Thursday, February 25, 2016

குற்றப்பரம்பரை !!!!!!!!!!!!


படித்ததில் பிடித்தது

                            குற்றப்பரம்பரை ,வேல ராமமூர்த்தி

                       வெளியீடு டிஸ்கவரி புக் பேலஸ் சென்னை



டிஸ்கவரி புக் பேலஸின் கிளாசிக் நாவல் வரிசையில் வெளியிடப்பட்ட நாவல் இது.வேல ராமமூர்த்தி எழுதி நான் படிக்கும் இரண்டாவது புத்தகம் இது. நான் படித்த முதல் புத்தகம் பட்டத்துயானை. வேல ராமமூர்த்தி சேது பூமியைச் சேர்ந்தவர். எனவே அவருடைய கதைக்களம்  ராமநாதபுரத்தைச் சுற்றியே இருக்கின்றது. பட்டத்துயானை போலவே இதுவும் ஒரு வரலாற்று நாவல் என்று சொல்லலாம் (Period Novel) .
Vela Ramamoorthi
விகடன் ஆசிரியர் குழுமத்தில் பணியாற்றிய வேல ராமமூர்த்தி,  தற்போது பிரான்மலை ,மத யானைக்கூட்டம்  ,ரஜினி முருகன்,சேதுபதி போன்ற பல திரைப்படங்களிலும்  தலைகாட்டிவருகிறார். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய காவல் கோட்டம்   நாவலில், குற்றப் பரம்பரையினர்  பற்றி விரிவாக வரும். கன்னமிட்டுத்திருடுதல் இவர்களுக்கு கை வந்த கலை. அதனைப்பற்றி நான் எழுதிய  பதிவைக் காண இங்கே சுட்டவும். http://paradesiatnewyork.blogspot.com/2014/02/blog-post_19.html
ஆனால்  வீரர்களாகிய இவர்கள் மன்னர் படைகளில் பணியாற்றியவர்கள். தோற்கடிக்கப்பட்டதாலும், வருமானத்துக்கு வழி இல்லாததாலும் இவர்கள் வேறுவழியின்றி கொள்ளையடிப்பில்  ஈடுபட்டு     தம் பிழைப்பை   நடத்தி வந்தனர்.
கொம்பூதி என்ற ஊரில் அப்படி ஒரு குழுவாக செயல்பட்ட இவர்களைப்பற்றி அருமையான முறையில் எழுதப்பட்ட கற்பனை நாவல் இது. அதனைப்பற்றி சில குறிப்புகள்  கீழே.  
1.    கதை நடைபெறும் காலம், பிரிட்டிஷ், இந்தியாவை ஆளும் காலம்.
2.    கதை நடைபெறும் இடம் ராமநாதபுரத்தில் உள்ள கொம்பூதி, பெருநாழி மற்றும் பெரும்பச்சேரி  என்ற ஊர்கள்.
3.    கொம்பூதி ஒரு கள்ளர் கிராமம். வேறு இடத்திலிருந்து வேட்டையாடப்பட்டு, விரட்டப்பட்டு பல பேரை இழந்து, ஓடி வந்த இக்கூட்டம் பெரும்பச்சேரியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஒரு சிறுவன் (வையத்துரை) உதவி செய்ய, முள்ளுக்காட்டுக்கு உள்ளே  உள்ள கொம்பூதி கிராமத்தில் குடியமர்கிறார்கள்.
4.    எனவே இவர்களுக்கும், பெரும்பச்சேரி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒரு நல்ல உறவு ஏற்படுகிறது.
5.    நாவலின் நடுவில் போகிறபோக்கில் பெருநாழி பெயர் வந்த கதை, காளத்தி  அம்மன் கதை போன்ற கிளைக்கதைகளை சொல்லி கதையை நகர்த்துகிறார்.
6.    கள்ளர்களின் எளிமையான வாழ்க்கை, இங்கு திறமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. கொள்ளையடித்து வாழ்ந்ததாலும், அது வசதிக்காக இன்றி வயிற்றுப்பசிக்காக மட்டுமே என்பது தெரிகிறது .
7.    அவர்களிடம் நகை அணியும் பழக்கமில்லை, எளிய உணவு உண்டனர். குதிரைவால் ரோமமும், குண்டுமணியும் கொண்ட தாலியை அணிந்தனர்.
8.    ஒரு குழுவாக இயங்கும் இவர்கள், தலைவனுக்கு கட்டுப்பட்டு வாழுபவர்கள்
9.    பெருநாழி கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழில்.அவர்களுடைய வயலில் கூலிவேலை பார்த்து பிழைப்பவர்கள் பெரும்பச்சேரி தாழ்த்தப்பட்டவர்கள்.
10. பெருநாழி கிராமத்திலும் ஊர் பொதுத் திண்ணைகளில் வெட்டி ஆட்கள், சீட்டு, தாயம், ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டும், தூங்கியும் பொழுதுபோக்குவது, இன்னும் கூட  நம் கிராமங்களில் தொடர்வது அவலம் தான்.
11. அன்றைய நிலைவில் இருந்த, தீண்டாமை, சாதி பாகுபாடு சுயநலம், உணர்ச்சி வசப்பட்டு வதந்திகளை நம்புவது ஆகிய சமூக அவலங்கள் இன்னும் தொடர்வது அரசியல்  வியாதிகளால்  தான்.
12. மூலக்கதையின் நடுவே ஒரு fantasy காதல்கதையும் வருவது சிறிது திணிக்கப்பட்டதாக தெரிகிறது.  ஹசார்தினார், நாகமுனி, வஜ்ராயினி , அவளுடைய  மான் ஆகியவை ஒரு fantasy அல்லது  magical realism   என்று அழைக்கப்பட்டாலும், எனக்கு என்னவோ அது மூலக்கதையின் நோக்கத்தை சிதைப்பதாகவே தெரிகிறது.
13. வில்லத்தனம் இல்லாத போலீஸ் அதிகாரி விக்டர்துரை, அதீத சுத்தத்தனம்  உள்ள அவர் மனைவி மேரி, பேராசைக்கார பச்சையப்பன், தலையாரி பொண்டாட்டி வீரசுத்தி, தைரியம் கொண்ட ராக்கு, வேயன்னாவின் அம்மாக் கிழவி கூழானி ஆகியோர் சிறந்த கதாபத்திரங்கள்.
14. சிறு வயதில் பிரிந்துபோகும் மகன் தந்தையைப்பற்றியும் அவர்கள் கூட்டத்தைப்பற்றியும்  அறிந்திருந்தும் ஏன் தொடர்பு கொள்ளவில்லை  என்பது என் கேள்வி.
15. வேயன்னாவும், குழுவும் தம் மகனோடு வந்த போலீஸ் கூட்டத்தை ஏன் எதிர்த்து நின்று, தங்கள் உண்மைநிலையை எடுத்துரைக்கவில்லை என்பது மற்றொரு கேள்வி.
ஆனால் வேல ராமமூர்த்தியின் கதை சொல்லும் முறை, உருவகங்கள் மிகவும் புதிதாக இருக்கின்றன.
கம்யூனிச சிந்தனை கொண்ட இவரின் ஆதங்கங்கள் ஆங்காங்கு  வெளிப்படுகின்றன. அவர் எழுத்து மூலம், கொலை கொள்ளைகள் அடிக்கும் கூட்டம் மற்றும் அதன் தலைவர் வேயன்னா ஆகியோர் மீது முதலிலிருந்தே ஒரு ஈர்ப்பை உண்டாக்கி விடுகிறார்.
மொத்தத்தில் இவர் ஒரு கவனிக்கப்படக் கூடிய எழுத்தாளர். இன்னும் அதிக உயரங்களைத்தொட பரதேசியின் வாழ்த்துக்கள்.











