இலங்கையில் பரதேசி -16
Kandy Kingdom |
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/06/blog-post_20.html
ஆரம்ப
காலத்தில் இது கொழும்பு - கோட்டே ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும்
படிப்படியாக வளர்ந்து தனி ராஜ்யமானது. 16
மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் நடந்த
பல குழப்பங்களுக்கிடையே சில சமயங்களில் யாழ்ப்பாண ராஜ்யம் மற்றும் சில சமயங்களில் மதுரையில் ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆகியோரோடு கைகோர்த்து
தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. போர்த்துக் கீசியர் மற்றும் டச்சுக் காரர்களிடம்
நட்பு பாராட்டியது. 1590 முதல் பல காலம் தனி ராஜ்ஜியமாக
இருந்து கொரில்லா போர் மூலம் தன்னை பாதுகாத்து வந்த கண்டி ராஜ்யம் இறுதியில் 1818ல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்குள் வந்தது. 1815ல்
நடந்த ஒப்பந்தத்தை மீறி 1817ல் நடந்த புரட்சி முறியடிக்கப்பட்ட பின் பிரிட்டிஷார் முழுவதுமாக தன்
வசப்படுத்தினர். இதன் ஆரம்பத்தைக் கொஞ்சம் பார்க்கலாமே.
மூன்றாவது
விக்கிரமபாகு (1357-1374) ஆண்ட காலத்தில்
செங்கடகலபுரம் என்ற நகர் உருவாக்கப்பட்டது.
இது 14-ஆம் நூற்றாண்டின் மத்திய
காலம் என்று சொல்லலாம். 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து 16-ஆவது நூற்றாண்டின் இறுதி வரை மத்திய இலங்கையில் கோட்டே ராஜாக்களின் ஆட்சி கொடிகட்டிப்
பறந்தது. ஆனால் போர்த்துக் கீசியரின் வருகைக்குப்பின் சிறிது சிறிதாக கோட்டே
ராஜ்ஜியம் தன் செல்வாக்கை இழந்தபோது செங்கடகலபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஒரு தனி
நாடு சுதந்திரமாக செயல்பட ஆரம்பித்தது. 1521ல் விஜயபாகு
தன்னை முழுவதுமாக பலப்படுத்தி பக்கத்து இடங்களையெல்லாம் பிடித்து கண்டி ராஜ்யத்தை
நிறுவினான்.
விஜயபாகுவின்
தாக்குதலுக்குப்பின் கோட்டே ராஜ்யம் மூன்றாகப் பிரிந்து போனது. சிதவாக்கா,
ராய்காமா, மற்றும் ஏழாவது புவனகேபாகு
தலைமையில் எஞ்சிய கோட்டே பகுதிகள் என்று பிரிந்த மூன்றும் ஒன்றையொன்று எதிரிகளாகப்
பார்த்தது . இதில் மாயாதுன்னே தலைமையில் வீறிட்டு எழுந்த
சித்தவாகா ராஜ்யம் பலமாக இருந்தது. 1522ல் போர்த்துக்கீசியர்
வந்த போது அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சித்தவாகாவின் தாக்குதலிருந்து
பாதுகாக்கும் படி கண்டி ராஜ்ஜியம் வேண்டிக் கொண்டது. வெள்ளைக்காரர்களை நம்ப
முடியுமா? அவர்கள் கோட்டே நாட்டுடன் ஒன்றிணைந்து கண்டியை 1546ல்
தாக்கினார். அதனைத் தொடர்ந்து 1560ல் போர்த்துக்கீசியருக்கு
எதிராக எழுந்த யாழ்ப்பாண நாட்டுக்கு கண்டி உதவியது.
சித்தவாகாவின்
மன்னன், முதலாவது ராஜசின்ஹா போர்த்துக் கீசியர்களை முறியடித்து கண்டியை தன்னுடைய
நாட்டுடன் இணைத்துக் கொண்டான். வீழ்ந்துபட்ட கண்டி மன்னன் மூன்றாவது ஜெயவீரா தன்
நண்பர்களான யாழ்ப்பாண நாட்டுக்கு தன் மகளான குசுமசனா தேவி மற்றும் மருமகன்
யமசிங்கே பண்டாரா ஆகியோருடன் தப்பிச்செல்ல முயன்றான். ஆனால் வழியில்
போர்த்துக்கீசியரின் போர்க்கப்பல் வழிமறித்து அவர்களைச் சிறைப்பிடித்தது. தாங்கள் உயிர் பிழைக்க அவர்கள்
இருவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி அவர்கள் இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டன.
கரேலியாடே குமார பண்டாரா என்ற மூன்றாம் ஜெயவீரா, டான் ஃபிலிப் என்றும் குசுமசானா
தேவி டானா கேத்தரினா என்றும் பெயர் மாற்றம் பெற்றார்கள்.
