Monday, December 29, 2014

இளையராஜாவின் சாகச முயற்சி

எழுபதுகளில் இளையராஜா – பாடல் எண் 15 “என் கண்மணி என் காதலி”

1978ல் வெளிவந்த சிட்டுக்குருவி என்ற திரைப்படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல் இது. பாடலைக் கேளுங்கள்.

பாடலின் சூழல்:
பேருந்தில் பயணம் செய்யும் காதலர்கள் மனதுக்குள் பாடும் பாடலாக இசையமைக்கப்பட்டிருக்கிறது.
இசைக்கோர்வை:

இளையராஜா எப்பொழுதும் பயன்படுத்தும் கிடார் டிரம்ஸ் தவிர இசைக்கருவிகளில் பலவித  ஒலிகளை எழுப்பி இசையமைத்திருக்கிறார்.
குறிப்பாக சோதனை முயற்சியாக Counterpoint என்று சொல்லக்கூடிய இரு மெட்டுகள் ஒன்றையொன்று தழுவி ஒரே மெட்டாக ஒலிக்கும் மேற்கத்திய டெக்னிக்கை இந்தப்பாடலில் பயன்படுத்தி அசத்தியிருக்கிறார். ஆண்குரலிலும் சரி பெண்குரலிலும் சரி பல்லவியில் நான்கு பேர் பாடியதைப்போல ஒலிக்கும். ஆண்குரலுக்கும் பெண்குரலுக்கும்   அதே வரியில்  பதில் சொல்வது போல் வருகிறது. இது ரெக்கார்டிங் டெக்னிக் மட்டுமல்ல இசையமைப்பதிலும் அவ்வாறே இசையமைத்து அதற்கு வார்த்தைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த டெக்னிக்கில் இது  நல்ல ஹிட் பாடலாக அமைந்தது. அது தவிர பஸ் பயணத்தின் நடுவில் பாடல் ஒலிப்பதால் இயற்கையாக வரும் சத்தங்களை அதே சுதியில் ஒலிப்பது போல இணைத்துள்ளதும் அபாரம். நடுநடுவில் வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள்
நல்லா சொன்னீர் போங்க,
இந்தாம்மா கருவாட்டுக்கூடை முன்னாடிபோ
 தேனாம் பேட்டை சூப்பர் மார்கெட் இறங்கு
-அதுதவிர கண்டக்டரின் விசில் சத்தமும் சுதியில் ஒலிக்கிறது.
என் கண்மணி’ பாடல் பற்றி இளையராஜா கூறியதாவது:-
“சிட்டுக்குருவி படத்தின் டைரக்டர்கள் தேவ்ராஜ்-மோகன் இரட்டையர்களில், தேவ்ராஜ் எப்போதும் ஏதாவது பரிசோதனையாக செய்ய முயற்சிப்பார். “சிட்டுக்குருவி” படத்தில் காதலனும் காதலியும், தங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். இப்போது காதலனின் உள்ளமும், காதலியின் உள்ளமும் கலந்து பாடுவது போல, ஒரு பாடலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
இது ஒரு புது விஷயமல்லவா? இதற்கு மேல் நாட்டு இசையின் ‘Counterpoint’-ஐ உபயோகிக்க முடிவு செய்தேன்.  இதுபற்றி தேவராஜிடமும் விளக்கி சம்மதமும் வாங்கி விட்டேன்.
கவிஞர் வாலி, இரவு நேரம் என்றும் பாராமல் ஒத்துழைத்து தினமும் வந்தார்.  அவரிடம் இதை விளக்கியபோது, டியூனை வாசிக்கச் சொல்லிக் கேட்டார்.  ‘ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு டியூன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா?’ என்று கேட்டார்.
நான் அவரிடம், “அண்ணே! இரண்டு டியூனும் தனியாக பாடப்பட்டால் அதனதன் தனித்தன்மை மாறாமலும், ஒரு டியூனுக்கு இன்னொரு டியூன் பதில் போலவும், அமைய வேண்டும்.  அந்த பதில் டியூனும் தனியாகப் பாடப்பட்டால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும்.  இரண்டையும் சேர்த்து பாடினால், ஒட்ட வைத்தது போல இல்லாமல், ஒரே பாடலாக ஒலிக்க வேண்டும்” என்றேன்.
பதிலுக்கு வாலி, “என்னையா நீ? இந்த நட்ட நடு ராத்திரியில ‘சிட்டுக்குருவிக்கு சிட்டப் பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்குறே? முதல்ல ஒரு ‘மாதிரி’ (Sample) பாடலைச் சொல்லு!” என்றார்.
உடனே வேறு ஒரு பாடலைப் பாடி விளக்கினேன். நான் ஒரு டியூனையும், அமர் ஒரு டியூனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினோம்.
‘சரி’ என்று புரிந்ததாகத் தெரிவித்த வாலி, கொஞ்சம் யோசித்தார்.  பின்னர் கையில் Pad-ஐ எடுத்தவர் யாருக்கும் காட்டாமல் அவர் எழுதும் பாணியில் மளமளவென்று எழுதினார்.
பாடல் என் கைக்கு வந்தது.  இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும், மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வருவது மாதிரியே வாலி எழுதியிருந்தது எல்லோருக்குமே பிடித்துப் போயிற்று.


