Monday, December 1, 2014

இளையராஜாவின் “காதல் தேவதை” !!!!!!!

எழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் 11 - ஒரு காதல் தேவதை

1978ல் வெளியான "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு" என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது. பாடலை ஒருமுறை கேட்டுவிடுவோம்.


இசைக்கோர்வை:
சைலஃபோனின் கின்கிணி  ஒலியுடன் மெல்ல ஆரம்பிக்கும் இசையோடு டிரம்சின் சிம்பல்கள் சீற, ஆண்குரலில் "ஒரு காதல் தேவதை" என்ற பாடல் ஆரம்பிக்கிறது. பல்லவியின் முதல் பகுதி முடிந்து வயலின்கள் கொஞ்சி, ஏறி இறங்கியவுடன், பல்லவியின் 2-ஆம் பகுதி பெண்குரலில்  வருகிறது. முதல் BGM-ல்  வயலின்களின் விளையாட்டோடு டிரிப்பிள் காங்கோ சேர்ந்து இசைத்து முடிக்க, "தமிழ் கொண்ட வைகை" என சரணம் ஆரம்பிக்கிறது. 2-ஆவது BGM-ல் புல்லாங்குழலும் வயலின்களும் பின்ணிப் பிணைய, பின்புறத்தில் சீப்பு உராயும் சத்தமிடும் இன்ஸ்ருமென்ட் (இந்த இன்ஸ்ருமென்ட் ஸ்பானிய துள்ளல் பாடல்களில் கண்டிப்பாக இடம்பெறும் ஒரு கருவி) இசைத்து முடிய "கடல் நீலம் கொண்ட" என்று 2ஆம் சரணம் ஆரம்பிக்கிறது.  
பாடலின் சூழல்:
நாயகனும் நாயகியும் இணைந்து பாடும் டூயட் பாடல் இது. ஒருவர் மற்றொருவரைப்பற்றி உருகி உருகி வர்ணித்துப்பாடும் பாடல். ஆண்குரலுக்கும் பெண்குரலுக்கும் சரிவிகித வரிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பாடலின் குரல்கள்:


S.P.பாலசுப்பிரமணியமும் P.சுசிலாவும் பாடியுள்ளனர். SPB அவர்களும் “அம்மா” என்று அழைக்கும் மூத்த ஜெனரேஷன் பாடகி சுசிலா. ஆனால் இந்தப்பாடலைக் கேட்டால் ஏதோ உண்மையிலேயே இரு இளம் காதலர்கள் தங்களின் உணர்ச்சிகளைக்கொட்டி காதலை வெளிப்படுத்தும் பாடல் போலவே ஒலிக்கிறது. குறிப்பாக சுசிலாவின் குரல் ஒரு டீனேஜ் பெண்ணின் குரல் போலவே ஒலிக்கிறது.

பாடல் வரிகள்:

ஒரு காதல் தேவதை  
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ ரதி தேவி அம்சமோ
ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்.. தமிழ் கவிதை பாடினான்
ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்

தமிழ் கொண்ட வைகை போலே திருமேனி நடை போட
கார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும் தேர் போலும் இடையாட
பனி போல கொஞ்சும் உன்னை பார்வைகள் எடை போட
நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ நாணங்கள் தடை போட
மேலாடையாய் நான் மாறவோ
கூடாதென நான் கூறவோ
வா மெல்ல வா

கடல் நீலம் கொண்ட கூந்தல் கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை கடன் தந்த தேகம் மன்னா நீ கொண்டாட
மாமல்லன் என்னை கொஞ்சும் சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக
ஊடல் என்னும் ஒரு நாடகம்
கூடல்தனில் அரங்கேறிடும்
வா நெருங்கி வா


பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. பாடலை எழுதும்போது வாலி நிச்சயம் நல்ல ரொமான்டிக் மூடில் இருந்திருக்க வேண்டும். கற்பனையிலும் கவிதை அம்சத்திலும் மிகவும் சிறப்பாக அமைந்த பாடல் இது. திரையிசைப் பாடல்கள் பல அதன் இசையின்றி வெறுமனே படித்துப்பார்த்தால் பெரிதாக அர்த்தம் இல்லாத சாதாரண வரிகளாய் இருக்கும். ஆனால் இந்தப்பாடல் இசையின்றி படித்துப் பார்த்தாலும் சிறந்த காதல் கவிதை ஒன்றை படித்த திருப்தி ஏற்படும். வாலி ஒரே சமயத்தில் நாயகன் நினைப்பை மட்டுமல்ல நாயகியின் நிலையிலுமிருந்து இந்த கற்பனையை எழுதியிருக்கிறார்.
பல்லவியில் நாயகன் சொல்கிறான், "என் காதல் தேவதையின் இரு கண்களும் பூ மழை பொழிகின்றன. ஏனென்றால் மன்மதனின் ராஜ்ஜியத்தில் இருக்கும் ரதிதேவி போன்ற இவள் ராஜவம்சம்”, என்று. 'ராஜவம்சம்' என்று பல்லவியில் சொன்னதாலோ என்னவோ சரணத்திலும் அதே கற்பனையைத் தொடர்கிறார். "தமிழ்ச்சங்கம் வளர்த்த வைகை நதி தளர்வாக ஓடுவது போல, நாயகியின் திருமேனி நடைபோட, உலகாளும் பேரரசனின் தேர், ஊர்வலம் போகும்போது எப்படி ஆடி அசைந்து செல்லுமோ, அப்படியே அவளின் இடையும் அசைய", என்று நாயகன் சொல்ல, அதற்கு நாயகி மறுமொழியாக, "பனிபோல மென்மையாகக் கொஞ்சும் உன்னை நான் என் பார்வையால் எடைபோட முயல்கிறேன். ஆனால் அதற்குள் நீ என்னைத்தழுவ முயல, நாணங்கள் தடுப்பதால் நான் நழுவ முயல்கிறேன்," என்று சொல்கிறாள். அதற்கு நாயகன், "உன் மேலாடையாய் நான் வரவா", எனக்கேட்க. அதற்கு நாயகி, "கூடாதென நான் கூறவா", என்று தயங்கினாலும் "வா மெல்ல வா" என்று அழைப்புக் கொடுக்கிறாள்.
2-ஆவது சரணம் பெண்குரலில் ஆரம்பிக்கிறது. நாயகி சொல்கிறாள்  , "கடலின் நீலம் போன்ற அடர்ந்த வண்ணத்தில் அமைந்த என் கூந்தலில் நீ பூச்சூடி, மடல் கொண்ட குலை தள்ளிய வாழை, கடன் தந்தது போன்ற என் தேகத்தை மன்னவன் நீ கொண்டாடுகிறாய்", என்று. அதற்கு நாயகன், "மாமல்லன் போன்ற என்னை சிவகாமி போல் நீ கொஞ்ச, நாம் இருவரும் காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்களை உருவாக்குவோம்", என்று சொல்கிறான். கல்கியின் சிவகாமியின் செல்வன் என்ற நாவலை நீங்கள் படித்திருந்தால் இந்த வரிகளைப் புரிந்துகொண்டு மேலும் ரசிக்கலாம்.
கவிஞர் வாலியின் சிறந்த கற்பனையில் உதித்த சந்தத்திலும் எதுகை மோனையிலும் சிறந்த பாடல் இது.

மீண்டும் ஒரு முறை கேட்கலாமா?

அடுத்த வாரம் "மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்".
ஒரு முக்கிய அறிவிப்பு :
வரும் சனிக்கிழமை மாலை ,நியூயார்க்கில் வாழும் இலங்கைத்தமிழர்கள் நடத்தும் " ஆனந்தம் " என்ற விழாவில் அடியேன் தலைமை ஏற்று நடத்தும் பட்டிமன்றம் நடைபெறவிருக்கின்றது .நியூயார்க் நியூ ஜெர்சியில் வாழும் நண்பர்கள் வந்து கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன். மேலும் தகவல்களுக்கு நோட்டிசை பார்க்கவும் . 


7 comments:

  1. "மாமல்லன் என்னை கொஞ்சும் சிவகாமி நீயாக
    காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக"
    "ஊடல் என்னும் ஒரு நாடகம்
    கூடல்தனில் அரங்கேறிடும்"
    அருமை..அருமை..
    அதுவும் உங்கள் எழுத்தில், ரசிப்பில் இன்னும் இனிமை..

    ReplyDelete
  2. உங்கள் பட்டிமன்றம் மற்றும் நிகழ்ச்சிகள் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா.முடிந்தால் வாருங்களேன் நேரில் சந்திக்கலாம் .

      Delete
  3. நண்பர் ஆல்பி,

    அருமையான பாடல். இந்தப் பாடலை இளையராஜா ரசிகர்களே ஒன்று கேட்டிருக்க மாட்டார்கள் அல்லது மறந்திருப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பொதுவாக என்மனசு தங்கம் வகைப் பாடல்கள்தான். நல்ல நேர்த்தியான அலசல். பாராட்டுகள்.பாடல் வரிகளுக்கு இளயராஜா முக்கியத்துவம் கொடுத்ததே அவரின் சிறப்பான காலகட்டம். இது வைரமுத்து வரை தொடர்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் காரிகன்,உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி .



      Delete
  4. ஆல்பி சார்

    பிரமாதம் . இந்தப் பாடலைப்பற்றி என் தளத்தில் நான் குறிப்பிட்டிருக்காவிட்டாலும் எனக்கும் பிடித்த பாடல்தான் . சிறிய வயதில் ரசிக்க மறந்தது எல்லாம் இசைப் பொக்கிஷங்களாக இப்போதுதானே தெரிகிறது. இது 77 இல் வந்ததா இல்லை 78 ஆ ? வைரம் வருவதற்கு முன்னாள் வாலி , கண்ணதாசன் கவிகளில் இளையராஜா ஒரு இசைப் பிரளயமே நடத்தியிருப்பார். இந்தப் பாடலும் அதில் ஒன்று என்பதை படம் போட்டு காட்டியுள்ளீர்கள் . அடுத்த பாடலை முன்னரே சொல்லாமல் பதிவிட்டால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும் .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் இசை ரசனை என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது சார்லஸ்.வருகைக்கு நன்றி.

      Delete