Thursday, March 31, 2016

சகாயம் சந்தித்த சவால்கள் !!!!!!!!!!!!!

படித்ததில் பிடித்தது

விகடன் பிரசுரம்
ஜனவரியில் பொங்கலுக்காக நடந்த புத்தகத் திருவிழாவுக்கு செல்ல வாய்ப்புக் கிடைத்தது. மக்களுக்கும் புத்தகங்களுக்கும்  நடுவே முண்டியடித்து மேய்ந்ததில் விகடன் வைத்திருந்த ஸ்டாலில்  கண்ணில் பட்ட சகாயத்தை எட்டி எடுத்தேன் .
கே.ராஜா திருவேங்கடம் எழுதிய இந்தப்புத்தகம் டிசம்பர் 2013ல் முதலில் வெளியிடப்பட்டு, நவம்பர் 2015 ல் ஐந்தாவது பதிப்பாக வெளிவந்துள்ளது .
சகாயம் அவர்களின் சாதனைகளின் முழுத்தொகுப்பு இது இல்லையென்றாலும்  அவரின் சில முயற்சிகளையும் எழுச்சிகளையும்  கோடிட்டுக் காட்டுவதில் இந்தப்புத்தகம் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கிறது. இனி படித்து, அதிர்ந்த, ஆச்சரியப்பட்டவைகளின் தொகுப்பு.
சகாயம் அவர்களை நான் சென்னையில் சந்தித்தது எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வு .அவரின் சந்திப்பு பற்றி நான் எழுதிய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும் http://paradesiatnewyork.blogspot.com/2016/01/blog-post.html .

1.   P.S. ராகவன் IAS அவர்கள் எழுதியுள்ள முன்னுரையில், பல எதிர்ப்புகளிடையே இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக, சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் கொண்டுவந்த திட்டம்தான் IAS. ஆனால் அவருடைய நோக்கம் நிறைவேறுகிறதா? என்று கேட்கிறார் .
2.   Transparency International என்ற நடுநிலையான உலக நிறுவனம், ஊழலில் தமிழ்நாட்டுக்கு 2-ஆவது இடம் கொடுத்திருக்கிறது.
3.   பல மாநிலங்களில் வேலை பார்த்த P.S ராகவன் சொல்கிறார், "மெத்தனத்திலும், மக்களிடம் பண்பின்றி நடந்து கொள்வதிலும், பரிவின்மையிலும், தமிழ்நாட்டு நிர்வாகம் ஈரமற்ற இயந்திரமாக செயல்படுகிறது".
4.   ஆசையோடு எடுத்து வந்த மாங்காயை, காவல்காரரிடம் திரும்பக் கொடுத்துவிட்டு வா என்று சொன்ன அம்மாவிடம், உண்மையையும் நேர்மையையும் சகாயம் கற்றுக் கொண்டபோது அவர் வயது ஐந்து.
5.   "என்னிடமுள்ள சத்தியமும் நேர்மையும், சமூகத்தின் மேலுள்ள உண்மையான பரிவால் வந்தவை", என்கிறார் சகாயம்.
6.   புதுக்கோட்டை அருகிலுள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சகாயம்.
7.   கலெக்டர் ஆகவேண்டும் என்று சிறுவயதிலேயே சொலிக்கொடுத்து வளர்த்தவர் அம்மா, அப்பா, அதன்பின் பள்ளி ஆசிரியர் .
8.   புதுக்கோட்டை  கல்லூரியில் BA வரலாறு, லயோலா கல்லூரியில் முதுகலை சமூகப்பணி, சென்னை சட்டக்கல்லூரியில் BL, ஆகியவை சகாயத்தின் படிப்புகள்.
9.   "ஒரு மனிதன் நேர்மையாக இருக்க அவனுடைய குடும்பத்தின் ஒத்துழைப்பும் மிக அவசியம், அப்படி என் மனைவியும், பிள்ளைகளும் பல இன்னல்கள் வந்தாலும் எனக்கு  துணையாக இருப்பது எனக்கு கூடுதல் சக்தியைக் கொடுக்கிறது", என்கிறார் சகாயம்.
10.               வேலைக்குச் சேர்ந்து 13 வருடங்கள் வரை இவருக்கு வங்கிக்கணக்கு  கிடையாது.
11.                சகாயம் சந்தித்த முதல் சவால், அவர் டிஆர்ஓ-ஆக இருக்கும் போது பெப்சி என்ற மாபெரும் பன்னாட்டு நிறுவனத்தைப் பூட்டிப் போட்டது.
12.               தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நாட்டுத்தலைவர்களை விட நடிகர்களைத்தான் அதிகமாக தெரிந்திருக்கிறது.
13.               பகிரங்கமாக தன் சொத்துப் பட்டியலை வெளியிட்ட முதல் IAS அதிகாரி சகாயம்.
14.               தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில், " 21 ஆண்டுகால அரசுப் பணியில் எங்காவது சிறு ஊழல் செய்து இருந்தாலோ, ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கி இருந்தாலோ, என்னைப் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போடலாம்", என்று எழுதிய நெஞ்சுரம் யாருக்கு வரும்.
15.               கோஆப்டெக்ஸில்  பணிபுரியும் போது "வேட்டி தினம்", தாவணி தினம் கொண்டுவந்து நெசவாளர்களுக்கு உதவினார்.
16.               "நேர்மை என்பது அரசுப்பணியாளர்கள் மட்டுமல்ல, முதல் குடிமகன் தொடங்கி சமூகத்தின் கடைசி மனிதன் வரை கடைபிடிக்க வேண்டிய பண்பு", என்கிறார்.
17.               சகாயம் மதுரையின் கலெக்டராக இருந்தபோது கொண்டுவந்த திட்டம் தான் உழவன் உணவகம்.


