Monday, December 8, 2014

இளையராஜாவின் மாதா பக்தி !!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா பாடல் எண் 12- “மாதா உன் கோவிலில்”

1978ல் வெளிவந்த "அச்சாணி" என்ற படத்தில் வந்த மனதை உருக்கும் பாடலிது. முதலில் பாடலைக் கேட்போம்.


பாடலின் சூழல்:
சந்தர்ப்ப சூழ்நிலையில்  யாரோ ஒரு குழந்தையைப் பேண வேண்டிய நிலையில்  தாய்மையடையாத ஒரு பெண் திகைத்து, மாதாவிடம் தஞ்சம் அடைந்து அந்தப்பிள்ளைக்கு மாதாவையே தாயாக காண்பிக்க விழைகிறாள்.
இசைக்கோர்வை:
எத்தனை முறை கேட்டாலும் நெஞ்சை உருக்கும் இளையராஜாவின் இசையில் இந்தப்பாடல் ஒரு  மாஸ்டர் பீஸ் எனலாம். கேட்கும் போதெல்லாம் கண்ணில் நீரை வரவழைக்கும் உருக்கம் பாடல் முழுவதிலும் வழிந்தோடுகிறது.
ஆரம்பத்தில்  "மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்" என்று பெண்குரல் பாட ,வெறும் ஆர்கனின் ஓரிரு நோட்கள் பின்னணியில் இசை சேர்க்கிறது. அதே வரிகள் திரும்ப 2-ஆவது முறை வரும் போது தபேலா சேர்ந்து கொண்டு,பாடலை எந்தவிதத்திலும் பாதிக்காது தத்தி தத்தி தொடர்கிறது. பல்லவி முடிந்து முதலாவது BGM-ல் ஷைலபோனின் உதவியில் மணியோசை போல் கேட்க, டிரிப்பிள் காங்கோ சேர்ந்துகொள்கிறது. அதன்பின் வரும் வயலின் குழுமம் ஏறி இறங்க வீணை மிகுந்த பேசில் (Bass) அப்படியே உருக, சோலோ  வயலின் உச்சஸ்தாயிக்கு போக முதல் சரணம், "மேய்ப்பன் இல்லாத மந்தை" என ஆரம்பிக்கிறது.
2-ஆவது BGM-ல் வயலின்கள் மேல் ஸ்தாயிலிருந்து ஆரம்பித்து கீழிறங்கி வர, ஆர்கன் நடுவில் இசைக்க, மறுபடியும் ஷைலபோன் ஒரு கிறிஸ்தவ எஃபக்ட் கொடுத்து நிறுத்த 2-ஆவது சரணம் "காவல் இல்லாத ஜீவன்" என்று ஆரம்பித்து முடிகிறது. தபேலாவின் நடை முதல் சரணத்திலிருந்து வேறுபட்ட நடையில் ஒலிக்கிறது.
மூன்றாவது BGM-ல் பாடும் பெண்ணின் குழப்பமான மனநிலையையும் நிராதரவான நிலையையும் குறிக்கும் வகையில் வயலின்கள் மேலும் கீழும் சரசரவென கிளைமேக்ஸ் போல ஒலித்து முடிகிறது. பின்னர் வீணை வந்து அந்த மூடை சமாதானப்படுத்த, மூன்றாவது சரணம், "பிள்ளை  பெறாத பெண்மை" என்று ஆரம்பித்து பின் சரணம் வருகிறது. இறுதியில் ஒரு தாலாட்டுடன்  ம்ம்ம் - என்று முணுமுணுத்து முடிகிறது. Haunting Melody  என்பார்களே இது அந்த ஜாதி. இளையராஜாவுக்கு மாதாவின் மேல் உள்ள ஒரு கத்தோலிக்க பக்தி இதில் ஒளிந்திருப்பதாகவே நான்  நம்புகிறேன்.
குரல்:
மனக்கிளர்ச்சியுடன் பாடும் காதல் பாடல்களில் மட்டுமல்ல, மனமுருகிப்பாடும் பக்தி/சோகப் பாடல்களிலும் தன்னால் முத்திரை பதிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜானகி. இந்தப்பாடலில் எந்த வகையான பாடலையும் பாடும் வெர்சடைல் சிங்கர் என்பதை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறார். குரலில் சோகத்தை, பொறுப்புணர்ச்சியை, மற்றும் பக்தியை ஒருங்கே காண்பித்திருக்கிறார். அதுதவிர ஒவ்வொரு வரியிலும் பொடிச்சங்கதிகளால் அலங்கரித்த அழகிய இசை மாலையைத் தொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சரணத்திலும், உள்ள முதல் வரி ரிப்பீட் ஆகும்போது "மந்தை", "ஜீவன்", "பெண்மை" ஆகிய வார்த்தைகளில் உள்ள சங்கதியைக் கவனித்துக் கேளுங்கள். அநாயசமாகப் பாடியிருப்பார். ஜானகி ஜானகிதான்.
பாடல்வரிகள்:
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் (2 )
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே (2 )
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே (2 )
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

