திரியே, மன்மத நாட்டுக்கு மந்திரியே” 

இந்திரன் தோட்டத்துக்கு யார்போனது? ரம்பை, ஊர்வசி, மேனகை ஒருத்தரையும் யாரும் பார்த்தது கிடையாது.என்ன செய்றது இத மாதிரி எதைச் சொன்னாலும் பொம்பளைங்க நம்பிராங்க.

அரசியலை எடுங்க கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து பதவியைப் பிடிப்பாங்க எதுக்குன்னு கேட்டா மக்களுக்குச் சேவை செய்யனுமாம். என்ன கதை விடுறீங்க. எத்தனை பொய்.

“உங்கள் பொன்னான ஓட்டுகளைப் போடும்படி உங்கள் பொற்பாதங்களை தொட்டுக் கேட்கிறோம்”னு, அநியாயத்துக்குப்  பொய் சொல்வாங்க. அதையும் நம்பி மக்கள் ஓட்டு போட்டுறாங்க. எலக்சனுக்கு செலவழிக்கிற பணத்தை உங்கள் ருக்கு செலவு செய்யுங்கள். உங்களுக்கு கோயில் கட்டி கும்பிடுவார்கள். ஒரு விசயத்தில மட்டும் எல்லாக்கட்சிகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. இந்தக் கட்சி அந்தக் கட்சின்னு இல்ல, எல்லாக்கட்சிகளிலும் தலைவர் முதல் MLA MP வரை -50 சதவீதத்திற்கு மேல் குற்றப் பின்னணி உள்ளவர்கள்தான். நாடு எப்படி முன்னேறும்?

ஆனால் வாய்மையே வெல்லும். எப்பொழுதும் பொய்சொல்லக் கூடாதுன்னு வரதராஜனும் வான்மதியும் சொல்லியிருக்கிறார்கள்.

“வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்

தீமை இலாத சொலல்”, என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்

இந்திய அரசின் சின்னம் / முத்திரையில் “சத்தியமேவ ஜயதே”, என்ற உபநிஷத் வாசகம் இருக்கிறது. அதன் மொழிபெயர்ப்புதான், தமிழ்நாடு அரசு சின்னத்தில் இருக்கும் "வாய்மையே வெல்லும்" என்பது.

அந்தக் காலத்தில் குருகுலத்துக்குப் படிக்கப்போகும் மாணவனுக்கு குரு சொல்லித்தரும் முதல் பாடம் "சத்யம் வத". அதன் அர்த்தம் உண்மையே பேசு.

என்ன நடந்தாலும் உண்மையே பேசும்போது முதலில் சில தீமைகள் நடந்தாலும், இறுதியில் நன்மையே நடக்கும் என்பதை அரிச்சந்திர மகாராஜாவின் கதையில் படித்திருக்கிறோம். அந்த நாடகத்தைப் பார்த்த மகாத்மா காந்தியடிகளும் இறுதிவரை பொய் சொல்லாமல் வாழ்ந்தார்.

ஆனால் “பொய்மையும் வாய்மை உடைத்து”,ன்னு வள்ளுவர் சொன்னதைக் குறிப்பிட்டு விசுவும் சுபாவும் பல கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல ஆதிசங்கரர் தான் எழுதிய “பிரஸ்னோத்ரரத்ன மாலிகா”வில் "தர்மத்தைக் காக்க பொய் சொல்லலாம்”, என்று சொல்லியிருக்கிறார்.  பிரஸ்ன என்றால் கேள்வி, உத்தர என்றால் பதில். இந்த துதியில் ஏறத்தாழ 200 கேள்வி பதில்கள் உள்ளன. அதில் பாடல் 46-47ல் இது வருகிறது.