தேர்தல் வரும் இந்தச்   சமயத்தில், நம் அரசியல்வியாதிகள் எல்லோரும் இந்தப்புத்தகத்தை ஒரு முறை படித்தால் நன்றாக இருக்கும் .சகாயம் அவர்களை நான் சென்னையில் சந்தித்தது எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வு .
        நேர்மை வழியில் நடப்பவர்களுக்கு உத்வேகத்தையும், நேர்மை வழியில் நடக்க நினைப்பவர்களுக்கு தூண்டுகோலாகவும் இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முற்றும்

Thursday, March 24, 2016

இசைஞானி இளையராஜா ஒரு எழுத்தாளரா ?

படித்ததில் பிடித்தது.
யாருக்கு யார் எழுதுவது - இசைஞானி  இளையராஜா.
கவிதா வெளியீடு.

 யாருக்கு யார் எழுதுவது?
இளையராஜா, இசையமைப்பதில் முழுக்கவனம் செலுத்தினாலும், பாடல்களைப் பாடுவதிலும், பாடல்களை எழுதுவதிலும் திறமை வாய்ந்தவர் என்று நம் எல்லோருக்கும் தெரியும். பல பாடல்களின் முதல் அடிகளை அவர்தான் எழுதினார்  என்பதும் கேள்வி. ஆனால் அவர் எழுத்தாளராக பரிணமித்து பல புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்பது பலபேருக்குத் தெரியாத உண்மை. அப்படி எழுதிய ஒரு ஐந்து புத்தகங்களின் தொகுப்புதான் “யாருக்கு யார் எழுதுவது?”, என்ற இந்தப் புத்தகம். அந்த ஐந்து புத்தகங்கள், "பால் நிலாப் பாதை", "சங்கீதக் கனவுகள்", "வழித்துணை", "இளையராஜாவின் சிந்தனைகள்", "வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்குது" ஆகியவை ஆகும்.
அவற்றில் நான் படித்து ரசித்தவற்றை இதன் ஐந்து தலைப்புகளில் புல்லட்டில் தருகிறேன்.
ilayaraja

