Thursday, June 8, 2017

நியூயார்க்கில் நித்ய ஸ்ரீ மகாதேவன் கச்சேரி !!!!!!!!!!!!!


          சித்திரைத் திருநாளை முன்னிட்டு நியூயார்க் தமிழ்ச் சங்கம் பிரபல கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் தமிழிசைக் கச்சேரியை போன மே 29 ஞாயிறன்று மாலை, நியூயார்க்கில் ஃ பிளஷிங்கில் உள்ள ஹிண்டு டெம்பிள் அருகிலுள்ள ஒரு பள்ளியில் நடத்தியது. வழக்கம்போல் பரதேசி அங்கு ஆஜர். தமிழ்ச்சங்கத்தலைவர் விஜய்குமார் பொருளாளர் ரங்கநாதன், நிர்வாகி ஆற்காடு தியாகராஜன் ஆகியோர்  வரவேற்றனர்.
          பிராங்க்ஸ்  சேப்பல் சர்விஸ் முடித்து சிறிது தாமதமாய் வந்தேன். "ஆரம்பித்து ரொம்ப நேரமாகிவிட்டதா", என்று கேட்டதற்கு தலைவர் 2 பாட்டுதான் முடிந்திருக்கிறது  என்றார்.ஆஹா, கர்நாடக இசையில் 2 பாட்டு என்றால் அரைமணி நேரமாகியிருக்குமே என்று நினைத்துக் கொண்டே உள்ளே புகுந்தேன். சரிதானே ஆலாபனை மட்டுமே ஒரு பத்து நிமிடம் இருக்குமல்லவா.
          கூட்டம் கம்மியாகத்தான் இருந்தது. அதற்குப்பல  காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக கர்நாடக இசைக்கு ரசிகர்கள் மிகவும் குறைவு. இரண்டாவதாக இது கடுமையான வின்ட்டருக்குப் பின் வரும் முதல் லாங் வீக்கென்ட். 'மெமோரியல் டே வீக்கென்ட்' என்று சொல்வார்கள். அதனால் பலரும் காலையையும் காரையும் கிளப்பிக் கொண்டு வெளியே எங்காவது போவார்கள். பெரும்பாலும் ரோட் ட்ரிப்பாக இருக்கும். மூன்றாவதாக கோவிலில் ஏதோ முக்கிய பூஜை நடைபெறுவதாகவும்  கர்நாடக இசையை ரசிக்கும் பலரும் அங்கே இருப்பதாகவும் முன்னாள் தலைவி காஞ்சனா அவர்கள் சொன்னார்கள்.
Image result for nithyashree mahadevan

          மேடையில் நடுநாயகமாக  நித்ய ஸ்ரீ உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தார். பட்டுப்புடவை கட்டி மல்லிகை பூ சூடி பாந்தமாக உட்கார்ந்திருந்தார்.  வயலின், மிருதங்கம் மற்றும் கஞ்சிரா ஆகிய பக்க வாத்தியங்கள் வாசிப்பவர்கள் சென்னையிலிருந்தே வந்திருந்தனர்.
                    உச்சஸ்தாயி மற்றும் மந்திரஸ்தாயி இரண்டிலும் புகுந்து சஞ்சாரம் செய்யும் கணீர்குரல் நித்ய ஸ்ரீக்கு. ஆனால் பல கச்சேரிகளை முடித்து நியூயார்க்கில் கடைசி கச்சேரி என்பதாலோ என்னவோ உச்சஸ்தாயியில் குரலிலிருந்த ஸ்ட்ரெயின் தெரிந்தது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாடிக் கொண்டிருந்தார்.
          D.K. பட்டம்மாளின் பேத்தி என்பதை விட ஏ.ஆர்.ரகுமான் இசையில்  சில பாடல்களைப் பாடிய பின்தான் என்னைப் போன்ற பாமரர்களுக்கு அவரை அதிகமாக தெரிய வந்தது. ஆனால் சென்னையில் முதல் வரிசைக் கலைஞர்களுள் ஒருவர் அதுவும் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதால் இவரைப்பிடிக்கும்.
          பக்க வாத்தியங்களோடு அவர் தொடை தட்டி தாளம் போட்டது எனக்கே வலித்தது. அவ்வளவு சத்தமாக தொடை தட்டினார். பாரதியின் தீராத விளையாட்டுப் பிள்ளை இவர் குரலில் கொஞ்சி விளையாடியது. நித்ய ஸ்ரீயின் அம்மா அவர்கள் இயற்றிய சூரியபகவான் பாட்டும் அற்புதமாக இருந்தது.
          ஒரே வருத்தம் எல்லாப் பாடல்களுமே இறைவணக்கப் பாடல்களாய் மட்டுமே இருந்தது. சில தேசபக்திப் பாடல்களையும் பாடியிருக்கலாம். அந்த மாதிரி பாடல்களைப் பாடித்தானே பட்டம்மாள் புகழ் பெற்றார். கச்சேரியை முடிக்கும்போது 'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்' என்று பாடி முடித்தது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

          ஆரம்ப முதலே கவனித்துக் கொண்டிருந்தேன். எனக்கு முன்வரிசையில் ஐ பேடில் எல்லாப் பாட்டுகளையும் வீடியோ எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார் ஒருவர்.
Mahadevan