கிரேக்க நாட்டு அறிஞர் பிளாட்டோவும் இதையே சொல்லுகிறார். நன்மைக்காக பொய் சொல்வதை அவர் Noble lie  என்று சொல்லுகிறார். கிரேக்க அறிஞர் சாக்ரட்டீசின் சீடர் பிளாட்டோ,பிளாட்டோவின் சீடர் அரிஸ்டாட்டில், அரிஸ்டாட்டிலின் சீடர் அலெக்சாண்டர். அலெக்சாண்டர் இந்தியாவுக்குப் படை எடுத்து வந்ததன் முதல் காரணம், இந்தியாவிலுள்ள ரிஷிகளை எப்படியாவது தன் நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். நான் சொல்லல, சுவாமி விவேகானந்தர் அவருடைய புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

 இன்னொரு உதாரணம் சொல்லி முடிக்கிறேன். மகாபாரதத்தில் குருஷேத்திர யுத்தம் நடக்கிறது. கெளரவர்கள் பாண்டவர்களை விட ஏழு மடங்கு அதிக படைகளை வைத்துள்ளனர். அதோடு பல காரணங்களுக்காக மாபெரும் வீரர்களான, பிதாமகர் பீஷ்மர், கர்ணன், துரோனாச்சாரியர் இப்படி பலரும் அவர்கள் பக்கம். கிருஷ்ணன் இந்த முழு யுத்தத்தையும் சூழ்ச்சியால் தான் வெல்கிறார்.

தர்மயுத்தம் வெல்ல வேண்டும். தர்மனோ பொய் சொல்ல மாட்டான். அதனால் கிருஷ்ணன், துரோனாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமா என்ற அதே பெயரில் ஒரு யானையை உருவாக்கிக் கொல்லச் சொல்கிறார். பீமன் அதைக் கொன்றவுடன் "அஸ்வத்தாமாவுக்கு சாவு" என்று கூச்சல் இடுகிறான். அதனைக்கேட்ட துரோணர் அது உண்மையா என்று தெரிந்துகொள்ள தர்மனிடம் வருகிறார். அவன் சொல்கிறான் "அஸ்வத்தாமா ஹத: நரோவா குஞ்சரோவா", என்று. "அஸ்வத்தாமா சாவு யானையோ மனிதனோ”,என்று அர்த்தம். யானையோ மனிதனோ என்று தர்மன் சொல்வது கேட்காத படி பாண்டவ சேனை பெரிய டமார துந்துபி ஒலிகளை ஒலிக்கச் செய்கிறது. எனவே துரோணர் காதில், “அஸ்வத்தாமா சாவு”, என்பது மட்டும் விழ, அவர் நொந்து போய் ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு தியானத்தில் அமர, திருஷ்டத்யும்னன் அவரைக் கொல்கிறான். இதன் மூலம் தர்மம் வெல்ல பொய் சொல்லலாம் என்று   சொல்லுகிறார்கள்.

நம்ம தலைப்பு, "நல்லது செய்திட பொய் சொல்லலாம்" என்பது. இதில் யாருக்கு நன்மை என்ற கேள்வி எழுகிறது ?. அது சுயநலமா இல்லை பொது நலமா?.

பொய்ல ரெண்டு கலர் இருக்கு. பச்சைபாய் / வெள்ளைப் பொய்.சுயநலத்திற்கு. பொய் சொன்னா அது பச்சைப்பொய். பொது நலத்திற்கு பொய் சொன்னா அது வெள்ளைப்பொய்.இதுல யாரு என்ன கலர் பொய் அதிகமா சொல்றீங்கன்னு அவங்கவுங்களுக்குத்தான்  தெரியும் .

- முடிவாக என்னுடைய தீர்ப்பு என்ன வென்றால், பொதுவாக, தன்னலம் கருதாது, சமூக நலன் ஒன்றையே மனதில் வைத்து, யாருக்கும் தீமையே விளையாது என்றால் "பொய் சொல்லலாம்". இது ஒரு நல்ல மனிதனுக்கு அடையாளம்.

ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் பொய்யே சொல்லாமல் உண்மையே எப்போதும் சொல்லி நன்மை விளைவிப்பவர், அரிச்சந்திரன் போல, காந்திஜி போல, மகாத்மா ஆகலாம் என்று சொல்லி வாய்ப்புக் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன்.எங்கள் வாழ்வு வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.

பின்குறிப்பு:

என்னுடன் இணைந்து பேசிய பேச்சாளர்கள் வரதராஜன் ,விசு,வான்மதி மற்றும் சுபா ஆகியோருக்கு என் நன்றிகள்.

எனக்கும் என் குழுவுக்கும் வாய்ப்பு கொடுத்த ஆனந்தம் நிர்வாகக் குழுவுக்கும் குறிப்பாக நண்பர் கவிஞர் சிவபாலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

.