பால் நிலாப் பாதை:
1.    இந்தப்புத்தகத்தில் இளையராஜாவின் பால்யகாலம், சென்னைக்கு வந்தது, படிப்படியாக முன்னேறியது ஆகியவற்றை விவரிக்கிறார்.
2.    தான் பிறந்த ஊரான பண்ணைப்புரத்தில், ஒரு மூங்கிலில் ஓட்டை துளைப்போட்டு தானே செய்த புல்லாங்குழலில் வாசித்துப் பழகி இசைத்தது ஆச்சரியத்தை அளித்தது.
3.    "எனக்கு நண்பர்களே இல்லை, நானே எனக்கு நண்பன்," என்று சொல்லுவது கொஞ்சம் உறுத்தியது.
4.    ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் நடுவில் அல்லாடி, தன் அண்ணன் பாவலர் வரதராஜன் மூலம் கம்யூனிச நாத்திகத்திற்கு ஈர்க்கப்பட்டதை சொல்லுகிறார்.
5.    காரித்தோடு ஏலக்காய்த் தோட்டத்தில் தன் சகோதரன் பாஸ்கரோடு ஒரு வாரம் வேலை பார்த்ததில் கிடைத்த வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்கிறார்.
6.    அதில் தோட்டத் தொழிலாளிகளின் உழைப்பு, காதல், மோதல், சாதல் பட்டினி ஆகியவற்றை தெளிவாக விளக்குகிறார்.
7.    யுவனுக்கு ஏற்பட்ட வயிற்று வலியைப்பற்றி எழுதுகிறார்.
8.    MSV-யை விட்டதால் ஸ்ரீதரோடு கொண்ட பிணக்கம், எம்ஜியாரோடு போட்ட சண்டை ஆகியவற்றைக் கூறுகிறார்.
9.    லண்டனின் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவின் தலைவர், ஜான் ஸ்காட்டுடன்  கொண்ட அறிமுகத்தைச் சொல்கிறார்.
10. தன்ராஜ் மாஸ்டரிடம் மாணவராகச் சேர்ந்து படித்த அனுபவங்களையும் அதன் மூலம் டிரினிடி காலேஜில் படித்துத் தேறியதையும் பகிர்கிறார்.
11. இசையமைப்பாளர் GK வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராகச் சேர்ந்து கன்னட / தெலுங்கு திரையுலகில் பல படங்கள் இசையமைத்ததை சிலாகிக்கிறார்.
12. “நத்திங் பட் வின்ட்”, வெளியிடும் காலத்தில் நவ்ஷத் அலி வந்து பாராட்டியதைச் சொல்லி பெருமைப்படுகிறார்.
13. ஹேராம் படத்திற்கு புடா பஸ்ட் (Budapest) சென்று இசையமைத்த அனுபவங்களைச் சொல்லி மகிழ்கிறார்.
14. ஹெர்னியா ஆப்பரேஷன் பண்ணி பேசமுடியாமல் இருந்த போது விசிலில் இசையமைத்த "காதலின் தீபமொன்று" என்ற பாடலின் கதையைச் சொல்லுகிறார்.
15. கடுமையான வயிற்று வலியுடன் கஷ்டப்பட்ட போது இசையமைத்த "காட்டு வழி போற  பெண்ணே " பாடலைப் பாடியதைப் பற்றிக் கூறுகிறார்.
16. சிவாஜியுடன் இருந்த ஆத்மார்த்தமான பக்தி, உறவைப்பற்றி சொல்லுகிறார்.

II சங்கீதக் கனவுகள்

European musicians have teamed up with Ilayaraja
Add caption
1.    இந்தப்புத்தகத்தில் 1983ல் இளையராஜா போன உலகச்சுற்றுலா பற்றி எழுதுகிறார்.
2.    பிரான்சில் மிகப்பெரிய கம்போசரான  பால் மரியாவைச் சந்திக்கிறார்.
3.    வியன்னாவில்  பீதோவன்,  மொஸார்ட்  ஆஸ்திரியாவில் ஷீபர்ட்  ஸ்ராவ்ஸ்  ஆகிய நினைவிடங்களுக்குச் செல்லும் போது  அவருக்கு ஏற்பட்ட அதிர்வுகள் உணர்வுகளைச் சொல்கிறார்
4.    வெளிநாடுகளில் தங்களுடைய இசைமேதைகளை எப்படியெல்லாம்  போற்றி  அவர்களின் நினைவிடங்களை  எப்படியெல்லாம் பராமரிக்கிறார்கள். ஆனால்  நம் நாட்டில் தியாகையர், சேக்கிழார் நினைவிடங்கள்  எப்படி சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என்று  சொல்லி வருத்தப்படுகிறார்
5.    கிழக்கு  ஜெர்மனியில் ஃபிராங்பர்ட், பெர்லின் ஆகிய இடங்களில் பாக் வாழ்ந்த இடங்களுக்குச் செல்கிறார்
6.    லண்டன் ரிக்கார்டிங் தியேட்டரைச்  சுற்றிப்பார்க்கிறார்.
7.    நியூயார்க் , வாஷிங்டன்  DC,  அட்லான்டா  சான்பிரான்சிஸ்கோ  ஆகிய இடங்களுக்குச்  செல்கிறார்.  
8.    அதற்குள் நம் நாட்டு நினைவுகள் வந்து விட டூரை பாதியில் முடித்து தாய்நாடு  திரும்புகிறார்.