16 comments:

  1. //பாரதிராஜா பலமுறை இயக்க முயற்சி எடுத்து, பின் கைவிடப்பட்ட, குற்றப்பரம்பரை கதையை, தற்போது, படமாக்க, களமிறங்கியுள்ளார் பாலா// செய்தி ..நீங்க படிச்ச நேரம்

    ReplyDelete
    Replies
    1. அட எனக்குத்தெரியாம போச்சே , தகவலுக்கு நன்றி பாஸ்கர் .

      Delete
  2. திரைப்படமாகிறது இந்த நாவல் என்று நானும் செய்தியில் படித்த நினைவு வருகிறது. காவல் கோட்டம் நல்ல படைப்பு. இது கிடைத்தால் வாசிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வாசியுங்கள் . ஆனால் எச்சரிக்கை நீண்ட நாள் பிடிக்கும் . வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

      Delete
  3. கேள்விப்பட்டிருக்கிறேன். படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    இந்தக் கதையைத்தான் பாரதிராஜா தன் கனவுப் படம் என்று சொல்லியிருந்தார். இருந்தும் அவரால் இதை படமாக்க முடியவில்லை. இப்போது பாலா இதை எடுக்கப் போவதாக ஒரு திடுக்கிடும் தகவல். ஆனால் அவரும் இதை எடுக்காமலிருந்தால் நல்லது. எரியும் பனிக்காடு நாவலை படு கோரமாக சிதைத்தது போல இந்த நாவலையும் அருவருப்பாக மாற்றி விடுவார் பாலா.

    ReplyDelete
    Replies
    1. அதே பயம்தான் எனக்கும் வந்தது காரிகன் .

      Delete
  4. தமிழ் இந்துவில் ஒரு தொடர்கதை எழுதினார் ..அருமையாக இருந்தது...இதனையும் வாசிக்க தூண்டுகிறது உங்கள் எழுத்துகள்... நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி செல்வக்குமார்.

      Delete
  5. விமர்சனம் செய்த முறையும் வித்தியாசம்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா , நன்றி தனபாலன் .

      Delete
  6. வாசிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாசித்துப்பாருங்கள் , நல்ல அனுபவம் கிடைக்கும் , நன்றி தனிமரம்.

      Delete
  7. //பெருநாழி கிராமத்திலும் ஊர் பொதுத் திண்ணைகளில் வெட்டி ஆட்கள், சீட்டு, தாயம், ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டும், தூங்கியும் பொழுதுபோக்குவது, இன்னும் கூட நம் கிராமங்களில் தொடர்வது அவலம் தான்.//

    ஆமாம். நம்மைப்போல உலகத்துக்கு இவர்களால் ஒரு பயனும் இல்லைதானே!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அனாமதேயா , "நம்மை" என்று குறிப்பிட்டு வெட்டிப்பயல்கள் சங்கத்தில் என்னையும் இணைத்த தங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. ஆனால் நான் பெண்கள் சங்கத்தில் இணைவதில்லை, மன்னிக்கவும் .

      Delete
  8. Hello Sir,

    Can you please provide குற்றப்பரம்பரை book pdf to read... I had this book, But somehow i lost..

    Thanks and regards,
    Priya

    ReplyDelete
    Replies
    1. Dear Priya,
      I don't think the PDF version is available. Pls buy a hard copy and read.

      Delete