இந்தப் பாடலை Record செய்யும்போது இன்னொரு பிரச்சினை வந்தது.  ஒரு குரலில் காதலன் பாட, இன்னொரு குரலில் காதலனின் உள்ளமும் பாட வேண்டும் அல்லவா?  இதை எப்படி Record செய்வது?
ஏ.வி.எம். சம்பத் சாரிடம் “ஒரு குரலில் பாடுவதை மட்டும் முதலில் Record செய்வோம். மற்றொரு குரல் பாடும் இடத்தை வெறுமனே விட்டு விடாமல் இசைக்கருவிகளை இசைப்போம்.  இப்படி முழுப்பாடலையும் பதிவு செய்து விட்டு, அதை மறுபடி Play செய்து இன்னொரு குரலை அதனுடன் பாட வைப்போம்.  பிறகு இன்னொரு Recorder-ல் மொத்தமாக இரண்டையும் பதிவு செய்வோம் என்று முடிவு செய்து தொடங்கினோம்.
டைரக்டர்கள் தேவ்ராஜ்-மோகன் இருவரில், மோகன் சாருக்கு Composing சமயத்தில் இருந்தே இதற்கு உடன்பாடில்லை.  இந்தப் பாடலும் பிடிக்கவில்லை.  பாடல் பதிவு நேரத்திலும் எதுவும் பேசாமல் ‘உம்’மென்றே காணப்பட்டார்.  ‘எப்படி வருமோ?’ என்று அடிக்கடி சந்தேகம் எழுப்பிக் கொண்டிருந்தார்.
தேவ்ராஜோ உற்சாகமாக இருந்தார்.  ‘இந்த மாதிரி Idea வருவதே கஷ்டம்.  புதிதாக ஏதாவது செய்வதற்கு எப்போது சந்தர்ப்பம் கிட்டும்?  இப்படிச் செய்கின்ற நேரத்தில் அதைப் பாராட்டாவிட்டாலும், புதிய முயற்சி என்று ஊக்குவிக்கவில்லை என்றால் கலைஞனாக இருப்பதற்கு அர்த்தம் என்ன?’ என்று கூறினார்.

  1. Baskar, Ilayaraja  and Gangai Amaran


இந்தப் பாடலின் இடையிடையே ‘தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு!’ ‘இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னாடி போ!’ என்று பேசுகிற மாதிரி வரும்.  இதற்கு அண்ணன் பாஸ்கரைப் பேச வைத்தேன்.  பாடல் ரசிகர்களிடையே அதற்குரிய வரவேற்பைப் பெற்றது”. என்றார். (நன்றி தினமலர்)

பாடல் வரிகள்:
என் கண்மணி என் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நானமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
நல்லா சொன்னீர் போங்கோ..