III வழித்துணை & IV வெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குது.
 இப்பகுதியில்  இளையராஜா எழுதிய கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன ஒன்றிரண்டு தவிற அது கவிதைபோல் தோன்றவுமில்லை தொணிக்கவுமில்லை.
V.இளையராஜாவின் சிந்தனைகள்  
1.    இளையராஜாவின் தத்துவ சிந்தனைகள் ஏராளமாக இதில் இடம்  பெற்றிருக்கின்றன.
2.    நினைத்தவற்றையும் தோன்றியவைகளையும் எழுதியுள்ளார்.
3.    அவர் ரமண மகரிஷியின்  பக்தர் என்று  எல்லோருக்கும்  தெரியும்
4.    மைசூருக்குச் செல்லும் வழியில் நோய் வாய்ப்பட்டு கோவிலுக்குச் செல்ல நினைத்ததும், அது  சுகமானதால் மூகாம்பிகை பக்தனாகவும் மாறியதோடு தன் உடைகளையும் எளிய உடைகளாக மாற்றிக் கொள்கிறார்.
5.    பல இடங்களில் ஆன்மீகத்தத்துவங்கள் என்பதையும் மீறி விரக்தியும், வெறுமையும் ஏனோ வெளிப்படுகின்றன.
6.    இன்னும் சில இடங்களில் முன்னுக்குப்பின் முரணாகவும் இருகின்றன.
7.    பல ஆன்மீகப் புத்தகங்களைப் படித்திருப்பது, திருக்குறளை மிகவும் விரும்பிப் படித்தது வெளிப்படுகிறது.
ஆனால் கோபதாபங்களையும், பெருமைகளையும் இன்னும் இளையராஜா விடவில்லையே. அப்படி விட்டிருந்தால் இளையராஜா ஆயிரம் நிகழ்ச்சியில் கங்கை அமரன், பாரதிராஜா  வைரமுத்து ஆகியோர் வந்திருப்பார்களே.
எப்படி இருந்தாலும் இந்தத்தலைமுறையின் ஒப்பற்ற திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா என்பதில் யாருக்காவது சந்தேகம் வருமா என்ன? இளையராஜாவின் இசையை எப்போதும் நான் கொண்டாடுவோம். அவரைத்தூரத்தில்  வைத்தே ரசிப்போம் -இளையராஜா ரசிகர்கள் அவரது மற்றொரு பரிமாணத்தை அறிந்து கொள்ள அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

முற்றும்

Monday, March 21, 2016

சீனப்பெருஞ்சுவரில் பரதேசி!!!!!!!!!!!

சீனாவில் பரதேசி -5
இதன் முதல் நான்கு பகுதிகளைப்படிக்க கீழே சுட்டவும்
பகுதி  1 :  http://paradesiatnewyork.blogspot.com/2016/02/blog-post_22.html
       பகுதி  4: http://paradesiatnewyork.blogspot.com/2016/03/blog-post_14.html

Beijing Tourist Bus

மிதுளா வந்து   என் அருகில் உட்கார்ந்தது எனக்கு திகைப்பாக இருந்தது .
"என்ன என் பக்கத்தில் உட்கார்ந்து விட்டாய்?
“உங்களைப் பற்றி இன்னும்  கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்று ஏன் உட்காரக்கூடாதா?”
“இல்லை இல்லை, உட்கார், உன் ஹஸ்பன்ட் தனியாக உட்கார்ந்திருக்கிறாரே”,
“ஹஸ்பண்டா ?”, என்று கேட்டுவிட்டு பகபக வென்று சிரித்தாள்.
"ஓ நீங்க புதிதாக திருமணம் ஆகி ஹனிமூனுக்கு இங்கே வந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்".
"ஹனிமூனா?" மேலும் சிரிக்க சிரிக்க அவள் முகம் இரத்தச் சிவப்பாக மாறியது வேடிக்கையாக இருந்தது.
"ஓ அப்ப காதலர்களா?"
"நோநோ நோ, இல்லவே இல்லை" என்று மறுத்துவிட்டு அவள் சொன்னாள்.
இருவரும் சார்ட்டர்டு அக்கவுன்ட் முடித்து பெங்களூர் HCL-ல் ஆடிட்டர்களாக வேலை பார்க்கிறார்கள். ஷங்காயில் ஒரு ஆண்டிறுதி கான்ஃபிரஸீக்காக கம்பெனி சார்பாக போகிறார்கள். போகிற வழியில் பீஜிங்கில் ஓரிரு இடங்களைப் பார்த்துவிட்டு, இங்கிருந்து புல்லட் டிரைனில் ஷங்காய் போய்விட்டு அப்படியே அங்கிருந்தே பெங்களூர் போய்விடுவதாக பிளான். வேறு வேறு ரூமில் தங்கியிருந்ததும் பின்னர்தான் தெரிந்தது.
அதன்பின் முழுவதும் என்கூடவே இருந்தாள்.