பிள்ளைப பெறாத பெண்மை தாயானது (2 )
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
ம்ம்...ம்ம்..ம்ம்ம்

பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.  அந்தக் காலகட்டங்களில் பாடல்கள் படங்களின் ஒரு அங்கமாக இருந்தன. பாடல்கள் கதைச்சுருக்கத்தையும் பாடும் நாயகன் நாயகியர்களின் நிலையினையும்,புலம்பலையும்,கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தின. அதற்கு ஒரு உதாரணம் இந்தப்பாடல்.
பல்லவியின் தாயென்று மாதாவைக்காட்டும் நாயகியிடம் உள்ள குழந்தை அவள் குழந்தையில்லை என்பது விளங்குகிறது. முதல் சரணத்தில், "மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறிவிடும், ஆனால் மேரிமாதாவே உன் ஜோதி கண்டால் எங்கள் விதி மாறிவிடும். உன் கோவிலில் இருக்கும் மெழுகு போல் உருகுகிறோம். எங்கள் கண்ணீரை மாற்றிவிடு என்று ஜெபம் செய்வது போல் வருகிறது.
2-ஆவது சரணத்தில் " கரை பார்க்காத ஓடம் எப்படி தண்ணீரில் அலைக்கழியுமோ அப்படித்தான் நானும் காவல் இல்லாததால் கண்ணீரில் தத்தளிக்கிறேன்.உன் திருச்சபை மணியோசை கேட்டுவிட்டால் எங்களுக்கு அருள் கிடைத்துவிடும்" என்கிறாள்.
3-ஆவது சரணத்தில், "பிள்ளையே பெறாத நான் தாயாகிப் போனேன், அன்னை இல்லாத இந்த மகனை தாலாட்டுகிறேன். நான் என்ன செய்யமுடியும், இது கர்த்தரின் கட்டளை அல்லவா" என்று சொல்லுகிறாள்.
-இந்தப்பாடலை வெளியே கேட்கும்போது, அப்படி என்னதான் சூழ்நிலை நாயகிக்கு அமைகிறது, என்று அந்தப்படத்தைப் பார்க்கத்தூண்டுகிறது. இந்தப் படங்கள் எதையுமே பார்த்திராத என்னைக் கூட பார்க்கத்தூண்டுகிறது.
மொத்தத்தில் இனிமையான அருமையான மனத்தை உருக்கும் பாடல் இது. அதனால்தானோ   என்னவோ இளையராஜா பாலாவின் “நான் கடவுள்” படத்தில் இதனை வேறு வரிகள் போட்டு பயன்படுத்தியிருக்கிறார். அதனைக் கேட்டுப்பாருங்கள்.