 

  

 

Thursday, January 22, 2015

நெய்ப்பொங்கலும் பொய்ப்பொங்கலும் !!!!!!!!!!!!!!! பகுதி 1


“மகேந்திரா ஏலேய் மகேந்திரா?”

“சொல்றா சேகரு, நேரங்கெட்ட நேரத்தில கூப்பிடும்போதே நெனைச்சேன். அது நீயாத்தேன் இருக்கும்னு.”

“பொங்கல் நல்லாப்போச்சா?”
“சூப்பரா போச்சு மச்சி”

“ஹீம் நியுயார்க்கில வாக்கப்பட்ட நான் என்னத்த கண்டேன்.  அதும் பண்டிகை காலத்துல நம்மூரை ரெம்ப மிஸ் பண்ரேண்டா. ஒரு அடா புடான்னு பேசறதுக்கு கூட ஒரு ஆள் இல்லடா. கொஞ்ச நேரம் பேசலாமா ப்ளீஸ்? ”

“சர்ரா சீக்கிரம் சொல்லு, ஆவ்வ்வ்வ் நடுராத்திரில எழுப்பி இப்படி நக்கலடிக்கிற”.  

“டேய் ஒரு சவளம் கரும்பை ஒரே முட்டா தின்பேல்ல. இங்கன ஒரு துண்டு கூட இந்த வருஷம் கிடைக்கலடா”.

“விர்ரா விர்ரா  அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்ல.”

“நெய்ப்பொங்கல் செஞ்சு தாம்மான்னு கேட்டா, என் பொண்டாட்டி பொய்ப்பொங்கல் செஞ்சு தந்தா. மெல்லவும் முடியல முழுங்கவும் முடியல”.

“நாய் பெற்ற தெங்கம்பழம் கதைதான், உனக்குத்தான் சுகர் ஆச்சே, டயட் பொங்கல் செஞ்சிருப்பாங்க”.

“நான் நம்மூரை ரெம்ம்ம்ப மிஸ் பண்றேண்டா”

“ அ வேற என்னதாண்டா மிஸ் பண்ற சொல்லித் தொலையேன்டா”.

“சொல்றேன் கேளு. மொத்தம் பத்து விஷயம் இருக்கு” 
1.    நம்மூர் விடலைப் பிள்ளைக, வெத்தலை போட்ட நாக்கை சுழட்டிக்கிட்டே சுத்தி நிக்க, ஊர் இளவட்ட நடுக்கல்லை தலைக்கு மேலே தூக்குவேனே, ஞாபகம் இருக்கா?


2.    நம்மூர் டீனேஜ் பொண்ணுகல்லாம், சேகரு சேகருன்னு பின்னாடி கணக்குப் பண்ண சுத்துவாங்களே. யாரைக் காதலிக்கிறதுன்னு தெரியாம ஒளிஞ்சு ஒளிஞ்சு டுவேனே.

3.    ஜல்லிக்கட்டுக்கு ஒரு மாசம் முன்னாலேயே ஒடம்பை தயார்படுத்தி, நம்ம ஜமீந்தார் வீட்டு காங்கேயம் காளையை முத ஆளாப்பிடிப்பேனே.

4.    நம்மூர் கிருஷ்ண ஜெயந்தி வழுக்கு மரத்திருவிழால, வழுக்குற உளுந்தம் பசையையும் அடிக்கிற தண்ணியையும் மீறி உச்சிமேலேறி  அஞ்சு பவுன் தங்கத்தை அள்ளி எடுப்பேனே.


5.    நம்மூர் வடக்குத் தெருவில நடக்கிற கபடி போட்டில ஒத்த ஆளாப் போயி, ஒம்போது பேரைத்தூக்கிட்டு வருவேனே.

6.    நம்மூர் முத்தாளம்மன் கோயில் திருவிழால அம்மன் உலா வரும்போது சிலம்பம் சுழட்டிக்கிட்டு முன்னால வரும்போது ஊரே வாயப்பிழந்துட்டு பாக்கும்ல.


7.    நம்ம ஹைஸ்கூலுல வகுப்புக்குள்ளே வந்த நல்ல பாம்பை நடுவுல புடுச்சு சுத்துனேன்ல, பொண்ணுங்களெல்லாம் என் கையைப்பிடிச்சு ஆனந்தக் கண்ணீர் விட்டாங்கல்ல .