பஸ் வந்து ஒரு இடத்தில்  நின்றுவிட்டு, அங்கிருந்து எங்களைப் போகச் சொல்லிவிட்டு மதிய உணவுக்குள் கீழே வரும்படி சொன்னார்கள்.மேலே பெரியதாக இருந்த நுழைவாயிலில் நுழைந்து, அங்கிருந்த கேபிள் காரில் ஏறி மலையில் இருந்த ஒரு உயரமான இடத்திற்குச்  சென்றவுடன் எதிரே பிரமாண்டமான, மதில் சுவர் அந்த மலை முழுவதும் வளைந்து வளைந்து சென்றது. மேலே ஏறுவதற்குள் அதனைப்பற்றி சில குறிப்புகள்.
Stone in the entrance

சீனப்பெருஞ்சுவரைப் பற்றி சில குறிப்புகள்.
1.   சீனப் பெருஞ்சுவர் என்பது உலக அதிசயங்களுள் ஒன்று.
2.   இது கல், மணல், செங்கல் மற்றும் மரம் ஆகிய பொருட்களைக் கொண்டு கோட்டைச்சுவர் போலக் கட்டப்பட்ட அமைப்பு.
3.   ஸ்டெப்பி சமவெளியிலிருந்து தாக்க, கொள்ளையடிக்க வரும் நடோடிகளைத் தடுப்பதற்காகவும், வெளிநாடுகளிலிருந்து வரும் பொருட்களைத் தடுத்து சுங்க வரி விதிக்கவும் பயன்பட்டது. பெரும்பாலும் பாதுகாப்பு நோக்கத்திற்காக கட்டப்பட்டது.
4.   கி.மு.7-ம் நூற்றாண்டு அதாவது கிட்டத்தட்ட 2700 ஆண்டுகளுக்கு முன் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து கட்டப்பட்டு வந்தது.
5.   இபோதுள்ள பெரும்பாலான சுவர் மிங் டைனாஸ்டியில் கட்டப்பட்டது.  
6.   சுவர்களில் ஆங்காங்கு கண்காணிப்புக் கோபுரங்கள் படை வீரர்கள் தங்குமிடம், படைக்கலங்கள் வைக்குமிடம் குதிரை லாயம் ஆகியவை இருக்கின்றன.
7.   சில்க் ரோட் என்று சொல்லப்படும், உலகமெங்கிலும் இருந்து சீனாவுக்குச் செல்லும் பாதையில் வரும் வணிகர்களை ஒழுங்குபடுத்தவும், வரிவசூல் செய்யவும் பயன்பட்டது.

8.   சீனாவின் கிழக்கிலே உள்ள டான்டாங் (Dandong) என்ற இடத்தில் ஆரம்பித்து மேற்கிலே உள்ள  லாப்லேக் (Loplake) என்ற மங்கோலியாவின் உள்ளே உள்ள இடம் வரை பரவியுள்ள இந்தச் சுவர் 22,000 கிலோமீட்டர் நீளமுள்ளது (அடேங்கப்பா). இதில் சுவர், சுரங்கப்பாதை, மலைப்பாதை என்று எல்லாம் அடக்கம்.  

