இலங்கையில் பரதேசி -15
Royal Botanical Garden, Peradenya |
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/06/blog-post_5.html
வெள்ளைக்காரன் நுழைந்ததால்
கிடைத்த தீமை, ராஜா விமலதர்மா கட்டிய கோவில் அழிக்கப்பட்டது. அதே சமயத்தில் கிடைத்த
நன்மை சிறிய ஒரு தோட்டமாக இருந்த இடம் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டு
விரிவாக்கப்பட்டது.
கிபி.1821-ல் அலெக்சான்டர்
மூன் என்பவரால் இது திட்டமிடப்பட்டு, முதலில் காஃபி மற்றும்
இலவங்கம் விளையும் எஸ்டேட்டாக அமைக்கப்பட்டது. ஆனால் கிபி. 1823ல் தான் ஒரு தாவரவியல் பூங்காவாக (Botanical Garden) உருவாக்கம் பெற்றது. அதற்காக கியோ கார்டன், ஸ்லேவ்
ஐலன்ட், கொழும்பு, கழுதாரா ஆகிய பல
இடங்களிலிருந்து செடிகள் கொண்டுவரப்பட்டன.
Add caption |
அதன்பின்னர் பிரிட்டிஷ் அரசு 1844ல் ஜார்ஜ் கார்டனர் என்பவரை இந்தத் தோட்டத்தின் பொறுப்பாளராக நியமித்தது.
இதில் வேடிக்கையைப் பார்த்தீர்களா? பேரைக் கவனியுங்கள்.
இவருக்கு தோட்டவேலை நன்றாக செய்வார் என்று குழந்தையிலேயே தெரிந்ததால் 'கார்டனர் ' என்று பெயர் வைத்ததால் இவர்
தோட்டக்கலையில் நுழைந்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் சிறப்பாக
செயல்பட்டிருக்கிறார் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அவர் தன் இறுதிக்காலம்
வரை இங்கு சூப்பரின்டென்டென்டாக வேலை பார்த்தார். அதன்பின் தொடர்ந்து பலபேர் அதே பணியில்
திறம்பட செயலாற்றினார்கள்.
1912ல் அக்ரிகல்ச்சர் டிபார்ட்மென்ட்டின் கீழ்
இது வந்தது.
இன்னொரு கொசுறுத்தகவல் என்னவென்றால் இரண்டாம்
உலகப்போர் நடந்த போது லூயிஸ் மெளன்ட்பேட்டன் பிரபு தெற்காசியா முழுவதற்கும்
சுப்ரிம் கமாண்டராக நியமிக்கப்பட்டார். அந்தச்சமயத்தில் இந்தத் தோட்டத்தைத்தான்
தன் தலைமையிடமாகப் பயன்படுத்தினார்.
"சார் சீக்கிரமாக வந்துவிடுங்கள் நாம்
கண்டி போகவேண்டும்", என்று சொன்னான் அம்ரி.
நான் உள்ளே நுழைந்தேன். நெருக்கமாக
அமைக்கப்பட்டிருந்த செடிகொடிகள் மரங்களுக்கிடையே அருமையாக பாதை அமைத்திருந்தனர்.
சிலுசிலுவென அடித்த காற்றுக்கிடையில், தோட்டத்தின் மெலிதான
இசை தாலாட்டுப்பாட ஏதாவது பனைமரத்தின்
அடியில் படுத்துவிடலாமா என்று நினைக்கும் அளவிற்கு சொக்கியது. பாய் பிரியாணியின்
வேலையாயும் இருக்கலாம் . இங்கு பிரியாணியை புரியாணி என்றுதான் சொல்லுகிறார்கள்.
Cannon Ball tree |
King George V |
ஒரு இடத்தில் கூட்டமாக இருந்தது. அங்கு
கூட்டத்தினருடன் வந்த ஒரு கைடு சொன்னதை ஒற்றுக்கேட்டதில் அந்த மரம் ஐந்தாம் ஜார்ஜ்
மன்னரும், அரசி மேரியும் அங்கு 1901ல்
வந்த சமயம் நடப்பட்டதாம். மரத்தின் பெயர் பீரங்கிக் குண்டுமரம் (Cannon
Ball Tree ) என்பது. அந்த மரத்தின் பழங்கள் பீரங்கிக் குண்டுகளைப்
போல் கறுப்பாக உருண்டையாக இருப்பதால் அந்தப் பெயர்.