பாடலின் ராகம்:
இந்தப் பாடலின் ராகம் சிந்துபைரவி இளையராஜா இசையமைத்த சிந்து பைரவி ராகத்தில் சில பாடல்கள்
1.    நான் ஒரு சிந்து (சிந்து பைரவி)
2.    மணியோசை கேட்டு (பயணங்கள் முடிவதில்லை)
3.    தரிசனம் கிடைக்காதா (அலைகள் ஓய்வதில்லை).
பாடல் பதிவில்  நடந்த  சுவாரஷ்யமான சம்பவம் :
சவுண்டு என்ஜினியர் இந்த படத்தின் பூஜை தினத்தன்றே வேறு ஒரு படத்திற்கும் (இசையமைப்பாளர் உபேந்திரகுமார்) ரெக்கார்டிங் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார். ஞாபக மறதியாலோ அல்லது காலை 10 மணிக்குள் யாராவது பாடல் பதிவு முடித்துவிட்டால் மதியம் 1 மணிக்குள் அடுத்த பாடல் பதிவை வைத்துக்கொள்ளலாம் என நினைத்தாரோ என்னமோ. பூஜை தினத்தன்று இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவிற்குள் வர அங்கே வேறு இசைக்குழு இருந்தது. என்ன நிலவரம் என்பதை தெரிந்து கொண்ட இளையராஜா சவுண்டு என்ஜினியர் எஸ்.பி.ராமனாதனிடம் சென்று யார் ரெக்கார்டிங்கை வைத்துக்கொள்வது என கேட்க பதில் சொல்ல முடியாமல் சமாளித்துப்பார்த்திருக்கிறார். ஆனால் உபேந்திரகுமாரோ எது பற்றியும் சட்டை செய்யாமல் அவரது பாடலை ரிகர்சல் செய்யத் தொடங்கிவிட்டார்.

சரி இனி இங்கே வேலைக்காகாது என தெரிந்து கொண்ட இளையராஜா வேறு ஸ்டுடியோவிற்கு சென்றிருக்கிறார். அங்கே பூஜையெல்லாம் தொடங்கி முடிந்து ரெக்கார்டிங் ஆரம்பிக்கும் சமயத்தில் மிஷின் ரிப்பேர் ஆகிவிட்டது. இதற்குள் மதியம் 1 மணியை நெருங்கிவிட்டதால் மீண்டும் பிரசாத் ஸ்டுடியோவிற்கே சென்றனர். அங்கே மாலையில் வேறு ரெக்கார்டிங் எதுவும் இல்லாததால் அங்கேயே பாடல் பதிவை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து பாடல் ரிகர்சல் ஆனது.

ஜானகி வந்ததும் பாடல் ஒத்திகை பார்க்கப்பட்டு சரியாக வராததால் இரண்டு மூன்று டேக்குகள் போய்கொண்டிருந்தது. இளையராஜாவிற்கோ நிறைய சங்கதிகள் கற்பனையில் வந்துகொண்டிருக்க அவ்வப்போது ஜானகியிடம் சென்று மாற்றிக்கொண்டே இருந்தார். ஒரு டேக் நன்றாக வந்துகொண்டிருந்தது. அடுத்து மூன்றாவது பின்னணி இசை சேர்ப்பு தொடங்க வேண்டும். ஆனால் யாரும் வாசிக்கவில்லை. காரணம் கண்டக்ட் செய்த கோவர்த்தன் சார் கை காட்ட மறந்துவிட்டார்.
இளையராஜாவிற்கோ கோபம். “என்னண்ணே டேக் நன்றாக வந்து கொண்டிருக்கிறது பேக்ரவுண்ட் மியுஸிக்கிற்கு ஏன் கை காட்டவில்லை?” என்று கேட்க அவரோ கூலாக, “பாட்டில் மெய் மறந்துட்டேன்யா” என்றிருக்கிறார். இவ்வளவு ஒன்றிய நிலையில் கண்டக்ட் செய்பவரை திட்டிவிட்டோமே என்று வருந்தியிருக்கிறார் இளையராஜா
சரி டேக் போகலாம் என்று சொல்லி அடுத்த டேக்… ஜானகி பாடும் போது மூன்றாவது சரணத்தில்,
“பிள்ளை பெறாத பெண்மை தாயானது
 அன்னை இல்லாத மகனை தாலாட்டுது”
என்ற வரிகளை அழகாகப் பாடியவர் அதற்கு அப்புறம் தொடர்ந்து பாடாமல் விட்டுவிட்டார். ஆர்க்கெஸ்டிராவிலோ எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். பொதுவாக டேக் கட் ஆனாலே “பேன் போடு” என்று சத்தம் போடுபவர்கள் ஒரு சிறு சத்தம் கூட இல்லாமல் இருக்கிறார்களே என்று இளையராஜா கோவர்த்தன் சாரை பார்க்க, அவரோ வாய்ஸ் ரூமை கைகாட்டியிருக்கிறார். ஜானகி கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டிருக்க இளையராஜா என்னவென்று கேட்க, “டியூனும் வார்த்தையும் கலந்து ‘பாவத்தில்’ ஏதோ ஒன்றை உணர்த்திவிட அழுகை வந்துவிட்டது. அழுகையோடு பாடவும் முடியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் விட்டுவிட்டேன்” என்றாராம். ஜானகி இப்படி சொன்னதைக் கேட்ட எல்லோரும் உருகிப்போனார்களாம். (நன்றி http://ilayaraja.forumms.net/)