நாங்கள் போன இந்தப் பகுதிக்கு "முட்டியானியூ,  (Mutianyu) என்று பெயர். மேகமும் வழிவிட நீல  விதானம் பளபளக்க மேலே ஏறிச் சென்றோம். மொத்தம் 10 வாயில்கள் அதோ அந்த முகடுதான் 10ஆவது வாயில். மொத்தம் 4400 படிகள் மேலே சென்றது. கூட வந்த மிதுளா உற்சாகமாக ஏறத்துவங்க, கூடவந்த முகேஷ் தன் இளமையைக் காண்பிக்க ஓடத்துவங்க, நானும் அவளோடு ஈடு கொடுத்து ஏறினேன். "ஆர் யூ ஓகே ?" என்றாள். "ஐ ஆம் பெர்ஃபக்ட்லி ஆல்ரைட் ஹ எபட் யூ". என்றேன். 
With Mithula

மூச்சு வாங்குவதை மறைத்துக்கொண்டே, மூச்சு முழுவதுமாகப் போவதற்குள் முட்டியானியூ சுவரைப் பற்றி  சில  குறிப்புகள்.
1.   முட்டியானியூ  என்பது சீனப்பெருஞ்சுவரின் ஒரு பகுதி.
2.   பீஜிங்கிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இது ஹூவாய்ரோ  (Huairar) வட்டாரத்தைச் சார்ந்தது.
3.   நன்றாக பராமரிக்கப்பட்ட சுவர்களில் இது தலையாயது. தலைநகரையும் பேரரசின்  சமாதிகளையும் காக்க அமைக்கப்பட்டது.
4.   சமாதிகளை ஏன் பாதுகாக்க வேண்டுமென்றால், பேரரசர் அரசிகளை, அரச குடும்பத்தினரை புதைக்கும் போது அவர்கள் பயன்படுத்திய விலையுயர்ந்த வைரம், தங்கம், வெள்ளி  ஆபரணங்களையும்  பொருட்களையும் அவர்களுடனேயே  புதைக்கும் சீன வழக்கம் இருந்ததால். 
5.   முதன்முதலில்  ஆறாவது நூற்றண்டின் இடையில் கட்டப்பட்ட இந்தச் சுவர் மிங் டைனாஸ்டி காலத்தில் தளபதி ஷூ டா (General  Xu Da) அவர்களின் மேற்பார்வையில் சூடாக கட்டி முடிக்கப்பட்டது.
6.   கிபி 1404ல் முற்றிலும் செப்பனிடப்பட்டு, கிபி 1569 முழுவதுமாக புதிப்பிக்கப்பட்டது. அது தான் இன்று வரை நிலைத்திருக்கிறது.
7.   இந்தச்  சுவர் முற்றிலும் கிரானைட்  கற்களால் கட்டப்பட்டு 7 முதல் 8.5 மீட்டர்கள் உயரமும் 4-5 மீட்டர் அகலமும் கொண்டவை. இது மற்ற சுவர்களிலிருந்து முற்றிலும் வித்தியாசம்  கொண்டது.
8.   2250 மீட்டர் நீள பாதையில் மொத்தம் 22 வாட்ச் டவர்கள்  இருக்கின்றன.
9.   பல தலைவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். 2014ல் ஒபாமாவின் மனைவி மிசெல்  ஒபாமாவும் இரு மகள்களும் வந்தனராம்.
10.               முட்டியானியூ என்ற பெயர் இதன் பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்தின் பெயரிலிருந்து வந்தது.

முட்டியானுவில் ஏறி ஏறி முட்டி வலித்தது. அப்போது வழியில் கோவாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைப் பார்த்தோம். பங்களூர்  ஆடிட்டர் பையன்  முகேஷ் வெகு தூரத்திற்கு முன்னேறிச் சென்று விட நானும் மிதுளாவும் பின்னால் நடந்தோம். குளிர் போய்   நன்றாக வேர்க்கத்துவங்கியது. மிதுளாவும் பின் தங்கி விட , நான் ஆண்  என்பதைக் காண்பிக்க வேர்க்க  விறுவிறுக்க  மேலும் கொஞ்சம் நடந்தேன். அப்போது வழியில் வந்த கோவாவைச் சேர்ந்த அந்த இந்தியப் பெண், எங்கே உங்க மகனையும் காணேம்  மருமகளையும் காணோம் ?  என்று கேட்டாள் .

-தொடரும்.

Thursday, March 17, 2016

நல்லெண்ணெயும் கெட்டெண்ணெயும்!!!!!!!!!!!