என் மன்னவன் என் காதலன்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி..
இரு மான்கள் பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்..
இளமாலையில்..
அருகாமையில்..
வந்தாடும் வேளை இன்பம் கோடியின்று
அனுபவம் சொல்லவில்லையோ..
இந்தாம்மா கருவாட்டு கூடை.. முன்னாடி போ..

என் மன்னவன்..

என் கண்மணி..

தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கேட் இறங்கு..
மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாளச் சின்னம் அன்று தரவேண்டுமே
இரு தோளிலும் மணமாலைகள்
கொண்டாடும் நேரமென்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
என் கண்மணி..
என் மன்னவன்..

பல்லவியில் இரு மெட்டுகள்  இருக்கும் இந்த அமைப்பில் இன்னொரு சேலஞ்ஜ் என்னவென்றால், இதற்கு வார்த்தைகள் அமைப்பதும் கடினம். எப்படியென்றால் அந்த இரு மெட்டுகளின் வரிகளை சேர்த்துக் கேட்டாலும் அர்த்தம் வரவேண்டும், தனித்தனியாகப் பாடினாலும் தனியாக அர்த்தம் தொனிக்க வேண்டும்.. இந்தச் சவாலை எடுத்துக் கொண்டு கவிஞர் வாலி மிகச் சிறப்பாக வரிகளை அமைத்திருக்கிறார். கூர்ந்து கேட்டுப்பாடிப்பாருங்கள்  அந்த வித்தை புரியும்.
பல்லவி -1(ஆண்குரல்)
என் கண்மணி இளமாங்கனி சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக்கேட்டு நாணமோ.
பல்லவி-2
உன் காதலி உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதே
நீ நகைச்சுவை மன்னனில்லையோ.
பல்லவி-1(பெண்குரல்)
என் மன்னவன் எனைப்பார்த்தும் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத்தூண்டுமோ
பல்லவி-2
என் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான்
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ

வாலி அவர்களின் முதல் சரணத்தைப் பாருங்கள்,”இருமான்கள் பேசுவதற்கு மொழி தேவையில்லை அவை பிறருக்கும் கேட்காது ஏனென்றால் அது மெளன மொழி”, என்று சொல்லுகிறார். அதோடு. “ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவின்றி வேறு எந்தக்கவனமும் இருக்காது”, என்று சொல்லும்போது பாடலின் சூழலை படம் பிடித்துக்காட்டுகிறது.
குரல்:
இந்தப்பாடலைப் பாடியவர்கள் SPB, P.சுசிலா, குறிப்பாக சுசிலாவின் குரல் தேனாக இனிக்கிறது. உச்சரிப்புச் சுத்தம் காதல் கனியும் குரல் என்று இருவரும் அசத்துகிறார்கள். எனக்கொரு சந்தேகம். P.சுசிலா இளையராஜாவுக்குப் பாடிய பல பாடல்கள் பெரிய ஹிட் ஆனாலும் சுசிலா என்றால் MSV இசையமைத்த பழைய பாடல்களை மட்டும் சொல்வது ஏன் என்று தெரியவில்லை.
மொத்தத்தில் இளையராஜாவின் இந்த சோதனை முயற்சியில் இணைந்த வாலி SPB, சுசிலா ஆகிய யாவருக்கும் இது ஒரு வெற்றிப்பாடல் ஆகும்.

தொடரும் >>>>>>>>>>>>>>>>>>>>>>>



22 comments:

  1. Excellent.. நண்பரே.. உங்கள் ரசிப்பு தன்மை.. விவரிப்புகள்.. மிக மிகச் சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பா.