அடுத்த வாரம் இன்னொரு பாடலில் சந்திக்கிறேன் .வருகைக்கு நன்றி .




15 comments:

  1. நண்பர் ஆல்பி,

    மிக அருமையான மனதை உருக்கும் பாடல். இதே பாடலின் சாயலில்தான் பயணங்கள் முடியவதில்லை படத்தின் மணியோசை கேட்டு எழுந்து பாடலையும் இளையராஜா அமைத்திருப்பார். இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஒரே ராகம் என்பதைத் தவிர மெட்டும் ஒரே மாதிரியாகவே இருக்கும்.

    இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்த போதே ஜானகி இதன் உள் துயரத்தில் இழுக்கப்பட்டு தன்னை மறந்து அழுதுவிட்டதாக பால ஹனுமான் தளத்தில் படித்திருக்கிறேன். அதை நான் சொல்ல நினைத்த போதே நீங்களே அதை சொல்லிவிட்டதால் எனக்கு ஒரு வேலை மிச்சம். இளையராஜாவின் காவியப் பாடல்கள் வரிசையில் கண்டிப்பாக இடம்பெறும் மிக அற்புதமான கீதம் இது.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. இரண்டுமே சிந்துபைரவி ராகத்தில் அமைந்த பாடல்கள் .ஆனாலும் நீங்கள் சொல்வது போல் இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. நன்றி காரிகன்.

    ReplyDelete
  3. மனதை உருக வைக்கும் பாடல் - ஜானகி அவர்களின் நிகழ்வும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  4. அருமை..அருமை.. சின்ன வயதில் கேட்ட இந்த பாடல்.. நீங்கள் சொன்ன மாதிரி ஒரு haunting பாடலே.. எப்போது நினைத்தாலும் மனதில் திரும்ப திரும்ப ஓடி கொண்டு இருக்கும்..
    மிக நன்றி..நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்ல வந்தது.. "சின்ன வயதில், எங்கே எப்போது கேட்டேன் என்று தெரியாது. ஆனால் ஏனோ, இந்த பாடல் பற்றி பேசினாலோ, கேட்டாலோ, ஒரு நெகிழ்ச்சி, வலி ஏற்படுகிறது.."

      Delete
    2. நன்றி நண்பா.நம் சொந்த அம்மாவையும் நினைவு படுத்தும் என்பதால்
      ஒருவேளை அப்படி உணரலாம் .

      Delete
  5. அருமையான பாடல் காலத்தால் நிலைத்து இருக்கும் இன்னும்...

    ReplyDelete
  6. ஆல்பி சார்

    காலத்தால் அழியாத காவியப் பாடல்களின் வரிசையில் இந்தப் பாடலையும் சேர்க்கலாம் . பாடலில் உள்ள இனம் புரியா சோகம் கேட்கும் எல்லோரையும் ஒருவித பரவச நிலைக்குக் கொண்டு செல்லும். பாடல் முடிந்த பின்பும் நம்மிடையே ஏற்படும் சிறிது நேர அமைதி பாடலின் வெற்றியாக கருதலாம் . இளையராஜா அம்மாவிற்குப் பாடல் இசைத்தால் அது சோடை போனதில்லை.

    ReplyDelete
  7. உண்மை உண்மை உண்மை . நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க , அடுத்த வார பாடலை சொல்லவில்லை .நன்றி சார்லஸ்.

    ReplyDelete
  8. காலத்தால் அழிக்கமுடியாத, மறக்க முடியாத பாடல்.....

    பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  9. அருமையான பாடல்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி துளசிதரன் .

      Delete