"கொக்கரக்கோ, கோ", அந்தச் சேவல் மறுபடியும் கூவியது. “இந்தச் சேவலுக்கு வேற வேலையில்லையா? மனுசனை தூங்கவிடமாட்டேங்குதுஎன்று முணுமுணுத்துக்கொண்டே திரும்பிப்படுத்தேன். எங்க வீட்டு முன்னறையில் இருந்த, ஊமை ஆசாரி செஞ்ச மரக்கட்டிலில் பாயை விரித்து அதில்தான் நான் படுப்பேன். மூத்த பையன் என்பதால் இந்த விசேஷ சலுகை. கீழே எனது இரு தம்பிகள் பாயில் படுத்திருந்தார்கள். அரைக் கண்ணால் பார்த்தேன் அவர்களிடத்தில் எந்த அசைவும் இல்லை. மீண்டும் சேவல் கூவுவது காதுகளுக்குள் புகுந்து குடைந்தது.
அடுத்து, "எந்திரிங்கப்பா, நேரமாச்சு", இது எங்கம்மாவின் குரல். எங்கம்மா திரும்பி வந்து தனித்தனியாக தொட்டு அசைத்து, "டேய் எந்திரிங்கடா சீக்கிரம், இன்னக்கி சனிக்கிழமை அந்த மனுஷனுக்கு கோபம் வந்துரும்" என்று எழுப்பினார்கள். எங்கப்பாவுக்கு கோபம் வந்தால் பின்னி பெடலெடுத்துருவார். இந்த சனியன் பிடித்த சனிக்கிழமை ஏந்தான் வருதோன்னு சலித்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தேன். என் தம்பிகள் இருவரும் மெதுவாக எழுந்தார்கள்.
போய் பல் துலக்கிவிட்டு வருவதற்குள், என் அப்பா லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு 3 மணப்பலகைகளை வைத்துக் கொண்டு ரேடியோ ரூமில் காத்திருந்தார். நாங்கள் மூவரும் உள்ளே நடுரூமில் மறைத்தும் மறைக்காமலும் எங்கள் கால்சட்டைகளைக் கழற்றிவிட்டு கோமணம் கட்டிக் கொண்டு வந்தோம். அப்போதெல்லாம் ஜட்டி கண்டுபிடிக்கலயா இல்லை ஜட்டி வாங்க முடியலையானு தெரியல.
நான் அப்ப ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சனிக்கிழமைகளில் எது நடக்கத்தவறினாலும் இது தவறவே தவறாது.
“ஏய் சுசிலா நல்லெண்ணெய எங்க வச்ச”?
எங்கப்பா நார்மலாக இருக்கும் போது எங்கம்மாவை குழந்தை என்றோ சுசி என்றோ குப்பிடுவார். கோபம் வரும்போதுதான் முழுப்பெயரான சுசிலா என்று கூப்பிடுவார்.
"ஒரு எடத்தில வச்சா அதை மாத்தி வைக்காதன்னு எத்தனை தடவை சொல்றது" இது அப்பா.
அம்மியை அரைத்துக் கொண்டிருந்த அம்மா, அப்படியே விட்டுவிட்டு, ஈரக்கையுடன் எழுந்து வந்து நல்லெண்ணெயை எடுத்துக் கொடுத்தார்.


மூவரும் போய் மணப்பலகையில் உட்காரவும், எங்கப்பா நல்லெண்ணெயை வாங்கிக் கொண்டு வந்தார்.
அப்போதெல்லாம் சனிக்கிழமையும் பள்ளி இருக்கும். எங்கம்மா, அப்பா இருவரும் ஒரே பள்ளியில் ஆசிரியர்கள். அது ஒரு நடுநிலைப்பள்ளி, பெயர் இந்து நடுநிலைப்பள்ளி. அங்கேதான் நானும் என் தம்பிகளும் எட்டாவது வரை படித்தோம்.
எங்கம்மாவுக்கு காலையில் 4 மணிக்கு எழுந்தால்தான் வேலை முடியும். பாத்திரம் விளக்கி முடித்து, சாணியைக் கரைத்து இருபுற வாசலையும் தெளித்து, கோலம் போட்டு முடித்து உள்ளே வருவார்கள்.
அடுப்பைப்பற்ற வைத்து கருப்பட்டிக் காப்பி போட்டு முடிக்க, எங்கப்பா வெளியில் போய் காலைக்கடன்களை முடித்துவர சரியாக இருக்கும். வீட்டில் கழிவறை இருந்தாலும் ஒரு நாளும் அவர் அதை பயன்படுத்தமாட்டார்.
அவர் வந்தவுடன் ஆலங்குச்சியில் பல்துலக்கி முடிக்க, காப்பி ரெடியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் கோபம் வந்துவிடும்.
இதற்கிடையில் எங்கம்மா, ஆட்டுரலில் தேங்காய் சட்னி ஆட்டிமுடித்து, இட்லியை அடுப்பில் வைத்துவிட்டு வந்து அம்மியில் கலர் கலராக மசாலாக்களை அரைப்பார்கள். சாதத்தை ஒரு புறம் வடித்துவிட்டு  சாம்பாரோ, புளிக்குழம்போ வைத்துவிட்டு  பள்ளிக்கு ஓட வேண்டும். இதிலே அவர்களுக்கு பாவம் சாப்பிடமட்டும் நேரமிருக்காது. இடைவேளையில் வந்து ரசத்தைக் கூட்டிவிட்டுப் போவார்கள்.
ஆனால் சனிக்கிழமை கொஞ்சம் வித்தியாசம்.
நல்லெண்ணெயை எடுத்து எங்கப்பா என் தலையில் வைத்து கரகரவென்று தேய்த்து மடமடவென்று தலையில் தட்டினார். எனக்குப் பொறி கலங்கியது. எண்ணெய் கண்களுக்குள்  இறங்கி எரிச்சலைத்தந்தது. என் அடுத்த தம்பி, அதைப் பார்த்து விக்கித்து உட்கார்ந்திருக்க, என் சின்னத்தம்பி வழக்கம்போல் அழத்துவங்கினான்.

