Thursday, February 4, 2016

அமெரிக்காவில்அடையாறு ஆனந்தபவன் - பகுதி-1

Anandha Bhavan , Jersey City.


அக்டோபர் மாதம் துவங்கியதும் என்னுடைய கம்பெனியின் H1B விசா  வாங்கிய மென்பொருள் பொறியாளர்கள் ஒவ்வொருவராக வரத்துவங்க, குயின்சில் உள்ள எங்களுடைய கெஸ்ட் ஹவுஸ் நிரம்பி வழிந்து, பின்னர் ஜெர்சி சிட்டியில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் சில பேரை போட வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது.
அக்டோபர் முதல் வாரத்தில் ஹைதராபாத்திலிருந்து வந்த கிருஷ்ணா எஞ்சர்லாவை JFK ஏர்ப்போர்ட்டில் பிக்கப் செய்து, வெரஜோனா பாலம் தாண்டி ஜெர்சி சிட்டிக்குப் சென்றேன். ‘ஜெர்சி சிட்டி’ என்பது  பக்கத்து மாநிலமான நியூஜெர்சியில் உள்ள ஒரு நகரம். ஆனால் மேன்ஹாட்டனிலிருந்து மிகவும் பக்கம். மேன்ஹாட்டனையும் இந்த நகரத்தையும் ஹட்சன் நதிதான் பிரிக்கிறது. சொல்லப்போனால் மேன்ஹாட்டனில் உள்ள என் அலுவலகத்திற்கு என் வீடு இருக்கும் குயின்ஸ் பகுதியிலிருந்து வருவதைவிட ஜெர்சி சிட்டியிலிருந்து சீக்கிரம் வந்துவிடலாம்.
ஜெர்சி சிட்டி இந்திய நகரம் ஆகி வெகு நாளாகிவிட்டது. எங்கெங்கு காண்கினும் இந்தியராய் இருந்தனர். குறிப்பாக தென்னிந்தியர். இங்கு நுவார்க் (Newark  Avenue)  அவென்யூ என்ற ஒரு தெரு உண்டு. முற்றிலுமாக நமது இந்திய உணவகங்கள் நிரம்பிய பகுதி. பவார்ச்சி, பிரியாணி பாய்ண்ட் போன்ற பல உணவகங்கள் இருந்த வரிசையில் அட, ஒரு தமிழ் உணவகம், 'ஆனந்த பவன்' என்று அழகிய தமிழில் எழுதப்பட்டிருந்தது.  ஆஹா “அடையாறு ஆனந்த பவன்” இங்கும் வந்துவிட்டதா என நினைத்து ஆச்சரியப் பட்டேன்.
என்னுடைய திருவான்மியூர் நாட்கள் நினைவுக்கு வந்தன. எத்தனை முறை அடையாறு ஆனந்த பவனில் சாப்பிட்டுவிட்டு, அடையாறு பேக்கரியில் பஃப்சும் கேக்கும் வாங்கியிருக்கிறோம். அதன் மண மணக்கும் சாம்பாரும், காரக் குழம்பு, கூட்டு பொறியல் வகையறாக்கள் மட்டுமின்றி அதன் மாங்காய் ஊறுகாய்களையும் ஒரு கை பார்த்தது ஞாபகம் வந்து எச்சில் ஊற, காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். ஆந்திரா ரெஸ்டாரண்ட் எதுவும் இருக்கிறதா என்று கேட்ட கிருஷ்ணாவை அலட்சியம் செய்துவிட்டு ஆனந்த பவனில் ஆனந்தமாக நுழைந்தேன்
உள்ளே நுழைந்து வணக்கம் என்றேன். "ஹாய் சார் குட்மார்னிங்”, என்ற பதில் வந்தது. ஏன் தமிழ் ரெஸ்டாரண்டில் தமிழ் பேசக்கூடாதா? என்று நினைத்த போது, காற்றில் MSV எனக்கொரு காதலி இருக்கிறாள்" என உருகிப் பாடியது காதில் விழ, ஆஹா இது போதும் இது போதுமென உட்கார்ந்தேன். மெனு தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்தது.