      Delete
  2. என்று கேட்டாலும் ரசிக்க வைக்கும் பாடல்...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

      Delete
  3. Sir,
    I want bring to your notice, yesterday I read in http://mathimaran.wordpress.com.
    "ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு.."
    He says"
    "ராஜபார்ட் ரங்கதுரையின் ஒட்டுமொத்த திரைக்கதையில் செயற்கைத் தனம் இருக்கிறது. ஆனால், அதையும் மீறி அந்தப் படத்தில் இந்தியத் தரத்திற்கு இணையாக அல்லது முன் மாதிரியான சில முக்கியத்துவம் உண்டு.
    முதன்மையானது,மெல்லிசை மன்னரின் இசை. பாடல்கள். அந்தக் கால நாடகக் காலத்தை இன்றும் காற்றில் நிறுத்தும் பாடல்கள். சங்கரதாஸ் சுவாமிகள் பாணியில் அமைந்த ‘தில்லை அம்பல..’ – ‘வந்தேன் வந்தனம்..’ போன்றவை.
    ‘மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்..’ பாடலின் வித்தியாசமான காம்போஸிசன் இந்திய இசை உலகிற்கே புதிது.
    சங்கரதாஸ் சுவாமிகளின் பாணியில் பாடல் ஆரம்பித்து, பிறகு அதிலிருந்து தரம் உயர்ந்து, துவங்கும் பல்லவி.
    முதல் சரணம் முடிந்து, மீண்டும் பல்லவி வரும்போது, ஒரு பாடலில் இரண்டு மெட்டுக்கள். இரண்டும் ஒன்றொடு ஒன்று தழுவி, உரசல் இல்லாமல்.. இனிய உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.
    ‘மதன மாளிகையில்..’ ஆண் குரல் பாடிக் கொண்டிருக்கும்போதே, பெண் குரல் அதே வரியை வேறு மெட்டில் ஆண் குரலின் மேல் மெல்லத் தவழ்ந்து செல்லும்.
    ஆண் குரல் அமைதிகாக்க, பெண் குரல் முடியும் முன்னே.. இப்போது மீண்டும் ஆண் குரல் பெண் குரலின் மேல் மெல்லத் தடவி செல்லும்..
    இந்த மாயா ஜாலத்தை மெல்லிசை மன்னர்தான் இசை உலகில் முதலில் செய்தார். மெல்லிசை மன்னரின் இந்தப் பாணியைப் பின்பற்றி, இசைஞானி, சிட்டுக்குருவி படத்தில், ‘என் கண்மணி.. உன் காதலி.. எனைப் பார்த்ததும்..’ – பகல் நிலவு படத்தில், ‘பூ மாலையே.. தோள் சேரவா..’ போன்ற பாடல்களில் மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.
    இந்தச் சிறப்புக் குறித்து மெல்லிசை மன்னரிடம், நான் கேட்டபோது. அவர் மிகச் சாதாரணமாக எந்தப் பெருமையும் இல்லாமல்,
    “கம்போசிங் போது பல மெட்டுக்கள் போட்டோம்.. எதுவும் திருப்பதியா அமையல… அப்போ அடிக்கடி டீ கொண்டு வந்து கொடுத்த பையன்.. ஜன்னல் வழியா எனக்குச் செய்கை செய்தான். ‘முதல் மெட்டு, அய்ந்தாவது மெட்டு இரண்டையும் கலந்து போடு’ என்று. அப்படிப் போட்டதுதான் இது” என்றார்."

    Billa

    ReplyDelete
    Replies
    1. மதன மாளிகை மிகவும் அருமையான பாடல்
      ஆனால் Counterpoint டில் வருகிறதா என்று தெரியவில்லை
      தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பில்லா .

      Delete
  4. என்றும் கேட்கப்பிடிக்கும் பாடல் அருமையான கவிவரிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தனிமரம்.

      Delete
  5. ஆல்ஃபி,

    சிட்டுக்குருவி என்றாலே இந்தப் பாடல்தான் பலருக்கு நினைவுக்கு வரும். உண்மைதான். அடிக்கடி ஒலித்த பாடல். எனக்கோ இதிலுள்ள உன்ன நம்பி நெத்தியில பொட்டு வச்சேன் மத்தியிலே பாடல் மிகவும் பிடிக்கும்.