எங்கப்பா நாக்கை மடித்து அவனைப்பேசாமலிரு என்று மிரட்ட, அவன் மேலும் அழ ஆரம்பித்தான். அவனுக்கு எண்ணெய் வைக்க ஆரம்பிக்க, அவன் அழுகை உச்சஸ்தாயிக்கு போனது. உடம்பு முழுவதும் எண்ணெய் வைத்துவிட்டு கைகால்களை உருவிவிடுவார்.
எண்ணெய் வைக்கும் படலம் முடிய, எங்கப்பா இப்போது ஒவ்வொருவராக குளிப்பாட்ட ஆரம்பிப்பார்.
          அதற்கு சிறப்பாக தயாரிக்கப்பட்ட சீயக்காய் பயன்படுத்தப்படும். எங்கம்மா இதற்காக வருடமொருமுறை மதுரைக்குச் சென்று தேர்முட்டித் தெருவில் சீயக்காய் வாங்கி காய வைத்து பதப்படுத்தி, கஸ்தூரி மஞ்சள், கடலைப்பருப்பு, உலர்ந்த எலுமிச்சைத் தோல், போன்ற பலவற்றை கலந்து அரைத்து சிறப்பாக செய்வார்கள்.  
மறந்துகூட கொஞ்சம் கண்ணைத் திறந்தாலும், சீயக்காய் உள்ளேபோய் எரியத்துவங்கும். கண்கள் கொவ்வைப் பழமாய்ச் சிவந்துவிடும். குளிச்சி முடித்து தலையை துவட்டி எங்கப்பா பவுடரை தலையிலும் கொஞ்சம் போட்டுவிடுவார். அன்றைக்கு ஸ்கூலுக்கு போனா என்னோட நண்பர்கள் குஷியாக தலையைத் தட்டுவார்கள். அப்போது பறக்கும் பாண்ட்ஸ் பவுடரைப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம்.
இதெல்லாம் தேவையா என்று பலமுறை நினைத்து நொந்திருக்கிறேன்.
எங்கப்பாவிடம் கேட்கத்தைரியம் இல்லாததால் ஒருநாள் எங்கம்மாவைக் கேட்டேன்.
அவர் சொன்னார், “ இது ரொம்பவும் நல்லதுப்பா, முடி நன்றாக வளரும், சீக்கிரம் நரைக்காது. கண்கள் ஒளி வீசும், உடம்பு சூடு தனிந்து குளிர்ச்சியாகும் என்று பல நன்மைகளை அடுக்கினார். அதன் பின்னர் ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த துன்பத்தைத் தாங்கிக் கொண்டேன்.   
அந்த நப்பாசை தப்பாசை என்பது பிறகுதான் தெரிந்தது. முப்பது வயசில கண்ணாடி போட்டு 35 வயசுல டை அடிக்க ஆரம்பிச்சு நாற்பது வயசுல முடியெல்லாம் கொட்ட ஆரம்பிச்சு ....ஹீம் .
நல்லெண்ணெய் நம்ம கணக்குல கெட்ட எண்ணெய் ஆயிப்போச்சேசேசேசே. இதுக்குத்தானா இவ்வளவு கஷ்டப்பட்டேன்.

முற்றும்.