Add caption
என்னோட வந்த கிருஷ்ணா வேண்டா வெறுப்பாக மெனுவை மேய, நான் மெனுவைப் பார்க்காமலே ஒரு மீல்ஸ் என்றேன்.  ஷ்யூர்  சார் என்று சொல்லி அவனைப் பார்க்க அவனும்  தாலி மீல்ஸ் என்றான். 13.99 டாலர்கள் விலை. பரவாயில்லை போகட்டும் என்று உட்கார்ந்திருந்தேன்.
ஆவிபறக்க தாலி மீல்ஸ் வந்து சேர்ந்தது. வழக்கம்போல ஒரு சப்பாத்தி, சாம்பார், காரக்குழம்பு, ரசம், தயிர், தயிர்ப்பச்சடி, ஊறுகாய், கூட்டு, பொரியல், கேசரி தவிர கெட்டியாக மஞ்சளாய் ஒன்று இருந்தது. அது என்னவென்று சிறிது வாயில் வைத்துப் பார்த்தால் பருப்பு. பப்புக்கறி என்பது ஆந்திர உணவாயிற்றே என்று நினைத்த வண்ணம், சிறிது ஊற்றி சாப்பிட்டேன். நல்ல நெய்யில் செய்யப்பட்ட பப்புக்கறி.
சுவையாக ஆனால் காரசாரமாக இருந்தது. ஆகா தமிழ் உணவகத்தில் ஆந்திர பப்புக்கறியா என்று முடித்துவிட்டு குழம்பில் இரண்டில் ஒன்றை எடுத்தேன். எது சாம்பார் என்று சரியாகத் தெரியவில்லை. இது சாம்பாராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து அதனை ஊற்றிச் சாப்பிட்டேன். காரம் தொண்டையை எரித்து கண்ணை மறைத்து கண்ணில் நீர் திரண்டது. இது சாம்பார் இல்லை காரக்குழம்பு என்று முடிவு செய்து, மற்றொரு குழம்பை எடுத்து ஊற்றி சாப்பிட்டேன். காரம் இப்போது தொண்டையைத் தாண்டி மண்டை வரை பாய்ந்தது."உன் கண்ணில் நீர் வழிந்தால் உன் மூக்கில் திரவம் கொட்டுமடா" என்றபடி கண்ணிலும் மூக்கிலும் நீர்கொட்ட ஆரம்பித்தது. ஐயையோ இதுதான் காரக் குழம்பு என்று நினைத்துக் கொண்டே அழுதேன். அதாங்க கண்ணில் நீர் கொட்டியதைச் சொன்னேன்.
ஆந்திர ரெஸ்டாரண்ட் போகச் சொன்ன கிருஷ்ணா எந்தப் பாதிப்பும் இல்லாமல் சப்புக் கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதோடு வெய்ட்டரைக் கூப்பிட்டு தெலுங்கில் மாட்லாட ஆரம்பித்தான். ஓ தமிழ் ரெஸ்டாரண்ட்டில் தெலுங்குப் பையன் போலருக்கு என்று நினைத்து விட்டுவிட்டேன்.
கூட்டு பொரியல் என்று எல்லாம் அதீத காரமாய் இருக்க, மறந்து போய் மாங்காய் ஊறுகாயை எடுத்து வாயில் போட்டு சில விநாடிகளில், தலை சுழல, உலகமே சுழல தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு ரெஸ்ட் ரூமை நோக்கி விரைவாக நடந்தேன். சரி சரி சரி, ஓடினேன்.
ஒரு ஐந்து நிமிடம் இடிமின்னல் முழங்கிவிட்டு வெளியே வந்து இது என்ன ஆனந்தபவனா அபாய பவனா என்று நினைத்துவிட்டு வெளியே வந்து பார்த்தால் என் தட்டும் கிருஷ்ணா தட்டும் காலியாக இருந்தது. "வேஸ்ட் பண்ண வேண்டாமென்று நினைத்து நானே சாப்பிட்டுவிட்டேன் ஆல்ஃபி" என்றான். "அடப்பாவி தீக்கங்கைக் கொடுத்தாக் கூட தித்திக்குது என்று சொல்லி தீவிரமாய்ச் சாப்பிடுவான் போல "என்று எண்ணி ஆச்சரியப்பட்டேன்.
அப்புறம் அந்த வெயிட்டரைக் கூப்பிட்டு, "செஃப் ஆந்திராவா"? என்று கேட்டேன், "ஆமாம் எப்படிக்கண்டு பிடித்தீர்கள் ?", என்றேன். வலியுடன் சிரித்துவிட்டு இது அடையாறு ஆனந்த பவனா இது ஆந்திரா ஆனந்த பவனா ?" என்று கேட்டேன். அவன் இன்னொருவரை கல்லாவில் இருந்து கூப்பிட்டுக் கொண்டு வந்தான். வந்தவரிடம், "இது அடையாறு ஆனந்த பவன்தானா?" என்று கேட்க அவர் சொன்னார் "இது அடையாறு ஆனந்த பவன் இல்லை" என்றார். அப்ப இது "ஆந்திர ஆனந்த பவனா", என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். இல்லை இது வெறும் ஆனந்த பவன் என்றும் அடையாறு ஆனந்தபவனுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றான்.  
தமிழ் ஆட்களை கவர்வதற்காக இந்தப் பெயரை வைத்து அதையும் தமிழில் எழுதி நாக்கையும், தொண்டையையும் வயிற்றையும் கெடுத்துவிட்டார்கள். சுவை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் சைட் எஃபக்ட், வயிறு எஃபக்ட் மற்றும் பின் எஃபக்ட் தான் ம்ஹீம் மிடில.
இப்படி பொய்யாய் எத்தனை பேர் கிளம்பியிருக்காய்ங்க இதைக் கேக்க ஆளில்லையா என்று நினைத்துக் கொண்டே எழும் போது, அவன் சொன்னான் "நியூயார்க்கில் அடையாறு ஆனந்தபவன் இருக்கிறது" என்று.  நான் சொன்னேன் எனக்குத் தெரியாமல் நியூயார்க்கில் இருக்கா" உடனே போக வேண்டும் என நினைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