    இதில் கவுண்டர் பாய்ன்ட் இசை பாணியை இளையராஜா செய்திருந்தாலும் ஏற்கனவே நான் பேச வந்தேன் பாடலில்தான் முதலில் செய்தார். அப்போது அவ்வளவாக பாராட்டபடாத இந்த முயற்சி என் கண்மணி பாடலில் வெளிப்படையாக தெரிந்ததால் அதிக கவனம் பெற்றது என்று கருதலாம்.

    மதிமாறன் தனது தளத்தில் எம் எஸ் வி யின் மதன மாளிகையில் பாடலைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. கவுண்டர் பாய்ன்ட் பாணி தமிழில் சிட்டுக்குருவிக்கு முன்பே வந்துவிட்ட ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் alfy அவர்கள் விவரித்த படி பார்த்தால்..மதன மாளிகை கவுண்டர் பாய்ன்ட் பாணியாக உணர முடியவில்லை.,
      இரண்டு பாடல்களை தொடர்ந்து கேட்டாலும் ஒற்றுமை விளங்கவில்லை..
      முன்பே இருந்து இருந்தால், வாலி அவர்களுக்கு விவரிக்க வேண்டி இருந்து இருக்காதோ??
      தங்கள் அளவுக்கு கண்டிப்பாக இசை அறிவு எனக்கு கிடையாது..
      தவறு இருந்தால் பொறுத்து கொள்ளுங்கள்..
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே..

      Delete
    2. நண்பர் காரிகனுக்கும் ,நண்பாவுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      Delete
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர் alfy அவர்களே.. :)

    ReplyDelete
  7. தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்திலேயே புதுமையாக முயற்சித்திருக்கிறார்....

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஸ்கூல் பையனுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      Delete
  8. இந்த பாடலின் உட்கருத்து இப்போதுதான் தெரிந்தது, நன்றி ஸார்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ்கரன் .

      Delete
  9. ஆல்பி சார்

    அருமை. அற்புதம் . உள்ளம் கொள்ளை கொள்ளும் பாடல். உங்கள் விளக்கம் அதைவிட அருமை. நானும் என் பதிவில் இந்தப் பாடல் பற்றி சொல்லுவேன். முடிந்தால் படியுங்கள்.

    இன்னொரு செய்தி . மதன மாளிகை என்ற பாடல் கவுன்ட்டர் பாயிண்ட் வகைப் பாடல் அல்ல. காரிகன் சொன்னது போல ' நான் பேச வந்தேன் 'என்ற பாடலும் அந்த வகையைச் சார்ந்த பாடல் இல்லை. கவுன்ட்டர் பாயிண்ட் முறை விதிகளுக்கு உட்பட்டவையும் அல்ல. என் கண்மணி என்ற பாடலில்தான் இந்த முயற்சி முதன் முறையாக கையாளப்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள சார்லஸ்,
      நீங்கள் சொல்லியது போலத்தான் நானும் நினைத்தேன் .தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  10. என்ன ஒரு ஒற்றுமை டிவி தொடரில் இந்த பாடலை வைத்து ஒரு சீன் வந்தது அதை இப்போது தான் "கேட்டுவிட்டு" உங்கள் பதிவை பார்க்கிறேன்
    நீங்கள் ஒரு தீர்க்க தரிசிதான்

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள அன்பு ,
      தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
      ஆனாலும் உங்கள் அன்புக்கு அளவில்லை .
      தீர்க்கதரிசி என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்

      Delete
  11. எனக்கு மிகவும் பிடித்த என் செல் போனில் உள்ள ஒரு பாடல்
    அசத்துங்கள்

    ReplyDelete
  12. http://www.thankyouilaiyaraaja.org.in/

    ReplyDelete