8.    நம்ம ஜமீந்தார் வீட்டு அடக்க முடியாத முரட்டுக் குதிரையை ஏறி அடக்கி "மதுரைவீரன்" என்ற பெயர் போயி "குதிரைவீரன்னு" பேர் எடுத்தேன்ல.

9.    தேனி ரேக்ளா வண்டி ரேஸிலஎன் மயிலைக்காளையைப் பூட்டி பறந்து பறந்து வந்து ஜெயிப்பேன்ல.


10. எல்லாத்துக்கும் மேல ஊரே திரண்டுவந்து என்னை ஊர்த் தலைவராய் இருக்கச் சொல்லி வற்புறுத்தும் போது, ஜனநாயகம் தளைக்கனும்னு சொல்லி தேர்தல் நடத்திட சொல்லிவிட்டு ஒதுங்கியிருந்து ஒளிவிசினேன்ல.

அது ஒரு இளமைக்காலம்டா மகேந்திரா.

இதையெல்லாம் மகேந்திரன்.  அமைதியா கேட்டான்னு நெனைக்குறீங்க? அதான் இல்ல. என் முத்தான பத்து சாதனைகளுக்கும் தன் சத்தான பதிலைக் கொடுத்தான்.

அத அடுத்த வாரம் விசாலக்கிழமை  சொல்றேன் ,மறக்காம வந்துருங்கப்போய்.


தொடரும் >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Monday, January 19, 2015

நல்லது செய்திட பொய் சொல்லலாம் - சரியே - தவறே.



நியூயார்க்கில் உள்ள "ஆனந்தம்" என்ற இலங்கைத்தமிழர்  அமைப்பு திசம்பர் ஆறு  2014  அன்று  நடத்திய பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று அடியேன் நிகழ்த்திய தொடக்கவுரை.
மூச்சுக்கொடுத்த இறைவனுக்கும், தமிழ்ப்
பேச்சுக் கொடுத்த என் அம்மாவுக்கும்,
வாய்ப்புக் கொடுத்த சபைக்கும் என்
வணக்கமும் நன்றிகளும்.
அம்மான்னு சொன்னதும் எந்த அம்மாவை சொல்னேன்னு யோசிக்காதீங்க. என் சொந்த அம்மாவைத்தான் சொன்னேன்.  
“செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்”,என்பார்கள். இங்கு முதலில் வயிற்றுக்கு நல்ல காரசாரமான உணவை உண்டு விட்டு , அப்படியே போய் விடாமல்  இப்போது செவிக்குணவு தேடி வந்துள்ள அனைவருக்கும் நன்றி
அன்புப் பெரியோர்களே
அருமைத் தாய்மார்களே
இனிய குழந்தைகளே.
-என்ன எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? என்னுடைய குரு பேராசிரியர் சாலமன் பாப்பையா மாதிரி கொஞ்சம் try பண்ணேன். ம்ஹீம் அவர் மாதிரி  வருமா?
அவருடைய சாரீரமும் சரி, சரீரமும் சரி நல்ல கனமானவை.எனக்கு சாரீரமும் சரியில்லை (இருமியபடி   ) சரீரமும் சரியில்லை.
நான் என்பதுகளில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது, ஐயா அவர்கள் தமிழ்த்துறை தலைவராக இருந்தார்.

