Monday, June 5, 2017

வைரத்திற்கும் ரத்தினத்திற்கும் நடந்த சண்டை !!!!!!!!!!


இலங்கையில் பரதேசி -14
On the way to Kandi

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/05/blog-post_22.html
            கையில் மின்னிய நவரத்தின மோதிரத்தை கொஞ்சம் பெருமையுடன் (பரதேசி நீ ஒரு அல்பம்டா) பார்த்துக் கொண்டே காரில் ஏறினேன். அப்படியே கொஞ்சம் அசந்துவிட்டேன். வலது கை பாம்பு விரலில் உட்கார்ந்து கொண்ட அது பக்கத்தில் இருந்த வைர மோதிரத்தை கேலி செய்வது போல் தெரிந்தது.
வை.மோ: என்ன என்னைப் பார்த்து இளிக்கிற ?.
ந.மோ: இல்லை என் பளபளப்புக்கு முன்னால் உன் பகட்டு எடுபடவில்லையே என்று பார்த்தேன்.
வை.மோ: என்ன திமிரா? என்னைக்கும் வைரம் வைரம்தான்.
ந.மோ: ஆனாலும் உனக்கு ஏன் அங்கங்கே உடம்பில் கோடு விழுந்துருக்கு
வை.மோ: ஏனென்றால் என்னை அவர் எப்போதும் கழட்டுவதேயில்லை. அவருடைய விரலோடும் மனதோடும் இரவும் பகலும் ஒட்டியிருக்கிறவன். உனக்கென்னடி தெரியும் நீ இன்றுதான் வந்தவள் .
ந.மோ: என்னுடைய மினுமினுப்பும் பளபளப்பும் உனக்கு வருமா?
வை.மோ: புதுமோஸ்தரில் நீ அப்படித் தெரிகிறாய்? இன்னும் ரெண்டு நாளில் நீயும் அப்படித்தான் ஆகிவிடுவாய்.
ந.மோ: எனக்கு ஒன்பது கண்கள் இருக்கு, ஒவ்வொன்றும் வேறு வேறு கலர்.
வை.மோ: எனக்கு மூன்றே கண்தான். ஆனாலும் உன் ஒன்பதையும் கூசச் செய்யும் ஒளியும் வல்லமையும் எனக்கு இருக்கு.
ந.மோ: நான் அவரால் முதன்முதலில் வாங்கப்பட்ட தங்க ஆபரணம், நான் உன்னை  வீழ்த்துவேன்.
வை.மோ: அதையும் பொறுத்திருந்து பார்ப்போம் சவால், தள்ளுடி கிட்ட கிட்ட வராத, என்னுடன் ஒட்டிக் கொண்டு என்னையும் மயக்கப் பாக்குறியா ?.
ந.மோ: நீ தள்ளுடா, ரொம்ப நெருங்கினே செக்ஸ் அப்பூஸ்ல கேஸ் போடுவேன்.  
வை.மோ: மோதிரவிரலில்  இருக்கும் நான்தாண்டி நிரந்தரம்.
ந.மோ: நான் பாம்பு விரலில் இருக்கிறேன் கொத்திடுவேன்.
          ரெண்டும் சண்டை போட்டு மோதிக் கொள்ள, நவரத்தின மோதிரத்தில் 2 கல்லும் வைர மோதிரத்தில் ஒரு கல்லும் கீழே விழுந்து உருண்டோட. நான் திடுக்கிட்டு எழுந்தேன். மோதிரங்களை உடனே சரிபார்த்தேன். இரண்டும் அதனதன் விரலில் இருந்து கொண்டு என்னைப் பார்த்து சிரித்தன. கற்கள் எதுவும் காணாமல் போகவில்லை. ஆனாலும் சட்டென்று புது ந.மோ வை உருவி இடது கையில் உள்ள மோதிரவிரலில் போட்டுவிட்டேன். இனிமேல் சண்டை போட மாட்டார்கள்.
          சிரித்துக் கொண்டே "சாரி அம்ரி" என்றேன்.
          “ஏன் சார் சாரி சொல்றீங்க”.
          "இல்ல முன்னால் டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தூங்கக் கூடாது. தூங்கினால் டிரைவருக்கும் தூக்கம் வருகிறதால் போய்ச் சேருகிற இடம் எதிர்பாராத இடமாய்விடும்னு பெரியவங்க சொல்லியிருக்காக".
          "சார் ஒன்னும் கவலைப்படாதீங்க, எனக்கு நல்லா பழக்கம் இருக்கு உங்களை பத்திரமாக மேலே கொண்டு சேர்த்திர்றேன்"
          “பத்திரமா அதுவும் மேலே போய் சேத்துருவே.
"ஆமா சார்".
          “என்ன அம்ரி அதத்தானே நானும் சொன்னேன். மேலே போய் சேத்துராதேன்னு”. சார் தப்பா எடுத்திட்டிங்க அந்த மேலே இல்லை சார், மலை மேல.
          “என்ன மலை மேலயா, நீ ஏதோ ராயல் கார்டனுக்குக் கூட்டிப் போறேன்னு சொன்ன".
          “ஆமா சார் அங்கதான், மலைமேலதான் இருக்கு”.
          “அப்ப கண்டி போலயா?”
இது போற வழிதான் சார். கண்டி மலைவாசஸ்தலம்னு உங்களுக்குத் தெரியாதா?
          “அம்ரி நிஜமாவே 'கண்டி' மலைன்னு எனக்குத்தெரியாதுப்பா”.
          “எப்பவும் எந்த நாட்டுக்குப் போனாலும் நல்லா ரிசேர்ச் பண்ணிட்டுத்தான் போவேன். ஆனா இலங்கை கடைசி நிமிஷத்தில முடிவு பண்ணதாலே எதுவும் பண்ணல அதோட நீதான் இருக்கியே நீ பார்த்துக்குவன்னு ஒரு திருப்தியோட வந்து இறங்கிட்டேன்”.
          பேசிக்கொண்டே இருக்கும் போது இருபுறமும் இருந்த பச்சைக் கம்பளம் போர்த்த இயற்கையழகை பருகிக் கொண்டே போனேன். ஒரு இடத்தில் காடும் மலையும் வயலும் இணைவது போல் ஒரு இடம் வந்ததும் அங்கே நிறுத்தத் சொன்னேன். இறங்கி சில நிமிடங்கள் இயற்கையை சுவாசித்துவிட்டு படங்களைஎடுத்து விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.