தொடரும் 

20 comments:

  1. அட விடுங்க அண்ணே. இந்த மாதிரி தான் ஒருமுறை ஓமான் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் KFC ன்னு பெயரிருந்த ஒரு கடையில் போய் சாப்பிட்டேன். சுவை ரொம்ப வித்தியாசமா இருந்தது. அப்புறமா தான் தெரிஞ்சது அது Kerala Fried Chieckenன்னு ...

    ReplyDelete
    Replies
    1. Kerala Fried Chicken அட அதுவும் KFC தானே , ஐயோ , இனிமேல் அதையும் பார்த்துதான் போகவேண்டும் .

      Delete
  2. இந்த தெருவிற்கு அடிக்கடிப் போவேன். இன்னும் ஆனந்த பவனில் சாப்பிட்டது இல்லை.
    சப்தகிரி மற்றும் டெக்கான் spice ...நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ருசி நன்றாகத்தான் இருந்தது .ஆனால் நான் எதிர்பார்த்தது அடையாறு ஆனந்தபவனை என்பாதால்தான் ஏமாற்றம்.

      Delete
  3. There are some Indian restaurants, where they will ask, "mild" or "medium" or "very spicy"? Most of the Americans who likes Indian food prefer "mild". Lots of Tamils I know, including me prefer "Andhra style" food. In Bangalore we (Tamils) used to go the Andhra style restaurant only!

    Once, a CEO of company I worked for told me, whenever he goes to Indian restaurant, after the heavy spicy meal, he used to take a quarter ounce of "Pepto-bismol", it really helped him to avoid "heartburn" and all. You should try that next time after your visit to Andhra bhavan! LOL

    ReplyDelete
    Replies
    1. ஆந்திரா பவன் என்று போடாததுதான் என்னோட பிரச்னையே.

