Thursday, June 1, 2017

சிவராசனின் திட்டமும் தனுவின் ஆவியும் !!!!!!!!!!

ராஜீவ் காந்தி கொலை - பகுதி -3
படித்ததில் பிடித்தது.
ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும்,
பிரியா நளினி சந்திப்பும் - நளினி முருகன்.
யாழ் பதிப்பகம் - எழுத்தாக்கம். தொகுப்பு - பா.ஏகலைவன்

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/05/blog-post_25.html
Related image
Thanu  alis ThenMozhi

          நளினி தாஸைக் கல்யாணம் செய்து கொண்டார் என்றால், முருகன் என்பது யார்?. முருகன் தானே நளினியின் கணவன் என்று சொல்லுகிறார்கள். முருகன்தானே நளினியுடன் சேர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருபவர் என்ற கேள்விகள் எழுவது நியாயம்.
          இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ள நளினியின் கூற்றுப்படி ,முருகன் என்பது வேறு ஒருவர். முருகன் என்ற விடுதலைப்புலி தமிழ்நாட்டுக்கு வருவதாக வந்த ஒரு தகவலின்படி CBI போலீசார் இந்த தாஸ்தான் அந்த முருகன் என்று முடிவு கட்டிவிட்டார்கள். விசாரணையின் ஆரம்பத்தில் இருந்து தாஸை முருகன் என்றே குறிப்பிட்டு தொடர்ந்து எல்லா ரெக்கார்டுகளிலும் தாஸை, முருகன் என்றே ஆவணப்படுத்தியதால் தாஸ் என்பவர் முருகன் என்று ஆகிவிட்டார். அதனால் நளினியும் மற்றவர்களும் கூட அவரை முருகன் என்றே குறிப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். போலீஸ் நினைத்ததால்  குற்றவாளியையும் மாற்றிவிடலாம். பேர் ஊர் ஆகிய எல்லாவற்றையும் மாற்றிவிடலாம் போல் தெரிகிறது. எனவே நானும் அவரை முருகன் என்றே குறிப்பிடுகிறேன்.
Image result for killer Dhanu
Waiting to kill THanu and Sivarsaan
             திருமணத்தைப் பற்றி அறிந்த நளினியின் தாயார் முருகனை நன்றாகத் திட்டி வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்வதும் நடந்தது. பரிதாபப்பட்ட பாக்கியநாதன் அவரை தான் வேலை செய்யும் பிரஸ்ஸில் தங்க அனுமதிக்கிறார்.
          வெளிநாட்டு ஏஜென்ட்டாக செயல்பட்ட சிவராசனிடம் ஒரு முறை நளினியையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார் முருகன். கணவனுக்கு எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் நண்பர் என்பதாலும் கணவரின் ஊரைச் சேர்ந்தவர் என்பதாலும் நளினியும் சகஜமாகப் பழகுகிறார். ஒரு நாள் சிவராசன், தனு சுபா ஆகியோரை அழைத்துக் கொண்டு வந்து அறிமுகப்படுத்துகிறான். இருவரும் சிறிய வயது பெண்பிள்ளைகள் என்பதால் அவர்களை வேறு இடம் பார்க்கும்வரை நளினியுடன் தங்கிக் கொள்ளலாமா என்று கேட்க, நளினியும் தாராளமாக சரியென்று சொல்ல இருவரும் நளினியுடன் தங்கியிருக்கின்றனர். 
Image result for sivarasan and subha photos
Subha with Nalini
          ஊருக்குப் புதிது என்பதால் நளினி உற்சாகமாக அவர்களை ஊர் சுற்றிக் காண்பிக்கிறார். தனு ஒரு சினிமாப் பைத்தியம் என்பதால் அடிக்கடி சினிமாவுக்கு போகிறார்கள். இப்படி 2 நாள் கழிந்த பிறகு சிவராசன் ஒரு மாலை நேரம் வந்து VP சிங் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்குப் போகிறோம் நாளை ராஜீவ் காந்தி வரும் நிகழ்ச்சிக்கும் போக வேண்டும் என்று நளினியிடம் சொல்ல அவளும் ஆகா பெரும் தலைவர்களைப் பார்க்க நல்ல வாய்ப்பு என்று எண்ணுகிறார்.
          சிவராசன், தனு, சுபா, நளினி ஆகியோர் VP சிங் விழாவில்  கலந்து கொள்கின்றனர். நளினியும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். ஆனால் அது ஒரு ஒத்திகை மாதிரி நடைபெற்றது என்பது கொஞ்சமும் தெரியவில்லை என்கிறார்.
          இங்கு முக்கிய விவரம் ஒன்றை நளினி குறிப்பிடுகிறார். அதாவது சிவராசனுக்கு பல பிரமுகர்களை தெரிந்திருந்தது என்பதுதான் அது.