நண்பர் சிவபாலன் என்னை நடுவராக இருந்து பட்டிமன்றம் நடத்தித்  தர வேண்டும் எனக் கேட்டபோது நமக்கு என்ன தகுதி இருக்குன்னு நினைச்சேன். நம்ம ரொம்ப குண்டாவும் இல்லை, ரொம்ப ஒல்லியாவும் இல்லை. ரெண்டுக்கும் நடுவுல இருக்கிறதால நடுவரா போட்டிருப்பாரோன்னு  சந்தேகம் வந்தது. சீச்சீ இது எனக்கு மொக்கையா இருக்கேன்னு விட்டுட்டேன். ஆனா அவர் கேட்டார், உங்களுக்கு மணியடிக்கத் தெரியுமான்னு, மணி அடிக்க என்ன PHD -யா படிச்சிருக்கனும்னு நெனைச்சு, தெரியும்னேன். “அப்ப நீங்கதான் நடுவர்னு”, சொல்லி, இந்த மணியை என் கையில குடுத்துட்டார். இப்ப நான் இந்த மணியை நல்லா அடிக்கிறேனா இல்லையான்னு நீங்கதான் தீர்ப்புச் சொல்லணும்.
இங்கு ஆனந்தம் நிகழ்ச்சியில் திரளாகக் கூடியிருக்கும் தமிழ் மக்களைப் பார்க்கும் போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.
“தமிழ் இனி மெல்லச்சாகும்” என்று கவிஞர் சொல்லியது உண்மையாகி விடுமோ என்ற பயம் எனக்குண்டு. ஏன்னு கேளுங்க. தமிழ்நாட்டில இப்ப தமிழ் இல்லை. போன மாசம் தமிழ்நாட்டுல இருந்து ஒருவர் வந்திருந்தார். தமிழ்நாடுன்னு சொன்னேன். இல்லைங்க அது இப்ப 'டமில்நாடு'. இந்த டமில் நாட்டுத் டமில் எப்படியிருக்குன்னு பாருங்க.
“Yesterday evening flight எடுத்து வந்தேன். flight full -ஆ இருந்துச்சு. Morning  flight delay ஆனதால கொஞ்சம் late ஆயிருச்சு. Is it ok?”
இதுதாங்க டமில் இதுக்கு பேர் தமிழா.
ஐயா தமிழில் பேசக்கூடாதான்னு  கேட்டா, “நாஷ்டா துன்னுச்சா? ன்னு கேட்கிறார் .அய்யய்யோ இதுக்கு அதுவே பரவாயில்லை.
“எனக்கு டமில் கொஞ்சும் கொஞ்சும் தெரியும்”. இது வேற நாட்டு மக்கள் சொல்லல தமிழ் நாட்டுல பிறந்து வளர்ந்த பிள்ளைகள் சொல்லுது. அதுல பெற்றோருக்குப் பெருமை வேற.
ஆனால் தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவவேண்டும் என்று பாரதியார் சொன்னது இப்போது இலங்கைத் தமிழர்களால் நிறைவேறி உள்ளது. கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அவர் பேசும் தமிழும் உச்சரிப்பும். இன்னும் தமிழாகவே இருக்கிறது.
“குழலினிது யாழ் இனிது என்று சொல்வார்கள் தம்மக்கள் மழலைச்சொல் கேட்காதவர்கள்”,  என்பது பழசு. “குழலினிது யாழ் இனிது என்று சொல்வார்கள் நம் யாழ்ப்பாணத்தமிழ் கேட்காதவர்கள்”, என்பது புதுசு.  என்னயாது இவர்கள் பேசும் தமிழ் இவ்வளவு இனிமையாக இருக்கே என்று வியந்தேன். அது ஏன்னா அதான் உங்க ஊர் பேரிலயே யாழ் இருக்கே.
நான் உறுதியாகச் சொல்வேன், வெளி நாடுகளில் இப்போது, புலம் பெயர்ந்த தமிழர்களால்தான் தமிழ் வாழ்கிறது. எனவே தமிழ் சாகவே சாகாது.