          ஒரு பாட்டு 15 நிமிடம் நீண்டாலும் சளைக்காமல் ஐபேடை தூக்கிப் பிடித்துக் கொண்டு எடுத்தார். பக்கத்தில் அவர் மனைவியும் கூட இருந்து ரசித்துக் (?). கொண்டிருந்தார். ஆளைப்பார்த்தால் ஆஜானுபாகனாய் ஸ்ட்ராங்காய் இருந்ததால் அப்படிப் பிடிக்க முடிந்தது என்று நினைக்கிறேன். இருந்தாலும் கூர்ந்து கவனித்தால் கை இலேசாக ஆட்டம் கண்டது. அது தன்னுடைய ஃ பேவரைட் பாடகியின் இசைக் கச்சேரியை  மிகவும் அருகில் இருந்து பார்ப்பதாலும் இருந்திருக்கலாம். பக்கத்து மாநிலமான கனக்டிகட்டிலுருந்து திடீரென்று தலைவரால் டைஹார்டு ஃபேன் என்று அறிமுகப்படுத்தப்பட்டு  மேடைக்கு வந்த அவர் கவிதையும் பாடினார். சிலவரிகள் மிக நன்றாக இருந்தன. உணவு உண்ணும்போது அவரைப் பார்த்துப் பாராட்டிவிட்டு அந்தக் கவிதையை ஈமெயிலில் பெற்றேன். இதோ அது உங்களுக்காக. இவர் பெயரும் மகாதேவன்தான்.


          நியூயார்க் தமிழ்ச்சங்கம் 'நித்யஸ்ரீக்கு' தமிழிசைத் திலகம் என்ற பட்டம் கொடுத்து  கெளரவித்தது. கச்சேரி முடித்து சென்னை தோசாவின் இரவு உணவையும் உண்டுவிட்டு கிளம்பினேன்.
          அருமையான பக்கவாத்தியங்களோடு இணைந்த நித்யஸ்ரீயின் கச்சேரி நன்றாகவே அமைந்திருந்தது. கூட்டம் குறைவாக வருகிறது என்று இந்த மாதிரிக்கச்சேரிகளை நிறுத்திவிடாமல் தொடர்ந்து கொடுக்கும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.


13 comments:

 1. நல்ல பாடகி. அலட்டல் இல்லாத, கர்வம் இல்லாத பெண்மணி... உச்சஸ்தாயி நன்றாகவே வரும்.....மின்சாரக் கண்ணா மின்சாரமாய் இருந்தது போல்...இவரது பல பாடல்கள் மின்சாரமாய்.இருக்கும். ஆண்டவன் அன்பே சக்தி தரும் எனும் சிவரஞ்சனி ராகப் பாடல் இவர் பாடிக் கேட்டிருக்கிறீர்களா.....அருமையாக இருக்கும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இன்னும் இல்லை , கேட்டுவிடுகிறேன் கீதா,நன்றி .

   Delete
  2. நானெல்லாம் எங்க வீட்டு அம்மணி பாடுற பாட்டை மட்டும்தான் கேட்பேன் அவங்க டெய்லி பாடுவாங்க.... ஆமாம் எங்க வீட்டு அம்மணி உங்க நீயூயார்க் தமிழ் சங்கத்தில் பாட வாய்ப்பு கிடைக்குமா?

   Delete
  3. அந்தப்பாட்டை கேட்டுக்கேட்டு நொந்துபோய்தானே நாங்க வெளியே போய் வேற பாட்டைக்கேட்கிறோம்.

   Delete
 2. நான் இரண்டு மாதமாக
  இங்கு நியூஜெஸியில்தான் இருக்கிறேன்
  இன்னும் இரண்டு மாதமும் இருப்பேன்
  தமிழ் சங்க நிகழ்வுகள் குறித்து
  அறிந்து கொள்ளும்படியான இணைப்பு
  ஏதும் இருப்பின் தெரிந்து கொள்ளவும்
  முடிந்தால் கலந்து கொள்ளவும் ஏதுவாகும்

  பகிர்வில் சொல்லிய விஷயங்களை
  பொறுப்பாளர்கள் நித்ய ஸ்ரீ அவர்களுக்கு
  தெரிவித்தால் அவர் அடுத்த முறை
  அதனைச் சரிசெய்து கொள்ள
  நிச்சயம் ஏதுவாகும் எனபது என அபிப்பிராயம்

  மனம் கவர்ந்த பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி , Pls visit NY Tamil Sangam website for their future events.
   www.newyorktamilsangam.org

   Delete
  2. http://njtamilsangam.net/ NJ Tamil Sangam

   Delete
 3. இணைத்துக் கொண்டேன்
  உடன் தகவலுக்கு மனமார்ந்த
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. முன் நின்ற இசையைக் கண்டேனே(கேட்டேனே?!) அன்றி
  பின் நின்ற தமிழைக் காணவும் மறந்தேன்!

  இசையாய் தமிழாய் இருப்பவன் இறைவன் என்பதாலேயே இறைப் பாடல்கள் பாடினாரோ?

  இல்லை நாட்டையும் இறைவனாய்க் கண்டாரோ?

  காதுக்கினியன கேட்டேன் அன்று
  கருத்துக்கினியன கண்டேன் இன்று!

  நன்றிகள் பல!

  ReplyDelete
  Replies
  1. Angu Poi thamilal perumai petra en thambi vaalga

   Delete
 5. இசையாய் தமிழாய் இருப்பவன் இறைவன் என்பதாலேயே இறைப் பாடல்கள் பாடினாரோ? இல்லை நாட்டையும் இறைவனாய்க் கண்டாரோ? : மெய் மறந்து கேட்கும் ரசிகர்களுக்கு தன் ஆதர்ஷ பாடகி என்ன செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் தொனிப்பது அல்லது திணிப்பது சகஜம்தான் மகாதேவன் .

  ReplyDelete
 6. மகாதேவன் அவர்களின் வரிகள் ஒவ்வொன்றும் சிறப்பு...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தனபாலன்.

   Delete