Related image
ஒற்றைக்கண் சிவராசன் 
          அடுத்த நாள் மதியம் நளினி, தனு, சுபா ஆகியோர் பஸ்ஸில் $பெரும்புதூர் செல்கின்றார்கள். அங்கே கூட்டத்தில் ராஜீவ் வரும் சத்தம் கேட்க தனு மட்டும் நெருங்கிச் செல்கிறார். சுபா நளினியை அழைத்துக் கொண்டு கொஞ்சம் விலகிச் செல்கிறார். நளினி, “ஏன் போகிறாய்? நானும் தனுவோடு சென்று ராஜீவ் காந்தியை பக்கத்தில் சென்று பார்க்க வேண்டும்”, என்று மறுக்க, சுபா உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிட்டு முடிந்தவரை தூரமாய்ச் செல்ல சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து பிறகு நடந்தது எல்லோருக்கும் தெரியும்.
Image result for Rajeev gandhi murder

          எங்கிருந்தோ வந்த சிவராசன் இவர்கள்  இருவரையும் அவசரமாய் அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோ ஏறி பின் அனைவரும்  சென்னை வந்து சேர்கிறார்கள். நளினிக்கு என்ன நடந்தது என்று புரியாமல், “என்ன இது தனு எங்கே?அவளை விட்டுவிட்டு எப்படிப் போக முடியும்? ஐயோ அவளுக்கு என்ன ஆயிற்றோ”, என்று பதறுகிறார். ஆனால் சிவராசன் நளினியை சமாதானப்படுத்தி தனுவை கூப்பிட்டு வர வேறு ஏற்பாடு செய்துவிட்டதாகக் கூறி சென்னை வருகிறார்கள்.
          இந்தச் சமயத்தில் நளினி இன்னுமொரு நம்பமுடியாத செய்தியைக் கூறுகிறார்.
          இவர்கள் மூவரும் சென்னை வந்து நளியின் வீட்டுக்கு வரும்போது அங்கே தனுவைப் பார்த்ததாகச் சொல்கிறார். தனு மூவர் முன்னும் தோன்ற நளினி அதோ தனு என்று சொல்லிக் கூச்சலிட அந்த உருவம் சட்டென மறைந்துவிடுகிறது. “எனக்கு மட்டும் தெரிந்திருந்தால் பிரமை எனலாம். ஆனால் எங்கள் மூவருக்கும் தெரிந்ததை எப்படி ஒருவரின் மனப்பிரம்மை என்று சொல்லமுடியும்”, என்று சொல்லும் நளினி அது நிச்சயமாக தனுவின் ஆவிதான் என்று அடித்துக் கூறுகிறார்.
          இவர்களோடு  அங்கு சென்ற ஹரி என்ற புகைப்படக் கலைஞர் குண்டுவெடிப்பில் இறந்து போனதும் அவர் எடுத்த புகைப்படங்கள் தான் முக்கிய ஆதாரங்களாக அமைந்தன என்பதும் உங்களுக்குத் தெரியும். இந்த ஹரி, சுபாசுந்தரம் என்பவரிடம் வேலை பார்த்ததால்  அந்தப் பெரியவரும் கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கழித்துத்தான் விடுதலை ஆகிறார்.
          ராஜீவ் கொலைக்கு நளினியின் முழுக்குடும்பமும் துக்கம் அனுபவித்து 2 நாள் சமையல் கூட செய்யவில்லை என்கிறார். ஏனென்றால் காங்கிரஸ் பின்னணியில் இருந்த இந்தக் குடும்பத்திற்கு ராஜீவ் காந்தி என்றால் உயிர். அதனால்தான் ராஜீவைப் பார்க்கலாம் என்றதும் உடனே கிளம்பிச் சென்றிருக்கிறார் நளினி.
             அடுத்து நளினியின் தம்பி பாக்யநாதன் கைது செய்யப்படுகிறார். அவருக்கும் ராஜீவ் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றாலும் தாஸ் என்ற முருகன் என்பவருக்கு தன் வீட்டில் இடம் கொடுத்த காரணத்திற்காகவும், நளினியின் தம்பி என்பதாலும் மட்டுமே கைது செய்யப்படுகிறார். தற்கொலைக்கு முயலும் பாக்கியநாதனை போலீசார் காப்பாற்றி சிறையில் அடைக்கிறார்கள்.
          ராஜீவ் கொலையில் இவர்கள் தொடர்புபடுத்தப்படுவதை அறியாமலேயே நளினியும் முருகனும் திருப்பதி சென்று வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். நல்லபடியாக திருமணம் முடிந்து கர்ப்பமும் ஆனதால் வேண்டுதலின்படி முருகன் மொட்டையடித்துக் கொள்கிறார். அப்போதுதான்  செய்தித்தாளைப் பார்த்து விவரம் அறிந்த இருவரும் செய்வதறியாது திகைத்து விடுகிறார்கள்.

- தொடரும்.


1 comment:

  1. புதிய தகவல்கள். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஏகலைவனின் எழுத்தும்
    பெரிதாக சிலாகிக்கப்பட்டதே ?

    ReplyDelete