சரி தலைப்பிற்கு வருவோம்.
நல்லது செய்திட பொய் சொல்லலாம் - சரியா?, தவறா?
என் மனைவிக்கு என்னோடு கல்யாணம் ஆகி 22 வருடம் ஆயிருச்சு. அப்ப எனக்கு எத்தனை வருஷம்னு ஆச்சுன்னு கேட்கறீங்களா? ஏங்க என்னப்பாத்தா கல்யாணம் ஆகி 22 வருஷம் ஆன மாதிரியா தெரியுது?
இத்தனை வருஷம் கழிச்சும், அவ இப்ப அடிக்கடி என்னைக் கேட்கும் கேள்வி, “என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”. நீங்களே  சொல்லுங்கஇதுக்கு நான் உண்மை சொல்றதா இல்ல பொய் சொல்றதா?.கண்ணதாசன் சொன்னபடி,”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரம். மன்னிக்கவும் இறைவன் கொடுத்த வரம்
நான் அடிக்கடி பொய் சொல்லமாட்டேன், ஆனா அப்பப்ப பொய் சொல்வேன்.
"உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு", ஒரு பொய் ஐயையோ தப்பு தப்பு உண்மையைச் சொன்னேன். “போங்க நீங்க பொய் சொல்றீங்கன்னு”, சொல்றா.
இந்த பெண்கள்ட்ட ஒரு விஷயம். நீங்க எந்தப் பொய்யைச் சொன்னாலும் உடனே கண்டுபிடிச்சிருவாங்க. ஆனா நீங்க ஒரே ஒரு பொய்யைச் சொன்னா மட்டும் கண்டிப்பா நம்பிருவாங்க.
அது என்னன்னா, "ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே",. என்ன நான் சொல்வது உண்மைதானே.
இந்தப் பொய் சொல்றது எங்கிருந்து  வந்துச்சுன்னு நினைச்சா ஆச்சரியமாயிருக்கு.
எங்கம்மாதான் எனக்கு முதல் கிரேட் டீச்சர். தமிழை அவர்களிடம் தான் கற்றுக் கொண்டேன். அந்த வகுப்பறையில நடந்ததெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு. ஆனா எங்கம்மாதான்  டீச்சர்ங்கறதால நான் மட்டும் அவுங்க மேஜை  மேலதான உட்காருவேன். ஏன்னா 5 ஆவது வயசுல நான் முத கிரேட் படிச்சாலும், ஒரு வயசுலர்ந்து அங்கதான உட்கார்றேன்.    
வகுப்பு ஆரம்பிக்கும் முன்னால எல்லோரையும் நிற்க வைத்து கண்களை மூடி பிரார்த்தனை பண்ணுவாங்க எங்கம்மா. பிரார்த்தனை முடிச்சு கண்ணைத்திறந்தவுடனே, யாராவது ஒரு பொண்ணோ பையனோ ஓடி வருவாங்க. டீச்சர் என் சிலேட்டை யாரோ உடைச்சுட்டாங்கன்னு". இப்படி தினம் ஒரு சிலேட் உடைஞ்சிச்சு. யாரு உடைக்கிறாங்கன்னு கண்டே பிடிக்க முடியல. ஒரு நாள் என்ட்ட கேட்டாங்க, "ஏன்டா தம்பி நீ ஏதும் உடைச்சியான்னு?”, நான் சொன்னேன் "சத்தியமா இல்லம்மான்னு". ஆனா நான் அப்ப சொன்னது பொய். என் அம்மா இங்கதான் இருக்காங்க, “அம்மா அந்த சிலேட்களை உடைச்சது வேற யாருமில்ல நான்தான்”. எல்லோரும் கண்ணை மூடியவுடனே நைஸா கீழே இறங்கி வந்து, சிலேட்டை ஒரு மிதி மிதிச்சுட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி மேலே ஏறி உட்கார்ந்திருவேன்.
“அம்மா என்னை மன்னிச்சுருங்க”. அப்பாடா இப்பதான் நிம்மதியாயிருக்கு, ரொம்ப நாள் உறுத்திட்டே இருந்துச்சுவேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து பாக்கறீங்க. கிளாஸ் டம்ளர் உடைச்சு கிடக்கு. யாரு டைச்சுதுன்னு கேளுங்க. நான் இல்லன்னு பொய்தான் முதல்ல வரும்.
சிறு குழந்தைகள்ட்ட கேளுங்க "ஏய் யார் இதைச் செஞ்சது". நான் இல்லைன்னு பொய்தான் வரும். இவ்வளவு சின்னக் குழந்தைகளுக்கு பொய் சொல்ல கத்துக் கொடுத்தது யாரு?
இது ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து வருதாம். சாப்பிடக் கூடாதுன்னு கடவுள் சொல்லியும் கேட்காம விலக்கப்பட்ட கனியைச் சாப்பிட்டதால பாவம் வந்தது உலகத்தில். அது பரம்பரை பரம்பரையாய் வருது.
பொய்யால அழிந்தவங்களும் இருக்காங்க, வாழ்ந்தவங்களும் இருக்காங்க.
நான்கு பேரும் நல்ல பேச்சாளர்கள், சன் டிவி “கல்யாணமாலை” பட்டி மன்றத்தில் என்னோடு இணைந்து  பேசின இவர்களுக்கு ரசிகர்கள் ஏராளம். இவங்களோட விவாதம் பண்ணி ஜெயிக்க முடியாதுன்னுதான்  நான் நடுவில வந்து உட்கார்ந்திட்டேன். வாதங்கள் துவங்கட்டும் .