இந்த மாட்சிமை தங்கிய ஐந்தாம் ஜார்ஜ்
மன்னருக்கு நடுவதற்கு வேறு மரமே கிடைக்கவில்லையா?
இந்தத்தோட்டம் இப்போது டிபார்ட்மென்ட் ஆஃப்
நேஷனல் பொட்டானிக் கார்டன் என்ற அரசு நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு இருக்கிறது.
சுருக்கமாகஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே
வந்தேன். அம்ரியை தேடிக் கண்டுபிடிப்பதற்கு சிறிதுநேரம் பிடித்தது. ஏராளமான
கார்கள் இருந்தன. எதிர்த்தாற்போல் ஒரு அழகிய கட்டிடம் இருந்தது. ஒரு வேளை
கண்டிராஜாக்களின் அரண்மனையோ என்று அம்ரியிடம் கேட்டேன். அவனுக்கு அதைப்பற்றி
தெரியவில்லை.
“அம்ரி, ஒரு 5 நிமிடத்தில் வந்துவிடுகிறேன்”, என்று அந்தக்கட்டடம் உள்ளே நுழைந்தேன்.
பழைய கட்டிடம் ஆனால் நன்கு பராமரிக்கப்பட்டு இருந்தது. இப்போது ஹோட்டலாக
செயல்பட்டுவருகிறதாம். அந்தக் கட்டிடத்தின் பாரம்பர்யத்தைப் பற்றி யாருக்கும்
தெரியவில்லை.
ஆனால் சுவர்களின் பழைய கண்டிராஜாக்களின் புகைப்படங்களை
மாட்டி வைத்திருந்தார்கள். ஓரிரு படங்களை மட்டும் என்னுடைய ஐபோனில் கிளிக்கிவிட்டு
நகர்ந்தேன்.
காரில் ஏறியதும் கார் மெதுவாக நகர்ந்தது.
டிராபிக்கும் நிறைய இருந்தது. அந்த முழு ஊருமே ஒரு தோட்டம் போலத்தான் இருந்தது.
அங்கிருந்து வெளியே வந்து கண்டி செல்லும் சாலையில் விரைந்தோம்.
அழகிய கண்டிக்குள்ளே நுழையும் முன்பு கண்டி
ராஜ்ஜியத்தினைப் பற்றி யோசனை வந்தது. குறிப்பாக பேரடோனியாவில் கம்பிரமான கண்டி
அரசர்களைப் பார்த்தவுடன், அவர்களைப்பற்றி மேலும் தெரிந்து
கொள்ள ஆவல் பிறந்தது.
இதோ அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கண்டிராஜ்யம் என்பது இலங்கைத்தீவில் இருந்த சுதந்திர ராஜ்யமாகும்.
இந்த ராஜ்யம் 15 ஆவது
நூற்றாண்டில் ஆரம்பித்து. 19ஆம் நூற்றாண்டு ஆரம்பம் வரை
செழித்து இருந்தது.
Add caption |
டச்சுக்காரர்களும், பிரிட்டிஷ்காரர்களும்
வந்து முழுமையாக ஆக்கிரமிக்கும் வரை இது தனித்துவத்துடன் நன்றாக இருந்தது.
முற்றிலும் மலை சூழ்ந்த நாடான இதனை
டச்சுக்காரர்களால் நெருங்கவே முடியவில்லை. பிரிட்டிஷ்காரர்களுக்கும் சிம்ம
சொப்பனமாகவே விளங்கிய இந்த ராஜ்ஜியத்தில் பல தளபதிகள் கொரில்லாப் போர் புரிந்ததால்
இதனைக் கட்டுக்குள் கொண்டுவருவது மிகவும் கஷ்டமாகவே இருந்தது.
இதிலே இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த
நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் மிகுந்த தொடர்பு இருந்தது. அதுவும் குறிப்பாக மதுரைக்கு
இருந்தது யாழ்ப்பாண நாடான ஜாஃப்னா, கண்டி மற்றும் மதுரைக்கு
இருந்த தொடர்பை நாம் அடுத்த வாரம் பார்க்கலாம்.
-தொடரும்.
No comments:
Post a Comment