      Delete
    2. எனக்கு என்ன பிரச்சினைனா, அப்படியே தமிழ் மக்களை ஏமாற்றி உள்ளே வர வைத்தாலும், தெலுகு மக்களை இழக்கிறார்களே?? ஆந்திர மக்கள், தமிழில் எழுதியுள்ளதால், இது ஆந்திர பவன் இல்லைனு இதைக் கடந்து போய்விடுவாங்க. கூட்டுக் கழிச்சுப் பார்த்தால் இப்படி தமிழில் ரெஸ்டாரண்ட் பெயர் எழுதுவதால் ஆந்திர்ரமக்களால் புறக்கணிக்கப்பட்டு கடை நடத்துறவனுக்குத்தான் நஷ்டம் ஆகும்! :)

      Delete
    3. Agree with Varun! Btw, I am also a fan of Andhra kitchen!!!

      Delete
    4. கரெக்ட் வருண் , அது சரி இதை அவங்ககிட்ட யார் சொல்றது ?

      Delete
  4. உங்களுக்கு எல்லாம் நீயூஜெர்ஸியில் உள்ள சரவணபவன்தான் சரி காரமே இல்லாமல் டேஸ்டே இல்லாமல் இருக்குமாம்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, மதுரை தமிழரே.. கஷ்டப்பட்டு சாம்பாரித்த பணத்தை அண்ணாச்சியோட வங்கியில் போடா சொல்றேளே .. அதுக்கு பதிலா வழக்க படி பரதேசி கருப்பா மாத்தி தன்னோட சுவிஸ்
      வங்கியிலே வைச்சுக்கலாம்.

      Delete
    2. நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க பரதேசி பணத்தை சம்பாதிக்க கஷ்டப்படவில்லை அவருக்கு எல்லாம் எப்படி செலவழிக்கிறது என்பது தெரியாமல்தான் கஷ்டப்படுகிறார் என்ற தகவல் எனக்கு வந்து இருக்கிறது

      Delete
    3. விசு , இந்த மதுரைத் தமிழனுக்கு "அவர்கள் உண்மைகள் " என்று யார் பேர் வைத்தது , அவரை நான் பார்த்து கொஞ்சம் உண்மைகளைச் சொல்லனுமே.

      Delete
  5. நல்ல அனுபவம். உங்களது அனுபவம் மற்றவர்களுக்குப் பாடமாக அமையும்.

    ReplyDelete
    Replies

    1. நீங்க உள்ளூரில் இருந்தா உங்கள்ட்ட வந்திருப்பேன் டாக்டர்

      Delete
  6. அடடா.... இப்படி ஒரு அனுபவமா? சமீபத்தில் திருச்சியிலிருந்து விழுப்புரம் பயணிக்கும் போது HSB என ஹோட்டல் சரவண பவனில் ஸ்டைலாக எழுதி இருக்குமே அதே ஸ்டைலில் எழுதி இருந்த ஒரு பதாகை பார்த்து அட இந்த நெடுஞ்சாலையிலும் ஆரம்பித்துவிட்டார்களா என கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் அது OSB - ஓம் சரவணபவன்! :) எப்படி எல்லாம் ஏமாற்றுக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அந்த சரவனனுக்குத்தான் வெளிச்சம்.

      Delete
  7. HSB...
    சரவண பவன், இங்கே பேங்காக்கிலும் வந்துவிட்டது...
    சுமார் கடந்த 3 மாதங்களாக...

    ReplyDelete
    Replies
    1. உலகின் எந்த மூலையிலும் நம்பிப்போய் சாப்பிடலாம் ருசி அதே மாதிரி
      இருக்கும் .
      ஒனரைத்தான் நம்பமுடியாது .

      Delete
  8. நன்று..... நல்ல நகை பகிர்வு.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/3.html

    ReplyDelete