கண்டியைப்
பிடித்த சித்தவாகா நாட்டுக்கு அதனைக் கட்டுப்படுத்தி ஆள்வது கடினமாக இருந்தது. கண்டியின்
சிறு பகுதிகளின் தலைவர்களால் ஆங்காங்கே குழப்பங்களும் கலகங்களும் தூண்டப்பட்டு
வந்தது. இதில் ராஜசின்ஹாவின் தளபதியும் கண்டியின் ஆளுநராகவும் இருந்த வீரசுந்தர
முடியன்சே தானே சுதந்திரமாக ஆட்சி செய்யும்படி ராஜசின்ஹாவுக்கு எதிராக களமிறங்க
அந்தப்புரட்சி அடக்கப்பட்டு ராஜசின்ஹாவின்
ஆட்களால் வீரசுந்தரா கொலை செய்யப்பட்டான். இது நடந்தது 1588ல் ஆனால் அதிலிருந்து தப்பிச் சென்ற வீரசுந்தராவின் மகன் கொன்னப்பு
பண்டாரா பிறகு கண்டியை பிடிக்க முயலுகிறான். இதற்கிடையில் 1592ல் போர்த்துக்கீசியர் கண்டியைப் பிடித்துக்கொள்ள கொன்னப்புவுக்கு இப்போது
இரண்டு எதிரிகள் ஆகினார். ஆனால் விடாமுயற்சியோடு போராடி 1594ல் இருவரையும்
முறியடித்த கையேடு டோனா கேத்தரீனாவைத் திருமணம் செய்துகொள்கிறான் கொன்னப்பு. இதன்
மூலம் பழைய அரச குடும்பத்துடன் ஒன்றிணைந்து எல்லோராலும் ஒரு மனதாக ஏற்றுக்
கொள்ளப்பட்டு முதலாவது விமல தர்மசூரியா என்ற பெயரில் கண்டியின் அரசனாகினான்.
Vimaladharma Surya I |
விமலதர்ம
சூரியா பலத்துடன் ஆட்சி செய்ய ஆரம்பிக்க, போர்த்துக்கீசியர்
அவனை விட்டுவிட்டு யாழ்ப்பாண அரசைப் பிடித்து அங்கு ஆண்ட புவிராஜா பண்டாரத்தை பதவி
நீக்கம் செய்து எதிரியான சிங்கம் என்ற அவனுடைய மகனை பொம்மை ராஜாவாக அரியணையில்
அமர்த்துகிறார்கள். இதற்கிடையில்
சித்தவாகாவின் பலமாக விளங்கிய முதலாம் ராஜசின்ஹா இறந்துவிட அந்த நாடும் அப்படியே
சிதைந்து போனது. அப்போது முழு இலங்கையிலும் கண்டி மட்டுமே ஐரோப்பியர் ஆரமிக்க
முடியாத பலம் பொருந்திய சுதந்திரநாடாக விளங்கியது.
சீறும் சிறப்புமிக்க
ஆட்சி செய்த விமலதர்மசூர்யாவின் காலத்தில்தான் அவனுடைய முயற்சியில் புத்தரின் பல் அங்கு
கொண்டுவரப்பட்டு பெரிய ஓரு கோவில் கட்டப்பட்டு அதில் பாதுகாக்கப்பட்டது.
இந்தப் பல்லைக்
கொண்டுவந்தது யாருன்னு சொல்றதுக்குத்தான் இவ்வளவு கதையையும் சொல்ல வேண்டியதாயிருச்சு.
இந்தப்பல்லைப் பாதுகாக்க படாத பாடு பட்ட கதையினையும் பல்லாயிரம்பேர் அழிந்த கதையையும்
நான் சொல்லித்தான் ஆகனும். ஏன்னா கண்டியில் நான் பார்க்கப் போற முக்கியமான இடம் அந்தப்
பல்கோவில் தான்.
என்னடா கண்டியை
ஆண்டது தமிழ் மன்னர்கள் ஆச்சே ஒரே சிங்களக்கதையா நான் சொல்றேன்னு கேக்கறீங்களா? நீங்க நினைப்பது சரிதான்.
மதுரை நாயக்க வம்சத்தைச் சேர்ந்த தமிழ் மன்னர்களின் பரம்பரை தான் கண்டியை கடைசியாக ஆண்டார்கள். தமிழ் - தெலுங்கு மன்னர்கள் என்றும்
சொல்லலாம். அவர்கள் எப்படி கண்டியின் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதைப் பார்த்துவிடலாம்.
அவர்களின் அரண்மனையையும் பார்க்கப்போகிறோம் என்பதால் இது மிகவும் அவசியமான செய்தி என்று
நினைக்கிறேன். நாயக்க வம்சம் எப்படி கண்டியை ஆண்டது என்பதை அடுத்த பகுதியில் கொஞ்சம்
பார்க்கலாமா?
- தொடரும்.
அருமையாக உள்ளது கண்டி விவரங்கள். நன்றி. உங்களைப் பற்றிய விவரங்களும் interesting! மேலும் படிக்க ஆவல் உண்டு.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி பாலாஜி.
Deleteஅறிந்தேன்... நன்றி ஜி../\
ReplyDeleteவருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteபகிரவுக்கு நன்றி. நெடிய வரலாற்று ஆய்வு செய்திருகீங்க..
ReplyDeleteநன்றி ஆரூர் பாஸ்கர்.
ReplyDelete