          சிறிது நேரத்தில் பிரிவில் அழகிய ஊர் வந்தது. “அம்ரி பசியெடுக்கிறது. எங்கேயாவது நிறுத்துப்பா”, என்றேன். “அம்ரி எனக்கும் பசிக்குது சார்னு”, சொல்லி அடுத்து வந்த ஒரு உணவுக்கடையில் நிறுத்தினான். பாய் கடைன்னு பாத்தாலே தெரிந்தது. “அம்ரி பாய் பிரியாணி சாப்பிட்டு நாளாச்சு ஒரு பிடி பிடிப்போம்னு”, சொல்லி ஆர்டர் செய்தோம்.

Biriyani

          சுமாராகவே இருந்தாலும் பசி நேரத்தில் அதையெல்லாம் பார்க்காமல் உண்டு முடித்து பயணத்தைத் தொடர்ந்தோம். அதனைத் தாண்டியதும் வண்டி மலையேற ஆரம்பித்தது எனக்கு கொடைக்கானல் மலைதான் ஞாபகம் வந்தது. மரங்களும் செடிகளும் கொடிகளும் பச்சைப் பசேலென்று சூழ்ந்து மிக பெரிய ஒரு வரவேற்புப் பலகை "வெல்கம் டு சென்ட்ரல் பிராவின்ஸ்" என்றது அழகாக இருந்தது . பாதையெங்கும் மரகதப் பச்சை ஜொலித்தது. அப்படியே பெரிய ஒரு ஊருக்கு வந்து சேர்ந்தோம். டூரிஸ்ட்கள் கூட்டம் அலை மோதியது. பார்க்கிங் கிடைக்காதலால் அம்ரி காரில்  தங்கிவிட, நான் இறங்கி டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றேன். அந்த ஊரின் பெயர் பேரடேனியா (Peradeniya). இங்குதான் பொட்டானிக்கல் கார்டன் இருக்கிறது. தோட்டத்தின் பின்னனியை பார்த்துவிட்டு உள்ளே போவோம்.


          இந்த ஊர் கண்டியிலிருந்து 5.5 கி.மீ தூரத்தில் இருக்கிறது. மகாவெளி ஆற்றினருகில் அமைந்திருக்கும் இந்த தோட்டத்திற்கு ஒரு ஆண்டில் குறைந்த பச்சம் 20 லட்சம் டூரிஸ்ட்கள் வருகின்றனர். இந்த மகாவெளி ஆறுதான் இலங்கையில் பாயும் ஆறுகளில் நீள மானதாம். இந்தத் தோட்டம் குறிப்பாக ஆர்க்கிட் எனும் பூவகைகளுக்கு மிகவும் பெயர் பெற்றதாம். 150 ஏக்கரில் அமைந்திருக்கும் இந்தத் தோட்டம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 460 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. 4000-க்கும் மேற்பட்ட தாவரங்கள் இங்கே இருக்கின்றன.
Image result for Raja vimala dharma
Vimaladharmasuriya I 
          முதன்முதலில் கிபி 1371ல் மூன்றாவது விக்கிரமபாகு என்ற மன்னன் பெரடேனியாவில் ஆற்றங்கரை அருகில் தன் அரசவையை அமைத்தான். அவனைத் தொடர்ந்து வந்த மன்னர்கள் கீர்த்தி ஸ்ரீ மற்றும் ராஜாதி ராஜசிங்கே ஆகியோரும் இங்கேயே தொடர்ந்தனர். அப்போது அவர்கள் உலவுவதற்காக இந்தத் தோட்டம் உருவாக்கப்பட்டது. ராஜா விமலதர்மா இங்கே ஒரு கோவிலைக் கட்டினான். ஆனால் இப்படி அருமையான இயற்கை சூழ்நிலையில் ஆட்சி சிறப்பாக இருந்த போதுதான் பிரிட்டிஷ் ராணுவம் உள்ளே நுழைந்தது. வெள்ளைக்காரன் உள்ளே நுழைந்தால் தீமையும் இருக்கும் நன்மையும் பிறக்குமல்லவா?

-தொடரும்.

6 comments:



  1. இன்னும் இலங்கையில் இருந்து எழுதுவது போல அப்படியே எல்லாம் ஞாபகம் வைச்சு எழுதும் உங்கள் ஞாபகத்திறனை கண்டு வியக்கிறேன்.


    ஆமாம் இப்ப எல்லாம் நீயூயார்க் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லையா? அது பற்றி பதிவுகள் ஏதும் வரவில்லையே

    ReplyDelete
    Replies
    1. இதோ இந்த வாரம் வியாழக்கிழமை வருகிறதே?

      Delete
  2. எனக்கு இலங்கை செல்லும் எண்ணம்
    இருப்பதால் இந்தப் பதிவுகள்
    எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    ஆவலுடன் தொடர்கிறேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

      Delete
  3. உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா கேட்கவே சுகமாக இருக்கிறதே

      Delete